SST — epi 6

அத்தியாயம் 6

Lah-லா எனும் வார்த்தை மலேசியா மற்றும் சிங்கப்பூர் பேச்சு வழக்கில் பரவலாக காணப்படும். லா எனும் வார்த்தைக்குத் தனியாக எந்த அர்த்தமும் இல்லை. ஒரு வார்த்தைக்கு அழுத்தம் அதாவது முக்கியத்துவம் கொடுக்கவே லா எனும் சொல் அதோடு இணைகிறது. உதாரணமாக உள்ளே வா என ஒரு முறை அழைக்கும் போது ஒருவர் உடன்படாவிட்டால் உள்ளே வாலா என லா சேர்க்கப்பட்டு வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. இந்த லா வார்த்தையை இஸ்டத்துக்கு எல்லா வார்த்தைகளிலும் சேர்க்க முடியாது. அதன் பயன்பாடு இயற்கையாகவே மலேசியர்களுக்கு சொல்லிக் கொடுக்காமலே வந்துவிடுகிறது.

 

“கோல்!” என கத்தினான் கணேஷ்.

எழுந்து நின்று தங்கள் ஃபேவரேட் காற்பந்தாட்டக் குழு போட்ட கோலுக்கு ஹை பை கொடுத்து கொண்டாடினார்கள் மிருவும் அவள் தம்பியும்.

“யப்பாடா, ஆரம்பிச்சு முப்பது நிமிஷமாச்சு! இப்பயாச்சும் கோல் போட்டுத் தொலைச்சானுங்களே! எங்கே மேட்ச் போன தடவை மாதிரி ஊத்திக்குமோன்னு பயத்துட்டேன்டா கணே!”

“அக்கா, இன்னும் டைம் இருக்கு மேட்ச் முடிய. சோ ரொம்ப ஹோப் வைக்காதே! இவனுங்க லாஸ்ட் மினிட்ல சொதப்புனாலும் சொதப்பி தொலைவானுங்க!” என சலித்துக் கொண்டான் கணே.

அக்காவும் தம்பியும் அந்த சனிக்கிழமை இரவு நேர மேட்ச் பார்க்க மாமாக்(இந்து முஸ்லிம் சாப்பாட்டுக் கடை) கடைக்கு வந்திருந்தார்கள். அக்கடை அவர்கள் வீட்டின் அருகே தான் இருந்தது. பெரிய திரை போட்டு, காற்பந்தாட்டம் இங்கே ஃப்ரீயாக காட்டப்படும். நிறைய பேர் அங்கே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே பந்து விளையாட்டைக் கண்டுக் களிப்பார்கள். சில சமயங்களில் எதிர் எதிர் அணி மேட்சில் மோதிக் கொள்வதைப் போல அவர்களின் சப்போர்ட்டர்களும் இங்கே அடித்துக் கொள்வதுண்டு. அந்த மாதிரி அடிதடி சமயங்களில் மிருவும் கணேவும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என வீட்டிற்கு ஓடிப் போய்விடுவார்கள். ஆனாலும் இந்த மேட்ச் பார்க்கும் ஆர்வம் இருவருக்கும் குறைந்ததே இல்லை. அவர்களின் அப்பாவைப் போல பந்து விளையாட்டுப் பைத்தியம் என ரதி சலித்துக் கொள்வதும் உண்டு.

வசதி உள்ளவர்கள் வீட்டிலேயே விளையாட்டு சென்னலை வாங்கிப் பார்ப்பார்கள். மிரு தன் அம்மாவுக்கு மட்டும் இந்திய சேனல்கள் வரும் பேக்கேஜ் போட்டுக் கொடுத்திருந்தாள். விளையாட்டு பேக்கேஜூம் அதில் சேர்த்தால் இவளால் மாத பட்ஜேட்டை சமாளிக்க முடியாது என்பதால் தான் இவர்கள் இருவரும் வெளியே போய் பார்ப்பது.

விளையாட்டுக்குப் பத்து நிமிட இடைவெளி விட்டிருந்தார்கள். கணே ரொட்டி சானாய்(பரோட்டா) சாப்பிட, மிரு வெறும் தே தாரேக் மட்டும் குடித்தாள். கிளாசை கீழே வைத்தவள் சாப்பிடும் தன் தம்பியையே கண் இமைக்காமல் பார்த்தாள்.

“வேணும்னா இன்னொன்னு ஆர்டர் பண்ணிக்கக்கா. நான் சாப்பிடறத அப்படிப் பார்க்காதே, வயித்த வலிக்கும்!”

“ம்ப்ச், வேணாண்டா! வீட்டுல சாப்பிட்டதே ஃபுல்லா இருக்கு”

“சரி, அப்புறம் எதுக்கு என்னை இப்பத்தான் பார்க்கற மாதிரி உத்து உத்துப் பார்க்கற?”

“ஒன்னும் இல்லடா”

“நம்பிட்டேன்! சும்மா கேளுக்கா, என்ன ஓடுது உன் மனசுல?”

“அது வந்துடா.. நீ இன்னும் கொஞ்சம் பெரியவனா ஆனதும், இப்படி என் கூட மேட்ச் பார்க்கலாம் வருவியாடா கணே? இல்ல ப்ரேண்ட், கேர்ள்ப்ரேண்ட் இப்படிலாம் செட் ஆகிட்டா என்னைக் கண்டுக்காம போயிருவியா?”

“இதே கேள்வியை எத்தனை தடவைத்தான் வார்த்தைகள மாத்தி மாத்திப் போட்டு கேப்பியோ? உனக்கு கேட்க சலிக்கலனாலும் எனக்கு பதில் சொல்லி சலிச்சுப் போச்சுக்கா!”

“ரொம்பத்தான் அலுத்துக்காதடா! எனக்கு திருப்தியாகற வரைக்கும் நான் கேட்டுக்கிட்டேத்தான் இருப்பேன்”

கரண்டியை கீழே வைத்தவன் தன் அக்காவைத் தீர்க்கமாகப் பார்த்தான். அப்படியே தன் அம்மாவை  உரித்து வைத்திருக்கும் தம்பியை வாஞ்சையாகப் பார்த்தாள் மிரு.

“மேட்ச் பார்க்க மட்டும் இல்ல, எப்பவும் நான் உனக்குத் துணையா இருப்பேன்கா. ஆனா..”

“என்னடா புதுசா ஆனாலாம் வருது?”

“எனக்கும் வயசு ஏறுதுல! இன்னும் சின்னப்பையன் மாதிரி சிந்திக்க முடியுமா?”

“ஓஹோ!” லேசாக மீசை அரும்ப ஆரம்பித்திருந்த தன் தம்பியின் முகத்தை புன்னகையுடன் பார்த்தாள் மிரு.

“இன்னும் ஒரு ரெண்டு வருஷத்துல நான் எஸ்பிஎம்(பள்ளி படிப்பு இது வரைதான். அதற்கு மேல் மேற்படிப்பு போக வேண்டும்) முடிச்சுருவேன். அப்புறம் காலேஜோ யூனிவெர்சிட்டியோ போய்ருவேன். எனக்குன்னு ப்ரேண்ட்ஸ் வரலாம். ஏன் நீ சொன்ன மாதிரி கேர்ல்ப்ரேண்ட் கூட வரலாம்! அப்பவும் நான் உனக்கு எல்லாத்துலயும் துணையா இருக்க முடியுமா சொல்லு! அக்கான்னு உனக்கு நேரம் ஒதுக்கனாலும், எல்லா நேரத்தையும் உனக்கே உனக்குன்னு ஒதுக்க முடியாது!”

“நியாயம்தான்!” பெரிய மனிதன் போல பேசும் தன் தம்பியைக் கண் கொட்டாமல் பார்த்திருந்தாள் மிரு.

“சோ, என்னை நீ டிப்பேண்ட் பண்ணி இருக்கக்கூடாது. அதனால மேட்ச் பார்க்க நீ ஒரு பாய்ப்ரண்ட் தேடிக்கோ! உன்னை வச்சிப் பார்த்துக்கறது வயத்துல பாம்ப் கட்டி வச்சிக்கற மாதிரி ரிஸ்கியான விஷயம்.”

“என்னடா வர வர அம்மா மாதிரியே பேசற!”

“நீ இல்லாதப்ப அம்மா என் கிட்ட தானே புலம்பறாங்க! அதான் எனக்கும் அவங்க மாதிரியே பேச வருது” சிரித்தான்.

“என்னைப் பார்த்துக்கறது உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு கஸ்டமா இருக்காடா?”

“பின்ன இல்லையா! கொஞ்சம் நம்ம மேசைய சுத்திப் பாரு! அவன் அவன் உன்னையே பார்க்கறானுங்க. உனக்குன்னு ஒரு பாய்ப்ரண்டோ, ஹஸ்பண்டோ வந்துட்டா நானும் அம்மாவும் பாம்ப்ப அவன் வயித்துல கட்டி விட்டுட்டு நிம்மதியா தூங்குவோம்”

“அடேய் போதும்டா! என் கூட கேம் பார்க்க வர முடியலனா, முடியலன்னு சொல்லு. அத விட்டுட்டு உங்கக்காவ உலக அழகி ரேஞ்சுக்கு ஓவரா பில்டப் குடுக்காதே! பூமி தாங்காது” என எகிறினாள் மிரு.

“அக்கா!”

“என்ன?”

“போன வாரம் பேரண்ட் டீச்சர் மீட்டிங் வந்துட்டுப் போனல!”

“ஆமா! நீ ரொம்ப நல்லா படிக்கறேன்னு புதுசா வந்த வாத்தி சொன்னாரே!”

“அந்த வாத்தி என் கிட்ட உன்னோட போன் நம்பர் கேட்டாரு!”

“என்னடா சொல்லுற? அவரு சைனிஸ் ஆச்சேடா! அவருக்கு ஏன்டா இந்த ஆசை?”

“அவர் ரொம்ப நல்லவருக்கா! எனக்கு நெறைய தடவை புக்ஸ்லாம் குடுத்து ஹேல்ப் பண்ணிருக்காரு! உன்னோட கொஞ்சம் வயசு கூட தான். ஆனா வெரி கேரிங் பெர்சன். எனக்கு என்னமோ அவர் உன்ன நல்லா பார்த்துக்குவாருன்னு தோணுது! நம்பர் குடுக்கவா?”

“சரி குடு! ப்ரேண்டா பழகி பார்க்கறேன். ஆனா நீ எந்த ஹை ஹோப்பும் வச்சிக்கக் கூடாது. பிடிக்கலனா பிடிக்கலன்னு சொல்லிருவேன்!”

“உனக்கு கண்டிப்பா பிடிக்கும்கா! சார் ரொம்ப நல்லவரு.”

“பார்ப்போம், பார்ப்போம்”

அதற்குள் மேட்ச் ஆரம்பம் ஆகியிருந்தது. கணே அதில் ஐக்கியமாகி விட, இவளால் தான் அதற்கு மேல் காற்பந்தாட்டத்தில் கவனம் வைக்க முடியவில்லை. சொற்ப நேரமே பேசி இருந்த கணேவின் வகுப்பாசிரியரை நினைவில் கொண்டு வர முயன்றவளுக்கு குருவின் முகமே கண்ணில் வந்து நின்றது. பாய்ப்ரண்ட் என்ற வார்த்தை அவனை ஞாபகப்படுத்தி மண்டையைக் காய வைத்தது.

“சோ சிம்பிள்! அவன கழட்டி விட்டுட்டு என்னை வச்சுக்கோ, பாய்பிரண்டா!”

“என்னது?” அதிர்ந்துப் போனாள் மிரு.

அவளது அதிர்ச்சியைப் பார்த்து குருவுக்கு குதூகலமாக இருந்தது போல.

“யெஸ் மிரு! பீ மை கேர்ள்ப்ரேண்ட்! ஆக்சுவலி யூ ஆர் சோ லக்கி, யூ க்நோ! ஒரு எலிஜிபள் பேச்சலரை வின் பண்ணிட்ட நீ”

“யாரு, நீ எலிஜிபள் பேச்சலரா? நீ புலிஜிபள் பேச்சலரா இருந்தா கூட எனக்கு வேணா! பெர்வெர்ட்! எவ்வளவு கொழுப்பு இருந்தா வேலை குடுக்கற மாதிரி குடுத்து சேலைய உருவ பார்ப்ப!” என சொன்னவள் அவனை நோக்கி வேகமாக எட்டு எடுத்து வைத்தாள்.

அவள் கிட்டே நெருங்குவதற்குள் மேசை மேல் இருந்த  டாகுமெண்டை எடுத்து தனது ட்ராவரில் வைத்து அவசரமாகப் பூட்டினான் குரு. சாவியை எடுத்து தனது பாண்ட் பாக்கேட்டில் போட்டவன்,

“வந்து சாவிய எடுத்துக்கோ மிரு! என் பாக்கேட்ல கை விட்டு சாவிய எடுத்து ட்ராவர திறந்து, உன்னோட காண்ட்ரேக்ட கிழிச்சுப் போடு. கமான், குவீக்!” என மிதப்பாக சொன்னான்.

அவள் பயப்படாமல் நெருங்கவும்,

“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை மிரு! ஆனா நம்ம சுத்தி கண்ணாடியால ஆன பார்டிஷன் இருக்கு. நீ என் பேண்ட்ல கை வைக்கறத வெளிய உள்ளவங்க க்ளியரா பார்ப்பாங்க. என்னை தொட்டு நீ சாவிய எடுக்கறதுல எனக்கு சந்தோஷம்தான் மிரு. அது உனக்கும் ஓகேன்னா கிட்ட வா! வா மிரு!” என கூப்பிட்டான்.

அவன் பேச்சில் தயங்கி நின்றவள், ஒன்றும் செய்ய முடியாத கோபத்தில் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எனக்கு இந்த வேலை வேணாம்!”

“அச்சோச்சோ! சைன் பண்ணிட்டியே மிரு”

“உனக்கு கேர்ள்ப்ரேண்டா இருந்து தான் இந்த வேலை செய்யனும்னா, அந்த வேலை எனக்குத் தேவை இல்லை. பெனால்டி தானே கட்டனும், கட்டிட்டுப் போறேன் போடா!”

“ஏன் மிரு, நான் ஹேண்ட்சமா இல்லையா? ஏன் என்னை வேணான்னு சொல்லுற?”

“அழகா இருக்குன்றதால அனக்கோண்டா கூட குடும்பம் நடத்த முடியுமா? கொன்னுப் போட்டுரும்! அவங்க அவங்க தகுதிக்கு ஏத்த மாதிரி தான் துணை தேடனும். நீ வச்சிக்க வச்சிக்கன்னு தானே சொல்லுற! எனக்கு வச்சிக்கறவன் வேணா, கௌரவமா கட்டிக்கறவன் போதும். உன்னை வச்சிக்கற அளவுக்கு நான் இன்னும் தாழ்ந்து போயிடல. குட் பை!” என கதவின் குமிழில் கை வைத்தாள் வெளியேற.

“ரிங்கிட் மலேசியா பிப்டி தவுசண்ட் உன் கிட்ட இருக்கா மிரு?”

கை அந்தரத்தில் நின்றது மிருவுக்கு.

“ஃபெனால்டி கட்ட அவ்வளவு பணம் இல்லைன்னா, அப்படியே திரும்பி வந்து என் முன்னுக்கு உள்ள நாற்காலில உட்காரு!”

கோபத்தில் விறைப்பாய் நின்ற உடல், மெல்ல மெல்லத் தளர்ந்தது. குருவுக்கு முதுகு காட்டி நின்றிருந்தவள், ஒரு நிமிடம் கண்ணை மூடி கோபத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்தாள்.

திரும்பி நடந்து அமைதியாக அவன் முன்னே அமர்ந்தாள் மிரு. அவளின் ஒவ்வொரு அசைவையும் பார்த்திருந்த குரு,

“ரிலேக்ஸ் மிரு!” என்றான்.

“எனக்கு நீங்க வேண்டாம் குரு சார்”

“சரி!”

“என்னால ஐம்பதாயிரம் கட்ட முடியாது குரு சார்”

“ஓகே!”

“ஓகேவா?”

“ஆமா, ஓகே!”

இவ்வளவு நேரம் மடியில் கோர்த்திருந்த தன் கைவிரல்களைப் பார்த்து பேசியவள், நிமிர்ந்து அவனை ஏறிட்டாள்.

“இப்போ மூச்சுக்கு முந்நூறு தடவை சார்,சார்னு கூப்பிடற! அதே மரியாதைய முன்னமே குடுத்துருக்கனும் மிரு! நான் என்ன தப்பு பண்ணேன்னு என்னை கபோதி, கூறுகெட்ட கபோதினுலாம் திட்டுன?”

“நீ அப்படி பார்த்தது தப்பில்லையா?”

அவன் முறைக்கவும்,

“நீங்க அப்படி பார்த்தது தப்பில்லையா?” என கேட்டாள்.

“தட்ஸ் குட்! மரியாதை முக்கியம் மிரு. நான் முதலாளி நீ தொழிலாளின்ற பேசிஸ்ல மரியாதை தர வேணாம்! ஆனா உன்னோட மூத்தவன்ற பேசிஸ்ல மரியாதை குடுக்கலாம்ல?” என கேட்டான் குரு.

அவள் அவன் முகத்தையும் பார்க்கவில்லை மறுவார்த்தையும் பேசவில்லை. பார்வையை அவன் தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தில் வைத்திருந்தாள்.

“என்னைப் பாரு மிரு! ஒருத்தர் பேசறப்போ அவங்க முகத்தப் பார்க்கனும். அதுதான் மரியாதை!” குரல் அழுத்தமாக வந்தது.

பார்வையை அவன் முகத்தில் பதித்தாள் அவள்.

“யாரும் செய்யாத தப்ப நான் செஞ்சிரல மிரு! ஆனாலும் நான் செஞ்சது தப்புத்தான். அதுக்கு மன்னிப்பும் கேட்டுட்டேன். இப்ப வரைக்கும் உன் கிட்ட பேசிட்டு இருக்கேனே, உன் கண்ண தவிர வேற எங்கயாச்சும் பார்த்தேனா?”

இல்லையென தலையாட்டினாள் மிரு.

“என் கேரக்டர பெர்வெர்ட்னே முடிவு பண்ணிட்டியா? மறுபடியும் எக்குத்தப்பா பார்த்தா மரியாதை இருக்காதுன்ற மாதிரி நீ பேசவும் தான் எனக்கு கோபம் வந்துருச்சு மிரு. ரொம்ப தில்லா பேசுனியா, அதான் பயத்துல உன் முகம் எப்படி மாறும்னு பார்க்க ஆசை வந்துருச்சு. ரொம்ப நல்லாவே பயந்தப்போ! முகம்லாம் சிவந்து, கண்ணு ரெண்டும் வெளிய வர மாதிரி விரிஞ்சு, உதடு படபடன்னு துடிச்சு நவரசமும் நல்லா காட்டுன. இட் வாஸ் ஃபன். ஆனா நீ பயப்படவே தேவையில்ல மிரு! என் கேர்ள்ப்ரேண்டா இருக்கக் கூட ஒரு தகுதி வேணும். அது உன் கிட்ட இல்லவே இல்லை. சோ ச்சில் அவுட் மிரு!”

முகம் பட்டென மலர்ந்தது மிருவுக்கு. தகுதி இல்லை என அவன் சொன்னதுக்கு மற்றவர்களாய் இருந்தால் நீ என்ன பெரிய இவனா என குதித்திருப்பார்கள். இவளோ சந்தோஷப்பட்டுக் கொண்டாள். பணம் இல்லாதவர்களே தன்னை வேறு மாதிரி நடத்த எத்தனிக்கையில், குரு மாதிரி பணம் படைத்தவனிடம் இவளுக்கு அறவே நம்பிக்கை இல்லை. துஷ்டனைக் கண்டால் தூர விலகு என்பதைப் போல, விலக முடியாவிட்டாலும் தொல்லை தராத தூரத்தில் விலக்கி வைப்பது இவளுக்கு நிம்மதியாகவே இருந்தது. அவனும் தகுதி வேண்டும் என சொல்லிவிட்டதால், தன்னைப் போல லோக்கல் பார்ட்டியை தொல்லை செய்ய மாட்டான் என மகிழ்ந்துப் போனாள் மிரு.

“ரொம்ப தேங்க்ஸ் சார். இந்த தகுதி மேட்டர அப்படியே பிடிச்சுக்குங்க. அதுதான் நம்மளுக்கு நல்லது! இப்ப என்ன சார், நான் மரியாதை குறைவா நடந்துகிட்டேன், அவ்வளவு தானே? என்னை மன்னிச்சிருங்க சார்! இனிமே ரொம்ப மரியாதையா நடந்துக்கறேன். மத்தவங்க மாதிரியே பாஸ்ன்னு கூப்பிடறேன்! சாரி பாஸ்.” முத்துப் பற்கள் மின்ன சந்தோஷமாக சிரித்தாள் மிரு.

“அப்புறம் மிரு, சேலைலாம் அழகா கட்டுவியா?”

“வாட்?”

‘டேய்! இப்பத்தானடா கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்டேன்! அதுக்குள்ள என்னடா கேள்வி இது?’

“இல்ல வேலை, சேலைன்னு ரைமிங்க பேசனியே, அதான் சேலைலாம் கட்டத் தெரியுமான்னு கேட்டேன்”

“அது கோபத்துல அப்படியே ப்ளோல வந்துருச்சு பாஸ்”

“இனிமே என் கிட்ட கொஞ்சம் கோபத்த குறைச்சிக்கோ! ஆபீஸ்ல எல்லார்கிட்டயும் மரியாதையா பேசு இன்க்லூடிங் மீ! புரியுதா?”

“சரி பாஸ்”

“ஆபிஸ் என்வைரண்ட்மேண்ட் உனக்கு புதுசு. இங்க எடுத்தோம் கவிழ்த்தோம்னு இருக்கக் கூடாது! எதையும் யோசிச்சுப் பேசனும், யோசிச்சு செய்யனும். வார்த்தைகள கன்னாபின்னான்னு விடக்கூடாது! அண்டெர்ஸ்டேண்ட்?”

“யெஸ் பாஸ்!” அவள் காது தீய்ந்து தீப்பொறி பறக்கும் வரை மரியாதை பற்றி பாடம் எடுத்தான் குரு.

‘இவனுக்கு குருன்னு கரேக்டா தான் பேரு வச்சிருக்காங்க! இப்படி தொண்டை தண்ணி வத்த பாடம் நடத்தறானே! இவன் குடுக்கற சம்பளத்துக்காக ஒரு மணி நேரமா இவன் பொழியிற அட்வைஸ் மழையில நனைய வேண்டி இருக்கே!’

நாற்காலியில் உட்கார முடியாமல் நெளிந்தாள் மிரு.

“என்ன?”

“ஒன்னும் இல்ல பாஸ்”

“சரி கிளம்பு. நெக்ஸ்ட் வீக் பார்க்கலாம்”

“ஓகே பாஸ்”

“போறதுக்கு முன்ன, நான் இவ்வளவு நேரம் என்ன அட்வைஸ் பண்ணேன்னு ஒரு வரியில சொல்லிட்டுப் போ! உனக்கு புரிஞ்சுதான்னு எனக்குத் தெரியனும்”

அவனை மேலும் கீழும் பார்த்தவள்,

“மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்ல, அவங்கவங்க செய்யற செயலைப் பொறுத்தே வருதுன்னு சொன்னீங்க பாஸ்! பாய் பாஸ்” என சொல்லியவள் அவன் வேறு ஏதும் பேசுவதற்குள் வேக வேகமாக வெளியேறி இருந்தாள்.

“அடிப்பாவி! இவ்வளவு நேரம் வயசுக்கு மரியாதை தரனும்னு வாய் வலிக்க சொல்லிக் கொடுத்தத தலைய ஆட்டி ஆட்டிக் கேட்டுட்டு அவ பிடிச்ச பிடியிலயே நின்னுட்டுப் போறாளே!” தலையைப் பிடித்துக் கொண்டான் குரு.

எவ்வளவு அடக்கியும் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது அவனுக்கு.

“லவ்லி மிருது!” முணுமுணுத்துக் கொண்டான்.

(தவிப்பான்)

error: Content is protected !!