UTN 9

UTN 9

உயிர் தேடல் நீயடி 9

விபி நிறுவனத்திற்குள் வந்த காசிநாதனின் பார்வை அந்த இடம் முழுவதும் அளவிட்ட படி சுழன்றது.

அங்கே வரவேற்பாளினியிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவர், நேராக‌ மேலாளர் அறையை நோக்கி நடந்தார்.

மேலாளர் ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் காசிநாதனை சங்கடத்துடன் வரவேற்றார்.

“சொல்லுங்க இன்ஸ்பெக்டர், என்ன விசயமா வந்திருக்கீங்க?”

“மிஸஸ் காவ்யதர்ஷினி இறந்த வழக்கு பத்தி விசாரிக்கணும்” என்க. ரங்கராஜன் முகம் சுருங்கி போனது.

“அவங்களுக்கு நடந்தது ஆக்ஸிடென்ட் தானே இன்ஸ்பெக்டர்?” இவர் குழப்பமாக கேள்வி எழுப்ப,

“கொலையா இருக்கவும் வாய்ப்பு இருக்கு, அந்த கோணத்தில தான் எங்க விசாரணை போயிட்டு இருக்கு”

“…!”

“மிஸஸ் காவ்யதர்ஷினி கல்யாணத்துக்கு முன்ன இங்க தான வேலை செய்தாங்க, அதனால இங்க வேலை செய்றவங்களை நான் விசாரிக்கணும்”.

“ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர், எங்க எம்டி கிட்ட பர்மிஷன் கேட்டு சொல்றேன்” என்றவர் விபீஸ்வருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டு விவரம் சொல்ல, நெற்றி சுருக்கி சற்று யோசித்தவன், “ஓகே விசாரிக்கட்டும் விடுங்க சர்” என்று சம்மதம் சொல்லி வைத்தான்.

“நீங்க உங்க விசாரணையை நடந்துங்க இன்ஸ்பெக்டர், ஆனா, வேலை செய்றவர்களுக்கு எந்த தொந்தரவும் வராம பார்த்துக்கோங்க”

“ஸுவர், முதல் விசாரணையை உங்ககிட்ட இருந்தே ஆரம்பிக்கிறேன்” என்று காசிநாதன் தொடர்ந்தார்.

“காவ்யதர்ஷினி பத்தி உங்களுக்கு தெரிஞ்சதை சொல்லுங்க”

“திறமையான பொண்ணு, அப்பா ஸ்தானத்தில இருந்து அவங்க குடும்பத்தை தாங்கினவங்க, வேலைக்கு வந்த கொஞ்ச நாள்லயே அவங்க திறமையை பாராட்டி எம்டி ப்ரோமோஷன் கொடுத்தார்”

“ஓ அப்ப தான் அவங்களுக்கு நடுவுல காதல் வந்திருக்கும் போல”

“தெரியல இன்ஸ்பெக்டர், எனக்கு தெரிஞ்சு விபி சார்க்கு காதல்ல எல்லாம் நம்பிக்கை இருந்தது இல்ல, காவ்யாவும் அப்படி வளைஞ்சு போற பொண்ணு இல்ல, ரெண்டு பேருக்கும் கல்யாணம் என்ற சேதி எனக்கும் அதிர்ச்சியா தான் இருந்தது”.

“ஓகே, இங்க காவ்யதர்ஷினிக்கும் மத்தவங்களுக்கும் பிரச்சனை மாதிரி ஏதாவது…”

சற்று யோசித்து, “காவ்யாவுக்கு ப்ரோமஷன் கிடைச்சதும் ரிக்கி, எங்கிட்ட ரொம்ப கோவபட்டு கத்தினான்” என்றவர், அந்த நாளை நினைவு கூர்ந்தார்.
.
.
.

“என்ன மேனேஜர் சர் நடக்குது இங்கே, இப்ப வந்தவங்களுக்கு எல்லாம் ப்ரோமோஷனா? அப்ப வருச கணக்கா நாயா வேலை பார்க்கிற, எங்களுக்கு எல்லாம் எதுவும் இல்லல்ல” தன் முன்னால் அடக்கிய கோபத்தோடு சீறி நின்ற ரிக்கியை ரங்கராஜன் அலட்சியமாக பார்த்தார்.

“நீ பாஸ்க்கு என்ன வேலை செய்யறன்னு எனக்கு நல்லாவே தெரியும் ரிக்கி” ரங்கராஜன் பதில் காட்டமாக வந்தது.

ஏதோ வயது கோளாறில் விபி வழி தவறி போகிறானே என்ற அவரின் ஆதங்கம், ரிக்கி அவனுக்கு இந்த விசயங்களில் விழுந்து விழுந்து செய்வது வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

“காவ்யா தன்னோட திறமையால புத்திசாலிதனத்தால நம்ம கம்பெனி நம்பிக்கையை சம்பாதிச்சு இருக்காங்க, அதற்கு கிடைச்ச பாராட்டு தான் இந்த ப்ரோமோஷன். உன்ன மாதிரி குள்ளநரிக்கு ப்ரோமோஷன் கொடுக்க விபி சர் ஒண்ணும் முட்டாள் இல்ல”

ரங்கராஜனின் பேச்சில் ரிக்கியின் முகம் கசங்கி போக, மேலும் அங்கே நிற்காமல் நகர்ந்து விட்டான்.
.
.
.

“நான் அந்த ரிக்கியை விசாரிக்கணும்” காசிநாதன் கேட்க,

“ரிக்கி இப்ப இங்க வேலை செய்யல, அவன் வேலையை ரிசைன் பண்ணிட்டு போயிட்டான்” என்ற மேலாளர் ரிக்கியின் முகவரியை அவரிடம் கொடுத்தார்.

காவ்யதர்ஷினியுடன் வேலை பார்த்த ஒவ்வொருவரிடமும் காசிநாதன் விசாரணை மேற்க்கொண்டார்.

காவ்யாவை பற்றி பொதுவாக நல்லதாக சொன்னார்கள் பலர். அவள் தங்கள் எம்டியை மயக்கி திருமணம் கொண்டதாய் சிலர் அங்கலாய்த்தனர். காவ்யா இறப்பிற்கு விபியும் காரணமாக இருக்கலாம் என்று பட்டும் படாமல் கோடிட்டு காட்டினர் சிலர்.
காசிநாதன் அனைத்தையும் உள்வாங்கி கொண்டார்.

அதேநேரத்தில், இயந்திரத்தை இயக்கியபடி, துணிகளை வெட்டிக் கொண்டிருந்த பெண், தன்னை திரும்பி திரும்பி பார்த்து ஏதோ சொல்ல விழைவதையும் கவனித்தார். அந்த பெண்ணிடம் சென்று, “உன்னோட பேர் என்னமா? உனக்கு எங்கிட்ட ஏதாவது சொல்லணுமா?” என்றார்.

சுற்றும் பார்வையை சுழற்றி, அவரை தனியே அழைத்து வந்தவள், “என் பேரு மேனகா சார், இதை பத்தி யார்கிட்டேயும் சொல்ல கூடாதுன்னு சொல்லி இருக்காங்க சார். இது வெளிய தெரிஞ்சா கம்பெனிக்கு தான் கெட்ட பேரு வரும்னு…” என்று அவள் தயங்கினாள்.

“இது விசாரணை தான் மா, வெளியே கசியாது. தைரியமா சொல்லு” என்று காசிநாதன் உறுதிதர, அவள் நடந்ததை சொன்னாள்.
.
.
.

தினப்படி வேலை போல அன்றும் காவ்யதர்ஷினி ஆடை தயாரிப்பை கவனித்தபடி வந்தாள். தினமும் ஆடை தயாரிப்பு பற்றிய தகவல்களை தன் எம்டிக்கு தெரிவிப்பதும் அவள் பொறுப்பில் இருந்தது.

எல்லாருமே எப்போதும் போல தங்கள் வேலையில் கவனமாக இருந்தனர். இவளுக்கும் திருப்தி தான். எங்குமே பெண்கள் முகம் தான் தெரிந்தது. அங்கே வேலை செய்யும் ஆண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம், சூப்ரேசர், மெக்கானிக் போல சில வேலைக்களுக்கு மட்டுமே ஆண்கள் பொறுப்பேற்று இருந்தனர்.

கலங்கிய கண்களை துடைத்தபடி, தன் தையல் வேலையில் வேகமாக கைகள் ஓடிக் கொண்டிருக்க, கசங்கி இருண்ட முகமாக இருந்த அந்த பெண்ணிடம் காவ்யாவின் பார்வை நின்றது.

“என்னாச்சு கா, உடம்பு ஏதும் சரியில்லையா உங்களுக்கு?” காவ்யாவின் கரிசனமான கேள்வியில் அந்த பெண் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“இல்… ஆ…ஆமா மேடம், வயித்து வலி…” அவள் திக்கிதிணறி சொல்ல, “உடம்பு முடியலனா வீட்டுல கிடக்க வேண்டியது தான, இங்க வந்து ஏன் வேலைய கெடுக்குற” அங்கே மேற்பார்வையாளராய் இருந்த மாணிக்கத்தின் குரல் காரமாய் ஒலித்தது.

இந்த பெண் தலைகவிழ்ந்து கொள்ள, “மாணிக்கம் சர், இவங்க சம்பளத்தில தேவையான தோகையை கொடுத்து, லீவ் கொடுத்திடுங்க, வயிறுவலி சரியானதும் வாங்க கா, இப்போ போய் டாக்டரை பாருங்க” என்று காவ்யா நகர்ந்து விட்டாள்.

ஒரு வாரத்தில் அதே பெண் தன்னை சந்திக்க காத்திருப்பாளென்று காவ்யா எண்ணவில்லை.

“இப்ப வயிறுவலி சரியாகியாகிடுச்சா கா” காவ்யா வாஞ்சையாக கேட்க,

“எனக்கு வயிறுவலி எதுவும் இல்ல மேடம்” என்று கலங்கி சொன்னவளை யோசனையோடு பார்த்தாள் காவ்யா.

“அந்த சூப்ரேசர் மாணிக்கம் கொஞ்ச நாளா என்கிட்ட தப்பு தப்பா பேசுறான் மேடம், இப்ப கைவைக்கவும் ஆரம்பிச்சுட்டான்”

“…”

“எனக்கு கல்யாணம் முடிஞ்சி ரெண்டு புள்ளைங்க இருக்கு மேடம், எங் குடும்ப கஷ்டத்துக்கு இங்க வந்து வேலை செய்யறேன், என்னை போயி…” அவள் வாய் பொத்தி குலுங்கி அழ,

‘வேலை பார்க்கும் பெண்கள் மேல் கை வைக்கும் அளவிற்கு மாணிக்கத்திற்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது?’ காவ்யாவின் மனதில் கேள்வி எழுந்தது.

“இப்ப எதுக்கு அழறீங்க, மறுபடி மாணிக்கம் உங்ககிட்ட தப்பா பிஹேவ் பண்ணா, வாய கிழிச்சு, கைய உடைச்சு விடுங்க, நான் பார்த்துக்கிறேன்” காவ்யா ஆவேசமாக சொல்ல,

“நான் எப்படி மேடம், வேலை இல்லனா குடும்பத்தை நகத்தரது ரொம்ப கஷ்டம். புள்ளங்க படிப்பு வேற”

“இதெல்லாத்தையும் விட, நீங்க உங்களை காப்பாத்திக்கிறது தான் முக்கியம். உங்க வேலைக்கு எந்த நஷ்டமும் வராது. அதுக்கு நான் பொறுப்பு” என்று தைரியம் சொல்லி விட்டு எம்டி அறையை நோக்கி விரைந்தாள்.

காவ்யா ஏதோவொரு வேகத்தில் அந்த பெண்ணிடம் வீரமாக பேசி விட்டாள் தான். இப்போது இதை எம்டியிடம் தெரியபடுத்த வேண்டும். தனக்கு கீழ் வேலை செய்யும் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது அல்லவா.

ஆனால், காவ்யா சொன்னதை விபி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “அந்த பொண்ணு சொன்னதை மட்டும் வச்சு, மாணிக்கம் மேல நடவடிக்கை எடுக்க முடியாது காவ்யா. சரியான ஆதாரம் இருந்தா கொண்டு வாங்க” அதோடு பேச்சை முடித்திருந்தான்.

மறுநாள் காவ்யா செய்த காரியம் அவனும் எதிர்பாராதது.

தானும் ஒரு பெண்ணாய் மற்றொரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவமானத்தை எண்ணி காவ்யாவின் உள்ளம் கொதித்தது.

மறுநாள் காலையில் சீக்கிரமாகவே வந்தவள் அந்த தளத்தில் வேலை செய்யும் அனைத்து பெண்களின் அலைப்பேசி எண்களையும் சேகரித்து வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கினாள்.

அதில் ‘இங்கே வேலை செய்யும் உங்களுக்கு ஏதாவது குறை இருந்தாலோ அல்லது யாரேனும் உங்களை தவறாக நடத்தினாலோ, இங்கு பதிவிட வேண்டுகிறேன். அதற்கான சரியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பி இருந்தாள்.

மாணிக்கம் ஒரு பெண்ணிடம் மட்டும் தவறாக நடந்து கொண்டிருப்பான் என்று நம்பவில்லை அவள். நிச்சயம் பல பெண்களிடம் தன் சின்ன புத்தியை காட்டியிருக்க கூடும். யாரேனும் அதனை பற்றி புகார் தெரிவிப்பார்கள் என்று தோன்றியது அவளுக்கு.

ஆனால் அவள் நினைத்தபடி யாரும் மாணிக்கத்தை பற்றி சொல்லவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு தான் அவன் பெயர் அதில் அடிப்பட்டது.

யாரோ ஒரு பெண் தன் கசப்பான அனுபவத்தை குறிப்பிட, தொடர்ந்து பல பெண்கள் தங்களிடம் அவன் நடந்து கொண்ட கேவலமான முறையை ஒருவித தைரியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர்.

மேலும் எம்டியின் அனுமதி பெற்று, மேலாளர் துணைக் கொண்டு, அங்கங்கே இருந்த மறைவிடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி இருந்தாள் காவ்யா.

மாணிக்கம் தனியே அவரிடம் சிக்கிய பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயல்வது, கேமராவில் பதிவாகி இருந்தது.

மாணிக்கத்திற்கு எதிராக பெண்கள் கொடுத்த புகார் குறுஞ்செய்திகளையும், சிசிடிவி கேமரா பதிவுகளையும் பார்த்த விபீஸ்வர், தான் ஆதாரம் கேட்ட ஒருவாரத்தில் இத்தனை ஆதராங்களை சேகரித்த அவளின் மதிகூர்மையை மனதிற்குள் மெச்சி கொண்டான்.

மாணிக்கம் எச்சரிக்கையோடு வேலையில் இருந்தும் நீக்கப்பட்டார்.
.
.
.

“அந்த மாணிக்கம், காவ்யா மேடம் மேல ரொம்ப கோவமா தான் போனான். மேடமை பழிவாங்க அவன் தான் ஏதோ செஞ்சிட்டானோன்னு எனக்கு தோணுது சார்” மேனகா சொல்லி முடிக்க, காசிநாதன், “அந்த மாணிக்கத்தை உடனே புடிச்சு விசாரிக்கிறேன் மா” என்று உறுதியாக சொல்லிவிட்டு காசிநாதன் அங்கிருந்து சென்றார்.

# # #

“ச்சே உங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லயா ஆன்ட்டி?” ஜனனி கோபமாக கேட்க, லலிதாம்பிகை அப்பாவியாக நின்றிருந்தார்.

“என்ன ஜனனிம்மா, இப்படி எல்லாம் கேட்குற?”

“பின்ன என்ன ஆன்ட்டி? காவ்யா உருவத்தை அங்க பார்த்தேன் இங்க பார்த்தேன்னு டிராமா பண்ணிட்டு இருக்கீங்க”

“இல்ல, நிஜமா அது என் கண்ணுக்கு தெரிஞ்சது ஜனனி”

“இந்த காலத்துல இதையெல்லாம் நம்ப நான் ஒண்ணும் முட்டாள் இல்ல, அதோட விடாம, அந்த காவ்யா ஃபோட்டோ பார்த்து உங்களை யாரு புலம்ப சொன்னது?”

“டாக்டர் தான் அப்படி செய்ய சொன்னார். இப்ப மனசுல பாரம்‌ குறைஞ்ச மாதிரி இருக்கு, அந்த பிம்பமும் எனக்கு தெரியல‌ ஜனனி”
லலிதாம்பிகை சுய விளக்கம் தர, ஜனனி தலையில் அடித்து கொண்டாள்.

“இதுதான் லாஸ்ட் ஆன்ட்டி, இனி காவ்யா பத்தி யாரும் எதுவும் பேச கூடாது”

“நீ முதல்ல ஆத்திரப்படாம இரு ஜனனி. கொஞ்ச நாள் போகட்டும், விபியோட உடம்பு முழுசா குணமாகட்டும், உனக்கும் விபிக்கும் கல்யாணம் முடிக்கிறது என் பொறுப்பு” என்று உறுதி அளிக்க, அரை மனதாக ஜனனி தலையசைத்து விட்டு நகர்ந்தாள்.

ஏனோ ஜனனியின் மனதில் படபடப்பு கூடி கொண்டே இருந்தது. முதலிலேயே விபியை கைநழுவ விட்டவள், மறுபடியும் அதே தவறை செய்ய அவளுக்கு விருப்பமில்லை.

சிறிது சிறிதாய் விபியின் மனதை மாற்றி அவனுடன் திருமணத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் அவளுக்கு.

ஆனால், எப்போதும் காவ்யா பெயரை பிதற்றி கொண்டிருப்பவனை என்ன செய்வது என்றும் இவளுக்கு புரியவில்லை.

தான் அவன்மீது கொண்ட நேசத்தைப்பற்றி நன்றாக தெரிந்தும், விபி தனது அருகாமையை தவிர்ப்பது இவளின் ஆத்திரத்தை மேலும் ஏற்றி இருந்தது.

# # #

அந்த விபத்து நேர்ந்து சூனியமாக இதோ ஒரு மாதம் கடந்து இருந்தது.

தன்னவள் உடனற்ற வெறுமையால் அவன் மனம் முடங்கி கிடக்க, காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவனும் அறைக்குள் முடங்கி கிடந்தான்.

விபீஸ்வரின் வாழ்நாட்களில் மிக கொடுமையான நாட்கள் இவை. இதுவரை அவன் இப்படி மாத கணக்கில் ஒடுங்கி கிடந்தது இல்லை. இனியும் அவனால் நான்கு சுவற்றுக்குள் அமிழ்ந்து இருக்க முடியாது.

நடந்த விபத்தின் தாக்கத்தில் இருந்து அவன் விடுபட போராடிக் கொண்டிருந்தான். மூச்சு முட்டும் தன் அறையின் சிறை வாசத்தில் இருந்து அவன் விடுபட்டே ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்திருந்தான்.

மறுநாளில் இருந்து நிறுவனத்திற்கு செல்லபோவதாக விபீஸ்வர் சொல்ல, லலிதாம்பிகை உடனே மறுத்தார். உடல்நிலை முழுதாய் குணமாகும் வரை பொறுத்திருக்க சொன்னார்.

ஆனால், வழக்கம் போல விபீஸ்வர் தன் முடிவிலிருந்து மாறவில்லை.

# # #

உயிர் தேடல் நீளும்…

error: Content is protected !!