KD – 2

33cbaca90bf4e127cf73e38bc631af65

KD – 2

கதிரின் மனம்

காலையில் எல்லோரும் எழுந்து ஏர்போர்ட் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் இனியாவோ தென்றலை எழுப்புவதில் குறியாக இருந்தாள்.

“தென்றல் எழுந்திரு. நீயும் எங்கூட ஏர்போர்ட் வாடி” என்றவளின் குரலில் பழைய துள்ளல் இல்லை. 

“என்னால் வர முடியாது, நீ கிளம்பு” என்றவள் போர்வையை இழுத்து தலைவரை மூடிக்கொள்ள கோபம் வந்து இனியா அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தென்றலின் மீது ஊத்தினாள்.

குளிர்ந்த நீர் அதன் வேலையைக் காட்டிட விறுக்கென்று எழுந்தவளோ, “இனியா என்னால ஏர்போர்ட் வர முடியாதுடி, நீ போவதைப் பார்த்தா எனக்கு அழுகை வரும் ப்ளீஸ் என்னை புரிஞ்சிக்கோ இனியா..” என்று அழுததும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

தென்றல் விவரம் தெரிந்த நாளிலிருந்து இனியாவைப் பிரித்ததே இல்லை. அதுவும் இவளுக்கும் அவளுக்கு இரண்டு வயதுதான் வித்தியாசம். ஆனால் இனியாவை அவள் பெரியவளாக நினைத்ததில்லை. இருவரும் ஒரே வயதுடைய தோழிகள் போல பழகுவர்.

தனக்காக என்று ஒவ்வொரையும் பார்த்து பார்த்து செய்யும் இனியா மீது உயிரையே வைத்திருக்கும் தென்றலால் அவளின் பிரிவை ஏற்க முடியவில்லை. அதன் இந்த அழுகையும் ஆர்ப்பாட்டமும்.

“சரிடா நீ ஏர்போர்ட் வர வேண்டாம், நீ இங்கே இரு. ஆனா நான் சொல்றதை அமைதியா கேட்கணும்” என்று அவளின் முதுகை வருடியபடியே பேசினாள் இனியா.

“நான் திரும்பி வரும் வரை நீதான் அப்பா, அம்மாவைப் பார்த்துக்கணும். நல்லா படிச்சு சூப்பர் மார்க் எடு. எந்தநேரமும் விளையாடாமல் கடைக்குப் போய் அப்பா, அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணு, இதெல்லாம் சரியா பண்ணனும் செல்லம், தென்றல் பொறுப்பான பொண்ணுதான்னு எல்லோரும் சொல்லணும் செய்வியா?” என்று குழந்தைக்கு சொல்வது போல கூறிய இனியாவின் பேச்சுக்கு செவி சாய்த்தாள்

“ம்ம் நீ சொல்ற மாதிரியே இருப்பேன், நீ சீக்கிரம் படிப்பை முடிச்சிட்டு வந்துவிடு இனியா” என்றதும் அவளும் சரியென்று தலையசைத்து அவளின் கண்ணீரைத் துடைத்துவிட, “நல்ல பொண்ணு” என்ற தென்றல் இனியாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்.

அந்த அறைக்குள் நடந்த அனைத்தையும் பார்த்த செழியன், சுப்பு இருவருக்கும் கண்கள் கலங்கிட, “அப்பா” என்று வீட்டிற்குள் நுழைந்த மகனின் மீது பார்வையைத் திருப்பினர்.

“இனியா கிளம்ப நேரமாச்சு, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவ ஏர்போர்ட்ல இருக்கணும்” என்றதும் அறையை விட்டு வெளியே வந்தவள் அவனை முறைத்துவிட்டு சென்றாள். பிறகு இனியாவின் பின்னோடு பூனை குட்டிபோல சுற்றும் தங்கையைப் பார்த்து கதிருக்கே பொறாமையாக இருந்தது.

இனியா தனியாக சிக்கியபோது “என்ன பூனைக்குட்டி உன் பின்னாடி சுத்துது” என்றவன் அவளின் மீது பார்வை பதித்தபடி கேட்க அவளோ அவனைக் கண்டுகொள்ளாமல் செல்ல நினைத்தாள்.

“இனியா” என்றவன் அவளின் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்த அவளின் கண்களில் கண்ணீர் பெருகிட, “என்னடா எல்லோருக்கும் ஆறுதல் சொல்லிட்டு நீயே அழுகிற” என்றவன் அவளைத் தேற்றினான்.

அவனின் மார்பில் சாய்ந்துகொண்ட இனியா, “நீ ஏன் என்னை வெளிநாடு போக சொல்ற கதிர்மாமா, நான் இங்கேயே படிக்கிறேனே” என்று அழுகையுடன் கூறியவளின் விழிகளை நோக்கினான்.

“மாமா சொன்னா அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும், எனக்கு மனைவியா வரப்போற பொண்ணு அப்படியே நேஹா மாதிரி இருக்கணும் உன்னை மாதிரி அழுமூஞ்சியா இருக்கக்கூடாது” என்றவனை தள்ளிவிட்டு விலக அவனோ படுக்கையில் விழுந்தான்.

“எருமை நான் என்ன சொன்னா இது என்ன சொல்லுது பாரு. நீ அந்த நேஹாவைக் காட்டிட்டு நிம்மதியா இரு” என்று அவனை பொரிந்து தள்ளியவளின் விரலை சுண்டி இழுக்க அவனின் மார்பில் வந்து விழுந்தாள் இனியா.

அவள் அவனிடமிருந்து விலக நினைத்து, “இவ ஊருக்குப் போறாளே கொஞ்சமாவது அக்கறையா அட்வைஸ் பண்ணுவான்னு நினைச்சா, இவன் அந்த நேஹாவைப் பற்றி பேசறான்” என்றவள் அவனின் காதுபடவே அவள் முணுமுணுத்தாள்.

அவளின் இரண்டு கன்னத்திலும் அழுந்த முத்தமிட்டு, “நீ போய் படிச்சு முடிச்சுட்டு வாடி செல்லம்” என்றவன் அவளின் கையில் டைரி மில்க் சாக்லேட் ஒன்றையும், ரோஜா பூவையும் கொடுத்தான்.

“இப்படித்தான் வழியனுப்பி வைக்க போறீயா?” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “நான் ஏர்போர்ட்  வரை வருவேன், அப்புறம் நீதான் போகணும்” என்றவன் அங்கே செய்திருக்கும் ஏற்பாடுகளை கூறிவிட்டு வெளியே சென்றான்.

அவளருகே தன்னைக் கட்டுபடுத்திக்கொண்டு பேசக்கூட அவனால் முடியவில்லை. அவளைப்பற்றிய சிந்தனையுடன் அவன் பால்கனியில் நின்றிருந்தான்.

அவனின் அறையில் அங்கும் இங்கும் சுற்றி வந்தவளின் கண்களில் ஒரு ஓரமாக அடுக்கபட்டிருந்த டைரியை எடுத்துப் பார்த்துவிட்டு, “இதெல்லாம் இங்கிருந்து என்ன பண்ண போகுது, இனியா மாமா வருவதற்குள் இதையெல்லாம் தூக்கிட்டு போய் பேக் பண்ணு, வெளிநாடு போய் ஒட்டுமொத்தமா படிக்கணும்” என்று அவள் தனியாக பேசியபடியே அவனின் டைரியை ஒன்றுவிடாமல் எடுத்து பேக் பண்ணிவிட்டாள்.

அதன்பிறகு தென்றலைத் தவிர மற்ற மூவரும் ஏர்போர்ட் வந்து இனியாவை வழியனுப்ப கண்களில் கண்ணீர் வழிய விடைபெற்றுச் சென்றவளின் முகம் இவனின் மனதில் உயிரோவியம் போல மாறிப்போனது.

அந்த சிந்தனையுடன் மூவரும் வீடு வந்து சேர தென்றலோ திக்கு பிரம்மை பிடித்தவள்போல ஹாலில் அமர்ந்திருந்தாள். வீடு முழுக்க நிலவிய அமைதியும், இனியாவின் நினைவுகளும் அவளை வதைத்தது. அவளுக்கு அழுகையாக வருவதைக் கட்டுபடுத்திக்கொண்டு தன் சிந்தனையை திசை திருப்பினாள்.

அப்போது வீட்டிற்குள் வந்த மூவரையும் பார்த்து, “நான் போய் சமையல் பண்றேன் அம்மா” என்று தென்றல் அங்கிருந்து நகர்ந்துவிட கதிர் சுவற்றில் சாய்ந்து நின்றிருக்க கணவனும், மனைவியும் சோபாவில் அமர்ந்தனர்.

“கதிர் அங்கே எல்லாம் போட்டது போட்டபடி கிடக்கும், நாங்க ஊருக்கு கிளம்பறோம்” என்றார் செழியன் தெளிவாகவே.

அவன் மறுப்பு சொல்லாமல் அமைதியாக நின்றிருக்க, “நீயும் உன் வேலையை கவனி கதிர், இனிமேல்தான் உனக்கு செலவு அதிகமாக வரும்” இனியாவின் படிப்பைத்தான் சொல்கிறார் என்ற உண்மை அவனுக்கு புரிந்துவிட “நான் பார்த்துகிறேன் அப்பா” என்றான் உறுதியான குரலில்.

அதன்பிறகு காலை உணவை முடித்துவிட்டு மத்தியானம் மூவரும் சேலம் கிளம்பிவிட வீடே வெறுசொடிப்போனது. அவனால் எங்கிருக்க முடியாமல் மீண்டும் பைக்கை எடுத்துகொண்டு கடற்கரைக்கு சென்றான். அங்கிருந்த மணலில் அமர்ந்தவனின் மனம் முழுவதும் அவளின் நினைவுகளே.

எல்லோரும் இனியாவை கதிருக்கு பிடிக்காது என்று சொல்வதுண்டு. அவனும் இவளும் இரு வேறு துருவங்கள் என்ற போதும் கதிருக்கு இனியா என்றாலே தனி இஷ்டம்தான்.

“என்னடா இங்கே வந்து தனியா உட்கார்ந்துட்ட?” என்றவளின் குரல்கேட்டு நிமிர்ந்தான்.

அவனின் எதிரே சிவப்பு சுடிதாரில் ஐந்தடி உயரத்தில் அளவான கூந்தலை அழகாக வெட்டிவிட்டு பதுமை போல நின்றவளைப் பார்த்து,  “வா நேஹா” என்றான்.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் இது இல்ல” என்றபடி அவள் அவனின் அருகே வந்து அமர கதிரோ எதுவும் பேசாமல் கடலையே வேடிக்கைப் பார்த்தான்.

“டேய் ஏதாவது பேசு” என்றவள் பொறுமை இழந்தபடி கூறினாள். 

“இனியாவை ஊருக்கு அனுப்பியதும் அப்பா, அம்மா தங்கை மூணு பேரும் ஊருக்கு கிளம்பிட்டாங்க, எனக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கலன்னு இங்க வந்தேன்” என்றவனின் பார்வை கடலின் மீதே நிலைத்தது.

அவன் மெளனமாக இருக்க, “அவளை அனுப்பிட்டு வந்து இங்கே ஃபீல் பண்றீயா கதிர்” என்றவளை நிமிர்ந்து பார்த்த கதிரின் கண்கள் கலந்கியிருந்ததோ?

“என்னடா அவளை தைரியமா அவ்வளவு தூரம் அனுப்பிட்டு நீ இப்படி கலங்கிபோய் உட்கார்ந்திருக்கிற” என்று நேஹா அவனைத் தேற்றிட அவனும் தன் கட்டுப்பாட்டை இழந்தான்.

 “காலையில் மேடம் ஊருக்கு போகும்போது எங்கூட சண்டை கட்டிட்டு போறா நேஹா. இவளை வெளிநாடு அனுப்ப எனக்கு மட்டும் ஆசை பாரு அவளோட ப்யூச்சர் நல்ல இருக்கணும்னு தானே நான் எல்லாம் பண்றேன்? அவ ஏன் அதை புரிஞ்சிக்கவே மாட்டேன்றா?” என்றவன் வெடிக்க நேஹாவிற்கு சிரிப்புதான் வந்தது.

“என்ன சொல்லிட்டு போயிருக்க போறா? மிஞ்சி மிஞ்சி போனா என்னைக் கல்யாணம் பண்ணி சந்தோஷமா இருன்னு சொல்லிருப்பா” என்றவள் அவனின் மனதைப் படித்து போல கூற, “அதைத்தான் அந்த பிசாசும் சொல்லிட்டு போச்சு” என்றான் அவன் சிரிக்காமல்.

“ஹா ஹா ஹா சரியான வாலு. இங்கிருந்து அமெரிக்கா போயிருக்கு. நிஜமாவே அவளுக்காக இத்தனை செய்த நீயேண்டா இப்படி இருக்கிற” என்று அவள் புரியாமல் கேட்க, “எனக்கு அவளை பிடிக்கும் நேஹா” என்றான்.

“சின்ன சின்ன விஷயத்துக்காக சண்டை போட்டாலும் தன்னை சுற்றி இருக்கிறவங்க நன்மையை மனசில் வைத்து எந்த முடிவையும் எடுப்பா தெரியுமா?” என்றவன் பேச இவளோ புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அவளுக்கு கம்பெனி நிர்வாகம் பண்ண அவ்வளவு ஆசை, ஆனா அதுக்கான வழிகாட்டுதலை அவ சரியா பயன்படுத்தல. எந்தநேரமும் விளையாட்டு என்று ஒரு சீரியஸ்னஸ் இல்லாமல் இருக்கிறா அதன் வெளிநாடு அனுப்பினேன். இன்னைக்கு கசக்கத்தான் செய்யும் நாளைக்கு எல்லாம் புரியும்போது அவளும் என்னை புரிஞ்சிக்குவா” என்றவன் அங்கிருந்து எழுந்தான்.

“இவ்வளவு ஆசையை மனசில் வெச்சிட்டு எப்படிடா உன்னால அவளை வெறுக்கிற மாதிரி நடிக்க முடியுது?” என்றாள் நேஹா புரியாத பார்வையுடன்.

“எல்லோரும் நினைச்சா சிரிக்கிறோம், இல்ல மற்றவங்ககிட்ட சொல்லிட்டு அப்புறம் அழுகிறோமா?” என்று நிறுத்துவிட்டு நேஹாவின் முகம் பார்க்க அவளோ தலைகுனிந்தாள்.

“நமக்கு பிடிச்சவங்க நல்லா இருக்கணும்னு நினைக்கும் போது அதுக்கு சரியான வழிகாட்டியாகவும் இருக்க கத்துக்கணும், நான் அவளுக்கு வழிகாட்டியாகவும் இருப்பேன், வழி துணையாவும் இருப்பேன்” என்றவனின் குரலில் இருந்த உறுதியிலிருந்தே அவன் நினைத்ததை முடிப்பான் என்று உணர்ந்தாள் நேஹா.

“சரி வா வீட்டுக்கு போலாம்” என்று சொல்ல அவளும் ஒப்புதலாக தலையசைத்துவிட்டு அவனோடு எழுந்து நடந்தவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தான் ஸ்ரீசாந்த்.

அவனின் தோளில் உரிமையுடன் சாய்ந்திருந்த மகளும், அவனின் கைகோர்த்து நடந்த அவனின் மனைவியையும் பார்த்தும் இவளின் கண்கள் கலங்கியது.

நேஹா வெளிநாட்டில் படிப்பு முடித்துவிட்டு பாட்டி வீட்டிற்கு வந்தபோது ஸ்ரீசாந்த்தை சந்திக்க அவளையும் அறியாமல் அவனின் மீது காதல் வந்துவிட்டது. அவள் வீட்டில் பாட்டியிடம் சொல்ல அவரும் கல்யாண ஏற்பாடுகளை எல்லாம் முடித்தார்.

அவள் மணமேடை வரும் நேரத்தில் ஸ்ரீசாந்த் வேறொரு பெண்ணை திருமணம் செய்துவிட்ட உண்மையை கூற எல்லோரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தனர்.

நேஹாவின் பாட்டி தன் பேத்தியின் வாழ்க்கை வீணாக போனதை நினைத்து அழுக அவளோ கோழை போல செத்துவிட முயன்றவளை சாவின் விளிப்பில் இருந்து காப்பாற்றிக் கொண்டுவந்தான் கதிர். அப்போது அவன் அழைத்துச் சென்ற ஆசரமத்தை கண்ட பிறகே தன்னுடைய முடிவை நினைத்து வருந்தினாள்.

அந்த ஹோம் மொத்தமே ஒரு நான்கு வீடுகள் இருக்கும் அளவுதான் இருந்தது. அதற்கு நடுவே நின்ற பெரிய வேப்பமரத்தின் நிழலில்தான் இரு பார்வையும் இல்லாத ஒரு மாணவன் மற்ற சிறியவர்களை அமர வைத்து பாடமெடுப்பத்தை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

கண்கள் இரண்டும் நன்றாக இருக்கும் நாமே ஆயிரம் தவறுகள் செய்கிறோம் அவனோ இரண்டு கண்ணும் இல்லாமல் அழகாக பாடத்தை எடுத்தான். இன்னொரு புறமோ ஒரு வயதான பெண்மணிக்கு திடீரென்று ஹார்ட் அட்டக் வர எங்கிருந்தோ ஓடிவந்த ஒரு பதினேழு வயது பெண் அவருக்கு முதலுதவி செய்து அவரை மருத்துவமனைக்கு அனுப்புவதைக் கண்டாள்.

“என்ன கதிர் இங்கிருக்கவங்க எல்லோரும் திறமையாக இருக்காங்க” என்று அவள் புரியாமல் அவர்களைப் பார்த்தபடியே கேட்டாள்.

“அதோ பாடம் எடுக்கிறானே அவனோட பேரு மித்ரன். அவனுக்கு பத்து வயசு இருக்கும் போதே பார்வை போயிருச்சு. இப்போ அவன் காலேஜ் முதல் வருடம் படிக்கிறான் ஆனா நல்லா டேலண்ட்டான பையன்” என்றதும் அவளுக்கு பிரம்மிப்பு கூடியது.

“அதோ இப்போ அந்த அம்மாவுக்கு உதவி பண்ணிய பொண்ணோட பேரு ஹரிணி. அவ இப்போ பண்ணிரண்டாம் வகுப்பு படிக்கிற” என்றவனிடம் ஜானவி வந்து குழந்தையைக் கொடுத்தாள்.

பிறந்து இருபத்தி நான்கு மணிநேரத்திற்குள் குழந்தையை குப்பை தொட்டியில் வீசிய குழந்தையை தூக்கிவரும் காட்சியைக் கண்டு அவளுக்கு உள்ளமெல்லாம் பதறியது.

 “இதோ இந்த குட்டி ஹோம்க்கு புதுசா இந்த குட்டி தேவதை வந்திருக்காங்க” என்றவன் குழந்தையை இருகரங்களில் வாங்கி அங்கிருந்த வேப்பமரத்தின் நிழலில் அமர்ந்தான்.  அவனின் அருகே அமர்ந்த நேஹா அந்த குழந்தையே இமைக்காமல் பார்த்தாள். 

அவனின் கையிலிருந்த பச்சை மண் என்ன பாவம் செய்தது? ஒருபுறம் குழந்தைகளுக்காக மருத்துவமனையின் படிகளை ஏறி இறங்கும் தம்பதிகளின் நடுவே, இதோ பெற்ற பிள்ளையை தொட்டியில் போட்டுவிட்டு போகும் வழக்கம் உருவாகியிருந்தது.

நாம் எப்போதும் வாழ்க்கையின் சந்தோசமான பக்கத்தை மட்டுமே பார்க்க நினைக்கிறோம். ஆனால் வாழ்க்கையின் மறுப்பக்கத்தை நேகாவிற்கு காட்டிய கதிர் இன்னொரு விசயத்தையும் சொன்னான்.

“இந்த ஹோம் நான் நடத்தறேன் நேஹா. இங்கே இருக்கிற ஒவ்வொரு குழந்தைக்கும் நான் நல்லவழி காட்டனும் இதுதான் என்னோட லட்சியம்” என்றவனின் கண்களில் அப்படியொரு உறுதியைக் கண்டு, “எப்படிடா உன்னால் முடியும்?” என்று கேட்டாள்.

“எனக்கு நான் என்னவெல்லாம் பண்ண நினைக்கிறேனோ அதெல்லாம் இவங்களுக்கும் பண்ணனும் என்ற என்னோட எண்ணம் இருக்கும் போது என்னால் எப்படி முடியாமல் போகும்?” என்றான் புன்னகையுடன்.

அப்போதுதான் தன் தவறை உணர்ந்த நேஹாவும் அவனோடு இணைந்து அந்த ஹோம் வளர்ச்சிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ய அவளின் மனம் அமைதியானது. ஆனால் ஒருமுறை மனதில் பட்ட காயம் மறையாத வடுவாகிவிட்டது. அதனால் திருமணம் வேண்டாம் என்ற முடிவுடன் இருக்கிறாள்.

வீட்டிற்கு வரும் வழியில் நேஹாவை அவளின் வீட்டில் இறக்கிவிட்டு வந்த கதிர் தன் டைரியில் அன்று நடந்த நிகழ்வுகளை எழுதுவிட்டு,

நீ வரும் நாளை எதிர்பார்த்து

காத்திருப்பேன் கண்மணியே.

நீ இல்லாத நாட்களில் உன்

நினைவுகளோடு உறவாடி,

கனவுகளில் கதை பேசி

காதலோடு காத்திருப்பேன்” என்று கவிதையுடன் நிமிர்ந்தவன் தன்னடைய மற்ற டைரிகளைக் காணாமல் அவன் தேட, ‘நீதான் எங்கூட வரல. அதான் படிக்க உன் டைரியை சுட்டுட்டேன்’ என்று ஒரு பேப்பரில் எழுதி காஃபி கப்பை வைத்திருந்தாள் இனியா.

அதைப் பார்த்து, “போக்கிரி” என்றான் அவன் புன்னகையுடன்.

error: Content is protected !!