KKRI – 20

KKRI – 20

அத்தியாயம் – 2௦

அவர்கள் காரில் சென்று கோவிலின் முன்னே நிறுத்த அவர்களுக்காக காத்திருந்த ராஜதுரை, சம்பூரணம் மற்றும் அவர்களின் உறவினருடன் காரிலிருந்து இறங்கி நின்றனர்.

இரு குடும்பத்தினரும் பேசிய வண்ணம் கோவிலுக்குள் நுழைந்திட ருத்ராவின் பார்வை முழுவதும் கிருஷ்ணாவின் மீது நிலைத்தது.

அவனைப் பார்வையால் அளவிட்ட அவளின் மனமோ, ‘இவரை ஏன் பிடிக்காமல் போனது?’ என்ற சந்தேகத்துடன் கோவிலுக்குள் நுழைந்தாள். பெரியவர்கள் எல்லோரும் முன்னாடி சென்றுவிட மதுமதி மட்டும் கோவிலைச் சுற்றி பார்வையைச் சுழற்றினாள்.

அந்த தூண்களில் இருக்கும் சிற்பங்கள் அவளின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துவிட அதை மெல்ல மெல்ல போட்டோ எடுத்துக்கொண்டே நடக்க வீடியோ காலில் வந்தான் ராகவ்.

அவனது அழைப்பைக் கண்டதும், ‘ஹாய் ராகவ் எப்படி இருக்கிற’ என்று கேட்க, “உனக்கு பாவாடை தாவணி சூப்பர். உன்னை பாவாடை தாவணியில் பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிற. ஆமா மாப்பிள்ளை இன்னுமா உன்னை பார்க்காமல் இருக்காரு” என்று வேண்டுமென்றே அவளிடம் வம்பு வளர்த்தான் ராகவ்.

அவள் சிரித்தபடியே நின்றிருக்க, “இப்போ மட்டும் கிருஷ்ணா பக்கத்தில் இல்ல. அவன் மட்டும் உன்னைப் பார்த்தான் அப்படியே உன்னிடம் சரண்டர்தான்..” என்று கிண்டலடித்தான்.

அவன் கிருஷ்ணாவின் பெயரை எடுக்கவும் நினைவு வந்தவளாக, ‘நீ மாப்பிள்ளை யாருன்னு பார்க்கிறாயா?’ அவள் சைகையில் கேட்க, “அவரைத்தான் நான் முதலில் பார்க்கணும்” என்றவன் வேகமாக கூறினான்.

‘ஒரு நிமிஷம் இரு..’ என்று கோவில் முழுவதும் தன்னுடைய பார்வையைச் சுழற்றினாள். இறைவனின் சந்நிதானம் முன்னே கண்மூடி அவன் தனியாக நிற்பதைக் கவனித்தவள், ‘நீ போனை கட் பண்ணு.. நான் போட்டோ அனுப்பறேன்..’ என்றவள் அவனின் அனுமதி இன்றி போனை வைத்துவிட்டாள்.

அவள் நின்ற இடத்திலிருந்தே கிருஷ்ணா போட்டோ பிடித்து ராகவிற்கு அனுப்பிட மறுநொடியே அவனிடமிருந்து போன் வந்தது.

“ஏய் என்ன நடக்குது அங்கே. அடப்பாவி ஊருக்கு போயிட்டு வரன்னு சொல்லிட்டு போனவனுக்கு அங்கே கல்யாண ஏற்பாடு நடக்குது அவன் என்னிடம் ஒரு வார்த்தைக் கூட சொல்லல. உனக்கு மட்டும் வெத்திலை பாக்கு வெச்சு அலைச்சிருக்கான்..” என்று கோபத்தில் துள்ளினான்.

‘நீ எல்லாம் தெரிஞ்சிகிட்டே என்னை வேணும்னே வம்பிக்கு இழுக்கிற இது சரியில்ல ராகவ்..’ என்று அவனை மிரட்டினாள் மது.

“மது உன்னிடம் சொல்ல மறந்துட்டேன். உன்னைத்தான் வெளிநாடு அனுப்ப நம்ம கம்பெனி முடிவு பண்ணிருக்கு. இங்கே எல்லா வேலையும் முடிந்து பாஸ்போர்ட் விசா எல்லாமே கைக்கு வந்துவிட்டது. உங்க அம்மாகிட்ட கொடுத்துட்டேன்..” என்றவன் சொல்ல சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு,

‘அம்மா அப்பா இருவரையும் ஊருக்கு கிளம்ப ஏற்பாடுகளைப் பார்க்க சொல்லு ராகவ். கிருஷ்ணாவின் திருமணம் முடிந்ததும் ஊருக்கு வந்துவிடுவேன்..’ என்று அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

அவள் சைகையில் பேசிக்கொண்டிருப்பத்தைத் தூரத்திலிருந்து கவனித்த கிருஷ்ணா, ‘யாரிடம் பேசிட்டு இருக்கிறா?’ என்ற கேள்வியுடன் அவளை நோக்கி வந்தான்.

அதே நேரத்தில் அவன் தன்னோடு பேசினால் அவனிடம் சொல்லி ஏதாவது முடிவு எடுக்கலாம் என்று அவனைத் தேடி வந்தாள் ருத்ரா. அவளுக்கு தெரியும் இந்த திருமணம் நடக்காமல் இருந்தால் இருவரின் வாழ்க்கையும் நல்லாவே இருக்குமென்று!

ருத்ரா அவனின் எதிரே வர, அவனோ அவளை கண்டுகொள்ளாமல் தன்போக்கில் செல்வதைக் கவனித்தவளுக்கு கோபம் அதிகமாகவே, ‘இவனிடம் பேச வந்தேன் பாரு’ என்று தலையிலடித்தபடியே அவள் வேறொரு வழியில் சென்றுவிட்டாள்.

அவன் அருகில் வருவதைக் கவனித்த மது, ‘ராகவ் தான் பேசறான். நீங்க பேசிட்டு இருங்க நான் கோவிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறேன்’ என்றவள் சிட்டென்று பறந்துவிட்டாள்.

அவளிடமிருந்து போனை வாங்கியதும், “நீயெல்லாம் ஒரு நண்பனா? துரோகி என்னிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நானும் மதுகூட கிளம்பி வந்திருப்பேன் இல்ல..” என்று அவனிடம் சண்டைக்கு வந்தான்.

“ராகவ் இது எல்லாம் என் விருப்பம் இல்லாமல் நடக்குது. பிளீஸ் என்னைக் கொஞ்சம் புரிஞ்சிக்கோடா..” என்றவனின் முகத்தில் மாப்பிள்ளை களை இல்லாததைக் கவனித்தான் ராகவ்

“என்ன கிருஷ்ணா சொல்ற” கொஞ்சம் அதிர்ச்சியுடன் கேட்டான்

“எனக்கு இந்த திருமணத்தில் சுத்தமாக விருப்பம் இல்ல..” என்றவனின் முகத்தை ஆழ்ந்து நோக்கிய ராகவ், “மது எவ்வளவு அழகாக இருக்கிறா. அவளை பார்த்தும் உன்மனதில்  சின்ன சலனம் வந்துவிட்டதோ? என்ற நொடியே அவன் கேட்ட கேள்வியில் அதிர்ந்து நின்றான் கிருஷ்ணா.

அவனின் அதிர்ந்த முகமே அவனை ராகவிற்கு அடையாளம் காட்டிட, “அவளுக்கு வாய் பேச வராது என்ற காரணத்திற்காகத்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் சொன்னீயா?” என்றவன் எய்த அம்பு குறி தப்பாமல் அவனின் இதயத்தில் பாய்ந்தது.

ராகவ் வேண்டும் என்று அவனை அப்படி கேட்க நினைக்கவில்லை. ஆனால் மதுவை அந்த கோலத்தில் பார்க்க நினைத்தவன் அவனையும் மீறி அந்த கேள்வியை கிருஷ்ணாவிடம் கேட்டுவிட்டான்.

ஆனால் திரையில் தெரிந்தவனின் முகம் பார்த்து அவனின் மனம் கலக்கத்தில் ஆழ்ந்தது. கிருஷ்ணாவின் விழிகளோ சிவந்திருப்பது கண்டு, “என்னடா என்மேல் கோபமா?” என்று சாதாரணமாகவே கேட்டான்.

“என்னோட காதல் அனுதாபத்தினால் வந்த காதல் என்று அவள் நினைத்துவிட்டால்..” இந்த முறை கிருஷ்ணா கேட்ட கேள்வியில், “வாட்..”  என்ற அதிர்ச்சியுடன் திகைத்தவண்ணம் எழுந்து நின்றான் ராகவ்.

“ஆமா எனக்கு மதுவை ரொம்ப பிடிக்கும். அடுத்தவங்க அனுதாபப்பார்வையை ஏற்க மறுக்கும் மது என் உண்மையான காதலை புரிஞ்சிக்குவாளா?” என்றதும் “டேய் அப்போ உங்க வீட்டில் முதலில் பேசுடா” என்றதும் மறுப்பாக தலையசைத்தான் கிருஷ்ணா

“அவளுக்கு வாய் பேச வராதுன்னு அவளை நான் ஒதுக்குவதாக நினைச்சிட்ட இல்ல. அவளை காதலித்துவிட்டு இன்னொரு பொண்ணோட கழுத்தில் நான் தாலிகட்ட மாட்டேன். என்னால் முடிந்தால் கல்யாணத்தை நிறுத்துவேன்” என்றவன் சிலநொடி தாமதித்தான்

“இல்லன்னா” என்று ராகவ் எடுத்துகொடுக்க, “எப்படியும்கல்யாணத்தை நிறுத்திவிடுவேன்” என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு அவன் வைக்க நினைக்க, “அண்ணா உன்னை அம்மா கூப்பிட்டாங்க..” என்ற தாரிகாவின் குரல்கேட்டது.

“நீ போ தாரிகா நான் வரேன்..” என்றவன் தொடர்ந்து, “பாய் ராகவ்..” என்று போனை வைத்தான்

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று அறியாத மது கோவிலில் சாமியைக் கும்பிட்டுவிட்டு திரும்பிட எதிரே நின்ற ருத்ராவைப் பார்த்தும், ‘கிருஷ்ணாவை கட்டிக்க போகிற பொண்ணு இவங்கதானோ..’ என்ற கேள்வியுடன் அவளையே இமைக்காமல் பார்த்தாள்.

‘ஹாய் நான் மதுமதி..’ அவள் சைகையில் செய்ய அவளைக் கவனித்தவளின் பார்வையில் பரிதாபம் வந்து ஒட்டிக்கொள்ள, “ஐயோ பாவம் நீ ஊமையா?” அவளின் பரிதாபமான பேச்சு மதுவிற்கு பிடிக்காமல் போகவே அவளைவிட்டு விலகி நடந்தாள்.

அந்த கம்பீரமான நடை அவளுக்கு ஏதோ செய்தி சொல்ல, “இந்த பொண்ணு கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறா” ஆனால் ருத்ரா அவளை வெகுவாக ரசித்தாள்.

‘இந்த சிடுமூஞ்சி கிருஷ்ணாவிற்கு ஜோடியா?’ என்று கற்பனையில் தன்னுடைய தேரை ஓட்டிவிட்டு வந்தவள், ‘அவனோட கோபத்திற்கும் இவளோட கோபத்திற்கும் தான் சரிவரும். நமக்கு என்ன வந்தது’ என்று நினைத்தாள்.

சாமி சந்நிதானம் முன்னே கையில் உப்பு கூடையுடன் நின்றவர்களை புரியாத பார்வை பார்த்த மது, ‘உப்பு எதற்கு..’ என்றவள் கூடையைக் காட்டி சங்கீதாவிடம் விளக்கம் கேட்க, “இது நம்ம குலவழக்கம். உப்பு மாற்றி உறுதி செய்துவிட்டால் நிச்சயதார்த்தம் முடிந்தது என்று அர்த்தம்.

இருவீட்டினரும் சேர்ந்து ஜவுளி மற்றும் நகை எடுக்க போயிட்டு தாலி செய்ய சொல்லிட்டு வருவாங்க..” என்று தனக்கு தெரிந்த விளக்கத்தை அவள் கூற வியப்புடன் கேட்டுக்கொண்டிருந்தாள் மது.

பெரியவர்கள் தங்களுடன் கொண்டு வந்த உப்பு கூடையை இறைவனின் சந்நிதானத்தில் வைத்துவிட்டு பூஜை முடித்ததும் சாமியின் பெயரில் அர்ச்சனையை முடித்துவிட்டு கோவில் மண்டபம் வந்து மாப்பிள்ளை வீட்டினர் ஒரு புறமும், பெண் வீட்டார் ஒரு மறுபுறமும் அமர்ந்தனர்.

மது அமர்ந்து என்ன நடக்கிறது என்பதை தெளிவாக வீடியோ எடுக்க தொடங்கிட கிருஷ்ணாவின் பார்வை அவளை தொடர, “என்னை இன்னும் திரும்பிப் பார்க்கல..” ருத்ராவின் பார்வையில் கனல் தெரித்தது.

காலியான கூடையில் இருவீட்டினரும் ஒரு வெற்றிலை பாக்கை வைத்து அதில் மூன்று படி உப்பை அள்ளி போட்டனர். பெண் வீட்டார் பையன் வீட்டினர் கூடையிலும், பையன் வீட்டார் பெண் வீட்டினர் கூடையிலும் போட்டனர்.

அதன்பிறகு இரண்டு வீட்டினரும் அந்த உப்பை மூன்று கை அள்ளி மாற்றி மாற்றி போட்டு கலக்க மது குழப்பத்துடன் விழிப்பது கண்டு, ‘குழந்தை மாதிரியே முழிக்கிறா பாரு’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

இருவீட்டினரும் இணைந்து ஜவுளி எடுக்க செல்ல மதுவும் அவர்களோடு வந்தாள். ஆறுமுகம் – தாமரை இருவரும் மருமகளை நடுவே அமரவைத்து, “ருத்ரா உனக்கு பிடித்த புடவையை எடும்மா..” என்றனர்.

அவள் புடவை எடுக்க மது மட்டும் சுற்றியிருந்த அனைவரையும் வேடிக்கைப் பார்த்தபடியே கொஞ்சம் நகர்ந்து செல்வதை கவனித்த கிருஷ்ணா, ‘இவ இப்போ எங்கே போறா?’ கேள்வியுடன் அவளைப் பின் தொடர்ந்தான்.

அங்கிருந்த யாரும் கவனிக்காத நேரத்தில் மெல்ல நழுவிய மது நேராக கீழே சென்று அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைந்தவளோ ஒரு பிரசண்ட் செலக்ட் பண்ணி வாங்கிவிட்டு வெளியே வந்தாள்.

“இது இப்போ ரொம்ப முக்கியமா?” என்று சீறியவனை கண்டுகொள்ளாமல் நடந்தவளின் கைபிடித்து நிறுத்திய கிருஷ்ணாவை நேருக்கு நேர் பார்த்தாள்.

‘ஆமா நீங்க எல்லோரும் உங்களோட வேலையைப் பார்க்கிறீங்க. நானும் என்னோட வேலையைப் பார்க்கிறேன். உன்னோட கல்யாணத்திற்கு பிரசண்ட் வாங்க வந்தேன்..’ என்று அசராமல் பதில் சொன்னவள்,

‘என்னை பின்தொடர்ந்து வந்து நிற்கும் இந்த கிருஷ்ணாவிற்கு குடும்பம் முக்கியம் இல்லையா? நான்தான் முக்கியமா?’ கேள்வியாக புருவம் உயர்த்தியது கண்டதும்,

“நீ என்னைபற்றி என்ன நினைக்கிறன்னு எனக்கு தெரியாது. எனக்கு நீதான் ரொம்ப முக்கியம் வா போலாம்..” என்றவனின் கையிலிருந்து மெல்ல தன் கையை விலக்கிய மது, ‘இதை மட்டும் ருத்ரா கேட்டா அவ்வளவுதான்’ என்று சொல்லிவிட்டு அவள் நகர்ந்துவிட்டாள்.

“எனக்கு யாரைப்பற்றியும் கவலை இல்ல மது. கிருஷ்ணா ஒரு முடிவெடுத்தா அதில் ஜெய்க்காமல் விடமாட்டேன்..” என்று சத்தமாக கூறியவனை நிமிர்ந்து பார்த்தவள் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அவர்கள் இருவரும் மீண்டும் ஜவுளிகடைக்குள் நுழைய, “உனக்கு என்ன வேண்டும் என்றாலும் எடுத்துக்கோ..” என்று அவளின் காதோரம் கூறியவன் அவளுக்கு புடவை எடுக்க உதவியாக அருகில் நின்றிருந்தான்.

அதை கவனித்த மது, ‘கிருஷ்ணா உனக்கு என்ன பைத்தியமா? கல்யாண பொண்ணு நான் இல்ல. நீ போய் ருத்ராவுக்கு ஹெல்ப் பண்ணு..’ என்று அவனை அங்கிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தாள். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவனில்லை.

“சோ வாட். அவளுக்கு செலக்ட் பண்ணத்தான் குடும்பமே வந்திருக்கு..” என்று உதட்டைப் பிதுக்கிவிட்டு, “சார் அந்த சந்தன நிற புடவையை எடுங்க..” என்று சொல்லிகொண்டிருந்தான்.

‘இந்த அம்மா பேச்சைகேட்டு இங்கே வந்து தான் நான் செய்த முதல் தப்பு. இவனிடம் சொன்னா இவன் காதில் வாங்காமல் இருக்கான்..’ என்று மனதிற்குள் அவனை வருத்ததேடுத்துகொண்டே புடவையை எடுக்காமல் எங்கோ வேடிக்கைப் பார்த்தபடி நின்றாள்.

“ஏய் அங்கே என்ன வேடிக்கை. ம்ம் சீக்கிரம் புடவை செலக்ட் பண்ணு..” என்று அவளின் உயிரை வாங்கினான் கிருஷ்ணா. ஏனோ அவனைப் பார்க்க பார்க்க அவளுக்கு அப்படியே பத்திக்கொண்டு வந்தது. தாங்கள் இருக்கும் இடத்தை மனதில் வைத்து அமைதியாக நின்றாள்.

அதற்குள் இரண்டு புடவையுடன் அவனின் அருகே வந்த ருத்ரா, “இந்த இரண்டு புடவையில் உங்களுக்கு எது ஓகே என்று அம்மா கேட்டுட்டு வர சொன்னாங்க” என்றாள் மதுவின் மீது பார்வையைப் பதித்தபடி.

“எனக்கு இரண்டுமே பிடிக்கல” என்று புடவையைப் பார்க்காமல் கூறிய கிருஷ்ணா, “மது உனக்கு இந்த புடவை ரொம்ப அழகாக இருக்கும்” என்று சொல்ல அவளோ கிருஷ்ணாவின் அருகே நின்ற ருத்ராவைப் பார்த்துவிட்டு, ‘இவன் என்ன பைத்தியம் மாதிரி பண்றான்’ என்று நினைத்தாள்.

“உங்ககிட்ட ஒரு நிமிடம் பேசணும்..” மெல்லிய குரலில் கூறியவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணாவோ, “என்னன்னு இங்கேயே சொல்லு..” என்றான் அவன் வேண்டா வெறுப்பாக. அவளின் பார்வை தன்மீது படிவத்தை உணர்ந்த மது அங்கிருந்த ஒரு சேலையை எடுத்துகொண்டு பில்போடும் இடத்தை நோக்கிச் சென்றாள்.

“நீங்க ஏன் அவள் பின்னாடியே சுத்திறீங்க? அவளுக்கு புடவை எடுக்க தெரியாதோ? இல்ல நீங்க எடுத்து கொடுத்தால் தான் கட்டுவாளா?”என்று ஏளனமாக கேட்டு உதட்டை வளைத்தாள் ருத்ரா.

அடுத்தநிமிடமே கோபத்துடன் நிமிர்ந்த கிருஷ்ணா, “இங்கே பாரு அவளுக்கு வாய்பேச வரல அதான் அவளுக்கு நான் ஹெல்ப் பண்ணினேன்” என்றான்

“ஓ அனுதாபமா?” என்றாள் ஏளனமாக.

“அவளுக்கு அனுதாபம் பிடிக்காது. அவமுன்னாடி அப்படி நடந்துக்காதே. நீ இருக்கிற திசைபக்கம் கூட திரும்ப மாட்டா” என்று மதுவின் குணம்பற்றிக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டான். அதன்பிறகு வந்த நாட்களில் கிருஷ்ணா மதுவுடன் இயல்பாக பேசினாலும் அது ருத்ராவின் கண்களை உறுத்தியது.

அன்றைய நாளுக்குப் பிறகு கிருஷ்ணாவின் முகத்தில் ஒரு தெளிவு இருந்தது. அது மட்டும் இன்றி அவளோடு செலவிடும் நேரத்தில் அவனின் குணங்கள் இயல்பாக வெளிபடுவதை கவனித்தாள் ருத்ரா. அவள் மதுவிடம் பேச முயற்சிக்க அவளோ பேச விருப்பம் இல்லை என்பதை அவளின் ஒவ்வொரு செயலிலும் ருத்ராவிற்கு தெளிவாக உணர்த்தினாள்.

இவர்கள் இருவரும் இப்படியிருக்க இங்கிருந்த வண்ணம் ஊருக்கு அம்மா, அப்பாவிடம் பேசி அவர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்லும் வேலையைக் கவனித்தாள். அண்ணாவுக்கு போன் செய்து அங்கேயும் ஏற்பாடுகளை செய்ய சொன்னாள்.

நாட்கள் வேகமெடுக்க திருமணம் நாளை என்ற நிலையில் வந்தது.

error: Content is protected !!