UTN 1

UTN 1

உயிர் தேடல் நீயடி 1

நீல கடலின் மேல் மட்டம் போல, அவன் மனமும் ஆழ்ந்த அமைதியை தத்தெடுத்துக் கொண்டிருந்தது.

எண்ணிலடங்கா விசயங்களை தன்னுள் அடக்கி மேல் பார்வைக்கு அமைதியை மட்டுமே காட்டும் நடு கடலின் முகம் போல, அவன் முகமும்
அமைதியை மட்டுமே காட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வாரம்!

விரல் விட்டு எண்ண வெறும் ஏழே நாட்கள்!

அவன் வாழ்க்கையையே தலைகீழாய் புரட்டி போட்டிருந்தன!

அவனால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று… எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று… இப்போது அவன் கண்முன்னே நடந்தேறிக் கொண்டிருக்க, இயலாமையால் அவன் முகம் கல்லாய் இறுகி போயிருந்தது.

‘ஈருடல் ஓருயிர்’ என்பார்களே! அவனின் இன்னொரு உடல் தன் இன்னுயிரை துறந்து அவன் முன்னால் கிடத்தப்பட்டிருந்தது.

சிதைந்த குவியலாய், வெறும் வெண் மூட்டையாய், கிடத்தப்பட்டிருந்த அந்த உடல்… உண்மையில் அவன் எண்ணம் முழுவதையும் ஆக்கிரமித்திருக்கும் அவன் உயிர் மனைவி தானா? என்ற கேள்விக்கு அவனின் ஆணித்தனமான பதில் ‘இல்லை’ மட்டும் தான்.

அதே எண்ணத்தில் தான் இறுதி சடங்குகள் எதிலும் அவன் பங்கு கொள்ளவில்லை. சொந்தங்கள் வற்புறுத்தியும் அவன் அசையாமல் அமர்ந்திருந்தான் சக்கர நாற்காலியில்.

அவன் கேசத்தை முழுவதுமாக மறைத்தபடி பெரிய கட்டு தலையில் கட்டப்பட்டிருந்தது. அவன் இடது கையின் முக்கால் பாகமும் வெண் துணியால் கட்டப்பட்டிருந்தது.

அவன் வலது காலும் முழுவதுமாக பேண்டேஜ் துணிக்குள் மறைந்து போயிருந்தது.

அவன் கன்னங்கள், மூக்கு, வலது கை என ஆங்காங்கே ஓரளவு குணமாகி கொண்டிருந்த சிராய்ப்புகள், ஒருவாரம் முன்பு அவனுக்கு ஏற்பட்ட விபத்தின் தாக்கத்தை பறைசாற்றிக் கொண்டிருந்தன.

அதைவிட முடிந்து போன விபத்து அவன் உயிர் காதலை அல்லவா அவனிடமிருந்து பறித்துக் கொண்டு போய்விட்டது.

சுற்றி இருப்பவர்களின் ஓலங்களுக்கு இடையே பூவுடல் மின் மயானத்திற்குள் நகர்த்தப்பட்டது.

நொடிகள் நிமிடங்களாக நீள… இப்போது அனைவரின் பார்வைக்கும் வெறும் சாம்பல் மட்டுமே காட்சியானது.

இப்போதும் அவன் கண்களில் கலக்கம் தென்படவில்லை. இறுகி இருந்த அவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் தென்படவில்லை.

அழுது சிவந்து நீர் சுமந்த இருவிழிகள் அவனை ரௌத்திரமாய் வெறித்தபடி அவனருகில் வந்தன.

நடுவயதை தாண்டி இருந்த அந்த பெண்மணி அவன் சட்டையை இருகைகளாலும் பிடித்து, “அடாபாவி… நீ மனுசனே இல்ல டா ராட்சசன். பணவெறி பிடிச்ச மிருகம் டா நீ. உன்ன போய் நல்லவன்னு நம்பி உன் கையில என் பொண்ண ஒப்படைச்சேனே, அவளை வெறும் சாம்பலாக்கிட்டியே டா” என்று தன் சக்தி முழுவதையும் திரட்டி அவனை உலுக்கி, கதறி அழுதார் அவர்.

அவன் ஒளியிழந்த கண்கள் அவரை வெறுமையாய் வெறித்தன.

அவனுக்கு பாதுகாப்பாக பின்னால் நின்றிருந்த கரும்பச்சை சீருடையில் நின்ற ஆஜானுபாகுவான மெய்காப்பாளன் ஒருவன் முன்னே வந்து அவன் சட்டையில் இருந்து அந்த அம்மாவின் கையை விலக்கினான்.

“நாங்க வசதியில்லாத ஏழைங்கன்ற தால, உன்ன ஒண்ணும் செய்ய முடியாதுன்ற இறுமாப்புல‌ இருக்கீங்கல்ல, என் பொண்ணோட சாவுக்கு நியாயம் கிடைக்காம நான் தூங்க மாட்டேன். அவ வாழ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே அவளை கொன்னு எரிச்சிட்டீங்களே” என்று பெற்ற மகளை பறிகொடுத்த ஆற்றாமையில் அந்த தாய் வாயிலும் வயிற்றிலும் அடித்து கொண்டு கதறி அழுது தீர்த்தார்.

வலி மிகுந்த வெற்று பார்வை தவிர அவனிடம் எந்த பதிலும் இல்லை இப்போதும்.

“என் பொண்ணு சாவுல எனக்கு சந்தேகம் இருக்குன்னு போலீஸ்ல புகார் கொடுக்க போறேன். என் பொண்ணோட இந்த நிலைமைக்கு காரணமானவங்க யாரா இருந்தாலும் அழிஞ்சு தான் போவாங்க…”

அவர் வயிறு எரிந்து சாபம் விட, அவரின் மகளும் மகனும் கலக்கமும் ஆதங்கமுமாக அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர்.

மேலும் அவர் கண்ணீரும் கதறலுமாய் சொன்ன வசவுகள் எதுவும் அவன் காதில் ஏறவில்லை.

அவர்கள் மூவரும் பார்வைக்கு மறையும் வரை அவர்களை வெறித்து கொண்டிருந்தவன், கையசைப்பில் பாடிகார்ட் அவன் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு அருகே நின்றிருந்த ஆம்புலன்சில் ஏற்றி விட்டான்.

கண்களை இறுக மூடி தலையை பின்புறம் சாய்த்து கொண்டான். அவன் உடல் காயத்தின் வலி அவனை சிறிதும் பாதிக்கவில்லை. அவன் உயிர் வலி அதைவிட அதிகமாக இருந்த காரணத்தினால்.

மூடிய அவன் இமைகளுக்கு இடையே அவளும் தானும் இருந்த கடைசி நிமிடங்கள் தோன்றி மறைய, அந்த சந்தோச தருணத்தில் மின்னலை போல தங்களை தூக்கி எறிந்துவிட்டு பறந்தது அந்த கார்…!

அவன் மூடிய இமைகளின் ஓரம் இருதுளி கண்ணீர் கசிந்தது.

மென்மை சுமந்த பூங்கரம் அவன் கண்ணீரை வாஞ்சையோடு துடைக்க, அவன் இமைகள் மெல்ல திறந்தன.

வேதனை, ஆற்றாமையோடு அவன் கைகளை ஆறுதலாக பற்றி கொண்டாள் ஜனனி!

# # #

பெறுவதும் இழப்பதும் வாழ்க்கையில் மாற்ற இயலாத ஒன்று. தான் நினைத்ததை மட்டுமே சாதித்து பழக்கப்பட்ட இந்த பிடிவாதக்காரனின் வாழ்வின் வெறுமையான கட்டத்தில் நாமும் உடன் செல்லலாம்… இயல்பு மாறாத ரசனையோடு…

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!