அத்தியாயம் – 12
அன்று சண்டே என்பதால் ப்ரீத்தியை உடன் அழைத்துக்கொண்டு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கிளம்பினாள் மதுமதி. அவள் வேலைக்கு செல்லும் நேரம் தவிர மற்ற நேரங்களில் வெளியே செல்லும் பொழுது ப்ரீத்தியையும் அழைத்து செல்வாள்.
காலையில் உணவை வீட்டில் முடித்துக்கொண்டு ஸ்கூட்டியில் இருவரும் கிளம்பிச் சென்றனர். பெரிய ஷாப்பிங் ஹாலுக்குள் நுழைந்த மதுமதி தனக்கு பிடித்த சில உடைகளை தேர்வு செய்துவிட்டு பில் போட காத்திருந்தாள்.
அவளுக்கு ரொம்ப பிடித்த ஒரு சேலையைக் கையில் வைத்துகொண்டு யோசித்துக்கொண்டே நின்றிருந்தாள் பிரீத்தி.
‘இவளுக்கு இந்த சேலை பிடித்திருக்கிறது. ஆனா எடுக்கலாமா சிந்தனையில் நின்னுட்டு இருக்கிற..’ ப்ரீத்தியைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்து மது அவளின் அருகில் வந்து நின்ற ராகவைக் கவனிக்கவில்லை.
“மேடம் என்னவோ ஆழ்ந்த சிந்தனையில் இருக்கீங்க போல..” என்றவனின் குரல்கேட்டு திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தாள் மது. அவளை ஷாப்பிங் காம்பிளக்ஸ் உள்ளே நுழைவதைக் கவனித்த ராகவ் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தான்.
அவளின் அருகில் புன்னகையுடன் நின்றிருந்தனைப் பார்த்தும், ‘உனக்கு அறிவே இல்லையா? இப்படியா வந்து பின்னாடி நின்னு பயமுறுத்துவ. அந்த சிடுமூஞ்சி கூட சேர்ந்து இவனும் அவனை மாதிரியே ஆகிட்டான்..’ என்று இதழசைத்தாள்.
“ஏய் என்ன சொன்ன..” என்று அவன் விரல்நீட்டி மிரட்டினான்.
‘நான் என்ன சொன்னா உனக்கு என்ன?’ அவனோடு எதிர்வாதம் செய்ய நிமிர்ந்தவளின் பார்வை மாறுவதைக் கவனித்த ராகவ் அவள் பார்வையைப் பின்தொடர்ந்தான்.
அவளின் பார்வை அந்த ஷாப்பிங் ஹாலின் எதிரே இருந்த காம்ளக்ஸ் மீது பதிந்திட அவனின் புருவங்கள் கேள்வியாக சுருங்கியது.
மதுவின் கண்களில் விழுந்த அந்த ஷாப்பிங் காம்பிளக்ஸ் அருகிலிருந்த எஃப். எம். ஸ்டுடியோ. ‘இந்த ரேடியோ ஸ்டேஷன்ல தான் பாலா வேலை பார்க்கிறார்..’ என்ற நினைவில் அவளின் அகமும், முகமும் ஒருங்கே மலர்ந்தது.
‘அவனை நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும்’ என்ற ஆவலை அவளால் அடக்க முடியாமல் போகவே ‘அவனை நேரில் போய் பார்த்துட்டு வந்தால் தான்..’ என்ற எண்ணத்துடன் நின்றிருந்தாள் மதுமதி.
‘இவள் என்னடா இங்க நின்னு கனவு கண்டுட்டு இருக்கிற..’ அவளின் பார்வை சென்ற திக்கை நோக்கிய ராகவிற்கு உடனே விஷயம் புரிந்துவிடவே அவனின் பார்வை பிரீத்தியின் மீது படிந்தது.
அவளோ ஆழ்ந்த சிந்தனையில் நின்றிருக்க ‘சுத்தம் இன்னைக்கு நான் வீடு போய் சேர்ந்த மாதிரிதான்..’ என்று நினைத்தவன் மதுவை நடப்பிற்கு கொண்டுவர முயன்றான்.
“ஏய் அங்கே என்ன பார்வை..” என்ற அவனின் கேள்வியில் நிஜத்திற்கு திரும்பியவளின் தலையில் நறுக்கென்று கொட்டினான் ராகவ்.
“நீ திருந்தவே மாட்ட இல்ல..”
‘ஆஆ..’ என்று தலையைத் தேய்த்துக்கொண்ட மது அவனை முறைத்துவிட்டு, ‘நான் என்ன பண்ணினேன்?’ என்றாள் எரிச்சலோடு.
“முட்டக்கண்ணி..” என்று அவளை திட்டிய ராகவ், “உனக்கு வாய்பேச வரல என்றாலும் வாய் கொழுப்பு ரொம்ப ஜாஸ்தி..” என்றவன் அப்பொழுதுதான் அங்கே நின்ற பிரீத்தியைக் கவனித்தான்.
அவள் ஒரு சேலையைக் கையில் வைத்துகொண்டு சிந்தனையில் நின்றிருக்க, “இவள் என்னைக்கு ஷாப்பிங் முடித்து நீங்க இருவரும் எப்போ வீட்டிற்குப் போவாத ப்ளான் பண்ணியிருக்கீங்க..” அவன் மதுவிடம் கேட்கவே அவளின் கவனமும் பிரீத்தியின் பக்கம் திரும்பியது.
‘அந்த சேலையை கையில் வைத்துகொண்டு ரொம்பநேரமாக யோசிக்கிற..’ அவளின் நடவடிக்கையை மது அவனிடம் சைகையில் சொல்ல, “அவளுக்கும் அந்த சேலைக்கும் எதாவது தொடர்பு இருக்கலாம்..” என்றான் உதட்டை பிதுக்கியவண்ணம்
பிரீத்தி கடைசியாக அந்த சேலையை செலக்ட் செய்து எடுத்துக்கொண்டு கடையைவிட்டு வெளியேற அவளை பின் தொடர்ந்தனர் மதுவும், ராகவும்!
மூவரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே காம்ப்ளக்ஸ் விட்டு வெளியே வர மதுவின் கவனமோ அந்த ஷாப்பிங் காம்பிளக்ஸ் அருகிலிருந்த எஃப். எம். ஸ்டுடியோவின் மீதே நிலைத்தது.
தன்னுடன் பேசியபடியே வந்த மதுவை காணாமல் திரும்பிப் பார்த்தான் ராகவ். சிறிதுநேரம் மதுவின் செயலை உன்னிப்பாக கவனித்தவனின் பார்வை அவளின் பார்வையைத் தொடர்ந்து அங்கிருந்த ஸ்டுடியோவை நோக்கியது.
“ஓஹோ மேடம் அந்த குரலுக்கு சொந்தக்காரனை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நிற்கிறாங்க..” அவளின் மனதைப் படித்துவிட்டு அவளின் அருகில் சென்றான்.
அவன் தன்னருகே வந்ததைக் கூட கவனிக்காமல் அவளின் பார்வை அந்த ஸ்டுடியோவின் மீதே இருக்க, “மது..” என்று அழைக்கவே அவனைத் திரும்பிப் பார்த்தாள்.
“இங்கே நின்னுட்டு என்ன பண்ற? பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை வெறிச்சு வெறிச்சு பார்க்கிற மாதிரி நீ என்ன ஸ்டுடியோவை அந்த பார்வை பார்க்கிற” என்று விளக்கம் வேறு கேட்டான்.
அதில் அவளின் பார்வையில் தீவிரம் கூடிவிட, ‘ராகவ் வா நம்ம போய் பாலாவைப் பார்த்துவிட்டு வரலாம். அவன் இந்த ரேடியோ ஸ்டேஷன்ல தான் வேலை பார்க்கிறான்..’ என்றவளில் குரலில் தான் எத்தனை சந்தோஷம். [பாலா என்னவோ இவளோட லவர் மாதிரி சொல்வதைப் பாரு]
“இன்னைக்கு சண்டே அவங்க எல்லாம் லீவாக இருப்பாங்க” என்றான் ராகவ் யோசனையுடனே.
‘நோவே.. இன்னைக்கு அவங்களுக்கு வேலை இருக்கு..’ என்று மதுவே ஒரு முடிவெடுத்தாள். ராகவ் அவளை சிந்தனையுடன் பார்க்க ‘ஒரே நிமிஷம்..’ இதழசைத்த மது மீண்டும் ஷாப்பிங் காம்ளக்ஸ் உள்ளே நுழைய, “மது எங்கே போற..” என்று கத்தினான்.
‘ஒரு நிமிஷம் இரு..’ என்று சைகை செய்துவிட்டு வேகமாக அந்த போக்கே கடைக்குள் நுழைந்தவளின் பார்வை அங்கிருந்த போக்கே சென்டரை சுற்றி வந்தது. பலவை நிறங்களை கொண்ட வண்ண வண்ண ரோஜா போக்கே அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
‘எனக்கு பிங்க் கலர் ரோஜா ரொம்ப பிடிக்கும்..’ என்ற பாலாவின் குரல் அவளின் காதுகளில் ஒலித்தது.
‘ராகவ் சொல்வது போல அவன் அங்கே இல்லன்னா அதற்குவேற தனியாகத் திட்டுவானே..’ என்ற சிந்தனையில் உழன்றது அவளின் மனது. பிறகு ஒரு முடிவிற்கு வந்த மதுமதி பிங்க் நிறம் இல்லாத போக்கேவை வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள்.
அவள் எதற்காக மீண்டும் கடைக்குள் சென்றால் என்று புரியாமலேயே தனியாக நின்றிருந்த ராகவ் அவள் போக்கேவுடன் வருவதைக் கவனித்ததும் “இன்னைக்கு அவனைப் பார்க்காமல் வீட்டிற்கு போக மாட்டா போலவே..” என்று அவன் புலம்பினான்.
அதற்கெல்லாம் அசரும் ஆளா நம்ம மது, ‘வா நம்ம போய் பாலாவைப் பார்த்துவிட்டு வரலாம்’ என்ற மதுவை அவன் முறைக்க அவளோ சிந்தனையுடன் தன்னுடைய சுடிதாரைப் பார்த்தாள்.
“இன்னும் என்ன யோசனை..” அவன் சிடுசிடுத்தான்.
‘எனக்கு இந்த டிரஸ் ஓகே வா..’ என்று ஆராய்ச்சியுடன் அவள் இதழசைக்க அவனின் முகம் மாறியது.
“அவன் என்ன உன்னை பொண்ணு பார்க்க போறானா? இந்த அளவுக்கு வருத்தப்படுகிற..” அவன் கோபத்தில் பேசிக்கொண்டிருக்க தன்னுடைய கவனம் களைந்து அவர்களின் அருகில் வந்தாள் பிரீத்தி.
“வீட்டுக்கு போகலாமா? எனக்கு மைண்டு சரியில்ல..” என்று கூறியவள் இருவரையும் கேள்வியாக நோக்கினாள்.
மதுவின் கைகளில் இருந்த போக்கேவை பார்த்துவிட்டு, “இது யாருக்கு?” என்று ராகவிடம் கேட்டாள்.
“ஆர். ஜே. பாலாவுக்கு..” என்று ராகமாக இழுத்தான் ராகவ்.
அவனின் பெயரைக் கேட்டதும் பிரீத்திக்கு சுறுசுறுவென்று வந்த கோபத்தில் மதுவை முறைத்த பிரீத்தி “மது நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள். இல்லாட்டி நீ ரொம்ப கஷ்டபடுவ. அவன் ஒரு ஆர்.ஜே. அவனை என்னவோ சினிமா பட ஹீரோ லெவலுக்கு கற்பனை பண்ணிட்டு சுத்தி இருக்கிற..” அவள் கோபத்தில் கத்தினாள்
அவர்களை கடந்து சென்ற சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டுச் செல்ல, “ஹே பிரீத்தி ஜில். எதுக்கு இப்படி கத்துற. நம்ம நிற்கும் இடத்தைக் கொஞ்சம் கவனி..” மெல்லிய குரலில் ராகவ் அவளைக் கண்டிக்கவே அவள் வாயை மூடிக்கொண்டாள்.
அவள் திட்டுவதை இந்த காதில் வாங்கி அந்த காதில் விட்ட மது ‘ராகவ் நீ வா. நம்ம போய் பாலாக்கு ஒரு ஹாய் சொல்லிட்டு இந்த போக்கேவை அவனிடம் கொடுத்துட்டு வரலாம்..’ என்று அவனை அழைத்தாள்.
பிரீத்தி கொலைவெறியுடன் மதுவைப் பார்க்க அவளோ பிடிவாதத்தின் உச்சத்தில் நின்றிருந்தாள். இருவரையும் மாறி மாறிப் பார்த்த ராகவ் தான் இறுதியாக ஒரு முடிவெடுத்தான்.
“இவள் சொன்னா கேட்கமாட்டா. நான் இவளை கூட்டிட்டு போறேன். நீ அந்த காபி ஷாப்பில் வெயிட் பண்ணு..” என்று பிரீத்தியின் கோபத்தைக் குறைக்க முயன்றான் ராகவ்.
அவனைப் பார்த்து பல்லைக் கடித்தவளோ,“அவங்களோட விருப்பம் என்னவோ அதை அவங்க செய்யட்டும். நான் நல்லது தான் சொல்ல முடியும் வழி துணையாக வர முடியாது. பட் ஒரு விஷயம் மது..” என்று நிறுத்திவிட்டு பிரீத்தியை ஏறிட்டாள் மது கேள்வியாகவே..
“இது உன்னோட லைப்க்கு நல்லது இல்ல. சோ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கோ. எல்லோரும் நல்லவங்க என்று சொல்ல முடியாது..” என்று கண்டித்துவிட்டு அவள் காபி ஷாப் நோக்கி நடந்தாள்.
அவளைப் பார்த்துக்கொண்டே நின்ற மது, ‘நான் என்னவோ அவனை காதலிக்கிறேன் என்று நினைக்கிறாளோ..’ என்று அவனிடம் அவள் சந்தேகம் கேட்கவே,
“நீ அவனை நேரில் பார்த்த லவ் பண்ணுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு..” என்று ராகவ் சிரிக்காமல் சொல்ல, ‘நீ சொல்றது உண்மைதானே..’ என்று இயல்பாக கூறவே “அடிப்பாவி” என்று அலறிய ராகவ் பார்த்து வாய்விட்டுச் சிரித்தாள் மது.
‘நான் அதை செஞ்சாலும் செய்வேன்..’ கண்ணடித்துவிட்டு குறும்புடன் கூறியவள் அந்த ஸ்டுடியோ நோக்கி நடந்தாள்.
“இந்த லூசை கட்டிக்க போகிற அந்த நல்லவன் எங்கே இருக்கானோ..” என்று புலம்பிக்கொண்டே அவனை பின்தொடர்ந்தான் ராகவ்.
அவள் ஸ்டுடியோ உள்ளே நுழைந்து ரிசப்ஷனிஸ்டிடம் செல்ல, “மது நீ இரு நான் கேட்கிறேன்..” என்று கூறிய ராகவ் அங்கிருந்த பெண்ணிடம், “ஆர். ஜே. பாலா இருக்கிறாரா?” என்று விவரம் கேட்க மதுமதியின் பார்வை அந்த ஆபீஸை வலம் வந்தது
“அவரை எதற்கு ஸார் கேட்கிறீங்க..” என்று புரியாமல் அந்தப்பெண் அவனிடம் கேட்டாள்.
“இவங்க அவரோட தீவிர ரசிகை. அவரைப் பார்க்க வெளியூரில் இருந்து வந்திருக்காங்க..” என்று வாய் கூசாமல் அவன் போய் சொல்ல, ‘அடப்பாவி’ என்று அலறுவது இப்பொழுது இவளின் முறையானது..
அவனின் பின்னோடு போக்கேயுடன் நின்ற மதுவைப் பார்த்தும், “ஸாரி சார் அவர் நேற்றுதான் முக்கியமான விஷயம் என்று லீவ் எடுத்திருக்கார். இனி எப்பொழுது ரீஜாயின் பண்ணுவார் என்று தெரியல..” என்று கூறியதும் மதுவின் முகம் வாடிப்போனது.
அவளின் முயற்சி தோல்வி அடைந்தது கூட அவளுக்கு பெரிதாக தெரியவில்லை. ஆனால் அவனின் குரலை இனிமேல் கேட்க முடியாது என்பதே அவளுக்கு பெரிய வருத்தமாக இருந்தது. அதன்பிறகு அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் ராகவ்.
அதன்பிறகு இரண்டு நாளும் அவள் இயல்பாக வேலைக்கு சென்று வீடு திரும்பிட அவளிடம் ஏற்பட்ட மாற்றத்தை மட்டும் கவனிக்க தவறினார் நிர்மலா.
வழக்கம் போலவே மாலை மயங்கும் நேரத்தில் மாடிக்கு சென்று அதே சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தவளின் முகமே வாடிப்போயிருந்தது. எதையோ இழந்தது போன்ற உணர்வுடன் இருள் சூழ்ந்த வானத்தை இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மது.
அவளின் அலைபேசி, ‘கீன்’ என்று மெசேஜ் வரவே அந்த சத்தம்கேட்டு அவளின் கவனம் கலந்தது.
அவள் அதன் திரையை நோக்கிட, ‘பேபிமா என்ன பண்றாங்க..’ என்ற குறுஞ்செய்தி கண்டதும் அவளின் முகம் மலர்ந்தது..
‘பேபி சோகமாக இருக்கு..’ என்று அவள் பதிலனுப்பிட, ‘ஏன்..’ என்று நொடியில் கேள்வியைத் தாங்கி வந்தது குறுஞ்செய்தி.
‘ஆர். ஜே. பாலா ப்ரோகிராம் இனிமேல் வாராதாம்..’ என்றவள் காரணத்தை உரைத்திட மறுப்பக்கத்திலிருந்து ஸ்மைல் இமேஜ் வரவே அவளின் கோபம் அதிகரித்தது.
‘என்னண்ணா நீயும் என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிற..’ அவள் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினாள்..
‘பேபி.. பேபி.. பேபி..’ என்று அனுப்பிய விஷ்ணு,
“கொஞ்சநாள் இப்படித்தான் இருக்கும். போக போக எல்லாமே பழகிடும். இதுக்கு எல்லாம் ஃபீல் பண்ணக்கூடாது..’ அவளை சமாதானம் செய்து கொண்டிருக்க பேச்சு வேறுப்பக்கம் திசை திரும்பியது..
‘அண்ணா நீ எப்பொழுது ஊருக்கு வர போற..’ என்ற தங்கையின் கேள்விக்கு, “சீக்கிரமே வருகிறேன் பேபி..” என்றான்.
அவனின் மனத்திரையில் அவளின் பிம்பம் வந்து செல்ல, ‘அவளை மீட்டெடுக்க சீக்கிரமே வரணும்..’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான் விஷ்ணு.
“ஏய் மது என்ன கனவு கண்டுட்டு நிற்கிற வா..” என்ற கிருஷ்ணாவின் குரல்கேட்டு அவளின் மனம் நடப்பிற்கு திரும்பியது.
‘ஆஹான்..’ என்றவளின் கவனம் களைந்து நிமிர்ந்தவளின் எதிரே விழிகள் சிவக்க நின்றிருந்தவனைப் பார்த்ததும், ‘ஒண்ணுமில்ல சும்மா ஒரு சின்ன சிந்தனை..’ மதுவின் முகம் தெளிவாக இருப்பதைக் கண்டதும் அவனின் மனம் அமைதியானது.
“நிஜமா எந்த பிரச்சனையும் இல்லல்ல..” என்று அக்கறையுடன் அவள் கேட்க மறுப்பாக தலையசைத்தவளின் கைகளைப்பிடித்த கிருஷ்ணா, “சரி வா நம்ம போய் ட்ரஸ் எடுப்போம்..” என்று அவளை அழைத்துக்கொண்டு கடைக்குள் நுழைந்தான்.
அவள் லேடிஸ் செக்சன் சென்று துணிகளை எடுக்க கிருஷ்ணாவும் உடைகளை தேர்வு செய்தவனின் கண்ணில் விழுந்தது அந்த பேபி பிங்க் கலர் சேலை. பேபி பிங்க் கலர் சேலையில் கோல்டன் நிறத்தில் எம்ராடிங் போடப்பட்டு வெள்ளை கற்கள் அழகுற பதிக்கபட்டிருந்தது.
அந்த சேலை மதுவிற்கு மிகவும் பொருத்தமாக இருக்குமென்று அதை தேர்வு செய்து தனியாக பில்போட சொன்னான். அவள் தனக்கு பிடித்த இரண்டு நிறத்தில் சுடிதார் இரண்டை தேர்வு செய்து எடுத்துகொண்டு மாமியாருக்கும் சங்கீதாவிற்கு இரண்டு பட்டு சேலைகள் எடுத்தாள்.
கடைசியாக தாரிகாவிற்கு பொருத்தமாக ஒரு வைல்ட் கலர் சேலையை தேர்வு செய்து எடுத்துக்கொண்டு பில் போட சென்றாள். இருவரும் துணியெடுத்துவிட்டு வீடு வந்து சேரும் பொழுது மணி ஒன்பதைக் கடந்திருந்தது.
இருவரும் இணைந்து ஊருக்குச் செல்வது இதுதான் முதல் முறை என்பதால் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் சேர்த்து துணியெடுத்து வைத்திருந்தனர். வீட்டிற்கு வருகின்ற வழியில் இருவரும் சாப்பிட்டுவிட்டு வந்ததால் இருவரும் சிறிதுநேரம் ஜானுவிடம் விளையாடிவிட்டு தூங்கச் சென்றனர்.
அவன் படுக்கையில் படுத்து விழிமூடிவே போனமுறை அவன் எப்படி ஊருக்கு போக நேர்ந்தது என்பதை அவனின் மனம் மெல்ல அசைபோட்டது. இரவு நிலாமுற்றத்தில் பழைய பாடலைக் கேட்டுகொண்டே கண்மூடிய கிருஷ்ணாவின் கண்களுக்குள் மீண்டும் கடந்தகாலம் படமாக விரிந்தது.
அத்தியாயம் – 13
காலை சூரியனுக்கு ஈடாக அவனின் முகம் செந்தணலாக காட்சியளித்தது. அதுவரையிருந்த மனநிலை மாறிவிட நேற்றைய நினைவுகளில் மூழ்கியது அவனின் மனம்.
‘உனக்கு ஒரு கொரியர் வந்தது..’ என்ற ராகவ் அவனிடம் கொரியரைக் கொடுக்க, அதிலிருந்த பெண்ணின் புகைப்படம் பார்தததும் அவனின் முகம் மாறியது..
‘இந்த மாதிரி விஷயங்கள் எனக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சும் ஏன் இப்படி பண்றாங்க..’ மனம் கொதிக்க அவனின் முகத்தில் உணர்வுகள் துடைக்கப்பட்டிருந்தது.
அவனின் அலைபேசி சிணுங்கிட அவனின் சிந்தனை கலைந்திட, “ஹலோ..” என்றவன் எரிச்சலுடன்..
“கிருஷ்ணா ..” மறுப்பக்கம் பாசத்துடன் ஒலித்து தாயின் குரலில் அவனின் கோபம் கொஞ்சம் குறைந்தது.
“சொல்லுங்க அம்மா..” என்று வேண்டாவெறுப்பாகவே பேச்சைத் தொடங்கினான்..
“தம்பி ஊருக்கு கிளம்பிவிட்டாயா?” என்ற கேள்விக்கு அவன் மெளனமாக இருக்கவே அவனின் கோபத்தை உணர்ந்தார் தாமரை.
“என்னப்பா நாங்க பொண்ணு பார்த்தது உனக்கு பிடிக்கலயா?” தயக்கத்துடன் கேட்க, ‘எல்லாம் செய்துவிட்டு தெரியாத மாதிரி கேள்வி வேற..’ என்று உள்ளுக்குள் புகைந்தவன்,
“நான் ஊருக்கு வந்து பேசுகிறேன்..” அவரின் பதிலுக்கு காத்திருக்காமல் போனை வைத்துவிட்டான்.
நேற்றைய நினைவுகளில் உழன்ற மனம் இப்பொழுது நிஜத்திற்கு திரும்பியது. ‘இன்னைக்கு நைட் ஊருக்கு கிளம்பணும்..’ என்றவன் வேகமாக மாடியேற தனக்கு பிடித்த ஒரு பாடலை ஹம்மிங் செய்துகொண்டே வேகமாக படியிறங்கினாள் மதுமதி.
அவளின் எதிரே வந்தவனைக் கவனிக்காமல் அவனின் மீது பலமாக மோதிவிட்டு பட்டென்று நிமிர்ந்து பார்த்தவளின் உள்ளம் படபடவென்று அடித்துக்கொண்டது. அவனின் விழிகளில் கோபத்தின் கனலைக் கண்டவள் அடுத்த வார்த்தை பேச மறந்து சிலையாக நின்றுவிட்டாள்.
அவள் வந்து மோதிய வேகத்தில் அவனின் கையிலிருந்த செல்போன் கை தவறி கீழே விழுந்துவிட, “ஏய் அறிவிருக்கா உனக்கு..” என்ற கோபத்துடன் கர்ஜிக்க அவளுக்கு பயத்தில் உள்ளம் படபடவென்று அடித்துக்கொள்ள அவளின் முகம் வேர்வை ஊற்றேடுத்தது
‘எனக்கு அறிவு இல்லன்னு நினைக்கிறேன். அறிவு ஒழுங்காக வேலை செய்திருந்தால் உன்மேல் வந்து மோதிருப்பேனா? ஒதிங்கி போயிருக்க மாட்டேன்..’ என்று மனதிற்குள் நினைத்தாள்..
அவன் பல்லைக் கடித்துக்கொண்டே அவளைப் பார்க்க, ‘ஐயோ இன்னைக்கு நல்லா திட்ட போறான். ஏற்கனவே என்னைக் கண்டால் பிடிக்காது..’ என்று தனியாக புலம்பியவள் ஊரில் இருக்கும் கடவுளை எல்லாம் துணைக்கு அழைத்தாள்.
அவனின் கோபம் அவள் அறியாத ஒரு விசயமே அல்லவா. அதனால் அவள் பயத்துடன், ‘நான் வேணுன்னு வந்து இடிக்கல..’ என்று இதழசைக்கவே, “வாய்பேச முடியாது என்பதற்காக உன்னைப் பாவம் பார்த்து விடவேண்டுமா?” என்றவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.
‘நான் என்ன வேண்டும் என்ற செய்தேன்..’ என்று தனக்குள் புலம்பியபடி உதட்டைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தாள் மதுமதி.
அதுவரை அவன் தாய்மீது வைத்திருந்த கோபம் அவளின் மீது திரும்பியதை அவன் உணரவே இல்லை. கீழே விழுந்த செல்லை எடுத்த கிருஷ்ணா அவளின் பார்வையை நேருக்கு நேர் சந்தித்தான்.
அவள் திகைத்து விழிக்கவே, “இனிமேல் என்னோட கண் முன்னாடி வந்த உன்னை என்ன செய்வேன்னு தெரியாது..” என்று மிரட்டிவிட்டு வேகமாக படியேறிச் சென்றுவிட்டான்.
அதுவரையிருந்த புத்துணர்ச்சி முழுக்க அவனின் பேச்சில் வடிந்துவிட, ‘எல்லாம் என்னோட நேரம்..’ என்று நொந்துகொண்டு அக்டிவா ஸ்கூட்டியில் ஆபிஸிற்கு கிளம்பினாள்.
அவளைத் திட்டிவிட்டு தன்னுடைய அறைக்கு நுழைய, “குட் மார்னிங் கிருஷ்ணா..” என்று அவனை எதிர்கொண்டான் ராகவ்.
“குட் மார்னிங்..” என்றவனின் குரலில் எரிச்சலாகவே.
“யார் உன்னோட கோபத்தைக் கிளப்பிவிட்டது..?” என்ற ராகவின் கேள்விக்கு அவனை முறைத்தான் கிருஷ்ணாவின் தோளில் வந்து அமர்ந்த ஜானு “மது.. மது..” என்றது.
“என்னோட செல்லம்..” என்றவன் கிளியை கையில் வைத்து வருடிகொடுக்க “அவன் கோபத்துடன் வந்தாலே உனக்கு தெரிந்துவிடுமே..” என்று கிளியின் முகத்தை பார்த்து குறும்புடன் சிரித்தான் ராகவ்.
அது முகத்தைத் திருப்பிட, “ஐயோ ரொம்பத்தான்..” என்றான் ராகவ் வேலைக்கு கிளம்பிய படியே!
“ஆமா மது என்ன பண்ணினா..” என்று ராகவ் கேட்க, “ம்ம் கண்ணுமண்ணு தெரியாமல் என்மேல் மேலே வந்து மோதற..” என்ற கிருஷ்ணாவின் கோபம் அடங்க மறுத்தது..
“இதுக்குதான் உனக்கு கோபம் வந்ததா?” சாதாரணமாகக் கேட்ட ராகவை அவன் முறைத்த முறைப்பில் அடங்கிவிட்டான். அதற்கு மேல் அவனிடம் பேசினால் அது வாக்குவாதத்தில் தான் போய் முடியுமென்று அவனுக்கும் தெரியும்.
“ஐயோ இன்னைக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங்..” என்று வேகமாக தயாரான ராகவ், “எருமை சொல்லாமல் முன்னாடியே ஆபீஸ் கிளம்பி போயிட்டா..” என்று மதுவை திட்டிதீர்த்தான்.
கிருஷ்ணா சிந்தனையுடன் அமைதியாக இருக்கவே “சரிடா நான் ஆபீஸ் கிளம்பறேன்..” ராகவ் அந்த அறையைவிட்டு வேகமாக வெளியேறினான்.
அதே நேரத்தில் ஆபீஸிற்கு தயாராகி கண்ணாடி முன்னாடி நின்றவனின் மனத்திரையில் அவளின் உருவம் நிழலாக தோன்றி அவனின் மனதை வதைத்தாள்.
‘அம்மா மீது இருந்த கோபத்தை இவளின் மேல் கட்டிவிட்டேனே..’ என்றவன் அவளின் நினைவுகளை ஒதுக்கிவிட்டு ஆபீஸில் அடுத்து கவனிக்க வேண்டிய வேலைகளை மனதிற்குள் பட்டியலிட்ட கிருஷ்ணா வேலைக்கு கிளம்பிச் சென்றான்
தன்னுடைய மகளை வேலைக்கு அனுப்பி கையோடு அந்த அறைக்குள் நுழைந்த நிர்மலா கணவனின் அறைக்குள் நுழைந்தார்.
படுக்கையில் விழிமூடி படுத்திருந்தவரின் அருகே அமர்ந்த நிர்மலா, “ராம் இன்னும் எத்தனை நாளைக்கு இங்கேயே படுத்து இருக்க போறீங்க..” என்றவர் அவரின் பல்ஸ் செக் பண்ணினார்.
அவரின் அவரின் குரல்கேட்டு திரும்பி மனைவியின் முகம் பார்த்ததும், “மது ஆபிஸிற்கு போயிட்டாளா..” என்றவர் ஆர்வத்துடன்.
“ஏதோ மீட்டிங் இருக்காம் அதனால் மேடம் இன்னைக்கு சீக்கிரமே ஆபீஸ் போயிட்டாங்க..” என்று புன்னகைத்தவரின் முகம் உடனே வாடியது.
“ஏன் ஒரு மாதிரி இருக்கிற..” என்று விசாரித்தவரின் பார்வை மனைவியின் மீதே நிலைகுத்தி நிற்கவே சிறிதுநேரம் அங்கே மௌனம் நிலவியது.
பிறகு, “மதுவிற்கு வயசு ஆகுதுங்க. அவளோட திருமணம் பற்றி பேச்சு எடுக்கலாம் என்று நினைச்சா மனசு ஏனோ ஒரு நிலையில் இல்ல” என்ற நிர்மலாவின் குரலில் வருத்தமே மிஞ்சியது.
ராம்மோகனுக்கும் அந்த கவலை இருக்கவே செய்தது. ஆனால் தன்னுடைய நிலையை எண்ணி தன்னை தேற்றிக்கொண்டுவர் மெளனமாக மனைவியை நோக்கினார்.
“இந்த காலத்தில் நல்லா இருக்கும் பெண்களை கட்டிக்கொள்ளவே யாரும் தயாராக இல்ல. இதில் நம்ம பொண்ணு ஊமை. அவளை கட்டிக்க யார் வருவாங்களோ..” என்று ஒரு தாயாக புலம்பியது நிர்மலாவின் மனது. அவரின் கேள்வியிலிருந்த நியாயம் அவரை சுட்டது..
“தேவை இல்லாத விஷயத்தை யோசித்து மனசை போட்டு குழப்பிட்டு இருக்கேன்..” என்றவர் எழுந்து கணவனுக்கு சாப்பாடு போட்டு கொடுத்தவர் தன்னுடைய வேலையைக் கவனிக்க சென்றார்.
தன்னுடைய மனைவி தைரியமாக செல்வதைக் கவனித்த ராம்மோகன், ‘என்னோட மகள் எப்பொழுது பேசுவாள்..’ என்ற சிந்தனையில் உழன்றது.
மகளின் நினைவில் காரை ஓட்டிய ராம்மோகன் ஒரு விபத்தில் சிக்கிப்படுத்த படுக்கையாகி விட்டார். அவரின் உடல்நிலையில் மாற்றங்கள் வந்த பொழுதிலும் கூட அவரால் எழுந்து நடமாட முடியவில்லை.
அவரின் நம்பிக்கை இன்றி அவர் எழுந்து நடக்க மாட்டார் என்று சொல்லிவிட்டனர் டாக்டர்ஸ். அதன்பிறகு நிர்மலாதான் இன்றும் அவரைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டே மகளையும் கவனித்து கொள்கிறார்.
விஷ்ணு வெளிநாட்டில் வேலை செய்து பணம் அனுப்புகின்றனர். ராம் சம்பாரித்த சொத்துகளுக்கு அனைத்திற்கு வட்டியாக பேங்கில் குவிந்த பணம் அவரின் மருத்துவ செலவிற்கு நீராக கரைந்து கொண்டிருக்கிறது.
அவர்கள் இயல்பாக நடந்து கொண்டாலும் கூட மனதின் வலியை மறக்க மட்டும் அவர்களால் முடியாமல் போனது. மது வாய் திறந்து பேசினால் மட்டுமே அவர்களின் காயங்கள் மாறும்!
ஆபீஸ் உள்ளே நுழைந்துவிட்டால் தன்னுடைய மற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு வேலையில் கவனம் செலுத்துவான் கிருஷ்ணா. ஆனால் இன்று எல்லாமே தலைகீழாக நடந்தது.
அவனால் எப்பொழுதும் போல வேலையில் கவனம் செலுத்த முடியாமல் மதியம் ஆபீஸில் லீவ் சொல்லிவிட்டு வீட்டிற்கு திரும்பியவன் அம்மா அனுப்பிய போட்டோவை கையிலேடுத்துப் பார்த்தான்.
அந்த போட்டோவில் இருந்த பெண்ணின் முகம் அவனுக்கு ஆசையைக் கொடுப்பதற்கு பதிலாக கோபத்தையே பரிசாக கொடுத்தது. அவளைப் பார்க்க பார்க்க அவனுக்கு எரிச்சல்தான் வந்தது.
இத்தனைநாள் மறுப்பு சொன்னது போல இந்த வரனுக்கு மறுப்பு சொல்ல முடியாது என்ற உண்மையை அவனின் உள்ளம் உணராமல் இல்லை. ஆனால் மனதிற்கு பிடிக்காமல் செய்யும் திருமணத்தால் யாருக்கு என்ன பயன் என்று அவனின் மனம் அவனையே கேள்வி கேட்டது.
அதே நேரத்தில் தனக்கு அடுத்ததாக இருக்கும் தங்கையின் வாழ்க்கையும் சேர்ந்து அவனை யோசிக்க வைத்தது. இதெல்லாம் கடந்து அவனின் மனதில் ஏதோவொரு தேடலை உணர்ந்தவனிடமிருந்து பெருமூச்சு கிளம்பியது.
சிறிதுநேரம் சிந்தனையில் அமர்ந்திருந்த கிருஷ்ணா மணியைப் பார்த்துவிட்டு, ‘நேரம் ஆகிறது..’ என்றவன் வீட்டைப்பூட்டும் நேரத்தில் கோவிலுக்கு செல்ல நினைத்து வீட்டைவிட்டு வெளியே வந்தார் நிர்மலா.
அவன் பிளாட்டைப் பூட்டிவிட்டு திரும்பவே, “என்ன கிருஷ்ணா இன்னைக்கு வேலைக்கு போகவில்லையா?” என்ற நிர்மலாவின் குரல் அவனின் கவனத்தை ஈர்த்தது. மதுமதியின் எதிர்பிளாட்டில் அவனும், ராகவும் தங்கியிருக்கின்றனர்.
“எனக்கு இன்னைக்கு வேலை சீக்கிரமே முடிந்துவிட்டது ஆண்ட்டி..” என்று புன்னகைத்தவன் அவரோடு இணைந்து நடந்தான்.
“என்ன ஆண்ட்டி கோவிலுக்கு கிளம்பீட்டிங்க போல..” அவன் அவரிடம் பேச்சு கொடுக்கவே, “ம்ம் மது ஆபீஸில் இருந்து வருவதற்குள் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என்று கிளம்பிட்டேன்..” என்றார்.
அவளின் முகம் மனதில் நிழலாடவே,“ஓஹோ சரிங்க ஆண்ட்டி..” அவனின் புருவங்கள் மீட்டும் சிந்தனையில் சுருக்கியது.
அவன் அமைதியான முகம் அவரின் கவனத்தை ஈர்க்கவே,“என்ன ஒரு மாதிரி இருக்கிற..” என்று கேட்டார்.
“ஒண்ணுமில்ல ஆண்ட்டி..” என்றான் அவன் சாதாரணமாகவே.
அவனின் முகத்தில் தெளிவு இல்லாமல் இருப்பதைக் கவனித்துவிட்டு, “என்னப்பா வீட்டில் பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்களா?” அவனின் முகவாட்டத்திற்கு தானே ஒரு காரணத்தை தானே யூகித்தார்.
அவனின் முகம் கண்ணாடி போல அவனின் மனதை வெளிப்படியாக எடுத்துக் காட்டியது. “ம்ம் அம்மா ஊரிலிருந்து பொண்ணு போட்டோ அனுப்பியிருக்காங்க..” என்றான் அவரின் கேள்விக்கு பதிலாகவே..
“பொண்ணு பிடிச்சிருக்கா..” அவரின் கேள்வியில் நிமிர்ந்த கிருஷ்ணா, “ம்ம் பிடிக்கும் ஆண்ட்டி..” என்றதும், “அப்புறம் என்ன யோசனை..” என்ற நிர்மலா அவனின் முகம் பார்த்தார்.
“அம்மா ஊருக்கு வர சொன்னாங்க. அதன் யோசனை..” என்றான் சிந்தனையுடன்.
“பொண்ணு சொந்தம் தானே..” அவர் இயல்புடன் கேட்டு அவனின் சிந்தனையைக் கலைத்தார்.
“சொந்தகாரப் பொண்ணுதான். அடுத்தவாரம் ஊருக்குப் போனால் தான் என்ன நிலவரம் என்று தெரியும்..” கிருஷ்ணா தன்னுடைய மனதை மறைக்காமல் கூறினான்..
இருவரும் பேசியபடியே பார்கிங் வந்துவிட, “எது பற்றியும் யோசிக்காதே கிருஷ்ணா. எல்லாம் நல்லபடியாக அமையும். கோவிலுக்கு போகிறேன் உனக்கும் சேர்த்து வேண்டிட்டு வருகிறேன்..” என்றார் நிர்மலா புன்னகையுடன்.
அவரின் பேச்சு அவனின் மனதிற்கு இதமாக இருந்தது. அதுவரை மனதிலிருந்த சுமை இறங்கியது மெல்ல புன்னகைத்தவன், “என்னோட திருமணம் சீக்கிரமே நடக்கணும் என்று வேண்டிட்டு வாங்க ஆண்ட்டி..” என்றான்.
“சரிப்பா..” என்றவர் அவரிடம் விடைபெற்று கோவிலுக்குச் செல்லவே கிருஷ்ணா வேற ஒரு முக்கியமான வேலையாக வெளியே கிளம்பிச் சென்றான்.
அந்த குடியிருப்பு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்ற நிர்மலா தன்னுடைய மனதின் பாரத்தை எல்லாம் இறைவனின் திருவடியில் இறக்கி வைத்துவிட்டு கலங்கிய கண்களுடன் வீடு வந்து சேர்த்தார்.
தன்னுடைய வேலையை முடித்துவிட்டு இரவு எட்டுமணிக்கு மேல்தான் வந்த ராகவ், எந்த உணவும் செய்ய அவனின் உடல் ஒத்துழைக்காது என்று உணர்ந்தே வரும்பொழுதே ஹோட்டலில் சாப்பாடு வாங்கிவிட்டு வந்தான்.
“ராகவ்..” என்றழைக்க அவன் நின்று திரும்பிப்பார்க்க அவனின் பின்னோடு மாடிப்படியேறி அவனின் அருகில் வந்தவன் “இப்பொழுதுதான் வேலை முடிந்ததா?” என்று கிருஷ்ணாவின் கேள்விக்கு ஒப்புதாக தலையசைத்தான் ராகவ்
அப்பொழுதுதான் கிருஷ்ணாவின் முகத்தில் படர்ந்திருந்த தீவிரத்தை கவனித்தவனின் இடதுபுருவம் கேள்வியாக உயர்ந்தது.
“சரிடா நீ வீட்டை லாக் படு. நான் ஊருக்கு கிளம்பறேன்..” என்ற கிருஷ்ணாவை ஆராய்ச்சியுடன் நோக்கியது ராகவ்வின் விழிகள்.
“ஒரு சின்ன வேலைடா. நான் ஊருக்கு போயிட்டு வர்றேன்..” என்ற கிருஷ்ணா அவன் ஊருக்கு எதற்காக செல்கிறான் என்ற விஷயத்தை மட்டும் சொல்லவில்லை.
“என்ன திடீரென்று கிளம்பற. ஊரில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லையே..” என்றவன் அக்கறையுடன் கேட்க கிருஷ்ணாவின் உதட்டில் புன்னகை அரும்பியது.
“அதெல்லாம் இல்லடா. அம்மா என்னை நேரில் பார்க்கணுன்னு சொன்னாங்க. அதன் ஊருக்குப் போறேன்..” என்று அவனை சமாளித்தான்.
அவன் ஏதோவொரு உண்மை அவனிடம் மறைப்பது போலவே அவனின் மனதிற்கு தவறாக படவே, “அப்போ உனக்கு விஷயம் தெரியும் சொல்ல விருப்பம் இல்ல..” என்று அவனை ஆழ்ந்து நோக்கினான் ராகவ்
அதற்குமேல் அவனிடம் அவனிடம் இதுபற்றி அவன் எதுவும் கேட்கவில்லை. வீட்டிற்குள் நுழைந்தவன் அவன் ஊருக்கு கிளம்புவதற்கு உதவி செய்தான்.
“நைட் டிராவல் கவனமாக போ. ஊருக்குப் போனதும் போன் பண்ணு..” என்று சிடுசிடுத்தான் ராகவ்வின் பிடிவாதகுணம் அதிலிருந்து வெளிபட்டது.
“என்னடா முகத்தை இப்படி வெச்சிருக்க” என்று கிருஷ்ணா அவனின் கோபத்திற்கு தூபம் போட்டது.
“என்னோட கேள்விக்கு உன்னிடம் பதில் இல்ல..” அவன் ஏதோ சொல்லவர கைநீட்டி தடுத்தவன், “நான் கேட்கல.. நீ முதலில் சாப்பிட்டு கிளம்பு..” என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டான்.
அதன்பிறகு அவனை வழியனுப்ப பஸ் நிலையம் வரை வந்தான். இரவுநேரம் காற்று இதமாக வீசி அவனைத் தழுவிச்சென்றது. பேருந்தின் ஜன்னலோரம் அமர்ந்த கிருஷ்ணாவின் அருகில் வந்து அமர்ந்தான் ராகவ்.
அடுத்து தான் எடுக்க வேண்டிய முடிவு பற்றிய தீவிரமான யோசனையில் இருந்தவன் அப்பொழுதுதான் ராகவைக் கவனித்தான்.
அவனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லாமல் இருப்பதை கவனித்த கிருஷ்ணா, “ஏண்டா ஒரு மாதிரி இருக்கிற..” என்று பொறுமை இல்லாமல் கேட்டான்.
“ஏன் என்னிடம் சொல்லாமல் மறைக்கிற. காலையில் நான் வேலைக்கு கிளம்பும் பொழுதே உன்னோட முகம் சரியில்ல. சரி அப்போ கேட்டால் பதில் வராது என்று அமைதியாக இருந்தால் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ற..” என்று தன்னுடைய கோபத்தை அவனிடம் காட்டினான்.
“நான் ஊருக்கு போன பிறகுதான் எனக்கே அனைத்து விஷயமும் தெரியும். அதனால் நீ என்னை நினைத்து குழப்பிக் கொள்ளாதே..” என்று தெளிவாக கூறிவே பஸ் மதுரை நோக்கி கிளம்பியது.
யாரோ தோளைத்தட்டிட விழிதிறந்து பார்த்தான் கிருஷ்ணா.