KM2

KM2

                            கெட்டிமேளம் 2                                            

 

வத்சலாவும் ருக்குவும் ஓடி வந்து அனைவரையும் வரவேற்றனர்.

” கரெக்ட் டைம்க்கு வந்துட்டோம்” அசடு வழிந்தார் மாப்பிள்ளையின் அப்பா வேணு.

“ஆமா. வாங்கோ வாங்கோ” உள்ளே அழைத்துக் கொண்டு போனார் நாராயணன்.

வேணுவை முழங்கையால் இடித்தார் பங்கஜம். வேணு திரும்பி பார்க்க,

“ரொம்ப வழியாதீங்கோ. சித்த அடக்கிவாசிங்கோ. உங்க பிரதாபமெல்லாம் நம்மாத்தோட இருக்கட்டும்” அவருக்கு மட்டும் கேட்குமாறு பல்கலைக் கடிக்க,

அடுத்த கணமே வாயை மூடிக் கொண்டார்.

ஐந்தாறு பேர் உள்ளே வந்தனர் மாப்பிள்ளையுடன் சேர்த்து.

“உக்காருங்கோ” சாரங்கன் சொல்ல,

” நான் தான் வேணுகோபலன். இவ எங்காத்து ப்ரைம்மினிஸ்டர் பங்கஜம்.

 இவன் தான் எங்க மூத்த பையன் ரகுராம்.

ரெண்டாவது பையன் ஆஸ்திரேலியால வேலை பாக்கறான்.

இது என் தங்கை, அவ ஆத்துக்காரர்.” என அனைவரையும் இன்ட்ரோ செய்து வைத்தார் வேணு.

அவர் சொல்ல சொல்ல அனைவரையும் பார்த்து இங்கிருப்பவர்கள் சினேகமாக தலையசைக்க,

“நல்ல நேரம் முடியறதுக்குள்ள பொண்ண பாத்துடலாம். அப்பறம் சாவகாசமா பேசிக்கலாம்” பங்கஜம் ஆர்டர்.

“ஆங் சரி. ” சாரங்கன் வச்சுவை பார்க்க,

ருக்கு  உள்ளே சென்று அனுவை அழைக்க, வச்சு கிச்சனுக்குள் சென்று போட்டு வைத்திருந்த பில்டர் காபியை சூடாக  டவரா டம்ளரில் ஊற்றி  ட்ரேயுடன் கொண்டு வந்தார்.

அனு தலை குனிந்த படி வெளியே வர, பின்னால் வைஷுவும் வந்தாள்.

வச்சு அவளிடம் ட்ரேயை கொடுக்க,

அதை வாங்கிச் சென்று அனைவருக்கும் கொடுத்தாள் அனு. சற்றும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

அவளுக்கு ஏற்றார் போல அவனும் ஒரு வெளிர் பச்சை நிறத்தில் தான் சட்டை அணிந்து வந்திருந்தான். நல்ல உயரம். போடவில் இருந்தது போலவே மீசையை ட்ரிம் செய்திருந்தான்.

அனு வெளியே வந்ததிலிருந்து அவளைத் தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. அவளைத் தெவிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனுக்கு போட்டோ பார்த்ததிலிருந்து அனுவை மிகவும் பிடித்துவிட்டது.

இவளைத் தான் திருமணம் செய்வேன் என்று அம்மாவிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டான்.

பங்கஜத்தின் அதிகாரம் கணவனிடத்தில் மட்டும் தான். பிள்ளைகள் இருவரிடத்திலும் செல்லாது.

அதனால் சரி என்று விட்டார்.

ரகுவிற்கு அனுவிடம் பேச வேண்டும் என்றிருந்தது. பெரியவர்கள் நாலு வார்த்தை பேசிய பின்னர், தன்னுடைய அபிப்பிராயத்தை சொல்லலாம் என்றிருந்தான்.

அனு காபி கொடுத்துவிட்டு சற்று தள்ளிச் சென்று வைஷுவுடன் நின்று கொண்டாள்.

“ எல்லாருக்கும் நமஸ்காரம் பண்ணிக்கோ அனு” பெரியப்பா நாராயணன் சொல்ல,

அவளும் பொதுவாக விழுந்து வணங்கினாள்.

“ நான்ன இரும்மா” பங்கஜமும் வேணுவும் ஒருசேரக் கூறினர்.

“ பொண்ண எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதை நாங்க முன்னாடியே சொல்லிட்டோம். இருந்தாலும் சாஸ்திரம் சம்ப்ரதாயம் இருக்கோனோ . அதுக்காக தான் வந்தோம். வா மா இங்க “ என அழைத்து தன் அருகில் அமர்த்திக் கொண்டார் பங்கஜம்.

அவளிடம் பேச,

 மற்றவர்கள் மற்றது பேசிக் கொண்டிருந்தனர்.

ரகுவிடம் சாரங்கனும் நாராயணனும் வேலை பற்றியும் அவனைப் பற்றியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“ நான் அமெரிக்கால ஐஞ்சு வருஷம் இருந்தேன். இதுக்கப்பறம் சான்ஸ் கெடச்சா போவேன். இப்போதிக்கு இங்க தான்”

வைஷுவிற்கு வந்ததிலிருந்து ரகு மீது தான் கண். அவன் பார்வையிலேயே அவன் எப்படிப் பட்டவன் என கணிக்க முயன்று கொண்டிருந்தாள்.

வந்ததிலிருந்து அனுவ விட்டு இவன் கண் நகர்ல, அதே சமயம் ரொம்ப கூச்சப் படாம, நல்லா நிமிர்வா தான் இருக்கான்.  பெரியவங்க பேசட்டும்னு அவன் எதுவும் பேசாம தான் இருக்கான். மரியாதை தெரிஞ்சவனா இருக்கான்.

அனுவ நல்லா பாத்துப்பான்னு நெனைக்கறேன். இருந்தாலும் அனு கிட்ட அவன் பேச போகும் போது நாமளும் போய்டணும். கரெக்டா பேசிடனும். அப்போ தான் அனு சந்தோஷமா இருப்பா. மனதில் கணக்குப் போட்டுக் கொண்டிருந்தாள்.

பையனின் அத்தை அதாவது வேணுவின் தங்கை மெல்ல ஆரம்பித்தாள்.

“பொண்ணுக்கு என்ன போடறேன். கல்யாணத்துக்கு என்ன செய்யறேள்?”

ரகுவிற்கு எரிச்சல் வந்தது. அவன் கிளம்பும் முன்பே சொல்லி தான் அழைத்து வந்திருந்தான். இப்படி எதுவும் கேட்கக் கூடாது என்று.

உடனே தன் தாயை அவன் பார்க்க,

பங்கஜமும் மகனின் கோபம் புரிந்து,

” அதெல்லாம் இருக்கட்டும். நீங்க செய்யறதை செய்யுங்கோ. கொழந்தேள் நன்னா இருந்த போதாதோ.” உள்ளுக்குள்ளே எத்தனை பவுன் நகை போடுவார்கள், பிள்ளைக்கு என்ன செய்வார்கள், வீட்டிற்கு புதிதாக என்னென்ன பொருள் அனுப்புவார்கள் என்று தெரிந்து கொள்ள அவளுக்கும் ஆசை தான்.

மகனின் முறைப்புக்கு பயந்து அத்தோடு நிறுத்திக் கொண்டாள்.

காபியை குடித்து முடிப்பதற்குள், ருக்கு குறிப்பறிந்து அனைவருக்கும் பஜ்ஜியும் கேசரியும் தனித் தனி தட்டுகளில் எடுத்து வந்தாள்.

இடையே புகுந்த வைஷு தட்டுகளை வாங்கி அனைவரிடமும் கொடுத்தாள்.

” இது தான் உங்க ரெண்டாவது பொண்ணா?” வேணு கேட்க,

“ஆமா. பேரு வைஷ்ணவி. ஐ டி ல வேலை பாக்கறா” எப்போதும், தான் பெற்ற பெண்களின் புகழ் பாடுவது சாரங்கனுக்கு பிடித்த ஒன்று.

வைஷு அனைவருக்கும் கேசரி பஜ்ஜி கொடுக்க, ரகுராமின் அருகில் வந்து அவனுக்கு கொடுத்து, “அக்கா வோட பேசுங்கோ” என அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் முணுமுணுத்துவிட்டு சென்றாள்.

அவனும் அப்போதே, “பேசாம போகமாட்டேன்” என்று பதில் தந்தான்.

நமுட்டுச் சிரிப்புடன் நகர்ந்து கொண்டாள்.

தட்டை வாங்கி நெய் வடிந்த கேசரியை ஸ்பூனால் இரண்டு வாய் உண்ண, அது வழுக்கிக் கொண்டு தொண்டைக்குள் நேராக இறங்கியது.

பெரியவர்கள் அனைவரும் தங்களின் சொந்தங்கள் பற்றியும், “அவாளத் தெரியுமா, இவாள தெரியும்மா என்றும், குலதெய்வம் என்ன உங்களுக்கு?” போன்ற வற்றைப் பேசிக் கொண்டிருக்க,

அவர்களுக்கு இடையில் அனு சங்கடமாக தலை குனிந்து அமர்ந்து கொண்டிருந்தாள்.

 ரகுவிற்கு அவளின் நிலை புரிய,

“நான் அனுகிட்ட கொஞ்சம் பேசணும்” என சாரங்கனிடம் சொல்ல,

சோஷியலிஸ்ட் என்று வெளியே சொல்லிக் கொண்டு உள்ளே இன்னும் கட்டுப்பெட்டியாக இருக்கும் அனைவரும், ஒரு நொடி அவனைப் பார்க்க,

பின் பங்கஜம் தான், “போப்ப்பா” என்று சோஷியலிசத்தை முதலில் வெளிப்படுத்தினாள்.

“அனு போம்மா” நாராயணன் சொல்ல,

வைஷு வந்து அனுவை அங்கிருந்து அழைத்துச் சென்றாள்.

“வாங்கோ” என ரகுவை தங்களின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“தேங்க்ஸ்” என பொதுவாகக் கூறிவிட்டு அவனும் அவர்களை பின் தொடர்ந்தான்.

அனுவும் வைஷுவும் உள்ளே செல்ல,

ரகு அந்த அறைக்குள் சென்றான்.

அனு அமைதியாக குனிந்த தலை நிமிராமல் நின்றாள். வைஷுவும் அருகிலேயே இருப்பதைக் கண்ட ரகு,

“தனியா பேசலாமா?” என்று அனுவைப் பார்த்துக் கேட்க,

“பேசலாம். அதுக்கு முன்னாடி நான் பேசிடறேன்.” வைஷு அனுவை நகர்த்திவிட்டு முன்னே வந்தாள்.

புருவத்தை சுருக்கி அவளை பார்த்தவன்,

“என்ன?” எனவும்

“அனு வ உங்களுக்கு பிடிச்சிருக்கா?”

அனுவை ஒரு முறை பார்த்தவன், உதட்டில் மெல்லிய சிரிப்பைப் படரவிட்டு,

“ரொம்ப பிடிச்சிருக்கு. அதுனால தான் பாக்க வந்தேன். இல்லனா இப்படி வந்து பொண்ணு பாக்கறதெல்லாம் எனக்கு பிடிக்காத விஷயம்.”

“ஓகே .அப்போ நான் சில விஷயங்களை உங்ககிட்ட முன்னாடியே சொல்லணும். ஏன்னா தன்னோட விருப்பத்தை கூட வெளில ஓப்பனா சொல்றதுக்கு அனுவுக்கு தெரியாது.”

“ம்ம்” என கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.

“எங்க அனு ரொம்ப ரொம்ப சாஃப்ட் டைப். சத்தமா கூட பேச மாட்டா. ரொம்ப பாசமா இருப்பா எல்லார் மேலையும். எல்லாருக்கும் என்ன வேணும்னு பாத்து பாத்து செய்வா.

ஆனா அவளுக்கு ஒரு கஷ்டம் வந்தா வெளில சொல்ல மாட்டா.  மனசுக்குள்ளையே வெச்சு புழுங்கிடுவா. நீங்க தான் அவ கிட்ட பேசி தெரிஞ்சுக்கணும்.  அவளை கஷ்டப் படாம பார்த்துக்கணும்.

உங்காத்துல எல்லாரும் எப்படின்னு தெரியாது. ஆனா என் அக்காவ யாராவது ஏதாவது சொன்னா நான் சும்மா இருக்க மாட்டேன். அது மாதிரி நீங்களும் இருக்கணும். அவளுக்கு எப்பவும் துணையா, அவளை எங்கயும் விட்டுக்குடுக்காம இருக்கணும்.  இருப்பேளா??” பட படவென பேசியவள், இறுதியில் இறைஞ்சும் குரலில் முடிக்க,

அவர்களின் பாசம் தெரிந்தது. அவனுக்கும் வைஷுவின் பேச்சு முதலில் சற்று அதிகமாகத் தெரிந்தாலும் பின் அவளின் பயம் புரிந்தது.

அனுவின் வாழ்வு சிறப்பாக இருக்க அவள் பேசுகிறாள் என்பதும் புரிந்தது.

அவனது பதிலுக்காக அவள் காத்திருப்பது தெரிய,

“நீ அவளை விட எத்தனை வயசு சின்னவ?” அவளையே கேட்க,

” மூன்ற வருஷம்”

“நான் அவளை விட நாலு வருஷம் பெரியவன். நீயே அவளை இவ்வளவு பாத்துக்கும் போது, நான் அதை விட அதிகமாகவே பாத்துப்பேன்.

எனக்கு பொண்டாட்டியா வர்றவள முகம் சினுங்க கூட விடக் கூடாதுங்கறது தான் என் பாலிசி. அவளை அழவெச்சா நான் ஆம்பளையே இல்ல.

எல்லா பசங்களும் பொதுவா அம்மா பேச்சு தான் கேப்பாங்க. நானும் அம்மா பேச்சை கேட்பேன். ஆனா அது நியாயமா இருந்தா மட்டும் தான்.

கண்மூடித்தனமா எல்லாத்தையும் கேட்க மாட்டேன். நான் படிச்ச படிப்பு எனக்கு நியாயம் அநியாயம் எதுன்னு பிரிச்சு பாக்கற அறிவை கொடுத்திருக்கு. அது கூட இல்லனா நான் படிச்சதுக்கே அர்த்தமில்லாம போய்டுமே.

அப்படி நியாயம் தெரிஞ்ச ஒருத்தன் தான் உண்மையிலேயே படிச்சவன்னு சொல்லிக்கற தகுதி உள்ளவன்.

உங்க அக்கா வ பத்தி இனிமே நீ கவலைப் படத் தேவை இல்லைன்னு நினைக்கறேன்.

” நான் சொன்ன பதில் உனக்குத் திருப்தியா இருந்ததா?” வைஷுவைப் பார்த்துக் கேட்க ,

அவனின் பதிலில் சற்று மலைத்து தான் போனாள். படித்த படிப்பை, பெற்ற அறிவை தெளிவாகப் பெற்றிருக்கிறான் என்பதை உணர்ந்தாள்.

” ரொம்ப திருப்தி அத்திம்பேர். இனி அனு உங்க பொறுப்பு. இப்போ நீங்க தனியா பேசுங்கோ. பெர்மிஷன் க்ராண்டட்” நக்கலாகக் கூறிவிட்டு மனநிறைவோடு அங்கிருந்து சென்றாள்.

அத்திம்பேர் என்ற அழைப்பு அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது.  சிரித்துக் கொண்டே அனுவைப் பார்க்க,

அத்தனை நேரம் அவர்களின் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த அனு கண்ணில் கண்ணீருடன் நின்றாள்.

“ஹே! என்ன ஆச்சு. உனக்கு என்னைப் பிடிக்கலையா?!” சிறு கவலையோடு ரகு கேட்க,

” ரொம்ப பிடிச்சிருக்கு.” மெதுவாகச் சொல்ல,

“அப்பறம் ஏன் இந்த அழுகை?” இரண்டடி தள்ளி நின்றே பேசினான்.

“நீங்க பேசினதை கேட்டதுலேந்து, நான் ரொம்ப குடுத்து வெச்சவன்னு புரிஞ்சுண்டேன். என்னையும் அறியாமை கண் கலங்கிடுத்து” கண்ணைத் துடைத்துக் கொள்ள,

“இப்போ கலங்கினதோட சரி, இனிமே கலங்கினா நான் சும்மா இருக்க மாட்டேன்.  நிச்சயம் ஆனதுக்கப்பறம் ஸ்ட்ரிக்ட்ல்லி நோ. புரியறதா” சற்று நெருங்க நினைத்தான். ஆனால் இப்போது வேண்டாமென விட்டான்.

அவன் பேச்சில் லேசாகச் சிரித்தாள் அனு.

“குட். என் வேலைய சுலம்பாக்கிட்டா உன் தங்கை. உன் மனசையும் தெரிஞ்சுண்டேன். “

“அவ எப்போதும் அப்படி தான் ரொம்ப ஓபன் டைப். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேசிடுவா. நீங்க தப்பா எடுத்துக்காதீங்கோ” ஒருவேளை வைஷு பேசியதில் அவனுக்கு சங்கடமோவென்று அவள் சொல்ல,

“சே சே! அதெல்லாம் ஒண்ணுமில்ல. இன்பேக்ட் நானும் என் தம்பியும் கூட ரொம்ப கிளோஸ். அவனும் இவளை மாதிரி கலாட்டா பேர்வழி தான்.”

“ஓ”

“ம்ம்ம்ம்” வேறு என்னவெல்லாமோ பேச வேண்டும் என்று தான் மனம் ஏங்கியது. என்ன ஆரம்பிப்பது எப்படி என்று புரியாமல் நின்றான்.

அந்த பச்சை நிற புடவையில் அம்சமாக இருந்த அவளை மொத்தமாக மனதுக்குள் நிரப்பிக் கொண்டான். 

அவளும் அவனை ஏறிட்டு பார்த்தாலும், கண்ணைப் பார்த்துப் பேச தயங்கினாள்.

அவளது அறையை சுற்றி பார்த்தான். மிகவும் சுத்தமாக வைத்திருந்தாள்.

சில புத்தகங்கள் அடுக்கப் பட்டு இருந்த டேபிள் அருகில் சென்றான். அங்கிருந்த பேனா ஒன்றை எடுத்து ஒரு பேப்பரில் தனது கைபேசி எண்ணை எழுதி அவளிடம் கொடுத்தான்.

“உன்கிட்ட செல்போன் இருக்கோன்னோ!?”

“ம்ம்”

“உனக்கு எப்போ தோணுதோ கூப்டு. சரி வா போகலாம். எல்லாரும் அங்க இருந்தாலும் இங்க என்ன நடக்கறதுன்னு தான் நெனச்சின்டிருப்பா”

அவன் முன்னே செல்ல, அனு பின்னால் வந்து கதவில் சாய்ந்து நின்று கொண்டாள்.

வைஷு அங்கே அனைவரிடமும் வாயடித்துக் கொண்டிருந்தாள். அனுவின் வீணை வேறு அங்கே எடுத்து வைக்கப்பட்டிருந்தது.

பங்கஜம் எழுந்து வந்து “பேசினியா” என ரகுவிடம் கேட்க.

“ம்ம்” என்று விட்டு நாராயணன் கேட்ட கேள்விக்கு மீண்டும் பதில் சொல்லலானான்.

யாருக்கும் தெரியாமல் ரகுவைப் பார்த்து கட்டை விரலை உயர்திக் காட்டினாள் வைஷு. அவனும் கண்ணசைத்தான்.

அனுவிடம் சென்றாள் பங்கஜம்.

“நன்னா வீணை வாசிப்ப னு உங்க சித்தி பாட்டி சொல்லிருக்கா. ரகுக்கும் மியூசிக் னா இண்டரஸ்ட்.

என் பசங்க ரெண்டு பெரும் மிருதங்கம் கத்துண்டா. ஆனா ரகு விட்டுட்டான். எங்க அர்விந்த் இன்னும் வாசிப்பான்.”

“யார் அந்த புது கேரக்டெர்” வாய் துடுக்காகக் கேட்டு வைத்தாள் வைஷு.

அவளை ஏற இரங்கப் பார்த்து விட்டு, “என்னோட சின்ன புள்ள” என்றாள் பங்கஜம்.

வச்சு அங்கிருந்து வைஷுவை முறைக்க, மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள் வைஷு.

“எங்கம்மா போற, நீ பாடு, அனு வாசிக்கட்டும் கேப்போம்” வேணு வாயைத் திறந்தார்.

வைஷு வச்சுவைப் பார்க்க, அவரும் சரி என்றார்.

ருக்குவுக்கு தான் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. ‘எங்க போனாலும் இது ஒன்னு கேட்டுடறா எல்லாரும்’ என மனதில் கொதித்தாள்.

கலர் கலராக கொடு போட்டிருந்த ஜமக்காளத்தில் இருவரும் அமர்ந்து கொண்டு,

அனு வீணையில் சுருதி மீட்ட, வைஷு பாட ஆரம்பித்தாள்.

 ” குறை ஒன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா

       குறை ஒன்றும் இல்லை கண்ணா

      குறை ஒன்றும் இல்லை கோவிந்தா ……”

எந்தக் குறையுமில்லாமல் பெண் பார்க்கும் படலம் முடிந்து, அப்போதே ரகுவின் அத்தையின் கணவர் நாள் பார்த்துச் சொல்ல, அன்றிலிருந்து இரண்டு வாரம் கழித்து நிச்சயதார்த்தம் என்று முடிவானது.

அனைவருக்கும் தாம்பூலம் வெற்றிலை பாக்கு பெண்களுக்கு ரவிக்கை துணி சேர்த்து வைத்துக் கொடுக்க,

பங்கஜமும் தான் கொண்டு வந்திருந்த தேங்காய் பூ பழத்தை ஸ்வீட் பாக்ஸ் வைத்து அனுவிற்கு கொடுத்தாள்.

பூவை அவரே அனுவின் தலையில் வைத்து விட, ரகு மனதில் அன்றே அவள் குடி புகுந்தாள்.

அனைவரும் கிளம்ப, ரகு அனுவிடம் கண்களால் விடை பெற்று, போன் செய்யுமாறு ஜாடை காட்டிச் சென்றதை வைஷு பார்க்கத் தவற வில்லை. 

error: Content is protected !!