Kattangal 6

கட்டங்கள் – 6

திருமண மண்டபம்  ஆடம்பரமாக காட்சி அளித்தது. உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் அலை மோதியது.

பட்டு வேஷ்டி, மெரூன் சில்க் ஷர்ட் என கம்பீரமாக காட்சி அளித்தான் முகிலன். அனைத்து வேலைகளுக்கும் பலர் நியமிக்கப்பட்டிருந்தாலும் திருமண வீட்டில் வேலைக்கு பஞ்சம் இருக்குமா..? சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தான் மாப்பிள்ளையின் தம்பியாக…

                               முகிலனை எப்படி அழைப்பது என்ற தயங்கிய படி, நின்று கொண்டிருந்தாள் அவள்.  “என்ன முறை சொல்லி அழைப்பது.. இவனை கூப்பிட்டு பேசவில்லை என்றால், விஷயத்தை எப்படி சொல்லுவது… ” , என்று சிந்தனையோடு முகிலனை பார்த்துக் கொண்டிருந்தாள் பச்சை நிற சில்க் காட்டன் சுடிதாரில் இருந்த அந்த பெண்.

       அவளின் சூழ்நிலையை புரிந்து கொள்வது போல், அவள் பக்கமாக திரும்பிய முகிலன், “எனக்காக வெய்ட் பண்றீங்களா..? ” , என்று வினவ,  அவள் முகத்தில் ஆயிரம் வாட்ஸ் லைட்…   “ஆமாம்..  உங்களை எப்படி கூப்பிட்றதுன்னு தெரியல… தேங்க்ஸ்… அக்கா மண்டபத்துக்கு வந்தாச்சு…  மாப்பிள்ளையை அழைக்க … “, என்று கூறிவிட்டு நாக்கை கடித்து முகத்தை சுருக்கி கொண்டு.. “அத்தானை அழைக்க.., அண்ணனும் அண்ணியும் கிளம்பிட்டாங்க …. அத்தை மாமா கிட்ட சொல்ல முடியுமா..? ” , என்று திருமணத்துக்காக வந்த சொந்தங்கள்.., திருமணத்தால் உருவான சொந்தங்கள் என அனைவரையும் சேர்த்து ஒருவாறாக பேசி முடித்தாள்.

           “சரி “. என்று தலை அசைத்து,” நீங்க அண்ணியோட தங்கையா?”, என்று முகிலன் கேட்டான்.. ” ஆம் .. ” , என்று தலை அசைக்க , காயத்ரியின் ஞாபக சக்தி,” இவனை எங்கோ பார்த்திருக்கிறோம்’ , என்று கூறியது.

       அந்த சிந்தனையை பின்னுக்கு தள்ளி விட்டு நித்யாவை நோக்கி சென்றாள் காயத்ரி. 

” ஹல்லோ … ” , என்று மொபைலில்  முகிலன் தன் பேச்சை தொடங்க, மறுமுனையில் பேசி கொண்டிருந்த மதுசூதனின் புருவம் முடிச்சிட்டது.

            “அவளிடம் ஒரு முறை கூறியாகிவிட்டது.. பணக்காரன் கிடைச்சா விடகூடாதுனு மண்டபம் வரைக்கும் வந்துட்டா போல…  மேலும் மேலும் அவமானப் பட்டால்   நான் எப்படி பொறுப்பாக முடியும்..சொல்ல வேண்டியது என் கடமை.. சொல்லியாகிவிட்டது . ” , என்று எண்ணி தன் தோள்களை குலுக்கி கொண்டு திருமண மண்டபத்துக்கு தயாரானான் மதுசூதனன்.

            சில மணி துளிகள் பயணத்தின் பின், ரோஜா பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த வெள்ளை நிற கார் மண்டபம் வந்தடைந்தது.

         ப்ளூ நிற பேண்ட்.., வெள்ள நிற சட்டை..,  அணிந்து கொண்டு கம்பீரமாக  மேள தாள வரவேற்போடு  திருமண மண்டபத்திற்குள் நுழைந்தான் மதுசூதனன்.

       பலரும் மாப்பிள்ளையை ஆர்வமாக பார்த்தனர்.  மணமகன் அறையை நோக்கி வேகமாக சென்றான் மதுசூதனன்.

“அம்மா.. மூகூர்த்தத்துக்கு இன்னும் நேரம் இருக்கு.., நான் பொண்ணை பார்க்கணும்… ” , என்று மதுசூதனன் மணமகன் அறையின் வாசலில் நின்றபடி  கூற, “ஹா.. ஹா.. ” , என பெருங்குரல் எடுத்து சிரித்தார் கோவிந்தன். 

“என்ன சிரிப்பு ?” , என்று மதுசூதனன் கடுப்பாக கேட்க , “உன் அவசரத்தை நினைத்து தான்… காலம் முழுவதும் பேச போற.. இப்ப என்னப்பா அவசரம் ?”, என்று கோவிந்தன் தந்தையாக வினவ, ” நான் பார்க்கணும் ..” , என்று மதுசூதனன் அழுத்தமாக கூறினான்.

“இதுல என்ன இருக்கு… ? மாடியில தான் மணமகள் அறை…  நீ..,  “, என்று அவர் பேசி முடிப்பதற்குள், படியேறி   மணமகள்  அறையை நோக்கி நடந்து கொண்டிருந்த புதல்வனை ஆச்சர்யமாக பார்த்தார் அந்த தாய்.

 

       மணமகள் அறையில், பிங்க் நிற சேலையில் அழகு பதுமையாக அமர்ந்திருந்த நித்யாவை சுற்றி பல பெண்கள். மணமகள் அறையின்  வாசலில் நின்று கொண்டிருந்தார் பத்மாவதி.

“மாப்பிள்ளை… “, மேலும் என்ன பேசுவது என்று தெரியாமல் அவர் தயங்க ,  ” நான் அவங்க கிட்ட தனியா பேசணும்.. ” , என்று மதுசூதனன் நேரடியாக கூற,  “இப்பொழுதா..? ” , என்ற கேள்வி மனதில் தோன்றினாலும் , அதை கேட்க முடியாமல் பத்மாவதி அமைதியாக இருந்தார்.  அவர் அமைதியாக  இருந்ததன் காரணம் , “மதுசூதனின் கம்பீரமா? அவன் பண பலமா? அல்லது மாப்பிள்ளை என்ற உறவு முறையா? “. நம்மை போல் பத்மாவதிக்கும் தெரியவில்லை.

      அவர் தலை அவர் மனதின் மறுப்பையும் தாண்டி “சரி ” , என்று அசைந்தது.

       மதுசூதனன் உள்ளே செல்ல, அங்கிருந்த அனைவரும் , ஜிம்பூம்பா மந்திரம் போல் காணாமல் போனதில் நித்யா ஆச்சரியமாக பார்த்தாள்.

” பணக்காரனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கைல செட்டில் ஆகிரலாம்ன்னு  எண்ணமா?” , என்று காட்டமாக வந்தது அவன் கேள்வி.

     அறைக்குள் நுழைந்து சுவர் ஓரமாக சாய்ந்து கொண்டு இந்த கேள்வியை கேட்டான் மதுசூதனன். அழுத்தமாக ஆனால் மெதுவாக…

       வெளியில் இருப்பவர்களுக்கு அவன் பேசுவதோ , அவன் உதடுகளின் அசைவு கூட யாருக்கும் தெரியாது. “இருப்பினும் யார் காதிலாவது விழுந்து விடுமோ ” , என்ற  பயம் நித்யாவிற்குள் எழுந்தது.   

      அதிர்ச்சியில்  உறைந்து நின்றாள் நித்யா.  வெளியில் நின்று கொண்டிருந்த தன் தாயை பார்த்தாள். நித்யாவின் இதய துடிப்பு அதிகரித்தது.

” காது கேட்காதா..? இல்லை இவனுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லணும்னு நினைப்பா? என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கைல செட்டில் ஆகிரலாம்ன்னு  எண்ணமா?” , என்று மீண்டும் அதே கேள்வியை  அவன் அழுத்தமாக வினவினான்.

” நான் அனுப்பிச்ச மெஸ்ஸேஜ்க்கு பதில் வந்ததே… இவன் ஏன் இப்படி பேசுகிறான் ” , என்று கண்களை சுருக்கி கொண்டு அவள் யோசிக்க, 

“நீங்களா கல்யாணத்தை நிறுத்தி இருந்தா உங்களுக்கு அவமானம் கிடையாது… நான் நிறுத்தினா உங்களுக்கு அவமானம்..  நீங்க அவமானப் பட கூடாதுனு நான் நினச்சேன்..”, என்று மதுசூதனன் நிதானமாக கூறினான்.. “பேசுவதெல்லாம் பேசிவிட்டு… என்ன ஒரு தாராளமான குணம்.. ” , என்று மனதிற்குள் அவனை மெச்சிக் கொண்டாள்  நித்யா.

“காலம் கடந்து இவனிடம் பேசுவதில் , என்ன பயன் ?” , என்று அமைதியாக நின்றாள் நித்யா.

             யாரோ தன் தாயை அழைத்து செல்வது தெரிய, நித்யா பேசலாம் என்று சிந்தித்து வாயை திறந்தாள்.  ஆனால், இப்பொழுது  அவளை பேச விடாமல்,  மதுசூதனன் மேலும் தொடர்ந்தான். ” என்னால ஒரு மிடில் கிளாஸ் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது… நான் நினைக்கிற பெண்ணோடு தான் இந்த கல்யாணம் நடக்கும்.. ” , என்று மதுசூதனன் கறாராக கூறினான்.  “பேசுவதை காது கொடுத்து கூட கேட்க மாட்டான் போல..  இவனோடு நான் காலம் தள்ள வேண்டாம் ..,” , என்ற எண்ணம் நித்யாவிற்கு ஆறுதல் அளித்தாலும்..,”இன்று என்ன நடக்கும்?” , என்ற எண்ணம் அவளுக்கு சற்று பதட்டத்தை கொடுத்தது.  “பணக்கார இடம் என்று வாயை பிளந்தார்கள்  அல்லவா நல்லா  அனுபவிக்கட்டும்…. ” , என்று அவள் அறிவு கூறியது. 

          யாரோ அறைக்குள் நுழையும் சத்தம் கேட்க , மதுசூதனன் அமைதியானான் .

     வாசலில் நின்று கொண்ட  காயத்ரி.., ” அக்கா .. நீ  ஏன் தனியா இருக்க..?  உன் கூட இருந்த எல்லாரும் எங்க..? இந்த அம்மா எங்க போனாங்க? அக்கா  நீ ஏன் ஒரு மாதிரி இருக்க?” ,  அவள் அருகே சென்று அவள் கையை பிடித்து தன் கைக்குள் புதைத்து கொண்டாள்.

      நித்யாவிற்கு  எதிராக சுவர் ஓரமாக சாய்ந்து  நின்று கொண்டிருந்த  மதுசூதனனை அவள் கவனிக்கவில்லை. 

              பதட்டத்தில் நித்யாவிற்கு வார்த்தைகள் உடனடியாக வெளி வரவில்லை. அவள் ஏதேதோ குறிப்பு காட்டினாலும் அதை காயத்ரி கவனிக்கவில்லை. நித்யாவை பேசவும் அவள் விடவில்லை.

“அக்கா.. அத்தான்  ரொம்ப பணக்கார இடம்ன்னு டென்ஷனா இருக்கியா..?  நான் அத்தானை மண்டபத்துக்குள்ள வரும் பொழுது பார்த்தேன் ஹண்டசம் தான் .. ஆனால் உன் அழகு முன்னாடி கொஞ்சம் கம்மி தான் அக்கா….  என் அக்கா ரொம்ப அழகு.. ” , என்று அவள் தாடையை தடவி கொஞ்சினாள்.

         நித்யாவிற்கு பதட்டத்தில் வியர்த்தது. “அக்கா.. உனக்கு ஏன் இந்த எ.சி. யிலும் வியர்க்குது….?  கூல் அக்கா.. அத்தான்  “B.E.., M.S.”, “M.S..”  வெளி நாட்டுல படிச்சாங்களாம்…  நீ மட்டும்  படிப்புல என்ன குறைச்சலா..? ”  B.E.. M.B.A” இப்ப ” Ph.d ” பண்ணிட்டு இருக்க..  ” , “படிப்பில் ஒரு படி மேல”, என்று கண்ணடித்தாள் காயத்ரி.  “காயத்ரி..  கொஞ்சம் அமைதியா இரு.. ” , என்று நித்யா முணுமுணுத்தாள்.

        ” நித்தி அக்கா… நித்தி அக்கா… ” , என்று அழைத்து கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த முகிலனை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்தனர் அந்த மழலையர் பட்டாளம்.

    “இவன் எப்போழுது இங்கே  வந்தான்..? ” , என்று அவனை அதிர்ச்சியோடு  பார்த்தனர் சகோதரிகள்.

” அங்கிள் … நீங்க தான் நித்தி அக்காவை மேரேஜ் பண்ண போறீங்களா…? அம்மா சொன்னாங்க ” , என்று ஷெர்வானி அணிந்த சிறுவன் சுவர் ஓரமாக நின்று கொண்டிருந்த மதுசூதனனை பார்த்து வினவினான்.

     மதுசூதனன் பதில் கூறும் முன்.., “என்ன பசங்களா இன்னக்கி ஸ்கூலுக்கு லீவு போட்டுடீங்களா… ?” , என்று நித்யா அவர்கள் உயரத்திற்கு அமர்ந்து கொண்டு பேச ஆரம்பித்தாள்.    

      இப்பொழுது தான்  காயத்ரி மதுசூதனனை பார்த்தாள். “அடி  பாவி….. ஒரு  signal ஆவது குடுத்திருக்கலாம்ல.., ” , என்று நித்யாவின் காதில் கிசுகிசுத்தாள். “நான் கொடுத்தேன்.. உனக்கு தான் புரியல… ” , என்று அவளை முறைத்தாள் நித்யா.

வேறு வழியின்றி மதுசூதனனை பார்த்து சிரித்தாள் காயத்ரி. அவளை முறைத்து பார்த்து கொண்டிருந்தான் மதுசூதனன்.

“ஜாடிக்கு ஏத்த மூடி… ” , என்று மனதிற்குள் நினைத்தாள் காயத்ரி.

” அக்கா மேரேஜ்க்கு அப்புறம்.., நீ அங்கிள் வீட்டுக்கு போயிருவியா.? ” , என்று பட்டு பாவாடை அணிந்த சிறுமி வினவ., நித்யா  திருதிரு வென முழித்தாள்.

“இந்த மேரேஜ் என் வாழ்க்கையில் என்ன என்ன மாற்றங்களை  உண்டாக்குமோ… நான் பேசும் உரிமையை கூட இழந்து கொண்டிருக்கிறேன்..”, என்று நித்யா சுய சிந்தனையில் மூழ்க, “ஆமாம்..  நித்தி அக்கா சனி, ஞாயிறு இங்க வருவா… ” , என்று காயத்ரி கூறினாள்.

“உங்க வீடு எங்க அபார்ட்மெண்ட் விட பெருசா இருக்குமா ?” , என்று மற்றொரு சிறுமி வினவ.., ” உங்க அபார்ட்மெண்ட் அளவுக்கெல்லாம் எங்க வீடு பெருசு இல்லை… ” , என்று அறைக்குள் நுழைந்த முகிலன் முட்டி போட்டு அந்த குழந்தையின் கை பிடித்து கூறினான் .

        அந்த நிமிடம்..,” எனக்கு இந்த திருமணம் நடந்தால்.. அந்த வீட்டில் இவன் தான் என் தோழன் ” , என்று நித்யாவின் மனம் கூறியது.

“அக்கா.. நம்ம வீடு அளவுக்கு  அவங்க வீடு  பெருசா இல்லையாம்… நீ  ஏன் போகணும்.. உனக்கு கஷ்டமா இருக்கும்…… அங்கிள் நம்ம அபார்ட்மென்டுக்கு வருவாங்க.. நீ எங்க கூட தினமும்  விளையாடலாம்… ” , என்று ஷெர்வானி அணிந்த சிறுவன் கூற,  “உனக்கு உன் கவலை… ” , என்று காயத்ரி முணுமுணுத்தாள்.

               அவர்கள் கவனத்தை திசை திருப்பும் விதமாக , ” குட்டிஸ்.., கீழே  chocolate dipped cake , cotton candy , Paani puri…, Games, Mehandi , Bangles , tattoos,  எல்லாம் இருக்கு , என்று ஆசை காட்ட , அந்த மழலையர் பட்டாளம் சிட்டாக பறந்தது.

முகிலனை பற்றிய நித்யாவின்  மதிப்பீடு எங்கோ உயர்ந்தது..

        நித்யாவின் கண்களில்  தெரிந்த ஏதோ ஒன்று, முகிலனை சிந்திக்க வைத்தது.  “நம்ம ப்ரோ …. என்ன பேசினாருனு தெரியலியே..  ” , என்று யோசித்தான்.

” ஏண்டா… அவனை கூட்டிட்டு வான்னு உன்னை அனுப்பிச்சா.., நீயும் இங்க  நின்னு கதை பேசிக்கிட்டு இருக்க…” , என்று அங்கு வந்த புஷ்பா மதுசூதனின் தாய் பேசிக்கொண்டே மணமகள் அறைக்குள் நுழைந்தார்.

        நித்யாவை திருஷ்டி சுத்தி, “உன் அழகு தான் என்னை ஈர்த்திருச்சு…   எவ்வளவு  அழகா இருக்க.., என் கண்ணே  பட்டு விடும் போல… ” என்று நித்யாவின் கன்னம் தொட்டு கூறினார்.

“சொந்தமுன்னு தெரிஞ்ச உடனே பேசி முடிச்சிட்டேன்.. ” , என்று பெருமையாக அவர் கூற, மதுசூதனன் அவரை ஆழமாக பார்த்தான்.

” முகூர்த்தத்திற்கு நேரம் ஆகிருச்சு..  நானும் பேசிகிட்டு இருக்கேன்..  நம்ம ரூமுக்கு கிளம்புங்க … மது.., உன் ரொமான்ஸ் எல்லாம் அப்புறம் வச்சிக்கலாம்” என்று  புஷ்பா கூற, “அம்மா உங்களுக்கு  இப்படி கூட பேச வருமா..? ” , என்று முகிலன் ஆச்சர்யமாக கேட்டான்.

    “பேச்செல்லாம் போதும்… சீக்கிரம் வாங்க.. “, என்று தன் இரு புதல்வர்களையும் அழைத்து கொண்டு சென்றார். 

     முகூர்த்தம் நெருங்கியது. நித்யா பிங்க் நிற சேலையிலிருந்து     சிவப்பு  நிற சேலைக்கு மாறியிருந்தாள்.

           நித்யா  சிகப்பு நிற சேலையில் தேவதையாக காட்சி அளித்தாள். அவள் முகத்தில் ஒரு பதட்டம். காயத்ரி தங்க நிற சேலையில் ஜொலித்தாள்.

            மதுசூதனன் வேஷ்டி, சட்டைக்கு  மாறி இருந்தான். மணமேடையில் அமர்ந்திருந்த அவன் கண்கள் சதாசிவத்தை தேடி  அலை பாய்ந்தது.  சதாசிவத்தின்  மொபைல் சுவிட்ச் ஆப் என்றது.  மொபைலை முறைத்து  பார்த்து கொண்டிருந்தான் மதுசூதனன்

“நாழி ஆகிருச்சு..  பொண்ண அழைச்சிட்டு வாங்கோ..” , என்று ஐயர் கூறினார்.

“நான் கூறியதை இவர்கள் கேட்க வில்லை…, நம்பவும் இல்லை… ” , என்று நித்யாவின் அறிவு அவள் தாய் தந்தையை திட்டினாலும், ” நடப்பது எதுவாக இருப்பினும் அது நல்லதாக அமையட்டும்…எது நடந்தாலும்.. அதை தாங்கும் சக்தியை அவர்களுக்கு கொடு…. ” என்று மனதார வேண்டி கொண்டு மணமேடையில் அமர்ந்தாள் நித்யா.

“கெட்டிமேளம் … கெட்டிமேளம்…. “, என்று ஒலிப்பது நித்யாவின் காதில் விழுந்தது. 

        தாலியோடு  இருந்த மஞ்சள் கயிறை தன் கையில் வைத்துக் கொண்டு , மண்டபத்தை தன் கண்களால் அளவிட்டான் மதுசூதனன்.

“வரும் பிரச்சனையை தான் சமாளிக்க வேண்டும் ” , என்று ஆழமாக மூச்சு விட்டாள்  நித்யா. 

“பண பலத்தை தன் மன பலத்தால் வெல்ல வேண்டும்.” , என்ற எண்ணம் நித்யாவின் மனதில் விஸ்வரூபம் எடுத்தது.

                               கட்டங்கள் நீளும்….