UUP–EPI 7

அத்தியாயம் 7

ப்ரஜெஸ்டரன் (progesterone) எனும் ஹார்மோன் மாதவிடாய் மற்றும் கர்ப்பம் தரித்தலுக்கு உதவும் மிக முக்கிய ஹார்மோனாகும். இந்த ஹார்மோன் கரு முட்டை வெளியானதும், கரு தரிக்க உடலை தயார் செய்கிறது. கரு தரிக்காமல் போகும் பட்சத்தில், முட்டை உதிர்ந்து மாதவிடாய் நேருகிறது. இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது தான் மாதவிடாய் அப்நார்மலாக இருக்கும். அதோடு கர்ப்பம் அடைவதிலும் பிரச்சனைகள் எழும்.  

 

அன்று

“அப்பா! எனக்கு சம்முவ பார்க்கனும்பா. அவ ஸ்கூலுக்கும் வரல, விளையாடவும் வரல. அம்மா அவ வீட்டுப் பக்கமே போக கூடாதுன்னு சொல்லுறாங்க. மீறி போனேனா, மீனாம்மா விரட்டி விட்டுட்டாங்கப்பா”

குழப்பமே வடிவாகத் தன் முன்னே நின்றிருந்த மகனை யோசனையுடன் பார்த்தார் பரமு. அது ஒரு அந்தி சாயும் நேரம். சரக்கடிக்க கிளம்பிக் கொண்டிருந்தவரைத் தான் நிறுத்தி வைத்துப் பேசிக் கொண்டிருந்தான் கதிர்.

“அது வந்துப்பா ராசா! அது வந்து”

“சொல்லுங்கப்பா! சம்முக்கு அம்மை கிம்மை போட்டுருக்கா? காய்ச்சல், பேதினா கூட ஸ்கூலுக்கு லீவ் போட்டாலும் என் கூட விளையாட வராம இருக்க மாட்டாளே. சொல்லுங்கப்பா! அவளுக்கு என்ன?” விடாமல் தன் தகப்பனை நச்சரித்தான் பன்னிரெண்டு வயது கதிர்.

மணி வேறு ஆகிக் கொண்டிருந்தது. கை காலெல்லாம் தண்ணியடிக்காமல் கபடி ஆடிக் கொண்டிருந்தது பரமுவுக்கு. சொல்லாமல் கதிர் விட மாட்டான் என அறிந்தவர், தாடையை சொறிந்துக் கொண்டார்.

“மருமக பெரிய மனுசி ஆகிட்டாடா கதிரு” தண்ணி உள்ளே போகாத நேரத்தில் நார்மலாக பேச்சு வரும் அவருக்கு.

“அவ பெரிய மனுஷி ஆனது இப்போத்தான் தெரியுமா உங்களுக்கு எல்லாம்! அவ எப்பவுமே என்ன விட பெருசா, பெரிய மனுஷியா தான் இருக்கா. நல்லா வழிச்சு வழிச்சு சாப்படறா இல்ல, அதான்! அதுக்கு ஏன் வீட்டுலயே இருக்கனும்?”

“அடேய்! இதெல்லாம் பொம்பளைங்க சமாசாரம்டா! நான் என்னன்னு ஒனக்கு விளக்குவேன்! என் ராஜால்ல, செல்லம்ல! அப்பா கடைக்குப் போகனும்டா! அப்புறம் பேசலாம்டா” கை காலை உதறிக் கொண்டார் பரமு. அப்பாவின் கையை இறுகப் பற்றிக் கொண்ட கதிர்,

“எனக்குப் புரியற மாதிரி சொல்லுங்க! அப்போத்தான் விடுவேன்” என பிடிவாதம் பிடித்தான்.

“நம்ம சம்மு இவ்வளவு நாளா குழந்தையா திரிஞ்சிட்டு இருந்தால்ல, இப்போ குமரியா ஆகிட்டாடா! என் ராஜாத்தி தங்கம் இப்போ புடம் போட்ட தங்கமா மாறிட்டா! தங்கத்த சும்மா அப்படியே வெளிய விட்டுற முடியுமா? உரசிப் பார்த்துருவாங்கல்ல! அதான் இனிமே மருமகள அடக்கம் ஒடுக்கம்னு சொல்லி பாதுகாத்து வைப்பாங்கடா கதிரு!”

தன் தகப்பன் சொன்னதை கிரகிக்க இவன் முயல, பரமு அவன் கையை பிரித்துக் கொண்டு அப்படியே எஸ்சாகி இருந்தார்.

“அடக்கி வச்சிருவாங்களா? அவளையா? நடக்குமா?” என சத்தமாக முணுமுணுத்தவன் மீண்டும் அவள் வீட்டருகே போய் நின்றான். சண்முவின் சொந்தங்கள் வாசலில் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

“சம்மு, சம்மு!” என இவன் அழைத்தும் அவள் உள்ளே இருந்து வரவில்லை. மீனாட்சிதான் வெளியே வந்தார்.

“என்னடா கதிரு? நான் தான் இந்தப் பக்கமே வரக்கூடாதுன்னு சொன்னேன்ல”

“சம்முவ பார்க்கனும் மீனாம்மா! ரெண்டு நாளாச்சு அவளப் பார்த்து!” பாவமாய் சொன்னவனை ஆற்றாமையுடன் பார்த்தார் மீனாட்சி. அவன் குரலுக்கு வெளியே ஓடி வர முயன்ற மகளை இப்பொழுதுதான் தலையில் கொட்டி அமர வைத்து விட்டு வந்திருந்தார் அவர்.

“அதெல்லாம் இப்போ பார்க்க முடியாதுடா! அஞ்சாறு நாளுல ஸ்கூலுக்கு வருவா, அப்போ பார்த்துக்க! அதோட இனிமே அடிச்சுப் புடிச்சு, தொட்டு வெளாடறதெல்லாம் விட்டுருனும் கதிரு! மீனாம்மா சொல்லறது புரிஞ்சதா?”

அவர் குரலில் இருந்த மிரட்டலில் புரியாவிட்டாலும் புரிந்தது என்பது போல தலையாட்டியவன், சோகமாக திரும்பி நடக்க ஆரம்பித்தான். பெரியவர்கள் அரைகுறையாக அவனுக்கு அளித்த விவரத்தில் அவன் அறிந்துக் கொண்டதெல்லாம், இனி சம்முவைத் தொட்டுப் பேசக் கூடாது, சேர்ந்து விளையாட கூடாது, தன்னிடம் இருந்து தள்ளி நிறுத்த வேண்டும் என்பதுதான். இவ்வளவு நாள் தனக்கென இன்ப துன்பங்களில் துணையிருந்த ஒரே தோழி திடீரென தன் வாழ்க்கையில் இருந்து விலக்கப்பட்டது போல தோன்ற கண்கள் கலங்கியது அவனுக்கு. அந்த நிகழ்வே நீ ஆண் நான் பெண் எனும் பேதத்தை அவர்களுக்குள் முதலில் விதைத்தது.

“கதிரு டேய்!”

சம்முவின் குரல் பின்னால் கேட்க தானாக நின்றது அவன் நடை. மகிழ்ச்சியுடன் திரும்பினான் கதிர். அங்கே பாவாடை, தாவணியில் மூச்சு வாங்க நின்றிருந்தாள் சண்மு. அந்தி வெயில் முகத்தில் அடிக்க, மஞ்சள் தேய்த்த முகம் பளபளவென மின்னியது. நெற்றியில் அழகாக குங்குமப் பொட்டு. காதில் சின்னதாக தங்க ஜிமிக்கி, கழுத்தில் குட்டி ஆரம். சிக்கெடுத்து சீவப்பட்ட தலையில் கனகாம்பர பூ குலுங்கியது. ஓடி வந்ததில், தலை கலைந்து பூ கோணல் மாணலாக தொங்கியது. புதிதாக தாவணி உடுத்தி இருப்பதால், ஒரு கை தாவணியை இழுத்து விட்டுக் கொண்டே இருந்தது. மறு கை தலையை சொறிந்துக் கொண்டு இருந்தது. சர்வ அலங்கார பூஷிதையாய் நின்றிருந்த தன் தோழியைப் பார்த்து கதிருக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

“என்னடி கோலம் இது?” என சத்தமாக சிரித்தான் கதிர்.

சட்டென அவன் வாயைப் பொத்தினாள் சண்மு.

“சிரிச்ச, கொன்னுருவேன் படவா! ரெண்டு நாளா வீட்டு வாசல்ல நின்னு சம்மு சம்முன்னு கத்துறியேன்னு சுவரேறி குதிச்சு ஓடி வந்தேன்ல, இப்படித்தான்டா சிரிப்ப!”

உடலில் ஏற்பட்ட மாற்றங்கள், அடி வயிற்றில் சுரீலென இழுக்கும் வலி, இதை செய்யாதே அதை செய்யாதே என மீனாட்சியின் கொட்டுக்கள் என ஓய்ந்து சோர்ந்து போயிருந்தாள் சண்மு. தன் கோலம் கண்டு நண்பன் சிரிக்கவும், கோபம் வந்தாலும் அவளையும் மீறி சில பல கண்ணீர் துளிகள் கன்னத்தை நனைக்க ஆரம்பித்தன. மற்றவர்களை அழ வைத்து பார்க்கும் தன் தோழி கண் கலங்கவும், சட்டென கதிரின் சிரிப்பு உறைந்தது.

“ஏன்டி அழற? சரி, சரி சிரிக்கல. இந்த பாவாடை ரொம்ப நல்லா இருக்கு. இந்தப் பூ ரொம்ப அழகா இருக்கு. பொட்டு சூப்பரா இருக்கு. அழாதே ப்ளீஸ்! சம்மு அழாதே!”

தன் தோழி அழகாய் இருக்கிறாள் என்று கூட சொல்லத் தெரியாமல், அவள் அணிந்திருந்தவைகளை அழகாய் இருக்கிறது என சொல்லிக் கொண்டு இருந்தான் கதிர். பத்து வயதுக்கு மேல் குழந்தையாய் திரிந்த குட்டிப் பெண்களை பூப்படைய வைத்து கட்டாயமாய் முதிர்ச்சி அடைய வைக்கும் இயற்கை, ஆண்களை மட்டும் பதினைந்து வயது வரை சிறுவர்களாகவே திரிய வைத்து வேடிக்கைப் பார்க்கிறது.

“எனக்கு எவ்ளோ கஸ்டமா இருக்குத் தெரியுமாடா கதிரு! அம்மா ஏசிட்டே இருக்காங்கடா! அதுக்குள்ள குத்த வச்சிட்டாளே, ஒத்தப் பொம்பளையா இவள எப்படி கட்டி மேய்க்கப் போறேனோன்னு என்னைப் பார்த்து பார்த்து அழறாங்கடா! வீட்டுக்கு வர சொந்தக்காரங்களாம் ஒரே அட்வைஸ்டா! தலை குனிஞ்சு நில்லு, ஓடாதே, பூமி அதிர நடக்காதே, சோத்தை அள்ளி வாயிலே அடைக்காதே அப்படி இப்படின்னு. எல்லாத்தையும் போனா போகுதுன்னு விட்டுருவேன்டா. ஆனா இனிமே ரெண்டு வேளை குளிக்கனும்மாம்டா! அதை நினைச்சாத்தான் அழுக்காச்சியா வருது” கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சண்மு.

தான் சிரித்ததால் அழவில்லை தோழி, குளிக்க சொன்னதால் தான் அழுகிறாள் என்பதாகப் புரிந்துக் கொண்டவன் அவளை சமாதானப் படுத்த முனைந்தான்.

“சென்னைக்குப் போனப்போ செண்ட் வாங்கிக் குடுத்தாங்க அம்மா! அதை உனக்கு தரேன்டி. ஓன் டைம் குளி. ஓன் டைம் குளிக்கற மாதிரி நடி. அந்த செண்ட் போட்டுக்கோ. வாசமா இருப்பே, யாருக்கும் தெரியாது நீ குளிக்கலேன்னு. இதுக்கெல்லாம் அழுவாங்களா, மக்கு!” என தோழிக்கு ஐடியாவை வாரி வழங்கினான் நண்பன்.

“அப்போ சரி! நான் கெளம்பறேண்டா! வீட்டுல ஒரு மூலையில உட்கார வச்சிட்டாங்க என்னை. ஓன் பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு ஓடி வந்தேன். எப்படியும் நான் காணோம்னு கண்டுப்புடிச்சிருப்பாங்க. அம்மா ரெண்டு நாளா அடிக்கறதுல இல்ல, வெறும் கொட்டுத்தான். அதனால பயம் இல்லடா! நான் போறேன்டா கதிரு. அடுத்த வாரம் ஸ்கூலுல பார்ப்போம்”

திரும்பி ஓட முயன்றவளை, கதிரின் குரல் நிறுத்தியது.

“பெரிய மனுசி ஆகறதுனா என்னடி சம்மு?”

திரும்பி நின்று நிதானமாகத் தன் நண்பனைப் பார்த்தாள் சண்மு.

“டீச்சர் சொல்லிக் கொடுத்தத சொல்லவா? நானே கண்டுப்பிடிச்சத சொல்லவா?” என கேட்டாள் அவள்.

“ரெண்டையும் சொல்லுடி!”

“டீச்சர் அன்னிக்கு பொம்பள புள்ளைங்க எல்லாத்தையும் மட்டும் தனியா கூப்டு பேசுனாங்கல்ல!”

“ஆமா, நாங்க பசங்களாம் என்னதான் பேசறீங்கன்னு கதவு வழியா ஒட்டுக் கேக்கறதுக்கு வெளிய நின்னிருந்தோம்! ரொம்ப மெதுவா பேசவும் ஒன்னும் விளங்கல”

“ரொம்ப முக்கியம்டா இதெல்லாம் ஒட்டுக் கேக்கறது! டீச்சர் சொன்னாங்க பொண்ணுங்களுக்கு தகுந்த வயசு வந்ததும் உடம்புல மாற்றம் வருமாம். நெடு நெடுன்னு வளர்ந்துடுவாங்களாம். மாசா மாசம் சில நாட்களுக்கு ஒன்னு உடம்புல இருந்து வெளிய போகுமாம். அந்த ஒன்னு என்னன்னு நான் உனக்கு சொல்ல மாட்டேன். நீ பயந்துடுவ! எனக்கே முதல்ல பார்த்ததும் பயம் புடுங்கிக்கிச்சு. டீச்சர் சொல்லி இருக்கலனா கத்தி கதறி இருப்பேன். இதெல்லாம் எல்லா பொம்பள புள்ளைங்களுக்கும் வரதுதானாம். அதனால பயப்படாம இதுக்கெல்லாம் பழகிக்கனுமாம். அப்புறம் அந்த டைம்ல எப்படி சுத்தபத்தமா இருக்கனும் அப்படிலாம் சொல்லிக் குடுத்தாங்கடா!”

“நான் பயப்பட மாட்டேன் சம்மு! நீ சொல்லு! நான் பயப்படற அளவுக்கு என்ன வெளிய போகுது உன் உடம்புல இருந்து? சொல்லு, எனக்கு தெரியனும்”

இடுப்பில் கை வைத்து கதிரை முறைத்தாள் சண்மு.

“சரி, சரி காளியாத்தா மாதிரி முறைக்காதே! அதப்பத்தி கேக்கல! பெரிய மனுஷி ஆகறதுன்னா என்னன்னு நீயே என்னமோ கண்டுப்புடிச்சேன்னு சொன்னியே அத பத்தி சொல்லு”

“பெரிய மனுஷி ஆகறதுனா வேற ஒன்னும் இல்லடா கதிரு, இந்த சம்மு இனிமே வாலை சுருட்டி வச்சிட்டு சண்முகப்ரியாவா மாறனும். அவ்வளவுதான்டா மேட்டரு” என சொல்லியவள் சிட்டாகப் பறந்து விட்டாள்.

மனைவிக்குப் பிடிக்காது என தெரிந்தும், மனதுக்குள் மருமகளாய் நினைத்து விட்டவளின் சடங்குக்கு சுத்தபத்தமாய் போய் மாமன் சீர் கொடுக்க தவறவில்லை பரமு. பட்டு சேலை, பூ, பழம் என ஜமாய்த்து விட்டு வந்தார் அவர். குளியல் அறையில் மறந்துப் போய் கழற்றி வைத்திருந்த பார்வதியின் இரண்டு பவுன் மோதிரம் சேலையாய் மாறியது தனி கதை. அடுத்து வந்த இரண்டு வாரத்துக்கு பரமு இடி சோறு வாங்கியது தனி கதையின் கிளை கதை.

 

 

இன்று

கடை வேலை ஆரம்பித்திருந்தது. கட்டுமானப் பணிக்கான பொருட்கள் எல்லாம் கொண்டு வந்துக் குவிக்கப்பட்டிருந்தன. தனக்கு கீழே மூன்று பேரை வைத்து கட்டிடம் எழுப்பும் வேலையை ஆரம்பித்திருந்தான் சிவா. கட்டிடம் கட்டுவதற்கு முன் சின்னதாக பூஜை செய்யலாம் என மீனாட்சி சொல்ல, மற்ற விஷயங்களுக்குத் தான் செவி சாய்ப்பது இல்லை இதையாவது அவர் விருப்பப்படி செய்யலாம் என விட்டு விட்டாள் சண்மு.

மீனாட்சி காலையிலேயே அவளுடன் புறப்பட்டு வந்திருந்தார். கடை கட்டும் இடத்தில் இரண்டு செங்கல்லை வைத்து அவரே பூஜை செய்தார். அமைதியாகவே தாய் சொல்லும் ஸ்லோகங்களை கேட்டப்படி ஒதுங்கி நின்றிருந்தாள் சண்மு. சாமி கும்பிட்டு முடித்தவர், மகள் நெற்றியில் திருநீறை வைத்து விட்டார்.

“சண்மு! செடி கொடிங்க கிட்ட ஆறுதல் தேட முடியும்டி ஆனா அரவணைப்ப எதிர்ப்பார்க்க முடியாது! அனுபவத்துல சொல்லுறேன், இதுதான் வாழ்க்கைன்னு நின்னுறாதேடி! மாப்பிள்ளை சொல்லவும் தான் இந்த கடை கண்ணி வைக்கறதுக்கெல்லாம் ஒத்துக்கிட்டேன். உன்னோட வீம்புல வாழ்க்கைய தொலைச்சிட்டு நிக்காதடி. திரும்ப ஆத்திரேலியாவுக்கே போயிருடி! புருஷன், புள்ளக்குட்டின்னு வாழ்ந்தா தான்டி பெருமை” என கண்ணீர் குரலில் சொன்னார் மீனாட்சி.

“யாருக்குப் பெருமை?” என கடுப்பான குரலில் கேட்டாள் சண்மு.

“உனக்குத்தான்டி பெருமை!”

“அம்மா, நான் கூட இருக்கறது கஸ்டமா இருக்குதுன்னா சொல்லிரு! கடையோடு சேர்த்து ஓய்வெடுக்க சின்னதா ரூம் கட்ட சொல்லிருக்கேன். அங்கயே நான் தங்கிக்கறேன். என்னால உனக்கு எந்தக் கஸ்டமும் வேணா! பெருமை இல்லாத பொண்ண வச்சிக்கிட்டு நீ பொருமவும் வேணா”

கொஞ்ச நாளாக அமைதியே உருவாக இருந்தவள், திரும்பிப் போக சொல்லவும் சீறி விட்டாள்.

“நீ மனசுல என்ன திட்டம் போட்டு இங்க திரும்ப வந்துருக்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியாடி? அப்படி மட்டும் எதாச்சும் நடந்ததுச்சு நான் தூக்குல தொங்கிருவேன்!” என குரலை உயர்த்தினார் மீனாட்சி.

முழு நிமிடம் கண்களை மூடித் திறந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவள்,

“ம்மா! நீ மனசுல எத நினைச்சுப் பேசறேன்னு எனக்குத் தெரியாது! ஆனா இனிமே என் வாழ்க்கை இந்த செடி கொடியோடதான். இத மட்டும் நல்லா மனசுல ஏத்திக்கோ! இதுக்கும் மேல இப்படி பேசிட்டு இருந்தேன்னு வை, கிளம்பிக் கண் காணாம போயிருவேன் பாத்துக்கோ” என அமைதியாகவே சொன்னாள் சண்மு.

இவளுக்கு பதில் சொல்ல வந்த மீனாட்சியின் கண்கள் சண்முவின் பின்னால் வந்து நின்றவன் மேல் நிலைக் குத்தி நின்றது. முகத்தில் புன்னகையை ஒட்ட வைத்தவர்,

“வாப்பா கதிரு! நல்லா இருக்கியா?” என கேட்டார்.

மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தியவன்,

“நல்லாருக்கேன் மீனாம்மா” என்றான்.

“அன்னைக்கு நிச்சயத்துக்கு வந்திருந்தேன்! பொண்ணு மகாலட்சுமியாட்டம் இருக்காப்பா! உனக்கு ரொம்ப பொருத்தமா இருந்தா! சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ கதிரு! உன்னை குடும்பஸ்தனா பார்க்கப் போறதுல எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா!” என பெரிதாக புன்னகைத்தார்.

ஒன்றும் சொல்லாமல் புன்னகையைத் திருப்பிக் கொடுத்தவனின் பார்வை மட்டும் சண்முவின் மேலேயே பதிந்திருந்தது.

“இந்தக் கடை, பூந்தோட்டம்லாம் சும்மா கொஞ்ச நாளைக்குத்தான் கதிரு. கோபம் குறைஞ்சதும் திரும்பப் போயிருவா ஆத்திரேலியாவுக்கு. என் மருமகன் எப்ப திரும்ப வந்தாலும் ஏத்துக்குவேன்னு சொல்லித்தான் வச்சிருக்காரு. உன் தோழிக்கு நீ கொஞ்சம் புத்தி சொல்லேன் கதிரு”

அவர்கள் பேசுவதை முகத்தில் எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் பார்த்திருந்தாள் சண்மு.

“சொல்லுறேன்மா” என முடித்துக் கொண்டான் கதிர்.

“சரிப்பா! நீ கிளம்பனா நானும் உன் கூட வரேன். வீட்டுல இறக்கி விட்டுடேன்” என அவனை அங்கே நிற்க விடாமல் அழைத்துக் கொண்டு போனார் மீனாட்சி.

அவர் பாடிய மருமகன் புராணத்தைக் வழி நெடுக கேட்டவன், அவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் சண்முவை நாடி வந்தான்.

அவன் வந்த நேரம் மதிய உணவு நேரமாய் இருக்க, வேலைக்கு சேர்ந்திருந்த இரு பெண்களும், கட்டிட வேலைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களும் சாப்பிட வெளியே சென்றிருந்தனர். சண்முவைத் தேடி நர்சரிக்குள் நுழைந்தவனின் காதில் மெல்லிய குரலில் அவள் பாடிக் கொண்டிருந்த ஆங்கில பாடல் காதை நிறைத்தது.

சத்தம் செய்யாமல், அவள் ரோஜா செடியின் அருகே மண்டியிட்டு காய்ந்த இலைகளை அகற்றி, லேசாக மண்ணை கொத்தி விட்டப்படியே ஹஸ்கி குரலில் பாடிக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் கதிர்.

“I love it when you call me señorita
I wish I could pretend I didn’t need ya
But every touch is ooh la la la
It’s true, la la la
Ooh, I should be running
Ooh, you keep me coming for you”

செனொரிட்டா(மிஸ்) என நீ ஆராதிப்பதை விரும்புகிறேன்

நீ எனக்கு வேண்டாமென பொய்யுரைக்க ஆசைப்படுகிறேன்

ஆனால் ஒவ்வொரு தொடுகையும் ஓ லாலாலா

இது உண்மைதான் லாலாலா

ஓ…ஓட நினைக்கிறேன்

ஓ…உன்னை நோக்கி ஓடி வர வைக்கிறாய்…..(இது டைரக்ட் ட்ரென்ஸ்லேஷன். நம்ம தோழி ஒருத்தங்க அவங்க ஸ்டைல்ல ஒரு ட்ரென்ஸ்லேஷன் குடுத்தாங்க. ஷேர் பண்ணியே ஆகனும். அவ்வளவு அழகு. தேங்க்ஸ் ஃபாத்திமா டியர்)

(அழகே என்று ஆராதிப்பதை விரும்புகிறேன்

என் அருகே நீ வர நான்

விலகி செல்வது போல முயல ஆசைப்படுகிறேன்

நீ நெருங்கி வர

உள்ளுக்குள் ராகமிட

ராகமெல்லாம் லாஆஆஆஆ

லாஆஆஆ லாஆஆஆ

கால்கள் தாளமிட

உன் கால்களின் துணையுடன்……)

அவளின் மெல்லிய குரலில் பட்டுப்போல மிருதுவாய் வந்த ஓலாலாலா கதிரை என்னவோ செய்தது. தலையை பலமாய் உலுக்கிக் கொண்டவன்,

“சேவிங் அண்ட் சோவிங் பத்தி தெரியாதவங்களாம் இங்கிலிபீசுல பாடறது உலக அதிசயமா இல்ல?” என கேட்டு அவனை சுற்றி அவள் குரல் பின்னி இருந்த மாய வலையை வெட்டி எறிந்தான்.

திடீரென கேட்ட குரலில் திடுக்கிட்டாலும், சட்டென சமாளித்துக் கொண்டாள் சண்மு. எழுந்து நின்றவள், மண்ணாய் இருந்த கைகளை ஏப்ரனில் துடைத்துக் கொண்டாள். மெல்ல நிமிர்ந்து கதிரைப் பார்த்தவள்,

“இசை மொழியறியாது ஏசிபி சார்! இசை பிடிச்சிட்டா இங்கிலிபீசு பாட்டென்ன, இஸ்தான்புல் பாட்டு கூட இனிமையாதான் இருக்கும்” என சொன்னாள்.

“இருக்கும், இருக்கும்! மேடம் வெளிநாடெல்லாம் போய்ட்டு வந்தவங்களாச்சே, அவங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்”

“எனக்கு யார் கூடயும் இப்ப ஆர்கியூ பண்ண மூட் இல்ல சார்! நீங்க எதுக்கு வந்தீங்கன்னு சொல்லிட்டு,கிளம்பி போய்கிட்டே இருக்கலாம்” என கட் அண்ட் ரைட்டாக சொன்னாள் சண்மு.

“கடை கட்டி முடிக்கற வரைக்கும் சுதந்திரமா இங்க வந்து போக எனக்கு ஃபுல் ரைட்ஸ் இருக்கு மேடம்”

“கட்டிட வேலை அங்கத்தான் நடக்குது. தேவையில்லாம நர்சரிக்குள்ள வந்து நிக்க வேணாம் சார். என்னோட பேரு ஏற்கனவே ஊருக்குள்ள சந்தி சிரிக்குது. நீங்க வேற அடிக்கடி வந்து நின்னு, இருக்கற பேரை இன்னும் டேமேஜ் பண்ணி வைக்க வேணாம்” என காரமாகவே பதில் கொடுத்தாள் சண்மு. அவனிடம் பேசிக் கொண்டிருந்தாலும், கை மட்டும் அடிக்கொரு முறை இடுப்பைத் தடவி விட்டுக் கொண்டது.

சண்முவை ஏற இறங்கப் பார்த்தான் கதிர்.

“சாப்டியா?”

“அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம் சார்”

“இன்னும் சாப்பிடல! அதான் காரமா பதில் வருது. எதாச்சும் சாப்பிட எடுத்து வந்தியா, இல்லை வாங்கிட்டு வரவா?”

“இத்தனை வருஷமா என் சாப்பாட்டு விஷயத்தை நான் தான் பார்த்துக்கிட்டேன். இனிமேலும் பார்த்துப்பேன். நீங்க கிளம்பலாம்.” என சொல்லியவள், அருகில் இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்துக் கொண்டாள்.

அவளை யோசனையாகப் பார்த்தவன், கையைத் திருப்பி கடிகாரத்தில் தெரிந்த தேதியைப் பார்த்தான். பின் ஒன்றும் பேசாமல் கிளம்பி விட்டான்.

‘இவன் எதுக்கு வந்தான், எதுக்கு சண்டைப் போட்டான், ஏன் சாப்டியா கேட்டான், எதுக்கு கடிகாரத்தப் பார்த்துட்டு கிளம்பிட்டான்?’ என மனதில் ஒரு பெரிய பட்டிமன்றமே நடத்தி ஓய்ந்தாள் சண்மு. அதற்குள் சாப்பிட போயிருந்தவர்கள் திரும்பி இருந்தார்கள்.

“அக்கா, கதிரண்ணா இத உங்க கிட்ட குடுக்க சொன்னாரு” என ஒரு பொட்டலத்தை நீட்டினாள் கடைக்கு வேலைக்கு சேர்ந்திருந்த பெண் சாருமதி.

அதை வாங்கிப் பிரித்து பார்த்த சண்முவின் கண்கள் கலங்கி சிவந்தது. அதனுள்ளே அவள் விரும்பி சாப்பிடும் மட்டன் பிரியாணி பார்சலும், மாதாந்திர பிரச்சனையின் போது வரும் வலிக்கு அவள் சாப்பிடும் மாத்திரை அட்டையும் இருந்தது.

 

(உயிர் போகும்…)