Mayam 19

அனுஸ்ரீ மற்றும் ரிஷி ஆகாஷ் திருமணம் நடந்து முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது.

அவர்கள் இருவருக்கும் மனதளவில் இருந்த குழப்பங்கள் எல்லாம் சற்று குறைந்து இருந்தாலும் அவை முற்றாக மறைந்து போகவில்லை.

அனுஸ்ரீ தன் பதிலில் உறுதியாக இருக்க ரிஷியோ இன்னும் குழப்பமாகவே இருந்தான்.

மீண்டும் மீண்டும் அந்த விடயத்தை பற்றி பேசி பேசி பிரச்சினையை வளர்க்க வேண்டாம் என்று நினைத்து அனுஸ்ரீ ஒதுங்கி போக ரிஷியோ அந்த குழப்பத்திற்கு தீர்வு கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

இத்தனைக்கும் இவர்கள் இருவரது பிரச்சினையும் அவர்கள் இரு வீட்டினருக்கும் தெரியாது.

அந்தளவிற்கு தங்கள் பிரச்சினையை தங்களுக்குள்ளேயே வைத்திருந்தனர் அவ்விருவரும்.

திருமணம் முடிந்து ஒரு வாரம் கடந்து இருக்க
ரிஷி அன்றிலிருந்து தான் ஆபிஸ் செல்லத் தொடங்கி இருந்தான்.

பத்மினி மற்றும் சுந்தரமூர்த்தி வாரத்திற்கு ஒரு தடவை அவர்களை வந்து பார்த்து கொள்வதாக சொல்லி விட்டு சென்னைக்கு வந்து சேர்ந்து இருந்தனர்.

மறுபுறம் நாயகி இல்லத்தில் தெய்வநாயகியோடு ராதா தங்கி கொள்ள முத்துராமன் சென்னைக்கு சென்று இருந்தார்.

ஆரம்பத்தில் ராதா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

அவர் அங்கே தனியாக சிரமப்படக்கூடும் என்று எண்ணி ராதா கவலை கொள்ள முத்துராமனோ வார இறுதி நாட்களில் வசந்தபுரம் வருவதாக பலமுறை சத்தியம் செய்யாத குறையாக கூறி விட்டு தான் புறப்பட்டார்.

தன் பெற்றோர் வாழ்க்கையை எண்ணி மனதளவில் பூரித்துப் போனவள் தன் வாழ்க்கையை எண்ணி நொந்து போனாள்.

எல்லோரது வாழ்க்கையும் ஒரு இயல்பான ஓட்டத்தில் நகர்ந்து கொண்டிருக்க ரிஷி மற்றும் அனுஸ்ரீ மாத்திரம் அதை விட்டு சற்று விலகி வேறு ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தனர்.

தன் மனதிற்குள் இருந்த அச்சங்களை எல்லாம் ஒதுக்கி விட்டு எத்தனை ஆசைகளோடு அவள் மனம் இந்த திருமணத்தை எதிர் கொண்டது.

ஆனால் இப்போது அவர்களது வாழ்க்கை?

விக்னேஷிடம் மீண்டும் மீண்டும் அனுஸ்ரீ பற்றி கேட்கவும் அவனுக்கு மனமில்லை.

அதேநேரம் முழுமையாக அவள் சொல்வதையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அனுஸ்ரீ உண்மையாகவே தன்னை பற்றி விசாரித்து இருந்தால் அதை ஏன் அவள் ஏற்றுக் கொள்ள தயங்க வேண்டும்.

இத்தனை விடயங்களை ஏற்றுக் கொண்டவள் ஏன் அதை மட்டும் மறுக்க வேண்டும்? எங்கோ எதுவோ ரிஷியின் மனதில் இடித்தது.

“விக்கி அனு கூட ஒரு பொண்ணு வந்தான்னு சொன்னான் தானே அது யாருனு கண்டு பிடித்தா இந்த பிரச்சினையை முடிக்கலாம்” என்று எண்ணிக் கொண்டு ரிஷி அந்த மற்றைய பெண்ணை பற்றி தகவல்களை தேட அவனது நேரம் அந்த பெண்ணைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று உணர முடியாமல் ரிஷி இங்கே புலம்பிக் கொண்டு இருக்க மறுபுறம் அனுஸ்ரீ தன் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று அச்சம் கொள்ள ஆரம்பித்தாள்.

தெய்வநாயகியோடு இருக்கும் போது ஏதாவது பிரச்சனைகள் வந்தால் அவருடனோ அல்லது தாமரையுடனோ பேசி அவள் அந்த பிரச்சினையை சரி செய்து விடுவாள்.

ஆனால் இப்போது இந்த பிரச்சினையை பற்றி யாரிடம் சொல்வது என்று கூட அவளுக்கு தெரியவில்லை.

தெய்வநாயகியிடமோ அல்லது ராதாவிடமோ இதை பற்றி பேசி பல வருடங்களுக்கு பின்னர் அவர்களுக்கு கிடைத்த சந்தோஷத்தை இல்லாமல் செய்வதா? என்ற தயக்கம் அவளை கட்டி போட்டு வைத்து இருந்தது.

எதற்காக ரிஷி இந்த விடயத்தை இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டும் என்பது கூட அவளுக்கு புரியவில்லை.

தான் அவன் பணத்திற்காக தான் அவனை திருமணம் செய்ததாக சந்தேகப்படுகிறானா? என்பதை நினைக்கும் போதே அவள் மனமெல்லாம் ரணமாக வலித்தது.

ரிஷியை ஆரம்பத்தில் தான் பார்க்காமல் இருந்து இருந்தால் இவ்வளவு தூரம் கஷ்டப்பட தேவையில்லை என்பதை எண்ணி பார்த்தவள் அவனை சந்தித்த அந்த அழகிய நாட்களை நினைத்து பார்த்தாள்.

அனுஸ்ரீ, ராஜி, நந்தினி, சந்தியா, ராஜேஷ், சுந்தர், கமல் மற்றும் ஜெய் ஆகியோரை கொண்டது தான் அனுஸ்ரீயின் நெருங்கிய நண்பர்கள் வட்டம்.

காலேஜில் முதல் வருடத்தில் இணைந்தது முதல் இந்த அறுவர் கொண்ட குழு எப்போதும் ஒன்றாகவே இருக்கும்.

அவர்கள் இருக்கும் இடத்தில் கேலிக்கும், சிரிப்புக்கும் பஞ்சம் இருக்காது.

இப்படியாக இவர்கள் காலம் நகர்ந்து கொண்டிருந்த வேளை தான் அவர்கள் காலேஜ் இறுதி வருடத்தில் ஒரு ப்ராஜெக்ட் வேலை ஆரம்பித்தது.

அவர்கள் மொத்த வகுப்பையும் நான்கு குழுக்களாக பிரித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான வேலைகள் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதில் அனுஸ்ரீயின் குழுவுக்கு கிடைத்த வேலை ஒரு விளம்பரப் படம் தயாரிக்க வேண்டும்.

அவர்கள் குழுவில் இருந்த ஜெய்யின் தந்தையும், சுந்தரமூர்த்தியும் நண்பர்களாக இருந்ததனால் ஜெய்யின் தந்தை சுந்தரமூர்த்தியோடு பேசி அவரது கம்பெனிக்காக விளம்பரப் படம் எடுக்க அனுமதி வாங்கி கொடுத்து இருந்தார்.

சென்னையில் இருக்கும் மிகப் பெரும் தொழிலதிபரின் கம்பெனிக்காக ஒரு வாரம் வேலை செய்ய போகிறோம் என்ற ஆர்வத்துடன் வந்த அனுஸ்ரீக்கு அப்போது தெரியவில்லை தன் வாழ்க்கையை மாற்றப் போகும் மாயப் பிரதேசம் அது என்று.

எப்படி விளம்பரப் படம் எடுப்பது என்று அனுஸ்ரீ தங்கள் நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்த வேளை
“எம்.டி வர்றாங்க” என்ற குரலும்

“குட் மார்னிங் ஸார்” என்ற குரல்களும் கேட்க தொடங்கியது.

‘யாரு அந்த எம்.டி?’ அனுஸ்ரீ ஆர்வம் மேலிட மெல்ல தன் தலையை தூக்கி பார்க்க கறுப்பு நிற கோட், ஜீன்ஸ், இள நீல நிற சர்ட், அதே நீல நிறத்தில் கறுப்பு பட்டி பிடிக்கப்பட்ட டை, கண்களை மறைத்த கூலிங் கிளாஸ் என புன்னகையோடு நடந்து வந்து கொண்டிருந்தான் ரிஷி ஆகாஷ்.

அனுஸ்ரீ தன் நண்பர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கூட பதில் சொல்ல முடியாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்க அவளருகில் இருந்த ராஜி மெல்ல அவளது கையை சுரண்டி
“அடியேய்! எத்தனையோ நாள் பட்டினி கிடந்தவன் பிரியாணி பொட்டலத்தை வெறிக்க வெறிக்கப் பார்க்குற மாதிரி ஏன்டி அந்த ஆளை இப்படி பார்க்குற?” என்று கேட்க

சட்டென்று தன் பார்வையை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டவள்
“இல்லையே நான் யாரையும் பார்க்கலயே” என்று தன் தோளை குலுக்கிய வண்ணம் கூறினாள்.

அவள் காதைப் பிடித்து கொண்ட ராஜி
“என் கிட்டயே பொய் சொல்லுற! என்ன சைட்டா?” அவளை பார்த்து கண்ணடித்தவாறே கேட்கவும்

“அய்யய்யே! சும்மா ஒருத்தரை பார்க்க கூட நீ விட மாட்ட போல” என்று போலியாக அலுத்துக் கொண்டவள் தன் முகச் சிவப்பை மறைத்து கொண்டு தன் நண்பர்களோடு மீதமிருந்த வேலைகளில் மூழ்கிப் போனாள்.

அவ்வப்போது ரிஷி அவர்களை கடந்து செல்லும் போது எல்லாம் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்து கொண்டு நின்றவள் அவனிடம் தன் மனதை பறி கொடுக்க கூடும் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

அவன் தங்கள் அருகில் வந்து பேசி விட்டு செல்லும் போதெல்லாம் அவள் மனம் அவனை காரணமின்றி ரசித்து பார்க்கும்.

முதல் இரண்டு நாட்கள் அதை பற்றி பெரிதாக எதுவும் அவள் அலட்டிக் கொள்ளவில்லை.

ஏதோ ஓர் ஈர்ப்பு என்று தான் எண்ணி இருந்தாள்.

அப்போதெல்லாம் காதல் மற்றும் திருமணம் இதில் எதிலும் அவளுக்கு அவ்வளவு ஈடுபாடு இருக்கவில்லை.

ஆனால் அந்த எண்ணம் மூன்றாம் நாள் அவர்கள் அங்கு தங்கள் வேலைகளை பார்த்து கொண்டு இருக்கும் போது வெள்ளை நிறத்தில் ஒரு டாப்போடு ஹை ஹீல்ஸ் சத்தம் அந்த தளத்தையே திரும்பி பார்க்க வைக்க நடந்து வருபவளை பார்த்த பின்னர் முற்றாக மாறி போனது.

ரிஷியோடு அனுஸ்ரீயின் குழுவினர் பேசி கொண்டு நிற்கையில்
“ஹேய் ரிஷி!” என்றவாறே வந்து அவனை அணைத்துக் கொண்டவள் அவன் கன்னத்தில் தன் இதழ் பதிக்க அனுஸ்ரீயோ சற்று முக சுளிப்போடு தன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஹேய் ஏஞ்சல்!” பதிலுக்கு ரிஷியும் அவளை தன் தோளோடு அணைத்துக் கொள்ள அனுஸ்ரீயின் முகத்திலோ எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஏஞ்சலாம் ஏஞ்சல்! நல்ல குண்டு பூசணிக்காய்க்கு உறை தைத்து போட்ட மாதிரி இருக்குற இவ ஏஞ்சலா? இதற்கு முதல் ஏஞ்சலை பார்த்து இருப்பானா இவன்?” மனதிற்குள் அவர்கள் இருவரையும் திட்டுவதாக நினைத்து சற்று சத்தமாக அவள் முணுமுணுத்துக் கொள்ள

அவளருகில் நின்ற ராஜி அவளது தோளில் தன் தோளால் இடித்து
“என்ன மேடம் பொறாமையா?” என்று கேட்க அவளை முறைத்து பார்த்தவள் எதுவும் பேசாமல் நின்றாள்.

ரிஷி மற்றும் ஆத்மிகா நெருக்கமாக பேசி கொண்டு செல்வதைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ அவளது மனம் வலித்தது.

அதற்கான காரணமும் அப்போது அவளுக்கு தெரியவில்லை.

அதன் பிறகு வந்த இரண்டு நாட்களும் ரிஷி எங்கே சென்றாலும் அவளும் அவனுடன் ஒட்டி கொண்டே செல்ல அதைப் பார்த்து கொண்டிருந்த அனுஸ்ரீயோ ஒரு கட்டத்தில் தன் பொறுமை இழந்து கோபமாக தன் கையில் இருந்த பேப்பரில் கிறுக்கிக் கொண்டிருந்தாள்.

“ஹேய் அனு! என்னாச்சு?” அவளது இந்த விசித்திரமான நடவடிக்கைகளை பார்த்து பதட்டம் கொண்ட அவளது நண்பர்கள் அவளை அச்சத்துடன் சூழ்ந்து கொள்ள

அவர்கள் எல்லோரையும் பார்த்து இயல்பாக புன்னகத்தவள்
“நத்திங் கைஸ் நம்ம ப்ராஜெக்ட் ஐடியா எதுவும் வரலயா அது தான் சும்மா கிறுக்கிட்டு இருந்தேன்” என்று கூற ராஜி மாத்திரம் அவளை நம்பாமல் பார்த்து கொண்டு நின்றாள்.

“என்ன ராஜி அப்படி பார்க்குற?”

“நீ ரிஷி ஸாரை லவ் பண்ணுறியா அனு?” தன் தோழியின் நேரடிக் கேள்வியில் அதிர்ச்சியாக அவளை பார்த்தவள்

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“வாட்? லூஸா டி நீ? சம்பந்தம் இல்லாமல் ஏதேதோ பேசுற?” தன் பதட்டத்தை மறைத்தவாறே பதில் கூற

அவள் முகத்தை பிடித்து இரு புறமும் திருப்பி திருப்பி பார்த்தவள்
“நீ ஏதோ கேப்மாரித்தனம் பண்ணுறனு மட்டும் எனக்கு தெரியுது ஆனா என்னன்னு தான் தெரியல அந்த ஆளோட பியான்ஸே அவ அதை மனதில் வைத்துக்க நெக்ஸ்ட் இயர் அவங்களுக்கு என்கேஞ்மெண்ட்டாம் வீணா எதையும் மனதில் வளர்த்துக்காதே” என்று விட்டு சென்று விட அவளுக்கோ எதையோ தன்னிடம் இருந்து கதறக் கதற பிடுங்கி சென்றதைப் போன்று இருந்தது.

“அடுத்த வருடம் அவருக்கு கல்யாணமா?” அதை நினைத்து பார்க்கும் போதே அனுஸ்ரீக்கு அவளையும் அறியாமல் அவள் கண்கள் கலங்கியது.

‘ரிஷி மேல் வெறும் ஈர்ப்பு தான்னு இருந்தேன் அப்போ இது வெறும் ஈர்ப்பு இல்லையா?’ தன் மனதிற்குள் பலமுறை கேட்டு பார்த்தவளுக்கு வெகு தாமதமாகவே தன் மனம் புரிந்தது.

‘ராஜி சொன்னதற்கு அப்புறம் தான் எனக்கே புரியுது நான் அவரை லவ் பண்ணி இருக்கேன் நான் ரிஷியை காதலித்து இருக்கேன் என் முதல் காதல் ரிஷி!’ மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க அவள் புத்தியோ அவளுக்கு நிதர்சனத்தை இடித்துரைத்தது.

‘ இது தப்பு அனு அவர் வேற ஒரு பொண்ணோட கணவராகப் போறவர் அவரைப் போய்’ மானசீகமாக அவள் மனதை திட்ட அவள் புத்தி திட்ட

அதுவோ
‘ஒரு வேளை அவர் எனக்கு உண்மையாக கிடைக்க கூடுமோ?’ என்றும் அவளை எண்ணி பார்க்க தூண்டியது.

“சேச்சே! அப்படி எல்லாம் இல்லை” என்று எவ்வளவோ அவள் தன் மனதை கட்டுப்படுத்தி அதில் வளர்ந்த காதல் செடியை அகற்றி இருந்தாலும் அதில் விழுந்த காதல் எனும் விதையை அவளால் அகற்ற முடியவில்லை.

இதற்கிடையில் அவனை யாருக்கும் தெரியாமல் பல்வேறு கோணங்களில் அவனது ஆபிஸில் வைத்தும், வெளியே ஒரு கண்காட்சியில் தற்செயலாக அவனை பார்த்த போதும் புகைப்படங்களாக வேறு சேகரித்து வைத்து கொண்டாள் அனுஸ்ரீ.

யாரும் தன்னை கவனிக்கவில்லை என்று அவள் எண்ணி இருக்க ராஜி மாத்திரம் தன்னை விடாமல் கவனித்தது அவளுக்கு தெரிந்து இருக்கவில்லை.

அவன் தனக்கு கிடைக்கப்போவதில்லை என்று தெரிந்த பின் வீணாக தன் மனதில் ஆசையை வளர்க்காதவள் அவன் நினைவுகளே போதும் என்று எண்ணிக் கொண்டு தன்னை தேற்றி கொண்டாள்.

தன் முதல் காதல் மொட்டு விடாமலேயே தன் மனதோடு கருகிப் போய் விட அந்த ஏமாற்றத்தை கூட அவளால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில் தன் தாயும், தந்தையும் வேறு விவாகரத்து செய்து கொண்டது இன்னமும் அவளை மனதளவில் நொறுங்கி போகச் செய்தது.

அவை எல்லாவற்றையும் மறந்து அவனது நினைவுகளை விட்டு தூரமாகி செல்வதாக எண்ணி அவள் அவனை விட்டு விலகி வர விதியோ மீண்டும் அவனை அவள் முன்னால் கொண்டு வந்து சேர்த்து இருந்தது.

தன் கைகளுக்கு எட்டும் தூரத்தில் எல்லாம் இருந்தும் அவளால் அதை தொட்டு ரசிக்க முடியவில்லை.

பழைய நினைவுகளோடு அனுஸ்ரீ தங்கள் அறையில் இருந்து கொண்டு அவனது புகைப்படங்களை பார்த்து கொண்டிருக்க மறுபுறம் ரிஷி ஆபிஸில் தன் அறையில் இருந்து கொண்டு ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அனுஸ்ரீ தங்கள் கம்பெனிக்கு வந்திருந்த அந்த சிசிடிவி பூட்டேஜ்களைப் பார்த்து கொண்டு இருந்தான்.

அவனது கண்களோ அனுஸ்ரீயின் முகத்திலேயே லயித்து இருந்தது.

முதல் நாள் அவனை பார்த்ததுமே அவள் அவளை மறந்து அவனை பார்த்தது, அவன் எங்கு சென்றாலும் விடாமல் அவனை பார்வையாலேயே பின் தொடர்ந்தது என எல்லாவற்றையும் பார்த்து கொண்டு இருந்தவன் இதழ்களோ
“தேவி!” என்று ஆசையாக முணுமுணுத்துக் கொண்டது.

அதன் பிறகு ஆத்மிகாவை அவனருகில் பார்க்கும் போதெல்லாம் அவள் தன் முகத்தை திருப்பிக் கொள்வதைப் பார்த்து புன்னகத்து கொண்டவன் கண்களை மூடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான்.

“அப்போவே அவ்வளவு பொசஸிவ்னஸ்ஸா? இவ்வளவு தூரம் நடந்தும் எதுவும் எனக்கு தெரியல அந்தளவிற்கு அந்த நம்பிக்கை துரோகி பின்னால் மூழ்கிப் போய் இருந்து இருக்கேன் இது எல்லாம் சொன்ன நீ எதற்காக என்னை பற்றி விசாரித்ததை ஏற்க மறுக்கணும் தேவி? அதையும் சொல்லிட்டேனா நம்ம பிரச்சினையை இல்லாமல் பண்ணிடலாமே!” புன்னகையோடு அவளிடம் நேரடியாக கேட்பதாக எண்ணி அவன் பேசி கொண்டு இருந்தான்.

“நீ என்னை லவ் பண்ணது எனக்கு தெரியாமல் போச்சே தேவி!”

‘தெரிந்து இருந்தால் மட்டும் என்ன பண்ணி இருப்ப?’ அவனது மனசாட்சி அவனை பார்த்து கேலியாக கேட்க

“ஏதோ பண்ணி இருப்பேன்” என்று அதை அடக்கியவன்

“இப்போதும் உனக்கு என் மீது காதல் இருக்கு எனக்கும் உன் மீது காதல் இருக்கு ஆனா என்னால அதை உன் கிட்ட சொல்ல முடியலயே! அந்த ஒரு விஷயம் இன்னும் என் மனதை அரிச்சுகிட்டே இருக்கு எப்படி அந்த விடயத்தை விட்டு நான் வெளியே வர்றது?” யோசனையோடு திரையில் இருந்த அனுஸ்ரீயின் நிழலோடு பேசி கொண்டு இருக்க மறுபுறம் அனுஸ்ரீ தன் கண்களில் வடிந்த கண்ணீரை துடைத்து கொண்டே மும்முரமாக ஒரு காகிதத்தில் எதையோ எழுதி கொண்டு இருந்தாள்……