KKRI – 16

 அத்தியாயம் – 16

மாலைநேரம் மேற்கே மலையின் முகட்டில் சூரியன் மறைய தென்றல் இதமாக வீசியது. கணவன், மனைவி இருவரும் ஊருக்குள் நுழைந்தனர். அந்த காலத்தில் கட்டப்பட்ட வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த பெரியவர் ஒருவர், “யாரு நம்ம கண்ணனா..” சத்தமாகக் கேட்டார்.

“ஆமா தாத்தா..” கிருஷ்ணா அந்த பெரியவருக்கு பதில் சொல்ல, “என்னப்பா சென்னை போயிட்ட சொந்த ஊரை மறைக்கணும்னு புதுசா சட்டம்கிட்டம் போட்டுடான்களா..” என்று கிண்டலுடன் அவர் கேட்க மது வாயை மூடியபடி சிரிப்பை அடைக்க முயன்றாள்.

“ஆமா ஆமா சென்னையில் இப்படியொரு சட்டம் கொண்டு வர போறாங்களாம் தாத்தா..” குறும்புடன் பதில் கொடுத்துவிட்டு அவருக்கு பதில் கொடுத்துவிட்டு மனைவியோடு வீட்டைநோக்கி நடந்தான்

“அவனுங்க போடல என்றாலும் நீ போட வெச்சிருவ..” என்று அவரும் போற போக்கில் சொல்லிவிட்டு சென்றார். இருவரையும் பார்த்த சொந்தபந்தங்கள் விசாரிக்க அவர்களுக்கு பதில் கொடுத்தபடியே மெல்ல வீடு வந்து சேரும் பொழுது மணி ஆறானது.

வீட்டின் வாசலில் பாவாடை தாவணியைத் தூக்கி சொருகியவண்ணம் ரஞ்சித்திற்கு சைக்கிள் ஓட்ட கத்துக் கொடுத்துக் கொண்டிருந்த தாரிகா அண்ணனைப் பார்த்தும், “அண்ணா, அண்ணி வாங்க..” என்று அழைத்தபடியே மதுவின் கையிலிருந்த பெட்டியை வாங்கினாள்.

‘தாரிகா நீ எப்படி இருக்கிற..’ மது சைகையில் கேட்க, “எனக்கு என்னண்ணி நான் சூப்பரா இருக்கேன். ஆனா இந்த அண்ணா நீங்க ஊரிலிருந்து வந்த விஷயத்தை என்னிடம் மறைச்சிட்டான். அவன் தனியாக மாட்டும் போது இருக்கு கச்சேரி..” என்றவளின் குரலில் இருந்த மிரட்டலைக் கவனித்த மது கணவனைத் திரும்பிப் பார்த்தாள்.

அங்கே நடக்கும் அனைத்தையும் பார்த்துகொண்டு அமைதியாக சிரித்தபடி நின்ற கிருஷ்ணாவின் முகத்தை இமைக்காமல் பார்த்தவள், ‘சென்னையில் இருக்கும் போது குரங்கு மாதிரி முகத்தை வெச்சிட்டு இருக்கான். இங்க வந்ததும் அப்படியே தலைகீழாக மாறிட்டான்..’ என்று மனதிற்குள் புலம்பினாள்.

அவர்கள் நால்வரும் வீட்டின் உள்ளே நுழைய, “அம்மா அண்ணா அண்ணி வந்துட்டாங்க..” வீட்டைநோக்கிக் குரல் கொடுக்க, “தாரிகா எதுக்கு இப்போ இப்படி கத்திற..” என்று அவளிடம் வேண்டுமென்றே சண்டை இழுத்தான்.

“ஆமா நான் அப்படித்தான் கத்துவேன்..” என்று அவளும் அவனுடன் சரிக்கு சரி சண்டைக்கு நிற்க, “ஐயோ உங்களோட சண்டையை நிப்பாட்டுங்க..” என்று கத்தியபடி கையில்  ஆரத்தியுடன் சங்கீதா வாசலுக்கு வந்தார்.

அவரின் பின்னோடு தாமரையும் வரவே, “அம்மா எப்படி இருக்கீங்க..” என்று தாயை நலம் விசாரித்தவனை முறைத்துவிட்டு, “நீ எப்படிமா இருக்கிற..” என்று மருமகளை விசாரிக்க, ‘என்னைவிட இப்போ இவ ரொம்ப முக்கியமா போயிட்ட இல்ல..’ என்றவனின் பார்வை தாயிடம் கேள்வி கேட்டது.

‘நான் நல்ல இருக்கேன் அத்த..’ என்ற மதுவின் முகத்தை பாசத்துடன் வருடிய தாமரையின் கண்கள் லேசாக கலங்கிட, “அத்தை என்ன இது..” என்று அவரை சமாதானம் செய்துவிட்டு இவர்கள் ஜோடியாக நிற்க வைத்து ஆரத்தி எடுத்து உள்ளே அனுப்பிவிட்டு தட்டுடன் வெளியே சென்றார்.

 அதற்குள் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு, “சித்தப்பா..” என்று ஓடிவந்த அண்ணன் மகன் ரஞ்சித்தை தூக்கிக் கொண்டவன், “ஸ்கூல் எப்படிடா போகுது..” அவனின் தலையைக் கலைத்துவிட்டபடியே கேட்டான்.

“சூப்பராக போகுது சித்தப்பா..” என்றவன் அவனின் கையிலிருந்து மதுவின் கைகளுக்கு தாவிட, ‘குட்டி பையா…’ என்று ரஞ்சித் கன்னத்தில் முத்தமிட்டவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்து தாமரையின் கண்கள் லேசாக கலங்கியது.

அவரின் மனநிலையைக் கணிக்கும் நிலையில் மது அப்பொழுது இல்லை. அவளின் கவனம் முழுவதும் ரஞ்சித் மீதிருந்தது. கிருஷ்ணாவின் கவனம் முழுவதும் அவளின் மீதே இருக்க, ‘இத்தனை ஆசை இருக்கிறவன் எதுக்கு மதுவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பனும்?’ என்ற சிந்தனையுடன் சமையலறைக்குள் புகுந்தார் தாமரை.

அண்ணனும் தங்கையும் சோபாவில் அமர்ந்து கதை பேச மதுவோ ரஞ்சித்துடன் ஐக்கியம் ஆகிவிடவே, “நீங்க இருவரும் என்ன பேசறீங்க..” என்ற கேள்வியுடன் ஹாலின் உள்ளே நுழைந்தார் சங்கீதா.

“அம்மா நான் சித்திக்கு தெரிஞ்ச பாசை கத்துகிட்டேனே.. இனிமேல் நான் தினமும் சித்திகூட பேசுவேனே..” என்று சொல்லி அவன் சைகை பாசையில் மதுவிடம் பேசிக்காட்ட அவளும் அவனைத்தூக்கி முத்தமிட்டாள்.

அங்கே நடந்த விஷயங்களைப் பார்த்தவனுக்கு கோபம் வந்துவிட, “அண்ணி நான் என்னோட அறைக்கு போறேன்..” என்றவன் வேகமாக மாடியேறிச் செல்ல, “நீங்க மூவரும் பேசிட்டு இருங்க.. நான் வேலையைப் பார்க்கிறேன்..” சங்கீதா புன்னகையுடன் சொல்லிவிட்டு சமையலறை நோக்கிச் சென்றார்.

சிறிதுநேரம் அவர்களோடு சைகையில் பேசிய மது, ‘நான் ரூமிற்கு போறேன்..’ என்றவள் மாடிக்குச் செல்ல அந்த அறையைப் பார்த்தும் அவளின் மனமோ, ‘இந்த வீட்டுக்கு நான் முதல் முதலாக என்ன மனநிலையில் வந்தேன்..’ என்ற சிந்தனையுடன் அந்த அறையைக் கடந்து வேறொரு அறைக்குள் நுழைந்து சரிந்து அமர்ந்தவளின் விழிகள் தானாக மூடிக்கொண்டது.. அந்த மூடிய விழிகளுக்கு நடுவே கடந்த காலம் படமாக விரிந்தது.

மாலை ஆறுமணிக்கு மாடியை அடைந்த மதுமதி எப்பொழுதும் அமரும் சிமிண்ட் பெஞ்சில் சென்று அமர்ந்தாள். கீழ்வானம் முழுவதும் செக்க சிவந்திருக்க சூரியன் மலையின் முகட்டில் ஓய்வேடுக்க் சென்றிருந்தான்.

இளம்மாலை தென்றல் இதமாக வீசி அவளின் கூந்தலை கலைத்து சென்றது. தனிமையில் இருந்தாலும் அவனின் குரல் காதோரம் ஒலிப்பது போல ஒரு பிரம்மை ஏற்படவே தன்னுடைய கட்டுப்பாட்டை மீறி அவளின் கண்கள் லேசாக கலங்கியது. நேரம் செல்வதை உணராமல் அதே இடத்தில் சிலையாகியிருந்தாள் மதுமதி.

ஆறுமணிக்கு மாடிக்கு சென்ற மகள் மீண்டும் கீழே வரவில்லை என்பதை கவனித்த நிர்மலா மகளை தேடிக்கொண்டு மாடிக்கு வந்தார்.

அங்கே தன்னுடைய மகள் தனியாக அமர்ந்து அழுவதைப் பார்த்ததும் பதறியவர், “மது என்னம்மா..” என்றவர் அவளின் அருகில் சென்று அமர்ந்தார்.

அவர் பாசமாக அவளின் தலையை வருடிவிட, ‘அம்மா’ என்று அவரின் தோள் சாய்ந்தவள் விம்மி விம்மி அழுதாள் மதுமதி.

எந்தவிதமான காரணமும் சொல்லாமல் அழுகும் மகளைப் பார்த்ததும் அவரின் மனம் வலிக்க “மது என்னாச்சும்மா..” என்றவரின் குரலில் அவள் முற்றிலும் உடைத்து போனாள்.

சிறிதுநேரம் அவளை அழுகவிட்டு அவளின் முதுகை வருடிவிட்ட நிர்மலா மகளின் அழுகை குறைந்ததும், “மது என்ன பிரச்சனை” என்று நேரடியாக கேட்க அவளோ பதில் சொல்லாமல் எழுந்து சென்றுவிட்டாள்.

 அவளின் அந்த செய்கை அவரின் மனதில் கேள்வியை உருவாக்கியது. அவர் பார்த்த வரையில் மது எதற்கும் அழுததில்லை. ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாகவே நடக்கவே, ‘ஏன் இப்படி நடந்துக்கிற?’ என்ற கேள்விக்கு அதே இடத்தில் அமர்ந்திருந்தார்.  

அதற்கான காரணத்தை தெரிந்துகொள்ள அவரும் இரண்டொரு முறை அவளிடம் அதுபற்றி கேள்வி கேட்க அவளோ பதில் சொல்லாமல் மழுப்பிட அவரின் மனதில் பாரம் ஏறியது. இதற்கு மேல் அவளை வற்புறுத்தி பயனில்லை என்று உணர்ந்தவர் மகளின் நடவடிக்கைகளை கவனித்தார்.

மாலை வேலை முடிந்தும் எப்பொழுதும் போல வீட்டிற்கு வரும் மது மாலை ஆறுமணிக்கு மாடியில் சென்று அமர்ந்தால் கிட்டதட்ட இரண்டு மணிநேரம் இல்லாமல் கீழே இறங்கி வருவது கிடையாது.

அவள் இயல்பாக இல்லாமல் எந்தநேரமும் ஏதோவொரு சிந்தனையிலேயே இருந்தாள். அவள் மனதிற்குள் எதையோ போட்டு குழப்பிக்கொள்கிறாள் என்று புரிந்துகொண்டாலும் அதன் பின்னணி அறியாமல் அவரின் மனதில் கவலை அதிகரித்துக்கொண்டே சென்றது.    

அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வந்த பிரீத்தி முதலில் கவனித்தது சோகத்தில் மூழ்கியவண்ணம் நின்றிருந்த நிர்மலாவைத்தான் முதலில் கவனித்தாள்.

அவரின் சிந்தனை படந்த முகம் அவரின் வருத்தத்தை வெளிப்படையாக காட்டிட, “அம்மா என்னம்மா ஒரு மாதிரி இருக்கீங்க..” என்று அவள் அவரின் அருகில் சென்றாள்.

 “என்ன பிரீத்தி..” என்று கேட்டவரின் குரல் கரகரக்க அவரின் விழிகள் இரண்டும் சிவந்திருப்பதைப் பார்த்து பதறிவிட்டாள் பிரீத்தி.

“யாருக்கு என்னாச்சு அம்மா..” என்று பதட்டத்துடன் கேட்டவளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறியவர், “நீயே மாடிக்கு போய் பாரு பிரீத்தி. மது பித்து பிடிச்சமாதிரி உட்கார்ந்திருக்கிற..” என்றவரின் கண்களில் கண்ணீர் ஊற்றேடுத்தது.

“அவளுக்கு என்னாச்சு அம்மா” அவள் கோபத்துடன் கேட்க, “இப்போ கொஞ்சநாளாகவே ஒரு மாதிரி இருக்கிற..” என்றவர் சொல்ல, ‘அந்த குரலுக்கு உரியவனை காதலிக்கிறாளோ’  என்று பிரீத்தியின் சிந்தனை வேறு திசையை நோக்கி பயணித்தது.

அவர் சொல்வதை உன்னிப்பாக கேட்டு முடித்தவள், “நீங்க கொஞ்சம் இருங்க அம்மா. நான் போய் மதுவை பார்த்துவிட்டு வருகிறேன்” என்றாள்

“நீயே அவளிடம் காரணத்தைக் கேட்டு சொல்லும்மா..” அவரின் கண்ணீர் அவளை பலமாக தாக்கிவிட வேகமாக படியேறி மாடிக்குச் சென்றாள் பிரீத்தி. இருள் சூழ்ந்த வானத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த மதுவின் புருவங்கள் சிந்தனையில் சுருங்கியது.

அவரின் பேச்சிற்கும் அவளின் செய்கைக்கும் சிறிதும் சம்மந்தம் இல்லாமல் இருப்பதை கணித்த பிரீத்தி அவளின் அருகில் சென்று அவளின் தோளைத் தொட வேகமாக திரும்பிய மதுவின் விழிகள் கலங்கியிருந்ததா? அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை.

“ஏன் மது ஒரு மாதிரியாக இருக்கிற..” என்று கேட்கவும் கையிலிருந்த ரேடியோவைக் காட்டி, ‘அவனோட குரல்கேட்டு இரண்டு வாரம் ஆக போகுது..’ என்று கூறியவளின் முகம் சோர்ந்திருந்தது.

“அவனோட குரல் கேட்க முடியலன்னு வருத்தமா?” என்று பிரீத்தி மெல்ல அவளின் தலையைக் கோதிவிட, ‘கொஞ்சம்..’ என்று இதழசைத்தாள் மது.

அதன்பிறகு அவளின் முகமாற்றத்தை கவனித்த பிரீத்தி தன்னுடைய மனத்தைக் கொஞ்சம் திடபடுத்துகொண்டு அவளிடம் அந்த கேள்வியை கேட்டாள்.

“நீ அவனை லவ் பண்றீயா?” என்று கேட்க வேகமாக நிமிர்ந்த மது மறுப்பாக தலையசைக்க, “ஏய் போய் சொல்லாதே மது..” என்று அவளை மிரட்டினாள் பிரீத்தி.

அவளின் மிரட்டலுக்கு எல்லாம் பயப்படாமல் அவளின் விழியை நேருக்கு நேர் பார்த்த மது, ‘ஐயோ அதெல்லாம் இல்ல பிரீத்தி. கிட்டதட்ட மூன்று வருடம் அவனோட குரல்கேட்டு பழகிட்டு, இப்போ அது கேட்காமல் இருப்பது ஏதோ மாதிரி இருக்கு..’ என்று வேகமாக பதில் கூறினாள்.

அவளின் பதில் பிரீத்தியின் மனதிற்கு ஆறுதலாக இருக்கவே, “உன்னால் அம்மா ரொம்ப கவலைப்படறாங்க மது. நீ இப்படியிருந்த அவங்களோட மனசு என்ன பாடுபடும். சோ நீ உன்னைக் கொஞ்சம் மாற்றிக்கொள்..” என்றதும் சரியென தலையசைத்த மது அவளுடன் கீழே வந்தாள்.

அதுவரை மகளை நினைத்து கலங்கிய தாயுள்ளம் மகள் புன்னகையுடன் வருவதைக் கண்டு, “மதும்மா  உனக்கு எதுவும் இல்லல்ல. நீ அப்படி உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் எனக்கு என்னவோ மாதிரி ஆகிருச்சு..” என்றவர் மதுவை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

ஆபீஸ் விட்டு வந்தும் மேலே போய் உட்கார்ந்த தன்னுடைய மடத்தனத்தை நினைத்து மானசீகமாக தலையில் அடித்துக்கொண்ட மது தாயின் முகத்தைப் பார்த்து, ‘நான் எப்பொழுதும் போலதான் அம்மா இருக்கேன். சோ நீங்க ஃபீல் பண்ணாதீங்க..’ என்று தாயை சமாதானம் செய்தவள் வீட்டிற்குள் அவரை அழைத்துச் சென்றாள்.

பிரீத்தி வாசலில் நிற்பதைக் கண்டு அவளின் கரம்பிடித்து வேகமாக வீட்டிற்குள் அழைத்து வந்த மது, ‘நீங்க அம்மாவுடன் பேசிட்டு இருங்க. நான் இன்னைக்கு சமையல் பண்றேன்..’ என்று சமையலறைக்குள் நுழைந்தாள்.

அவளை புன்னகை முகமாக பார்த்ததும் நிர்மலாவின் கவலை எல்லாம் பறந்தோடிவிடவே பிரீத்தியுடன் இயல்பாக பேசிகொண்டிருக்க, “அவள் இயல்பாக இருக்காம்மா.இது தெரியாமல் நீங்கதான் அழுது பெரிய ஆர்பாட்டம் பண்ணிட்டீங்க..” என்றாள் ப்ரீத்தி புன்னகையுடன்

“உனக்கு தெரியாது பிரீத்தி அவளை மாற்ற நான் பட்டபாடு எனக்கு மட்டும் தெரியும். தனிமையில் முடங்கிய அவளை இயல்புநிலைக்கு கொண்டுவந்து இத்தனை நாளுக்கு பிறகு மீண்டும் அவள் அதே தோற்றத்தில் அமர்ந்திருப்பது பார்த்தால் என்னோட மனசு எப்படி வலிக்கும்..’ என்றவர் பிரீத்தியுடம் மதுவிற்கு நடந்த விஷயத்தை பகிர்ந்தார்.

அவரின் கவலைக்கான அர்த்தம் புரிந்து மௌனமான பிரீத்தியின் மனமோ, ‘புன்னகைக்கு எல்லோரின் வாழ்க்கையிலும் ஒரு கசப்பான கருப்பு பக்கம் இருக்கத்தான் செய்கிறது’ என்று நினைத்தவளின் பார்வை சமையலறையில் வேலை செய்துகொண்டிருந்த மதுவின் மீது படிந்தது.

அன்றைய உணவை முடித்துவிட்டு இரவு படுக்கையில் படுத்த மதுவின் கண்கள் அவளையும் மீறி கலங்கியது. ஆனால் அது ஏன் என்று அவளுக்கே தெரியவில்லை.

மறுநாள் வீட்டில் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு ஓய்வாக அமர்ந்த நிர்மலாவின் செல்போன் சிணுங்கியது. திரையில் தெரிந்த நம்பர் புதிதாக தோன்றவே, ‘யாராக இருக்கும்?’ என்ற கேள்வி அவரின் மனதில் எழுந்தது..

அதற்குள் “மது எங்கம்மா இருக்கிற..” என்றவண்ணம் அவளைத் தேடிக்கொண்டு வந்த தாமரையின் குரல்கேட்டு அவளின் மனம் நடப்பிற்கு திரும்பியது.

‘அத்தை நான் இருக்கேன்..’ என்று சொல்லிக்கொண்டே வேகமாக எழுந்த மது அருகிலிருந்த டேபிளில் நன்றாக இடித்துகொண்டாள்..

‘ஸ்ஸ்ஸ்ஸ்..’ என்று தலையைத் தடவிவிட அறையைவிட்டு வெளியே வந்தவளைப் பார்த்தும், “என்னம்மா நீ தனியா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிற..” என்றவர் அவளின் நெற்றியைப் பார்த்ததும் பதறினார்.

“என்னம்மா தலையில் காயம் ஆகியிருக்கு..” என்று கேட்க, ‘அங்கே இடிச்சிட்டேன்..’ என்று டேபிளைக் கைகாட்டிட, “கொஞ்சம் கவனமாக இரும்மா..” என்றவர் அவளின்  காயத்திற்கு மருந்து போட்டுவிட்டார்.

“வா மாமாவும், மாதவ் இருவரும் வந்திருக்காங்க.. அவங்களோட பேசிட்டு சாப்பிட்டுட்டு வந்து தூங்கு..” என்று மருமகளை அழைத்துக்கொண்டு ஹாலிற்கு சென்றார்.

ஆறுமுகத்துடன் அமர்ந்து மாதவ்  இருக்க, தங்கையின் அருகே அமர்ந்து தந்தையிடம் பெசிகொண்டிருந்தான் கிருஷ்ணா. மருமகளை ஹாலிற்கு அழைத்து வந்தவர்,

“உங்க மருமகள் வந்துட்டா அவகிட்டயே கேளுங்க..” என்று சொல்லி நகர்ந்துவிட்டார் தாமரை. அவர் இரவு உணவுகளை எடுத்து வைத்திட சங்கீதா அவருக்கு உதவி செய்தாள்.

மது மெல்ல தயங்கியவண்ணம் நின்றிருக்க,  “வாம்மா மருமகளே.. என்ன என்னோட பையன் உன்னை ரொம்ப கொடுமை படுத்திறானா?” என்று அவர் கேட்ட கேள்வியில் அவள் திருதிருவென விழிக்க ஆறுமுகம் வாய்விட்டு சிரித்தார்.

“என்ன அண்ணி பதில் சொல்ல வரலையா?” என்று தாரிகா அவளை வம்பிற்கு இழுக்க, “மருமகளை விசாரிக்கும் விதத்தை பாரு..” என்று நோடித்துக்கொண்டார் தாமரை..

கிருஷ்ணா மதுவையே இமைக்காமல் பார்க்க, ‘அவரு நல்லவர் தான் மாமா..’ என்று சைகையில் சொல்ல, “நான்தான் சொன்னேன் இல்ல..” கெத்தாக கலரைத் தூக்கிவிட்டு என்றான்..

“அது எங்களுக்கும் தெரியும் மது.. கிருஷ்ணாவிற்கு கோபம் அதிகமாக வரும் என்பதால் தான் இந்த விசாரணை..” என்று அதற்கு விளக்கம் வேறு கொடுத்தான் மாதவன்.

‘இல்ல இல்ல கிருஷ்ணா என்ன நல்லாத்தான் பார்த்துகிறார்..’ என்று சைகையில் சொல்லிவிட்டு, ‘ஸ்ஸ்..’ கிருஷ்ணா பெயரைச் சொல்லிடேனே..’ நாக்கைக் கடித்துகொண்டாள்.

அவளின் சைகையைக் கவனித்துவிட்ட மாதவ், “அட விடும்மா. உங்க அக்காவும் சில நேரம் என்னை பேரு சொல்லித்தான் கூப்பிடுவா. என்ன வெளியே போகும் போது கொஞ்சம் இந்த விஷயத்தை தவிர்த்துவிடும்மா..” என்றவர் சொல்ல,

“எல்லோரும் சாப்பிட வாங்க..” என்றார் தாமரை. அதன்பிறகு கலகலப்பாக பேசியபடியே இரவு உணவை முடித்துவிட்டு அவரவர் அறைகளுக்குச் சென்றுவிட்டனர்.

இரவு தூக்கம் வராது என்ற எண்ணத்துடன் மொட்டை மாடிக்குச் சென்ற மது அங்கே நின்றிருந்த கிருஷ்ணாவைப் பார்த்ததும் கேள்வியாக புருவம் உயர்த்தினாள். 6WlTT�7rN82