KKE–EPI 1
KKE–EPI 1
அத்தியாயம் 1
மாதரசன் பட்டினம்தான் மதராஸ் என்று ஆங்கிலேயர்களால் அழைக்கப்பட்டது. பின் அதுவே 1996ல் சென்னை என பெயர் மாற்றம் கண்டது.
“சீக்கிரம்மா! மனுஷன் அவசரம் புரியாம ஆடி அசைஞ்சிகிட்டு வரீங்க!”
சமையல் அறையில் இருந்து காபி டம்ளருடன் வந்துக் கொண்டிருந்த தன் தாய் பொன்னம்மாவைப் பார்த்துத் தான் கத்திக் கொண்டிருந்தான் ஜம்புலிங்கம்.
“எருமைகடா மாதிரி வளந்து நிக்கற, சொந்தமா ஒரு காபி போட்டுக் குடிக்கத் துப்பில்ல. எல்லாத்துக்கும் நான் வேணும். பேய் கூட குப்புற படுத்து தூங்கற நேரத்துல என்னை எழுப்பி காபி வேணும்னு அழிச்சாட்டியம்! உங்கப்பன் கூட இப்படி என்னை எழுப்பனது இல்லடா, கிரகம் புடிச்சவனே!” திட்டிக் கொண்டே காபியை நீட்டினார் பொன்னு.
“உன் கையால காபி தண்ணி குடிக்காம வெளிய போனா, போற காரியம் வெளங்காது பொன்னு. என் செல்ல கண்ணு!” தன் தாயைக் கொஞ்சியபடியே காபியை ரசித்துக் குடித்தான் ஜம்பு.
“இன்னிக்கு எந்த ஊருல இருந்துடா வராங்க?”
“சிங்கப்பூருமா! ப்ளைட் விடிகாலை அஞ்சு மணிக்கு இறங்கிரும். போற வழியில மங்கிய ஏத்திக்கனும். போன் போட்டா இன்னும் தூங்கிட்டு இருக்கான் மூதேவி!”
மங்கி எனும் மகேஷ்வரன் இவனுக்கு எடுபிடி. காலேஜ் போய் கொண்டே லீவ் நாட்களில் ஜம்புவுக்கு உதவியாக இருப்பான். வயது வித்தியாசம் இருந்தாலும் இருவரும் ஜிகிரி தோஸ்த்.
“அந்த சங்கி மங்கிய விட்டொழிச்சாதான்டா நீ உருப்புடுவ! ஏழு கழுதை வயசாச்சு உனக்கு, இன்னும் காலேஜு பையன் கூட சகவாசம்” முப்பத்திரண்டு வயதைத் தொடப்போகும் மகனை வறுத்தெடுத்தார் பொன்னு.
எருமைகடாவில் இருந்து கழுதைக்கு ப்ரோமேஷன் கிடைத்ததை எண்ணி சிரித்துக் கொண்டே,
“பொலம்பறத உட்டுட்டு நெத்தியில இட்டு விடும்மா! கிளம்பறேன்” என்றான் ஜம்பு.
பூஜை அறையில் நுழைந்து, அங்கிருந்த தெய்வங்களைக் கையெடுத்து கும்பிட்ட பொன்னு, குங்குமத்தை கொண்டு வந்து மகனுக்கு வீர திலகம் இட்டார். எப்பொழுது ட்ரீப் அடிக்கப் போனாலும் அம்மாவின் ஆசீர்வாதம் அவனுக்கு முக்கியம். அவரின் ஆசியால் மட்டுமே போன காரியம் நல்லபடி முடிகிறதென நம்பிக்கை அவனுக்கு. வெளியே முரடாக காட்டிக் கொண்டாலும் தாயின் மேல் உயிரையே வைத்திருந்தான் ஜம்பு.
“நல்லபடி போய்ட்டு வாடா என் சிங்கக்குட்டி!” வாழ்த்தியவர்,
“ஹ்ம்ம் பொண்டாட்டி கையால திலகம் வாங்கிக்கற வயசுல இன்னும் இந்த ஆத்தாவ வாட்டி எடுக்கற” கடைசி வாக்கியத்தை மெல்ல முனகிக் கொண்டார்.
சத்தமாக சொன்னால்தான் ராவில் மூச்சு முட்டக் குடித்துவிட்டு வந்து அலப்பறைப் பண்ணுவானே! அத்தோடு நிறுத்தாமல், வாந்தி எடுத்து வீட்டை நாறடிப்பது பத்தாமல், தன் தகப்பனையும் சேர்த்து நாறடிப்பான். அது என்னமோ அப்பனுக்கும் மகனுக்கும் ஏழாம் பொருத்தம்.
“நான் வரேன்மா! இந்த தடவை திரும்பி வர ரெண்டு வாரமாகும். உன் புருஷன் கிட்ட சொல்லிரு. கேட்கவே அவருக்கு குளுகுளுன்னு இருக்கும். நீயும் என் தொல்லை இல்லாம அக்கடான்னு கட்டைய சாய்ச்சுக்க” சொல்லியபடியே வேனில் ஏறி வெளியேறினான் ஜம்புலிங்கம்.
மகன் ஓட்டி சென்ற வேன் கண்ணில் இருந்து மறையும் வரை வாசலிலே நின்றிருந்தார் பொன்னு.
“என்ன பணிவிடைலாம் செஞ்சு, வீர திலகமிட்டு மகன போருக்கு அனுப்பி வச்சிட்டியா?” கிண்டலாகக் கேட்டபடி வந்தார் ஆதிலிங்கம்.
கடுப்புடன் திரும்பிய பொன்னு கணவனைப் பார்த்து முறைத்தார்.
“ஏன்டி முறைச்சுப் பார்க்கற? அந்தக் காலத்துலயே முறைச்சிப் பார்த்து என்னை வளைச்சிப் போட்டது பத்தலயாடி என் முறைப்பொண்ணே! முறைத்து முறைத்து என்னை சிறையிலிட்டாய்” என பாட்டைப் மாற்றி பாடி வம்பிழுத்தார் தன் ஆசை மனைவியை.
“ஹ்க்கும்! இவரு பெரிய மன்மத ராசா! இவர முறைச்சி மயக்கிப்புட்டாங்க. உங்க ரோமாஞ்சனத்த கொஞ்சம் மூட்டைக் கட்டி வைங்க. பையனுக்கு கல்யாணத்துக்குப் பாருங்கன்னு நான் காட்டுக் கத்தலா கத்தறேன், அது மட்டும் காதுல விழுகாது! ஆனா கேப் கிடைச்சா பொண்டாட்டிய கொஞ்ச கிளம்பிருவாரு” பொறுமியவர் கூடத்தில் இருந்த நாற்காலியில் போய் பொத்தென அமர்ந்துக் கொண்டார்.
“எனக்கும் மட்டும் உசுரு போகற வரைக்கும் நீ கழனி தண்ணி மாதிரி கலக்கிக் குடுக்கற காபி குடிச்சே வாழனும்னு ஆசையா என்ன! மருமக வந்து காபி போட்டுக் குடுக்கனும், பேரப்புள்ளைங்க மூஞ்சில மூச்சா போகனும் இப்படிலாம் ஆசை நெஞ்சு முழுக்க முட்டிக்கிட்டு நிக்குதுடி பொன்னும்மா! உன் மகன் புடி குடுக்க மாட்டறானே!”
“அவன் அப்படி பேசவே நீங்கதான் காரணம். நல்லா இருந்த புள்ளைய அடிச்சு வச்சு இப்படி சாமியார் கணக்கா சுத்த விட்டுட்டீங்க”
“தறுதலையா சைட்டடிச்சுட்டு, சரக்கடிச்சு சுத்திக்கிட்டு இருந்தவன, லேசா ரெண்டு தட்டு தட்டிபுட்டேன். எந்த அப்பந்தான் மகன் இப்படி கெட்டழிஞ்சா சும்மா பார்த்துட்டு நிப்பான்? அடிச்சதையே இன்னும் புடிச்சுட்டு தொங்கிட்டு இருந்தா நான் என்னடி செய்யட்டும்?”
“உங்க ரெண்டு பேருக்கும் என்ன கவலை! சண்டை போட்டுகிட்டு ஆளுக்கு ஒரு மூலைய பார்த்துட்டு நிப்பீங்க! ஒத்தைப் பொம்பளயா நான் நடுவுல கிடந்து அல்லாடுறேன். ஒரு சீரியல் பார்த்து, அதைப் பத்தி பேசி சிரிக்க மக இருக்கா, நாங்களும் அல்வா சாப்புடுவோம்னு வம்பிழுக்க மருமக இருக்கா? எல்லாம் நான் வாங்கி வந்த வரம்” புலம்பினார் பொன்னு.
“மருமக வரதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாதுடி, புரிஞ்சுக்க! அதுக்கு உன் மகன் கூட தான் நீ சண்டைப்பிடிக்கனும். மக வேணும்னா இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகல, ரூமுக்கு வா ரெடி பண்ணிரலாம்” சொல்லிவிட்டு இடி இடியென சிரித்தார்.
“புள்ள இல்லாத வீட்டுல கிழட்டுக் கிழவன் துள்ளிக் குதிச்சானாம்! மகனுக்குக்கு கல்யாணம் பண்ணி வச்சு பேரப் புள்ளைங்க துள்ளி விளையாடறத பார்க்க ஆசைப்பட்டா, அவனுக்கு தங்கச்சி பாப்பா கொண்டு வர ப்ளான் போடறீங்க! வகுந்துருவேன் வகுந்து!” முதுகில் புரண்ட முடியை கொண்டையாக அள்ளி முடித்தவர், தீப்பார்வையை கணவரிடம் செலுத்தினார்.
அதற்கு மேல் பேச வாய் வருமா அவருக்கு. மெல்ல எழுந்து சமையல் அறையை நோக்கி நடந்துக் கொண்டே,
“நீ போய் கொஞ்ச நேரம் படும்மா. விடிஞ்சும் விடியாம எழும்பவும்தான் சாதாரண விஷயத்துக்கெல்லாம் கோபம் வருது. நான் உனக்கு சூடா காபி போட்டு எடுத்துட்டு வரேன்” என்றார்.
“சீனி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்” என்ற பொன்னு மெல்ல நடந்து படுக்கை அறையில் புகுந்துக் கொண்டார். அப்பா மகனுக்குள் எதுவும் சரி இல்லாவிட்டாலும் இருவருக்குமே பொன்னுவிடம் மிகுந்த பாசம் இருந்தது. அவருக்காகவே ஒருவர் முகத்தை ஒருவர் சகித்துக் கொண்டு ஒரே கூரையின் கீழ் இருந்தனர்.
மகேஷ்வரனின் வீட்டை அடைந்த ஜம்பு, ஹாரனைத் தெறிக்கவிட்டான். மங்கியின் தங்கை வெளியே வந்து,
“என்னண்ணா ஹாரனை போட்டு அடிக்கிறீங்க? நாங்கலாம் தூங்கறது இல்லையா?” என கத்தினாள்.
“பாப்பு, மார்கழி மாசத்துல வயசு புள்ளையா சீக்கிரம் எழுந்து கோலம் போடனும்மா! நீ என்னடான்னா தலைவிரிக்கோலமா நிக்கற! அப்புறம் எப்படி மகாலெட்சுமி வருவா? போ போய் உங்கண்ணன எழுப்பி சீக்கிரம் வர சொல்லு.”
“இனிமே மகாலெட்சுமி எங்க வருவா? அதான் நீங்க வந்துட்டீங்களே!”
“அடிங்க! இறங்கி வந்தேன் அடிய கிளப்பிருவேன்” அவன் சத்தத்தில் உள்ளே ஓடிவிட்டாள் அவள்.
பத்து நிமிடத்தில் அடித்துப் பிடித்து கையில் பேக்குடன் ஓடி வந்தான் மங்கி.
“சாரிண்ணா, தூங்கிட்டேன்!” அசடு வழிந்தவனை,
“குளிச்சியா இல்லையாடா?” என கேட்டான் ஜம்பு.
“இல்லண்ணா! பல்லு மட்டும் விளக்கனேன்”
“கருமம் புடிச்சவனே! நாம போறது டெம்பிள் டூர்டா. குளிக்காம கொள்ளாம வந்தா பாவம்”
“அதெல்லாம் தலைல மூனு சொட்டு தண்ணி தெளிச்சிகிட்டா தோஷம் இல்ல. நீங்க என்னை மொறைக்காம ரோட்டப் பார்த்து ஓட்டுங்கண்ணா. நான் கொஞ்ச நேரம் கண்ண மூடறேன்”
“உன்னை போய் உதவிக்கு வச்சிருக்கேன் பாரு, என் புத்திய..”
“விடுண்ணா. நைட்டு முழிக்கறது, பகல் வரைக்கும் தூங்கறதெல்லாம் வயசு பசங்க லைப்ல ஜகஜம்ண்ணா” என்றவாறே குறட்டை விட ஆரம்பித்துவிட்டான் மங்கி.
சத்தமாக கடிந்துக் கொண்டாலும் மங்கியின் மேல் நெஞ்சு முட்ட பாசம் வைத்திருந்தான் ஜம்பு. அண்ணா அண்ணா என சுற்றும் மங்கி இவனுக்கு நண்பனுக்கும் மேல். அவனும் பாசம் காட்டுவதில் சளைத்தவன் அல்ல.
சென்னை மீனாம்பாக்கம் ஏர்போர்ட்டை அடைந்த போது காலை மணி நான்கு ஐம்பது ஆகி இருந்தது.
“மங்கி, சீக்கிரம் நேம் போர்டையும், டேஷ்போர்டுல இருக்கற பைலையும் எடுத்துட்டு வாடா. நான் போய் ப்ளைட் வந்துருச்சான்னு பார்க்கறேன்” என்றவாறே உள்ளே ஓடினான் ஜம்பு.
லிங்கம் டூர் அண்ட் ட்ராவல்ஸ் ஜம்பு பிறந்த போது அவன் அப்பாவால் ஆரம்பிக்கப்பட்டது. அவன் வளர வளர வாடிக்கையாளர்களும் வளர்ந்து இப்போது ஓரளவு முண்ணனியில் நிற்கிறது. அவனுக்கும் அவன் அப்பாவுக்கும் சண்டை வரும் வரை இளவரசனாய் சுற்றி திரிந்தவன் தான் ஜம்பு. காலேஜிக்கு ஒழுங்காக போகாமல், நண்பர்களுடன் தம், சைட், சரக்கு என பொழுதை குஜாலாக ஓட்டியவன். பொன்னுவின் கெஞ்சல் கொஞ்சலும் எடுபடவில்லை, ஆதிலிங்கத்தின் காட்டுக் கத்தலும் அவனை மாற்றவில்லை.
பழைய படங்களில் காட்டுவது போல கடைசியில் சண்டை முற்றி மகனை வீட்டை விட்டு துரத்திவிட்டார் ஆதிலிங்கம். அப்பாவை எதிர்த்துக் கொண்டு போயா ஆதி, பாசம் இல்லாத கபோதி என சிலிர்த்துக் கொண்டு ஒன்றும் இல்லாமல் வெளியேறினான் ஜம்பு. இருவருக்கும் நடுவில் கண்ணீர் விட்டவர் பொன்னுதான். மனைவியின் பிடுங்கலில் எப்படியும் மறுநாளே அவனை வீட்டில் சேர்த்திருப்பார்தான். ஆனால் அவ்விரவே தானாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தான் ஜம்பு.
யாரிடமும் பேசவில்லை, தன் அறையில் போய் அடைந்துக் கொண்டான். இன்று வரை அன்று என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. வாலை சுருட்டிக் கொண்டு அப்பாவின் கீழேயே வேலைக்கு அமர்ந்தான். ஆபிசில் இருக்க சொல்லியதற்கு மறுத்து விட்டு, வேன் ட்ரைவராகவும் டூர் கைடாகவும் மாறி புது வாழ்க்கையை ஆரம்பித்தான் ஜம்பு. அப்பாவிடம் அளந்துப் பேசுபவன், அம்மாவிடம் மட்டும் செல்லம் கொஞ்சிக் கொள்வான். அவன் வாழ்க்கையே வேன், டூர், மங்கி என சுருங்கிப் போனது.
ஏர்போர்ட் உள்ளே சென்றவன், சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் தரை இறங்கி விட்டதா என விசாரித்தான். அரை மணி நேரம் தாமதம் ஆகும் என அறிந்துக் கொண்டவன், ஆசுவாசமாக அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தான். அதற்குள் மங்கியும் அவன் அருகில் வந்து அமர்ந்திருந்தான்.
“அண்ணா, எத்தனை பேர் வராங்க இந்த தடவை?”
“எட்டு பேர் வராங்கன்னு ரிசப்ஷன் பொண்ணு சொன்னுச்சு. கூட்டம் அதிகம்னா பஸ் விட்டுருப்பாங்க. ஆள் ரொம்ப இல்லைன்னு நம்ம கிட்ட குடுத்துட்டாங்கடா. பெயர் லிஸ்ட் கூட நான் பார்க்கல. அவங்களாம் முதல்ல வரட்டும் அப்புறம் செக் பண்ணலாம்.”
நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடிக் கொண்டான் ஜம்பு. சில நிமிடங்களில் அவன் மூக்கின் முன் காபியின் வாசனை. புன்னகையுடன் கண்ணைத் திறந்தான் அவன்.
“இதுக்குத்தான்டா தண்ட சோம்பேறியா இருந்தாலும் உன்னை எனக்கு உதவியா வச்சிருக்கேன்!” என காபியைக் கையில் வாங்கிக் கொண்டான் ஜம்பு.
ஜம்பு ஒரு காபி பிரியன். விடாமல் சிகரேட் அடிப்பவர்களை செயின் ஸ்மோக்கர் என சொல்வது போல, இவனை செயின் ட்ரிங்கர் என சொல்லலாம். கணக்கிலடங்காமல் காபியை உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பான். உடம்பில் ரத்தத்துக்கு பதிலாக காபி தான் ஓடுகிறது என பொன்னு கூட அவனை திட்டிக் கொண்டே இருப்பார்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ப்ளைட் வந்த அறிவிப்பு வர இருவரும் பரபரப்பானார்கள். சிங்கப்பூரில் உள்ள ஒரு சீன டிராவல்ஸ் சுற்றுப்பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. அங்கிருந்து வரும் சுற்றுப்பயணிகளை இங்கே லிங்கம் ட்ராவல்ஸ்க்கு கைமாற்றி விடுவார்கள். இவர்கள் வந்த பயணிகளை பத்திரமாக பார்த்து, சுற்றிக் காட்டி மீண்டும் விமானம் ஏற்றி சிங்கப்பூருக்கு அனுப்பி விடுவார்கள். பணம் பயணிகள் இறங்கும் போது பாதியும், கிளம்பும் போது மீதியும் கணக்கில் கட்டி விடுவார்கள் சிங்கப்பூர் நிறுவனத்தினர். இது போல லிங்கம் டூர் அண்ட் டிராவல்ஸ்க்கு பல நாட்டு வாடிக்கையாளர்கள் இருந்தனர். உள்ளூரிலே உளன்று கொண்டு இருந்த நிறுவனத்தை வெளிநாட்டு வாடிக்கைப் பிடிக்கும் அளவு வளர்த்து விட்டது ஜம்புதான்.
அலைந்து திரிந்து விசாரித்து, ரிஸ்க் எடுத்து தான் இதை செய்து முடித்திருந்தான். மங்கியின் படிப்பறிவும் இதற்கு உதவியது. ஆதிலிங்கம் முதலில் மறுத்தாலும், பின்பு ஒத்துக் கொண்டார். முதலில் பலரிடம் ஏமாந்து, பிறகுதான் வியாபார சூட்சுமத்தைப் பிடித்துக் கொண்டான் ஜம்பு. பிறகே லாபம் காட்ட தொடங்கியது தொழில். இவ்வளவு செய்தும், அவனுக்கு திருப்தி அளிப்பது ஊர் ஊராக சுற்றுவதுதான். அதற்காகத்தான் தானே வண்டி எடுத்துக் கொண்டு டூருக்கு செல்வான். வரும் சுற்றுப் பயணிகளிடம் கைடாகவே நடந்துக் கொள்வான்.
கார்ட்போர்டில் ‘ஏஞ்சலா ட்ராவல்ஸ்’ என எழுதி இருந்த பதாகையைப் பிடித்துக் கொண்டு மங்கி நிற்க, ஜம்பு வருபவர்களை கவனித்துக் கொண்டிருந்தான். பயண பொதிகளைத் தள்ளிக் கொண்டு ஒரு கூட்டம் இவர்கள் இருக்கும் இடம் நோக்கி வந்தது. பெண்களின் தலைகளே தெரிந்தது.
‘லேடிஸ் தான் வயது ஏறும் போது கோயில் குளம்னு கிளம்பறாங்க. இந்த ஆம்பிளைங்க கிழடு வயசானாலும் கோவா ட்ரீப் பிளான் பண்ணி சைட் அடிக்க கிளம்பிருறாங்க! நம்ம மேக் அப்படி!’ என மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டான் ஜம்பு.
எல்லோரும் இவர்கள் அருகே வரவும் வணக்கம் சொன்னவன், தலை எண்ணிக்கையைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான். ஏழு பேர்தான் இருந்தார்கள்.
“ஒரு ஆள் குறையிது மங்கி. நல்லா செக் பண்ணு”
ஒவ்வொரு பெயராக கூப்பிட்ட மங்கி, எட்டாவது பெயராக
“லீ மெய் லிங்” என வாசித்து விட்டு மீண்டும் தான் வாசித்தது சரிதானா என ஆச்சரியமாகப் பார்த்தான். முன்னே நின்றிருந்த பெண்களை விலக்கிக் குட்டியாக ஒரு பெண் உள்ளேன் ஐயா என்பது போல ஒற்றைக் கையைத் தூக்கிக் கொண்டு ஜம்புவின் முன் வந்து நின்றாள்.
“டேய் மங்கி, என்னடா இது சைனா செட்டு வந்து நிக்கிது?” என மங்கியின் காதில் முணுமுணுத்தான் ஜம்பு.
“அதான்ணே எனக்கும் ஆச்சரியமா இருக்கு.”
“ஹாய்!! ஐ எம் லீ மெய் லிங்” என ஜம்புவின் முன் கைக்குலுக்க கை நீட்டினாள் அவள்.
தன்னையறியாமல் அவனின் கை நீண்டு அவளின் கையைப் பற்றி குலுக்கியது.