Manmo13

கண்களை லேசாகத் திறந்தாள் மித்ரமதி. விடிந்து வெகு நேரம் ஆகியிருக்கும் போல. ரூமிற்குள் வந்து விழுந்திருந்த ஒன்றிரண்டு ஒளிக்கீற்றுகள் அப்படித்தான் சொன்னது.

திரும்பிப் பார்த்தாள் பெண். பக்கத்தில் கணவன் இல்லை. கண்களை மீண்டும் மூடிக் கொண்டாள். மூடிய விழிகளிலிருந்து ஒற்றைக் கோடாய் கண்ணீர் இறங்கியது.

எத்தனை அழகாக ஆரம்பித்த வாழ்க்கை! ஒரு மாதம் கூட ஆகவில்லையே? அதற்குள் யார் கண் பட்டது? ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?

அத்தனை உருகி உருகிக் காதல் பண்ணினானே! அது அவ்வளவும் இப்போது பொய்யென்றால் அவள் எப்படி நம்ப?

பழிவாங்கவென்றே கல்யாணம் பண்ணியவனால் இத்தனை தூரம் காதலிக்க முடியுமா? இல்லை… இது அவனே உணராத அவனது காதலா?

யோசிக்க யோசிக்க மண்டை வெடித்து விடும் போல இருந்தது. மெதுவாக எழும்பிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டாள் பெண். குளிர்ந்த நீர் முகத்தில் பட்ட போது கொஞ்சம் புத்துணர்ச்சியாக இருந்தது.

ஆனால் உடம்பு மட்டும் அங்குலம் அங்குலமாக வலித்தது. அவன் ஆண்மை அவளுக்குக் கொடுத்துவிட்டுச் சென்ற பரிசுகள் அது. கசப்பாகப் புன்னகைத்துக் கொண்டாள் மித்ரா.

பத்மா டைனிங் டேபிளில் உட்கார்ந்து கொண்டு ஒரு ஆங்கில நாளிதழைப் புரட்டிக் கொண்டிருந்தார். மருமகளின் சத்தம் கேட்கவும், “குட் மார்னிங் மித்ரா.” என்றார். அப்போது மணி பத்து.

“மித்ரா? என்ன ஆச்சு? ஏன் முகமெல்லாம் ஒரு மாதிரியா இருக்கு?” பதறிப் போனார் பத்மா.

“ஒன்னுமில்லை ஆன்ட்டி.”

“என்ன ஒன்னுமில்லை? முகம் வீங்கிச் சிவந்து போய்க் கிடக்கு. நீ ஒன்னுமில்லேங்கிற?”

“ஆன்ட்டி… நந்தகுமார் ங்கிறது யாரு?” மித்ரா கேட்டே விட்டாள். ஒரு கணம் பத்மாவின் முகம் யோசனையைக் காட்டியது.

“ஓ… கார்த்திக் நந்துவைப் பத்திப் பேசினானா? அதான் உன்னோட முகம் இப்படி இருக்கா? நான் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.” மாமியாரின் பேச்சில் மித்ராவும் பெயருக்குச் சிரித்துக் கொண்டாள்.

“உங்க தங்கை பையன் இல்லை ஆன்ட்டி?”

“ஆமாம் மித்ரா. அந்தக் கூத்தை ஏன் கேக்கிறே. ஆக்ஸ்போர்ட்ல தான் படிச்சான். நல்ல கெட்டிக்காரன். என்ன கெட்டிக்காரத்தனம் இருந்து என்ன பண்ண. வாழ்க்கையை வாழத் தெரியலையே.”

“ம்…”

“கார்த்திக் க்கு நந்து ன்னா ரொம்பப் பிரியம். சின்ன வயசுல இருந்தே அப்படித்தான். அவனும் அப்படித்தான். என்ன முடிவெடுக்கிறதுன்னாலும் அண்ணா வேணும்.”

“ஓ…”

“யாரோ ஒரு பொண்ணை லவ் பண்ணி இருக்கான். அந்தப் பொண்ணு மாட்டேன்னு சொல்லிடுச்சு. சரிதான் போடி இவளே ன்னு தூக்கிப் போடாம…” இதைச் சொல்லும்போது பத்மாவின் கண்கள் கலங்கிவிட்டன.

“பொண்ணு யாரு ஆன்ட்டி?”

“அது யாருக்குத் தெரியும்? கார்த்திக் அதை யார்கிட்டேயும் சொல்லலையே.”

“நீங்க யாராவது அந்தப் பொண்ணுக்கிட்ட பேசிப் பார்த்திருக்கலாம் ஆன்ட்டி.”

“எப்படிப் பேச முடியும் மித்ரா? யோரோ ஒரு பொண்ணால எங்க வீட்டுப் பையன் இந்த நிலைமைக்கு ஆளாகி இருக்கான். முதல்ல கண் மண் தெரியாத கோபம் தான் வந்திச்சு. ஆனா அதுக்கப்புறம் நிதானமா யோசிச்சப்போ தான்… பாவம் அந்தப் பொண்ணு என்ன பண்ணும்?‌ அவளுக்குப் பிடிக்கலை, அவ்வளவு தான்னு தோணிச்சு.”

“ம்…” மித்ராவின் மூச்சு இப்போது சீரானது.

“என்ன சொல்ல மித்ரா! அவன் தலையெழுத்து அப்படி ஆகிப்போச்சு. பாவம் லதா. நொறுங்கிப் போனா. ஆனா நம்பிக்கை இருக்கு மித்ரா. டாக்டர்ஸ் இன்னைக்கு வரைக்கும் நம்பிக்கையாத்தான் பேசுறாங்க. அந்த வரைக்கும் நாங்க புண்ணியம் பண்ணி இருக்கோம்.”

“ம்…” இவள் ‘ம்’ கொட்டிக் கொண்டிருக்க பேசியபடியே அவர் தயாரித்த டீ யை மருமகள் கையில் கொடுத்தார் பத்மா.

“தான்க் யூ ஆன்ட்டி.”

“ஆனாலும், இப்போ கல்யாணம் பண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கான் மித்ரா.”

“யாரு ஆன்ட்டி? நந்தகுமாரா?”

“ஆமாம் மித்ரா. கார்த்திக் உங்கிட்ட அதைச் சொல்லலையா?”

“ம்ஹூம்…”

“பார்கவி ன்னு ஒரு பொண்ணு. இவன் பின்னாலேயே திரிஞ்சுது. அப்போ துரை கண்டுக்கலை. ஆனாலும் பொண்ணு விடலியே. கண்ணு போனாலும் பரவாயில்லை ன்னு ஒத்தக் கால்ல நின்னு இவனையே கல்யாணம் பண்ணிக்கிட்டா. ரொம்ப கிரேட் இல்லை?”

“ஆமா ஆன்ட்டி.” இந்தத் தகவல் புதிது மித்ரமதிக்கு. அமைதியாக டீயைக் குடித்து முடித்தவள் ரூமிற்குள் போனாள்.

இத்தனை நாளும் தொழில் பண்ணிய அனுபவம் எல்லாவற்றையும் இலகுவாகப் பார்க்கக் கற்றுக் கொடுத்திருந்தது.

ஆரம்பகட்ட அதிர்ச்சி அடங்கிய பிறகு பிரச்சினையை சாதாரணமாகப் பார்க்க முடிந்தது. யாரோ ஒருவரின் பிரச்சினைக்குத் தீர்வு தேடுவது போல தனது வாழ்க்கையையே அலசி ஆராய்ந்தாள் பெண்.

கை தானாக ஃபோனை எடுக்கக் கார்த்திக்கை அழைத்தாள். இரண்டு மூன்று ரிங்க் ற்குப் பிறகு அழைப்பு எடுக்கப்பட்டது.

“கார்த்திக்… நான் மித்ரா பேசுறேன்.”

“சொல்லு.” இருவர் குரலிலும் அத்தனை இயந்திரத்தனம்.

“உங்க கூடக் கொஞ்சம் பேசணுமே.”

“இப்போ என்னால வீட்டுக்கு வரமுடியாது.”

“பரவாயில்லை… நான் ஆஃபீஸுக்கு வர்றேன்.”

“நான் இப்போ ஆஃபீஸ் ல இல்லை.”

“ஃபாக்டரியா?”

“இல்லை… கெஸ்ட் ஹவுஸ்.”

“கெஸ்ட் ஹவுஸா?”

“ம்…”

“ஸிப் கோர்ட் ஐ அனுப்புங்க. வந்து சேர்றேன்.”

“நான் மார்க் ஐ அனுப்புறேன்.”

“தான்க் யூ.” சட்டென்று ஃபோனை அணைத்தவள் சீக்கிரமாக ரெடியாகிக் கொண்டு ஹாலுக்கு வந்தாள்.

“மித்ரா! ஷாப்பிங் ஆ?”

“இல்லை ஆன்ட்டி. கார்த்திக்கைப் போய்ப் பார்த்துட்டு வர்றேன். மார்க் இப்போ வருவார்.”

“ஓ… போய்ட்டு வாம்மா. எத்தனை நேரம் தான் நீயும் இப்படியே அடைஞ்சு கிடக்க முடியும்?” ஒரு புன்னகையோடு வெளியே வந்தவளைக் காக்க வைக்காமல் சீக்கிரமாகவே வந்தான் மார்க்.

சிறிது நேரப் பயணத்திற்குப் பின் அந்த ப்ளாக் ஆடி ஒரு வீட்டின் முன்பாகப் போய் நின்றது. இங்கிருந்து பார்க்கும் போதே கார்த்திக் நிற்பது தெரிந்தது. கூடவே அன்று ஹோட்டலில் பார்த்த அந்தப் பெண்.

மார்க் இன் முகத்தைச் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள் மித்ரமதி. அதிலிருந்து எதையும் கண்டுபிடிக்க அவளால் முடியவில்லை. இவளைக் கண்டவுடன் அந்தப் பெண் புன்னகைத்தது.

“ஹாய் மித்ரா.”

“ஹாய்.”

“என்ன டல்லா இருக்கீங்க?”

“நத்திங்.” ஒற்றை வார்த்தையில் பதில் தந்தவள் கணவனைத் திரும்பிப் பார்த்தாள். அமைதியாக நின்றிருந்தான்.

“கார்த்திக்! இவங்க வந்த வேலை முடிஞ்சிடுச்சுன்னா இவங்களை அனுப்பிட்டு உள்ள வாங்க. நான் உங்க கூடக் கொஞ்சம் பேசணும். சாரி ஜெனி.” சொல்லிவிட்டு அவள் உள்ளே போக அந்த அராபியன் குதிரை திகைத்துப் போனது.

“ஓகே மேடம்.” வாய் தானாகச் சொல்ல வெளிநடப்புச் செய்து விட்டாள் ஜெனி.

வீட்டின் உள்ளே வந்த மித்ரமதி அங்கிருந்த ஜன்னல் ஒன்றின் பக்கம் போய் நின்று கொண்டாள். கார்த்திக் உள்ளே வருவது தெரிந்தது. அவனைத் திரும்பிப் பார்த்த விழிகளில் கணநேரம் சலனம் போல ஏதோ ஒன்று தோன்றி மறைந்தது.

“கார்த்திக்… நேத்து என்னென்னவோ எல்லாம் நீங்க பேசினீங்க. அதுக்கு எல்லாம் காரணமே நாந்தான் ன்னும் சொன்னீங்க.
நம்ம கல்யாணமே வெறும் பழிவாங்கல் ன்னும் சொன்னீங்க.”

அவன் ஏதோ சொல்லப் போகக் கை உயர்த்தித் தடுத்தாள் மித்ரமதி.

“நான் இன்னும் பேசி முடிக்கலை கார்த்திக். நேத்து நைட் போதுங்கிற அளவுக்கு நீங்க பேசியாச்சு. இப்போ என்னைப் பேச விடுங்க.”

“………………”

“என்னதான் பழிவாங்க நீங்க கல்யாணம் பண்ணி இருந்தாலும் உங்க கண்ணுல நான் காதலைப் பார்த்திருக்கேன் கார்த்திக். அது கூடப் பொய் ன்னு சொல்லுவீங்களா?”

“இப்போ பார்த்தியே ஜெனி, அவகூடத் தான் எங்கண்ணுல காதலைப் பார்த்திருக்கா.” அந்த வார்த்தைகள் அமிலம் தோய்த்து வந்தது.

“கா…ர்த்…திக்…” அவன் வார்த்தைகளில் மீதமிருந்த மித்ரமதியும் செத்துப் போனாள். இவன் சொல்வதன் அர்த்தம் என்ன?‌ புரிந்துதான் பேசுகிறானா? இல்லை என்னை வருத்த வேண்டும் என்று நினைத்துப் பேசும் வார்தாதைகளா?

“இதுக்கு அர்த்தம் என்ன கார்த்திக்?” அவள் ஆங்காரமாகக் கேட்கவும் தோளைக் குலுக்கினான் அவள் கணவன்.

“அப்போ… இந்த மித்ரமதி உங்க வாழ்க்கையில வந்த முதல் பொண்ணு இல்லையா?” அவள் கனலாகக் கேட்கவும் ஏளனமாகச் சிரித்தவன் சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“எத்தனாவது பொண்ணு ன்னு சரியா ஞாபகம் இல்லை. ஆனா சத்தியமா முதல் பொண்ணு இல்லை.” இப்போது மித்ரமதி என்ற மரம் முழுதாக ஆட்டம் கண்டது.

அமைதியாக அங்கிருந்த சோஃபாவில் சற்று நேரம் தலையைத் தாங்கிய படி அமர்ந்திருந்தாள் மித்ரா. மனம் மறத்துப் போயிருந்தது.

ஃப்ரிட்ஜில் இருந்து தண்ணீர் எடுத்துக் குடித்தவள் வீட்டை விட்டு வெளியே வந்தாள். இனிப் பேச எதுவுமே இல்லை. மார்க்
காரைக் கொண்டு வந்து நிறுத்த அதில் ஏறிக் கொண்டாள். இப்போது அவள் இருக்கும் மனநிலையில் அவளால் தனியாகப் பயணம் பண்ண முடியாது.
***

வீட்டுக்குள் மித்ரமதி வரும்போதே எதிர்கொண்டார் பத்மா.

“என்ன மித்ரா? சீக்கிரமாவே வந்திட்டே? இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருக்கலாமே?”

“ஆன்ட்டி… அங்கிள் எங்க?”

“டீவி பார்க்கிறாங்க. ஏம்மா?”

“உங்க பையனை ஃபோனைப் போட்டு வரச்சொல்லுங்க. நான் இப்போவே லண்டன் கிளம்புறேன்.” மருமகளின் குரலில் இருந்த வித்தியாசம் அப்போதுதான் பத்மாவிற்கு உறைத்தது.

“என்னாச்சு மித்ரா? ஏதாவது ப்ராப்ளமா?”

“சொன்னதை செய்ங்க ஆன்ட்டி.” கொஞ்சம் கறாராகச் சொன்னவள் மேலே போய்விட்டாள். பத்மாவிற்கு வயிற்றுக்குள் புளியைக் கரைத்தாற் போல இருந்தது. அவசர அவசரமாக மகனை அழைத்தார்.

“சொல்லுங்கம்மா.”

“கார்த்திக்… என்ன ஆச்சு? மித்ரா அவசரமா லண்டன் கிளம்பணும்னு சொல்லுறா? ஏதாவது பிரச்சனையா? தேவகி நல்லாத்தானே இருக்காங்க”

“அதெல்லாம் ஒன்னுமில்லை.”

“நீ உடனே வீட்டுக்கு வா கார்த்திக். காலையில இருந்து மித்ரா முகம் அவ்வளவு நல்லா இல்லை. எனக்குப் பயமா இருக்கு கார்த்திக்.”

“நான் இதோ வர்றேன்.” ஃபோனை வைத்துவிட்டுக் கணவரிடம் போனார் பத்மா.

கார்த்திக் உள்ளே நுழையவும் மித்ரா ரூமிலிருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. கையில் அவள் உடமைகள் அடங்கிய பை. பத்மாவும் சக்ரதேவும் கூட அங்கே தான் இருந்தார்கள்.

“மித்ரா! எங்க கிளம்பிட்ட?” இது கார்த்திக். மித்ரமதி அமைதியாக ஒரு நொடி நின்றாள். அவளை அமைதிப்படுத்த அந்த ஒரு நொடியே இப்போது அவளுக்குப் போதுமானதாக இருந்தது.

“நேத்து நைட் நீங்க எங்கிட்டப் பேசின எல்லாத்தையும் இப்போ, இங்க சொல்லுங்க கார்த்திக்.”

“மித்ரா! அது நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் நடந்த விஷயம். அது எதுக்கு இப்போ இங்க?”

“கரெக்ட் தான். நம்ம வாழ்க்கையில இன்னும் ஏதாவது மிச்சம் மீதி இருந்தா நீங்க சொல்லுறது சரிதான். இல்லேங்கலை. ஆனா இனி எதுவுமே இல்லேங்கிறப்போ…”

“மித்ரா! என்னம்மா நடந்துச்சு? ஏம்மா இப்படியெல்லாம் பேசுற? கார்த்திக்! என்னடா இதெல்லாம்? ஐயையோ! ஆண்டவா!”

பத்மா கிடந்து பதற சக்ரதேவின் முகத்திலும் கலவரம்.

“மித்ரா! உள்ள போ.” கார்த்திக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மித்ராவின் ஃபோன் சிணுங்கியது.

“சொல்லு ரிச்சர்ட்.” மறுமுனை என்ன சொல்லியதோ…

“நான் இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவேன். ப்ரிட்டிஷ் ஏர்லைன்ஸ் தானே?” என்றாள்.

“……………”

“தான்க் யூ ரிச்சர்ட். எனக்கு அதுதான் வசதி. இன்னும் ஃபைவ் அவர்ஸ் இருக்கில்லை.‌ அதுக்குள்ள ஏர்போர்ட் போயிடுவேன்.
டோன்ட் வொர்ரி. பை.” ஃபோனை அணைத்தாள் மித்ரமதி.

“மித்ரா!” பத்மா அவள் அருகே வந்து அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார். இப்போது அழகாகப் புன்னகைத்தாள் மித்ரா.

“மிஸ்.மித்ரமதி சந்திரசேகர். ஆக்ஸ்போர்ட் யூனிவர்ஸிட்டி…” அவள் படித்த ஆண்டு, படிப்பு எல்லாம் கோர்வையாக மாமியாரைப் பார்த்துச் சொன்னவள் அவரின் விரிந்த பார்வை கண்டு கொஞ்சம் நிறுத்தினாள்.

“உங்க தங்கையோட பையன் நந்தகுமார் எங்கூடத்தான் படிச்சார். நல்ல பையன். ரொம்ப டீசன்டா நடந்துக்குவார். நம்ம ஊர்ப் பையன் இல்லையா? அதனால மத்தப் பசங்களோட பேசுறதை விட அவர் கூட கொஞ்சம் ஜாஸ்தியாப் பேசுவேன். ஒரு நாள் எங்கம்மா கூட பேசியிருக்காங்க. தமிழ்ப் பையன்னு சொல்லவும் ஆசை ஆசையாப் பேசினாங்க. அது இயற்கை தானே ஆன்ட்டி?” சின்னச் சிரிப்போடு மருமகள் கேட்கவும் கண்கள் குளமாகத் தலையை ஆட்டினார் பத்மா.

“ஒரு நாள் திடீர்னு ‘ஐ லவ் யூ’ ன்னு சொன்னார்.” இதை அவள் சொல்லும் போது கார்த்திக் ஒரு முறை கண்களை அழுந்த மூடித் திறந்தான்.

“இந்தக் காதல் கத்தரிக்காய் மேல எல்லாம் எனக்கு அப்போ அவ்வளவு இன்ட்ரெஸ்ட் இல்லை அங்கிள். அவரோட ஆசையை அவர் சொன்னார். அதுக்கு நானும் கண்டிப்பா சம்மதம் சொல்லணுமா என்ன? இல்லையே… நானும் நாகரிகமா விலகிட்டேன். இதுல உங்க பையன் எங்க வந்தார் அங்கிள்?” மித்ரமதி சக்ரதேவிடம் கேட்க அவர் நெற்றி இப்போது சுருங்கியது.

“திடீர்னு ஒரு நாள் அந்தப் பையன் சூசைட் அட்டெம்ட் பண்ணி இருக்கான்னு சொன்னாங்க. தகவல் கிடைச்சப்போ ஹாஸ்பிடல் போய்ப் பார்க்க அவங்க அண்ணா யாரையும் அலோவ் பண்ணலைன்னு சொன்னாங்க.” இப்போது சக்ரதேவ் மகனைத் திரும்பிப் பார்த்தார். கார்த்திக் எதுவுமே பேசவில்லை.

“இதுல என் தப்பு என்ன ஆன்ட்டி? பொண்ணுங்க பசங்களைப் பார்த்து லவ் சொல்றதும், பசங்க பொண்ணுங்களைப் பார்த்து லவ் சொல்லுறதும் இயற்கை. பிடிச்சாக் கன்ட்டினியூ பண்ணுவாங்க. இல்லைன்னா தூக்கித் தூரப் போட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க.” மித்ரமதிக்குத் தலையை ஏதோ பண்ணியது. அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்து கொண்டாள்.

“இதுக்காக மெனக்கெட்டு என் கம்பெனியில இருக்கிற ஆளைக் கைக்குள்ள போட்டு… அங்க இருக்கிற கொட்டேஷனை எல்லாம் திருடி, என்னை ஒன்னுமில்லாமப் பண்ணி, லவ் சொல்லி, கல்யாணம் பண்ணி, அந்தக் காதலை எனக்கும் வர வெச்சு… இப்போக் கேட்டாப் பழி வாங்கத்தான் எல்லாம் பண்ணினாங்களாம்.” கண்களில் நீர் திரளப் புன்னகைத்தாள் மித்ரமதி.

பத்மா நெஞ்சில் கையை வைத்துக் கொண்டார். நடப்பது எதையும் அவரால் நம்பக் கூட முடியவில்லை.

“கார்த்திக்! மித்ரா சொல்றது எல்லாம் உண்மையா?” மகனை உறுத்து விழித்தபடி கேட்டார். மகனின் மௌனம் அவருக்கு வெறியைக் கிளப்பி இருந்தது.

“சொல்லுடா!” ஆவேசமாகக் கத்தியவர் கார்த்திக்கின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார்.

“தேவ்! இவன் என்ன காரியம் பண்ணி இருக்கான் பார்த்தீங்களா? இவனுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா ஒரு பொண்ணு வாழ்க்கையில விளையாடி இருப்பான். இதெல்லாம் யாரு குடுத்த இடம் தேவ்?” மனைவி வெடிக்கவும் கார்த்திக்கிடம் வந்து நின்றார் சக்ரதேவ்.

“எதிர்பார்க்கலை கார்த்திக்! இதை உங்கிட்ட இருந்து நான் சத்தியமா எதிர்பார்க்கலை. தாலி, சம்பிரதாயம், சடங்கு, கல்யாணம்… இதெல்லாம் உனக்கு அவ்வளவு சிம்பிளாவா போச்சு?”

இதுவரைக்கும் கார்த்திக் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே நின்றிருந்தான். அம்மா அடித்த போதும் அமைதியாகவே வாங்கிக் கொண்டான்.

“மித்ரா! இங்கப்பாரும்மா. நடந்தது எல்லாத்துக்கும் நான் உங்கிட்ட மன்னிப்புக் கேக்கிறேன். உங்கால்ல விழுந்து மன்னிப்புக் கேக்கிறேன்.”

“அம்மா! ஆன்ட்டி!” யார் குரல் முதலில் ஒலித்தது என்று தெரியவில்லை. பத்மா மருமகளின் காலில் விழ இருவருமே கத்தியிருந்தார்கள்.

“அம்மா ன்னு இன்னொரு தரம் கூப்பிட்டே… நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” பத்மா காளி போல நின்றிருந்தார்.

“தப்பு நடந்து போச்சு மித்ரா. பெரிய தப்பு… மன்னிக்க முடியாத தப்புத் தான். இல்லேங்கலை… ஆனா வீட்டை விட்டுப் போகாதேம்மா.” குலுங்கி அழுதார் பத்மா.

“இட்ஸ் டூ லேட் ஆன்ட்டி. வீட்டை விட்டு மட்டுமில்லை. உங்க எவ்லாரை விட்டும் நான் ஒதுங்கிப் போறேன். உங்களுக்கும் எனக்கும் இனி எந்தச் சம்பந்தமும் இல்லை. பிள்ளையைப் பெத்து, வளக்கத் தெரியாம நீங்க வளப்பீங்க. அதுவும் ரோட் சைட் ரோமியோ மாதிரி வளரும். ஊரெல்லாம் மேஞ்சு திரியும். கல்யாணங்கிற பெயருல இதையெல்லாம் தாங்கிக்கிட்டு பலியாடாகத்தான் எங்களைப் பெத்து வளத்திருக்காங்களா?”

பத்மா துடித்துப் போனார். அந்தச் சின்னப் பெண்ணின் வார்த்தைகள் அவரை வாள் கொண்டு அறுத்தது. மகனின் சல்லாபங்கள் மருமகளுக்கு எப்படித் தெரிந்தது? நிலைகுலைந்து போனார்.

“மித்ரா! நான் சொல்லுறதைக் கேளும்மா. சின்ன வயசு உனக்கு.” சக்ரதேவ் ஆரம்பிக்க அவரைக் கை உயர்த்தித் தடுத்தாள் மித்ரா.

“இதையே இன்னும் எத்தனை நாளைக்குச் சொல்லுவீங்க அங்கிள். சின்ன வயசு, பொண்ணு… தனியா வாழ முடியாது. நான் ‘மித்ரமதி சந்திரசேகர்’ அங்கிள். உங்க பையன் இடம் தெரியாம விளையாடிட்டாரு. கொஞ்ச நாள்தான் ன்னாலும் இந்த மனுஷன் தான் என்னோட உலகம் ன்னு நினைச்சிட்டேன். இல்லைன்னா சந்தி சிரிக்க வெச்சிருப்பேன்.”

இதை அவள் சொல்லும் போது மட்டும் கார்த்திக்கின் உதடுகளில் லேசான ஒரு புன்னகை தோன்றியது. ஆனால் அதைக் கவனிக்கும் நிலையில் மித்ரமதி இல்லை.

அவள் ஃபோன் சத்தம் போடவும் எடுத்துப் பார்த்தாள். டாக்ஸி வந்திருந்தது. யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. சொல்லிக் கொள்ளாமலேயே கிளம்பிப் போனாள்.
***

இப்படியொரு திருப்பத்தைக் கார்த்திக் எதிர் பார்த்திருக்கவில்லை.‌ மித்ரமதி மிகவும் தைரியமான பெண் என்பது அவனுக்கு உறுதி.
அத்தனை
சுலபத்தில் இதைத் தன்மனைவி விட்டுவிட மாட்டாள் என்றும் அவனுக்குத் தெரியும்.

ஒரு பெரிய புயலை எதிர்பார்த்துத் தான் அத்தனையையும் அவளிடம் சொன்னான். அவள் அவனிடம் காதல் சொல்லும் நொடிக்காகத் தான் காத்திருந்தான்.

ஆனாலும் அவளிடம் தானும் காதல் சொல்லி இருக்கிறோம் என்பது ஏனோ அவனுக்கு மறந்து போனது.

காலையில் அவள் கண்விழிக்கும் முன்பே கிளம்பி விட்டான். சிகரெட்டின் நாற்றம் பிடிக்காமல் இரவு அவள் வாந்தி எடுத்தது ஞாபகம் வந்தது. ஓய்ந்து போய்க் கிடந்தவளைக் கொஞ்ச நேரம் பார்த்திருந்து விட்டுத் தான் கிளம்பிப் போனான்.

கொஞ்சம் அதிகப் படியாகத்தான் நடந்து கொண்டோமோ என்று மனம் லேசாக வருந்தியது.‌

முரண்டு பிடித்தவளை அமைதியாக அடக்கத்தான் நினைத்திருந்தான். ஆனால்… அவள் அவனை வெறுத்து ஒதுக்கிய போது அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு பெண்… அதுவும் தன் மனைவி… தன் அணைப்பை வெறுத்து ஒதுக்குவதா? என்ற எண்ணம் வந்த போது… அனைத்தும் கைமீறிப் போயிருந்தது.

மௌனமாக ரூமை விட்டு வெளியேறி விட்டான். எப்படியும் அழைப்பாள் என்று தெரியும். அதற்காகவே வேண்டுமென்று கெஸ்ட் ஹவுஸிற்கு ஜெனியை வரவழைத்திருந்தான்.

மார்க் இவனை ஆச்சரியமாகப் பார்க்க,
“நம்ம ஆஃபீஸுக்கு இன்னொரு ஸ்டாஃப் தேவைன்னு சொன்ன இல்லை மார்க்? அதான் ஜெனியைக் கேட்டுப் பார்க்கலாம்னு தோணிச்சு.”

முதலாளியின் சப்பைக்கட்டை வியப்பாகப் பார்த்தான் மார்க். ஏன்? அந்த வேலையை ஆஃபீஸில் வைத்துப் பார்க்கக் கூடாதா? எதற்கு கெஸ்ட் ஹவுஸ்?

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாகத் துணை தேடிக் கொண்டாலும் வெளிநாட்டுக் காரர்கள் மிகவும் நாகரிகமானவர்கள்.

தன் எதிலிருக்கும் நபருக்குத் துணை இருந்தால் அவர்களைத் திரும்பியும் பார்க்க மாட்டார்கள். ஜெனியும் இதற்கு விதிவிலக்கு அல்ல என்று கார்த்திக்கிற்கு நன்றாகத் தெரியும்.

சில பொழுதுகளில் தன்னோடு சல்லாபித்தவள் என்றாலும், தனக்கென்றொரு மனைவி வந்த பின் அவள் பார்வை இனி வேறாகத்தான் இருக்கும் என்பதைக் கார்த்திக்கும் நன்கு அறிவான்.

வேலை விஷயமாக அவன் பேசவும் அவளுக்கும் மகிழ்ச்சியாகிப் போனது. சட்டென்று வந்து விட்டாள். வந்தவள் மித்ரமதியைப் பற்றி விசாரிக்கவும் சிரித்து மழுப்பினான் கார்த்திக்.

ஆனால்… சற்று நேரத்தில் மித்ரமதி வந்த கோலமும், பேசிய முறையும்… அந்தப் பெண் என்ன நினைத்தாளோ… கிளம்பிவிட்டாள். மார்க் இன் முகத்திலும் குழப்பமே இருந்தது.

அவளை முற்று முழுதாகக் காயப்படுத்தும் நோக்கத்தில்தான் தனது கடந்த காலத்தைப் பற்றியும் லேசாகப் பேசி இருந்தான் கார்த்திக். அவனுக்கு அப்போது தெரிந்திருந்தது எல்லாம், அவளைக் காயப்படுத்த வேண்டும் என்பது ஒன்று மட்டும் தான்.
அதனைச் செவ்வனே செய்து முடித்திருந்தான் கார்த்திக். ஆனால் தனக்கும் சேர்த்துத் தான் குழி பறித்திருக்கிறோம் என்று அப்போது அவனுக்குப் புரியவில்லை.

கடந்த சில நாட்களாக ஓயாமல் ஓடிய ஓட்டம் களைப்பைத் தர அந்தக் கட்டிலில் சரிந்தான். எங்கும் அவள் வாசம். அதுவே நிறைவைத் தர கண்ணயர்ந்தான் கார்த்திக்.
***

கன்ஸ்ட்ரக்ஷன் ஆஃபீஸில் அமர்ந்திருந்தாள் மித்ரமதி. நேற்று இரவே லண்டன் வந்து சேர்ந்துவிட்டாள். அம்மாவிடம் எதையும் மறைக்கவில்லை.

வாழ்க்கையில் நிறையப் பார்த்துவிட்ட பெண்மணி என்பதால் தேவகி ஓ வென்று ஒரு முறை அழுததோடு சரி. தன்னை நிதானப் படுத்திக் கொண்டார்.

ரிச்சர்ட் சகிதம் மாமன் மார்கள் மூவரும் அவளெதிரே அமர்ந்திருந்தார்கள்.

“சொல்லு மித்ரா. எதுக்கு அவசரமா வரச்சொன்ன?” சக்திவேல் கேட்கவும் நிதானமாகத் திவாகரை அண்ணார்ந்து பார்த்தவள் அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

அனைவரும் திக்பிரமை பிடித்தாற் போல அமர்ந்திருந்தார்கள். நடந்த விஷயம் அதிர்ச்சியாக மற்றவர்களுக்கு இருக்க திவாகர் மாத்திரம் ‘இவளுக்கு இது எப்படித் தெரிந்தது?’ என்ற அதிர்ச்சியில் இருந்தார்.

ஆவேசப்பட்ட ரிச்சர்ட் திவாகரின் சட்டையைக் கொத்தாகப் பிடித்திருந்தான். ஆனால் அதைத் தடுக்கக் கூடத் திராணியற்று அமைதியாக அமர்ந்திருந்தார்கள் அங்கிருந்த மற்றைய இரு ஆண்களும்.

“ரிச்சர்ட்! விடு அவரை.” இது மித்ரமதி.

“மேடம்! நான் அப்போ இருந்தே உங்ககிட்ட சொன்னேன். இந்த ஆளோட முழியே சரியில்லைன்னு. நீங்க தான் கேக்கலை.”

“கரெக்ட்! நீ சரியாத்தான் சொன்னே. நான் தான் கேக்கலை. நம்ம மாமா இப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க. இது உன்னோட வீண் கற்பனைன்னு நினைச்சேன்.” அவள் குரல் கலங்கி இருந்தது.

“திவா… ஏன்டா? ஏன் இப்படிப் பண்ணினே?” சக்திவேலின் குரலில் அத்தனை வலி.

“வேற என்ன பண்ணச் சொல்லுற சக்தி? நான் சொல்லுறதைக் கேக்கலைன்னா புதுசா ஆரம்பிச்சிருக்கிற உன் பையனோட தொழிலை இழுத்து மூட வேண்டி வரும்ன்னு மிரட்டுறான். நான் வேற என்னதான் பண்ணட்டும்?” தன் பங்கிற்கு திவாகரும் சத்தம் போட்டார்.

“கல்யாணம் எல்லாரும் சேர்ந்து தானே பண்ணி வெச்சோம். உங்க யாருக்காவது சந்தேகம் வந்திச்சா? இல்லையில்லை? ஏதோ ஒரு வேகத்துல பண்ணிட்டான். மித்ராவைப் பார்த்ததும் நல்ல புத்தி வந்திடுச்சு. அவன் கைக்குப் போயிருந்தாலும் கடைசியில நம்ம கம்பெனி மித்ராக்கிட்டத் தானே வருதுன்னு நானும் சந்தோஷப்பட்டேன்.” தன் போக்கில் பேசியவர் சட்டென்று வெளியேறி விட்டார்.

மித்ரமதி மௌனமாகப் புன்னகைத்தாள். மலை போல எண்ணியிருந்த புருஷனே இல்லை என்றாகிப் போனது. இதில் இந்தக் கம்பெனி எந்த மூலைக்கு!

“மாமா.” இடிந்து போய் அமர்ந்திருந்த சக்திவேலும் தினகரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.

“நான் வேலையை விடப்போறேன். கம்பெனி கைமாறினதுக்கு அப்புறமா மிஸ்டர்.கார்த்திக் எங்கிட்ட எந்த அக்ரிமென்ட்டும் போடலை. அதனால நான் எந்த நோட்டீஸும் குடுக்கத் தேவலைன்னு நினைக்கிறேன்.”

“மித்ரா! அவசரப் படாதேம்மா. நான் கார்த்திக் கிட்டப் பேசுறேன்.” இது சக்திவேல்.

“அவசியமில்லை மாமா. போதும். நான் ஒதுங்கிக்கிறேன். இனி என் வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாத்தையும் நானே முடிவு பண்ணிக்கிறேன். அதுக்கான வயசும், அனுபவமும் எங்கிட்ட இருக்கு. விட்டிருங்க.”

எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னவள் தன் கேபினுக்குச் சென்றாள். மளமளவென்று தனது ராஜினாமாக் கடிதத்தை டைப் பண்ணியவள் அதைக் கார்த்திக்கிற்கு மெயிலில் அனுப்பினாள்.

இன்னொன்றை பிரின்ட் பண்ணியவள் கையொப்பமிட்டு அவனது மேஜை மேல் வைத்தாள். அந்த இடம் ஏதேதோ ஞாபகங்களை வரவழைக்க வெளியேறியவள்,

“ரிச்சர்ட் காரை எடு.” என்றாள்.

“ஓகே மேடம்.”

ரிச்சர்ட் காரை ஓட்ட வழக்கம் போல பக்கத்தில் மித்ரமதி. காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் ரிச்சர்ட்.

“அழுதிடுங்க மேடம்.” அவன் சொல்லி முடித்த போது கேவல் ஒன்று பொங்கி வெடிக்க ஓவென்று அழுதாள் மித்ரமதி. தன் தோழியை இப்போதும் தோள் தாங்கிக் கொண்டான் ரிச்சர்ட்.