KKRI – 8

அத்தியாயம் – 8

வீட்டின் வேலையெல்லாம் முடித்து மகனை வேலைக்கு அனுப்பிவிட்டு கணவருக்கு மருந்து கொடுத்துவிட்டு வந்தமர்ந்தவர் வீட்டில் நிலவிய அமைதியை உணர்ந்தார். மது இல்லாத வீட்டில் சிரிப்பு சத்தமே இல்லாமல் இருந்தது.

அவர் மகளைப் பற்றிய சிந்தனையில் விழிமூடிய விழிக்குள் வந்து புன்னகைத்தாள் மகள். அவரின் மனம் அவரின் கட்டுப்பாட்டையும் மீறிக் கடந்தகாலம் நோக்கிச் சென்றது. அவரின் கண்களில் கண்ணீர் கசிந்திட கடந்தகாலம் அவரின் கண்களில் படமாக விரிந்தது.

கூட்டு குடும்பத்தில் வாழ வேண்டும் என்ற ஆசையில் தான் ராம்மோகனை காதலித்து திருமணம் செய்தார் நிர்மலா. கணவனின் வீட்டில் நிர்மலாவை யாருக்கும் பிடிக்காமல் போனது.

அந்த நேரத்தில் அவருக்கு அங்கேயே வேலை கிடைக்க மனைவியுடன் சென்னையில் தங்கிவிட்டார் ராம். அதன்பிறகு தன்னுடைய குடும்பத்தினருடன் அவரின் உறவு விட்டுப் போனது.

அதன்பிறகு அவர்களின் வாழ்க்கைக்கு அர்த்தமாக வந்து பிறந்தான் விஷ்ணு. அடுத்த இரண்டு வருடத்தில் மதுமதியும் பிறந்துவிட அவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே சென்றது.

விஷ்ணுவிற்கு தங்கைமீது பாசம் அதிகம். அவளின் மீது உயிரையே வைத்திருப்பவன். ஆனால் தக்க இடத்தில் கண்டிக்கவும் அவன் தயங்கியது கிடையாது. மதுவின் பேச்சு, சிரிப்பு, சேட்டை என்று ரசித்த அவர்களின் உலகம் எட்டு வருடங்களுக்குப் பிறகு  தலைகீழாக மாறிப்போனது.

அவளைப் பார்த்துப் பார்த்து பூரித்துப் போன தாய், தந்தை இருவருமே  கண்ணீர்விட தொடங்கினர். விஷ்ணுவோ ஒரு படி மேலே சென்று அவளுக்காக அனைத்தையும் பார்த்துப் பார்த்து செய்யத் தொடங்கினான்.

தன்னுடைய அப்பா அம்மாவின் மீது உயிரையே வைத்திருந்த மகளோ அவர்களுக்காக மெல்ல மெல்ல முயன்றுத் தன்னை மாற்றிக்கொண்டாள். அவளை இயல்புநிலைக்குக் கொண்டுவர அவர்களைவிட அதிகம் போராடியது விஷ்ணு மட்டுமே.

மகளை நினைத்து  மனதளவில் நொறுங்கிப்போன ராம்மோகன் படுக்கையில் விழுந்தார். கடந்தகாலம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வெளிவர மறுத்த மனதை கட்டுக்குள் கொண்டுவந்து பட்டென்று கண் விழித்துப் பார்த்தால் அத்தனை துன்பமும் சிறிய கனவுபோலத் தோன்றியது..

நைட் வந்து பேசுகிறேன் என்ற மகளிடமிருந்து மெசேஜ் வருமென்றும் போனை கையில் வைத்தபடியே வேலைகளைத் தொடர்ந்தார் நிர்மலா. நேரம் தான் சென்றதே தவிர மகளிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை என்று அவரின் மனம் பதறியது.

அவரின் பொறுமை காற்றில் பறக்க மருமகனுக்கு அழைத்தார். அவன் வேலையை முடித்துவிட்டு அலுவலத்தின் வெளியே வரும்பொழுது  அவனின் செல்போன் சிணுங்கியது.

“ஹலோ..” என்றான் கிருஷ்ணா

“கிருஷ்ணா நான் மது அம்மா..” என்றார்நிர்மலா

“அத்த சொல்லுங்க..” என்றான் மரியாதையுடனே. அவனிடம் கேட்கலாமா வேண்டாமா என்று அவரின் மனதில் பெரிய பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

நிர்மலாவின் தாக்கத்தை ரூமிலிருந்து கவனித்த ராம்குமார், “மது அங்கே என்ன பண்றான்னு கேளு நிர்மலா..” என்றார். அவரின் குரல் மறுபக்கத்தில் இருந்த கிருஷ்ணாவின் காதுகளுக்கும் எட்டியது.

“அவ நேற்று நைட் தூங்க கொஞ்சம் லேட் ஆகிருச்சு. அவ தூங்கிட்டு இருக்கிறா. அவ எழுந்தும் நானே உங்களுக்குப் போன் பண்ண சொல்றேன்..” என்று சிரித்துக்கொண்டே குறும்புடன் பதில் கொடுத்தான்.

அவரிடம் தங்களின் பிரச்சனைபற்றி சொல்ல அவன் தயாராக இல்லை என்பதை அவனின் குரலே அவருக்கு உணர்த்தியது. மது கணவனின் வீட்டில் நிம்மதியாக இருக்கிறாள் என்ற ஒரு எண்ணத்தில் அவரின் மனம் அமைதியானது.

“எப்படியோ இருவரும் சந்தோஷமாக இருந்தா சரி..” என்றவர் நிம்மதிப் பெருமூச்சுடன் கூறியவர் போனை வைத்துவிட்டார். சிலநொடி நின்று அவன் போனைப் பார்த்துக் கொண்டிருக்க அவனின் தோளில் வந்து ஒரு பறவை அமர்ந்தது.

அவன் திரும்பிப் பார்த்த மறுநொடியே, “என்ன ஜானு மது உன்னைப் பறக்க விட்டுவிட்டாளா” என்று கேட்க அவனின் குரலை உன்னிப்பாகக் கவனித்தது கிளி.

“பறக்க விட்டுட்டா.. பறக்க விட்டுட்டா..” என்றதும் வாய்விட்டுச் சிரித்தான் கிருஷ்ணா.

“நீயும், அவளும் இரு துருவம். உங்க இருவருக்கு இடையே மாட்டிட்டு முழிக்கிறது நான் மட்டும் தான்.. எல்லாம் என்னோட நேரம்..” என்றவன் கிளியை நோக்கிக் கைநீட்ட அவனின் தோளிலிருந்து அவனின் கைக்கு இடமாறியது கிளி. இருவரும் இணைந்து பைக்கில் வீடு நோக்கிச் சென்றனர்.

அவள் கிளியை வானத்தில் பறக்கவிட்டு சந்தோஷமாக வீட்டுக்குள் செல்வதைப் பார்த்துத் திகைத்து நின்றாள் பிரீத்தி. கிருஷ்ணாவின் கோபம் அறிந்தும் அவள் செய்த காரியத்தை நினைக்கும் பொழுதே இன்று பூகம்பம் கிளம்பும் என்ற எண்ணத்துடன் அவளின் வீட்டிற்கு சென்றாள்.

ஜானுவை வானில் பறக்கவிட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்த மது வீட்டைப் பார்த்து ‘என்னோட நேரமே சரியில்ல..’ என்று தனக்குள் புலம்பினாள். இவளும், ஜானுவும் போட்ட சண்டையில் வீடே தலைகீழாக மாறியிருந்தது.

இருவரும் சேர்ந்து போட்டு உடைந்த பொருட்களே அதிகம். அதுவும் கண்ணாடி பொருட்கள். அவை அனைத்தும் அவன் வாங்கிய பொருள் என்ற நினைவில் அமர்ந்தவளின் கண்முன்னே வந்து சென்றது அவனின் கோப முகம்!

‘இன்னைக்கு வீட்டுக்கு வந்து எனக்குப் பெரிய கச்சேரி வெச்சு வெளிநாட்டிற்கு பார்சல் பண்ண போவது நிஜம்..’ என்றாள் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். சற்றுமுன் நடந்த அனைத்தும் அவளின் கண்முன்னே படமாக விரிந்தது.

அன்று மாலை வழக்கம்போல வேலை முடிந்ததும் தன்னுடைய ஹென்பெக்கை எடுத்துகொண்டு வீட்டிற்கு கிளம்பிய மதுமதியின் எதிரே வந்தான் ராகவ். இவனும் அதே பிளாட்டில் தங்கியிருப்பவன். மதுவின் இன்னொரு அண்ணா என்று சொல்லலாம்.

“மது மீட்டிங் முடிந்தது. மண்டே தான் வேலை ஸ்டார்ட் பண்றாங்க. இன்னைக்கு நமக்கு வொர்க் ஓவர்மா..” என்றவன் அப்பொழுதுதான் மணியைப் பார்த்தான்.

“உன்னோட பெவரெட் வாய்ஸ் கேட்க நீ இன்னும் வீட்டிற்கு கிளம்பல..” என்று அவன் வம்பிற்கு இழுக்கவே, ‘ஊருக்கே மைக் செட் போட்டுச் சொல்லுடா எருமை எருமை..’ என்று அவள் இதழசைத்தாள்.

“சரி திட்டாதே. நீ வீட்டிற்கு கிளம்பு நான் இன்னும் கொஞ்சநேரத்தில் வருகிறேன்..” என்றான்

‘ஓகே நான் கிளம்புகிறேன்..’ என்ற இதழசைத்துவிட்டு வாசலை நோக்கிக் கம்பீரமாக நடக்க ராகவ் பார்வை அவளைத் தொடரவே, “ராகவ் உன்னோட பார்வையே சரியில்ல..” என்றாள் அவனின் தோழி சித்ரா.

“ஏய் அவள் என்னோட தோழி  அது மட்டுமில்லாமல் அவ என்னோட தங்கச்சி அதை மைண்ட்ல வெச்சிக்கோ..” என்று அவளை மிரட்டிய ராகவ், ‘இந்தக் கம்பீரம்தான் இவளின் அடையாளம்..’ என்று மனதிற்குள் நினைத்தவன் தன்னுடைய வேலையைத் தொடர்ந்தான்.

ஆபீஸ் விட்டு வெளியே வந்த மதுவின் நினைவுகளோ வேறு திசை நோக்கிப் பயணித்தது. ‘ஆறு மணிக்குள் வீட்டிற்கு போகணும்..’ என்ற சிந்தனை தவிர மற்ற சிந்தனை அவளின் மனதில் இல்லை..

அந்த ஒருமணிநேரம் தான் அவள் அவளுக்காக ஒதுக்கும் நேரம் அதில் தலையிட யாருக்கும் அங்கே உரிமையும் இல்லை.

“ஹாய் ஹாய் இதோ இனிமையான கானங்களுடன் இளமாலை பொழுதில் உங்களோடு இணைத்திருப்பது உங்களின் ஆர்.ஜே. பாலா..” அவனின் குரலில் தன்னை மறந்தவள் இருள் சூழ்ந்தது கூட உணராமல் அவனின் குரலுக்கு அடிமையாகி அமர்ந்திருந்தாள்.

“இது யார் எழுதிய ஹைக்கூ கவிதை என்று எனக்குத் தெரியல பிரிண்ட்ஸ். ஆனால் ரொம்ப நாளுக்கு முன்னாடி நான் ஒரு கவிதை புத்தகத்தில் படித்தேன். நான் கவிதையைச் சொல்றேன். நீங்க அதுக்கு அர்த்தம் சொல்லணும்” என்று அவளின் கவனத்தை ஈர்த்தான்.

அவளும் என்ன கவிதை என்ற சிந்தனையுடன் அமர்ந்திருக்க, “பெண்ணே உன் கண்கள் மீன் வலையா? கொசு வலையா?” என்றவனின் குரலில் ஒலித்தது அந்த ஹைக்கூ கவிதை.

‘இதுக்கு அர்த்தம் சொல்லணுமா? சுத்தம் இன்னைக்கு மண்டை காய போகுது..” என்று தலைமேல் கைவைத்து அமர்ந்துவிட்டாள் மது.

“இந்தக் கவிதைக்கு அர்த்தம் சொல்ல நான் தயார் என்பவர்கள் நம்பரை நோட் பண்ணிகோங்க. நம்ம ஒரு பாட்டு கேட்டு முடிச்சிட்டு வந்தும் இதுபற்றி விலாவரியாகப் பேசுவோம்..” என்றவன் அழைக்க வேண்டிய எண்ணைச் சொல்லிவிட்டு பாடலை ஒலிக்கவிட்டான்.

அந்தப் பாடலைக் கேட்டுகொண்டே கவிதையின் வரிகளுக்கு அர்த்தம் பற்றிச் சிந்திக்கலானாள் மது. அவன் பாடலை முடித்துவிட்டு வந்த பிறகு பலர் போன் செய்து அந்தக் கவிதைக்கு உண்டான அர்த்தத்தைக் கூறினார். ஆனால் அந்தக் கவிதைக்கான அர்த்தம் அது இல்லை என்றான்.

இறுதியாக“இந்தக் கவிதையில் வரும் இரண்டு வார்த்தையில் தான் அர்த்தமே உள்ளது. இங்கே கண்ணென்ற வார்த்தைக்கு மனம் என்ற பொருள். ஒரு பெண்ணின் மனம் மீன்போல இருந்தால் அவள் சீக்கிரமே காதல் என்ற மாயவலையில் சிக்கிக்கொண்டு தவிப்பாள்.

அதுவே அவள் மனதை தற்காத்துக் கொள்ள நினைத்தால் அவளின் மனதை ஒரு கொசு வலைபோல யாரும் உள்ளே நுழையாத அளவிற்கு கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். இரு பார்வை சந்தித்துக் கொண்டாலே அங்கே காதல் மலரும் என்ற காரணத்தால் அந்தக் கவிதையில் கண்ணென்ற வார்த்தை பயன்படுத்தி உள்ளார் கவிஞர்..” என்று விளக்கம் கொடுத்தவன்    விடைபெற்றுச் சென்றான்.

‘ஒரு கவிதைக்கு இப்படியொரு விளக்கமா? இதெல்லாம் இவன் எங்கிருந்து தான் கண்டுப்பிடிப்பானோ? ஆனால் என்னோட கண்கள் மீன்வலையா? இல்ல கொசுவலையா? தெரியலையே..’ என்றவள் இயல்புநிலைக்கு திரும்பினாள்.

அவளைக் கொலைவெறியுடன் பார்த்தபடியே அவளின் எதிரே நின்றிருந்த பிரீத்தியைப் பார்த்தும், ‘ஹாய் பிரீத்தி.. எப்போ ஆபீஸிலிருந்து வந்த..’ என்று சைகையில் கேட்டாள் மது.

“நீ ஏன் இப்படி இருக்கிற. அவனோட குரலில் உனக்கு அப்படி என்னதான் கிடைக்குது..” அவன் எரிந்து விழுந்தாள் பிரீத்தி.

அவள் எதற்காகத் திட்டுகிறாள் என்று புரியாமல் விழித்த மது, ‘எனக்கு நிம்மதி கிடைக்குது..’ என்றாள் அவள் கோபமாக..

“மண்ணாங்கட்டி..” என்றவளுக்கு கோபம் மட்டும் குறையவில்லை..

“ரோட்டில் அவ்வளவு வேகமாக வர. உனக்கு ஏதாவது ஆச்சு என்றால் யார் பதில் சொல்றது? லூசு அவனோட குரல்கேட்டு தான் நீ வளர்ந்தாயா? ஒரு பிரோகிராம் அதைக் கேட்க இவ்வளவு வேகமாக ஸ்கூட்டியில் வர..” என்று திட்டித்தீர்த்தாள்.

அப்பொழுது அங்கே வந்த நிர்மலா, “வா பிரீத்தி இப்பொழுதுதான் வேலை முடிந்து வந்தாயா?” என்று புன்னகையுடன் விசாரித்தாள்.

“ம்ம் ஆமாம் அம்மா..” என்றாள் பிரீத்தி

அவர் அமைதியாக இருக்க, “இவளை நீங்கக் கண்டிக்கல ஒருநாள் இவளுக்குப் பைத்தியம்தான் பிடிக்கும்..” என்றார்

அவளுக்குப் பைத்தியம் பிடித்த விஷயம் உனக்கு தெரியாதா?” அவர் இலகுவாகக் கேட்கவே, “அம்மா என்ன சொல்றீங்க..” என்று அதிர்ந்த பிரீத்தி நிமிர்ந்து மதுவைப் பார்த்தாள்

“எல்லோருக்கும் பாடகர் மற்றும் பாடகியின் வாய்ஸ் பிடிக்கும். என்னோட மகளுக்கு மட்டும் இந்த ஆர்.ஜே. பாலா வாய்ஸ் பிடிக்கும் பொழுதே தெரியல. அவளுக்கு லூசு கிளம்பிவிட்டது என்று..” என்றவர் ராகமாக இழுத்தார்.

“உங்களுக்குத் தெரிந்த பிறகும் ஏன் வீட்டில் வெச்சிருக்கீங்க..”

“ஆயிரம்தான் இருந்தாலும் அவள் நான் பெற்ற பெண் இல்லையா..” என்றவரின் கேள்விக்கு அவளின் முகம் மாறிவிட, “சுத்தம்..” என்றாள் பிரீத்தி

“வண்டியில் மின்னல் வேகத்தில் வருகிறாள். இவளை நீங்கக் கண்டிக்கவே மாட்டீங்களா?” அவளின் வார்த்தையில் வருத்தம் அவருக்கு புரிந்தாலும் மகளிடம் அவரின் கடினத்தன்மை வேலை செய்யவில்லை..

“இங்கே பாரு பிரீத்தி அவளோட லைப் பற்றி அவளுக்கு முடிவெடுக்க தெரியும். நீ வா நம்ம போய் சீரியல் பார்க்கலாம்..” என்று அவளை அழைத்துச் சென்றார்.

அவர்கள் இருவரும் சீரியல் மூழ்கிவிட அந்த பிரோகிராம் முடிந்தும் வந்து சோபாவில் படுத்தவள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட, “இங்கே பாரு எவ்வளவு நிம்மதியாக தூங்குகிறா..” என்றார் நிர்மலா மகளின் தலையை வருடிவிட்டபடியே.

“நீங்கக் கொஞ்சம் அவளைக் கண்டித்து வைங்க ஆண்ட்டி..” என்றாள் பிரீத்தி பயத்துடன். அவளின் பயம் அவள் மட்டுமே அறிந்த விஷயம்.

“நீ அவளுக்காகப் பயப்பட தேவை இல்ல. அவளை பாதுக்காத்துக் கொள்ள அவளுக்கு தெரியும்..” என்று அழுத்தத்துடன் கூறினார். இதே வார்த்தைகளை அவளுக்கும் ஒருவன் சொல்லியிருந்தான் அது அவளின் சிந்தனையில் வந்து சென்றது.

பிரீத்தி மதுவின் முகத்தையே இமைக்காமல் பார்க்க, “அவள் தானாக கால் ஊன்றி நின்ற பின்னரும் அவளை ஊனம் என்று சொல்ற மாதிரி இருக்கு உன்னோட பேச்சு. அவளும் மாற்ற ஹியூமன் பீயிங் மாதிரிதான்..” என்று அவளுக்கு புரியவைக்க முயன்றார்.

“அவளுக்கு அடிப்பட்டால் கூட சத்தமாகச் சொல்ல அவளால் முடியாது அம்மா..” என்று தயக்கத்துடன் என்றாள் பிரீத்தி.

“அவளுக்கு எதுவும் ஆகாது..” என்றவளுக்கு தைரியம் கொடுத்தவர், அவரின் பேச்சு கணவரின் காதுக்கு எட்டிவிடுமோ என்ற பயத்துடன்  கணவனின் அறையைப் பார்த்தார்.

அவரின் கைகளைப் பற்றிக்கொண்ட பிரீத்தி, “நீங்கத் தைரியமாக இருங்க அம்மா..” என்று கூறியவள் சிறிதுநேரம் கழித்து அவளின் பிளாட்டிற்கு சென்றாள்.

தன்னுடைய அறைக்குள் நுழைந்த பிரீத்தி சுவற்றில் மாட்டபட்டிருந்த கணவனின் புகைப்படத்தைப்  பார்த்து கண்கலங்கி நின்றாள். “ஏன் என்னைத் தனியாக விட்டுட்டு போனீங்க ராஜூ..” என்று மனதிற்குள் கலங்கிய பிரீத்தி இரவு உணவைச் சாப்பிடாமல் படுத்துவிட்டாள்.

விபத்தில் இறந்துவிட்ட கணவனின் நினைவுகளோடு உறவாடியவள், “மது அவ்வளவு வேகமாக வருவதைப் பார்த்தும் உங்களோட நினைவுதான் வந்தது ராஜூ. நீங்கப் பைக் எவ்வளவு வேகமாக ஓட்டுவீங்க..” என்று ஒவ்வொரு நினைவுகளோடு புலம்பியவள் தன்னையும் அறியாமல் உறங்கிப் போனாள்.

பிரீத்தி மதுவைவிட ஒரு வயது மட்டுமே மூத்தவள். அவளுக்கென்று யாரும் இல்லை. திருமணம் ஆனா சிலமாதத்தில் கணவனை இழந்தவள். தன்னுடைய சிந்தனையில் உழன்ற மதுவின் கவனத்தை திசை திருப்பியது அந்தக் குரல்!