UTN 13

UTN 13

உயிர் தேடல் நீயடி 13

அன்றைய மீதி இரவை துளி உறக்கமும் இன்றி கழித்திருந்தான் விபீஸ்வர். என்ன முயன்றும் அவனுக்கு உறக்கம் மட்டும் வருவதாக இல்லை. காவ்யதர்ஷினியின் வலிமிகுந்த வேதனை முகமே நினைவில் வந்து அவனை சித்ரவதை செய்து கொண்டிருந்தது.

ஏனென்று புரியாமல் மூச்சு முட்டும் ஒருவித தவிப்பு. எதற்கென விளங்காமல் தனக்குள் பலவீனமானதொரு உணர்வு. இதற்கு பெயர் குற்றவுணர்வு என்பது பாவம் அவனுக்கு புரியவில்லை. இந்த அரை போதை நிலையில் அவன் இத்தனை உணர்ந்திருப்பதே பெரிது தான்.

விடிந்தபிறகு தன் வீட்டிற்கு வந்தவன் உடற்சோர்விலும் மன சோர்விலும் தன் கட்டிலில் படுத்து உறங்கி போயிருந்தான்.

விழியோரம் ஈரம் கசிய, தான் கடந்து வந்த சம்பவத்தை நினைத்து கலங்கி, வெதும்பி, மருந்தின் வீரியத்தில் காவ்யதர்ஷினியும் உறங்கி போயிருந்தாள்.

காலையில் சிவா துணையோடு மருத்துவமனை சென்று காயத்திற்கு கட்டு மாற்றி கொண்டு வந்தவள், கை வலிப்பதாக கூறி அறையில் முடங்கி கொண்டாள்.

உண்மையில் கை காயத்தின் வலியை விட, மனம் தான் அதிகம் வலித்தது அவளுக்கு. இத்தனை மோசமானவனாக விபீஸ்வரை அவள் கற்பனை கூட செய்தது இல்லை. அதுவும் தன்னிடமே… என்ற தன்னிரக்கம் அவள் இதயத்தை கிழிப்பதாய்.

‘மனித போர்வையில் மிருகங்கள் உலவும் நாகரீக காடு இந்த உலகம்’ என்ற கூற்று அவளின் நேரடி அனுபவத்தில் நிருபனம் ஆனதை மிக கசப்பாக உணர்ந்தாள். இனி என்ன செய்வது என்று சிந்திக்கும் போதே, அவள் மனம் துவண்டு போனது.

அவளின் தனமானமும் சுயகௌரவமும் இந்த வேலை வேண்டாம் தூக்கி எறிந்து விடு என்றது. ஆனால், அவள் மாதமாதம் எதிர்கொள்ள வேண்டிய குடும்ப தேவைகளின் பட்டியல் அவளை திகைக்க வைத்தது.

இன்றளவும் அவளின் சம்பளத்தை நம்பியே அவளின் குடும்பம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது தான் சிவாவின் கல்லூரி படிப்பு முடிந்து சில மாதங்களாக தன் வேலைக்கான தேடலை தொடர்கிறான். இன்னும் சரியான வேலை எதுவும் கிடைத்தப் பாடில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக தன் வீட்டின் மேலுள்ள மாதாந்திர கடன் தொகையை செலுத்துவது இப்போதே இவளுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இந்த வேலையையும் விட்டுவிட்டால்…! நினைக்கவே அவளுள் பயம் பரவியது.

காவ்யா வேலையில் சேர்ந்து சில மாதங்களில் சொந்தவீடு வாங்க வேண்டும் என்ற அவளின் முடிவு அகலக்கால் வைப்பது போன்றது என்பது அவளுக்கும் தெரிந்தே தான் இருந்தது. எனினும் ‘தன் அப்பாவின் ஆசைக்காக’ என்ற எண்ணமே அவளை உந்தியது.

‘காவ்யா குட்டி, அப்பாவுக்கு ஒரேயொரு பெரிய ஆச தான் டா, நமக்கே நமக்குன்னு சொந்தமா ஒரு வூடு வாங்கி, அதுல ஜம்முனு உக்காந்துக்கணும்… இன்னும் எண்ணி அஞ்சு வருஷத்தில நான் சொந்தமா வூட்டை வாங்கி காட்டேறானா இல்லயா பாருடா!’ இப்படி அவள் அப்பா அடிக்கடி மார்தட்டி சொல்வதைக் கேட்டு இவளும் சந்தோஷமாகவே தலையாட்டுவாள்.

ஆனால் கடைசிவரை தன் தந்தையின் ஆசை நிறைவேறாமல் போனதில் காவ்யாவிற்கு பெரும் வருத்தம் இருந்தது. சொந்த வீடு என்ற தன் அப்பாவின் ஆசைக்காகவே அடித்து பிடித்து தங்களுக்கான கூட்டினை சொந்தமாக்கிக் கொண்டாள். ஆனால் அதன்பின் இவளின் பாதிக்கு மேற்பட்ட சம்பளத்தொகை மாதாந்திர கடன் தொகைக்கென்றே கழிந்து வருகிறது. இந்தநிலையில் வேலை விடுவதைப் பற்றி அவளால் எப்படி யோசிக்க முடியும்?

அதோடு இத்தனை கீழ்த்தரமாக தன்னிடம் நடந்து கொண்ட விபியின் கீழ் பணிபுரியவும் அவளின் மனம் ஒப்பவில்லை! நேற்று எப்படியோ அவனிடமிருந்து தப்பி விட்டாள் தான். ஆனால் மறுபடியும் அவன் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டான் என்பதில் அவளுக்கு எந்த நிச்சயமும் இருக்கவில்லை.

இவ்வாறு பணத் தேவைக்கும், மன நிம்மதிக்கும் இடையே அல்லாடுவதே பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தின் நிலையாக இருக்கிறது.

இருவித மனநிலையில் அவள் மனம் போராடிக் கொண்டிருக்க, இறுதியில் ஒரு முடிவுக்கு தான் அவளால் வர முடிந்தது.

# # #

மறுநாள் இருவருமே நிறுவனத்திற்கு வராமல் இருக்க ரிக்கி கோணல் காரணத்தை யூகித்து கொண்டு ஏளன சிரிப்போடு வலம் வந்து கொண்டிருந்தான்.

காவ்யா இங்கு வேலைக்கு வரும் முன்னர், விபீஸ்வரின் வலது கை தான் தான் என்ற அளவிற்கு ஒரு போலி செல்வாக்கை ரிக்கி அங்கே உருவாக்கி வைத்திருந்தான். நிறுவனத்தின் சக பணியாளர்களும் முதலாளிக்கு நெருக்கமானவன் என்று ரிக்கியிடம் உதவி கேட்டு நிற்பது வாடிக்கையாகி இருந்தது. விபீஸ்வரின் பலவீனத்திற்கு தூபம் போட்டு எப்படியேனும் உயர் பதவி பெற வேண்டும் என்பது அவன் திட்டமாக இருந்தது.

ஏனோ ரிக்கி மீது விபீஸ்வருக்கு அத்தனை நம்பிக்கை ஏற்படவில்லை. அவனை எங்கு வைக்க வேண்டுமோ அங்கேயே நிறுத்தி இருந்தான்.

காவ்யாவின் திறமையை நேர்மையை பாராட்டி அவளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது ரிக்கிக்கு பொறுக்கவில்லை. அவளிடம் மறைமுகமாக பகைமை பாராட்டி வந்தவன் நேற்று சரியான நேரத்தில் அவளை கோர்த்தும் விட்டு விட்டான்.

இனி வெகு சுலபமாக காவ்யாவின் நடத்தையை பணியிடத்தில் பேசு பொருளாக மாற்ற முடியும் என்ற திட்டம் வகுத்திருந்தான். அவள் நிறுவனத்திற்கு வரும் நாளை ஆவலாக பார்த்திருந்தான்.

அடுத்தநாள் சற்று தாமதமாக நிறுவனத்திற்கு வந்திருந்தாள் காவ்யா. நேராக மேலாளரிடம் சென்று இந்த நிறுவனத்தில் மேலும் பணிசெய்ய தனக்கு விருப்பமில்லை என்று ராஜீனாமா கடித்தத்தை அவரிடம் நீட்டினாள்.

அவளின் முடிவை சற்று அதிர்ச்சியாக உள்வாங்கி கொண்டு, “என்னாச்சு காவ்யா, ஏன் திடீர்னு?” ரங்கராஜன் கேட்க, “பிடிக்கல சர், அவ்ளோதான்… இதுக்கு மேல எதுவும் கேட்காதீங்க ப்ளீஸ்” அவள் இறுகிய குரலில் கூற, அதற்கு மேல் காரணம் கேட்காமல் சற்று நேரம் காத்திருக்கும்படி சொன்னார்.

அதேநேரம், தன் கையிலிருந்த காகிதத்தை எதிரில் இருப்பவன் முகத்தில் விட்டெறிந்தான் விபீஸ்வர். ரிக்கி பதற்றமாக அந்த காகிதத்தை எடுத்து பார்க்க, வேலையிலிருந்து அவன் நீக்கப்பட்டதற்கான உத்தரவு கடிதம் அது. அதுவும் ‘இவன் நம்பிக்கைக்குரியவன் அல்ல’ என்ற கரும்புள்ளி வாசகத்தோடு.

அதிர்ந்து போனவன், “இதெல்லாம் அநியாயம் சார், எதுக்காக இப்ப என்னை வேலையை விட்டு தூக்கினீங்க?”

“உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா எங்கிட்டயே சீப்பா கேம் ப்ளே பண்ணியிருப்ப, கெட் அவுட்…” விபீஸ்வர் கத்தலில் இவன் அரண்டு தான் போனான். எப்போதும் எதையும் இலகுவாக கையாளும் முதலாளியாகத்தான் இதுவரை அவனை பார்த்திருக்கிறான். விபீஸ்வரின் இந்த முகம், இத்தனை கோபம் அவனுக்கு புதிது.

“சார்… நான் என்னை தப்பு பண்ணேன்னே சொல்லாம இப்படி வேலையவிட்டு துரத்தனா எப்படி சார்?” ரிக்கி நியாயம் கேட்க, “செக்கியூரிட்டி…” விபீஸ்வர் குரலுக்கு இரு காவலாளிகள் அங்கே வந்து நின்றனர். அவன் விரலசைப்பில் ரிக்கியை இழுத்து சென்றனர். ரிக்கி கத்தி கூச்சலிட்டு ஆர்பாட்டம் செய்து வர மறுத்தும் வாயிலுக்கு வெளியே வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டான்.

அங்கிருந்த பணியாளர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அங்கே சலசலப்பு கூடியது.

காவ்யா எதையும் கண்டுகொள்ளாமல் இறுக்கமுடன் காத்திருக்க, சற்று நேரத்திற்கு பிறகு விபீஸ்வரிடம் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அவளும் எதிர்பார்த்தது தான்.

முகம் காட்ட தயங்கும் சங்கட நிலையை விபீஸ்வர் இப்போதுதான் உணர்ந்தான். எப்போதும் சற்று அலட்சியம் கலந்து நிமிர்ந்து இருக்கும் அவன் பார்வை இப்போது, எதிர் நின்றவளை நேர் கொண்டு காண முடியாமல் தடுமாறியது.

காவ்யா அவன் முன் தன் முழு உயரத்திற்கு நிமிர்ந்து நின்றிருந்தாள்‌. திடமாக. அழுத்தமாக. நான் பெண் என்ற தன்னம்பிக்கை தந்த கர்வமாக.

‘ச்சே நான் ஏன் அவ்ளோ மோசமா பிஹேவ் பண்ணேன்?’ அவன் செயல் அவனுக்கே அவமானமாக தோன்றியது. போதையின் காரணம் என்று பழிபோட விரும்பவில்லை அவன். போதையின் பிடியில் அவன் இருந்தது நேற்று முதல்முறையும் அல்ல. எதிலும் நிதானம் இழக்காதவன், நேற்று மிருகம் கூட செய்யாத செயலை செய்ய துணித்திருந்தான். எந்த மிருகமும் தன் இணையை உறவுக்கு வற்புறுத்துவதில்லை. ஆனால் மனிதன்?

“நான் அப்படி உன்கிட்ட பிஹேவ் பண்ணது தப்பு தான், மன்னிப்பும் கேட்டுட்டேன்… இனி அப்படி நடக்காது ப்ராமிஸ்… அதுக்காக நீ ஜாப் ரிசைன் பண்ண வேண்டிய அவசியம் என்ன வந்தது?” விபீஸ்வர் வெளிப்படையாக கேட்க,

“எனக்கு இங்க பாதுகாப்பு இல்ல. இங்க யாரும் நம்பிக்கை ஆனவங்களாவும் இருக்கல. இனிமேலும் இங்க நிம்மதியா வேலை செய்ய முடியும்னு தோணல” காவ்யா பதில் நேரடியாக வந்தது.

“இனி அப்படி எதுவும் நடக்காது நான் உத்தரவாதம் தரேன்” மெல்லினத்தவளின் எஃகு போன்ற கடின பேச்சு அவனை அசைத்து பார்த்தது.

“நம்பிக்கையும் பாதுகாப்பும் இல்லாத இடத்துல இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனைக்கு சமம், இனியும் என்னால இங்க தொடர்ந்து வேலை செய்ய முடியாது” அவள் உறுதியான முடிவோடு இருந்தாள்.

“அப்புறம் உன்னோட விருப்பம். உன் ரிஷங்னேஷனை அக்சப்ட் பண்றேன்” மேலும் அவளிடம் இறங்கி பேச மனமின்றி ஏற்றுக் கொண்டான். “கம்பெனி ரூல்ஸ் தெரியும் இல்ல உனக்கு… இன்னும் திரீ மன்த்ஸ் நோட்டிஸ் பிரியட் கிளியர் பண்ணிட்டு நீ போகலாம்”.

விபீஸ்வர் சொல்ல, காவ்யாவிற்கும் அது நினைவில் இருக்கத்தான் செய்தது. பணிக்கு சேரும்போது நிறுவனத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுபடுவதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இவள் தானே.

உண்மையில் அந்த எண்ணத்தில் தான் ராஜீனாமா செய்யும் முடிவிற்கு வந்திருந்தாள். இந்த மூன்று மாத இடைவெளியில் எவ்வாறேனும் புது வேலையை தேடிக்கொள்ள வேண்டும் என்பது அவளின் யோசனையாக இருந்தது. எனினும் அது எந்த அளவு சாத்தியப்படும் என்பதில் அவளுக்குள் சிறு கலவரமும் இருக்கத்தான் செய்தது.

“நீ புத்திசாலின்னு நினைச்சிருந்தேன் காவ்யா, இப்ப முட்டாள்னு நிருபிக்கிற, அது ஜஸ்ட் ஆக்ஸிடென்ட்… இந்த சிம்பிள் விஷயத்துக்கு நீ ஓவரா ரியாக்ட் பண்ற”

“ஓ உங்களுக்கு அவ்வளவு சிம்பிளா தோணுதா… நானும் உங்கள கத்தி எடுத்து குத்திட்டு சாரி கேட்டா, எல்லாம் சரியாகிடும் இல்ல” அவளும் அவனுக்கு இணையாக பேசினாள்.

“சொல்றது என்ன நீ செஞ்சே இருப்ப… இனிமே இதைப்பத்தி பேச வேணாம், விட்டுடலாமே” அவன் இறங்கி வந்தான்.
காவ்யாவிற்கும் அதனை பற்றி பேசுவது அருவெறுப்பாக இருக்க, ஆமோதிப்பின் அடையாளமாக மௌனமானாள்.

“ஒன் வீக் உனக்கு மெடிகல் லீவ் அலார்ட் பண்ணியிருக்கேன்… கை சரியானதும் வந்து ஜாய்ன் பண்ணிக்க” இப்போது அவன் குரல் மென்மையாக ஒலித்தது.

“ரொம்ப பெரிய மனசு சர் உங்களுக்கு… தேங்க் யூ வெரி மச்” அடக்கப்பட்ட ஆத்திரமாக அவள் சொற்கள் வெளிவந்தன.

‘பண்ணறதெல்லாம் பண்ணிட்டு எவ்ளோ கூலா பேசுறான் பாரு, இன்னும் முழுசா மூணு மாசம் எப்படி தான் கழிய போகுதோ! பிள்ளையாரப்பா’ மனதிற்குள் அரற்றியபடி சென்று விட்டாள் காவ்யா.

‘ஒழுங்கா அன்னிக்கு நைட் ரிதுவையே ஓகே பண்ணியிருக்கலாம்… ச்சே போயும் போயும் இவகிட்ட என் இமேஜ் டோட்டலா டேமேஜ் ஆகி போச்சு… எவ்வளோ திமிரா பேசிட்டு போறா பாரு” முதல் முறை இந்த பிடிவாதகாரனை புலம்ப செய்திருந்தாள் காவ்யா.

அவள் வேலை விட்டு போகிறேன் என்றதும், போகட்டும் என்று விட்டு தொலைக்காமல் தான் ஏன் அவளுக்காக பேசுகிறோம் என்பது
அவனுக்கும் புரியவில்லை தான். புரிந்து கொள்ளவும் அவன் முயலவில்லை.

அடுத்த ஒரு வாரத்தில் கை காயம் ஓரளவு குணமாகி இருக்க, வலியும் குறைந்து இருந்தது. ஆனால் கண்ணாடி கிழித்த ஆழமான காயமாதலால் அந்த கையால் எந்த வேலையும் செய்ய முடியவில்லை.

இன்னும் மூன்று மாதம் விபீஸ்வரின் கீழ் நாள் முழுவதும் வேலை பார்க்க வேண்டிய நிர்பந்த நிலை அவளுக்கு. முழுக்க தன் மன உறுதியை நம்பியே காவ்யா வேலைக்கு கிளம்பினாள். சிறு கத்தி, மிளகாய் தூள் டப்பி மற்றும் கோலிகுண்டுகள் சில போன்ற தற்காப்பு தளவாடங்கள் அவளின் கைப்பையில் புதிதாக இடம்பிடித்து இருந்தன.

முதல் வாரம் அவளுக்கு இலகுவாகவே கழிந்தது. இன்னும் முழுமையாக குணமாகாத காயத்தினால் அவளுக்கு வேலைபளுவும் குறைவாகவே இருந்தது. இதே போல மிதி வாரங்களும் கழிந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டாள். தன் புது வேலைக்கான தேடலிலும் ஒருபுறம் ஈடுபட்டு இருந்தாள்.

வியாபாரமும் தொழிலும் விபீஸ்வரை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ள மற்றதை மறந்து போயிருந்தான். ஆனால் இவனுடன் தனிமையில் இருக்க நேரிடும் வேளைகளில் காவ்யாவின் கண்களில் வெளிப்படும் கூடுதல் எச்சரிக்கை உணர்வு இவனை காயப்படுத்த தான் செய்தது.

அப்போதெல்லாம் ‘நீ இவ்ளோ பயப்படுற அளவுக்கு நான் கேவளமானவன் இல்ல கவி…’ சத்தமிட்டு கத்த வேண்டும் போல் இருந்தது அவனுக்கு.

தான் ஆண் என்ற அவனின் கர்வத்தை அவளின் மிரண்ட பார்வை ஒவ்வொரு முறையும் உடைத்தெறிந்து கொண்டிருந்தது உண்மை.

# # #

அன்று சரியாக இரவு இரண்டு மணி இருக்க, தன் கைபேசியில் சொல்லப்பட்ட தகவலில் விபீஸ்வர் அதிர்ந்து தான் போனான். அதனை ஜீரணிக்க முடியாமல் அவன் மனம் முரண்டியது. தன்னை முயன்று சமன்படுத்தி கொண்டவன், அவசரமாய் உடைமாற்றிக் கொண்டு தன் காரில் வேகமாய் பறந்தான்.

விபி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்கு தீப்பற்றி எரிந்து கொண்டிருக்க, அதை பார்த்திருந்த அவன் கண்களில் கரும்புகை சூழ்ந்தது.
இந்த மாதத்திற்கான மொத்த தொழிலாளர்களின் உழைப்பு முழுவதும் அவன் கண்முன்னே சாம்பலாகிக் கொண்டிருந்தது.

ஒருபுறம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடிக் கொண்டிருக்க, மறுபுறம் காவல்துறையினர் தங்கள் விசாரணையை நடத்திக்கொண்டு இருந்தனர். வேடிக்கை பார்க்க வந்த மக்களின் சலசலப்பு ஒருபுறம், ஊடக கேமராக்களின் படபிடிப்பு மறுபுறம் என அந்த இடம் அல்லோலப்பட்டு கொண்டிருந்தது.

தகவல் அறிந்து காவ்யதர்ஷினியும் சிவாவும் அங்கு வந்து இறங்கினர். இரவின் அடர் இருளில் கொழுந்து விட்டு எரியும் தீ பயங்கரமாக காட்சியளிக்க, அதைக் கண்டு காவ்யதர்ஷியின் இதயமும் துடித்துதான் போனது. தனக்கே இப்படி என்றால்…! அவள் விழிகள் அவசரமாய் விபீஸ்வரை தேடின.

தன் காரில் சாய்ந்தபடி எரியும் தனலை உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் வெறித்தபடி நின்றிருந்தான் அவன். அவனை அப்படி பார்க்க, இவளுக்கும் பாவமாக தான் தோன்றியது.

“நீ கிளம்பு சிவா, இங்க நிறைய வேலை இருக்கு, முடிச்சுட்டு நான் வந்திறேன்” காவ்யா சொல்ல, “சரிக்கா, லேட் ஆச்சுன்னா ஃபோன் பண்ணு நான் வரேன்” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பி விட்டான்.

அங்கே பரபரப்பாய் ஒவ்வொரையும் ஏவிக் கொண்டு இருந்த ரங்கராஜனிடம் சென்றவள், “சர் இன்சூரன்ஸ் கிளைம் பண்ணலாம் இல்ல…” சங்கடமாக கேட்க, அவள் பக்கம் திரும்பியவர் முகமும் சோர்ந்து வாடி போயிருந்தது.

“ம்ம் பண்ணலாம் காவ்யா, அதுக்கான ஏற்பாடெல்லாம் செய் மா” என்று இறங்கிய குரலில் சொன்னவர், விபீஸ்வர் அருகில் சென்று அவன் தோளை தட்டிக் கொடுத்தார்.

அவன் திரும்பாமல் இருக்க, “கொஞ்சம் கஷ்டந்தான் விபி… ஆனா முடியாதது இல்ல பார்த்துக்கலாம்…” ரங்கராஜன் தைரியம் கூறினார்.

“யார் செஞ்சிருப்பாங்க அங்கிள்?” அழுத்தமான குரலில் விபீஸ்வர் விசாரிக்க,

“போலீஸ் விசாரிச்சுட்டு இருக்காங்க, வயர் ஏதாவது ஷாக் அவுட் ஆகி தீ பிடிக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க”

“வயர் ஷாக் அவுட் ஆகுற அளவுக்கு கேர்லெஸ்ஸாவா நாம குடோனை மெய்ன்டைன் பண்ணி வச்சிருக்கோம்?” அவன் குரலின் அழுத்தம் கூடியது.

“கவி எங்கே?” விபீஸ்வரின் அழைப்புக்கு அவன்முன் வந்து நின்றாள்.

“குடோன் எல்லாம் ரெகுலர் மெய்ன்ட்னஸ்ல தான இருக்கு. இந்த ஆக்ஸிடென்ட் எப்படி ஆச்சு? முன்ன போல உன் கவனம் வேலையில இல்லையா கவி!” கோபமாக வந்து விழுந்தன அவன் வார்த்தைகள்.

“எல்லாம் ரெகுலர் செக்கப்ல இருக்கு சர், ஷாக் அவுடாக சான்ஸஸ் ரொம்ப கம்மி தான் சர்…” காவ்யா பதில் பதற்றமாக வந்தது. தான் கடமையில் இருந்து தவறி விட்டதாக அல்லவா அவன் பொய் குற்றம் சாட்டுகிறான்.

“எலக்டிரிஷியன் எங்க?” அவன் அடுத்த கேள்விக்கு,

“அவர் நம்பருக்கு தான் டிரை பண்ணிட்டு இருக்கேன், பட் ரீச் ஆகல” காவ்யாவின் சங்கடமான பதிலில் இவன் நெற்றி சுருங்கியது.

“ரங்கா சர், உடனே ரவியை வர சொல்லுங்க, அந்த எலக்ரிஷியன் எங்க போய் தொலைஞ்சான்? அவன் வீட்டுக்கு போய் நம்ம ஆளுங்களை விசாரிக்க சொல்லுங்க” விபீஸ்வர் அடுத்தடுத்த உத்தரவுகளை பிறப்பித்து கொண்டே போனான்.

வானில் விடிவெள்ளி முளைத்து வர, இருள் வானம் மெல்ல வெண்மையை பூசிக் கொண்டிருக்க, தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு இப்போது அங்கு வெறும் கரும்புகை மட்டுமே சூழ்ந்திருந்தது.

நாளைக்கு ஏற்றுமதிக்கு தயாராக இருந்த முழுமைபெற்ற ஆடைகள் அனைத்தும் தீக்கிரையாகி இருக்க,
விபீஸ்வரின் அடுத்தடுத்த உத்தரவுகளை செயல்படுத்துவதில் காவ்யா திணறித்தான் போனாள்.

அத்தோடு இல்லாமல் துக்க விசாரிப்பு என்ற பெயரில் வந்த அழைப்புகளுக்கு பொறுமையாக பதில் தந்து ஒருபுறம் அலுத்து போயிந்தாள்.

ஏற்றுமதி பொருட்களின் தாமதத்திற்கு காரணமும் மன்னிப்பும் கூறி, இன்னும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்து வாடிக்கை நிறுவனங்களுக்கும் வியாபார நண்பர்களுக்கும் தகவல் அனுப்ப விபீஸ்வர் உத்தரவிட்டிருந்தான்.

எப்படி பார்த்தாலும் இது நஷ்ட கணக்கு தான் என்பது காவ்யாவிற்கும் புரிந்து தான் இருந்தது. எனினும் இதிலிருந்து மீண்டே ஆக வேண்டிய இக்கட்டான நிலை. வியாபார பரிமாற்றங்களில் நம்பிக்கையும் காலக்கெடுவும் மிக முக்கியம் வாய்ந்தவை.

சென்ற ஒரு மாத உழைப்பை எவ்வகையிலேயும் எவ்வளவு விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக முடிக்க வேண்டும். விபீஸ்வர் அதற்கான திட்டங்களை வேகமாக வகுத்து கொண்டிருந்தான்.

இதற்கிடையே தனியார் துப்பறியும் நிறுவனம் நடத்தி வரும் ரவியிடம் இந்த தீ விபத்து பற்றி விசாரிக்க கேட்டுக்கொண்டான்.

அந்த ஒருநாள் முடிவதற்குள் காவ்யாவின் தலை கிறுகிறுத்து விட்டது. கடைசியாக விபீஸ்வர் சொன்னதை கேட்டவளுக்கு இது நடக்குமா என்ற சந்தேகம் தான் எழுந்தது. அதே சந்தேகத்தை தான் ரங்கராஜனும் கேட்டார்.

“இவ்வளவு ஈஸியா சொல்லிட்ட விபி, ஆனா ரெண்டு நாள்ல இவ்வளவு அரேஜ்மெண்ட் பண்றது ரொம்ப கஷ்டம்”.

“கஷ்டபட்டு தான் ஆகணும் ரங்கா சர். இன்னும் ப்ஃப்டீன் டேஸ்ல நமக்கு ஆர்டர் கொடுத்த கம்பெனிஸ்கு மெட்டிரியல் போய் சேரணும்… அதுக்கு நைட் டியூட்டி போடறது தான் இப்ப இருக்க வழி”

“பட் சர்… எல்லாருமே லேடிஸ், டே அண்ட் நைட் வொர்க் பண்றது ரொம்ப கஷ்டம் சர்” காவ்யா சொல்ல,

“முடியும்னு நினைச்சா எல்லாராலையும் முடியும்… ஆண்களை விட பெண்களோட வேலை வேகமாகவும் இருக்கும் நேர்த்தியாகவும் இருக்கும்” விபீஸ்வர் அழுத்தமாக சொன்னான்.

“ரங்கா சர், உடனே நைட் வொர்க்கர்ஸ்க்கு டபுள் சேலரின்னு அனௌன்ஸ் பண்ணுங்க” என்று உத்தரவிட, விபீஸ்வரின் திட்டத்திற்கு வழக்கம் போல மற்ற பங்குதாரர்களும் தங்கள் ஆமோதிப்பை வழங்கி இருந்தனர்.

“நமக்கு அதிகம் நேரமில்ல, எல்லா வேலையும் சீக்கிரம் தொடங்கட்டும்” விபீஸ்வரின் அடுத்தடுத்த உத்தரவுகளில் இரவும் பகலும் ஓயாமல் இயங்க ஆரம்பித்தது அந்நிறுவனம். விடுமுறை தினங்களையும் மறந்து.

தொழிலாளர்கள் கிடங்கு தீவிபத்து பற்றி அறிந்திருந்ததால், உத்வேகத்தோடு செயல்பட்டனர். அத்தோடு இருமடங்கு சம்பளத்தின் மகிழ்ச்சி வேறு அவர்களை இரவும் பகலும் இயங்க செய்திருந்தது.

தேவைக்கு என்று இன்னும் அதிக ஆட்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.
இரவின் சோர்வை தவிர்க்க அனைவருக்கும் தேநீர் மற்றும் பிஸ்கேட் வழங்கப்பட்டு உற்சாகபடுத்தப்பட்டது.

அதீத வேலைபளுவில் இரண்டாவது வாரம் கழிந்திருந்தது காவ்யாவிற்கு.
அடுத்த வாரங்களும் கூட அதே வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தன.

தேநீர் கோப்பையோடு காவ்யா, விபீஸ்வர் அறைக்குள் நுழைய, அவன் இருந்த நிலை பார்த்து இவள் முகம் மென்மை பூசிக் கொண்டது.

அங்கிருந்த சோஃபாவில் விபி குப்புற கவிழ்ந்து படுத்தபடி உறங்கி போயிருந்தான்.

இந்த இரண்டு வாரங்களின் இடைவிடாத அலைச்சல், இழப்பின் வேதனை, ஓய்வு, உறக்கம் மறந்து அவனின் அதிவேகமான செயல்பாடுகளின் தாக்கம் இதெல்லாம் அவனின் சோர்ந்த முகமும் களைந்த கேசமும் பிரதிபலித்து கொண்டிருந்தது.

பெற்ற கால அவகாசத்திற்குள், எல்லா வேலைகளும்‌ ஓரளவு முடிவு பெற்றிருந்தன. கடைசி கட்ட வேலைகளும் இன்னும் இரண்டு நாட்களில் முடிந்துவிடும். அந்த நிம்மதியில் தான் அவன் உறங்குகிறான் என்று எண்ணிக் கொண்டவள், சத்தம் எழுப்பாமல் வெளியேற முயன்றாள்.

“ஹே கவி… காஃபி எனக்கா?” அவன் குரல் ஒலிக்க, திரும்பினாள்.
இமைகளை திறக்க முடியாமல் திறந்தவன், களையாத தூக்கத்தை முயன்று விலக்கிவிட்டு எழுந்து அமர்ந்தான்.

“சாரி, டையார்டா இருந்தது அதான் இங்கேயே படுத்துட்டேன்” என்று முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டான்.

“உங்க கம்பெனில நீங்க தூங்க, எதுக்கு சர் சாரி கேக்கணும்” காவ்யா இலகுவாக பேச, “ஆஹான்…” என்று சிறு புன்னகயை உதிர்த்துவிட்டு தேநீர் கோப்பையை எடுத்து பருகலானான்.

பின்பு புத்துணர்வோடு தன் இருக்கையில் அமர்ந்து அவன் வேலையை தொடங்க, காவ்யாவும் பணியில் இணைந்து கொண்டாள்.

அடுத்த இரு நாட்களில் முழுமைப்பெற்ற ஆடைகள், கூடுதல் பாதுகாப்போடு ஏற்றுமதி செய்யப்பட்டன. வர்த்தக நிறுவனங்கள் இவர்களுக்கு தங்கள் பாராட்டை தெரிவித்துக் கொள்ள, அன்று விபி நிறுவனத்தின் தொழிலாளிகள் எல்லாம் ஏதோ பெரிதாக சாதித்த உணர்வில் உற்சாகமாய் கொண்டாடினர்.

ஆனால் விபீஸ்வரின் மனம் இத்தனை நஷ்டத்திற்கு காரணமானது யார் என்ற யோசனையில் இறுகி இருந்தது.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!