அத்தியாயம் 15
இந்தியாவின் புகழ் பெற்ற ஆலயங்களுள் ராமேஷ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி ஆலயமும் ஒன்று. உலகில் மிக நீண்ட பிரகாரம் உள்ள கோயில் எனும் பெருமை இந்த கோவிலுக்கு உண்டு.
மறுநாள் ராமேஸ்வரத்துக்குப் பயணப்பட்டார்கள். மெய் லிங் ஒரே டென்ஷனாக இருந்தாள். இவன் புன்னகைத்தால் பதிலுக்கு அரைப் புன்னகைக் கூட வரவில்லை. பயணம் முழுக்க நெற்றியைத் தேய்த்துக் கொண்டாள். கைகளைப் பிசைந்து கொண்டாள், மொத்தத்தில் ரெஸ்ட்லெஸ்சாக இருந்தாள். வேனை ஓட்டிக் கொண்டே அவள் படும் பாடுகளை கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஜம்பு.
டாய்லட் போக நிறுத்திய இடத்தில் என்ன பிரச்சனை என அவளை நிறுத்திக் கேட்டதில் ஒன்றும் இல்லை என சமாளித்து விட்டாள். கோயிலை அடைந்ததும் எல்லோரும் சாமி கும்பிட செல்ல, இவளோ சிறிய போட்டலில் தான் எடுத்து வந்திருக்கும் தன் அம்மாவின் அஸ்தியைக் கையில் எடுத்துக் கொண்டாள். முகத்தில் பதட்டம். என்ன சாங்கியம், எப்படி செய்வது என மலைத்து நின்றாள். ஜம்புவிடம் கேட்கலாம் என திரும்ப, அவனோ சட்டையைக் கழட்டி விட்டு வேட்டியுடன் அவள் முன் வந்து நின்றான்.
“என்ன ஜம்ப்? வை வேட்டி?”
ஒன்றும் சொல்லாமல்,
“வா” என அவளின் கைப்பிடித்துக் கொண்டான்.
நேராக சாங்கியங்கள் செய்யும் நதிக்கரைக்கு அழைத்துப் போனான். போகும் முன் மற்றவர்களை மங்கியிடம் ஒப்படைத்துவிட்டுத்தான் போனான்.
“அம்மா ஆத்மா சாந்திக்கு வேண்டியதை செய்ய ஆரம்பிக்கலாமா? யூ ஒகே ரைட்?”
அவன் கேட்டதும், அவனின் கையைப் பிடித்துக் கொண்டு அவளுக்கு அப்படி ஒரு அழுகை. தேம்பி தேம்பி அழுதாள். அவள் கண்ணீரைத் துடைத்து சமாதானப் படுத்தினான் ஜம்பு.
“ஐ வாஸ் ஸ்கேர்ட் ஜம்ப். தனியா செய்யனும்னு, சோ மச் ஸ்கேர்ட்”
“ஷ்ஷ்! வை அழுகை? நோ நீட். யுவர் அம்மா, மை அத்தை. வீ டூ டுகெதர். இந்த மாதிரி நேரத்துல அப்படி உன்னைத் தனியா விட்டூற மாட்டேன்டி நானு” என சமாதானப் படுத்தி அழைத்துப் போனான். அஸ்தியை நீரில் கரைத்து விட்டு நீராடி, இருவரும் ஒரு ஐயரைப் பிடித்து தர்ப்பணம் கொடுத்தனர். அகால மரணம் அடைந்த ஒருவருக்கு ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் கொடுப்பது அவர்களின் ஆத்மாவை சாந்தி அடைய செய்யும் என மெய் லிங்கிக்கு விளக்கியவன்,
“அம்மா அப்ஸ்டேர் நல்லா இருப்பாங்க” என்றான்.
அப்ஸ்டேர் என்பது மேல் மாடி, மேலுலகம் இல்லை என புன்னகையுடன் விளக்கியவள், அவன் கையை அழுத்தமாகப் பிடித்துக் கொண்டாள். கண்களில் காதல் டன் டன்னாக வழிந்தது.
“டெம்பிள்டி, இப்படி நோ சீ” என அடக்கினான் அவளை.
மீண்டும் மதுரை திரும்ப இரவானது. மறுபடியும் சுற்றப் போகலாம் என்றவளை,
“யூ சோ டயர்ட். கண்ணு கீழ ப்ளேக். போ போ ஸ்லீப்” என அனுப்பி வைத்தான்.
“நீயும் வா” என அழைத்தாள் மெய் லிங்.
“உதைப்பேன்! போ போய் படு” என மிரட்டியவனை நாக்கைத் துருத்திக் காட்டிவிட்டுப் போனாள் அவள்.
அடுத்த நாள் பெட்டி படுக்கைகளைக் கட்டிக் கொண்டு கன்னியாகுமாரிக்கு புறப்பட்டார்கள். நேராக பகவதி அம்மன் கோயிலை சென்றடைந்தார்கள். அம்மனை தரிசித்துவிட்டு விவேகானந்தர் பாறையைப் பார்க்க சென்றார்கள். மூன்று இந்திய பெருங்கடல், அரபிக்கடல், வங்கக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்த விவேகானந்தர் பாறையையும், திருவள்ளுவர் சிலையையும் சுற்றிப் பார்த்தார்கள். பார்த்தவர்கள் அதன் அழகில் மலைத்து நின்றார்கள்.
மாலையில் எல்லோரும் ரூமில் முடங்கிவிட, ஜம்புவும் மெய் லிங்கும் மங்கியுடன் சூரியன் அஸ்தமிப்பதைப் பார்க்க வந்தார்கள். அவ்வழகிய காட்சியை அவன் தோள் சாய்ந்து கண் குளிர கண்டாள் மெய் லிங். மங்கி கொறிக்க ஏதாவது வாங்கி வருகிறேன் என விலகி விட இவர்கள் ஒன்றும் பேசாமல் மற்றவரின் அருகாமையை மட்டும் ரசித்தப்படி அமர்ந்திருந்தனர்.
“அனதர் டூ மோர் டேய்ஸ் ஜம்ப்” குரல் கரகரக்க சொன்னாள் மெய் லிங்.
“ஹ்ம்ம்” என மட்டும் சொன்னவன் மனதில்,
‘என்னை விட்டுட்டு போயிடுவியாடி சமூ? இந்த சூரியன் அஸ்தமிக்கற மாதிரி நம்ம வாழ்க்கையும் அஸ்தமிச்சுப் போயிருமா?’ என புலம்பினான்.
“வோண்ட் யூ மிஸ் மீ?”
“என்னடி குவெஸ்டின் இது?” முகத்தைத் திருப்பிக் கொண்டான் ஜம்பு. அவன் தாடையைப் பிடித்து அவள் முகம் பார்க்க வைத்தவள் கண் கலங்க,
“ஐம் சாரி ஜம்ப்” என்றாள்.
“விடு, விடு சாரி சொல்லிட்டா மட்டும் இந்த வலி இல்லாம போயிருமா?” என நெஞ்சைத் தொட்டுக் காட்டினான்.
“சாரி ஜம்ப்” மீண்டும் சொன்னாள்.
“மெய் லிங்!”
“சொல்லு”
“என்னை விட்டுட்டுப் போகாதடி! டோண்ட் லீவ் மீ”
தலையை இடமும் வலமும் ஆட்டினாள் அவள்.
“எஸ் ஐ டோல்ட் யூ ஐ காண்ட் டூ தட்” ஏற்கனவே சொல்லியபடி அவனோடவே இருப்பது சாத்தியப்படாது என்றாள்.
“என்னை வோ ஐ நி பண்ணலியா நீ?”
“யெஸ் சோ மச். வோ ஐ நி ஜம்ப். ஒன்லி யூ மை ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ்.” அவளும் அழும் முகத்தை அவனுக்குக் காட்டாமல் திருப்பிக் கொண்டாள்.
“வை டி திஸ் ஸ்டபர்ன்? பாப்பா கிட்ட டோல்ட் அவர் லவ். ப்ளிஸ்டி. நீ இல்லாம ஐ கெனோட் லீவ் டி. புரிஞ்சுக்க. உன்னோட வாசம், உன்னோட பாசம், உன்னோட மென்மை, உன்னோட மேன்மை, அழுத்தி நீ குடுக்கற முத்தம் எல்லாம் இல்லாம என்னால இருக்க முடியாதுடி சமூ. புரிஞ்சுக்க. ஐ வாண்ட் யூ.” அந்த சைனா பொம்மைதான் வேண்டும் என் அடம் பிடித்தான் ஜம்பு.
“ஐ காண்ட் ப்ரேக் பாப்பாஸ் ஹார்ட் ஜம்ப்”
“அப்போ இந்த கேணை ஜம்பு மனச உடைக்கலாமா? மை ஹார்ட் கேன் பிரேக்கா?” இத்தனை நாட்களாக தான் காட்டிய பாசம், நேசம், காதல் எல்லாமே அவள் அப்பாவின் அன்புக்கு முன் தோற்றுப் போனதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை
காதலிக்கிறேன் என்ற போதே இதற்கு எதிர்காலம் இல்லை என்று தான் சொன்னதை மறக்க வேண்டாம் என்றாள் மெய் லிங்.
“யூ டோல்ட் மீ லீவ் அட் தெ மோமெண்ட். சோ ஐ டிட். இப்போ யூ டால்கிங் லைக் திஸ். மீ அல்சோ நாட் ஹெப்பி டூ லீவ் யூ ஜம்ப். புரிஞ்சுக்கோ” முழங்காலில் முகத்தைப் புதைத்து அழுதாள் மெய் லிங்.
பழக ஆரம்பித்த பொழுதே இதுதான் முடிவு என தெரிந்தும், மனக்கோட்டைகள் பல கட்டிய தன் பலவீனமான மனதை நினைத்து ஆத்திரம் வந்தது. தினமும் கண் விழிக்கும் போது தன் இடுப்பில் கால் போட்டு வலது பக்கம் படுத்திருக்கும் மெய் லிங், இடது பக்கத்தில் கருப்பும், மஞ்சளுமாய் இரு குழந்தைகள் என தான் கண்ட கற்பனைகள் யாவும் சரிந்து விழுவதை அவனால் தாங்க முடியவில்லை. கடைசி வரை அவள் மனதை மாற்றிவிடலாம் என இருந்தவனுக்கு, அவனுக்காக மனதால் ரத்தக் கண்ணீர் வடித்தாலும் தகப்பனுக்கே தன் முதல் கடமை என சாதிப்பவளை கோபித்துக் கொள்ள முடியவில்லை.
அழுபவளை தன் தோளில் சாய்த்து தட்டிக் கொடுத்தான்.
“சரி போ, கோ சிங்கப்பூர். ஆனா இங்க நான் ஒருத்தன் ஆல்வேய்ஸ் உன் நினப்புல தான் இருப்பேன். நீ பாப்பா சொன்னவனைக் கல்யாணம் பண்ணிகிட்டு புள்ளைக் குட்டியோட இருந்தாலும், எனக்கு என்னோட சமூவின் நினைவுகள் போதும் போடி” மனம் வலிக்க பேசினான். குரலில் தடுமாற்றம் இல்லை, இது போதும் எனக்கு எனும் மனநிலைக்கு வந்திருந்தான்.
“ஜம்ப்”
“வேணா மெய் லிங். இனிமே எதுவும் பேச வேணாம். ஐ டோண்ட் வாண்ட் டூ ஸ்கோல்ட் யூ. என்னை என்னிக்கும் நல்ல சிரிச்ச முகமாத்தான் நீ ஞாபகம் வச்சிருக்கனும். நோ ஆங்கிரி ஆர் சேட் ஃபேஸ்” என புன்னகைத்தான். புன்னகை கண்களை எட்டவில்லை.
ஜம்புவின் போன் அடித்தது. அன்று மெய் லிங் அப்பா அடித்த போதே நம்பரை மாமனார் என சேவ் செய்திருந்தான்.
“யுவர் பாப்பா. பேசு” என கொடுத்தான்.
அவளின் யெஸ் பாப்பா, நோ பாப்பாவைக் கேட்டபடி சூரியன் அஸ்தமிப்பது போல அஸ்தமிக்கும் தன் வாழ்க்கையை எண்ணி கடலை வெறித்திருந்தான்.
போனை வைத்தவள்,
“பாப்பா இஸ் கமிங் டூ ட்ரிவன்ட்ரம் ஏர்பேர்ட் இன் டூ டேய்ஸ் டூ டேக் மீ” என அமைதியாக சொன்னாள்.
நாளை அவர்கள் குரூப் திருவனந்தப்புரம் போய் சில இடங்களைப் பார்த்துவிட்டு நாளை மறுநாள் சிங்கப்பூருக்கு திரும்பி செல்வது என்பதுதான் பிளான். இவர்களே போக போகிறார்கள் எனும்போது அவர் ஏன் கூட்டிப் போக வருகிறார் என கேட்டான்.
“ஹீ இஸ் லைக் தட். வெரி ப்ரோடெக்டிவ்” விமானத்தில் தனியாக போக தன் மகள் பயப்படுவாள் என்பது அவரின் எண்ணம். இந்தியாவுக்கே தனியாகத்தானே வந்தாள் என்பதை எல்லாம் அவர் ஏற்றுக் கொள்ள மாட்டார். சில நாட்களுக்கு முன்பாகவே வந்திருப்பார். டிக்கெட், விசா என நாட்கள் இழுத்துவிட்டது.
“சரி, கவலைப்படாதே! இன்னும் ஒரு முழு நாள், இருபத்தி நான்கு மணி நேரம் கடவுள் கீவ் அஸ். எந்த சேட்னசும் இல்லாம டூமோரோ சந்தோஷமா இருப்போம். சரியா சமூ?”
சரி என தலையாட்டினாள். சிரிக்க முயன்றாலும் கண்ணில் நீர் நிறைந்திருந்தது.
“போலாம் மெய் லிங்” எழுந்தவன் அவள் எழ கைக்கொடுத்தான். ஹோட்டலுக்குப் போகும் போது மங்கியின் கைங்கரியத்தால் கீச்சு கீச் பாடல் வேனில் ஒலித்தது. மெய் லிங் வாய் மூடி கண்ணீர் விட, ஜம்புவுக்கு கண்ணீரைக் கட்டுப்படுத்தியதால் கண் சிவந்துப் போனது.