KKRI – 4

அத்தியாயம் – 4

அன்று இரவு உணவை முடித்துவிட்டு தன்னறைக்கு சென்ற கிருஷ்ணாவின் மனம் வெறுமையாக இருந்தது. அந்த அறையில் வைத்திருந்த ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாடியும், ஆயிரம் விஷயங்கள் விலைமதிப்பற்ற அன்பும் மறைந்திருந்தது.

சின்ன அப்பார்ட்மெண்ட் என்ற பொழுதிலும் அவளோடு சேர்ந்து வாழப் போகும் நாட்களை மனதில் வைத்து அந்த வீட்டை வடிவமைத்திருந்தான்.  சின்ன கோபம், செல்ல சண்டை, கொஞ்சம் ஊடல், கொஞ்சம் கூடல் அவன் வாழ நினைத்த வாழ்க்கை அனைத்தும் கனவாகி போனது நினைத்தவனுக்கு மனம் வலித்தது.

அந்த அடையின் ஓரத்தில் அமைந்திருந்த சின்னப் படுக்கை. அதற்கு எதிரே  மரத்தால் ஆன அலமாரி. டிரசிங் டேபிள் மற்றும் அதற்கு அருகே இருந்த குட்டி சோபா அனைத்துமே, அவளுக்காக இவன் பார்த்துப் பார்த்து வடிவமைத்தது.

அவளுக்குப் பிடித்த ஊஞ்சல் பால்கனி செல்லும் வழியில் கட்டப்பட்டு இருந்தது. அவளுக்காக வாங்கிய சாய்வு நாற்காலியை மெல்ல வருடியது அவனின் கரங்கள்!

‘அவளுக்குப் பிடித்த சாய்வு நாற்காலி..’ என்றவனின் உதடுகள் மெல்ல முணுமுணுத்தது. அவளின் வீட்டில் அம்மாவுடன் பேசியபடியே அதில் படுத்து ஆடிக்கொண்டே தூங்கிவிடும் மதுவை அவன் பலமுறை பார்த்துண்டு.

அவளைத் தேடி அமெரிக்கா செல்லும் பொழுதுகூட, அவளை அழைத்து வரும் எண்ணத்துடன் தான் சென்றான். ஆனால் அங்கே சென்றபின்னர் அனைத்தும் தலைகீழாக மாறிப்போனது. கடைசியாக அவளை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டான். ஏதோவொரு கோபத்தில் திரும்பி இந்தியா வந்துவிட்டாலும் கூட, அவளின் மனம் அவளையே தேடியது.

அவனின் மனதை உறுத்தும் நினைவுகளை மறக்க நினைத்தவன் மெல்ல பால்கனிக்குச் சென்று வானத்தைப் பார்த்தான். நிலவு வானத்தில் தனிமையாக உலா செல்ல, சில்லென்ற தென்றல் வந்து அவனின் உடலைத் தழுவிச்சென்றது..

அவன் வளர்க்கும் ரோஜா செடி அவனைப் பார்த்துச் சிரிக்க, மனதில் ஏதோவொரு மெல்லிய உணர்வு எழுந்து அவனின் வெறுமையைக் கலைத்தது. அங்கே சிறிதுநேரம் நின்று அந்த மௌனநிலையை ரசித்தவன் மீண்டும் அறைக்குள் நுழைந்தான்.

அவன் கல்யாண ஆல்பத்தை எடுத்துப் புரட்டிட, தன்னுடைய மகனின் திருமணம் என்று கம்பீரமாக மீசையை முறுக்கிவிட்டு மண்டபத்தை வலம்வந்த ஆறுமுகம். பட்டுச்சேலையில் பந்தமாக வேலைகளைச் செய்துகொண்டிருந்த தாய் செந்தாமரை.

தம்பியின் திருமணத்தை முன்னின்று நடத்தும் பொறுப்பில் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்யும் தமையன் மாதவ். அந்த வீட்டையே தன்னுடைய பாசத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கும் அண்ணி சங்கீதாவின் புன்னகை முகவரி அவருக்கு அங்கும் இங்கும் ஓடி அடுத்தடுத்து வேலைகொடுத்த ரஞ்சித்தின் மழலை முகம்.

என்னுடைய அண்ணாவின் திருமணம் என்று சரசரக்கும் பாவாடை தாவணியில் வளம் வரும் தங்கை தாரிகா என்று மொத்த குடும்பத்தையும் ஆல்பத்தில் கண்டு மனம் மகிழ்ந்தான் கிருஷ்ணா.

அவனின் மொத்த குடும்பத்தையும் அவன் ஆல்பம் வழியாக மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறான் இந்த ஆறுமாதமாக! இந்த ஆறு மாதத்தில் ஒரு நாள்கூட அவன் வீட்டிற்கு செல்லவில்லை என்ற உண்மை அவனைக் கொல்லாமல் கொன்றது.

அவன் ஆர்வத்துடன் ஆல்பத்தை புரட்டிட தன்னருகே மணப்பெண்ணாக அமர்ந்திருந்த ருத்ராவின் முகம் பார்த்தும் அவனின் மனம் மாறியது. அடுத்த இரண்டு பக்கத்தில் மீண்டும் தன்னருகே அமர்ந்திருந்த மதுவின் முகத்தை மென்மையாக வருடியது கிருஷ்ணாவின் கரங்கள்!

அவனின் சிந்தனையைக் கலைக்கும் வகையில் சிணுங்கியது கிருஷ்ணாவின் அலைபேசி.

அதன் திரையைப் பார்த்தும், “அம்மா என்னம்மா பண்றீங்க..” என்றவனின் குரலில் சந்தோஷம் அதிகமாக வெளிப்பட்டது.

“கண்ணா எப்படிப்பா இருக்கிற..” என்றவனை விசாரித்தார் செந்தாமரை.

“நான் நல்லா இருக்கேன் அம்மா.. அப்பா, அண்ணா, அண்ணி, தாரிகா, ரஞ்சித் எல்லாம் என்னம்மா பண்றாங்க..” என்று அக்கறையுடன் விசாரித்தான்.

தன்னைச்சுற்றி அமர்ந்திருந்த மொத்த குடும்பத்தை ஒரு பார்வை பார்த்த தாமரை, “எல்லோரும் இங்கதான் கண்ணா இருக்காங்க..” என்றார்.

“ஏன் அம்மா என்மேல் எல்லோரும் கோபமா இருக்கீங்களா..” வருத்தத்துடன் கேட்டான் கிருஷ்ணா.

“கண்ணா உன்மேல் யாருக்கும் கோபமில்ல. என்ன நீ ஊர் திருவிழாக்கு வரல என்று கொஞ்சம் வருத்தம்ப்பா.. நீயும் வேலையை விட்டுட்டு எப்படி வர முடியும்?” என்று அவனிடம் கேட்டார்.

“அம்மா நீங்கப் போனைக் கொடுங்க..” என்று தாயிடமிருந்து போனை வாங்கிய மாதவ், “கிருஷ்ணா எப்படி இருக்கிற? முதலில் நீ சாப்பிட்டியா?” என்று கேட்டான்.

“ம்ம் சாப்பிட்டேன் அண்ணா..”

“ஆமா மது எங்கே?” என்று அவன் அடுத்த கேள்வி கேட்கவே,

“அவதானே நீங்க பேசறது எல்லாம் கேட்டுட்டு கொட்ட கொட்ட முழிச்சிட்டு உட்கார்ந்திருக்கிற..” அவள் என்னவோ அவனின் அருகில் இருப்பது போன்ற பாவனையுடன் கூறினான். அது பொய் என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.

சின்ன சின்னப் பொய்களால் தன்னுடைய குடும்பத்தின் சந்தோஷத்தை நிலைக்க வைத்துக் கொண்டிருக்கிறான். மது வெளிநாடு சென்ற விஷயம் அவனைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாது.

அதற்குள் அவனிடமிருந்து போனை பிடுங்கிய சங்கீதா, “கல்யாணமான ஒரே வாரத்தில் பொண்டாட்டியை முன்னாடியே அம்மா வீட்டிற்கு அனுப்பிட்டு நீயும் பின்னாடியே போனவன்தான். ஆறுமாசம் ஆச்சு.. இன்னும் ஊர் பக்கம் தலைகாட்டல.. சரியான பொண்டாட்டி தாசன்..” என்று அவனை வம்பிற்கு இழுத்தார் சங்கீதா.

“மாதவ் தம்பிதான் கிருஷ்ணா என்று ஊர் சொல்லணும் அண்ணி..” என்றவன் சிரிக்காமல் சொல்ல கணவனைக் கொடூரமாக முறைத்தாள்.

அவளின் பார்வையில் இருந்தே தம்பி என்ன சொல்லியிருப்பான் என்று உணர்ந்துகொண்ட மாதவ், “என்ன ஒரே பாலில் சிக்ஸர் அடித்துவிட்டானா?” என்றவனும் அவளை வம்பிற்கு இழுத்தான்.

அவர்களைச் சுற்றி இருந்த அனைவரும் வாய்விட்டுச் சிரிக்க, “நீங்க ரூமிற்கு வாங்க உங்களுக்கு இருக்கு..” என்று பல்லைக் கடித்தவள் மாமனாரிடம் போனைக் கொடுக்க அவரும் மகனை நலம் விசாரித்தார்.

இறுதியாகப் போன் கிருஷ்ணாவின் தங்கை தாரிகாவின் கைக்குச் சென்றது.

அவள் காலேஜில் நடந்த விஷயத்தில் தொடக்கி அவள் போக்கில் பேசிக்கொண்டே செல்ல, “இனி அவங்க இருவரும் தூங்கின மாதிரிதான்..” என்றவர்கள் அவரவர் அறைக்குச் சென்று மறைந்தனர்.

அவர்கள் சென்றுவிட்டதை உறுதி செய்துகொண்டு, “அண்ணா அண்ணியைப் பார்க்கப் போன இல்ல. அண்ணி என்னண்ணா சொன்னாங்க..” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

கிருஷ்ணா தன்னுடைய தங்கையிடம் மட்டும் பொய் சொல்லமாட்டான். அவளும் அவனைப் போலவே. அவன் சொல்லும் ரகசியங்கள் அவளின் மனதில் மட்டும் வைத்திருப்பாள்.

“மது வரேன்னு சொல்லல தானு.. அவள் வரட்டும் என்று நான் திரும்பி வந்துவிட்டேன்..” என்றவனின் குரலில் இருந்த சோகத்தை அவளால் உணர முடிந்தது.

“அண்ணி வந்துவிடுவாங்க அண்ணா.. உங்களைவிட்டுட்டு அவங்களால் அங்கே என்ன பண்ண முடியும்.. சீக்கிரம் வருவாங்க..” அவனுக்குத் தைரியம் கொடுத்தவள், சிறிதுநேரம் பேசிவிட்டுப் போனை வைத்தாள்.

மறுநாள் காலைபொழுது அழகாக விடிந்தது.

ரகுவிற்கும், சிந்துவிற்கும் உணவைக் கொடுத்துவிட்டு, ஜானுவிற்கு ஒரு தக்காளி பழமும், ஒரு கோவை பழமும் சாப்பிட வைத்துவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.

சென்னையில் ஒரு பிரபல நிறுவனத்தில் ஜெனரல் மேனேஜராக வேலைப் பார்க்கிறான் கிருஷ்ணா. அவன் பிளாட்டை விட்டு வெளியே வர, எதிர் பிளாட்டிலிருந்து வெளியே வந்த பிரீத்தி அப்பொழுதுதான் அவனைக் கவனித்தாள்.

‘இவன் எப்போ ஊரிலிருந்து வந்தான்..’ என்ற சிந்தனையுடன் அவனை நோக்கிச் சென்றவள்,

“ஹாய் கிருஷ்ணா. எப்போடா ஊரிலிருந்து வந்த? மது ரூமில் இருக்கிறாளா?” என்றவளின் குரல்கேட்டு திரும்பினான்.

அவள் தன்னிடம் உண்மையை வாங்காமல் இங்கிருந்து செல்ல விடமாட்டாள் என்ற உண்மை உணர்ந்து தன்னுடைய  கைகடிகாரத்தில் பார்வையை ஓட்டிய கிருஷ்ணா, ‘நேரம் வேற ஆயிருச்சு..’ என்று சிலநொடி தயங்கி நின்றான்.

அதற்குள் அவள் அவனை நெருங்கிட, “ஸாரி பிரீத்தி பேச நேரமில்ல. நீ இந்தச் சாவியை வெச்சுக்கோ.. நான் நைட் வந்து எல்லாத்தையும் விளக்கமாகச் சொல்றேன்..” என்றவன் வேகமாகப் படியிறங்கிச் சென்றுவிட்டான்.

அவன் செல்லும் திசையைப் பார்த்தவள், “நீயெல்லாம் நல்ல வருவ கிருஷ்ணா..” அவளும் வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

பிரீத்தி படியிறங்கி வரவும், கிருஷ்ணா பைக்கில் வலதுப்புறம் செல்ல, இடதுப்புறம் ஆட்டோவில் வந்து இறங்கினாள் மதுமதி. சாண்டில் கலரில் கிரீன் கலர் டிசைன் செய்யபட்ட குர்த்திஸில் நின்றவளின் மீது பிரீத்தியின் பார்வை படிந்தது.

அவள் கேள்வியுடன் அவளை நோக்கி நடக்க ஆட்டோவிற்கு பணம் கொடுத்துவிட்டு திரும்பியவளின் முகம பார்த்தும், “ஹே மது.. எப்படி இருக்கிற..” என்றவளின் முகம் நொடியில் மலர்ந்தது.

அவளின் குரல்கேட்டு திரும்பிய மது, ‘பிரீத்தி அக்கா..’ என்று அவளைக் கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டாள்.

“புருசனுக்கு கொடுக்க வேண்டியதை மறந்து எனக்குக் கொடுக்கிற போல..” என்று அவளை கிண்டலடிக்க மதுவின்  வெக்கத்தில் சிவந்தது.

“கிருஷ்ணா இப்போதான் போறான்..” என்றவள் நேரமாவதை உணர்ந்து,

“இந்த உங்க வீட்டு சாவி. நீ வருவது அவனுக்குத் தெரியுன்னு நினைக்கிறேன். அதன் சாவியை என்கிட்ட கொடுத்துட்டு போகுது பக்கி..” என்று கிருஷ்ணாவை அவள் திட்ட மது புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.

பிரீத்தி சொன்ன விஷயம் மதுவை வியப்பில் ஆழ்த்தியது. அவள் இந்தியா வரும் விஷயம் அவனுக்கு எப்படி தெரிந்தது என்ற சிந்தனையுடன் அவள் நின்றிருந்தாள்.

அவள் வருவாள் என்ற எண்ணத்துடன் சாவியைப் பிரீத்தியிடம் கொடுத்துவிட்டு சென்ற கணவனை நினைத்து மனதிற்குள் கொஞ்சம் கர்வமாகவே உணர்ந்தாள் மதுமதி.

அந்த உணர்வில் அவளின் உதட்டில் புன்னகை தானாக மலர்ந்தது. ஏதோ நினைவில் சிரித்தபடி நிற்கும் மதுவைக் கண்ட பிரீத்தி, “நீ நல்லா அமெரிக்காவில் போய் உட்கார்ந்துட்ட.. அவன் பட்டபாடு எங்களுக்குத்தானே தெரியும்..” என்றதும் மதுவின் முகம் சோகத்தைத் தத்தெடுத்தது.

அவள் வந்து இறங்கியதும் அவளுக்கு டென்ஷன் கொடுக்க வேண்டாம் என்று நினைத்த பிரீத்தி, “மகளே நீ வீட்டுக்குப் போ.. நான் வேலையை முடிச்சிட்டு வந்து உன்னைக் கவனிச்சிக்கிறேன்..” அவளின் கையில் சாவியைக் கொடுத்துவிட்டு இரண்டடி எடுத்து வைத்தாள்.

பிறகுதான் அவளுக்குப் பிளாட் நம்பர் தெரியாது என்ற சிந்தனையுடன் திரும்பி, “பிளாட் நம்பர் 21. இரண்டாவது ப்ளோர்..” என்றதும் சரியான தலையசைத்து அவளை அனுப்பிவிட்டு வேகமாக மாடி ஏறினாள் மதுமதி.

“சரியான கேடி பயபுள்ள.. பொண்டாட்டி ஊரிலிருந்து வருவதை ஒரு வார்த்தை சொன்னானா பாரு..” என்று கிருஷ்ணாவை வருத்தேடுத்தவண்ணம் ஆபிஸிற்கு சென்றாள் பிரீத்தி.

அவள் பிளாட்டின் கதவைத் திறக்கும் சத்தம்கேட்டு ஜானு கூண்டிற்குள் இருந்து எட்டுப் பார்த்தாள். முதலில் அவளைக் கவனிக்காத மதுவின் பார்வை வீட்டைச்சுற்றி வந்தது. அந்த வீட்டிற்கு அன்றுதான் முதல் முதலாக வருகிறாள்.

மொத்தம் மூன்றே அறைகள் கொண்ட சின்னப் பிளாட். ஒருபக்கம் சமையறை மற்றும் பூஜையறை. பெரிய ஹால் அடுத்து ஒரு சின்ன பெட்ரூம் அதற்கு பக்கத்தில் குட்டி பால்கனி. தன்னுடைய பெட்டியுடன் வீட்டிற்குள் நுழைந்த மதுவின் மனம் நிம்மதியடைந்தது.

அந்த ஹாலை சோபாக்கள் அலங்கரிக்க ஒருபக்கம் சின்ன மீன் தொட்டியில் இரண்டு மீன்கள் மட்டும் இருந்தது. சமையலறைக்குப் பக்கத்தில் டைனிங் டேபிள். அந்தச் சுவற்றில் அவர்களின் கல்யாண போட்டோ பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. கண்ணன் பெயிண்டிங் சில  சுவர்களை அலங்கரித்தது.

சின்ன வயதில் கிருஷ்ணா செய்த புல்லாங்குழல் மயிலிறகின் நடுவே அலங்கரித்தது. அவள் சமையலறைக்குள் நுழைந்து அங்கே சுற்றிப் பார்த்துவிட்டுப் படுக்கை அறைக்குள் நுழைந்தாள்.

அந்த அறையிலிருந்த பொருட்களைக் கண்டு வியப்பில் அவளின் விழியிரண்டும் விரிந்திட, ‘இதெல்லாம் எப்போ வாங்கினார்..’ என்ற கேள்வியுடன் சாய்வு நாற்காலில் அமர்ந்து சிறிதுநேரம் ஆடிவிட்டு பால்கனியை சுற்றிப் பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவனுடைய காதல் மனம்பற்றி அங்கிருந்த ஒவ்வொரு பொருட்களும் அவளுக்கு எடுத்துரைத்தது. கணவனின் காதலில் துளியும் கள்ளமில்லை என்று என்றுணர்ந்த அவளின் மனம் சிறகின்றி வானத்தில் பறந்திட ஹாலுக்கு வந்தாள்.

அவள் வந்த சந்தோஷத்தில் தன்னை மறந்த ஜானு, “ராதா வந்துட்டா.. ராதா வந்துட்டா..” என்று வீட்டையே ரவுண்ட் அடித்தது. அவள் வந்ததில் ஜானுவிற்கு தான் கொண்டாட்டம்!

அவள் ஹாலிற்கு வரும்பொழுது தன்னுடைய சிறகு விரித்து அங்கும் இங்கும் பறந்த ஜானு மீண்டும் மீண்டும் அவளின் பெயரையே உச்சரித்தது.

“ராதா.. ராதா..” என்று ஜானு நடுவீட்டில் ரவுண்ட் அடிப்பதைக் கண்டு சிலையென நின்றுவிட்டாள் மது.

என்னதான் அதோடு அவள் ஆயிரம் சண்டை போட்டாலும் அதுதான் தன்னைப் பார்த்தும் சந்தோஷத்தில் வீடு ரவுண்டு அடிப்பதைக் கண்டு அவளின் மனதிற்கு இதமாக இருந்தது.

‘ஐயோ ஜானு.. நீ இன்னும் இங்கேதான் இருக்கிறாயா..’ என்று தலையில் கைவைத்து அவள் சோபாவில் அமர்ந்துவிட்டாள்.

அவள் அமர்ந்திருக்கும் தோரணை கண்டு அவளின் அருகில் வந்த ஜானு, “ராதா நல்லா இருக்கியா?” என்று பாசத்துடன் கேட்டது. அவளைக் கொலைவெறியுடன் பார்த்தாள் மது.

அவளின் பார்வை உணர்ந்த ஜானு, “ஏன் முறைக்கிற.. ஏன் முறைக்கிற..” என்று சிறகுகளைப் படபடவென்று அடித்தது

‘நீ இன்னும் இங்க தான் இருக்கிறாயா.. என்னைக் கிருஷ்ணாவிடம் போட்டுக் கொடுப்பதே உன்னோட மெயின் வேலை.. உன்னிடமிருந்து நான் எப்படி தப்பிக்க போறேனோ..’என்று அவள் சைகையில் ஜானுவிடம் பேசினாள்.

அது அவளை பாவமாகப் பார்க்க மதுவின் மனம் உருகிவிடவே, ‘ஜானு நீ எப்படி இருக்கிற..’ என்று அவள் செல்லம் கொஞ்சி அதன் சிறகைத் தொட கோபத்தில் அவளைக் கடித்து வைத்தாள் ஜானு..

‘ஆஆஆ..’ என்று அலறிய மது ஜானுவை முறைத்துவிட்டு கையின் விரலைப் பார்த்தாள். அவள் கடித்த இடத்தில் ரெத்தம் சொட்டியது.

அது கடித்த கடியில் வலி பொறுக்காமல் மது அழுக, “என்கிட்ட பேசாதே..” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கூண்டிற்கு சென்றுவிட்டாள் ஜானு.

மது கோபத்துடன் அவளை முறைக்க அதுவும் அவளை முறைத்தது. மதுவும், ஜானுவும் இருவேறு துருவங்கள். இவளும் கிளிதானே என்று ஜானுவிடம் சண்டை போடாமல் இருக்க மாட்டாள். அதுவும் அவளோடு சண்டை போடாமல் இருக்காது.

அவள் வீட்டிற்கு வந்த முதல் நாளே பிரச்சனையா? இந்த இருவருக்கும் இடையே கிருஷ்ணாவின் பாடு இனி என்ன ஆகப் போகுதோ?