“கூடியிருக்கும் ஆன்றோருக்கும் சான்றோருக்கும் எஸ் எம் தள வாசகர்களுக்கும் யுகேந்திரனின் முதற்கண் வணக்கம். இன்றைய கருத்தரங்கத்தில் இனிப்பான சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.”
“பெண்ணியம் என்று உரிமைக்குரல் எழுப்பும் பெண்டிர் என்றாலும், வீரமே பிரதானமென்று கூக்குரலிடும் ஆடவர் என்றாலும், இருசாராரும் இன்புறுவது காதலில் தான்.”
“அதனால்தான் பாரதி கூட ‘ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே!’ என்று காதலின் இன்பங்களைப் பட்டியலிட்டான். இலக்கியங்களில் காதல் என்ற கருத்து ‘அகம்’ என்ற சொல்லால் கையாளப்பட்டுள்ளது.”
“அது சரி… அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் காதல் சுகம் தானே! இதில் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது? என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.”
“லைலா மஜ்னு, அம்பிகாபதி அமராவதி, அனார்கலி சலீம் என்று சோக ரசம் பிழிந்த கவிஞர் பெருமான்கள் ஏன் வாழ்வாங்கு வாழ்ந்த இனிப்பான காதலைத் தெவிட்டத் தெவிட்டச் சொல்லவில்லை? இதுவே என் ஆதங்கம்.”
“சோகம் மட்டும் தான் காலத்தையும் தாண்டி மக்கள் நெஞ்சில் மாறாமல் நிற்குமா? ஏன்? இன்பப் பட்டியல்கள் இதயங்களில் இடம்பிடிக்காதா? இந்தக் கேள்விக்குப் பதில் தான் இன்றைய என் உரை. ‘இலக்கியம் கூறும் இனிப்பான காதல்’.”
“உங்களுக்கு முதலில் நான் அறிமுகப்படுத்தும் காதல் இணையர் அர்ஜுனன்- சித்ராங்கதா. இவர்களை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். ஆனால், பலர் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். இவர்களின் காதல் வெகு விசித்திரமானது. தாகூரின் கைவண்ணத்தில் மிளிர்ந்த காதலது.”
“வில்வீரன் அர்ஜுனனின் குறி, தப்பாது அந்தக் கொடிய காட்டு மிருகத்தின் உயிரைக் குடித்தது. இதைப் பார்த்த இன்னொரு வீரன் பரவசப்படுகிறான். ‘ஆஹா! இத்தனை அற்புதமாக வேட்டையாடும் இந்த வீரன் யார்?’ என ஆச்சரியப்படுகிறான். உள்ளம் குழைந்து போகிறது. என்ன? வீரனுக்கு உள்ளம் குழைந்ததா? இதுதானே உங்கள் கேள்வி?”
“உங்கள் கேள்வி நியாயம்தான்! வீரத்தைப் பார்த்தால் உள்ளம் குழைவது பெண்மைக்குத் தானே! ஆமாம்… வீரன் வேஷத்தில் அங்கிருந்தது ஒரு பெண்தான்! மணிபுரத்தின் அரசன் சித்ரவாகனனின் மகளான இளவரசி ‘சித்ராங்கதா’ தான் ஆண் வேடம் பூண்ட அந்த இளைஞன்.”
“சித்ரவாகனன் தன் மகளை ஆண்மகனைப் போலவே வளர்த்து வில், வாள் வித்தை பயிற்றுவித்தார். ஆண்மக்களின் உடையையே அணிகிறாள் அந்தப் பெண். அந்தப் புரத்தைத் தவிர்க்கிறாள். பெண்மையின் நளினங்களும், குழைவுகளும், கண்களால் வலைவீசுவதும் அவள் அறியாப் பாடங்கள்.”
“தான் கற்ற வித்தைகள் அனைத்தையும் தன் கண் முன்னால் நிற்கும் அந்தக் கனவு நாயகனிடம் காட்டிப் புளகாங்கிதப்பட வேண்டும் என்று நினைக்கிறாள் அந்த வீரத்திருமகள். அர்ஜுனனைப் பார்த்த மாத்திரத்தில் காதல் வயப்படுகிறாள். அங்கே அத்தனை காலமும் தூங்கிக் கிடந்த அவள் பெண்மை விழித்துக் கொள்கிறது.”
“அடுத்த நாளே தன் ஆண் உடைகளைத் தவிர்த்து கை வளைகள், பாதசரங்கள், இடையில் மேகலை, வர்ணப் பட்டாடை என அந்தப் பேராண்மை மிக்க ஆண்மகனின் முன் காட்சி தருகிறாள். அந்தோ பரிதாபம்! சித்ராங்கதாவின் காதலை மறுக்கிறான் அர்ஜுனன். துடித்துப் போகிறாள் பெண்.”
“தன் காதல் நிராகரிக்கப்பட்ட வேதனையில் மன்மதனிடம் முறையிடுகிறாள் சித்ராங்கதா. ‘எத்தனை எத்தனையோ ரிஷிகளும் முனிவர்களும் தங்கள் தவ வலிமையை பெண்களின் காலடியில் இழந்துள்ளார்கள். அவரின் காதலை வெல்லும் பெண்மையின் சுந்தர வடிவு எனக்கில்லாததால் தானே நான் தோற்றுப் போனேன்’ என்று கதறுகிறாள்.”
“இந்தப் பெண்ணின் சோகத்தைக் காணப் பொறுக்காத மன்மதனும் அவளுக்கு ஓராண்டு காலத்திற்குப் பெண்மையின் மென்மை, இனிமை, ஒப்பற்ற அழகு இவற்றை வழங்குகிறான். இப்போது சித்ராவின் எழிலுருவில் அர்ஜுனன் மயங்கிப் போகிறான், காதல் கொள்கிறான்.”
“இத்தோடு கதை முடிந்ததா என்று கேட்டால், அதுதான் இல்லை. காதலரின் களிப்பில் காலம் கரைகிறது. மணிப்புர நாட்டைப் பகைவர் தாக்குகின்றனர். இதுவரை காலம் தங்களைக் காத்து நின்ற இளவரசியைக் காணாமல் மக்கள் குழம்பிப் போகின்றனர். அர்ஜுனனும் குழம்புகிறான். மக்களின் வாய்மொழி கேட்ட அர்ஜுனன் தன் காதலியிடம் சித்ராவின் பெருமைகள் பற்றிப் பேசுகிறான். ‘வீரத்தில் நிகரில்லாத அந்தப் பெண்ணுக்கு என்ன ஆகிவிட்டது? என்ன குறை அவளுக்கு வாழ்வில் இருந்திருக்கும்?’ என்று புலம்புகிறான்.”
தன் காதலி தான் இளவரசி சித்ராங்கதா என்று புரியாத அந்த வீரன் அவளிடமே அவளைப் பற்றி முறையிடுகிறான். பேசுவது தன்னைப்பற்றித் தான் என்று தெரிந்திருந்தாலும் அது அர்ஜுனனுக்குத் தெரியாது என்பதால் செல்லமாகக் கோபிக்கிறாள் ஏந்திழை.
“என்ன குறை என்றா கேட்டீர்கள்? அந்தத் துரதிஷ்டசாலியிடம் என்ன இருந்தது? அவளுடைய பெருமைக்குரிய வீர தீரப் பிரதாபங்கள் அவள் தனது பெண்மை உள்ளத்தை வெளிப்படுத்தத் தடையாக நின்றனவே. நிறைவேறாத கனவுகள் கொண்டது அல்லவோ அவள் வாழ்க்கை. எனத் துயரத்துடன் மொழிகிறாள்.”
“அவள் வாய்மொழி மூலம் இன்னும் சித்ராங்கதாவைப் பற்றிக் கேட்ட அர்ஜுனன் அந்த மென்மையற்ற பெண்மையை வியந்து போகிறான். அந்த முரட்டு வீரத்தை நயந்து பேசுகிறான். நளினங்கள் தெரியாத அந்த வீர மங்கையை சிலாகித்துப் பேசுகிறான். வீரத்திற்கு முன்பு அழகு தோற்றுப் போகிறது.
“அர்ஜுனனின் காதலின் பரிபூரணத்துவத்தை உணர்ந்து சிலிர்க்கிறாள் பெண். மென்மையாலும் நளினத்தாலும் மட்டுமே வெல்ல முடியும் என்று தான் எண்ணியிருந்த அவன் உள்ளத்தை ஆண்மை மிகுந்த தனது முரட்டுப் பெண்மையாலும் வீரத் திறத்தினாலும் வெல்ல முடியும் என்று அறிந்து பேரானந்தம் கொள்கிறாள். வேஷம் கலைகிறது. உண்மை வெளிப்படுகிறது. வாழ்வு முழுமை பெறுகிறது. வீரம் மட்டுமல்லாது அங்கு காதலும் கடைசி வரை ஆனந்தக் கூத்தாடுகிறது.”
“இந்த இடத்தில் ஒன்றைப் பதிவு பண்ண நான் விரும்புகிறேன் தோழமைகளே! உலகம் ஆண் பெண் இருவராலும் ஆக்கப்பட்டது. பெண்ணியம் என்பது பெண் ஆணுடன் போர் புரிவதன்று. ஆணுடன் வாழ்ந்து அன்பை வளர்ப்பது. எந்த நாட்டில் பெண்மைக்கு மதிப்பும் பெருமையும் இருக்கிறதோ அந்த நாடே முன்னேற்றம் பெற்ற நாடாகும்.”
“அடுத்து நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் இனிப்பு ரூப்மதி- பாஜ் பஹதூர். ரூப்மதி… மால்வா பிரதேசத்தின் ஒரு நாடான தரம்புரியின் அரசனான தன்சிங் எனும் ராஜபுத்திர வம்சத்தின் அருமை மகள். பேரழகி மட்டுமல்ல, ‘தோஹா’ எனும் இரு வரிக் கவிதைகளை இயற்றி அவற்றை ‘பீன்’ எனும் இசைக்கருவியை இசைத்துப் பாடுவதில் திறமை பெற்றவள்.”
“மாண்டுவின் சுல்தானான பாஜ் பஹதூர் ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட வருகிறான். வந்த இடத்தில் ரூப்மதியின் குரலில் மயங்கிப் போகிறான் அந்த இசைப்பிரியன். மதம் மறந்து அங்கு காதல் மலர்கிறது. திருமணத்துக்குச் சம்மதம் கேட்கிறான் காளை. நர்மதை நதியை வழிபடும் பெண்ணுக்கு அதை விட்டுப் பிரிய மனமில்லை. அதையே விண்ணப்பமாக அவனிடம் சொல்கிறாள். ‘என் தெய்வமான அன்னை நர்மதையை நான் தினந்தோறும் கண்டு மகிழும் வண்ணம் ஒரு அரண்மனையை மாண்டுவில் எனக்கு அமைத்துக் கொடுத்தால் திருமணத்திற்குச் சம்மதம்’ என்கிறாள். அதற்கு உத்தரவாதம் அளித்து விடைபெறுகிறான் மன்னவன்.”
“காலங்கள் கடக்கிறது. மன்னவனிடமிருந்து எந்தச் சேதியும் வரவில்லை. பிரிவுத் துயரில் வாடுகிறாள் ரூப்மதி. தன்சிங்கின் காதுகளுக்கு மகளின் காதல் சேதி கிட்டுகிறது. மிகுந்த கோபம் கொள்கிறார். தன் குடிக்கும் குலத்துக்கும் அவப்பெயர் கொண்டு வந்த மகளை விஷம் வைத்துக் கொல்ல முடிவெடுத்துச் சிறையில் தள்ளுகிறார் தன்சிங்.”
“சதா தன் அன்பரின் நினைவில் சிறையில் வாடிய ரூப்மதியின் கனவில் அவள் தாய் நர்மதை தோன்றுகிறாள். ‘மகளே! மாண்டு நகரில் ஒரு குறிப்பிட்ட மரத்தினடியில் ஊற்று ஒன்று உற்பத்தியாகி ஓடி வந்து என்னுடன் கலக்கிறது. அங்கு நீ உன் காதலனைச் சேர்வாய்.’ என்ற சேதி சொல்கிறாள். மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறாள் ரூப்மதி.”
“அதேவேளை தன் காதலியைச் சிறை வைத்த சேதி கேட்ட பாஜ் பஹதூர் தரம்புரி மேல் போர் தொடுத்து அவளை மீட்கிறான். இரண்டு மதங்களின் சம்பிரதாயப்படியும் இனிதாகத் திருமணம் நடைபெறுகிறது. திருமணம் முடிந்த கையோடு தன் மனைவி கனவில் கண்ட நீரூற்றைத் தேடுகிறான் பாஜ் பஹதூர்.”
“தன் காதல் மனையாளின் ஆசைப்படி அந்த நீரூற்றைக் கண்டு பிடித்து அதற்குப் பக்கத்தில் பெரிதாக ஒரு மாளிகை அமைக்கிறான். நர்மதையின் நீர் ரூப்மதியின் அரண்மனைக்கு வாய்க்கால்கள் மூலமாக எடுத்துச் செல்லப்பட்டது. 16ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட அந்த அரண்மனை உயரமான உப்பரிகைகளைக் கொண்டதாக இருந்தது. மாலைப் பொழுதுகளில் தன் ஆசை மனைவியோடு இன்னிசையில் காலங் கழித்தான் மன்னன். வாழ்வு சிறக்கிறது.”
“தன் காதலுக்காகத் தாய் மண்ணைப் பிரிந்த அந்த அதிரூப சுந்தரியின் ஆசையை நிராசை ஆக்கி விடாமல் அவள் விண்ணப்பத்தை நிறைவேற்றிக் கொடுக்கிறான் அந்தக் காதல்க் கணவன்.”
“பெண் எனப்படுபவள் பேசப்படுபவளாக, வாதிக்கப் படுபவளாக, பிரச்சினைக்குரியவளாகத் தானே இன்று கருதப்படுகிறாள். அவளது பிறப்பு, கல்வி, பாதுகாப்பு, திருமணம் ஏன்? மரணங் கூட பட்டிமன்றத் தலைப்பாகிவிட்டன இன்று. இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் குடும்பப் பேணுதலுக்கே உடையவர்கள் என்ற மரபியல் போக்கு அழிக்கப்பட வேண்டும். பெண்களின் ஆளுமை முக்கியத்துவம் பெற வேண்டும்.”
“அடுத்து உங்களுக்கு அறிமுகமாவது பறம்பும் பொதினியும். இவை மனிதர்களல்ல, மலைகள். முல்லைக்குத் தேர் கொடுத்ததாக மட்டுமே நமக்கு அறிமுகமானவன் இவன். பறம்பு நாட்டிற்கு உட்பட்ட நானூறிற்கும் மேற்பட்ட ஊர்களின் தலைவனான பாரியின் காதல் கதை இது. பாரி- ஆதினி.”
“தமிழ் நிலத்தில் பல மாற்றங்கள் சேரமண்ணில்தான் முதலில் தொடங்கின. அவற்றில் ஒன்று போர் ஆயுதங்கள். அதற்குக் காரணம் யவனத்துடனான சேரனின் தொடர்பு. யவனர்களின் ஆயுதங்கள் மிகவும் கூராகவும், வீசினால் நெடு தூரம் பயணப்படுவதாகவும் வடிவமைக்கப் பட்டிருந்தன.”
“சேரனுடனான பெரும்போரில் பறம்பு வெற்றி கண்டதால் அவற்றில் பலவும் பறம்பிற்கு அறிமுகமாயின. பாரி, கருணை வள்ளல் மட்டுமல்ல. திறமை சாலியும் கூட. சேரர்களின் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் அவனைச் சிந்திக்கச் செய்கின்றன. மூவேந்தர்களையும் எதிர் கொள்ள வேண்டும் என்றால் பறம்பை இன்னும் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொள்கிறான் பாரி.”
“கொல்லர்கள் இரவும் பகலுமாக இரும்பை உருக்கி பாரியின் தேவையை நிறைவேற்ற அயராது பாடுபடுகிறார்கள்.”
“செம்மாஞ்சேரனுடனான போரில் பாரி ஈட்டிய வெற்றி மலை நாடெங்கும் பரவியது. பொதினி மலையின் தலைவன் மேழகன் மகள் ஆதினியின் கனவுக்குள்ளும் அவ்வெற்றி நாயகனே நிலை கொண்டிருக்கிறான். மனதுக்குள் அவனை வைத்துப் பூஜிக்கிறாள் ஆதினி.”
“சேரர்களின் ஆயுதங்களில் இருந்த அதிகூர்மையைக் கண்ட பாரி அவை தங்கள் பறம்பிற்கும் வேண்டும் என்று ஆவல் கொள்கிறான். ஆயுதங்களைக் கூர்மைப்படுத்தும் ஒரு வகைக் கல் பொதினியில் கிடைப்பதை அறிந்து அங்கு பயணப்படுகிறான் பாரி.”
“கல்லைத் தேடிப் போனவன் தலைவன் மகளைப் பார்த்த மாத்திரத்தில் கள்ளுண்ட வண்டாகிப் போகிறான். காதல் மலர்கிறது. அன்றைய காலத்தில் வேளிர் குலங்கள் ஒரு மாற்றுச் செய்யலாம் என்பதே அனுமதிக்கப் பட்டதாக இருந்தது. அதாவது ஒரு பொருளைத் தான் பண்டமாற்றம் பண்ணிக் கொள்ளலாம். கல்லுக்காக வந்தவன் கன்னியையும் எப்படிச் சேர்த்துக் கேட்பான்? இரு பொருள் கேட்பது மரபல்லவே! பாரி மரபுகளை மீறுபவன் அல்ல. நான் சொல்லாமலேயே பாரி எதைக் கேட்டிருப்பான் என்று உங்களுக்குப் புரிந்திருக்கும்.”
“ஆதினி அறிவில் சிறந்து விளங்குகிறாள். காதலியிடம் கற்றுக் கொள்ளும் சுகம் எத்தனை பேருக்கு வாய்க்கும்? பாரிக்கு அந்த சுகத்தை வாரி வாரி வழங்குகிறாள் ஆதினி.”
“இயற்கையோடு இணைந்த வித்தியாசமான காதல் இவர்களது. காட்டை அறிந்து, மலையைத் தெரிந்து, மலர்களை நுகர்ந்து, கனிகளைப் புசித்து எனக் காதலையே காதலித்த வாழ்வு பாரியுடையது. இவர்களின் நெடுநாள் இன்புற்ற வாழ்க்கைக்கு சாட்சிகள் தான் அங்கவையும், சங்கவையும். பாரியின் இரு பெண் மக்கள்.”
“இலக்கியத்தைப் பற்றிப் பேசப் புறப்பட்டால் பேசிக் கொண்டே போகலாம் நண்பர்களே. ஆனாலும் நேரம் இப்போது தடையாக இருப்பதால் தற்காலிகமாக உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன். கூடிய விரைவில் இன்னுமொரு தலைப்போடு உங்களைச் சந்திக்கிறேன். வணக்கம்.”