Kolai

Kolai

கொலையும் செய்வாள்

ஸ்ஸ்ஸ்…  என்ற சத்தத்துடன் பால் பொங்கி அடுப்பைத் தாண்டி வழிந்து ஓடியதை என் புலன்கள் உணரவே இல்லை.  மழுங்கி மரத்துப் போனவை அவை. சமையலறை ஜன்னல் கம்பிகளைப் பற்றியபடி தூரத்தில் தெரிந்த ஒற்றை நட்சத்திரத்தை  வெறித்துக் கொண்டிருந்தேன்.

இலக்கற்ற விழிகள்.  காய்ந்து வறண்டு போன ஈரப்பசையற்ற உதடுகள்.  ஜீவனின்றி வெறித்தப் பார்வை,  என் கவனம் என் வசமில்லை என்பதை உணர்த்தியது. கன்னத்திலும் தோளிலும் துருத்திய எலும்புகள், நான் சுவையறிந்து உணவு உண்டு பல வருடங்கள் ஆனதைப் பறைசாற்றியது.

காதில் ஒரு பொட்டுத் தங்கம்.  மூக்கில் ஒற்றைக்கல் மூக்குத்தி. ஆனால் கழுத்தில் மட்டும் மிகக் கனமான தாலிச்சங்கிலி. நெற்றியில் ஒற்றைப் பொட்டு. குங்குமமோ மஞ்சளோ இன்றி வெளிறிப் போன முகம்.  இதுதான் என் அடையாளம்.

கடவுள் என்ற ஒருவனை மறந்து பல வருடங்கள் ஆவதால் விபூதி குங்குமம் போன்ற சின்னங்களை நான் அணிவதே இல்லை. கணவன் என்ற ஒருவனை என் மனது இதுவரை ஏற்றுக் கொள்ளாததால் மஞ்சள் பூசிக் குளிக்கும் எண்ணம் வரவேயில்லை.

என் வயது என்ன இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? நாற்பத்து இரண்டு தொடங்கப் போகிறது. பதினெட்டு வயதில் திருமணம் ஆனது. உங்கள் கேள்வி எனக்குப் புரிகிறது. திருமணமாகி இருபத்தி நான்கு வருடங்களாகியும் கணவன் மீது உனக்கு மனம் போகவில்லையா என்றுதானே கேட்கிறீர்கள்.

போயிருக்கலாம்… அன்பாக அனுசரனையாக ஒரு வார்த்தையேனும் பேசியிருந்தால்.  என் மனவேதனைகளை மதித்து நடந்திருந்தால். என்னை வெறும் உடல் சதையாக எண்ணாமல்  மனுசியாக நடத்தியிருந்தால். தன் ஆண் திமிரை என்னிடம் காட்டாது இருந்திருந்தால், குறைந்தபட்ச மனிதத் தன்மையாவது  அவருக்கு இருந்திருந்தால்   ஒருவேளை என் மனம் அவர் புறம் சென்றிருக்கக்கூடும்.

 

சுற்றுப் புறத்தைப் பற்றிய பிரக்ஞை இன்றி சூனியத்தை வெறித்தபடி நின்றிருந்த எனது கூந்தல் கொத்தாகப் பற்றியிழுக்கப் பட்டு, பளார் என்றொரு அறை விழுந்தது, அந்த ஒட்டிப் போன கன்னத்தில். சுரீர் என்று எரிந்த கன்னத்தை அழுந்தப் பற்றிக் கொண்டு தலை குனிந்து நின்றிருந்தேன்.

பதட்டப்படாதீர்கள். அடி வாங்குவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. திருமணம் முடிந்த இத்தனை ஆண்டுகளில் நான் அடி வாங்காத நாட்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதுவும் என் மகளைப் பெற்றெடுக்க நான் மருத்துவமனையில் இருந்த நாட்களாகத்தான் இருக்கும்.

“மூதேவி…  தரித்திரம் பிடிச்சவளே…  பால் பொங்கி வழியுது, அதுகூடத் தெரியாம என்ன யோசனைடி உனக்கு. உன்னையெல்லாம் கல்யாணம் பண்ணி உன்கூட மாறடிக்கனும்னு எனக்குத் தலையெழுத்து.”

வெறுப்பை உமிழ்ந்த அந்த விழிகளை நான் நிமிர்ந்து பார்ப்பதே இல்லை.  இந்த வசவுகள் அனைத்தும் பழகிப் போன ஒன்றாயிற்று எனக்கு. என் மௌனம் மேலும் ஆத்திரத்தைக் கிளப்பிவிட மேலும் திட்டத் துவங்கினார் என் கணவர்.

“கல்யாணம் ஆகி என்கூட குடும்பம் நடத்தி ஒரு பிள்ளைய பெத்த பிறகும் வேற எவனையோ மனசுல வச்சிகிட்டு இருக்கியே நீயெல்லாம் ஒரு பொம்பளையாடி. உன்னையெல்லாம் உயிரோடக் கொளுத்தனும்னு வெறி வருது. ஆனா எதுவும் செய்ய முடியாம என் கையக் கட்டி வச்சிருக்கான் உங்கப்பன்.”

என்று ஆரம்பித்து மேலும் அவர் பேசிய பல வார்த்தைகள் அச்சில் வடிக்க முடியாதவை. அடாது பெய்யும் அடைமழை போல அனைத்து கெட்ட வார்த்தைகளையும் உபயோகித்து என்னை வைத பின்னர் அவருக்கே சலிப்பு ஏற்படவும் நகர்ந்து சென்றார்.

மெதுவாக பால் வழிந்து போயிருந்த அடுப்பையும் மேடையையும் துடைக்க ஆரம்பித்தேன். உங்களில் பலருக்கு இப்போது என்மீது சிறிது பரிதாபம் வந்திருக்கும். சிலருக்கு கோபமும் வந்திருக்கும். அனைவருக்குமே மனதில் பல கேள்விகள் வந்திருக்கும். பதில் சொல்கிறேன்.

உன் கணவர் உன்னைச் சந்தேகப் படுகிறாரா? இதுதானே உங்கள் முதல் கேள்வி.  சத்தியமாக இல்லை.  அவர் சொல்வது அனைத்தும் உண்மை. திருமணம் முடிந்து ஒரு பெண் பிள்ளையை அவருக்குப் பெற்ற போதும் என் மனதில் இன்று வரை நீங்காமல் இருப்பது வேறொருவன்.

இப்பொழுது நிறைய பேருக்கு என்மீது அசூயை வந்திருக்கலாம். இவளென்ன பெண் என்று கோபம் கூட வந்திருக்கலாம். ஆனால் அதைப்பற்றியெல்லாம் கவலைப் படும் நிலையை நான் கடந்து விட்டேன். இப்பொழுது  இவ்வளவு ஏச்சையும் பேச்சையும் வாங்கிக் கொண்டு நான் இங்கிருக்கக் காரணம்  என்ன தெரியுமா? என் மகள்தான்.

தேவதைப் பெண் அவள். என் மீது உண்மையான பாசத்தை வைத்த இரண்டாவது ஜீவன். முதல் ஜீவன் யார் என்று உங்களுக்குத் தெரியும் அல்லவா…?  அவளுக்கொரு நல்வாழ்க்கை அமைந்து விட்டால் போதும், நானும் என் குணா சென்ற இடத்திற்கே சென்று விடுவேன்.

குணா யாரென்று பிறகு சொல்கிறேன்.  என் மகள் ஜீவிதாவைப் பற்றிச் சொல்கிறேன் கேளுங்கள்.  அதிர்ஷ்டமில்லாத சிப்பிக்குள் உதித்த நல்முத்து அவள்.  வறண்ட பாலை போல இருந்த என் வாழ்வில் விழுந்த மழைத்துளி அவள்.

வாழ்ந்தது போதும் என்று என் ஜீவனை முடித்துக் கொள்ள நான் நினைத்த போது எனக்குள் ஜீவித்து என்னைக் காத்தவள். என் மனம் முழுவது வேதனையும் ரணங்களும் நிறைந்திருக்கும் போதும், தன் ஒற்றைச் சிரிப்பால் என்னை ஆற்றுப் படுத்தியவள்.

முதுகலை பௌதீகம் படிக்கிறாள். வெளியூரில் விடுதியில் தங்கி. மிகுந்த திறமைசாலி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று எண்ணும் இந்த மூடர் கூட்டத்திற்கு மத்தியில், அவளை இவ்வளவு படிக்க வைத்ததே என் சாதனைதான். பரிட்சை முடிந்து நாளை வருவாள்.

குணாவைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா…?   பார்த்தீர்களா…? அவனைப் பற்றி பேசும் போது என் கண்களில் தோன்றும் மின்னலை. என் சுவாசத்தில் கலந்தவன் அவன்.

பதினெட்டு வயது… கவலைகள் அறியாத வயது. சிறகடிக்கும் பறவையாய் மனம் துள்ளும் வயது.

என் குணாவை நான் முதன் முதலில் பார்த்தது அந்த வயதில்தான்.   மனிதர்களின் கோர முகங்களைப் பற்றியும், அவர்களது ரத்தத்தில் ஊறிப் போன ஜாதி வெறி பற்றியும் துளிகூடத் தெரியாத வயது அது.  வாழ்க்கையில் கறுப்புப் பக்கங்களும் இருக்கும் என்று புரியாத வயது  அது.

என் வீட்டின் ஒற்றைப் பெண் நான். ஆண் பிள்ளை பெற்றுத் தரவில்லை என்று, அர்த்தமில்லாமல் என் அன்னையை அடிக்கும் தந்தையைப் பார்த்து வளர்ந்தவள்  நான். ஆனால், என்னிடம் பிரியமான முகத்தை மட்டும் காட்டிய   என்  தந்தையின் உண்மையான முகம் வேறாய் இருந்தது.

பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரியில் கால் எடுத்து வைத்தத் தருணம் அது. உலகின் ராணியே நான்தான் என்று இறுமாப்பாய் எண்ணிய பருவம் அது.

நான் கல்லூரியில் நடந்து போகும் போதும் வரும்  போதும்,  வைத்த கண் வாங்காமல் பார்த்த  மாணவர்களுக்கு மத்தியில், தலை குனிந்து ஒதுங்கிப் போன குணா வித்தியாசமாய்த் தெரிந்தான்.

அனைவரும் என் கடைக்கண் பார்வையாவது தன் மீது படாதா என்று தவமிருக்க, நிமிர்ந்து கூட முகம் பார்க்காதவன் என்னை ஈர்த்ததில் ஆச்சர்யம் ஒன்றுமில்லையே.

அது மட்டுமல்லாமல் கல்லூரியில் பாடத்திலும் சரி போட்டிகளிலும் சரி முதலாவதாக வந்தாலும் ஆர்பாட்டம் ஏதுமின்றி அமைதியாக இருந்தவனை அவ்வளவு பிடித்தது எனக்கு.

என் தந்தை ஒரு ஜாதிக் கட்சித் தலைவர். கீழ் சாதி என்றழைக்கப்படும் மக்களுக்கு எந்த அங்கீகாரமும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனத்தோடு இருப்பார். அவர் முன் நின்று பேசக் கூட முடியாது அந்த ஜாதி மனிதர்களால்.

ஊரை விட்டுத் தள்ளி ஒதுக்குப்புறமாக அவர்களுக்குத் தனி சேரி உண்டு. சற்றேறக்குறைய தீண்டாமை புழக்கத்தில் இருந்தது எங்கள் ஊரில் அப்போது.

ஊர் பொதுக் கிணற்றில் தெரியாமல் இறங்கி விட்ட கீழ்சாதிச் சிறுவர்களை,  சிறுவர்கள் என்றும் பாராமல் கட்டி வைத்து மேல்சாதியினர் உதைத்ததில் ஒரு சிறுவன் இறந்து விட மிகுந்த கொந்தளிப்பானது ஊர்.

அதைவிட, இறந்த சிறுவனுக்கு நியாயம் சொல்லாமல்   கிணற்றில் இறங்கிய சிறுவர்களுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு சொன்ன என் தந்தையின் மீது, மிகுந்த ஆத்திரத்தில் இருந்தனர் அந்த மக்கள்.

இவை எதுவும் தெரியாமல் வழக்கம் போல கல்லூரி வந்தவளைச் சுற்றி வளைத்தனர்  அவ்வூரைச் சேர்ந்த விடலைகள்.

“இவ அப்பனுக்கு நம்மளைக் கண்டா இளக்காரம்டா. நம்ம ஊர்ல ஒரு உசிரு போன மாதிரி அவனுங்க ஊர்லயும் போனாதான் அவனுங்களுக்கு புத்தி வரும்.  அதுவும் இவ அவங்க வீட்டுக்கு ஒத்த புள்ள. இவளைக் கொன்னு போட்டா இவங்க அப்பனுக்கு புத்தி வரும்டா.”   என்றவாறு கடப்பாரையை ஓங்கியவர்களைத் தடுத்து என்னை அரண் போலக் காத்து நின்றான் குணா.

“குணா…  நீ இதுல தலையிடாத. நம்ம ஊர் புள்ளைங்களுக்கு நடந்த  அநியாயம் உனக்குத் தெரியும்ல்ல.  நியாயமா நீ எங்க கூட நிக்கனும். ஆனா அவளுக்குப் பாதுகாப்பா நிக்குற.”

“தப்புண்ணே…  இவங்க ஊர்க்காரங்களும் அப்பாவும் செய்த தப்புக்கு இந்தப் பொண்ணு என்ன செய்யும்? நாம போலீஸ்ல போய் புகார் குடுப்போம்.  நம்ம பக்கம் நீதி இருக்கு. நாம ஜெயிக்கலாம். அதை விட்டு வெட்டு குத்துன்னு இறங்குனா இந்தப் பிரச்சனைய முடிக்க முடியாதுண்ணே.”

“படிச்சவன் பாட்டைக் கெடுத்தான் எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்ங்கற கதையா உளறாதடே…  வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு காரியம் முடிக்கறத விட்டுப்போட்டு, போலீசுகிட்ட போய் நியாயம் கேட்கச் சொல்லுறியே.?  நீ படிக்கற படிப்பெல்லாம்  இங்க உதவாதுடே.”

பயந்து நடுங்கி நின்ற என் மீது யாருடைய விரல் நுனிகூடப் படாது  காப்பாற்றி, வெகுவாக கொந்தளித்தவர்களையும் அடக்கி அழைத்துச் சென்றவன், திரும்பி என் மீது வீசிய ஆறுதல் நிறைந்த பார்வை, என் உயிரின் அடியாழம் வரைச் சென்று நிறைந்தது.

அந்தச் சம்பவத்தில் எனது தந்தையும் இன்னும் சிலரும் கைது செய்யப்பட்டது தனிக் கதையென்றால்,  ஒரே நாளில் அவரது செல்வாக்கைப் பயன்படுத்தி என் தந்தை வெளியே வந்தது கிளைக் கதை. இருந்தாலும், ஒரு நாளாவது என் தந்தையை உள்ளே வைத்துப் பார்த்த திருப்தி அவர்களுக்கு.

இது மட்டுமல்ல இன்னும் பல சம்பவங்கள்…  என்னுள் அவன் மீதான ஆழமான நேசத்தை வளர்த்தது.  அவனிடம் என் நேசத்தை  வெளிப்படுத்தவும் தயங்கவில்லை நான்.

வலிய வந்து காதலைச் சொல்லும் இளம் பெண். எந்த அவதூறும் சொல்ல முடியாத என் குணம். கண்ணைக் கவரும் என் அழகு. அவனுக்குள்ளும் பொங்கித் ததும்பிய காதல்  அனைத்தும் சேர்ந்து   அவனை என்பால் ஈர்த்தது. என் நேசத்தை  முதலில்  மறுத்தாலும், விரைவில் ஏற்றுக் கொள்ள வைத்தது அவனை.

கல்லூரியில் முதுகலைப் பட்டப்படிப்பில் இறுதியாண்டில் இருந்தவன், “இங்க பாரு புள்ள. நாம விரும்பறது யாருக்கும் இப்பத் தெரிய வேணாம். நான் படிச்சு  முடிச்சதும் கவர்ண்மெண்ட் வேலைக்குப் பரிட்சை எழுதப் போறேன்.  கண்டிப்பா வேலையை வாங்கிடுவேன்.

உன்னைய கண்கலங்காம வச்சு காப்பாத்தற அளவுக்கு என் தகுதியை வளர்த்துகிட்டு அப்புறம் வந்து உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்குறேன். அப்படியும் அவர் தரமாட்டேன்னு சொன்னா என் கூட வந்துடு நீ.”

தன் மூச்சுக் காற்றுகூட என்மீது படாத கண்ணியமான தூரத்தில் அமர்ந்து கண்களில் காதலைத் தேக்கி என்னைப் பார்த்து அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் மனப் பெட்டகத்தில் பசுமையாய் பதியம் செய்து கொண்டிருந்தேன்.

புன்னகை மாறாத என் முகம் பார்த்து அவனுக்கு என்ன தோன்றியதோ? “உன் மேல உசிரையே வச்சிருக்கேன் புள்ள. நாளைக்கு உங்க அப்பா பேச்சைக் கேட்டு என்னைய விட்டுட மாட்டல்ல? என்னைய நம்பி என்கூட வருவல்ல?”

இதற்கு என்ன பதில் கூறினால் அவன் மனம் சமாதானமாகும்? யோசித்தேன்…

“விளையாட்டுப் புள்ளையா இருக்காளே, இவ உண்மையா நம்மள நேசிக்கிறாளோன்னு உனக்குச் சந்தேகமா குணா?  என் உசிர் என்னைய விட்டுப் போகற வரை என் மனசுல   நீதான் என் புருஷன். எத்தனை வருஷமானாலும் உனக்காக காத்திருப்பேன்.

ஒருவேளை நாம சேர முடியாமப் போச்சுன்னா அந்த நிமிஷத்துல இருந்து நான் பொணம்தான். இதை நல்லா நியாபகம் வச்சிக்கோ. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வந்து என்னைய கூட்டிட்டுப் போ குணா.”

“ச்ச்சு… என்ன புள்ள பொணம்னுலாம் அச்சானியமா பேசுற?  நாம பல வருஷம் நல்லா வாழுவோம் புள்ள. நான் என்னென்ன கனவுல்லாம் கண்டுகிட்டு இருக்கேன். நீ என்னன்னா இப்படி பேசுற.”

வெகுவாக வருந்தியவனை ஆதூரமாகப் பார்த்த என் விழிகள் அவன் நேசத்தில் நிறைந்தது. ஆசையோடு கேட்டேன்,

“என்னென்ன கனவு குணா கண்டுகிட்டு இருக்கற?”

“எல்லாம் இப்பவே சொல்ல முடியுமா புள்ள? நீ சின்னப் பொண்ணு.   நல்லாப் படி. எனக்கு ஒரு வேலை கிடைச்சதும், நம்ம கல்யாணம் முடிஞ்ச அன்னைக்கு உன் மடியில படுத்துகிட்டு என் கனவுகளெல்லாம் ஒவ்வொன்னாச் சொல்லுறேன்.”

அவன் கண்களில் மின்னிய காதலில் என் கன்னங்கள் சிவந்தன.

“ஒன்னு கூட இப்ப சொல்ல மாட்டியா?”

என் வெட்கத்தைக் கண்டதும் அவன் புன்னகை பெரிதானது. கண்களில் என் மீதான மயக்கம் அப்பட்டமாய்த் தெரிய,   “ எனக்கு உன்னை மாதிரியே… அழகான கண்ணு, குட்டி மூக்கு, செப்பு வாயோட குட்டியா ஒரு பொண்ணு வேணும் புள்ள. பெத்துக் குடுப்பியா?”

என் கன்னத்தில் பளீரென்ற நிறத்தில் ரோஜாக்கள் பூத்தன. அவனைப் பார்த்து வெட்கத்தில் சிரித்தபடி, “ஏன் உன்னைப் போல ஆம்பளப் புள்ள வேணாமா?”

உரத்துச் சிரித்தவன்,  “அது உன் ஆசைக்கு அடுத்து பெத்துக்கலாம் புள்ள. முதல்ல மாமனுக்கு உன்னைப் போல ஒரு பொண்ணு பெத்துக் குடு.”

இங்கே உங்களுக்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது. என் மகள் ஜீவிதா அச்சு அசப்பில் உருவம் மட்டுமில்லாது குணத்திலும் என்னைப் போலவே. என்னையும் அவளையும் அருகே நிறுத்திப் பார்த்தால் வயதைத் தவிர வேறு வித்தியாசம் காண முடியாது உங்களால்.

அனைத்தும் நன்றாகத்தான் போனது.   ஆனால் விதி எங்களைத் துரத்த, நாங்கள் காதலைப் பறிமாறிக் கொண்ட சில வாரங்களிலேயே, எனது தந்தைக்கு  எங்களது காதல் காட்டிக் கொடுக்கப்பட்டது சில எட்டப்பன்களால்.

எதிர்த்து   ஒரு வார்த்தை பேச முடியாத அளவுக்கு எனக்கு அடி விழுந்தது. பிள்ளை வளர்த்த லட்சணத்தைப் பார் என்று சொல்லி எனது அன்னைக்கும் சரமாறியாக அடி விழுந்தது.

உடம்பெல்லாம் புண்ணாய் போன பின்னும் என் உறுதியை அசைக்க முடியவில்லை எனது  தந்தையால். தோப்பு வீட்டிற்கு இழுத்துச் செல்லப் பட்டேன். அங்கே நான் கண்ட காட்சி என் ஜென்மத்துக்கும் என்னால் மறக்கவே முடியாது.

கைகள் பின்னே கட்டப்பட்ட நிலையில் உடம்பெல்லாம் ரத்தக் களறியாய் குற்றுயிரும் குலையுயிருமாகத் தரையில் உருண்டிருந்தான் குணா. மரத்தில் கட்டி வைக்கப்பட்ட நிலையில்  உடம்பு  முழுக்க ரணத்துடன் மயங்கிப் போயிருந்தார் குணாவின் தந்தை.

குணாவின் தாயும் தங்கையும் மிகக் கேவலமாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தனர் எனது தந்தையின்  அடியாட்களால். கதறிக் கொண்டே குணாவின் அருகே ஓடிய என்னை இழுத்து வந்து என் தந்தையின் காலடியில் போட்டான் அவரது விசுவாசி.

“அப்பா…  ப்ளீஸ்ப்பா…  அவங்களை விட்டுடுங்கப்பா….  அவங்க மேல எந்தத் தப்பும் இல்லப்பா. என்னாலதான்பா எல்லாமே. இனிமே உங்களுக்குப் பிடிக்காதத செய்ய மாட்டேன்ப்பா.”

என் தந்தையின் கால்களைப் பிடித்துக் கொண்டு நான் கதறிய கதறல்கள், சற்றும் இளக்கத்தை ஏற்படுத்தவில்லை எனது தந்தையிடம்.  குரூரமான பார்வையோடு,

“நாளைக்கே,  இந்தா நிக்குறானே என் ஜாதிக்காரப் பய இவனோட உனக்குக் கல்யாணம்.  அதுக்கு ஒத்துக்கிறியா… இவனுங்களைப் பொழைச்சுப் போகட்டும்னு விட்டுடறேன்.”

மிகுந்த அதிர்ச்சியோடு நிமிர்ந்து எனது தந்தையைப் பார்த்தேன். அருகே கேவலமான ஒரு இளிப்போடு அவரது விசுவாசி.   இந்த நொடியே பூமி பிளந்து என்னை வாங்கிக் கொள்ளாதா என்ற என் வேண்டுதல் எந்தக் கடவுளின் காதிலும் விழவில்லை.

“அப்பா…  நான் இனிமே எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்ப்பா.  நான் வீட்ட விட்டு வெளியகூடப் போகாம இருக்கேன்பா. ஆனா எனக்குக் கல்யாணம் மட்டும் வேணாம்பா. கடைசி வரை உங்க பொண்ணா உங்ககூடவே இருந்துடறேன்பா. ப்ளீஸ்ப்பா… “

“காலம் முழுக்க உன்னை வீட்டுல வச்சி நான் அசிங்கப்படவா…?  இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிச்சா இவனையும் இவன் குடும்பத்தையும் உயிரோட விடுவேன். இல்லையின்னா இவங்க அத்தனை பேரோட சேர்த்து உன்னையும் கொன்னு புதைச்சிடுவேன்.

எனக்கு என் ஜாதிதான் முக்கியம். என் ஜாதிக்காரன் முன்னாடி என்னால அவமானப்பட முடியாது. அதைவிட எனக்குப் புள்ளையே பிறக்கலைன்னு நினைச்சிக்கிறேன்.”

எவ்வளவு கெஞ்சியும் துளிக்கூட மனமிரங்கவில்லை அவர். அவரருகே நின்றிருந்த அவரது விசுவாசி ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துக் கொண்டு குணாவின் தலையில் போட  அவனருகே செல்ல…   அதைப் பார்த்த எனக்கு சகலமும் ஆடிப் போனது.

என் கண் முன்னே என் காதலனின் உயிர் ஊசலாடுவது புரிந்தது. இனி நடப்பது நடக்கட்டும் என்று, என் தந்தையிடம் அவர் சொல்வதைக் கேட்கிறேன் என்று வாக்குக் கொடுத்தேன். குணாவுக்கும் அவனது குடும்பத்துக்கும் எதுவும் ஆகக் கூடாது என்று என் தந்தையிடம் உறுதிபடுத்திக் கொண்டேன்.

அதற்குப் பின் தாமதமின்றி மறுநாளே, எங்கள் ஜாதியைச் சேர்ந்தவன் என்ற ஒரே  காரணத்திற்காக, என் தந்தையின் விசுவாசிக்கும் எனக்கும் அவசர அவசரமாக திருமணம் நடந்து முடிந்தது.

அன்றிரவே என் உள்ளமும் உடலும் வலிக்க வலிக்க, செல்வியாக இருந்த நான் திருமதியாக வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டேன். மனம் நைந்து மறத்துப் போனது எனக்கு. ‘நமக்கு விதித்தது இதுதான்’  விரக்தியாக எண்ணிக் கொண்டேன்.

குணாவின் குடும்பத்திற்கும் குணாவுக்கும் ஏதாவது நடந்தால் என்னையே என்னால் மன்னிக்க முடியாது.   விலகி விலகிப் போனவனை விரட்டி விரட்டிக் காதல் சொன்னவள் நான்தான். அவனுக்கு எதுவும் ஆகாமல் காப்பாற்றியதே பெரிய நிம்மதியைக் கொடுத்தது எனக்கு.

குணாவும் அவனது குடும்பமும் ஊரை விட்டே சென்றுவிட்டனர் என்பதைக் கேள்விப் பட்டதும் மனம் நிம்மதி அடைந்தது. அவன் மிகுந்த திறமைசாலி.  வாழ்வில் கண்டிப்பாக முன்னுக்கு வருவான். அவனாவது நன்றாக இருக்கட்டும் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன்.

இப்படியே சில மாதங்கள் கழிந்தன.  அன்றொரு நாள் மாமனும் மருமகனும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவர்களது பேச்சை எதேர்ச்சையாகக் கேட்க நேர்ந்தது.

“மருமகனே…  எனக்குப் பின்னாடி கட்சித் தலைவர் பதவி உனக்குத்தான். என் சொத்து முழுக்க உனக்குத்தான். என் பொண்ண மட்டும் நல்லா பார்த்துக்க. ஒத்த புள்ளையாப் போயிட்டாளா? அதான், அவ மேல கொஞ்சமா பாசத்தை வச்சிப்புட்டேன்.”

மது போதையில் சொக்கிப் போய் உளறினார் எனது தந்தை. என் கணவரோ அதற்கு மேல் போதையோடு,

“கட்சித் தலைவர் பதவியும் உன் சொத்தும் தருவன்னுதான் உன் பொண்ணைக் கட்டினேன் நான்.  இல்லையினா கீழ் ஜாதிக்காரப் பய கூடப் பழகுனவளைக் கட்டுறவனா நான்.”   என்று சலம்ப,  என் தந்தைக்கு கோபம் வந்துவிட்டது.

“டேய்…  நீயெல்லாம் எனக்குச் சமமாடா?   என்கிட்ட வேலை பார்த்த நாய்  நீ.  உனக்கு என் பொண்ணைக் கட்டிக்கக் கசக்குதோ? அவ மட்டும் அந்தக் கீழ் ஜாதிக்காரப் பயல விரும்பறேன்னு நிக்கலையின்னா எப்பேர்ப்பட்ட மாப்பிள்ளை பார்த்திருப்பேன் தெரியுமா?  என் பொண்ணு கால் தூசிக்கு ஈடாவியாடா நீ.”

“அந்தத் திமிரு உனக்கும் இருக்கு உன் பொண்ணுக்கும் இருக்கு  மாமோய். அதான் தினமும் அவளை அடக்கி  ஒடுக்கறேனே…  உன்னையும் அடக்கி ஒரு மூலையில போட்டா, தன்னால தலைவர் பதவி எனக்குத்தான்.”

என் கணவர் அமர்ந்திருந்த சேரை எட்டி உதைத்த என் தந்தை, “பிச்சைக்கார நாயே…  யாரு யாரை அடக்குறது? உன்னை கொன்னு புதைச்சிடுவேன்டா.”

கீழே விழுந்து தட்டுத் தடுமாறி எழுந்த என் கணவர்,

“நீ இதுவரைக்கும் கொன்னு புதைச்சவங்களோட லிஸ்ட்ட போலீசுல சொன்னா உனக்குத் தூக்கு மேடைதான் மாமா.

என்னை வீணாப் பகைச்சுக்காத. நீ ஆரம்பத்துல செஞ்சக் கொலையில இருந்து கடைசியா அந்த குணாவ குடும்பத்தோட கொன்னு  மாந்தோப்புக்கு  உரமாப் புதைச்சது வரைக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு.”

காலடியில் நிலம் நழுவியது எனக்கு. நிற்க முடியாமல் தள்ளாடினேன். கரகரவென்று கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. ஒட்டியிருந்த கொஞ்சநஞ்ச ஜீவனும் உள்ளுக்குள் மரித்துப் போனது.  வெறித்த பார்வையுடன் அவர்களையேப் பார்த்திருந்தேன்.

“என்னைய ஜெயில்ல வச்சிப் பார்த்தவன்டா அவன்.  என் பொண்ணைக் கட்டிக்கக் போறேன்னு என்கிட்டயே தைரியமாச் சொன்னவன். நான் கூப்பிட்டா என் கூட வருவான்னு எவ்வளவு திமிராச் சொன்னான் தெரியுமா…  அதுக்கப்புறமும் அவனை எப்படி உயிரோட விட முடியும்?”

என் கணவரோடு பேசிக் கொண்டே திரும்பிய என் தந்தை என்னைப் பார்த்ததும் சற்று அதிர்ந்து வாயை மூடிக் கொண்டார். இருவரும் என்னைப் பார்த்து பெரிதாக ஒன்றும் அதிர்ந்து விடவில்லை. அவர்களுக்குத் தெரியும் என்னால் அவர்களை எதுவும் செய்ய முடியாது என்று.

அவர்கள் இருவரையும் உறுத்துப் பார்த்தபடி கண்ணில் நீர் வழிய நான் நின்றிருந்த கோலம் என் தந்தையை லேசாக அசைத்ததோ என்னவோ, தன் தவறை உணர்ந்து தலையைக் குனிந்து கொண்டார். அதுதான் என் தந்தையின் முகத்தை நான் கடைசியாகப் பார்த்தது.

ஊரார் சாபமெல்லாம் பலித்து, மரணப் படுக்கையில் உடலெல்லாம் புண்ணாகிப் போய் கிடந்த போதும் சரி,  உயிரற்ற உடலை ஒரு முறையாவது வந்து பார் என்று அனைவரும் வற்புறுத்திய போதும் சரி, வைராக்கியமாக அவர் முகத்தில் நான் விழிக்கவே இல்லை. அவருக்கு என்னால் கொடுக்க  முடிந்த அதிகபட்ச தண்டனை அதுதான்.

இனி இந்த உலகத்தில் நான் ஏன் வாழ வேண்டும் என்ற விரக்தி என்னுள் பெருகியது. குணா இந்த உலகத்தில் ஏதோ ஒரு இடத்தில் நலமாக இருக்கிறான் என்ற எண்ணமே என் உயிரைப் பிடித்து வைத்திருந்தது. அவன் உயிரோடு இல்லை என்று கதறிய மனதை அடக்க அரளி விதையை அரைத்து விழுங்கினேன்.

கடவுளுக்கு கொஞ்சம்கூட என்மீது இரக்கமில்லாமல்  இருந்திருக்க  வேண்டும்.  மயங்கிக் கிடந்த என்னை மருத்துவமனையில் சேர்த்து பிழைக்க வைத்தனர். நான் கண் விழித்த போது என் கால்களில் முகம் புதைத்துக் கிடந்தார் என் தந்தை. என் கைகளைப் பிடித்து அழுதவாறு என் அன்னை. அறையின் மூலையில் என்னை முறைத்தவாறு நின்றிருந்தார் என் கணவர்.

உயிரைக்கூட என்னிஷ்டப்படி விட முடியாத ஆயாசத்துடன் கண்களை மூடிக் கொண்டேன். எனக்கு சுயநினைவு திரும்பியதைப் பார்த்ததும்,

“என்னை விட்டுப் போகத் தெரிஞ்சியேடி…  நீ இல்லாம இந்த உலகத்துல எனக்கு என்ன இருக்கு?  ஒரு நிமிஷம் உன்னைப் பெத்தவளையும் உன் வயித்துல இருக்கற பிள்ளையையும் நினைச்சுப் பார்த்தியாடி.”

என் அன்னையின் அழுகை  என்னுள் சிறு அதிர்வை உண்டாக்கியது. மெல்ல என் வயிற்றை வருடிக் கொண்டேன். என்னுள் ஒரு உயிரா…?  லேசாகச் சிலிர்த்தது உடல். குணாவின் ஆசை காதுக்குள் ஒலிப்பது போல இருந்தது. முதலும் முடிவுமாய் அவன் என்னிடம் கூறிய ஆசை. உயிர் வாழும்  எண்ணம் துளிக்கூட இல்லாவிட்டாலும், என்னுள் உதித்த உயிரை அழிக்க  மனம் வரவில்லை…

அதற்குப் பின் என்னை தன் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள் என் அன்னை. என்னையே உரித்து வைத்துக் கொண்டு பிறந்த மகளைக் கண்டதும் என் மனதில் லேசாக ஒரு ஆறுதல்.   என் மகளை விடுத்து வேறெதிலும் என் கவனம் போகவில்லை.

தான் ஒரு ஆண்பிள்ளை என்பதை உலகுக்கு நிரூபிக்கும் விதமாகப் பிறந்த மகள் மீது என் கணவருக்கு பாசம்தான். ஆனால் அவர் முகத்தைக் கூட ஏறெடுத்துப் பார்க்காத என்னை, அதற்குப் பின் எதற்கும் நாடவில்லை அவர். பணத்தை விட்டெறிந்தால் எதுவும் கிடைக்கும் இந்த உலகில் நானெல்லாம் ஒரு பொருட்டா என்ன அவருக்கு?

என் தந்தைக்குப் பின் சொத்துக்கள் எல்லாம் கைக்கு வந்ததும், என் பிள்ளையைப் பிடுங்கிக் கொண்டு என்னை விரட்டி விடும் எண்ணமும் இருந்தது அவருக்கு.  அது அவரின் வாயாலேயே வெளிப்படும் சில நேரங்களில்.

 

என் கணவரின் குணம் தெரிந்த என் தந்தை கட்சிக்கு அவரைத் தலைவராக்கிவிட்டு,  அனைத்து சொத்துக்களையும் என் பெயரில் எழுதி வைத்தார்.

எனக்கு ஏதாவது நடந்தால்,  எனக்குப்பின்  அனைத்து சொத்துக்களும் என் மகளுக்குதான் சேர வேண்டும் என்றும்,  என் கணவர் அதை விற்கவோ அடகு வைக்கவோ முடியாது என்றும் எழுதி வைத்தார். என் கணவர் என்னை உயிரோடு வைத்திருப்பதற்கு முக்கிய காரணம் இதுதான்.

என் தந்தையின் முகத்தைக் கூட பார்க்க விரும்பாமல் நான் வைராக்கியமாக இருந்ததே அவரது உயிர் விரைவில் பிரியக்  காரணமாய் போனது. அவர் இறந்த சில வருடங்களில் எனது அன்னையும் காலமாகிவிட எனக்கு சகலமும் எனது மகள் என்றாகிப் போனது.

நாளை வருகிறாள்… தன் கல்லூரி படிப்பை முடித்துக் கொண்டு ஊருக்கு வருகிறாள்.  அவளை ஒரு நல்ல மனிதனின் கையில் ஒப்படைக்க வேண்டும்.  அதுதான் இப்போது என்னுடைய ஆசையாக இருக்கிறது.   அவளைப் பற்றி எண்ணியபடியே கண்ணயர்ந்தேன்.

விடியல் எனக்கு என்றுமே பூபாளத்தை இசைத்ததில்லை…  இருப்பினும் அன்று சற்று உற்சாகத்துடனே இருந்தேன்…  ஆனால் அந்த விடியல் பெரும் புயலை உள்ளடக்கியிருந்ததை என்னால் உணர முடியவில்லை.

என் மகள் வந்தாள்.  வந்ததிலிருந்து என்னை விட்டு அகலாமல் பேச அவளுக்கு ஆயிரம் கதைகள் இருந்தன. அவள் பேசுவதைக்  கண்  கொட்டாமல் ரசித்துக் கொண்டிருந்தேன். அனைத்துக் கதைகளையும் பேசி முடித்த பின் அவளது காதல் கதையையும் மெதுவாகக் கூறினாள்.

உச்சி முதல் பாதம் வரை ஆடிப் போனது எனக்கு.  மேனியெங்கும் வேர்த்து வடிய, நடுங்கிய குரலோடு,

“என்ன ஜீவி சொல்ற?”

“அம்மா…  ப்ளீஸ்…  பதட்டப் படாதீங்க…  அவர் ரொம்பவே நல்லவரு. அவங்க ஃபேமிலியில எல்லாருக்கும் சம்மதம். என்னை நல்லாப் பார்த்துக்குவாங்கம்மா….  உங்களைப் பார்த்து பேச நாளைக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரு. நீங்க  அவரைப் பார்த்தா  உங்களுக்குப் பிடிக்கும் மா…”

“என்ன ஜீவி புரியாமப் பேசற?   உங்க அப்பா, இந்த ஊர் ஆளுங்க பத்தி எல்லாம் தெரிஞ்சும் நீ இப்படி பண்ணியிருக்கியே…  இந்த விஷயம் உங்க அப்பாவுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.”

நடுக்கம் குறையாமல் ஆதங்கத்தோடு அவள் முகத்தைப் பார்த்தேன். மாசு மருவற்ற கள்ளமில்லாத முகம்….  இந்த விஷயம் மட்டும் என் கணவருக்குத் தெரிந்தது… ஜாதி வெறி பிடித்த அந்த மிருகம் மகளென்றும் பார்க்காது…

கௌரவக் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறும் ஊர் இது.  பிள்ளைகளைப் பெற்றவர்களே ஈவிரக்கம் இல்லாமல் ஜாதியை மட்டும் காப்பாற்றும் நோக்கில் பிள்ளைகளைக் கொன்று புதைக்கும் நரகம் இது…

கண் முன்னே எவ்வளவு அவலங்களைக் கண்ட போதும், எதிராக சிறு துரும்பைக்கூட அசைக்க முடியாமல் கையாலாகாத்தனத்தோடு   வெம்பி இருந்திருக்கிறேன்…  என் மகளுக்கும் அப்படி ஒரு நிலை வந்தால்…?  நினைக்கும் போதே என் சப்த நாடியும் அடங்கி ஒடுங்கிற்று.

பலஹீனமாக தலையை அசைத்தேன், “வேண்டாம் ஜீவி…  உனக்கு ஏதாவது ஒன்னுன்னா என்னால தாங்க முடியாதுடா…  உங்க அப்பா வேற ஜாதி பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வைக்க மாட்டாரு. உன்னைக் கொன்னுடுவாங்கடி…”

“அம்மா…  நீங்க எந்த காலத்துல இருக்கீங்க?   எனக்கு உங்க சம்மதம்தான் முக்கியம். அப்பாவப் பத்தி எனக்குக் கவலையில்லை. என்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது.  விக்டர் யாருன்னு நினைச்சீங்க…?  டெபுடி கமிஷ்னர்  ஆப் போலீஸ் இன் சென்னை. நாளைக்கு வந்து உங்களை சந்திக்கறதா சொல்லியிருக்காரு…”

எனக்குள் மேலும் நடுங்கியது.  வேறு ஜாதி என்றாலே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இதில் மதமும் வேறு…  அன்று முழுவதும் பதட்டத்துடனே கழிந்தது எனக்கு.

மறுநாள் என் மகளின் காதலனைச் சந்தித்துப் பேச இத்தனை வருடங்களாக செல்லாத கோவிலுக்குச் சென்றேன். அங்கேதான் என் கணவரின் ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.

நன்கு படித்து அவ்வளவு பெரிய உத்தியோகத்தில் இருந்த போதும் கம்பீரத்துடன் பணிவும் இருந்தது விக்டருக்கு.  சிலரை முதல் பார்வையிலேயே பிடித்துப் போகும்…  விக்டரையும் அப்படித்தான் பிடித்துப் போனது எனக்கு.

அலைபேசியின் மூலம் அவர்களது குடும்பத்திடமும் பேசினேன். அனைத்தும் திருப்தியாக இருந்தது. என்  கணவரை நினைத்துதான் உள்ளுக்குள் ஒரு உதைப்பு இருந்து கொண்டே இருந்தது.   மறுநாளே குடும்பத்துடன் வந்து பெண் கேட்பதாகக் கூறியிருந்தனர்.

மறுநாள் ஒருவித பதட்டத்துடன் விடிந்தது எனக்கு. அவர்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர். விக்டரின் தந்தை  அரசாங்க வக்கீலாக இருந்தார்.  அன்னையோ எனது மகள் படித்த கல்லூரியில் பேராசிரியை…

தாயைக் காண விக்டர் வரும்போது இருவருக்கும்   பழக்கமாகியிருக்கிறது. விக்டரின் இளைய சகோதரனும் காவல்துறை அதிகாரிதான்.  குடும்பத்தைப் பார்த்ததும்  எனக்குத் திருப்தியாக இருந்தது. பாசாங்கு பகட்டு இல்லாத யதார்த்தமான மனிதர்களாக இருந்தனர்.

நீதித்துறையை, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் என்பதால் என் கணவரால் எதுவும் பேச முடியாமல் போனது. உள்ளுக்குள் கொந்தளித்த மனதுடன் அமர்ந்திருந்தார்.  வந்தவர்கள் இயல்பாகத் திருமணப் பேச்சை எடுத்தனர்.  எங்கள் குடும்பத்தைப் பற்றி அவர்களுக்கும் தெரிந்திருந்தது.

“இரண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு…  இரண்டு பேருமே மேஜர்.    அதனால நாமளே நல்லபடியா கல்யாணத்தை முடிச்சு வச்சிடலாம். நீங்க உங்க பொண்ணை மட்டும் குடுங்க. அவளை எங்க வீட்டு மகாராணி மாதிரி பார்த்துப்போம்.”

அவர்களது பேச்சில் நீங்களாக பெண் கொடுத்தால் ஊரரிய திருமணம். இல்லையென்றால் இருவரது விருப்பப்படி பதிவுத் திருமணம் என்ற மறைமுக மிரட்டல் என் கணவரை நோக்கி இருந்தது.

அவர்களிடம் எந்த பதிலும் கூறாமல் சமாளிப்பாகப் பேசிவிட்டு என்னை என் கணவர் பார்த்த பார்வையில் அனல் பறந்தது.  சரிதான்… இன்று நமக்கு மண்டகப்படி நிச்சயம் என்று எண்ணிக் கொண்டேன்.   உள்ளூர பயம் இருந்தாலும் இந்தத் திருமணம் முடிவாகி விடாதா என்ற ஆசையும் எனக்கு இருந்தது.

கடைசி வரையில் பிடி கொடுக்காமல்,  யோசித்துச் சொல்வதாகச் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் என் கணவர். அவர்கள் சென்ற பின்னர், அறைக் கதவை அடைத்துக் கொண்டு வெகு நேரம் யார் யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

மிகுந்த தவிப்புடன் இருவரும் வெளியே அமர்ந்திருந்தோம். வெளியே வந்தவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. தகாத வார்த்தைகளால் என் மகளைத் திட்டியதும்,  எனக்கு ஆத்திரம் வந்தது.  அவரை முறைத்துப் பார்த்தேன்.

“என் பொண்ணைப் பேசற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க…  அவ மேல என்ன தப்பு  இருக்கு? ஆசைப் பட்டவனைக் கல்யாணம் பண்ணிக்க நினைக்கறது தப்பா? தகுதி இல்லாத ஒருத்தனை தேர்ந்தெடுக்கலை என் பொண்ணு. முறையா வந்து பொண்ணு கேட்டிருக்காங்க. நல்லபடியா கல்யாணத்தை முடிச்சு வச்சிடலாம்.  அவ வாழ்க்கை நல்லா இருக்கும்.”

நான் பேசியது அவருக்கு எரிச்சலைக் கிளப்பிவிட பெல்ட்டை உருவிக் கொண்டு வந்தார்,

“பொண்ணாடி வளர்த்து வச்சிருக்க?  உன்னை மாதிரியே…  இங்க பாரு என் ஜாதிய விட்டு வேற எவன் கூடவும் சம்பந்தம் வச்சிக்க மாட்டேன்.  ஒழுங்கா உன் பொண்ணு மனசை மாத்து. இல்லையின்னா அம்மா பொண்ணு ரெண்டு பேரையும் தொலைச்சுக் கட்டிடுவேன்.”

என்றவாறு அவர் அடித்த அடிகளை ஒன்று கூட என் மகள் மீது படாமல் வாங்கிக் கொண்டேன். அன்றிரவு அழுகையிலும் மௌனத்திலும் கரைந்தது.

மறுநாள் ஒரு புகைப்படம் எங்களிடம் நீட்டப்பட்டது. கேள்வியாக அவரை நோக்கினேன்.

“இவன்தான் உன் பொண்ணுக்கு நான் பார்த்திருக்கற மாப்பிள்ளை.   ஒழுங்கா முரண்டு பண்ணாம உன் பொண்ண ஒத்துக்கச் சொல்லு. இல்லையின்னா பெத்த பொண்ணுன்னு பார்க்க மாட்டேன்,  கொன்னுடுவேன்.

எனக்குத் தெரியாம ஓடிப் போகலாம்னு உன் பொண்ணு நினைச்சா, அந்தப் பய குடும்பத்துலயும் யாரும் உயிரோட இருக்க முடியாது.   என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியும்னு நினைக்கிறேன்.  சொல்லி வை அவகிட்ட.”

அழுதே கரைந்த மகளைத் தேற்றினேன். தைரியமாக இருக்கும்படியும்,   நம்மை மீறி எதுவும் நடந்து விடாது என்றும் ஆறுதல் கூறினேன்.  மகள் சற்று ஆசுவாசமாகி உறங்கியதும்,  என் மனதில் பல்வேறு சிந்தனைகள் வட்டமிட்டன.

என்னைப்போல என் பெண்ணும் போலியான ஒரு வாழ்க்கை வாழும்படி நேர்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.  மளமளவென மனதிற்குள் திட்டங்கள் உருவாகின.

வெறித்தாண்டவம் ஆடியிருந்தாலும் இன்னும் எங்களது அலைபேசியை பிடுங்கவில்லை எனது கணவர்.  அவரை மீறி எங்களால் என்ன செய்து விட முடியும் என்ற அலட்சியமாகக்கூட இருக்கலாம்.

எனது அலைபேசியிலிருந்து விக்டரின் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு மறுநாள் குடும்பத்துடன் வந்து என் மகளை அழைத்துச் செல்லும்படி கூறினேன்.  காரணம் கேட்டவரிடம்,  கண்டிப்பாக திருமணத்திற்கு ஜீவிதாவின் தந்தை ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்பதையும் இன்றைய சூழ்நிலையையும் தெரிவித்தேன்.

என்னையும் உடன் வரச் சொன்னவரிடம்,  ஜீவிதாவின் வாழ்வு சிறப்பாக இருக்க எனது ஆசீர்வாதம் என்றும் உடன் இருக்கும் என்றும்,  அவளது தந்தையை சமாளிக்க நான் இங்கிருக்க வேண்டும் என்றும் எடுத்துக்கூறி,  மறுநாள் அவர்களது வருகையை உறுதிப் படுத்திக் கொண்டு அலைபேசியை வைத்தேன்.

மனதிற்குள் உறுதியான முடிவுகளை எடுத்துவிட்ட போதிலும் சிறு சஞ்சலம் இருந்தது. ஒருவேளை என் கணவரிடம்  நான் சென்று பொறுமையாகப் பேசினால் ஒத்துக் கொள்வாரோ… ?  திருமணமாகி இத்தனை வருடங்களில் அவர் முகத்தைப் பார்த்து நான்  எதுவுமே கேட்டதில்லை…

மகளின் மீது அவருக்கு பாசம் இல்லாமலா இருக்கும்?  நானும் சென்று அவரிடம் கேட்டால் ஒருவேளை ஒத்துக் கொள்ளக்கூடுமோ?  யாரும் இல்லாமல் என் மகள் திருமணம் நடக்கத் தேவையில்லை.  நானும் அவரும் சேர்ந்து கண்ணார  காணலாம். மனதிற்குள் லேசான நம்பிக்கை துளிர் விட்டது.

எப்பொழுதும் அவர் வழக்கமாக இருக்கும் தோப்பு வீட்டிற்கு சென்றேன். சுற்றுப்புறம் இருட்டத் துவங்கியிருந்தது.  வேலையாட்கள் யாரும் இன்றி சற்று வெறிச்சோடிப் போயிருந்தது.   எனது காலணிகளைக் கழட்டிவிட எத்தனிக்கும் போது உள்ளிருந்து கேட்ட குரலில் சற்று நிதானித்தேன்…

விக்டரின் பெயர் அடிபடவும் கூர்ந்து கவனித்தேன். என் மனதில் இருந்த லேசான நம்பிக்கையும் உடையும்படி விக்டரின் உயிருக்கு விலை பேசிக் கொண்டிருந்தார் என் கணவர். ஜாதிக் கட்சித் தலைவர் அல்லவா…  அவரது செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்.

மேலும் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாத பட்சத்தில் என் மகளையும் விட்டுவைக்கப் போவதில்லை என்று யாரிடமோ சவால் விட்டுக் கொண்டிருந்தார்.   பெற்ற மகளை விட ஜாதிதான் பெரிதென்று மார்தட்டும் அவரது பேச்சைக் கேட்டு நொந்தே போனது மனது.

நான் வந்த சுவடே தெரியாமல் வீட்டிற்கு திரும்பி வந்தேன்.  என் கணவர் வந்ததும் ஒன்றும் பேசாமல் உணவை எடுத்து வைத்தேன்.  திருமணத்திற்கு மகள் ஒத்துக் கொண்டாளா என்று கேட்டார். நாளை ஒத்துக் கொள்வாள் என்று கூறினேன்.

அவரது ஜாதி பிரதாபங்களைக் கூறினார்.  அவர் சொல்பேச்சுக் கேட்பது எங்களுக்கு நல்லது என்று கூறினார். உணவை உண்டு முடிக்கவும் அனைத்தையும் ஒதுக்கி  வைத்து விட்டு பாலைக் காய்ச்சினேன்.

இரண்டு டம்ளர்களில் பாலை ஊற்றி அதனுள் தூக்க மாத்திரைகளை சற்று தாராளமாகவேப் போட்டேன்.  ஸ்பூனால் நன்கு கலந்துவிட்டு ஒரு டம்ளரைக் கொண்டு சென்று என் கணவரிடம் கொடுத்தேன். ஒன்றும் பேசாமல் அமைதியாக வாங்கி அருந்தினார்.

எனது மகளின் அறைக்குச் சென்று, அயர்ந்து உறங்கும் மகளை ஆசை தீரப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  விக்டருக்கு ஒன்றும் என் மகளுக்கு ஒன்றுமாக இரண்டு கடிதங்களை எழுதி அவை பறக்காமல் இருக்க வெயிட் வைத்து என் மகள் கண்பார்வையில் படும் தூரத்தில் வைத்தேன்.

பிறந்ததில் இருந்து பெற்றவர்களைச் சார்ந்து இருந்தவள் நான். நானாக ஆசைப்பட்டது ஒன்றுதான்…  அதுவும் இல்லை என்றாகிப் போனபோது என் வாழ்வின் பிடிப்பே என் மகள்தான்.   அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றியது.

மகளின் நெற்றியில் அவளது உறக்கம் கலையாதபடி மெல்ல முத்தமிட்டேன். அவளது முகத்தைப் பார்த்தபடி மற்றொரு டம்ளரில் இருந்த பாலை அருந்தினேன். நாளை விடியலில் என் மகளுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தாலும்,  அவளது வாழ்க்கை அவளது விருப்பப்படி சீராக இருக்கும் என்ற நிறைவு என் மனதில் வந்தது.

மனக்கண்ணில் மகளின் மணக்கோலத்தை நிறைத்தபடி மெல்ல வந்து எனது படுக்கையில் படுத்தேன். சிறு வயதில் இருந்து இன்று வரையிலான எனது வாழ்க்கை படமாக கண்முன்னே ஓடியது. மெல்லக் கண்கள் சொருகியது…

இனி அடுத்த பிறவியிலாவது,  சாதி மதம் என்ற பாகுபாடு பார்க்காத குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு கண்களை மூடினேன். தூரத்தில் எனக்காக குணா காத்திருப்பது தெரிந்தது…  புன்னகையுடன் அவனை நோக்கி  செல்லத் துவங்கினேன்….

 

—-நிறைவு—-

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

error: Content is protected !!