KM-6

நாளை மறுநாள் பார்க்கலாம் என்று கூறி, கண்ணனிடம் விடை பெற்றுக் கொண்டனர், இசக்கி மற்றும் மலர்… விடைபெற்றவர்களை, அழைத்து வந்து ஊரின் வெளியே விட்டுவிட்டுச் சென்றான் தங்கராசு…

கொடிமலர் வீடு

செல்லத்துரை கடைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்…

“அப்பா… இன்னிக்கி சினிமாவுக்கு போனும்…” என்று சொல்லிக் கொண்டு வந்து, மலர் நின்றாள்

“இது என்னா புதுசா மலரு… படிக்கிற புள்ளைக்கு எதுக்கு… அந்தால ஒன் அக்காவுக்கு மாப்பிள்ளை பார்த்திட்டு இருக்கேன்… இப்பம் எப்படி ஒத்தேல அனுப்ப முடியும்…”

“இல்லேப்பா… ஒத்தேல இல்லே… ஊரில எல்லாரும் போறாக… அதேன்…”

“எல்லாருமா… எதுக்காக…”

“சும்மதான்… அவியகூட போயிட்டு, அவிய கூடவே வந்திரலாம்…” என்றாள்.

“இல்லே மலரு, பேசாம இரு… நான் சொல்றது ஒனக்குப் புரியாது.. ஒங்க அக்காவுக்கு புரிஞ்சிருக்கும்…”

இருவரும் தலை குனிந்து கொண்டனர்… இசக்கி, அப்பாவிடம் கொண்ட கோபத்தில்… மலர், அப்பாவிடம் பொய் சொல்கிறோம் என்ற குற்றவுணர்வில்…

அதற்குள் வெளியிலிருந்து… “மலரு, இசக்கி…” என்ற சத்தம் கேட்டது… வெளியே வந்து பார்த்தார் செல்லத்துரை.

அங்கு பக்கத்து வீட்டுக்காரப் பெண் சோனியா, நின்று கொண்டிருந்தார்…

“அண்ணே, சினிமாக்கு போறோம்.. மலரு, இசக்கிய வரச் சொல்றீகளா… ”

“இல்லே சோனியா, அவிய வரமாட்டாங்க… ”

“ஏண்ணே… ஊரில எல்லா புள்ளைகளும் சேர்ந்து போறாக… அவியகளும் ஆசப்படுவாகள… வெரசா வரச் சொல்றீகளா… ”

“புள்ளைக மட்டுமா… எப்படி…”

“பெரியவுகளும் வருவாக அண்ணே… நானே பத்திரமா கூட்டிட்டுப் போயிட்டு… கூட்டிட்டு வந்திடுவேன்… விடுங்க அண்ணே… ”

அவர் தயங்கினார்.

“விடுங்க அண்ணே… ”

பின்னால் திரும்பி இசக்கி மற்றும் மலரைப் பார்த்தார்… இசக்கிக்காக, மலரின் சந்தோஷத்திற்கு எதற்கு தடை போட வேண்டும் என்ற எண்ணம் வந்தது… சரியென்று அனுப்பிவிட்டார்…

தங்கராசு வீடு

தயார் நிலையில் பேருந்து நிறுத்திவைக்கப்பட்டிருந்தது…

அனைவருடன் சேர்ந்து சோனியா, இசக்கியும் பேருந்தில் ஏறிக் கொண்டனர்…

மலர் மட்டும் ஏறாமல், தேடல் பார்வை கொண்டு நின்றிருந்தாள்.

“யாரட்டி தேடுற…” என்ற பின்னால் இருந்து குரல் வந்தது. திரும்பினாள். வேறு யாரும் இல்லை கிழவிகள்தான்.

மலர், விரியாத பூ மொட்டுக்கள் போல் மூடிக்கொண்டு, மெளனம் காத்தாள்.

“ஏன்ட்டி… அவனும் கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேக்கான்… நீயும் இப்படி நிக்கிற…”

தான் சொல்வதை கேட்கிறான் என்ற களிப்பில்…”தங்கராசு எங்கன இருக்காக…” என்றாள்.

“அவன எதுக்கு தேடற…” என்று, திரும்பவும் பின்னாலிருந்து குரல் வந்தது… இந்தமுறை அஞ்சுதம்.

“பேச்சி, இவளுக மறுக்கா ஆரம்பிக்கிறாளுக…” -முத்தாச்சி.

“ஆரம்பிச்சா, பரவால்ல… ஆனா முடிக்கிறப்ப நம்மகிட்டல முடிப்பாக… ” – பேச்சிக்கிழவி.

மலர் அருகில் வந்து நின்று.. “கேட்டேன்ல, அவன என்னாத்துக்கு தேடற…” என்றார்.

“அவுக கடைல வந்து ரீசார்ஜ் பண்ணாக… பணம் ஏறிடுச்சானு கேட்க வந்தேன்… ” என்று சொல்லிச் சமாளிக்கப் பார்த்தாள்.

“ரீசார்ஜ் பண்றவுக எல்லார்கிட்டேயும் இப்படித்தான் கேட்டுக்கிட்டு இருப்பியா… ” என்று கேள்வி வந்தது.

பதிலேதும் இல்லை மலரிடம்.

“ஏம்ட்டி அதுவும் படம் பார்க்கனும்னு நினைக்கும்ல… அதேன் வந்திருக்கும்… நீ போ மலரு… ” என்று பேச்சிக்கிழவி, அவளை அனுப்பினார்.

அஞ்சுதத்தை மெதுவாகக் கடந்து, அதற்குப் பின், வேகமாகச் சென்று பேருந்தில் ஏற முற்பட்டாள்… அதேநொடியில் தங்கராசு, இறங்க முற்பட்டான்… அவர்களது மெல்லிய உரசலால், சில்லிட்டன உடல்கள்…

சில்லிட்ட தருணங்களுடன், பயணம் இனிதே துவங்கியது…

மார்த்தாண்டம்

மார்த்தாண்டம் திரையரங்கில் பிரத்தியேக காட்சி, பழவிளைக் கிராமத்தின் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… அனைவரையும் உள்ளே அழைத்து, இருக்கைகளில் அமர வைத்தான்… காட்சி ஆரம்பித்த, சிறிது நேரத்தில், இசக்கி, மலரைத் வெளியே வரச் சொன்னான்.

வந்தவரிடம்… “இசக்கி, இங்கோடி போயி, வடக்கால திரும்புங்க… அங்கன கண்ணன் சார் நின்னுகிட்டு இருப்பாக… வெரசா கொடுத்துட்டு வந்திருங்க…” என்று ஒரு பாதையை இசக்கியிடம் காட்டினான்.

“செரி தங்கராசு…” என்று, இசக்கி கிளம்பினாள்.

“என்னா இவ்வளவு பயப்படுறீக… ஒங்க அம்மாவ நினைச்சா…” – மலர்.

“அதுவும்தான்…”

“அதுவும்தானா?? வேறென்ன…”

“இந்த மாதிரி ஒரு காரியம் பண்றேன்னு ஊருக்குள்ள தெரிஞ்சா…”

“தெரிஞ்சா…”

“இத்தறை பேரையும், அவிய வீட்ல என்னைய நம்பி விட்டிருக்காக… இனிமே விடுவாகளா… அதேன்… ”

“நானே கேட்கனும்னு நினைச்சேன்… இத்தனை பேரைக் கூட்டிட்டு சினிமாவுக்கு வர்றது… எதுக்கு… ” என்று கேட்ட விதமே சொல்லியது, அவளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்று…

“இல்லைங்க மலரு… இது எங்க அம்ம ஏற்பாடு பண்ணியிருக்காக… ”

“அம்மாவா…” என்று, அதற்கும் முகம் சுளித்தாள்.

“ம்ம்ம்… இவியெல்லாம், காலெம்பற எந்திரிச்சு, வீட்ல சமைச்சிட்டு… தோட்டத்து வேலைக்குப் போவாக… பொறவு சாந்திரம் வந்து மாறி சமைப்பாக… இதே தினம் செஞ்சா, அலுத்து சலிச்சிப் போகாதா… அதேன் இதுமாறி… அவியகளுக்கு ஒரு … ஒரு மாற்றம்… எங்க அம்ம நல்லா சொல்லுவாக… எனக்கு செரியா சொல்ல வரல… ”

” எப்படி ஒத்துக்கிட்டாக… ”

“முத இவிய வீட்டாளுகெல்லாம் ஒத்துக்கல… அந்தால, எங்க அம்ம ரெம்ப பேசிப் புரிய வச்சாக… இப்பம் பழகிருச்சு… இன்னிக்கி மட்டும் வீட்ட, புள்ளைகள அவிய வீட்டாளுக பார்த்துப்பாக…. ”

” எப்பமும் இங்கனதான் வருவீகளா…”

“இல்லே மலரு… இந்த மட்டம்தான் இங்கன… போன மட்டம், திருப்பரப்பு போனோம்… ”

” இதில, ஒங்களுக்கு பயம் எதுக்கு…”

“ஏங்க, நான் இப்படி ஒரு விஷயத்தை செஞ்சா.. அந்தால, அவிய வீட்ல, என்னய நம்பி எப்படி அனுப்புவாக… எங்க அம்ம இம்புட்டு நாளு கஷ்டப்பட்டது மொத்தமும் பாழாயிடும்… ”

“ஒங்க அம்மா, இவ்வளவு செய்வாகளா…”

“இன்னும் நிறைய செய்வாக… புள்ளைக படிக்கறதுக்கு, பள்ளிக்கூடத்துக்கு, ஊருக்காறாக வேலைக்கு… இப்படி ரெம்ப… ” என்றான் பெருமையாக.

அவள் மனக் கண்ணாடியில் விழுந்த, அஞ்சுகத்தின் பிம்பம், தவறோ என்று தோன்றியது. அவரின் கண்டிப்பு குரலிற்கு காரணம், அவர் ஏற்று நடத்தும் பொறுப்போ, என்று நினைத்தாள்.

அவர் தெரிந்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும், அவரைப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருக்கின்றவன் மீது, அந்த நொடியில் அபிப்பிராயங்கள் ஆழமாயின. அதற்குமேல் அபிப்ராயத்தை ஆறப்போட, அவள் விரும்பவில்லை.

” ராசு… ” என்று மலர் ஆசையாக அழைத்தாள்.

அவளின் அந்த அழைப்பு, எப்படி இருந்தது என்றால், இசைஞானி, அவனுக்கென்றே ப்ரத்யேக டூயட்டை, நேரலையில் வாசிப்பது போல் இருந்தது…

“ம்ம்ம்… சொல்லு மலரு… ” என்றான், முன்னறிவிப்பின்றி வந்த, அவள் அழைப்பில் மூழ்கிக் கொண்டு.

” ராசு, ஒங்க அம்மா ஒத்துப்பாகளா…” என்றாள், சாமர்த்தியமாக தன் சம்மதத்தை.

இப்போது, இசைஞானியுடன் இசைப்புயலும் கைகோர்த்துக் கொண்டார், நேரலையில்.

“அம்புட்டு லேசுல ஒத்துக்க மாட்டாக… ”

வருத்தம் மேலோங்கிய நிலையில் இருந்தாள்.

“மலரு, நீங்க நல்லா பேசுவீகள… எங்க அம்மகிட்ட வந்து பேசுறீகளா…”

“ராசு… முதல இசக்கி விஷயம்… அடுத்து என்னோட படிப்பு… ரெண்டும் முடியட்டும்… அப்பாகிட்ட, கொடிமலர் பிகாம்னு சொன்ன அடுத்த நிமிஷம், ஒங்க அம்மாகிட்ட வந்து பேசறேன்… செரியா…”

“நெசமாவா மலரு…” என்றான், நம்பகத்தன்மை இல்லாத குரலில்.

“நெசமா… ஆனா, ஒங்க அம்மா எதுத்தால நின்னுதான் பேச வேண்டிருக்கும்… நீங்க ஒத்துப்பீகளா… இல்லனா விரட்டி விட்ருவீகளா… ” என்றாள் விளையாட்டாக.

அந்த விளையாட்டு பேச்சிற்கு எதிர்வினையாய், முகத்தை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.

“ராசு.. ராசு… ” என்று அழைத்துப் பார்த்தாள்.

அவன் திரும்பவில்லை. அவன் நாடியைப் பிடித்துத் திருப்பி, அவன் முகம் பார்த்தவளுக்குச் சிரிப்புதான் வந்தது.

” ஏன் ராசு, இப்பம் கண்ணீர் வடிக்கப் பார்க்கிறீக…”

“பொறவு நீங்க அப்படி கேட்டா… நான் ஒங்கள விரட்டி விடுவேனா… ”

“அது சும்ம எடக்கா பேசினேன்… அதுக்குப் போய்… “என்று மீண்டும் சிரித்தாள்.

“நெசமா எங்க வீட்டுக்கு வந்து, பேசுவீகளா மலரு?”

“எத்தனை மட்டம் இதையே கேட்பீக, ராசு…”

” செரி… செரி… கேட்கல… ”

“எனக்கு ஒன்னே ஒன்னுதான்… இசக்கி விஷயத்தை, எங்கப்பாகிட்ட நானே பக்கத்தில ஒட்கார்ந்து பதனமா சொல்லனும்… நீங்க வெள்ளனையே, இசக்கிய கூட்டிட்டுப் போய், மார்த்தாண்டத்ல விட்டுருங்க… அந்தால கண்ணன் சார் பார்த்துப்பாக… அப்பாவ, நான் சமாளிச்சிக்கிறேன்… செரியா… ”

” ம்ம்ம்… ”

அபிப்ராயங்கள் எல்லாம் அபிமானங்களாக மாறியதால் அமைதி நிலவியது… பின்…

“மலரு, இந்தாங்க…” என்று நீலவர்ண தாள் சுற்றிய, செவ்வக வடிவ சாக்லேட்டை நீட்டினான்.

அன்புடன் வாங்கிக் கொண்டே… “இதுகூடச் சேர்த்துப் பூவு, கார்டு தருவாகள… அதெல்லாம் எப்பம்… ” என்றாள்.

” பூதான் நேத்தே கொடுத்தேன்ல… ”

“ம்மு… நான் சொல்றது ரோசு…” என்று அக்கப்போர் செய்தாள்.

“அதுவும் பூதான…”

” ம்ம்ம் செரி… அப்பம் கார்டு…”

“அதெல்லாம் எனக்கு வாசிச்சி வாங்கத் தெரியாது… ம்ம்ம் மலரு, நான் வேணா கடைக்குக் கூட்டிட்டுப் போறேன்… நீங்க வாங்கிக்கிறீகளா…”

“ம்ம்ம்.. செரி…”

“இப்பமே வர்றீகளா … ”

எதிர்ப்பைப் பதிவு செய்தாள்.

” படிப்பு முடிஞ்ச பொறவா… ”

ஆதரவைக் காட்டினாள்.

” செரி… சாக்லேட் சாப்பிடுங்க… ”

இதயங்கள் பரிமாறிக் கொண்ட இளஞ்சிட்டுக்கள் இனிப்பையும் பகிர்ந்து கொண்டன…

வண்ணம் மறைந்து, அழுக்குப் படிந்த திரையரங்கின் சுவர்கள்… அதில் சாய்ந்து நின்ற ராசாத்தியாய் தாவணிப் பெண்… அந்த ராசாத்தியின் ராசுவாக, அவன்…

சூழ்நிலைக்கேற்றப் பாடலாய் திரை அரங்கிலிருந்து, அவனின் ஆஸ்தான நாயகனின், ‘நீதானே நீதானே.. என் நெஞ்சை..’… கசிந்து வந்து காதில் நுழைந்தது…

மலரின் நேசம், ராசுவின் பார்வை பரப்புக்குள் பூத்தது…

மற்றொரு புறத்தில், தான் எடுத்து வந்த சர்டிபிகேட்டை கண்ணனிடம் கொடுத்தாள், இசக்கி…. கல்யாணம் நடக்கப் போகும் தேதி, இடம் பற்றி கண்ணன் கூறினார்…

அனைத்தும் சுபமாக முடிந்த பின், பேருந்து மார்த்தாண்டத்திலிருந்து திரும்பியது…

அடுத்து வந்த நாட்களில், ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வைத் தந்தது… இசக்கியும் கண்ணனும் திருமண நாளை எதிர்நோக்கி இருந்தனர்…

மலரும், ராசுவும் அபிப்பிராயம் அரங்கேறிய சந்தோஷத்தில் இருந்தனர்…

அந்த ஒருவாரம், ராசுவிற்கும், தன் தோட்டத்தில் பூக்கும் பூவெல்லாம், மலருக்காகப் பூப்பது போல் இருந்தது… சில நேரங்களில் ‘மலர்’, பூத்துச் சிரிப்பது போல இருந்தது…

மலருக்கும், தான் வாசிக்கும் விருப்பப் புத்தகங்கள் அனைத்தின் அட்டைப்படமாக ராசுவே இருந்தான்…

கொடிமலர் வீடு

நாட்கள் விரைந்தோடின… அடுத்த நாள் விடியற்காலை, இசக்கி வீட்டை விட்டு வெளியேறி, திருமண

“இசக்கி…”

“என்னா மலரு… ஏன்ட்டி ஒரு மாதிரி இருக்க…”

“கண்ணன் சார் வீட்ல, ஒன்ன நல்லா பாத்துப்பாகளா?”

“ஏன்ட்டி இப்பம் இந்த கேள்வி… இனிமே அவுக ஒனக்கு சாரில்ல… புரியுதா…” என்று கல்யாண வெட்கம் காட்டினாள்.

“இல்லே இசக்கி, அப்பா இவ்வளவு வேண்டாம்னு நிக்கிறாகளே… அதே..”

“பயப்படிரியா மலரு… அவுக வீட்ல நல்லா பார்த்துப்பாக… ”

“ம்ம்ம்… அப்பாவ நெனைச்சாதான் ரெம்ப கஷ்டமா இருக்கு..”

“அவர்கிட்டே ஆறு மாசம் போராடினப் பொறவுதான், நாங்க இந்த முடிவுக்கு வந்தோம்… ”

“கல்யாணம் கட்டிக்கிட்டப் பொறவு, நேரா இங்கன வந்திரனும்… அப்பாவ, பார்த்து மன்னிப்பு கேட்கனும்… செரியா இசக்கி…”

” செரி மலரு… ”

“நானும் தங்கராசும் ஒத்தாசை பண்ணோம்னு, யார்கிட்டயும் சொல்லாதட்டி… நான் பதனமா அப்பாகிட்ட சொல்லிக்கிருவேன்… ”

“நீ எதுவும் யோசிக்காத மலரு… ஒன்னய யாருகிட்டயும் காட்டிக் கொடுக்க மாட்டோம்… காலெம்பற நாலு மணிக்கே கிளம்பிருவேன்… தங்கராசு, ஊருக்கு வெளியே காத்திருப்பாரு… நான் திரும்பி வர வரைக்கும் அப்பாவ சமாளிச்சிக்கோ.. ” என்று இசக்கி, தூங்கச் சென்றாள்.

” ம்ம்ம்… ”

மலருக்கு, உறக்கம் வரவில்லை. தங்கராசுவிடம் பேசலாம் என்று நினைத்துக் கைபேசியில் அழைத்தாள்.

” ஹலோ… ” என்றாள்.

“ஹலோ…” என்று, பெண் குரல் கேட்டது.

உடனே, மலர் அழைப்பைத் துண்டித்துக் கொண்டாள். யாராக இருக்கும் என்று யோசித்தவள், அப்படியே உறங்கிப் போனாள்.

அடுத்த நாள்,

காலையிலிருந்து, இசக்கி குறித்த செல்லத்துரையின் கேள்விகளை, மழுப்பல் பதில் சொல்லிச் சமாளித்துக் கொண்டிருந்தாள், மலர்.

சிறிது நேரத்தில்… “மலரு… மலரு…” என்ற குரல் கேட்டது.

வெளியே வந்தாள் மலர்.

அங்கே, கண்ணன் இசக்கி மணமாலையுடன் வந்து, நின்று கொண்டிருந்தனர்.