UUP–EPI 24

அத்தியாயம் 24

பாராதைரோய்ட் ஹார்மோன்(parathyroid hormone) நமது ரத்தத்தில் கால்சியம் அளவை ரெகுலேட் செய்கிறது. நமது எலும்பின் நலத்தைக் காக்கும் ஹார்மோன் தான் இது.

 

இன்று

சற்று நேரம் பேரமைதி அந்த அறையில். சண்மு தன் மனபாரத்தை இறக்கி வைக்க, அந்த பாரம் அப்படியே கதிரின் மனதில் ஏறி அமர்ந்துக் கொண்டது. தன் நெஞ்சில் சாய்ந்திருந்தவளின் முதுகை மெல்ல அவன் கரங்கள் வருடியபடியே இருந்தன. அவனின் அமைதி இவளை என்னவோ செய்ய, மெல்ல நிமிர்ந்து கதிரின் முகத்தைப் பார்த்தாள் சண்மு.

கண்கள் சிவந்துப் போய் கண்ணீர் கரை கட்டி இருக்க, முகமெல்லாம் சிவந்துப் போய் கிடந்தது. தாவி எழுந்தவள் அவன் முகத்தைத் தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டாள். அவன் செய்த மாதிரியே இப்பொழுது கதிரின் முதுகை வருடிக் கொடுப்பது அவள் முறையானது.

“ஒன்னும் இல்லடா கதிரு! ஐம் ஓகே நவ்! நான் எல்லாத்தையும் மறந்துட்டு உன் கூட சந்தோஷமா தான்டா இருக்கேன். ப்ளிஸ்டா, முகத்த இப்படி வச்சிக்காதே, ப்ளீஸ்!” என கெஞ்சவே ஆரம்பித்துவிட்டாள் சண்மு.

“பெருசா என்னவோ இருக்கும்னு தோணுச்சு! ஆனா இப்படின்னு நான் நினைக்கவே இல்லை! நீ கடந்து வந்த பாதைய நினைச்சா பகீர்னு இருக்குடி! என்னால தாங்கிக்கவே முடியலடி சம்மு!” குரல் கரகரத்திருந்தது அவனுக்கு.

“டேய், நீ போலிஸ்காரன்டா! தைரியமா என்னைத் தேத்துவன்னு பார்த்தா, நான் உன்னைத் தேத்தற மாதிரில ஆகிப்போச்சு!” இன்னும் அவள் நெஞ்சில் புதைந்தவனின் கண்ணீர் துளிகள் அவள் மேனியை நனைத்தது. இவள் முகத்தை நிமிர்த்த முயல, இன்னும் இன்னும் அவளுள் புதைந்தான் அவளின் கதிர். அப்படியே கொஞ்ச நேரம் விட்டுவிட்டாள் சண்மு. தானாகவே சமாளித்துக் கொண்டவன்,

“நான் போலிஸ்காரந்தான்! மத்தவங்களுக்கு ஒரு அநியாயம்னா அத தட்டி கேட்க்கறது என் கடைமையில மட்டும் தான் சேர்த்தி! ஆனா என் உயிருக்கு ஒரு அநியாயம்னா அது என்னை உருக்குலைச்சிரும்டி சம்மு! நீ என் உயிர்டி! இந்த மூனு வருஷமும் நீ தனியா பட்ட பாட்ட என்னால ஏத்துக்கவே முடியலடி! உடம்பெல்லாம் தகிக்குது! நான் பட்ட துன்பம் எல்லாம் உன்னோடத கம்பேர் பண்ணா வெறும் தூசிடி சம்மு!”

“நான் எங்கடா தனியா இருந்தேன்? என் கூட எப்பவுமே என் நண்பன் கதிர் இருந்தான்டா! நான் கஸ்டத்துல கண் கலங்கறப்போ, பயத்துல நடுங்கறப்போ, முடியாம போய் படுத்துருக்கறப்போ எல்லாம் என் நண்பன் என் கூடவே இருந்தான்டா!’ என தன் நெஞ்சைத் தொட்டுக் காட்டினாள் சண்மு.

“ஓ சம்மு!” வாரி அணைத்துக் கொண்டான் தன் மனைவியை! சாய்வு நாற்காலியில் வைத்து ஆட்டுவது போல தன் மடியில் அவளை அமர வைத்து, தோளை சுற்றிக் கைப்போட்டு மெல்ல ஆட்டியப்படியே,

“இந்த மூனு வருஷமும் உன்னையேதான்டி நானும் நினைச்சிக்கிட்டே இருந்தேன். கல்யாணம் ஆனவள மனசால நினைக்கறது கூட பாவம்னு மனசாட்சி குத்திக் கிழிச்சாலும் என்னால உன்னை மறக்கவே முடியலடி சம்மு! என் சம்மு அவ புருஷன் கூட இப்படி இருப்பா, இப்படி சிரிப்பா, இப்படி சமைச்சுப் போடுவா, இப்படி கொஞ்சுவான்னு கண்ண மூடுனால அந்த பிம்பங்கள் தான் என்னைக் கொல்லாம கொன்னு புதைச்சுச்சு! தண்ணிய போட்டு எல்லாத்தையும் மறந்துடனும்னு தோணும்! ஆனா உன்ன மறந்துட்டு எனக்கென்ன வாழ்க்கை வேண்டிக் கிடக்குன்னு அந்தத் தப்ப ஒரு தடவைக்கு மேல நான் செஞ்சதேயில்லைடி சம்மு! வேலை வேலைன்னு அதுலயே தான் என்னை புகுத்திக்கிட்டேன். காதல் தோல்விக்கு அப்புறமும் வாழ்க்கை இருக்குன்னு எவனோ உளறனத கேட்டு, முயன்று பார்த்தேன்! மத்தவங்களுக்கு செட் ஆகற மாதிரி அது எனக்கு செட் ஆகலடி! தவா மனச புண்படுத்தனது தான் மிச்சம். இத்தனை வருஷம் நான் இங்க செத்துக்கிட்டு இருந்தாலும், என் சம்முவாச்சும் அங்க சந்தோஷமா இருக்காளேன்னு ஒரு திருப்தி இருந்துச்சுடி. ஆனா அது இல்லவே இல்லைன்னு நெனைக்கறப்போ அப்படியே உடம்பெல்லாம் முறுக்குதுடி சம்மு! ரத்தக்காயம் பார்க்கனும் மாதிரி நாடி நரம்பெல்லாம் துடிக்குதுடி!”

கோபத்தில் நடுங்கிய அவன் உடம்பை இறுக அணைத்துக் கொண்டாள் சண்மு. அவன் கழுத்து வளைவில் அழுத்தமான முத்தம் ஒன்றை வைத்தவள்,

“வேணான்டா கதிரு! விட்டுரு! நீ கோபப்படுவ, வருத்தப்படுவன்னு தான் இதை நான் சொல்லாமலே இருந்தேன்! உள்ளுக்குள்ள மூடி மூடி வைக்க அது என்னையே அழுத்த ஆரம்பிச்சிருச்சுருடா! உன் கிட்ட சொல்லி ஆறுதல் தேட மனசு நச்சரிக்க ஆரம்பிச்சிருச்சுடா! இப்ப நான் சொன்னதே தப்புன்னு என்னை ஃபீல் பண்ண வைக்காத ப்ளீஸ்! ப்ளிஸ்டா கதிரு” என மெல்லிய குரலில் கெஞ்ச ஆரம்பித்தாள்.

எப்பொழுதும் அவனை மிரட்டியே பழக்கப்பட்டவள், கெஞ்சுவது கதிருக்கே பிடிக்கவில்லை. ஆனாலும் கோபம் மட்டுப்பட மறுத்தது.

“நீ என்ன பெரிய தியாகியாடீ? தங்களோட சுயநலத்துக்காக உன்னை இந்த அளவுக்குப் பாடாய் படுத்திருக்கானுங்க அந்த மூனு பேரும், புத்தர் மாதிரி மன்னிச்சு விட சொல்லறியா? ரேப் அட்டேம்ப்ட் நடந்தப்போ நீ எப்படி துடிச்சுப் போயிருப்ப! ஏடாகூடமா எங்காவது விழுந்து வச்சி முடமா ஆகிருந்தா என்னாகிருக்கும்? இல்ல அந்த நாய்ங்களுக்கு ஆசை வந்து நெஜமாலுமே ரேப் நடந்திருந்தா உன் நிலமை என்ன? யோசிச்சியாடீ? இத பண்ண அந்த அரசியல்வியாதிய நான் மன்னிக்கனும்? கண்ணன் தனக்கு கிடைக்கனும்னு உன்னைக் கல்யாணம் செஞ்சு வார்த்தையால கொன்னுப் போட்டானே அந்த ப்ரதாப், வெக்ஸ் ஆகி நீ தற்கொலை வரைக்கும் போயிருந்தா என்னடி ஆகியிருக்கும்? ரெண்டு வாரம் அப்படியே விட்டுட்டு போனானே, நீ செத்து கித்து போயிருந்தா அந்த நாயி உன் உசுர திருப்பிக் குடுக்குமா? வெளி உலகம் தெரியாத, நாலு வார்த்தை இங்கிலீசுல கூட பேச தெரியாதவ ஆஸ்திரேலியல போய் என்ன பாடு படுவான்னு தெரிஞ்சும் தன் சுயநலத்துக்காக உன்னை அடகு வச்சானே உன் தொம்பி, அவன ராசா செல்லம்னு கொஞ்சி மன்னிச்சு விட சொல்லறியா? நீயே குழந்தைடி அப்போ, ஆனாலும் கண்ணா கண்ணான்னு அந்த நாய இடுப்புல தூக்கி வச்சிக்கிட்டே சுத்துவியே, கைய சுட்டுக்கிட்டு பால் கலந்து குடுப்பியே, ஊட்டி ஊட்டி வளத்தயேடி அவன, கடைசில மனசாட்சியே இல்லாம உன்னை இப்படி மாட்டி விட்டவன மன்னிச்சு விடனுமா?  உன் எக்ஸ் மாமனார் கிரிமினல்னா, அந்தப் ப்ரதாப்பும் கண்ணாவும் பச்சைத் துரோகிங்கடி!”

“தெரியும்டா தெரியும்! துரோகம் தான், அவன் பண்ணது பச்சைத் துரோகம் தான்! ஆனாலும் அவன் என் தம்பிடா! என் ரத்தம்! சீப்போடா நாயேன்னு என்னால ஒதுக்க முடிஞ்சதே தவிர அவன தண்டிக்க முடியலடா கதிரு! உசுர வச்சிருக்கேன்டா அவன் மேல! மகன் கொலகாரனா இருந்தா கூட, அவனுக்கு ஒன்னுன்னா தாயுள்ளம் தாங்காதுடா கதிரு! அவன் என்னை எப்படி நினைச்சாலும், நான் அவன என் மகனாத்தான்டா பார்க்கறேன்! மனசெல்லாம் ரணமா போய் கிடக்குது! ஆனாலும் ஐயோ நம்ம தம்பின்னு ஒரு பக்கம் துடியா துடிக்குதுடா கதிரு! ஒத்தைப்புள்ளயா வளந்த உன்னால இத புரிஞ்சுக்க முடியாதுடா!” என அழுதவளை கோபித்துக் கொள்ளவும் முடியவில்லை அவனால்!

அவள் அழுவதை தாங்கிக் கொள்ளமுடியவில்லை கதிரால். அணைத்து, வருடி, கெஞ்சி, கொஞ்சி மெல்ல அவள் அழுகையை நிறுத்தினான்.

“போதும்டி பேசனது! அவனுங்கள ஒன்னும் செய்யக் கூடாது? அவ்வளவுதானே? சரி விடு! இனிமே இதப்பத்தி பேச வேணா! நீ இனிமே அழவே கூடாது! மீனாட்சி மக சண்முகப்ரியா அழுதது எல்லாம் போதும்! என் பொண்டாட்டி சம்மு இனி அழக்கூடாது! அழ விடவும் மாட்டான் இந்த கதிரு! இப்போ தூங்கு”

“தூக்கம் வரமாட்டுதே கதிரு” அழுகை விசும்பலாக மாறி இருந்தது.

“நான் தட்டிக் குடுக்கறேன்! தூங்கு, களைச்சி வேற போயிருப்படி!”

“புல்லாங்குழல் வாசிக்கறியா கதிரு?”

‘இப்போ நான் இருக்கற மூட்டுல நான் அடிச்ச தாங்க மாட்ட, நாலு மாசம் தூங்க மாட்டத்தான் வாசிக்கனும்! அந்தப் பாட்ட குழல்ல வாசிச்சா கன்றாவியால இருக்கும்’ என மனதிலேயே முனகியவன், அவளை அணைத்தப்படியே எட்டிப் புல்லாங்குழலை எடுத்தான்.

தன்னவளை நெஞ்சிலே போட்டுக் கொண்டு,

“தாலாட்டு மாறி போனதே

என் கண்ணில் தூக்கம் போனதே

 

பெண் பூவே வந்தாடு

என் தோளில் கண் மூடு

என் சொந்தம் நீ”

எனும் பாட்டை குழலில் அழகாய் இசைத்தான் கதிர்வேலன். அந்த மெல்லிசையில் அவனைக் கட்டிக் கொண்டே கன்னத்தில் கண்ணீர் கறையுடன் தூங்கிப் போனாள் சண்முகப்ரியா.

விவாகரத்து ஆன எல்லா பெண்களுக்கும் கதிரைப் போல் ஒருத்தன் கிடைப்பதில்லை. என்ன நிலைமையால் அந்தப் பெண் மணவாழ்க்கையை வேண்டாம் என விட்டு விட்டு வருகிறாளோ என இந்த சமூகம் சிந்தித்துப் பார்ப்பது இல்லை. அட்ஜஸ்ட் செய்து போயிருக்கலாம் என பெண்ணை மட்டுமே சாடும் சமூகம் நம்முடையது. பழி சொல், அவமானம், இன்னொரு ஆணின் சீண்டல், வாழாவெட்டி எனும் பட்டம் என நொந்துப் போய் இருப்பவர்களை நாமும் நம் பங்குக்கு நோகடிக்க வேண்டாமே!

 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு..

“சம்மு!”

என கத்தியபடியே வந்தான் கதிர்.

“அக்கா நர்சரிலே இருக்காங்க” என கடையில் இருந்த பெண் சொல்ல, அவளைத் தேடி நர்சரிக்குப் போனான் கதிர்.

கடை ஓரளவு பிரபலம் அடைந்திருக்க, பொக்கே டெலிவரிக்கு ஆள் வைத்திருந்தான் கதிர். அதோடு இந்த ஏரியாவிலேயே ட்ராண்ஸ்பருக்கும் எழுதி போட்டிருந்தான். கிடைக்குமா என கூட தெரியவில்லை. கிடைத்தாலும் கண்டிப்பாக பல மாதங்கள் ஆகக்கூடும். இன்னும் சில வாரங்களில் மெடிக்கல் லீவ் முடியும் நிலையில் இருக்க, இருவரும் எப்படி சென்னைக்கும் ஜெயங்கொண்டானுக்கும் உறவு பாலம் போடுவது என யோசித்து முடிவெடுத்திருந்தனர். மாதத்துக்கு ஒரு வாரம் சண்மு சென்னையில் இருக்க, இங்கே பரமு சின்ராசுவுடன் எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வது என்றும், பின் கிடைக்கும் லீவ் நாளில் எல்லாம் கதிர் இங்கே வருவது எனவும் முடிவானது.

வாங்கி வந்திருந்த உணவு பார்சலைத் தங்கள் மேசையில் வைத்து விட்டு, புல்லைப் பிடுங்கிக் கொண்டிருந்த மனைவியை அப்படியே அலேக்காக தூக்கிக் கொண்டான் கதிர்.

“டேய் விடுடா” என அவள் கத்த, காதே கேட்காத மாதிரி அவளைத் தூக்கிப் போய் நாற்காலியில் அமர்ந்தினான் கதிர். அங்கே வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி அடிக்கடி இப்படி நடக்கும் இவர்களின் கூத்தில் சிரிப்புடன் தன் வேலையைத் தொடர்ந்தார்.

“சாப்பிடலாம் பேபி”

“வாய்ல கூப்டா நான் வரமாட்டனா? இப்படித்தான் பொசுக்கு பொசுக்குன்னு தூக்குவியா?”

அவள் கத்துவதை காதில் வாங்கிக் கொள்ளாமலே, கையை கழுவி விட்டு வாங்கி வந்திருந்த மட்டன் பிரியாணியைத் திறந்தான் கதிர். கையில் அள்ளி அவள் வாயில் திணித்தவன்,

“சாப்பிடு! காலையில இருந்து பார்த்த வேலைக்கு முக்காவாசி எனர்ஜி போயிருக்கும்” என சொன்னான்.

“நான் பார்க்கற தோட்ட வேலைக்கு எனர்ஜி போகலைடா! நீ தெனம் என் கிட்ட பார்க்கற வேலைக்குத் தான் எனர்ஜி ஃபுல்லா டோட்டலா காலி ஆகிடுது”

“ஏய் ஏன் அப்படி பேசற! அதெல்லாம் பேசக்கூடாது! தப்பு தப்பு! ராத்திரிக்கு உப்புமா போட்டு எனர்ஜி ஏத்தி விடற நீ இதப்பத்திலாம் பேசவே கூடாது! தப்பு தப்பு” என அவளை வம்பிழுத்தப்படியே உணவை ஊட்டி முடித்தான் கதிர்.

புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தாள் சண்மு.

“என்னடி புதுசா பார்க்கற மாதிரி பார்க்கற?”

“எனக்கு நீ புதுசாதான்டா தெரியற கதிரு! அப்போலாம் நண்பன்றத தாண்டி உன்னை வேற மாதிரி பார்த்தது இல்ல. இப்போலாம் புருஷன்றத தாண்டி உன்னை வேற மாதிரி பார்க்க முடியல! கூட இருந்தாலும் இல்லைனாலும் உன் நினைவுகளாலேயே என்னை நிமிர்ந்து நிக்க வச்ச என் நண்பன சிறப்பிக்கத்தான் இந்த இடத்துக்குக் கூட கடம்பூவனம்னு பேர் வச்சேன். கடம்ப பூக்கள் கதிர்வேலனுக்கு(முருகன்) உரித்தானது. அதே மாதிரி இந்த பூவனம், கடம்பூவனம் என் நண்பன் கதிர்வேலனுக்கு உரித்தானது. அவனுக்கு என்னோட காணிக்கை. என் நன்றிய காட்டத்தான் இந்தப் பேருடா!”

“எனக்கு உன் நன்றி வேணான்டி பொண்டாட்டி!”

“தெரியும்டா! நன்றி சொல்லி இனி உன்னைத் தள்ளி வைப்பனா! இங்க திரும்பி வந்தப்போ கூட, நீ காட்டுன நெருக்கம், கோபம், அக்கறை, அணைப்பு எல்லாம் எனக்குள்ள ஒரு பயத்தத்தான்டா குடுத்துச்சு! கல்யாணம் கூட எங்கம்மா சீண்டி விட்டதால தான் பண்ணிக்கிட்டேன்! இல்லைனா சத்தியமா காதல், கல்யாணம் மேல எனக்கு இருந்த வெறுப்புக்கு இன்னொரு கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கவே மாட்டேன்! என்னைப் பத்தி, நான் அங்க வாழ்ந்த வாழ்க்கையைப் பத்தி எதுவும் கேக்காம, நான் எந்தப் தப்பும் பண்ணியிருக்க மாட்டேன்னு என் பின்னாலயே சுத்துன பாரு அப்போத்தான் உன் மேல முதல் காதல் வித்து என் மனசுல விழுந்துச்சுடா கதிரு! கல்யாணத்துக்கு அப்புறம் என் கண்ணப் பார்த்து நடந்துகிட்ட பாரு, அப்படியே டோட்டல் அவுட் நானு! அந்த புல்லாங்குழல் முத்தம்..ஹ்ம்ம் எப்படி சொல்ல! மாறிக்கிட்டே வந்த என் மனசுக்கு நீ குடுத்த முத்தம் என் மொத்தத்தையும் ஆட்டி வச்சிருச்சு! ஆனாலும் ரொம்ப தயக்கம் காதல ஒத்துக்க! நண்பன் மட்டும்தான் அப்படின்னு பிலிம் காட்டிட்டு காதல்னு எப்படி உன் முன்ன நிக்கன்னு ஒரே படபடப்புடா! கங்கை கொண்ட சோழபுரம் போனப்போ உன்னோட அக்கறை, தொடுகை, பார்வை எல்லாம் என்னை என்னமோ பண்ண ஆரம்பிச்சிருச்சு!  இனிமேலும் நண்பன்னு நெனைச்சு என்னை ஏமாத்திட்டு உன்னையும் ஏமாத்த முடியாதுன்னு தோணிருச்சு! அதான் அன்னைக்கு நைட் நீ சாப்பிடுன்னு சொன்ன ஒத்தை வார்த்தையில என் காதல் கரை கடந்துருச்சு! நான் பட்ட துன்பத்துக்கு எல்லாம் அந்த கடவுள் குடுத்த வரம்டா நீ! என்னோட கதிர்! மை கதிர். ஐ லவ் யூ சோ மச்டா கதிர்.”

பிரியாணி வாயோடு அவன் கன்னத்தை அழுந்த முத்தமிட்டாள் சண்மு. ஆசையாக அம்முத்தத்தை வாங்கிக் கொண்டான் கதிர். தங்கள் முதல் உறவின் பிறகு கூட இவனே தான் நெருக்கத்தைக் காட்டினானே தவிர அவள் கொடுத்ததை மட்டும் தான் ஏற்றுக் கொண்டாள். காதலை திருப்பி கொடுக்க தயங்கியவள் கொஞ்சம் கொஞ்சமாக இவன் அன்பில் கனிய தொடங்கி இருந்தாள். எத்தனை நாள் கனவிது! அது நனவாகும் போது உடலே சிலிர்த்து அடங்கியது அவனுக்கு! இனி தன் வாழ்வில் வசந்தம் தான் என கொண்டாடி மகிழ்ந்தது அவன் மனம். அவள் பட்ட துன்பத்தை எல்லாம் தனதன்பால் துடைத்து எறிய முற்பட்டிருந்தவனுக்கு, அவளது மாற்றம் மன நிறைவைக் கொடுத்தது.

இருவரும் சாப்பிட்டு முடித்ததும்,

“ஹா சம்மு! ஒரு விஷயம் சொல்ல வந்து மறந்துட்டேன்டி” என ஆரம்பித்தான் கதிர்.

“என்னடா?”

“உன்னோட எக்ஸ் மாமனார் ஹாஸ்பிட்டல்ல பேச்சு மூச்சு இல்லாம கெடக்காறாம்! ஈவ்னிங் கிளம்பி நில்லு ஒரு எட்டுப் போய் பார்த்துட்டு வந்துடலாம்”

“என்னாச்சு அந்தாளுக்கு?”

“தேர்தல் வந்துச்சுல்ல ரீசண்ட்டா, அப்போ வாக்கு கேட்டுப் போனப்போ ஏதோ கலவரமாம்! கூட்டத்தோட கூட்டமா புகுந்து எவனோ கொலைக்காட்டு காட்டிட்டானாம்! ஜன நெருக்கடியில மனுஷனுக்கு யார் செஞ்சதுன்னு, ஆள் அடையாளம் கூட தெரியல. பேசக்கூட முடியலையாம்! பேபேபே தானாம். பாவம்டி!”

“உன் வேலையாடா இது?”

“ஏன்டி ஏன்! ஊருல எவனாச்சும் அடிப்பட்டு படுத்துக் கிடந்தாலே அது என் வேலைதானா? என்னைப் போலிசுன்னு நெனைச்சியா இல்ல பொருக்கின்னு நெனைச்சியா? இல்ல தெரியாம தான் கேக்கறேன்! அந்தாளு பண்ற தில்லுமுள்ளு அரசியலுக்கு எவ்வளோ எதிரி இருக்காங்களோ! அதுல எவன் மூக்க உடைச்சானோ, முட்டிய உடைச்சானோ, முதுகை உடைச்சானோ! என் கிட்ட வந்து நீயா நீயானா நான் என்னடி சொல்ல?” புசுபுசுவென மூச்சு வாங்கிக் கொண்டே அவன் கத்த,

“இல்லைனா இல்லன்னு சொல்லு! எதுக்கு கரடி மாதிரி மூச்சு விடற! அது சரி, நான் சமைச்சி வச்சிருக்க, ஏன் பிரியாணி வாங்கிட்டு வந்த? அதுவும் மட்டன் பிரியாணி?” என கேள்வி கேட்டாள் மனையாள்.

“என்னடா வம்பா போச்சு! நேரங்கெட்ட நேரத்துல உன்னை பிரியாணி சமைக்க சொல்லி டார்ச்சர் பண்ணாத்தான்மா தப்பு! காசு குடுத்து கடையில வாங்கிட்டு வந்து ஊட்டி விட்டா தப்பில்ல! என்னமோ அந்தாளு படுத்துக் கிடக்கறத கொண்டாட நான் பிரியாணி வாங்கிட்டு வந்த மாதிரி கேள்வி கேக்கற! மட்டன் பீஸ்லாம் உனக்கு ஊட்டிட்டு வெறும் குஸ்காவ மட்டும் சாப்ட என்னைப் பார்த்து கேக்கறா பாருய்யா டீடேய்லு!” என கோபித்துக் கொண்டான் கதிர்.

“ஒரே கல்லுல மூனு மாங்கா! அப்பன பார்க்க குப்பன் வருவான். குப்பன வாலு புடிச்சுக்கிட்டு சுப்பனும் வருவான்.” என மெல்லிய குரலில் முனகிக் கொண்டே வெளியே கிளம்பிவிட்டான் கதிர்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு சென்னையில் வேலை விஷயமாக மீட்டிங் என சண்முவிடம் சொல்லியவன் அவளையும் கிளப்பிக் கூட்டிப் போனான். அன்று அவள் தங்கி இருந்த ஹோட்டலுக்கே அழைத்து சென்றான்.

“மறுபடி ஏன் இந்த ஹோட்டல்? அதுவும் நாம கல்யாணம் செஞ்சிகிட்ட அதே ரூம்?”

“அந்த காரணத்த வேலைய முடிச்சுட்டு வந்து சொல்லறேன் சம்மு குட்டி! நல்லா சோறி போக ஐ மீன் அழுக்குப் போக தேய்ச்சி குளிச்சிட்டு, மாமன் வாங்கி தந்த மல்லிப்பூவ தலை நிறைய வச்சிக்கிட்டு காத்திருப்பியாம்! நான் ஓடி வந்துருவனாம்!”

“யாரடா சொறி போக குளிக்க சொன்ன? உன்னை!!!” என அடிக்க வந்தவளை கட்டிப்பிடித்து இதழணைத்தவன்,

“வர வரைக்கும் வேய்ட் பண்ணுடி என் சம்மு! அதுக்குள்ள ஏன் மாமன உசுப்பேத்துற! ப்ளை…ஹ்ம்ம் மீட்டிங்குக்கு நேரம் ஆச்சுடி” என இன்னும் பல அவசர முத்தங்கள் வைத்து விட்டு ஓடியே போனான் கதிர்.

அவசரமாக கிளம்பியவன் நேராக வந்து நின்றது சென்னை ஏர்போர்ட்டில் தான். கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவன்,

“இன்னும் பத்து நிமிஷத்துல வந்துரும் ப்ளைட்” என முணுமுணுத்தான்.

அவன் காத்திருப்பு வீண் போகாமல் பரிட்சையமான அந்த முகம் கண்ணில் பட்டது. அதன் கையைப் பற்றியவாறு வந்த இன்னொரு முகமும். கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவர்கள் அருகே நெருங்கி கண்ணனின் தோளில் கையைப் போட்டான் கதிர்.

அதிர்ந்துப் போய் அவனைப் பார்த்த கண்ணன்,

“கதிரண்ணா!” என திக்கினான்.

“மாமா! கதிர் மாமா!” என அவனைத் திருத்தினான் கதிர். அவன் பக்கத்தில் நின்றிருந்த ப்ரதாப்பைக் காட்டி,

“இவன் தான் எனக்கு தம்பி முறையாகப்பட்டவனா?” என கேள்வியையும் கேட்டு வைத்தான்.

தடுமாற்றத்துடன்,

“இது ப்ரதாப்!” என அறிமுகப்படுத்தினான் கண்ணன்.

கண்ணனின் நடுக்கத்திலும் கதிரண்ணா எனும் விளிப்பிலும் இவன் யாரென்று புரிந்துக் கொண்ட ப்ரதாப் கண்ணனின் மற்றொரு கரத்தை அழுத்திக் கொடுத்தான்.

“வாங்க போகலாம்” என கதிர் அழைக்க,

“எங்களுக்கு வீட்டுல இருந்து கார் வருது” என ப்ரதாப் மறுத்தான்.

“டேய் கண்ணா! எடுத்து சொல்லுடா அவன் கிட்ட! தொரை கூப்டா வர மாட்டாரோ? இப்போ என் கூட கிளம்பி வரல, என் பாக்கேட்ல இருக்கற கஞ்சாவ உன் பாக்கேட்டுல சொருகிட்டு நானே கைது பண்ணுவேன் ரெண்டு பேரையும். அப்புறம் ஆஸ்திரேலியா போகவும் முடியாது, ஆட்டம் போடவும் முடியாது! எப்படி வசதி?”

“வரோம், மாமா!” என சொன்ன கண்ணன் கண்ணாலேயே ப்ரதாப்பை உடன் வரும்படி கெஞ்சினான்.

இவனை எதிர்த்து நின்றாலும், தங்கள் மீது தப்பில்லை என நிரூபிக்க பல வருடங்கள் எடுக்கக் கூடும் என உணர்ந்திருந்த ப்ரதாப் கதிருடன் செல்ல இணங்கினான். என்னவோ வம்பு வர போகிறது என புரிந்தாலும், அவன் ஒற்றை ஆள் தாங்கள் இருவர் எனும் தைரியத்தில் கூட சென்றான்.

மச்சானையும் அவன் ஆளையும் கதிர் அழைத்துப் போனது அவனது போலிஸ் குவாட்டரசுக்குத்தான்.

“வாங்க, வாங்க” என உள்ளே அழைத்தவன் கதவை ஓங்கி சாத்தினான். பல மாதம் புலங்காமல் இருந்த இருட்டு வீட்டைப் பார்த்த கண்ணனுக்கு கதி கலங்கியது.

“மாமா! அக்கா எல்லாத்தையும் சொல்லிட்டான்னு நெனைக்கறேன்! எனக்கு உங்க கோபம் பு..”புரியுது என சொல்லி முடிக்கும் முன் விழுந்த அறையில் பொறி கலங்கி கடைவாயில் ரத்தம் வந்தது கண்ணனுக்கு.

“ஏய் விடுடா அவன!” என இடையில் வந்த ப்ரதாப் ஒரு மூலையில் விழுந்து கிடந்தான்.

“பேசிட்டு இருக்கோம்ல! அதுக்குள்ள என்ன இடையில சவுண்டு! நாங்க முடிக்கற வரைக்கும், அங்கயே உக்காந்துருக்கனும்” என ஒற்றை விரல் நீட்டி ப்ரதாப்பை எச்சரித்தவன்,

“உன் மேல கைய வச்சேன்னு உங்கக்காவுக்கு தெரிஞ்சா என் கூட பேசவே மாட்டாடா! அவ்வளவு பாசத்த உன் மேல கொட்டி வச்சிருக்கா! நீங்க எக்கேடும் கெட்டுப் போங்கடா! என் சம்முவ ஏண்டா பாடாப்படுத்துனீங்க? அவளுக்கு துரோகம் பண்ண உன்னைக் கொன்னாக் கூட என் வெறி அடங்காதுடா! என் தேவதைடா அவ! கூட்டிப் போய் நாறு நாறா கிழிச்சி அனுப்பிட்டிங்கல்ல! உன்ன எப்படிடா சும்மா விடறது? மனசு ஆறவே இல்லடா கண்ணா! நாங்க ரெண்டு பேரும் உன்னை எப்படிலாம் தாங்கிருப்போம்! நாய்க்கு கூட நன்றி இருக்கு. நீ நன்றி கெட்ட பேய்டா” என விளாசித் தள்ளிவிட்டான்.

நடுவில் நுழைந்த ப்ரதாப்புக்கும் செமத்தியாக கிடைத்தது.

“இந்த வாய்தானே என் சம்முவ வதைச்சது!” என கேட்டு கேட்டு பல் அத்தனையையும் உடைத்துக் கையில் கொடுத்தான் கதிர்.

கதிர் கொடுத்த அடிகளை சத்தமே செய்யாமல் வாங்கிக் கொண்டான் கண்ணன். ப்ரதாப்புக்குத்தான் துடித்தது.

கோபம் கொஞ்சமாக மட்டுப்பட,

“டாக்சி சொல்லிருக்கேன்! ஹாஸ்பிட்டலுக்கு போய் ஆக்சிடன்னு சொல்லி மருந்து போட்டுகிட்டு போய் வேலைய பாருங்க. இனி என் சம்மு இருக்கற பக்கம் தலையைக் காட்டீனீங்கா, இன்னும் காட்டு காட்டுன்னு காட்டிருவேன்” என மிரட்டினான் கதிர்.

“எங்க மேலயே கைய வச்சிட்டல்ல! உன்னை என்ன செய்யறேன் பாருடா” என எகிறிய ப்ரதாப்பின் கையைப் பிடித்து அழுத்திய கண்ணன் வேண்டாம் என தலையை ஆட்டினான்.

“மாமா! என் மேல தான் முழி தப்பும். அதனால தான் நீங்க கொடுத்த ஒவ்வொரு அடியையும் அதுக்குப் பிராயச்சித்தமா வாங்கிக்கிட்டேன்! என்னை அடிச்சதுல உங்க கோபம் அடங்கிருந்தா எனக்கு சந்தோஷம்தான். எவ்வளவு வேணும்னாலும் அடிங்க நான் தாங்கிக்குவேன்! என் அக்காவ மட்டும் என் கிட்ட பேச சொல்லுங்க மாமா” என கண் கலங்க கெஞ்சினான் கண்ணன்.

சின்னதில் இருந்து கூடவே திரிந்தவனாயிற்றே! கோபம் இருந்தாலும் ஒரு பக்கம் இன்னும் கொஞ்சமாய் பாசம் ஒட்டிக் கொண்டு கிடந்தது கதிருக்கு. சட்டென திரும்பி நின்றுக் கொண்டவன்,

“அதெல்லாம் காலத்தின் கையில இருக்கு! என் சம்முவோட சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அவ மனசு மாறுனா பார்க்கலாம்” என விறைப்பாய் சொன்னவன் நொண்டிய படி வந்த ஒருவனையும் கையை இன்னொரு கையால் தாங்கியபடி வந்த மற்றவனையும் டாக்சி ஏற்றி விட்டு ஹோட்டலுக்கு விரைந்தான். ரத்தக்காயம் பார்த்ததில் மனபாரம் லேசாய் இறங்கி இருந்தது.

அவனுக்காக காபியும் பலகாரமும் ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தாள் சண்மு. உள்ளே வந்தவன், சோபாவில் அமர்ந்திருந்தவளை பாய்ந்துக் கட்டிக் கொண்டான்.

“டேய் மெதுவாடா! எருமை மாதிரி வந்து மேல விழற” என கடிந்துக் கொண்டவள்,

“போன வேலை முடிஞ்சதா?” என கேட்டாள்.

“பர்பெக்டா முடிஞ்சது! இன்னும் வச்சி செஞ்சிருக்கனும்! ஆனா பாழா போன பாசம் தடுக்குதுடி!”

“என்ன பாசம்? என்ன தடுக்குது?”

“அது வந்து.. என் போலிஸ் நண்பன் ஒருத்தன் லஞ்சம் வாங்கிட்டான்னு கேஸ் ஓடுது! காட்டிக் குடுக்க நண்பன்னு பாசம் தடுக்குது! ஆனாலும் தப்பு தப்புதானே”

“அதெல்லாம் லஞ்சம் வாங்கி பொழப்பு நடத்தற நீ சொல்லக் கூடாது”

“அடியே! என் கை சுத்தம்டி! லஞ்சம்னு எழுதி வச்சா கூட எனக்குப் படிக்கத் தெரியாது! அக்மார்க் சுத்தமான போலிஸ்காரன்”

“பைத்தியம் எப்படி தான் ஒரு பைத்தியம்னு ஒத்துக்காதோ அதே மாதிரி லஞ்சத்தியமும் தான் லஞ்சம் வாங்கறேன்னு ஒத்துக்காது”

“என்னாது? லஞ்சத்தியமா? அப்படி ஒரு வார்த்தை இருக்காடி?”

“சொறித்தியம் இருக்கறப்போ லஞ்சத்தியம் இருக்கக் கூடாதா போலிஸ்கார்?”

இருவருக்கும் தங்களது சிறு வயது சேட்டைகள் நினைவு வர, சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“சரி சொல்லு! எதுக்கு இதே ரூம எடுத்த?”

“இந்த ரூம்ல தான் நமக்கு மேரேஜ் ஆச்சு! அதனால நம்மோட முதல் மாலைய இங்க கொண்டாடியே ஆகனும் சம்மு! அதுக்குத்தான் உன்னையும் அழைச்சிட்டு வந்தேன்” என சொல்லி சரசமாய் அவளைப் பார்த்தான் கதிர்.

“ஏன், இத்தனை நாள் கொண்டாடனது எல்லாம் என்னவாம்?”

“அதெல்லாம் லுல்லலாய்டி! இங்க, இப்போ நாம கொண்டாட போறது தான் நெஜமான முதல் மாலை”

“அது என்னடா முதல் மாலை? கேக்கவே நாராசமா இருக்கு”

“ஓஹொ! முதல் இரவு இருக்கலாம், முதல் பகல் இருக்கலாம்! ஏன் முதல் காலை கூட இருக்கலாம்! ஆனா முதல் மாலை மட்டும் இருக்கக்கூடாதா? சரி முதல் அந்தின்னு வச்சிக்கலாமா? இல்லை முதல் ஈவ்னிங்னு வச்சிக்கலமா? பேரு என்னவா இருந்தா என்ன! நீ என்னை வச்சிக்கறதும், நான் உன்னை வச்சிக்கறதும் தானே முக்கியம்” என சொன்னவன் தனது லீலையை ஆரம்பித்திருந்தான்.

மாலை வேளை

கட்டிளம் காளை

கட்டில் மேல் சேலை

நடக்குது மோக லீலை!!! (நீங்க நம்பலைனாலும் இது கவிதைதான்!!!!)

மனைவியின் சொல்லை மீறி அவள் தம்பிக்கு கடுமையான தண்டனை அளிக்க அவன் மனம் ஒப்பவில்லை! ஆனாலும் அவளுக்கு நடந்த கொடுமையை அப்படியே போகட்டும் என விட்டு விடவும் அவன் மனம் இசையவில்லை. இத்தனை நாள் பற்றி எரிந்த தீ இன்று லேசாக அடங்கியது போல இருந்தது அவனுக்கு. முற்றிலும் அணையாவிட்டாலும் தகிப்பது தணிந்திருந்தது. நெஞ்சில் சாய்ந்திருந்த மனையாளின் புன்னகை முகத்தைக் கண்டவனுக்கு, இனி என்றும் அதை நிலைக்க வைத்திட வேண்டும் எனும் வெறியே எழுந்தது. தன் சம்முவை இறுக அணைத்துக் கொண்டு கண் மூடினான் கதிர். தன் பிடியில் சம்மு எனும் எண்ணமே ஆனந்தத்தைத் தர கண்ணோரம் லேசாய் ஈரம் கசிந்தது அவ்வாண்மகனுக்கு.

இரு நாட்கள் கழித்து கையில் கட்டுடன் வாரியங்காவலில் இருக்கும் தன் வீட்டுக்கு வந்த கண்ணனுக்கு கதவை அகல திறந்து விட்டார் மீனாட்சி. மகனை அந்தக் கோலத்தில் பார்த்தும் கூட அலட்டிக் கொள்ளாமல் கிச்சனுக்குள் நுழைந்துக் கொண்டார்.

மகனே கண்ணா என வாய் நிறைய அழைக்கும் அன்னை தான் அடிப்பட்டு வந்ததைக் கண்டும் கூட பதறாமல் போனது இவனுக்கு துணுக்கென இருந்தது. அதோடு சில வாரங்களாக இவன் போன் அடித்தால் கூட அவர் எடுப்பதே இல்லை. சண்முவுக்கு மணமாகி விட்டது என அவர் சொல்ல அழைத்ததுதான் கடைசி அழைப்பாக இருந்தது. செலவுக்கு இவன் அனுப்பும் பணமும் அப்படியே தொடப்படாமல் இருந்தது. அதனால்தான் ப்ரதாப்புடன் வந்தவன், மீனாட்சியையும் சென்று பார்த்து விடலாம் என வந்திருந்தான்.

கிச்சனுக்கு வந்தவன்,

“அம்மா!” என அழைத்தான்.

“கையில என்ன கட்டு? கதிரு போட்டுத் தாக்கிட்டானா?” என அசால்ட்டாக கேட்டார் மீனாட்சி.

இவருக்கு எப்படி தெரிந்தது என அதிர்ந்துப் போனான் கண்ணன்.

மகனையே சற்று நேரம் ஆழப்பார்த்தார் மீனாட்சி. அந்த கூரிய பார்வையில் அவன் நெளிய ஆரம்பிக்கவும், இவர் கண்ணில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. சேலை தலைப்பால் கண்ணைத் துடைக்க துடைக்க கண்ணீர் பாட்டுக்கு வழிந்தது.

“அம்மா, என்னாச்சுமா?” என பதறி போய் அவர் அருகில் வந்தான் மகன்.

“நான் ரொம்ப தப்பு பண்ணிட்டேன்டா”

“என்னம்மா? என்ன பேசறீங்க?”

“ஆம்பள புள்ளன்னு உன்னைப் படிக்க வச்சேன்! என் பொண்ணு படிப்ப நிறுத்தி வேலைக்கு அனுப்பிட்டேன்! உன்னைப் பொத்தி பொத்தி வளத்தேன்! அவள வீட்டு வேலை தோட்ட வேலைன்னு பாடாய் படுத்திட்டேன். அதனால எனக்கு அவ மேல பாசம் இல்லைன்னு நெனைச்சிட்டியாடா?”

“அம்மா! ஏன் என்னன்னமோ பேசறீங்க?”

“நீ அப்படித்தான்டா நெனைச்சிருப்பே! நாம எது சொன்னாலும் இந்த பட்டிக்காட்டு அம்மா கேட்டுக்குவான்னு உனக்கு எண்ணம். நானும் அப்படித்தானே இருந்துருக்கேன்! உன் பேச்ச கேட்டுத்தானே என் பொண்ணுக்கு அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வச்சேன்! ஆனாலும் அவ நல்லா இருக்கனும்னு தானேடா பண்ணி வச்சேன்! என் புள்ளய அரை உயிராக்கி அனுப்பிட்டானே அவன்! என் பொண்ணு இங்க இருந்தப்போ துறுதுறுன்னு பட்டாம்பூச்சி மாதிரி வளைய வருவாடா! மறுபடி ஊருக்குத் திரும்பி வந்தப்போ அவ முகத்துல ஜீவன் இல்லைடா! பேயடிச்ச மாதிரி வெளுத்துப் போயி, கன்னம் சுருங்கி, கண்ணு உள்ளுக்குப் போயி, தோலு மட்டும் போத்துன எலும்பா வந்தாடா! அவள பார்த்த நொடி என் பெத்த வயிறு கலங்கிப் போச்சுடா கலங்கி! இம்முனு சொல்லுற நொடி கலகலன்னு சிரிப்பாடா என் பொண்ணு! மறுபடி திரும்பி வந்தப்போ புன்னகைக்கு கூட பஞ்சமா போச்சு! வாய் ஓயாம படபடன்னு பேசுவாடா என் மக! அந்தப் பேச்சுலாம் கொறைஞ்சு அப்படியே நின்னுப் போச்சுடா பாவி! அந்தப் பட்டாம்பூச்சியோட சிறக பிச்சது யாருடா? அவ முகத்துல சிரிப்ப துடைச்சது யாரு? சொல்லுடா ஏன் இப்படியானா என் மக? சொல்லு கண்ணா!” என அவன் சட்டையைப் பிடித்து ஆவேசம் வந்தவர் போல் உலுக்கினார் மீனாட்சி.

“அம்மா! விடுங்கம்மா”

விவாகரத்து முடிந்து சண்மு வீட்டுக்கு வந்தப்போது கூட தனியாளாக தான் வந்தாள். அக்காவோடு கண்ணன் வராத போதே இவருக்கு எதுவோ சரியில்லை என தோன்றி விட்டது. அதோடு எவ்வளவு வற்புறுத்தி கேட்டும் இவள் எதையும் சொல்லவில்லை. ஒரு அறை கூட விட்டுப் பார்த்தார் வாயில் இருந்து முத்து உதிரவில்லை. அதோடு கண்ணனோடும் சண்மு பேச்சை விட்டு விட்டது இவரை உறுத்தியது. போனில் கேட்ட போது அதையும் இதையும் சொல்லி மழுப்பிய மகன் எப்போது வீடு வருவான், கழுத்தைப் பிடித்துக் கேட்கலாம் என காத்திருந்தார் மீனாட்சி. சண்மு திரும்பி வந்ததில் இருந்து கண்ணன் தனக்கு அடிக்கடி பேங்கில் பணம் போடுவதும் அதையும் இதையும் வாங்கி அனுப்புவதும் வேறு இவர் சந்தேகத்தைக் கிளப்பி இருந்தது. எதை மறைக்க இந்த லஞ்சம் என மனம் பாடாய் பட்டது. அது என்ன என அறித்தப் போது உள்ளம் நொறுங்கிப் போனது அந்த அன்னைக்கு.

“என் பொண்ண பத்தி எனக்குத் தெரியாதாடா? கதிரு வந்து கூப்டப்போ கூட எனக்கு தாலிதான் பெருசுன்னு நின்னவடா அவ! அதயே அத்துப் போட்டுட்டு வர அளவுக்கு என்னடா நடந்துச்சு? சொல்லு! பாவி மக, நான் கெஞ்சி கேட்டும் சொல்லல, மிரட்டி கேட்டும் சொல்லல! எல்லா தப்பையும் அவ தலையில அள்ளிப் போட்டுகிட்டா! நீ தானேடா மாப்பிள்ளை நல்லவரு, வல்லவருன்னு சட்டிபிகேட் குடுத்த! இப்ப நீ சொல்லு! உன் அக்கா ஏன் திரும்பி வந்தா? சொல்லுடா!”

கண்ணா, தங்கம், ராஜா என ஆசையாக கூப்பிடும் தாய் பத்ரகாளியாய் மாறி உலுக்கிட ஆடிப்போனான் கண்ணன்.

“அம்மா..அது..அது…” என இவன் திக்கினான்

கையை விலக்கியவர் மெல்லிய குரலில்,

“எனக்கு எல்லாம் தெரியும்” என சொன்னார்.

“நீங்க நெனைக்கற மாதிரி ஒன்னும் இல்லம்மா! அதெல்லாம் ஒன்னும் இல்ல” என பதறினான் கண்ணன்.

“என்ன விஷயம்னே நான் சொல்லல! ஆனா அது இல்லை இது இல்லைன்னு துடிக்கிற!” என சொல்லியவர்,

“போட்டோவ நான் பார்த்தேன்டா! என் ரெண்டு கண்ணால பார்த்தேன்!” என சொல்லி அழுதார்.

எந்த போட்டோ எப்போது பார்த்தார் என இவன் விழிக்க,

“உங்கக்கா இங்க திரும்பி வந்த புதுசுல, ஒரு நாள் விடிய விடிய அழுதுட்டே இருந்தா! எனக்குத் தெரியக் கூடாதுன்னு வாய பொத்திட்டு அழுதாலும் விக்கலையும் விம்மலையும் அடக்கவா முடியும்? எப்போவும் நீதானே எனக்கு போன் போடுவா, அன்னிக்கு மனபாரம் தாங்காம நான் உனக்கு கால் போட்டேன்! எங்க கூட வந்து எங்களுக்குத் துணையா இருடான்னு கேக்க போன் போட்டேன்! எனக்கு எங்க போன் பாவிக்க தெரியும்! நீ அடிச்ச நம்பர பார்த்து மறுபடி அதையே நான் தட்டுனேன். அது வீடியோ கால்னு பிறகுதான் தெரிஞ்சது! அப்போதான் பெட்டுக்கு மேல நீங்க மாட்டி வச்சிருந்த போட்டாவ பார்த்தேன்.” என சொல்லி ஓவென அழுதார் மீனாட்சி.

அவர் அழைத்த நேரம் கண்ணனுக்கு நடுராத்திரியைத் தாண்டிய நேரம். தூக்கக்கலக்கத்தில் என்ன அவசரமோ என போனை எடுத்தவன், பின்னால் இருந்த போட்டோவை மறந்திருந்தான். ஆண்கள் இருவரும் இதழ் அணைத்தப்படி நின்றிருக்கும் போட்டோவை தான் ப்ரதாப் பெரிதாக்கி மாட்டி இருந்தான் அங்கே! போனை அட்டேண்ட் செய்த கையோடு ஹாலுக்கு விரைந்து விட்டவன், அந்த கேப்பில் தாய் போட்டோவைப் பார்த்திருக்கக் கூடும் என நினைத்தேப் பார்த்திருக்கவில்லை.

பொறியில் மாட்டிய எலியாய் திருதிருத்திருந்தான் கண்ணன்.

“நீ பொண்ணா இருந்து அவ புருஷன எடுத்திருந்தா கூட நாட்டுல நடக்காததான்னு எனக்கு மனசு ஆறிப்போயிருக்கும்! சீச்சீ! அந்தப் போட்டாவ பார்த்ததுக் கூசிப்போச்சுடா எனக்கு! பாலு குடுத்து வளத்த இந்தக் கையால உன்னைக் கொன்னுப் போட்டுடனும்னு தோணுச்சுடா! இந்த விஷயம் எனக்குத் தெரியக்கூடாதுன்னு தானே என் மவ சிலுவை சுமந்தா! அப்போ முடிவெடுத்தேன்டா வாழாம வந்த என் மகளுக்கு இன்னொரு வாழ்க்கை அமைச்சுக் குடுக்கனும்னு. அதுவரைக்கும் எனக்கு விஷயம் தெரிஞ்சத அவளுக்குத் மறைச்சி உன் கூட ஒன்னுமே தெரியாத மாதிரி பேசிட்டு இருந்தேன். இப்போ என் மகளுக்கு கல்யாணம் முடிஞ்சிருச்சு! இனி இந்த நாடகம் வேணாம்டா வேணாம்! எப்படிடா ஆம்பளயும் ஆம்பளயும்? ஐயோ கடவுளே! இந்த கர்மத்துக்கு என் மவ வாழ்க்கையில வெளாயாடிட்டியேடா! உனக்குலாம் நல்ல சாவு வராதுடா!” ஆவேசம் வந்தவர் போல மகனை அறைந்து தள்ளிவிட்டார் மீனாட்சி. இந்த காலத்து பெற்றவர்களுக்கே இந்த உறவு முறை ஒத்துக்கொள்ள முடியாமல் இருக்கும் பட்சத்தில், மீனாட்சி அந்தக் காலத்து கிராமத்து மனுஷி! அவரால் அதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை.

எந்த பிள்ளைக்கும் வெளியே கெட்டவனாக இருந்தாலும் தன் அன்னையின் முன்னே தாழ்ந்து போவது மரணவலியைக் கொடுக்கும். தாயின் ஆவேசத்திலும் சீச்சி என அவர் பார்த்த பார்வையிலும் அந்த வலியை முழுதாக அனுபவித்தான் கண்ணன்.

“என் பொண்ணு நல்லா இருக்கனும்னு ஒரு அம்மா பேசக்கூடாத வார்த்தையெல்லாம் இந்த வாயால பேசனேன்டா நானு! என் பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கனும்னு இன்னொரு பொண்ணு வாழ்க்கைய கேள்விக்குறியாக்கனவடா நானு! என்னை மாதிரி தனி மரமா நின்னிட கூடாதுன்னு அவள வீட்டை விட்டு தள்ளி வச்சவடா நானு! ”

அதிர்ச்சியாக அவன் பார்க்க,

“ஆமாடா ஆமா! நான் உசுரோட இருக்கறப்போவே உன் அக்கா தனி மரமா நிக்கறா! நான் செத்துட்டா நீயெல்லாம் அவள வச்சிப்பாப்பியாடா? வாழாவெட்டி வாழ்க்கை எப்படியாப்பட்டதுன்னு எனக்குத் தெரியும்டா! கண்ட நாயும் கண்டதை பேச, கேடு கெட்ட ஜென்மங்க கையைப் புடிச்சு இழுக்கன்னு நெருப்புல நிக்கனும்டா தெனம். எப்போ என் மக என்னை மாதிரியே வந்து நின்னாளோ அப்பவே அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு முடிவு பண்ணிட்டேன். வெக்கத்த விட்டு கதிரு காலுல விழலாம்னு யோசிச்சப்போ அவனுக்கு நிச்சயம்னு சேதி வந்துச்சு. வரமாட்டேன்னு நின்னவள வற்புறுத்தி கூட்டிட்டுப் போனேன் நிச்சயத்துக்கு. அங்கதான் அடிச்சது எனக்கு அதிர்ஸ்டம். கட்டிக்கப் போறவள பார்க்காம கதிரு பார்வை சண்மு மேலயே தான் இருந்துச்சு. அப்பவே முடிவு பண்ணேன், எப்படியாச்சும் இவங்க கல்யாணத்த முடிக்கனும்னு. சுயநலம்தான். தான் புள்ளைங்கன்னு வந்துட்டா எந்த அம்மாவும் சுயநலவாதிதான்டா. இங்க நான் அவள வாட்ட வாட்ட, வேற எங்க போவா? சின்னதுல இருந்து உசுரா பாத்த நண்பன் கிட்ட தானே? அதத்தான் செஞ்சேன். கதிர பார்க்கறப்பலாம் இவ திரும்பி ஆத்திரேலியா போயிடுவா, என் மருமகன் இப்படி அப்படின்னு ஏத்தி விட்டேன். புகைஞ்சுகிட்டு இருந்தது பத்திக்கிச்சு! நான் பேசுன பேச்சுல அவளே கதிர கட்டிக்கறேன்னு சொல்லிட்டா! அப்போ என் சந்தோசத்த மறைக்க நான் பட்டப்பாடு அந்தக் கடவுளுக்குத்தான்டா தெரியும். நான் உங்கக்கா கண்ணுக்கு கெட்டவளாவே இருந்துட்டுப் போறேன்! ஆனா அவ வாழ்க்கை மலர்ந்துடுச்சு! பரமு அண்ணே ரெண்டு பேரும் எப்படி சிரிச்சு சந்தோஷமா இருக்காங்கன்னு அப்பப்பா வந்து சொல்லிட்டுப் போவாரு! அது போதும்டா எனக்கு! இந்த கட்டை இனிமே நிம்மதியா உசுர விட்டுரும்! சொந்த அக்கா வாழ்க்கைய கருக்கிட்டு உன் வாழ்க்கைய மலர வச்சிக்கிட்ட உன்ன மாதிரி சுயநலவாதியோட தயவு எனக்கு வேணான்டா இனி. கஞ்சோ கூழோ இனி நானே உழைச்சுக் குடிச்சிக்கறேன். கை காலு ஓஞ்சுப் போச்சுன்னு என் மகளும் மருமகனும் பாத்துப்பாங்கடா என்னை! இனி நான் செத்தாக்கூட என் முகத்துல முழிக்காத! என் மருமகன் போடட்டும் எனக்கு கொள்ளி. நான் பெத்தது ஒத்தப் பொட்டப்புள்ளதான்னு உன்னை இன்னியோட தலை முழுகறேன்! வெளிய போடா நாயே!”

எத்தனை நாள் காதல் மட்டுமே நம்மை தாங்கும்? ஏதோ ஒரு நிமிடத்தில் காதல் கசந்துப் போக, தாய் மடி தேடாதா நம் மனம்? சகோதர பாசத்தை தேடாதா நம் இதயம்? அது ஆயுசுக்கும் இல்லை எனும் போது அவன் அனாதை தானே! இதை விட என்ன தண்டனை இருந்து விடப்போகிறது ஒருவனுக்கு! இதயம் கணக்க தன் தாயை ஒரு முறை நன்றாக பார்த்து மனதில் பதித்துக் கொண்டவன், வீட்டில் இருந்து வெளியேறினான். அவன் வாசலைத் தாண்ட மீனாட்சியின் கதறல் செவிப்பறையை எட்டியது. கண்ணில் கண்ணீருடன் வளர்ந்த வீட்டை விட்டு உறவிருந்தும் அனாதையாய் வெளியேறினான் கண்ணன்.

 

(உயிர் போகும்…)