KKRI – 19

அத்தியாயம் – 19

அவளின் அசைவில் அவனின் கவனம் களைந்துவிட அவளின் பக்கம் திரும்பிய கிருஷ்ணா , “என்ன மேடம் தூக்கம் கலைந்துவிட்டதா? ஸாரிம்மா இது நம்ம ஊரு கொஞ்சம் குண்டும் குழியுமாகத்தான் இருக்கும்” என்றவனை அவள் கேள்வியாக நோக்கினாள்.

“திருமங்கலம் வந்தாச்சு மது. நீ நல்லா தூக்கத்தில் இருந்ததால் எழுப்பாமல் வந்துவிட்டேன்”  காரை வீட்டின் முன்னே நிறுத்த அவளோ அவனை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ம்ம் இறங்கு வீடு வந்து விட்டது” என்று காரிலிருந்து  அவன் இறங்க அவனோடு சேர்ந்து இவளும் இறங்கினாள். வீட்டின் முன்னே கார் நிற்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு வந்தார்.

கிருஷ்ணா அவளின் அருகே வர, “மதுமதி” என்ற அழைப்புடன் காரை நெருங்கிய தாமரை காரைவிட்டு இறங்கியவளை அணைத்துக் கொண்டார்.

“வாம்மா மது..” என்று ஆறுமுகம் அவளை பாசத்துடன் வரவேற்க, “வாங்க மது அக்கா” அவளின் கரத்தைப் பாசத்தோடு பற்றிக்கொண்டாள். வீட்டினரின் பாசம் கண்டு அவளின் மனம் நிம்மதி அடைந்தது. எல்லோரும் அவளை ஊமை என்ற போர்வையில் பார்க்க அடுத்தவர் முன்னே காட்சி பொருளாக நிற்கும் நிலையை நினைத்து பல்லைக் கடித்தாள். அவளுக்கும் இந்த பரிதாபத்திற்கும் ஏழாம் பொருத்தம்.

அவள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க,“நீ வா நம்ம வீட்டிற்குள் போய் பேசலாம்” என்று அவளை கொண்டு வீட்டிற்குள் சென்றார் ஆறுமுகம்.

“தாமரை நீ போய் சமையலை கவனி. புள்ள சாப்பிடாமல் வந்திருக்கும் போல இருக்கு” என்றார் ஆறுமுகம்.

“ம்ம் இதோ கொஞ்சநேரத்தில் சமையலை முடிக்கிறேன்” என்றவர் வேகமாக சமையலறைக்குள் நுழைந்தார்.

அப்பொழுதுதான் பின் வாசலில் இருந்து வேகமாக வந்த சங்கீதா, “அத்தை இவங்கதான் உங்க தோழியின் மகளா?” என்று விசாரிக்க, “ம்ம்” அவர் வேலையில் கவனத்தைத் திருப்பினார்.

அங்கே இருந்தவர்கள் யார் என்று புரியாமல் அவள் குழப்பத்தில் நின்றிருக்க, “வாம்மா மது வந்து உட்காரு” என்ற மாதவனின் கையிலிருந்த ரஞ்சித் அவனின் கைகளுக்கு தாவினான்.

அவள் என்ன பேசுவது என்று புரியாமல் அமைதியாக இருக்க, “அம்மா, அப்பா எல்லாம் எப்படி இருக்காங்க” என்றதும், “அவங்க எல்லோரும் நல்லா இருக்காங்க அப்பா” என்றான் கிருஷ்ணா வேகமாக.

அவள் அவனை நிமிர்ந்து பார்க்க, ‘நான் இருக்கேன். நீ ஃப்ரீயா இரு’ என்றவன் பார்வையால் சொல்ல அப்பொழுதுதான் அவள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாள். புது இடம் அங்கிருக்கும் யாரும் அவளை முன்னபின்ன பார்த்தது இல்லை.

அவளும் சைகையில் பேச நினைத்தாலும் அவர்களுக்கு அது புரியுமோ என்ற தயக்கத்தை எல்லாம் நொடி பொழுதில் மாற்றிவிட்டான்.

அவளின் அருகே நின்றிருந்த தாரிகாவிடம்,  ‘என்னிடம் பேச மாட்டாயா?’ அவள் சைகையில் கேட்க, ‘இந்த பொண்ணு என்ன கேட்குது தாரிகாகிட்ட’ சங்கீதாவோ புரியாமல் விழித்தாள்.

அவள் மட்டும் அல்ல வீட்டிலிருந்த யாருக்குமே அவள் என்ன பேசுகிறாள் என்று புரியாமல் அமர்ந்திருக்க, “என்னிடம் பேச மாட்டாயா? என்று கேட்கிறாள் தாரிகா” என்று கிருஷ்ணா கூறினான்.

ஆறுமுகம், மாதவ், சங்கீதா மூவரும் அவனை திகைப்புடன் பார்த்தனர். அவன் பொறுமையாக பேசுவான் என்ற உண்மையே அவர்களுக்கு இன்றுதான் தெரியும் என்பது போல அவனையே பார்த்தனர்.

அதுவும் அவளின் உதட்டசைவை வைத்தே அவள் பேசுவதை மர்றவர்களுக்கு அவன் தெளிவாக கூறுவதைப் பார்த்து ஆறுமுகம் கொஞ்சம் சிந்தனையில் ஆழ்ந்தார்.

அவன் சொன்ன அர்த்தம் புரிந்த மறுநொடியே மதுவின் பக்கம் திரும்பிய தாரிகா, “ஐயோ அப்படியெல்லாம் இல்ல.. நான் உங்களோட பேசுவேன். நீங்க பேசறது புரியல. அதான் உடனே பதில் சொல்லல..” என்றாள்.

‘ஓஓ..’ என்ற மதுமதி, ‘நீ என்னிடம் சகஜமாக பேசலாம் சரியா? உனக்கு புரியலன்ன கேளு நான் மறுபடி சொல்றேன்” என்று அவள் மீண்டும் சைகை செய்ய கிருஷ்ணாவோ அதை மற்றவர்களுக்கு புரியும்படி கூறினான்.

“சரி..” என்று சிரித்த தாரிகா, “வாங்க ரூமிற்கு போலாம்..” என்றவளை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றாள். அவர்கள் செல்லும் வரை அங்கே நின்ற கிருஷ்ணா அப்போது அவர்களிடமிருந்து தப்பிக்க நினைத்து வெளியே சென்றான்.

“இதுதான் நீங்க தங்கபோகும் அறை..” என்றாள் தாரிகா புன்னகையுடன்.

அந்த அறையின் வலதுபுறம் அவள் சுவற்றில் வரைந்த தேன் சிட்டுகளின் ஓவியம், அதன் அருகில் இருந்த டேபிளை அலங்கரித்தது அவள் செய்த தொட்டான்குச்சி வீணை, ஆசையாக அடம்பிடித்து வாங்கிய தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை.

இடதுபுறம் அமைந்திருந்த ஜன்னலில்  வழியாக வந்த தென்னங்காற்று உடலை தழுவி அவளின் கவனத்தை திசை திருப்பிட, அங்கிருந்த கண்ணாடி  விழுந்த அவளின் உருவம் கண்டவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

நானும் படிக்கிறேன் என்று அவள் வாங்கிய அடுக்கிய புத்தகங்கள்  இன்னொரு அலமாரியின் உள்ளே கண்ணாடிக்குள் அடைபட்டு கிடந்தது. அதெல்லாம் பார்த்த மதுவின் விழிகள் வியப்பில் விரிந்தது.

‘சின்ன வயதில் நான் செய்த பொருட்கள் எல்லாம் இங்கே எப்படி?’ ஆச்சரியத்துடன் கேட்டவளின் கைகள் அந்த பொருட்களை மெல்ல வருடியது.

அவளின் இதழசைவை உன்னிப்பாக கவனித்து, “எல்லாமே அம்மா பண்ணிய வேலைதான். உங்களோட சின்ன சின்ன விளையாட்டு பொருள் எல்லாமே நீங்க வீடு காலிபண்ணி போகும்போது விட்டுட்டு போயிட்டிங்க என்று பத்திரமாக எடுத்து வெச்சிருக்காங்க” என்றாள் சிரிப்புடன்.

அவள் ஆர்வத்துடன் அவற்றை எல்லாம் பார்வையிட, “நீங்க ரெஸ்ட் எடுங்க எனக்கு கீழே வேலை இருக்கு” என்றவள் அந்த அறையைவிட்டு வெளியேறினாள் தாரிகா. அவள் சொன்னதுபோல நன்றாக குளித்துவிட்டு ரெஸ்ட் எடுத்தாள்.

அவனின் எதிரே வந்து நின்ற தாரிகா, “அண்ணா என்னிடம் உண்மையைச் சொல்லு நீ அவங்களைக் காதலிக்கிறாயா?” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

அவளின் விழியை நேருக்கு நேர் பார்த்தவனோ, “நான் பொய் சொன்னா என்ன பண்ணுவ தாரிகா. எனக்கு அவளை பிடிக்கும் சொல்ல போன அவமேல் ஒரு ஈர்ப்பு என்னை அறியாமல் மனசுக்குள் வந்துட்டு போகுது அது காதலா என்று தெரியல” தெளிவாக இருந்த அவளையும் குழப்பிவிட்டுவிட்டான்.

“நீ என்னைக்கு உண்மையை பேசி இருக்கிற. மனதில் இருப்பது ஒன்னு நீ பேசுவது ஒன்னு” என்று சிணுங்கியவள் சோர்வுடன் அவளின் அறைக்குள் சென்று மறைந்தாள்

தங்கையின் சோர்வை கண்டவனோ, ‘நான் வெளிப்படையாக பேச முடியாத நிலையில் இருக்கேன் தாரிகா. அப்படி பேசின இரண்டு பெண்ணோட வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறிவிடும்’ என்று ருத்ராவின் வாழ்க்கையையும் மனதில் வைத்து நினைத்தவன் மற்ற வேலைகளை கவனிக்க சென்றான்.

மதுமதி வீட்டைச் சுற்றி வர அந்த வீடு அவளின் மனதை மயக்கியது.

எந்தநேரமும் கொய்யா மரத்தில் உலாவரும் அணில் கூட்டமும், மாமரத்தை கூடாக மாற்றிக்கொண்ட கிளிகள் கூட்டமும், அழகான கானம் இசைத்து இருக்கும் இடத்தையே இன்பமயமாக மாற்றிவிடும் குயில்களின் கூட்டமும்!

அந்த சூழலுக்கு நடுவே அந்த காலத்தில் தேக்குமரம் கொண்டு கட்டப்பட்ட கிராமத்து வீடு. வீட்டை சுற்றிலும் நாட்டு ரோஜா, மல்லிகை, முல்லை, ஜாதிமுல்லை, மஞ்சள் அரளி, செவ்வரளி, செம்பருத்தி, செவ்வந்தி, நித்திய கல்யாணி என்று பூக்கள் பூத்து குலுங்கும் நந்தவனம்.

முன் வாசலில் இருபுறமும் அமைந்திருக்கும் திண்ணையும், வாசலை கடந்து வீட்டின் உள்ளே நுழைந்தால் இடதுபுறம் அமைந்திருக்கும் சமையறை. அந்த அறைக்கு வலதுபுறம் நெல் மூட்டை போட்டு வைக்க தனியாக ஒரு அறை.  சமையலறைக்கு எதிரே பூஜையறை.

விருந்தாளிகள் தங்க இரண்டு அறைகள் மற்ற இரண்டு அறையில் ஒரு அறையில் ஆறுமுகம், தாமரை தங்கியிருக்கின்றனர். அதற்கு அடுத்த அறையில் மகன் மாதவ், சங்கீதா இருவரும் தங்கியிருந்தனர்  நடுஹாலில் அந்த காலத்தில் தேக்கில் உண்டான சோபாக்கள். பின் வாசலுக்கு செல்லும் வழியில் அந்த காலத்தில் முற்றத்தில் போடப்பட்டிருக்கும் இரும்பு ஊஞ்சல்.

அதன் வலதுபுறம் திரும்பி மாடியேறிச் சென்றால் மேலே மொத்தம் பத்து அறைகள். அந்த அறைக்களில் ஒன்று கிருஷ்ணாவின் படுக்கை அறை மற்றொரு அறையை அவனின் செல்ல தங்கை தாரிகா பயன்படுத்துகிறாள்.

மற்ற அறைகள் எல்லாமே சொந்தபந்தங்கள் வந்து தங்கிக்கொள்ள அமைக்கபட்டது. கிருஷ்ணாவின் அறையை கடந்து வலதுபுறம் திரும்பினால் மொட்டை மாடிக்கு செல்லும் வழி. அங்கிருந்து பார்க்க அந்த ஊரின் எழிலை காண முடியும்.

வீட்டைச்சுற்றி வந்த மதுமதி, இரவு உணவை முடித்துவிட்டு வந்து படுத்து உறங்கிவிட கிருஷ்ணா மட்டும் தூக்கமில்லாமல் நிலவை வேடிக்கை பார்த்துகொண்டு விழித்திருந்தான். அவன் மனம் இவள் உணர நாளாகுமா?!

காலையில் பொழுது விடிந்ததும், “அத்தை கோவிலுக்கு எத்தனை மணிக்கு கிளம்பனும்..” என்ற சங்கீதாவின் குரல்கேட்டு, “எட்டு மணிக்குமேல் நல்ல நேரம் என்று ஐயர் சொன்னாரு சங்கீதா. அந்த உப்பு கூடையை எடுத்து வண்டியில் வைத்துவிட்டாயா?” என்றவர் பரபரப்புடன் செயல்பட்டார் தாமரை.

கிருஷ்ணா – ருத்ராவின் திருமணத்திற்கு  கோவிலில் உப்பு மாற்றி உறுதி செய்த பின்னர் ஜவுளி எடுக்க செல்வது அவர்களின் குலவழக்கம். அதன்படி இன்று கோவிலில் உப்பு மாற்றுவதற்கு செல்கின்றனர்.

தன்னறையிலிருந்து தயாராகி வந்த மகளிடம், “இந்த  தாம்பூல தட்டை கொடுத்து காரில் வை..” என்றார் தாமரை

“சரிம்மா..” அவள் கொண்டுபோய் வைத்துவிட்டு வீட்டிற்குள் நுழைய மகளைப் பார்த்தும்,

“மதுவை எழுப்பி குளித்துவிட்டு சீக்கிரம் கோவிலுக்கு கிளம்ப சொல்லு தாரிகா. இந்தா இந்த பாவாடை தாவணியைக் கட்டிட்டு சீக்கிரம் கீழே வர சொல்லு..” அடுத்தடுத்த வேலைகளை கவனித்தார் தாமரை.

அதை வாங்கிக்கொண்டு வேகமாக மாடியேறியவள், “மதுக்கா.. மதுக்கா..” அறையின் கதவை தட்டினாள்.கதவு தட்டப்படும் ஓசைகேட்டு கண்விழித்தவள் வேகமாக எழுந்து சென்று கதவைத் திறக்க புன்னகையுடன் அவளின் எதிரே நின்றிருந்தாள் தாரிகா.

“நல்ல தூக்கமா? இந்தாங்க அம்மா காபி கொடுத்துவிட்டாங்க..” என்று அவளிடம் காபி கப்பை நீட்ட அவளும் வாங்கிக்கொண்டு, ‘குட் மார்னிங்..’ என்றாள் புன்னகையுடன்

“அண்ணாவுக்கு உப்பு மாத்த கோவிலுக்கு போறாங்க. அம்மா உங்களை சீக்கிரம் கிளம்ப சொன்னாங்க” என்றதும் சரியென தலையசைத்துவிட்டு மீண்டும் அறைக்குள் நுழைந்தாள். ‘உப்பு மாற்ற போறாங்களா? அப்படின்னா என்ன?’ என்ற யோசனையுடன் குளியலறைக்குள் நுழைந்தாள்.

அவள் வெளியே வரும் முன்னே அறைக்குள் நுழைந்த சங்கீதா, “மதுக்கா இங்கே உங்களுக்கு பாவாடை தாவணி வைத்திருக்கிறேன் சீக்கிரம் கட்டிட்டு வாங்க..” என்று சொல்ல, “தாரிகா..” என்ற அன்னையின் குரல்கேட்டது.

“ம்ம் இதோ வரேன்ம்மா..”  என்றவள் அடுத்தநொடி சிட்டென்று பறந்துவிட்டாள்.

மதுமதி குளித்துவிட்டு வந்து பார்க்கும் பொழுது அவளின் படுக்கை மீதிருந்த பாவாடை தாவணியைப் பார்த்ததும், ‘இதை எப்படி கட்டுவது?’ என்ற சிந்தனையுடன் அவள் நின்றிருந்தாள்.

அவள் அணிந்திருந்த குர்த்திஸ் அவளின் நிறத்திற்கு எடுப்பாக இருந்தாலும் கூட குடும்பத்தில் இருப்பவர்கள் அவளை தவறாக நினைப்பார்களோ என்ற எண்ணம் அவளை குழப்பியது.

அவள் இதுவரை பாவாடை தாவணி உடுத்தியதே இல்லை. மற்ற இடங்களுக்கு செல்லும் பொழுது சுடிதார், குர்த்தீஸ், ஜீன்ஸ் பேண்ட், டாப் அனைத்தும் தான் அவள் வழக்கமாக அணிவது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் சிந்தனையுடன் நின்றிருந்தாள்.

தன்னறையிலிருந்து தயாராகி கீழே வந்த கிருஷ்ணாவிடம், “மது இன்னும் கீழே வரலப்பா. அவள் என்ன பண்றான்னு பாரு..” என்ற சங்கீதா கூற, “இவ கோவிலுக்கு கிளம்பாமல் இன்னும் என்ன பண்றா..” என்ற கேள்வியுடன் மாடி எறினான்.

“மது கிளம்பிட்டியா? கோவிலுக்கு நேரமாகுது..” என்றவனின் குரல்கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, “இங்கே நின்று என்ன பண்ணிட்டு இருக்கிற” என்றவன் அறையின் வாசலில் புன்னகையுடன் சாய்ந்து நின்றிருந்தான் கிருஷ்ணா.

அவன் வெள்ளை வெட்டி மெரூன் கலர் சட்டையில் அவனின் கம்பீரமான தோற்றம் கண்டு, ‘கிருஷ்ணா இவ்வளவு அழகா?’ என்ற கேள்வி அவளின் உள்ளத்தில் எழுந்தது.

அவள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் திகைப்புடன் விழிப்பதைக் கண்டு அவளின் அருகில் வந்த கிருஷ்ணா, “மது..” தோளைப் பிடித்து உலுக்கினான்.

அதில் கவனம் களைந்து நிமிர்ந்தவளுக்கு அப்பொழுதுதான் ஞாபகம் வர, ‘இந்த துணியை நான் எப்படி போடுவது? எனக்கு இதை கட்ட தெரியாது..’ என்று தாரிகா கொடுத்த உடையை அவனிடம் காட்டினாள்.

அவள் புரிந்துதான் பேசுகிறாளா என்ற சந்தேகத்துடன் அவன் அவளையே பார்க்க, ‘இது எனக்கு கட்ட தெரியாது.. ப்ளீஸ் இதுக்கு ஒரு ஐடியா சொல்லு..’ என்றாள் அவள் பாவமாக.

அதை யாரிடம் என்ன கேட்பது என்று தெரியாமல் அவள் கேட்டுவிட, ‘உனக்கு இதை கட்ட தெரியாதா?’ என்றவனின் பார்வை அவளை மீது மையலுடன் படிய வெக்கத்தில் கன்னமிரண்டும் சிவக்க மறுப்பாக தலையசைத்தாள் மது.

“நான் போய் தாரிகாவை அனுப்பி வைக்கிறேன்..” என்றவன் அதற்கு மேலும் அங்கே நிற்காமல் அறையைவிட்டு வெளியே சென்றுவிட்டான்.

அவன் மாடியிலிருந்து இறங்க, “கிருஷ்ணா மது எங்கே..” தாமரை அவனிடம் கேட்க, “பாவாடை தாவணி கட்ட தெரியாமல் நின்னுட்டு இருக்கிறா தாரிகாவை அனுப்பி வைங்க..” வாசலுக்கு சென்றுவிட்டான்

“நல்ல பொண்ணு..” என்ற தாமரை, “தாரிகா நீ போய் மதுவை அழைச்சிட்டு சீக்கிரம் வாம்மா..” என்று மகளை மாடிக்கு அனுப்பிவிட்டு திரும்பினார்.

“அம்மா இன்னும் ஏதாவது எடுத்து வைக்க வேண்டுமா?” என்ற கேள்வியுடன் தாயின் அருகில் சென்றான் மாதவ்.

“என்னிடம் முதலிலேயே சொல்லியிருந்தா நானே உங்களுக்கு கட்டி விட்டுருப்பேன் இல்லக்கா..” என்றவளின் குரல்கேட்டு திரும்பிய மது அவளை முறைத்தாள்.

அவளின் பார்வையின் பொருள் உணர்ந்து, “ஸாரி..” என்றவள் அவளுக்கு பாவாடை தாவணியைக் கட்டிவிட்டு அவளின் கூந்தலை பின்னி மல்லிகை பூவை வைத்துவிட்டு கண்ணாடியில் அவளின் முகம் பார்த்தாள் தாரிகா.

“நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க அக்கா..” மதுவை அழைத்துகொண்டு கீழே சென்று, “அம்மா மதுவைப் பாருங்க. சூப்பராக இருக்காங்க..” என்றவளின் குரல்கேட்டு கிருஷ்ணா திரும்பிப் பார்த்தான்.

மைதீட்டிய விழிகளும், இடையோடு கதை பேசும் கூந்தலில் மல்லிகை பூச்சரமும், ஆரஞ்சு நிறத்தில் பாவடையும், வெள்ளை பச்சை நிற தாவணியில் காதுகளில் ஜிமிக்கி அசைந்தாட, கழுத்தில் ஆரம் அவளின் அழகிற்கு அழகு சேர்த்தது.

அவன் திகைப்புடன் நின்றிருக்க, “என் ராஜாத்தி” அவளுக்கு திஷ்டி களித்த தாமரை, “வா நம்ம கோவிலுக்கு போலாம்..” என்று அவளை அழைத்துக்கொண்டு காரில் ஏறினார்.

ஆறுமுகம், தாமரை, மது, தாரிகா, கிருஷ்ணா ஒரு காரிலும், மாதவ், சங்கீதா, ரஞ்சித் மற்ற உறவினர்கள் சிலர் மற்றொரு காரில் ஏறி கோவிலுக்கு சென்றனர்.

கிருஷ்ணா காரை சீரான வேகத்தில் செலுத்த வெளியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே வந்தாள் மது. அவன் கரங்கள் சீரான வேகத்தில் சென்றாலும் அவனின் கவனம் அவளின் மீதே நிலைத்தது. அவளின் மீதிருந்து பார்வையைத் திருப்ப முடியாமல் தவித்தான்.

“என்ன அழகு எத்தனை அழகு.. கோடிமலர் கொட்டிய அழகு.. இன்று எந்தன் கை சேர்ந்ததே..” என்று பாடலை பாடிக் கொண்டிருந்தவன் காரை கோவிலின் முன்னே நிறுத்தினான்.