KKRI – 9

KKRI – 9

அத்தியாயம் – 9

அந்தக்குரல் வந்த திசை நோக்கி அவளையும் அறியாமல் நடந்த மதுமதி  வெளியே சென்று பார்க்க அங்கே யாரையும் காணவில்லை என்று மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தாள்.

“மது.. பாலா..” என்று மீண்டும் அதே குரல் கேட்க அந்த குரல் எங்கிருந்து வருகிறது என்று உன்னிப்பாக கவனித்தவளின் கால்கள் பால்கனியை நோக்கிச் சென்றது.

என்ற அழைப்புக்கேட்டு அவளின் நடை தளர்ந்தது. அந்த பாலா என்ற பெயரில் என்ன மாயமந்திரம் இருக்குமோ? அந்த பெயரைக் கேட்டாலே அவள் தன்னை மறந்து விடுகிறாள். பால்கனியில் நின்றபடி பார்வையைச் சுழற்றினாள்.

அதற்கு நேர் எதிரே இருந்த வீட்டில் ஒரு ஐந்து சிறுமி கையில் டேடிபியரைக் கட்டிபடித்து நின்றிருக்க அவளின் எதிரே ஒரு ஏழு வயது சிறுவன் மண்டியிட்டு அமர்ந்திருந்தான்.

அவன் ‘மதுபாலா..’ என்ற பெயரைக் கற்றுகொடுக்க “மது.. பாலா..” என்று இரண்டாகப் பிரித்து கூறினாள் அந்த குட்டிப்பெண். அந்த குழந்தை அப்படி சொல்லும் பொழுது மதுவின் உதட்டில் புன்னகை அரும்பியது.

‘மது.. பாலா..’ என்ற அழைப்பு அவளுக்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்க, ‘என்ன மது உன்னோட பாலா வந்துவிட்டானா?’ அவளின் மனம் கேலிசெய்ய தன்னையும் மீறி வாய்விட்டுச் சிரித்தாள் மதுமதி.

அந்த குழந்தையின் மழலை மொழியில் அவள் தன்னை மறந்து அந்த குழந்தையின் செயல்களை ஆர்வத்துடன் கவனித்தாள்.

“மது இங்கே வந்து பாரு..” என்று வாசலில் நின்றபடி குரல் கொடுத்தாள் பிரீத்தி.

‘எதுக்கு அக்கா கூப்பிடறாங்க..’ மனதிற்குள் கேள்வியை கேட்டபடியே வாசலை நோக்கி விரைந்தாள் மது. மாடியின் கைப்பிடி சுவற்றைப் பிடித்தபடி நின்றிந்த பிரீத்தியின் பார்வை பார்க்கிங் பைக் நிறுத்திவிட்டு இறங்கிய கிருஷ்ணாவின் மீது இருந்தது.

தன்னை அழைத்த பிரீத்தி பேசாமல் கீழே வேடிக்கைப் பார்ப்பதை கவனித்த மதுவும் கீழே எட்டிப் பார்த்தாள். கிருஷ்ணா வேகமாக படியேற அவனின் கையிலிருந்த குட்டிக் கூடையில் கொய்யாபழத்தை கொறித்தபடி வந்த ஜானு அவளின் கண்ணில் விழுந்தனர்.

“எனக்கு தெரியும் இந்த ஜானு பறக்கவிட்ட மறுநொடி அவனோட ஆபீஸ் தான் போகுன்னு. அந்த கிளிக்கு டிரைனிங் கொடுத்தது கிருஷ்ணா தானே..”என்று பிரீத்தி அவள் போக்கில் பேசியபடி வீட்டிற்குள் செல்ல திரும்பியவள் அப்பொழுது தான் கிருஷ்ணாவுடன் வந்த ராகவைக் கவனித்தாள்.

“ஹே ராகவ் ஊருக்குப் போயிட்டு வந்துட்டான் போல..” என்று உற்சாகமாக கூறினாள் பிரீத்தி. அவளின் குரலைக் கவனிக்கும் நிலையில் மது இல்லை. அவளின் கவனம் முழுவதும் கிருஷ்ணாவின் மீதும், அவனோடு வந்த ஜானுவின் மீதே இருந்தது.

கிருஷ்ணா ராகவுடன் பேசியபடியே வருவதைப் பார்த்த மதுவின் மனம் வேகமாகத் துடித்தது. அவன் வந்ததும் என்ன நடக்குமென்று நினைக்கவே பயமாக இருந்தது.

அதற்குள் இருவரும் அவளை நெருங்கிவிட, “வா ராகவ்.. அம்மா எப்படி இருக்காங்க..” என்று அவனின் தாயைப் பற்றி விசாரித்தாள் பிரீத்தி.

“அம்மா நல்லா இருக்காங்க பிரீத்தி..” என்ற ராகவ் அதிர்ச்சியில் சிலையென உறைந்து நின்ற மதுவின் முன்னே சொடக்கு போட்டு அவளை அதிர்ச்சியில் இருந்து மீட்டேடுத்தான்.

“என்ன மேடம் எப்படி இருக்கீங்க..” என்று விளையாட்டாக கேட்ட ராகவிற்கு ஒரு தலையசைப்பு மட்டுமே பதிலாகக் கிடைத்தது..

அவளின் பார்வை எதிரே உணர்ச்சி துடைத்த முகத்துடன் நின்றிருந்த கிருஷ்ணாவின் மீதே நிலைத்தது. அவனும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

இருவரையும் பார்த்த ராகவ், “உன்னை யாரு ஜானுவைப் பறக்கவிட சொன்னா. செம காண்டில் வந்திருக்கான். நீ போய் இவனை சமாளி..” என்ற ராகவ் பிரீத்தியின் பக்கம் திரும்பினான்..

“பிரீத்தி ஒரு கப் காபி ப்ளீஸ். நான் நைட் டிப்பன் செய்து கொடுக்கிறேன்..” என்று கேட்க, “வா ராகவ் நான் வைத்து தருகிறேன்..” என்று பிரீத்தி முன்னே செல்ல அவளின் பின்னோடு சென்றான் ராகவ்.

அவனின் முகத்தில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்வையால் தேடித் பார்த்தவளின் தேடல் தோல்வியில் முடிந்தது. அவனின் முகம் பாறை போல இறுகியிருக்க அதிலிருந்து அவளால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவளின் கைகளைப்பிடித்து வீட்டிற்குள் இழுத்துச்சென்றான். அவளும் ஜானுவும் செய்த சேட்டையில் வீடே தலைகீழாக மாறிக் கிடைத்தது.

வெங்காயம், மிளகாய், காய்கறிகள் அனைத்தும் அங்கே இங்கே சிதறிக் கிடந்தது. கண்ணாடி பொருட்கள் தவற மற்ற அனைத்தும் கலந்த கலவையாக இருந்த வீட்டின் நிலையைப் பார்த்து அவனின் கோபம் பன்மடங்காகப் பெருகியது.

ஜானுவை டைனிங் டேபிளில் விட்டுவிட்டு நேராக அவனின் அறையை நோக்கிச் சென்றான். அவனின் சென்ற திசையைப் பார்த்துவிட்டு கையைப் பார்த்தாள். அவன் பிடித்த இடம் ரத்தமென சிவந்திருந்தது..

‘இவனுக்கு எதுக்குதான் இந்த அளவுக்கு கோபம் வருமோ..’ அவனை உள்ளுக்குள் வறுத்தெடுத்துக் கொண்டே அவன் சென்ற திசைப் பார்த்தபடி நின்ற அவளின் பார்வை ஜானுவைத் தேடியது.

அவளை அந்த பாடுபடுத்திய ஜானு ஒன்றும் அறியாத பிள்ளை போல சமத்தாக அங்கிருந்த கொய்யா பழத்தை கொத்தி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அவளின் கோபம் அதிகரிக்க அதை அடிக்க ஏதாவது குச்சி கிடக்கிறதா என்று சுற்றிலும் பார்வைச் சுழற்றிய மதுவின் முன்னாடி வந்து விழுந்தது அவளின் சூர்கேஸ் இரண்டும்.

‘என்ன இது வந்து விழுகுது..’ அவள் நிமிர்ந்து பார்க்க அங்கே ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் கிருஷ்ணாவின் முகம் பார்த்து அவளுக்கு உதறல் எடுத்தது.

“நீ வீட்டிற்கு வராமல் இருந்த பொழுதாவது நிம்மதியாக இருந்தேன். இப்போ நீ வந்தபிறகு என்னோட நிம்மதி சுத்தமாக போச்சு. நீ இதுவரை செய்ததே போதும் சாமி நீ உங்க அம்மா வீட்டுக்கு கிளம்பு..” அவளின் பாஸ்போர்ட், விசா இரண்டையும் கொடுக்க அவளின் முகம் மாறியது.

இனி பேச எதுவுமில்லை என்று அவன் நகர நினைக்க அவனின் சட்டையை எட்டிக் கொத்தாகப் பிடித்த மது தன்னை நோக்கி இழுத்து அவனின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தாள்.

அவனின் பார்வையில் வெறுப்பு தென்பட ‘நீ ஏன் இப்படி நடந்துக்கிற கிருஷ்ணா..’ என்று புரியாமல் இதழசைத்தாள். அவளின் பார்வையை எதிர்கொண்ட கிருஷ்ணாவின் பார்வையில் தடுமாற்றம் சிறிதும் இல்லை.

‘என்னைவிட உனக்கு இந்த ஜானு ரொம்ப முக்கியமா?’ என்று கோபத்துடன் கேட்க ‘பொறாமையைப் பாரு..’ என்று நினைத்தவன் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.

“உன்னைவிட எனக்கு ஜானுதான் முக்கியம்..” என்றான் வேண்டுமென்றே. அடுத்தநொடியே அவனின் சட்டையை விட்டுவிட்ட மது தன்னுடைய இரண்டு சூர்கேஸ்சையும் கையில் எடுத்துகொண்டு வெளியே செல்ல திரும்பினாள்.

ஆயிரம் கனவோடு வாழ நினைத்த இடத்திலிருந்து வெறுமையான மனதோடு வெளியேறும் தன்னுடைய நிலையை எண்ணி அவளின் கண்கள் கலங்கியது. அவளைத் தடுக்க வேண்டிய கிருஷ்ணா நேராக அவனின் அறைக்குச் சென்றுவிட்டான். அவள் வெளியே செல்ல திரும்பும் பொழுது தன் தளிர் நடையோடு அவளை நோக்கி வந்தது.

ஜானுவைப் பார்த்து, ‘என்னை இந்த வீட்டைவிட்டு அனுப்பிட்ட இல்ல..’ என்று சைகையில் பேச சட்டென்று பறந்து சென்று தன்னுடைய கூண்டின் மீது நின்றது.

அது அமர்ந்த வேகத்தில் கூண்டு அங்கும் இங்கும் ஊஞ்சலாடியது. அதிலிருந்து ஒரு கடிதம் கீழே விழுகவே மது சென்று அந்த கடிதத்தைக் கையில் எடுத்து பிரித்தாள்.

‘ஹாய் மக்கு பொண்டாட்டி ஜானு உன்னோடு விளையாட நினைத்து சேட்டை பண்ணின உடனே  பறக்க விட்டுவிடாதே. அவளுக்கு நான் நல்லா டிரைனிங் கொடுத்திருக்கேன். நீ எங்கிருந்து பறக்க விட்டாலும் ஜானு நேரா என்னோட ஆபீஸக்குதான் வருவா. அப்படி ஏதாவது பண்ணி வை உனக்கு இருக்கு கச்சேரி..’ என்று குறும்புடன் கூறிய கடிதத்தின் வரியைப் படித்ததும் அவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அதுவரை மனதை அழுத்திய பாரம் கொஞ்சம் குறைய ‘நிஜமாவே நான் மக்குதான்..’ என்று ஒப்புக்கொண்டு கிளிக்கு ஒரு முத்தத்தைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு கிருஷ்ணாவின் அறையை நோக்கிச் சென்றாள் மது.

தன்னுடைய கையில் முகம் புதைத்து பெட்டில் அமர்ந்திருந்த கிருஷ்ணாவின் நிலைக் கண்டதும் அவளின் மனம் உருகியது.

‘நான்தான் அவனுக்கு தேவை இல்லாமல் டென்ஷன் கொடுக்கிறேன்..’ அவள் அறைக்குள் நுழைந்தாள். அவளின் கொலுசு சத்தத்தை வைத்தே அவள் தன்னை நெருங்கிவிட்டதை உறுதி செய்தது கிருஷ்ணாவின் மனம். அவளின் செயலை அறிய அவன் அமைதியாக இருந்தான்.

அவனின் காலடியில் மண்டியிட்டு அமர்ந்த மது அவனின் கையிரண்டை விலக்கிவிட்டு அவனின் முகம் பார்க்க பளிச்சென்ற புன்னகையுடன் அவனின் முகம் பிரகாசித்தது.

அவனின் உதட்டின் ஓரத்தில் இருந்த குறும்பு கண்டு, ‘பிராடு.. கொஞ்ச நேரத்தில் என்னைத் தவிக்க விட்டுவிட்டு இங்க உட்கார்ந்து சிரிச்சிட்டு இருக்கிற..’ என்று இதழசைத்தவள் அவனை அடிக்க தொடங்கினாள்.

“நீ இதெல்லாம் கற்பனை பண்ணி வெச்சிருப்ப ரதிமா அதெல்லாம் நடக்கலன்ன உனக்கு ஏமாற்றமா இருக்குமில்ல..” அவள் கொடுக்கும் அடியை எல்லாம் தாங்கிக்கொண்டு அவன் வாய்விட்டுச் சிரிக்க அந்த இடத்தைவிட்டு எழுந்தாள் மது

‘போடா.. நான் நிஜமாவே எங்க அம்மாவிட்டுக்கு போறேன்..’ என்று திட்டியபடி அவள் இரண்டடி எடுத்து வைக்க அதற்குள் அவளின் கையைப்பிடித்து சுண்டி இழுத்தான்.

அவள் எதிர்பாராத நேரத்தில் அவன் இழுத்த இழுப்பில் அவனின் மீதே வந்து விழுக பேலன்ஸ் இல்லாமல் படுக்கையில் சரிந்தான். அவனின் மீது இவளும் விழுந்தவளின் அவளைச்சுற்றி வளைத்தது கிருஷ்ணாவின் வலிய கரங்கள்.

அவள் அவனின் பிடியிலிருந்து விடுபட போராட, “ஒரு மூன்று நாள் நான் பண்ணிய செட்டைக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதே. ஆறுமாசம் என்னை தவிக்க விட்டுட்டு போனப்போ எனக்கு எவ்வளவு கோபம் வந்திருக்கும்..” என்று அவளின் மூக்கைப் பிடித்து ஆட்டியவனின் கரத்தை தட்டிவிட்டாள் மது.

‘என்னை மட்டும் டீலில் விட்டுட்டு நீ எதுக்கு ஜானுவுக்கு சப்போர்ட் பண்ணற. இப்போ கூட அவ தான் முக்கியம் என்று என்கிட்ட சொல்ற..’ என்று அவனிடம் சண்டைக்கு வந்தாள்.

“பொறாமையைப் பாரு. அடியேய் போயும் போயும் கிளிகூட போட்டி போடுற.. உனக்கு அறிவு இருக்கா இல்லையா?” என்று சந்தேகப்பார்வையுடன் கேட்டவனை கொலைவெறியுடன் பார்த்தாள் மது.

‘அது எப்படி வாய் பேசுது தெரியுமா?’ என்று பாவமாக கேட்ட மது தொடர்ந்து,

‘நான் உன்னை சைட் அடிச்ச விஷயத்தை சொல்லி சொல்லி என்னைக் கோபத்தை தூண்டிவிட்டா நானும் என்ன பண்றது. எனக்கு வந்த கோபத்தில் யோசிக்காமல் பறக்க விட்டுட்டேன்..’ என்று சீரியஸாக கூறியவளைப் பார்த்து வாய்விட்டுச் சிரித்தான்.

அவளின் மனம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஜானு பேசும் பொழுது மட்டும் அவளின் கோபம் அதிகரிக்கிறது. இவளின் சைகை அதுக்கு புரியாது. ஜானு சொல்ல வரும் விஷயம் இவளுக்கு புரிந்தாலும் பதில் சொல்ல முடியவில்லை என்ற ஒரு காரணம் தான்.

‘இப்போ அது உன்னோட சேர்ந்து வருவது பார்த்து எனக்கு எக்கசக்கமான கோபம் வருது..’ என்று மனதை மறையாமல் கூறிய மதுவின் மனம் அவனுக்கு புரிந்தது.

“உன்னோட மனசு எனக்கு புரியுது மது. ஆனால் அது அடிப்பட்டு வந்த பறவை. அதுக்கு நல்லது கெட்டது தெரியாது. நம்ம சொல்றதை திரும்ப திரும்ப சொல்லும். உனக்கு ஒரு விஷயம் சொல்லட்டுமா..” என்று கேட்க அவள் சம்மதமாக தலையசைத்தாள்.

“என்னைவிட உன்னைத்தான் ஜானுவுக்கு ரொம்ப பிடிக்கும். உனக்காக என்னிடம் சண்டை போட்டுட்டு இரண்டு நாள் சாப்பிடாமல் இருந்துச்சு தெரியுமா? நம்ம மேல் பாசம் வைத்திருக்கும் ஒரு பறவை மீது நீ பொறாமையையும் கோபத்தையும் கட்டுவது எனக்கு சுத்தமா பிடிக்கல..” என்றவன் அவளுக்கு புரிய வைத்தான்.

‘சரி இனிமேல் நான் ஜானு கூட போட்டி போட மாட்டேன்..’ என்றவள் புன்னகையுடன் கூறவே,  “தேங்க்ஸ்..” என்று விரல்கள் அவளின் கன்னத்தில் கோலம் போட்டது. அவனின் விரல் செய்த வித்தையை விழிமூடி ரசித்தாள்

“இனிமேல் நமக்குள் சண்டை வராமல் இருக்க சில கண்டிஷன் சொல்வேன். மேடம் அதுபடி நடந்துக்கணும்..” அவளின் முகத்தை வருடியபடியே கூறிவே ‘என்ன கண்டிஷன்..’ ஆர்வமாக கேட்டாள் மது.

“முதலில் காலை குட் மார்னிங் சொல்லும் பொழுது ரோஜா பூ கொடுத்து விஷ் பண்ணனும்..” என்றான் கிருஷ்ணா குறும்புடன்.

‘மல்லியப்பூ கொடுத்த ஒத்துக்க மாட்டியா..’ என்று அவனை இடைமறித்து கேள்வி கேட்டவளின் கன்னத்தை விளையாட்டுப் போல கிள்ள, ‘வலிக்குது பக்கி..’ என்றவள் அவனின் தலையில் நறுக்கென்று கொட்டினாள்.

“அடுத்து குட் நைட் சொல்லும் பொழுது ஒரு சாக்லேட் கொடுத்து விஷ் பண்ணனும்..” என்றவனைப் பார்த்து முறைத்தவள், ‘வேற இன்னும் ஏதாவது இருக்குதா..’ என்று நக்கலாக கேட்டவளின் இதழில் பதிந்தது அவனின் பார்வை.

அவன் ஏதோ சொல்ல வரும் முன்னே அவனைத் தடுத்த மது, ‘உன்னை இப்படியெல்லாம் யோசிக்க சொல்லி எவன் சொன்னான்.. ஆமா உனக்கு இந்த ஐடியா கொடுத்த அந்த நல்ல உள்ளதை கொஞ்சம் காட்டு..’ என்றவளின் மூக்கைப் பிடித்து ஆட்டினான் கிருஷ்ணா.

“ம்ம் இதே பிளாட்டில் கிருஷ்ணா என்று ஒரு பிரில்லியண்ட் இருக்கான். அவன்தான் இப்படியெல்லாம் யோசிப்பான்..”என்றவன் கிண்டலாக கூறினான்.

‘புது ட்ரண்டு. பட் நல்லாத்தான் இருக்கு..’ என்று சிரித்தபடியே அவனின் கன்னத்தில் முத்தமிட்டாள் மது.

‘ஆனால் அந்த கிருஷ்ணா பிரில்லியண்ட் என்று சொன்னதை மட்டும் என்னால் நம்ம முடியல..” என்று உதட்டைப் பிதுக்கிக் குறும்புடன் கூறினாள் மது.

“இதெல்லாம் நீ கொடுக்கலன்னா கிருஷ்ணா கிட்ட செம அடி வாங்கும் இந்த லிப்ஸ். எப்படி மேடம் வசதி..”மிரட்டியவனின் விரல்கள் அவளின் உதட்டை வருடியபடியே கூறினான்.

‘நீ சொன்ன மாதிரி நடந்துக்கிறேன் இப்போ என்னோட உதட்டில் இருந்து கையேடு கேடி பயபலே..’ என்றாள் மதுவும் குறும்புடன். அதன்பிறகு அவளின் நெற்றியில் முத்தமிட்டு எழுந்த கிருஷ்ணா வீட்டில் சிதறி கிடந்த பொருட்களை எல்லாம் எடுத்து அதன் இடத்தில் வைக்க மது அவனுக்கு உதவினாள்.

இருவரின் இடையே பேசித் தீர்க்க வேண்டிய விஷயங்கள் ஏராளம் இருந்தாலும் கூட அதையெல்லாம் ஒதுக்கிவிட்டு வாழ நினைத்து இருவரும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தனர். இனிவரும் நாட்கள் எப்படி இருக்குமோ?

 

 

error: Content is protected !!