அத்தியாயம் – 2
அவன் வீட்டைவிட்டு வெளியேறிவிட கண்ணீர் ததும்பும் விழிகளுடன் தொப்பென்று தரையில் அமர்ந்த மதுவின் மனம் வலியில் துடித்தது.
தன்னுடைய தங்கை உடைந்து போனதைப் பார்க்க முடியாமல் விஷ்ணு அவளின் அருகில் வந்து தலை கோதிட, ‘அண்ணா’ என்ற அழைப்புடன் அவனின் தோளில் சாய்ந்தாள் மது..
‘அவரு என்னை மறந்துப்பாருன்னு நினைச்சேனே! ஆனால் அவரு நான் வருவேன்னு காத்துட்டே இருந்திருக்காரு. இன்னைக்கு என்னைத் தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறாரு..’ என்று நினைத்தவளின் கண்களில் அருவியாகப் பெருகியது.
அதுவும் கடைசியாகத் தன்னிடம் அவன் சொன்ன வார்த்தையில் அவளின் உள்ளம் சில்லு சில்லாக உடைந்து சிதறிவிட, ‘உன்னிடம் சொல்லாமல் மறைச்சது என்னோட தவறுதான். அதுக்காக நீ ஏண்டா இப்படி உடஞ்சிப்போற.. ஐயோ நீ என்னை எப்போடா புரிஞ்சிக்க போற..’ என்று என்றவளின் உள்ளம் ஊமையாகப் புலம்பியது.
‘நீ கிருஷ்ணாவை முதலில் தெளிவாகப் புரிந்து கொண்டாயோ?’ என்று அவளின் மனமே அவளைக் கேள்வி கேட்க, ‘அவனைப் புரிஞ்சிகிட்ட ஒரே காரணத்தால் தான் ப்ராஜெக்ட் வொர்க் முடிஞ்சதும் இந்தியா கிளம்ப முடிவெடுத்தேன்..’ என்று அவளும் மனதுடன் சண்டையிட்டாள்.
அவள் கண்ணீர் விடுவதைப் பார்க்க முடியாத நிர்மலா, “ஒரு வார்த்தை ஒவ்வொரு சூழ்நிலை பொறுத்து ஓராயிரம் அர்த்தம் கற்பிக்கும்.. அதைப் புரிஞ்சிக்காமல் பேசக்கூடாது மது..” என்ற தாயை நிமிர்ந்து முறைத்தான் விஷ்ணு.
“அவளைச் சும்மா குத்தம் சொல்லாதீங்க.. அவன் கல்யாணத்திற்கு அனுப்பி வைத்த பெண்ணைக் கல்யாணம் பண்ணி அவன் நம்ம வீட்டுக்கே அனுப்புவான்.. அதைப் பார்த்துட்டு இத்தன நாளாகச் சும்மா இருந்ததே தப்பு.. இதில் அவனுக்கு நீங்கச் சப்போர்ட்டா..” என்று தாயிடம் சீறியவன் தங்கையின் கண்ணீரை துடைக்கவும் மறக்கவில்லை.
அவனின் பேச்சில் நிர்மலாவின் கோபம் அதிகரிக்க, “நீ இருக்கிற தைரியத்தில் தான் அவ இன்னும் நடமாட்டிட்டு இருக்கிற.. கொஞ்சம் அந்தப் பையனையும் யோசி.. ஆறுமாசமாக அவளைத்தேடி அலைந்து ஓடாகத் தேய்ந்து வந்து நிக்கிறான்.. அவனைப் பார்க்கவே பாவமாக இருக்கு..” என்றவரின் வார்த்தைகளை மறுக்கவும் விஷ்ணுவால் முடியவில்லை..
தன்னுடைய தங்கையின் வாழ்க்கையை சீரழித்துவிட்டு அவன் சந்தோஷமாக வாழ்வதாக நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இன்று அவனின் தோற்றம் கண்டதும் அவனின் மனக்கோட்டை மண்கோட்டையாகச் சரிந்து விழுந்தது.
பெரிய வீரனை போலத் திடகாத்திரமான உடலுடன் கம்பீரமாக வலம்வரும் கிருஷ்ணா இன்று தன்னுடைய தங்கையின் பிரிவால் துரும்பாக இழைத்து அவனின் தாய் சொன்னது போல அவனின் உடலில் உயிர் இருக்கிறதா? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு இருந்தான்.
அதைவிட தன்னுடைய தங்கை அவனைவிட்டு ஆறுமாதம் தனித்திருக்க விட்டது தவறோ என்ற எண்ணம் கூட அவனின் மனதில் எழுந்தது. அவளின் விருப்பம் இல்லாத வாழ்க்கையைக் கட்டாயப்படுத்தவும் அவனின் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
அவனின் சிந்தனை அனைத்தும் இந்தக் கோணத்தில் பயணிக்க நிர்மலாவோ, “அவளிடம் கேளுடா. அவ ஏன் வாழ மாட்டேன்னு சொல்லிட்டு வந்தான்னு கேளு.. உன்னை மாதிரி அவனும் எனக்கொரு மகன் ஸ்தானம் தான். அவனையும் என்னால விட்டுகொடுக்க முடியாது..” என்றவர் விஷ்ணுவின் தோளில் சாய்ந்திருந்த மகளை ஒரு பார்வை பார்த்துவிட்டு அறையைவிட்டு வெளியேறினார்.
அந்த அறைக்கு வெளியே அமர்ந்திருந்த ராம்குமாரின் கண்கள் கலங்கி சிவந்திருக்க, ‘என்னோட மகளிடம் இருக்கிற குறையே அவள நிம்மதியா வாழவிடாது போல..’ என்று ஒரு தந்தையாக ஊமையாகக் கலங்கியது அவரின் மனம்!
மதுவை தோளில் சாய்த்துக்கொண்ட விஷ்ணு அவளின் தலையை மெல்ல வருடிவிட்டான். அவளின் காயம்பட்ட மனதிற்கு அந்த ஆறுதல் தேவையாக இருந்தது. அவளின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட, “பேபி..” என்று அழைக்க, கலங்கிய கண்களுடன் நிமிர்ந்து பார்த்தாள்.
கிருஷ்ணா அடித்த அடியில் கன்னம் வீங்கியிருக்க இந்நேரம் வரை அழுது அழுது அவளின் விழிகளிரண்டும் சிவந்திருந்தது. தலைமுடி கலந்து கிடக்க வாடிய தாமரை மலரென்று இருந்த தங்கையின் முகம் பார்த்ததுமே, விஷ்ணுற்கு அவளின் மனதைப்புரிந்து போனது.
“அவன்மேல் உயிரையே வெச்சிட்டு ஏன் இங்க வந்த?” என்றவனின் கேள்விக்கு அவளின் பதில் வியப்பைக் கொடுத்தது. அவளின் பதிலில் இருந்தே கிருஷ்ணாவின் மனதைப் புரிந்துகொண்ட விஷ்ணுவிற்கு சிரிப்புதான் வந்தது.
அண்ணன் சிரிப்பைப் பார்த்து அவள் முறைக்க, “கிருஷ்ணா என்ற பெயர் வெச்சவங்க எல்லோருமே லீலையில் மன்னர்கள்! அவன் மட்டும் அதுக்கு விதிவிலக்கா மது..” என்று நாசுக்காகச் சொல்லி அவன் நிறுத்திவிட அவன் விட்ட இடத்திலிருந்து அவள் யோசிக்க தொடங்கினாள்.
தங்கையின் சிந்தனை முகம் கவனித்த விஷ்ணு, ‘இனி முடிவை அவளே எடுக்கட்டும்..’ என்ற முடிவுடன் அந்த அறையைவிட்டு வெளியேறினான். அவளின் மீது அவனுக்கு நம்பிக்கை இருந்தது. அதனால் அவன் வேறு எதுபற்றியும் யோசிக்காமல் அவனின் வேலைகளைக் கவனித்தான்.
அப்பொழுது அவள் தெளிவாக யோசிக்கும்பொழுது அவன் திருமணம் செய்யும் முன்னர் எப்படி இருந்தான்? திருமணத்திற்கு சம்மதம் சொன்ன பிறகு அவனிடம் ஏற்பட்ட மாற்றங்கள்! திருமணத்தன்று நடந்த விஷயங்கள் அனைத்தும் ஒன்றுக்குகொன்று முரணாக தோன்றியது.
அவள் அவனைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருக்க ஏர்போர்ட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ணா அவளை அடித்த கரங்களை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவளின் பட்டு போன்ற கன்னத்தைத் தன்னுடைய கரம் பதம் பார்த்ததை நினைத்து, ‘அவளை அடிக்கவா அங்கிருந்து வந்தேன்..’ என்றவனின் மனம் வலியில் இருமடங்காகத் துடித்திட விழிமூடி ஸீட்டில் சாய்ந்து அமர்ந்தான்.
ஆறுமாத தேடல் அனைத்தும் சில நொடியில் பொய்யாகப் போய்விட்டதே என்ற வலி அவனின் கண்களில் வெளிப்பாடாகவே தெரிந்தது. அவளை அடித்துவிட்டு நேராக ஏர்போர்ட் வந்து சேர்ந்த கிருஷ்ணா வெயிட்டிங் லிஸ்டில் அமர்ந்திருந்தான்.
சிறிதுநேரத்தில் அவனின் டிக்கெட் செக்கிங் எல்லாம் முடிந்தும் அவன் உள்ளே செல்ல நினைக்கும்பொழுது அவனுக்கு ஜானுவிடம் பேச வேண்டும் என்று தோன்றிய மறுநொடியே அவனின் நடை தளர்ந்தது.
இந்த ஆறு மாதத்தில் அவனடைந்த துயரத்திற்கு எல்லாம் அவளே மருந்தாக அமைந்தாள். கிருஷ்ணாவின் மனம் துயரத்திற்கு ஒரே வடிகால் அவள் மட்டுமே. அவளிடம் சிலநொடி பேசினாலே மனம் லேசாகிவிடும் என்று உணர்ந்தவன் உடனே அவளுக்கு அழைத்தான்.
அதே நேரத்தில் சென்னை பெசன்நகரில் அமைந்திருக்கும் பெரிய அப்பார்ட்மெண்டில் தன்னுடைய பிளாட்டின் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள் பிரீத்தி.
அவளைப் பார்த்த மறுநொடியே, “எனக்கு என்ன வாங்கிட்டு வந்த..” என்று கிள்ளைமொழி பேசினாள் ஜானு.
அவளை ஒரு பார்வை பார்த்த பிரீத்தி, “இந்த உனக்காகப் பழமுதிர்சோலையில் போய் கோவை பழமும், கால்கிலோ சிவப்பு மிளகாயும் வாங்கிட்டு வந்தேன் நல்லா தின்னு..” என்றவள் அதை வீடு முழுவதும் இரைத்துவிட்டு சமையலறைக்கு சென்றாள்.
“மரியாத தெரியாதா..” என்றவள் தன் முன்னே கிடந்த கோவை பழங்களையும், சிவந்த மிளகாயையும் பாவமாகப் பார்ப்பதை கண்டு சமையலறைக்குள் வாய்விட்டுச் சிரித்தாள் பிரீத்தி.
அப்பொழுது அவளின் அலைபேசி அலறியது.
அதன் திரையில் தெரிந்த நம்பரைப் பார்த்தும், “ஹலோ கிருஷ்ணா.. என்னடா போன காரியம் என்னாச்சு..” என்று அவள் கேள்வி எழுப்பியபடி ஹாலிலிருந்த சோபாவில் வந்து அமர்ந்தாள். அவள் கால்மேல் கால்போட்டு உட்காருவதை முறைத்து பார்த்தாள் ஜானு.
“அதைவிடு.. ஆமா ஜானு என்ன பண்ற..” என்று கேட்ட கிருஷ்ணாவிற்கு மீண்டும் மதுவின் நினைவு வரவே கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு பிரீத்தியின் பேச்சில் கவனம் செலுத்த முயன்றான். பிரீத்தி அவனின் பக்கத்து பிளாட்டில் தங்கியிருக்கிறாள்.
“யாரு ஜானுவா..” என்று அவள் சிரிப்புடன் இழுத்தாள்.
“அவ என்ன பண்றா..” என்று ஆர்வத்துடன் கேட்க, “யார்கிட்ட பேசற..” என்று ஜானு தூரத்திலிருந்து கேட்டபடியே அவளை நோக்கி வரவே பிரீத்தியின் உதட்டில் புன்னகை அரும்பியது.
மானிட பெண்கள் நெற்றியில் வைக்கும் பொட்டு போன்ற சிறிய கண்கள், அவளின் சிவந்த மூக்கு அனைவரின் கவனத்தையும் நொடியில் அவள் பக்கம் ஈர்த்துவிடும். அவளின் பச்சை நிற மேனி கண்டால் சொக்கி போகும் மனிதனின் உள்ளம். சிறகு போன்ற இரண்டு கைகளை வைத்துகொண்டு சின்னக் கால்களில் அவள் நடந்து வரும் அழகை அணு அணுவாக ரசித்தாள் பிரீத்தி.
“அவ வாக் வர அழகை பார்க்கவே கண்ணிரண்டும் போதல. ஐஸ்வர்யாராய் கூட இவ அளவுக்கு வாக் பண்ண முடியாதுடா..” என்று சொன்னவளின் பார்வை முழுவதும் ஜானுவின் மீதே நிலைத்தது..
அதற்குள் அவளின் அருகே வந்த ஜானு, “கிருஷ்.. கிருஷ்..” என்று தன்னுடைய சிறகுகளைப் படபடவென்று அடிக்கும் பொழுதே உங்களுக்கு இந்த ஜானு யாருன்னு தெரிஞ்சிருக்கணுமே..
அது நம்ம கிருஷ்ணா ஆசையோடு வளர்த்த கிளிங்க.. அதுக்கு பேருதான் ஜானு!
பிரீத்தி சொன்னதை கற்பனை செய்து பார்த்த கிருஷ்ணா, “பிரீத்தி ஜானு சாப்பிட்டாளா?” அவளிடம் அக்கறையுடன் விசாரித்தான்.
“ஜானு மிளகாய் மட்டும் சாப்பிட்ட..” தன்முன்னே நின்றிருந்த கிளியிடம் போனைக் காட்டிய பிரீத்தி, “கிருஷ்ணா பேசறான்..” என்று மெல்லிய குரலில் கூறியவள் குறும்புடன் சிரித்தாள்..
“கிருஷ்.. ராதா..” என்ற கிளியின் குரலில் கேட்டு அவனின் மனம் லேசானது. அதுவரை இருந்த சோகங்கள் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்துவிட அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.
“ஆமா ஜானு பக்கத்தில் இருக்கிறாளா.. அவ பக்கத்துல இருந்த போனை அவளிடம் கொடு..” என்றதும் லவுட் ஸ்பீக்கர் போட்டு அவளின் முன்னே வைத்துவிட்டு, “பேசு..” என்றாள்.
“ராதா.. ராதா..” என்று மதுவின் பெயரை ஜானு சொல்ல அது அவளின் மீது வைத்திருக்கும் பாசத்தை உணர்ந்தவன், ‘அவ வரமாட்ட ஜானு..’என்று தனக்குள் சொல்லிக்கொண்ட கிருஷ்ணாவின் காதுகளை எட்டியது ஜானுவின் குரல்.
“கிருஷ்.. ராதா..” என்று கிள்ளைமொழி பேசியது. அதுவரை இருந்த மனநிலை மாறிவிட அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது.
அவனின் மனம் லேசாக, “ஏய் ஜானு இரு உன்னை இந்தியா வந்து வெச்சுக்கிறேன்..” என்றவன் குறும்புடன் ஜானுவை மிரட்டிட, அவன் பேசுவதை போனின் வழியாக உன்னிப்பாகக் கவனித்தது.
பிறகு அதன் சிறகைப் படபடவென்று அடித்த ஜானு, “வா வா..” என்றது கீச்சுக்குரலில்.
“சரி ஜானு சீக்கிரம் வரேன்..” என்றவனின் மனபாரம் முற்றிலும் இறங்கிவிட அவனின் உதட்டில் புன்னகை அரும்பியது..
அவள் தன்னை தேடி வருவாள் என்ற எண்ணத்துடன் அவன் சிந்தனையில் ஆழ்ந்தான். “கிருஷ்ணா..” என்ற பிரீத்தியின் குரல் அவனின் கவனம கலந்தது.
“ரகுவும், சிந்துவும் என்ன பண்றாங்க..” என்று கேட்டான். அவன் வளர்க்கும் மீன்களுக்குப் பெயர் தாங்க இது. அவனின் வீட்டில் இருந்த மீன் தொட்டியைப் பார்க்க, அதிலிருந்த இரண்டு மீன்களும் அமைதியாக நீந்திக் கொண்டிருந்தது.
“இருவரும் நீந்தி விளையாட்டிட்டு இருக்காங்க..” என்றவள் புன்னகையுடன் கூறிவே, அதைகேட்ட பிறகு அவனின் மனம் நிம்மதியடைந்தது.
அப்பொழுது அவனை அடையாளம் கண்டவள் அவனின் எதிரே வந்து நிற்க அவளை ஏறயிறங்க பார்த்த கிருஷ்ணா, “நான் இன்னும் இரண்டு நாளில் வந்துவிடுவேன் பிரீத்தி. அவங்கள பத்திரமாகப் பார்த்துக்கோ..” என்றவன் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் போனை வைத்துவிட்டான்..
அவனின் எதிரே நின்றிருந்தவளின் பார்வை கிருஷ்ணாவின் மீது சுவாரசியமாகப் பதிந்தது. ஆறடியைவிடச் சற்று குறைவான உயரமே என்றாலும் பார்ப்பவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியாது.
கருமையான கேசமும், நேரான நெற்றியும் அதிலிருந்த சுருக்கங்களும் அவனின் சிந்தனை மனதை எடுத்துரைத்தது. கூர்மையான விழிகள் எதிராளியின் மனதை படித்துவிடும். நேரான நாசி, அதன் கீழே அளவான மீசை, சிகரெட் கறை படியாத உதடுகள்!
கிட்டதட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு அவனை நேரில் பார்க்கிறாள் அவனின் கம்பீரமான தோற்றத்தில் இருந்த மாற்றமே அவனின் மனதை அவளுக்கு எடுத்துரைத்தது. அவளைப் பார்த்ததுமே அவள் தன்னை வம்பிழுக்க வந்திருப்பது புரிந்து அமைதியாக நின்றிருந்தான்.
அவனின் பின்னோடு பார்வையைச் செலுத்திய அவளோ, “என்ன கண்ணா உன்னோட ராதை எங்கே? கிருஷ்ணனுக்கு பாமா, ருக்மணி என்று இரு மனைவிகள் இருந்தபொழுதும் அவனின் மனம் தஞ்சமடைந்தது என்னவோ ராதையிடம் தானே. அந்தக் கண்ணனே அப்படின்னா, இந்தக் கலியுக கண்ணனைப் பற்றிச் சொல்லித்தான் தெரியனுமா என்ன?” என்று குறுஞ்சிரிப்புடன் அவனை வம்பிற்கு இழுத்தாள் ருத்ரா.
அவளின் பேச்சுகளைப் பொறுமையாக நின்றுகேட்டு எந்தவிதமான சலனமும் இல்லாமல் நின்றிருந்தவனை பார்த்தவளின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. அதை அவனும் கவனிக்கவே செய்தான்.
“கண்ணனோட மனதை ராதை அறியாமல் இருப்பாளா?” என்று இடது புருவம் உயர்த்தி அவன் நின்ற விதமே, ‘உன்னை அவள் விட்டுக்கொடுப்பாளா..’ என்று நினைக்கத் தூண்டியது ருத்ராவின் மனம்.
“சீக்கிரமே என்னைத்தேடி வருவா..” என்று மெல்லிய குரலில் அழுத்தமாகக் கூறினான்.
கிருஷ்ணாவின் கோபம் அவள் அறிந்ததே. அவனுக்கும் பொறுமைக்கு வெகுதூரம் என்று அறிந்திருந்தவளோ அவனைப் பிரம்மிப்புடன் பார்த்தாள்.
“என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கிற..” என்றவனின் பார்வை அவளின் மீது கேள்வியாகப் படிந்தது.
“ஜாப் விஷயமாக வந்திருக்கேன். உன்னைக் கல்யாணம் பண்ணிட்டு செட்டிலாக இருந்த என்னோட ரூட்டை மாற்றிவிட்டவனே நீதானே..” என்று புன்னகையுடன் அவனுக்கு ஒரு சல்யூட் அடித்தாள் ருத்ரா.
அவளின் குறும்புத்தனம் கண்டு அவனின் உதட்டில் புன்னகை அரும்பிட, “அந்த அளவுக்கு என்னை நினைவு வெச்சிருக்க பரவல்ல..” என்றவன் அவளைக் கடந்துசென்றான்.
அவனையே இமைக்காமல் பார்த்த ருத்ரா, “ஹாப்பி ஜேர்னி கிருஷ்ணா..” என்றாள்.
“தேங்க்ஸ் ருத்ரா..” என்றவன் திரும்பிப் பார்க்காமல் செல்லவே அவனைப் பார்த்துக்கொண்டே சிலநொடி சிலையாக நின்றாள் ருத்ரா. அதன்பிறகு அவளும் தன்னுடைய வேலையைக் கருத்தில்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றாள்.
அவன் போனை வைத்தும் ஜானுவைப் பார்த்த பிரீத்தி, “ராதாவை அவன் பார்த்திருப்பானா?” என்று அதனிடம் கேட்க, “நா என்ன ஜோசிய கிளியா..” என்ற கிளியின் குறும்புத்தனம் கண்டு அவள் வாய்விட்டுச் சிரித்தாள்.
“நீ நல்லா வாய் பேசற..” என்று கிளியைக் கொஞ்சியவள் மணியைப் பார்த்தாள். இரவு பத்து மணி என்று காட்டியது கடிகாரம். அதன்பிறகு சாப்பிட்டுட்டு வந்து ஜானுவிற்கு கோவைப்பழம் கொடுத்துவிட்டு போய் படுக்கையில் விழுந்தாள் பிரீத்தி.