Mayam 20 (pre -final)

Mayam 20 (pre -final)

ரிஷி கண்களை மூடியபடி தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து இருக்க அவன் முன்னால் இருந்த கணனியில் அவனது திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வரிசையாக போய் கொண்டிருந்தது.

அதில் இருந்த ஒவ்வொரு புகைப்படங்களிலும் அவர்கள் இருவரது முகமும் ஒவ்வொரு உணர்வுகளை காட்டிய வண்ணம் இருந்தது.

ஒரு முறை பதட்டம்
ஒரு முறை சந்தோஷம்
ஒரு முறை ஆச்சரியம்
ஒரு முறை கவலை
என அந்த புகைப்படங்கள் எல்லாம் வெவ்வேறு வகையில் எடுக்கப்பட்டிருக்க அதை போலவே ரிஷியின் மனமும் ஒரு நிலையில்லாத உணர்வில் சிக்கி கொண்டிருந்தது.

தன் சந்தோஷம், கவலை, பயம் என எல்லா மன உணர்வுகள் ஒட்டுமொத்தத்தையும் அனுஸ்ரீயோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அவனுக்குள் எழுந்தாலும் ஒரு சிறு குழப்பம் அவனை முற்றிலும் தடுத்து பிடித்து வைத்திருந்தது.

ஏற்கனவே அனுஸ்ரீ பல மனக் கஷ்டங்களை தாண்டி வந்து இருக்கிறாள் இந்த நிலையில் தானும் அவளை கஷ்டப்பட செய்கிறோமே என்ற குற்ற உணர்வும், அவள் உண்மைகளை மறைத்து இருக்காவிட்டால் இந்த நிலை வந்து இருக்காதே என்ற கவலையுணர்வும் ஒன்று சேர கண்களை மூடி சிந்தனையோடு அமர்ந்திருந்தான் ரிஷி.

“மே ஐ கம் இன் ஸார்?” என்ற குரல் கேட்டு தன் கண்களை திறந்து கொண்டவன்

அறையின் வாயிலில் நின்று கொண்டிருந்த சந்துருவை பார்த்து
“ஹேய்! சந்துரு வாடா என்னடா புதுசா பர்மிஷன் எல்லாம் கேட்குற?” முயன்று வரவழைத்து கொண்ட புன்னகையோடு கேட்க

அவனை ஆராய்ச்சியாக பார்த்து கொண்டே அவனெதிரில் வந்து அமர்ந்து கொண்ட சந்துரு
“நீ பண்ணுறதும் புதுசா இருக்கே! அது தான் நானும் ட்ரை பண்றேன்” என்று கூற ரிஷியோ குழப்பமாக அவனை நிமிர்ந்து பார்த்தான்.

“நான் என்ன பண்ணேன்?” ரிஷி புரியாமல் கேட்க

“தினமும் ஆபிஸ் வர்றதுக்கு முன்னாடி எனக்கு இன்பார்ம் பண்ணுவ தானே? ஆனா இன்னைக்கு ஆபிஸ் வர்ற விஷயத்தை என் கிட்ட நீ சொல்லவே இல்லை அதுவும் கல்யாணம் நடந்து ஒரே வாரத்தில் ஆபிஸ் வந்து இருக்க அப்படி என்ன அவசர வேலை உனக்கு? கல்யாணம் நடக்க முன்னாடி என்னம்மோ பெரிசா சொன்னியே ஒரு மாதத்திற்கு உன்னை ஆபிஸ் பக்கமே பார்க்க மாட்டீங்கன்னு இப்போ என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சினையா என்ன?” பதிலுக்கு சந்துரு அவனை கூர்மையாக பார்த்து கொண்டே கேட்டான்.

“சேச்சே! அப்படி எல்லாம் இல்லைடா அந்த விஸ்வநாதன் குரூப் ஆஃப் கம்பெனிக்காக ப்ளே ஸ்கூல் டெண்டர் ஒண்ணு நமக்கு வரணும்னு வர்க் பண்ணோமே அந்த வேலை விஷயமாக தான் வந்தேன்”

“ஓஹ்! அப்படியா? அப்போ உன் முன்னாடி இருக்குற அந்த க்ரீன் கலர் பைல் எந்த டெண்டர்? விஸ்வநாதன் ஸாரோட தாத்தாவோடதா?”

“என்ன டெண்டர் கன்பர்ம் ஆகிடுச்சா?” ஆச்சரியமாக கேட்டு கொண்டே தன் முன்னால் இருந்த பைலை எடுத்து திறந்து பார்த்தான் ரிஷி.

“இது கன்பர்ம் ஆகி இரண்டு வாரம் ஆச்சு உன் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த பைல் உன் மேஜைக்கு வந்தாச்சு நானே உன் கிட்ட நேரில் பார்த்து உங்க வீட்டில் வைத்து இந்த விஷயத்தை சொன்னேன் நீயும் சந்தோஷப்பட்ட இதெல்லாம் ஞாபகம் இருக்கா?”
சந்துருவின் துளைத்து எடுக்கும் பார்வையில் தன் கையில் இருந்த பைலை மூடி வைத்தவன்

அவனை பார்த்து புன்னகத்து கொண்டே
“ஸாரி டா கல்யாண பிஸியில் இது மறந்தே போச்சு” என்று கூறவும்

அவனருகில் வந்து நின்று அவனது தோளில் கை வைத்த சந்துரு
“உண்மையை சொல்லு ரிஷி என்ன பிரச்சினை?” என்று கேட்க அவனோ பதிலேதும் சொல்லாமல் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

“சரி உனக்கு சொல்ல இஷ்டம் இல்லைனா பரவாயில்லை பட் கண்டதையும் போட்டு மனசை குழப்பிக் கொள்ளாதே! நடந்து முடிந்த விடயங்களை எல்லாம் நினைத்து தான் நீ இப்படி இருக்கேன்னா ஒண்ணு மட்டும் சொல்லுறேன் நல்லா கேட்டுக்கோ நடந்த முடிந்த விடயங்களை எல்லாம் நம்மால் மாற்ற முடியாது அதை நினைத்து இருக்குற நிதர்சனத்தை அழிக்க நினைக்காதே! இப்போ உன் கண் முன்னால் எது இருக்கோ அது மட்டும் தான் உனக்கு சொந்தம் கடந்து போனதோ இனி வரப்போறதோ இல்லை” சந்துரு என்னவோ ஆத்மிகாவை பற்றிய எண்ணங்கள் தான் ரிஷியின் மனக் குழப்பத்திற்கு காரணம் என்று பேசிக் கொண்டிருக்க ரிஷிக்கோ அந்த விடயங்கள் எல்லாம் அனுஸ்ரீயுடனான குழப்பத்தை தீர்ப்பதற்காகவே கூறியதை போல இருந்தது.

‘சந்துரு சொல்றது சரி தானே! நடந்து முடிந்த விடயங்களை பேசி இனி என்ன ஆகப்போகிறது? அனுஸ்ரீ என்னை விரும்பிய ஒரு காரணத்திற்காக கூட இதை எல்லாம் செய்து இருக்கலாம் இல்லையா? அவளது வாழ்க்கையும் அல்லவா இதோடு கலந்து இருக்கிறது?’ ரிஷியின் மனம் அவனை பார்த்து கேள்வி எழுப்ப அவனோ அதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்து கொண்டு இருந்தான்.

“ரிஷி நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் அப்புறம் உன் இஷ்டம்” அந்த அறையில் இருந்து வெளியேறி செல்லப் போன சந்துரு மீண்டும் ரிஷியின் முன்னால் வந்து நின்று

“நான் இங்கே வந்ததே உன் போனை உன் கிட்ட தர்றதுக்கு தான் நீ போனை வீட்டிலேயே வைத்துட்டு வந்துட்டேன்னு அனுஸ்ரீ எனக்கு போன் பண்ணி சொன்ன ‘நிறைய கால்ஸ் வருது அவர் கிட்ட போனை கொடுக்க முடியுமா?’ன்னு
அனு கேட்டதற்கு அப்புறம் தான் நீ ஆபிஸ் வந்ததே எனக்கு தெரியும் அது தான் உடனே உன்னை தேடி வந்தேன் இதோ இருக்கு உன் போன்” தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து அவனது போனை எடுத்து அவனது மேஜை மீது வைத்தவன் சிறிது நேரம் அவனை அமைதியாக பார்த்து விட்டு அங்கிருந்து வெளியேறி சென்றான்.

‘அனு என் போனை கொடுத்து அனுப்பி இருக்காளா?’ ஆச்சரியமாக தன் போனை எடுத்து பார்த்தவன் அதை ஆன் செய்ய அதில் இருந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகி எழுந்து நின்றான்.

“என் போட்டோ எப்படி ஸ்க்ரீன் சேவரா இருக்கு? அனுவோட போட்டோவை தானே வைத்து இருந்தேன்” அதிர்ச்சி பாதி, குழப்பம் பாதியாக தன் போனையே பார்த்து கொண்டு நின்றவன் உடனே அனுஸ்ரீயின் எண்ணிற்கு அழைப்பதற்காக அவளது எண்ணை போனில் தேட அந்த எண்கள் அங்கே இருக்கவில்லை.

மீண்டும் மீண்டும் அவன் அவளுடைய எண்ணைத் தேடி பார்க்க அது அவனுக்கு கிடைக்கவே இல்லை.

அவனது மூளையில் ஏதோ பொறி தட்ட தன் போன் முழுவதும் ஆராய்ந்து பார்த்தவனுக்கு அப்போது தான் புரிந்தது அனுஸ்ரீ பற்றி எந்த ஒரு தகவலும், ஆவணமும் அந்த போனில் இல்லை என்பது.

“இப்போ என்ன ஆச்சுன்னு எல்லாம் அழிச்சு இருக்கா அவ?” கோபத்துடன் ரிஷி தன் போனை தூக்கி போட அது நல்ல வேளை அங்கிருந்த ஸோபாவில் சென்று வீழ்ந்தது.

“கோபத்தில் நான் பேசலேனா இப்படி தான் பண்ணுறதா? என்ன நினைச்சுட்டு இருக்கா அவ மனசுல? அவளை பற்றிய விடயங்களை எல்லாம் போனில் இருந்து அழிச்சுட்டா நான் எல்லாம் மறந்துடுவேனா?” சற்று இயல்பு நிலைக்கு மாறி இருந்தவன் இப்போது தன் போனை பார்த்து விட்டு கோபத்துடன் தனக்குத்தானே கேட்டு கொண்டு தன்னறைக்குள் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கோபத்துடன் நடந்து கொண்டிருந்தவன்
“இன்னைக்கு இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குறேன்” அதே கோபத்துடன் தன் போனை எடுத்து கொண்டு அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி சென்றான்.

அரை மணிநேரத்தில் வந்து சேர வேண்டிய தங்கள் வீட்டிற்கு இருபது நிமிடங்களிலேயே வந்து சேர்ந்தவன் கோபத்துடன் உள்ளே செல்ல போக அங்கே அவனை பூட்டிய கதவே வரவேற்றது.

“எங்க போனா இவ?” கோபம் இன்னும் அதிகமாக சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டவன் தன் கடிகாரத்தை திருப்பி நேரத்தைப் பார்த்தான்.

மணி மதியம் ஒன்றை நெருங்கி கொண்டிருந்தது.

“இந்த நேரத்தில் எங்கே போய் இருப்பா?” யோசனையோடு தன்னிடம் இருந்த சாவி கொண்டு கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன்

“எப்படியும் வீட்டுக்கு வரத்தானே வேணும்” என்றெண்ணிக் கொண்டு அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தான்.

அரை மணிநேரம் கடந்தது அனுஸ்ரீ வரவில்லை.

ஒரு மணிநேரம் கடந்தது அப்போதும் அனுஸ்ரீ வரவில்லை.

இரண்டு மணிநேரம் கடந்தது.

மூன்று மணிநேரமும் கடந்தது அனுஸ்ரீ மட்டும் வந்தபாடில்லை.

அது வரை கோபத்துடன் அனுஸ்ரீ வருகைக்காக காத்து நின்றவன் மனம் ஏனோ நெருடலாக உணர ஆரம்பித்தது.

மனம் ஏனோ விபரீதமாக சிந்திக்க குழப்பத்தோடும், சிந்தனையோடும் தங்கள் அறைக்கு வந்தவன் சுற்றி பார்க்க அங்கே அனுஸ்ரீயின் பொருட்கள் எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரியே இருந்தது.

அதை பார்த்த பின்பே சற்று ஆசுவாசமாக உணர்ந்தவன் ‘அனுஸ்ரீ ஒரு வேளை அவளது பாட்டி வீட்டிற்கு சென்று இருக்கக் கூடுமோ?’ என்ற யோசனையோடு அந்த அறையில் இருந்து வெளியேறி செல்லப் போக அங்கிருந்த ஒரு மேஜை மீது இருந்த ஒரு காகிதம் அவனது கவனத்தை ஈர்த்தது.

அனுஸ்ரீ கொண்டு வந்து இருந்த அந்த ஒரு சிறு பெட்டியின் மேல் அவளது தொலைபேசியும் அதன் கீழ் அந்த காகிதத்தின் அரைவாசி பகுதி தெரியுமாறும் அது மேஜையில் வைக்கப்பட்டிருந்தது.

மனம் பலவாறாக சிந்திக்க ரிஷி கைகள் நடுங்க மெல்ல அந்த காகிதத்தை எடுத்து பிரித்து பார்த்தான்.

‘அன்புள்ள ரிஷிக்கு,

அன்புள்ளன்னு சொல்ல கூடாதோ தெரியல ஆனா நீங்க எப்போதும் எனக்கு அன்பானவர் தான்

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
சின்ன குழந்தை தன் பொம்மையை தொலைச்சுட்டு ஏங்கும் அதை பார்த்து இருக்கீங்களா? அதே மாதிரி தான் என் நிலைமையும் ஆரம்பத்தில் உங்களை தொலைச்சுட்டு தினமும் உங்களை நினைத்து ஏங்கி போய் இருந்தேன்

முதல் முதலாக மனதில் வளர்த்த ஆசையை வெளியே யாருக்கும் சொல்லாமல் உரிமையாளர் உங்க கிட்டயும் சொல்லாமல் மனதோடு மறைத்து வைத்து நான் பட்ட அந்த கஷ்டம் இன்னமும் எனக்கு மனதில் இருக்கு

என் அம்மா, அப்பாவை பார்த்து கல்யாணமே வேண்டாம்னு இருந்தேன் ஆனா உங்களை பார்த்த பிறகு மனதில் சின்னதாக ஒரு ஆசை நானும் கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமாக இருக்கலாமேனு ஒரு எண்ணம் பட் அது எல்லாம் அந்த ஒரு வாரத்திலேயே மறைந்து போச்சு எதுவும் வேண்டாம்னு விலகி போன நேரம் மறுபடியும் நீங்க வந்தீங்க மனதில் கல்யாணம் பற்றிய ஒரு அச்சம் இருந்தாலும் உங்களை கட்டிக்க சம்மதிச்சேன் உங்க மேல இருந்த காதலால்…

ரிஷப்சனில் அம்மா, அப்பாவை ஒண்ணா பார்த்த பிறகு அவ்வளவு சந்தோஷமாக உங்க கூட வாழப் போகும் வாழ்க்கையை எண்ணி ஆசையாக இருந்தேன் ஆனா அது எல்லாம் ஒரே நொடியில் காணாமல் போச்சு நான் உங்க கிட்ட உங்களை எனக்கு ஏற்கனவே தெரியும் என்கிற விஷயத்தை மறைக்க நினைக்கல சொல்ல ட்ரை பண்ணேன் ஆனா அதற்கு சரியான நேரம் கிடைக்கல எப்படியாவது
கல்யாணத்துக்கு அப்புறமாக சொல்லலாம்னு தான் நினைத்து அமைதியாக இருந்தேன்

அதேநேரம் நான் உங்களை விரும்பிய விஷயத்தை நான் மறைக்க நினைச்சது உண்மை நீங்க வேற ஒரு பொண்ணுக்கு உரிமைனு தெரிந்தும் நான் உங்களை விரும்புனேன் அது தப்புன்னு எனக்கு தெரியும் அதை சொன்னா எங்கே நீங்க என்னை தப்பாக நினைத்து விடுவீங்களோனு தான் உங்க கிட்ட நான் அதை சொல்ல நினைக்கல அது தான் என்னை இந்த விடயத்தை உங்க கிட்ட சொல்ல தயங்க வைத்ததும் கூட மற்றபடி நான் உங்க பணத்திற்காக’ அனுஸ்ரீயின் கண்ணீர் துளிகள் பட்டு அடுத்து இருந்த ஒரு சில வார்த்தைகள் மறைந்து போய் இருந்தது.

“நான் இப்படி எல்லாம் பேசினேனா?” அப்போது தான் ரிஷி தான் அன்றிரவு அவளிடம் என்ன பேசினோம் என்று யோசித்து பார்த்தான்.

“நான் அந்தளவிற்கு பேசியதால் தானே அனு என்னை அடித்தாள்?” அவளது கரம் பதிந்த தன் கன்னத்தை ஒரு தடவை தடவி விட்டு கொண்டவன் மேலும் படிக்க தொடங்கினான்.

‘நான் எந்த விடயத்தை பார்த்து பயந்து கல்யாணம் வேண்டாம்னு இருந்தேனோ அது இப்போ எனக்கு நடந்துடுச்சு ரிஷி ஒரு சிறு பிரச்சினை இப்போ நமக்கு நடுவில் பெரிதாக வந்து இருக்கு ஒருவருக்கொருவர் மனதில் கஷ்டத்தையும், குழப்பத்தையும் சுமந்த படி ஆளுக்கொரு மூலையில் இருக்குறதை விட இந்த குழப்பம் சரியாகும் வரை கொஞ்சம் தள்ளி இருக்கலாம் ஏன்னா நீங்க என்னை பார்த்து பேசவே தயங்கி நிற்குறதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கு

அதற்காக உங்களை விட்டு மொத்தமாக நான் போயிட்டேன்னு நினைக்காதீங்க ஏற்கனவே உங்களை ஒருதடவை தவற விட்டேன் இப்போ மறுபடியும் உங்களை நான் இழக்க மாட்டேன் இது தற்காலிகமான இடைவெளி தான் இந்த இடைவெளி நிச்சயமாக என்னை பற்றி உங்களுக்கு புரிய வைக்கும்னு நம்புறேன் இது சரியா? தவறா? அது கூட எனக்கு சத்தியமாக தெரியல ரிஷி

இப்போ என் மனதில் எந்த குழப்பமும் இல்லை ரிஷி உங்க மனதில் தான் நிறைய குழப்பம் இருக்கு உங்க மனதில் இருக்குற குழப்பம் அதோடு உங்க முன் கோபம் இது இரண்டும் சரியான பிறகு நானே உங்களை தேடி வருவேன் இப்போதைக்கு என் நினைவுகளை மட்டும் உங்க கிட்ட இருந்து நான் எடுத்துட்டு போறேன் பத்திரமாக இருந்துக்கோங்க ரிஷி’ அனுஸ்ரீயின் மனதான அந்த மடலை படித்து முடித்தவன் கால்கள் தள்ளாட அங்கிருந்த நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான்.

‘உன் மனதில் இருக்குற எதையும் நான் காது கொடுத்து கேட்கவே இல்லையே அனும்மா! உன் மனசு எந்தளவிற்கு வேதனை பட்டு இருந்தால் என்னை விரும்பிய படியே என்னை விட்டு விலகி போக நினைத்து இருப்ப? உன் மனதில் என் மேல இப்போவும் அன்பு நிறைந்து போய் இருக்கு ஆனா என் மனதில்! இல்லை அனு இனி இந்த கஷ்டம் இல்லை எனக்கு எதுவும் வேண்டாம் அனு நீ மட்டும் போதும் இந்த நிதர்சனம் போதும் வேற எதுவும் வேண்டாம் அனு! அனு!’ ரிஷி சத்தமிட்டு கத்த அந்த சத்தம் அவன் நின்ற அறை முழுவதும் எதிரொலித்தது.

தன் முகத்தை அழுந்த துடைத்து கொண்டு வேகமாக வீட்டை பூட்டி விட்டு வெளியேறியவன் நேராக நாயகி இல்லத்தை நோக்கி தன் காரை செலுத்தினான்.

வாசலில் காரை நிறுத்தி விட்டு
“அனு!” என்றவாறே ரிஷி வீட்டினுள் நுழைந்து கொள்ள போக

“மாமா! என்னாச்சு?” எனப் பதட்டத்துடன் அவன் முன்னால் தாமரை வந்து நின்றாள்.

“அனுவை வரச் சொல்லு தாமரை”

“என்ன மாமா சொல்றீங்க? அக்கா இங்க எங்க இருக்காங்க? உங்க வீட்டில் தானே இருப்பாங்க” தாமரை படபடப்பாக அவனை பார்த்து கூற

“அனு இங்கே வரலயா?” அதிர்ச்சியாக அவளை பார்த்து கேட்டவன்

உடனே தன் முகத்தை சரி செய்து கொண்டு
“விளையாடாதே தாமரை! அனு இங்க தான் இருப்பா எனக்கு தெரியும் நீ வழி விடு நான் பாட்டி கிட்ட கேட்குறேன்” என்றவாறே வீட்டிற்குள் செல்ல அவர்கள் வீடோ வெறிச்சோடிப் போய் இருந்தது.

“மாமா என்னாச்சு உங்களுக்கு? அக்கா எங்கே போனாங்க?”

“பா…பாட்டி எங்கே?”

“அம்மாவும், பாட்டியும் கோவிலுக்கு போய் இருக்காங்க”

“அப்…அப்போ அனு உண்மையாகவே இங்க வரலயா?”

“இல்லையே! அக்கா வழக்கமாக காலையில் போன் பண்ணி பாட்டியோடு பேசுவாங்க இன்னைக்கு அதுவும் பண்ணல அது தான் கோவிலுக்கு போயிட்டு அப்படியே அக்காவையும் பார்த்துட்டு வர்றேன்னு சொல்லி பாட்டி போனாங்க ஆனா இங்க நீங்க அக்காவை தேடி வந்து இருக்கீங்க உண்மையை சொல்லுங்க மாமா அக்காவுக்கு என்ன ஆச்சு?” தாமரை கண்களில் கண்ணீர் சூழ அவனைப் பார்த்து கேட்க அவனோ தன் தலையில் கை வைத்து கொண்டு சரிந்து அமர்ந்தான்.

“மாமா! என்னாச்சு மாமா? அக்காவுக்கு என்ன ஆச்சு சொல்லுங்க” தாமரை பதட்டத்துடன் ரிஷியைப் பார்த்து சத்தமிட்டு கேட்க

தன் முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிக்காட்டி கொள்ளாமல் அவளை நிமிர்ந்து பார்த்தவன்
“அனு…அனுவை காணோம் தாமரை” குரல் கம்ம கூறி விட்டு தன் தலையை குனிந்து கொண்டான்.

“எஎன்ன? அக்காவை காணோமா? என்…என்ன மாமா சொல்றீங்க? அக்கா எங்…எங்கே போயிட்டாங்க?”

“தெரியலயே! நான் வீட்டுக்கு மதியமே வந்துட்டேன் அவ வீட்டில் இல்லை இப்போ வந்துடுவா வந்துடுவான்னு கிட்டத்தட்ட மூணு மணி நேரத்திற்கு மேலாக அனுக்காக காத்துட்டு இருந்தேன் ஆனா அவ வரல”

“அய்யோ! அக்கா எங்கே போய் இருப்பாங்க? அவங்களுக்கு இங்க இந்த வீடு அப்புறம் தோட்டம் இதை விட்டால் வேற எங்கேயும் போக மாட்டாங்களே!”

“நீ என்ன சொன்ன தாமரை தோட்டமா?”

“ஆமா தோட்டம்…மாமா நீங்க தோட்டத்துக்கு போய் பார்த்தீங்களா?”

“இல்லையே! அனு இங்க தான் இருப்பான்னு நம்பிக்கையோடு வந்துட்டேன் இப்போவே நான் தோட்டத்துக்கு போய் பார்க்குறேன்” ரிஷி அனுஸ்ரீ தோட்டத்தில் தான் இருக்கக்கூடும் என்ற முழு நம்பிக்கையுடன் அவளை காண விரைந்து சென்றான்.

தெய்வநாயகிக்கு சொந்தமான தோட்டம் ஒட்டுமொத்தத்தையும் வலம் வந்தவன் கண்களுக்கோ தேடி வந்த எதுவும் கிட்டவில்லை.

கிட்டத்தட்ட வசந்தபுரம் கிராமம் முழுவதையும் ரிஷி சுற்றி வந்து விட்டான்.

ஆனால் அனுஸ்ரீ அங்கே எங்கேயும் இருக்கவில்லை.

பொழுது வேறு மெல்ல மெல்ல சாய ஆரம்பித்திருந்தது.

‘அனு நீ எங்கே இருக்க? ப்ளீஸ் என் கிட்ட வந்துடும்மா பழைய கதை எதுவும் எனக்கு வேண்டாம் நீ மட்டும் எனக்கு போதும் நீ தப்பே பண்ணி இருந்தாலும் எனக்கு எதுவும் தேவையில்லை நான் உன் பக்கத்தில் இருந்தால் மட்டும் போதும் அனு! எல்லாம் என் தப்பு கோபத்தில் என்னனென்னவோ எல்லாம் பண்ணி வைத்து இருக்கேன்’ தான் செய்த தவறை தாமதமாகவே உணர்ந்தவன் கண்ணீர் மல்க மனதிற்குள் அனுஸ்ரீயை பார்க்க வேண்டும் என்று மன்றாடி கொண்டு நின்றான்.

எதற்கும் மறுபடியும் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்றெண்ணிக் கொண்டவன் அங்கே செல்ல அனுஸ்ரீ அங்கே இன்னமும் வந்திருக்கவில்லை.

இறுதி நம்பிக்கையாக நாயகி இல்லத்தில் சென்று இன்னொரு தடவை பார்க்கலாம் என்று ரிஷி அங்கே செல்ல அவனது வருகைக்காக வாசலிலேயே காத்து நின்றாற் போல நின்று கொண்டிருந்தாள் தாமரை.

“அக்கா!” ஆவலுடன் தாமரை காரின் உள்ளே தேடி பார்க்க ரிஷி மாத்திரம் காரில் இருந்து இறங்கி நின்றான்.

“அக்கா தோட்டத்தில் இல்லையா மாமா?”

“……”
ரிஷியின் மௌனமே அனுஸ்ரீ எங்கேயும் இல்லை என்பதை உறுதிப்படுத்தியது.

“அய்யோ! இப்போ எங்க போய் அக்காவை தேடுறது? இன்னும் பாட்டியும், அம்மாவும் கூட வீட்டிற்கு வரல அவங்க கிட்ட எப்படி இந்த விஷயத்தை சொல்லுறது? அக்கா சந்தோஷமாக இருக்கணும்னு தானே இத்தனை தூரம் கஷ்டப்பட்டு இந்த கல்யாணம் நடக்க பாடுபட்டேன் இப்போ திடீர்னு அக்கா காணாமல் போற அளவுக்கு என்ன ஆச்சு? எத்தனை பேர் கிட்ட பேசி, எத்தனை பேர் கிட்ட தகவல் கேட்டு இந்த கல்யாணம் நடத்த பாடுபட்டேன் எல்லாம் அக்காவோட சந்தோஷத்திற்காக தானே!” தாமரை அவள் பாட்டிற்கு புலம்பிக் கொண்டு நிற்க

அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு குழப்பமாக அவளைத் திரும்பி பார்த்த ரிஷி
“என்ன இந்த கல்யாணம் நடக்க நீ கஷ்டப்பட்டியா?” அதிர்ச்சியும், குழப்பமும் ஒன்று சேர கேட்டான்.

“ஆஹ்! அது வந்து இல்லை கல்யாணத்தில் நான் வேலை பார்த்தேன் இல்லையா? அதை தான் அப்படி சொன்னேன்” தாமரை பதட்டத்துடன் திருதிருவென விழித்துக் கொண்டு கூற ரிஷியோ அவளை நம்பாமல் பார்த்தான்.

“பொய் சொல்லாதே தாமரை! நீ எதையோ மறைக்குற எனக்கு நல்லாவே தெரியுது உண்மையை சொல்லு”

“……..”

“இப்போ சொல்ல போறியா இல்லையா?” ரிஷி அதட்டலாக கேட்கவும் தூக்கி வாரிப் போட அவனை நிமிர்ந்து பார்த்தவள்

“ஆமா மாமா இந்த கல்யாணம் நடக்க நான் தான் உங்க வீட்டில் வந்து பேசினேன்” என்று கூறவும்

“என்ன?” பன்மடங்கு அதிர்ச்சியோடு அவளை பார்த்து கொண்டு நின்றான் ரிஷி…….

error: Content is protected !!