KM4

KM4

4

 

“அனு.. எங்க இருக்க?” வாசலிலிருந்தே குரல் கொடுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள் அம்பு என்கிற அம்புஜம்.

 

நாராயணன் சாரங்கபாணியின் ஒரே தங்கை. உள்ளூரிலேயே இருந்தாலும், அவள் எப்போதாவது தான் வருவாள். கணவன் குடும்பத்தை தூக்கிச் சுமப்பவள்.

 

அனைவர் மீதும் பாசம் உள்ளவள். அனு இவளை போன்றே இருந்தாள். குணத்திலும் அழகிலும்.

 

அனு அவளின் குரல் கேட்டு வெளியே வந்தாள்.

 

“அத்தை.. வா வா. ஆனா உன் மேல நான் கோவமா இருக்கேன். ஏன் நேத்திக்கு நீ வரல?” முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் அனு.

 

“இல்ல டீ கொழந்த, நேத்திக்கு  தான் என் மாமனாரோட  அப்பாவுக்கு ஸ்ரார்த்தம். அதுக்கு தளிகை பண்ண வேண்டாமா. மாப்பிள்ளை உன்னை பார்க்க தான வந்தார். என்னய்யா பார்க்கப் போறார். நிச்சயதார்தத்தை ஜமாய்ச்சுடலாம். கவலைப் படாத. எங்க அம்மா அப்பாலாம்?

 என்னை சீக்கிரம் வர சொல்லிட்டு, இவாளாம் இன்னும் கெளம்பலையா? காலா கலப்பாக பேசினாள்.

 

“அம்மா உள்ள தான் இருக்கா. அப்பா அவா ஆத்துக்கு போறதுக்கு வெத்தலை பாக்கு எல்லாம் வாங்கப் போயிருக்கா.”

 

“வா அம்பு” வச்சு வெளிய வந்தாள்.

” என்ன மன்னி நீ இன்னும் என்ன பண்ணிண்டிருக்க. பெரிய மன்னி எங்க? ” அம்பு கனிவாகக் கேட்க,

 

“கார் புக் பண்ணியிருக்கு . அவ போறவழில எரிக்கறேன்னு சொன்னா.”

அதற்குள் சரங்கனும் காருடன் வந்துவிட,

 

“கார் வந்தாச்சு கிளம்புங்கோ. அண்ணாவும் அங்க ரெடியா இருக்கான்” பர பரத்தார்.

 

“ஜாக்கரதையா இருந்துக்கோங்க டீ. அவளை எழுப்பி காபி குடு. விட்டா நாள் முழுக்க தூங்குவா. நாங்க போயிட்டு வரோம்” வச்சு அனைவரையும் கூட்டிக்கொண்டு கிளம்பினாள்.

 

போகும் வழியில் நாராயணனும் ருக்குவுக்கு ஏறிக்கொள்ள, மாப்பிள்ளை வீட்டை பற்றி பேசிக்கொண்டே சென்றனர்.

 

அம்புவிற்கு நேற்று நடந்தவைகளை ஒன்று விடாமல் ஒப்பித்தனர்.

 

**

“கூடத்தை நன்னா துடை. பொன்னாத்துக்காரா வர போறா. ஆகம் நன்னா இருக்கணும்” வேலைக்காரியை படுத்திக்க கொண்டிருந்தாள் பங்கஜம்.

 

“இதுக்குமேல தொடச்சா மொசைக் பேந்துரும்மா.” அவளும் சளைக்காமல் பதில் சொல்ல,

“போதும் டீ. இந்த காப்பிய குடிச்சுட்டு கெளம்பு” அதற்குள் போன் வந்தது.

 

சாரங்கபாணி வீட்டு எண்ணிற்கு போன் செய்து கிளம்பிவிட்டதாகக் கூற, வேணு விஷயத்தை சொன்னார்.

 

வீட்டில் இவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். ரகு கிளம்பி அலுவலகம் சென்றிருந்தான்.

 

அனைவரும் வந்துவிட,  உள்ளே அழைத்துச் சென்றனர்.

 

அவர்களை நன்றாகவே உபசரித்தனர் வேணுவும் பங்கஜமும். பிள்ளையைப் பெற்றதால் பங்கஜத்திற்கு எப்போதும் ஒரு மிதப்பு இருக்க தான் செய்தது.

ஆனாலும் இப்போது முதல் முறை என்பதால் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.

 

அப்படி இப்படி என்று ஏதாவது கேள்விப் பட்டால் ரகு விடம் யார் பாட்டு வாங்குவது என்ற பயம் வேறு இருந்தது.

“ஆத்த சுத்திப் பாருங்கோ.” என்றாள் தன் வீட்டுப் பெருமையைக் காட்ட,

சாரங்கனும் நாராயணனும் அக்கறை காட்டவில்லை. மற்றவர்களும் சங்கோஜ பட்டு உட்கார்ந்த படியே பார்க்க,

பங்கஜம் “வாங்கோ” என உள்ளேஒவ்வொரு அறையாக அழைத்துச் சென்றாள்.

 

“இது தான் ரகு ரூம்” என அவனின் அறையைக் காட்ட,

 

“நன்னா இருக்கு” என வச்சு பாராட்ட,

 

ருக்குவுக்கு ஆச்சரியம். ஏனெனில் ரகு, மிகவும் ரசனை உள்ளவன். அவனது அறையில் நிறைய பொருட்கள் வைக்கமாட்டான். ஆனால் சில வற்றை நேர்த்தியாக வைத்திருப்பான்.

 

அதிலேயே அந்த அரை அழகாக தெரிந்தது. அவனும் அவனது தம்பி அரவிந்தும் எடுத்துக் கொண்ட படம் அங்கே மாட்டியிருந்தான்.

 

இருவரும் பற்கள் தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

“இது தான் உங்க ரெண்டாவது புள்ளையா” அம்பு முதல் முறை பங்கஜத்திடம் பேசினாள்.

 

“ஆமா. ஆஸ்திரேலியால இருக்கான்.” பெருமை பேசினாள் பங்கஜம்.

 

“கல்யாணத்திற்கு வருவாரோனோ!”

 

“ஆமா கண்டிப்பா. அண்ணா தம்பி ரெண்டு பேரும் அவ்ளோ கிளோஸ். நீங்க பொண்ணோட சௌரியத்த பாத்துண்டு சீக்கிரம் நாள் பார்த்து சொன்னா, அவனுக்கும் லீவ் கேட்டுண்டு வாரத்துக்கு ஈஸியா இருக்கும்.”

 

“ம்ம் கண்டிப்பா சொல்லிடறோம். எங்காத்து பக்கத்துல வாத்தியார் இருக்கார். அவர் தான் எங்க ஆத்து வாத்தியார். சீக்கிரம் கேட்டு சொல்றோம்.” வச்சு உத்திரவாதம் தர,

 

“மாப்பிளையோட அளவு சொல்லுங்கோ மோதிரம் வாங்க. இது பொண்ணோட அளவு.” பண்டமாற்று முறை நடக்க,

 

 

“நீங்க பொண்ணுக்கு என்ன கலர் புடவை எடுக்கப் போறேள்ன்னு சொன்னா. பையனுக்கும் அதுக்கு மேட்சிங்கா சட்டை எடுப்போம். இப்போ அது தான பேஷன். எல்லாரும் அப்டி தான் பண்ணிக்கறா” அம்பு வந்த வேலையை சரியாகச் செய்தாள். அனுவின் மனம் அவளுக்கு நன்றாகவே தெரியும். அவள் வாய் திறந்து கேட்காமலேயே அவளுக்கு எல்லாம் செய்வாள் அம்பு.

 

“கடைக்கு போய் வாங்கிட்டு நான் உங்களுக்கு போட்டோ அனுப்பறேன். அப்பறம் நீங்கி வாங்குங்கோ”

 

சட்டை அளவு எல்லாம் தெரிந்து கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

 

இன்னும் இரண்டு வாரம் கூட முழுதாக இல்லையென்பதால், அன்றே நல்ல நாளும் கூட எனவும்,

பங்கஜம் தன் நாத்தனாரை அழைத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.

 

“மன்னி நம்ம பவுசு இதுல தான் தெரியும். அதுனால நன்னா எடுங்கோ” ஏத்தி விட்டாள்.

 

“ஆமா டீ.  நன்னா வாங்கிடுவோம். அவாளும் நம்ம புள்ளைக்கு எடுப்பா. மோதிரமும் வாங்கிண்டு போயிடுவோம்.” பங்கஜம் கடையில் புடவைகளை தேடினாள்.

ரகு இதற்கு வரவில்லை. அவனுக்கு புடவை செலக்ட் செய்வது எல்லாம் பழக்கம் இல்லாத ஒன்று. அதனால் அம்மாவையே எடுக்கச் சொல்லி விட்டான்.

 

பங்கஜமும் ஓரளவு நன்றாகவே எடுப்பாள்.

 

இருவரும் சேர்ந்து பேபி பிங்க் நிறத்தில் வெள்ளி ஜரிகை போட்ட புடவையை எடுத்தனர். நல்ல உயர்ந்த ரகம்.

 

அங்கேயே போட்டோ எடுத்து வச்சுவின் எண்ணிற்கு வாட்சாப் செய்தாள்.

 

வச்சு உடனே அதை அனுவிடமும் வைஷுவிடமும் காட்ட,

 

“உன் வருங்கால மாமியார், கெத்து காட்டணும் னே விலை யோட அனுப்பியிருக்கா பாரு அனு” வைஷு சரியாக கணித்தாள்.

“பரவால்ல வைஷு விடு.தெரியாம கூட அனுப்பியிருக்கலாம் இல்லையா” அனு சொல்ல,

 

“நீ இப்படி நல்லவளாவே இரு.எனக்கு என்னவோ அப்படி தோணல. உன் தலைல மொளகா அரைக்காம இருந்தா சரி.”  நம்பாமல் பேசினாள்.

 

“அவளை கெடுக்காத வைஷு. ஒருத்தர் நம்மள ஏமாத்தறாங்கன்னு நமக்கு புரியாம இருக்கற வரை நம்ம மனசு எதையும் போட்டு குழப்பிக்காம நல்லாவே இருக்கும். தெரிஞ்சா தான் கஷ்டம். இப்படி பன்னிருப்பாளோ அப்படி பண்ணிருப்பாளோனு யோசிச்சு நம்ம நிம்மதி கெட்டு போகும். அனுவுக்கு அந்த கஷ்டம் வேண்டாம். வெள்ளந்தியா இருக்க. அப்படியே இருக்கட்டும்.உன்னோட சி ஐ டீ புத்திய உன்னோடையே வெச்சுக்கோ” வச்சு வைஷுவை கடிந்து கொள்ள,

 

“நான் சொல்றதை நீங்க நம்ப மாட்டீங்க. போக போக புரியும்.சரி நாம எப்போ புடவை எடுக்க போறோம்?”

“நாளைக்கு போகலாம். நல்ல நேரம் எப்போ னு காலெண்டர்ல பாரு. போகலாம். உனக்கு லீவ் தான. நாம மூணு பேர் போயிட்டு வருவோம்.” சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றாள் வச்சு.

 

“எனக்கு இருக்கற ஒரே தைரியம் அத்திம்பேர் தான். உன்னை அவர் நல்லா பாத்துப்பாரு. அங்க போய் என்ன கஷ்டம் வந்தாலும் நீ அவர் கிட்ட சொல்லு அனு” அவளின் கபடமில்லாத முகத்தைப் பார்த்து கூறினாள் தங்கை.

 

“நீயும் என்கூடவே வந்துடு பேசாம.” அனு சிரிக்க,

 

“ம்ம்ம். இது கூட நல்ல ஐடியா தான். சொல்ல முடியாது அந்த ரெண்டாவது பையன் எனக்கு ஏத்த மாதிரி இருந்தா, அவனையே கல்யாணம் பண்ணிண்டு உனக்கு துணையா அங்கேயே வந்துடுவேன்” தீவிரமாக யோசித்த படியே சொல்ல,

 

“அடிப்பாவி நீ செஞ்சாலும் செய்வ” அழகாக சிரித்தாள்.

 

**

 

“அம்மா எனக்கு இந்த புடவை மா. இந்த கலர் புதுசா இருக்கு.” வைஷு புடவைகளை அலச, 

 

“இரு டீ மொதல்ல அனு எடுக்கட்டும். அதுக்கப்புறம் மிச்சம் இருந்தா உனக்கு. கல்யாணத்துக்கு நன்னா எடுத்துத் தரேன் வைஷு. இது நிச்சயம் தானே. அனு நீ மொதல்ல பாரு.” வச்சு இரு பெண்களையும் அழைத்துக் கொண்டு புடைவை வாங்க வந்தாள். 

 

“எனக்கு நல்ல தேன் கலர்ல வேணும்.  அந்த கலர் இருந்தா காட்டுங்க” கடைக்காரனிடம் கேட்டுக்கொண்டிருந்தாள். 

 

மூவரும் சேர்ந்து தேன் நிறத்தில் இருக்கும் அணைத்து புடவைகளையும் ஆராய்ந்து கடைசியில் ஒன்றை எடுத்தனர். 

 

பின்பு அதிக விலையில்லாமல் வைஷுவும் ஒன்றை எடுத்துக் கொள்ள, 

 

ரகுவிற்கு சட்டையை அனுவே தெரிந்தெடுத்தாள். அவளுக்கு அவர்கள் வீட்டில் வாங்கிய புடவைக்கு மேட்சிங்காக அவனுக்கும் பேபிபிங்க் நிறத்தில் சட்டை எடுத்தாள்.

 

மோதிரம் அவர்கள் வீட்டில் எப்படி வாங்கினார்கள் என்று தெரியாது.ஆனால்  அனு அவனுக்காக பார்த்துப் பார்த்து தெரிவு செய்தாள்.

 

ரகுவிற்கு எப்போதும் அனுவின் ஞாபகம் தான். “அவகிட்ட  நம்பர் குடுத்து கால் பண்ண  சொன்னது தப்பு. அவ நம்பரை நானே வாங்கிருக்கணும்.”  போனில் புலம்பினான்.

 

“ஆமா டா கெடச்ச சான்சை விட்டுட்டு இப்போ எதுக்கு புலம்பற. பேசாம அம்மா கிட்ட சொல்லி அவங்க நம்பரை வாங்க சொல்லேன்.” மறுமுனையில் ஐடியா கொடுத்தான் அர்விந்த்.

“இல்ல டா. அம்மா கிட்ட போய் எப்படி நான் கேக்கறது. அது நன்னா இருக்காது.” மறுத்தான்.

 

” அட போடா. நானா இருந்தா…. ” சற்று இடைவெளி விட்டு,

“அண்ணன் கிட்ட சில விஷயத்தை எல்லாம் சொல்ல முடியாது. அவங்களே கால் பண்ணனும்னு வேண்டிக்கோ போ. அது தான் முடியும்” சலிப்பாக சொல்ல,

 

“அவ தங்க நன்னா பேசினா.  அவகிட்டயாவது நம்பர் வாங்கிட்டு உங்க அக்கா வ பேச சொல்லுன்னு சொல்லிருக்கணுமோ” லேட்டாக யோசித்தான் ரகு.

 

“என்னது தங்கச்சியா…! இந்த விஷயத்தை யாரும் என்கிட்டே சொல்லலையே. சே! நான் அங்க இல்லாம போனது ரொம்ப தப்பா இருக்கே!” பீல் செய்து பேச,

 

“டேய் அவ சரியான வாய். என்கிட்டயே தைரியமா வந்து, எங்க அக்காவை நன்னா பாத்துக்கணும்னு சைலன்ட் எச்சரிக்கை பண்ணிட்டு போயிருக்கா” சிரித்தான்.

 

“பார்றா.. அவ்ளோ பெரிய ரௌடியா.” ஆச்சரிய பட,

 

“ஆமா டா.சரியான வாய்.”

 

“என்னை விடவா..!”

 

“ரெண்டு போரையும் பேசவிட்டா சரியான போட்டியா இருக்கும்” மீண்டும் சிரிக்க,

 

“கவனிச்சுக்கறேன்” எங்கோ மனதில் அவளிடம் வம்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து ஒட்டிக்கொண்டது.

 

“டேய் தம்பி. ஏதாவது கலாட்டா பண்ணி, என் வாழ்க்கையோட விளையாடிடாத. உன் டோனே சரியில்ல”

 

“ச்சே என்ன ரகு. அப்டி எல்லாம் பண்ணுவேனா”

 

“டேய்! கல்யாணத்துக்கு நீ வரணுமா?!” வேண்டுமென்றே வம்பிழுத்தான்.

 

“உன் கல்யாணம் நடக்கணும்னா நான் கண்டிப்பா அங்க இருக்கணும்.இல்ல..” வில்லன் போல பேச

 

“ஜஸ்ட் கிட்டிங்.. சீக்கிரம் வா டா. தேதி உனக்கு அனுப்பறேன் மெஸேஜ்ல. டேக் கேர்.”

 

“ஓகே டா. பேச முயற்சி பண்ணு. இல்லன்னா நிச்சயதார்த்தம் வரை வெய்ட் பண்ணு. ஒரு வேலை நம்பர் கெடச்சா, அப்டியே அந்த பொண்ணு நம்பர் வாங்கி குடு டா”

 

“தம்பி..இது நலத்துக்கு இல்ல.. பாத்து இரு. இல்லனா நீ கெல்சி கூட தங்கியிருக்கன்னு அம்மா கிட்ட சொல்லிடுவேன்” ரகு மிரட்ட,

 

“அடேய் என்ன கேட்டுட்டேன்னு இப்படி டென்சன் ஆகற. கூல்.நம்பர் எல்லாம் வேண்டாம். சும்மா சொன்னேன். ஹீ ஹீ”

 

“போதும் போதும்.போய் தூங்கறேன். குட் நைட்” போனை வைத்ததும்,

 

உடனே புது எண்ணிலிருந்து ரகுவிற்கு அழைப்பு வர,

 

ஆர்வமாக எடுத்தான்.

 

“ஹல்லோ”

 

“அத்திம்பேர். நான் தான் வைஷ்னவி பேசறேன்.”

 

“எப்படி இருக்க. ஆத்துல எல்லாரும் எப்படி இருக்கா” பொதுவாகக் கேட்க,

 

“ம்ம்.. ரெண்டு நாள் கூட ஆகல. அதுவும் நேத்திக்கு தான் உங்காத்துக்கு எல்லாரும் வந்தா. அனுவை கேட்ட கூட ஓகே. பொதுவா கேக்கறேளே!”

 

“உன்கிட்ட பேச முடியாது போலிருக்கே!” மெல்ல சிரிக்க,

“ஆமா என்கிட்டே பேசாதீங்கோ. அனு கிட்ட பேசுங்கோ. போறப்ப என்கிட்டே சொல்லிட்டு போயிருந்தா நானே அவளை போன் பண்ண வெச்சிருப்பேன். நீங்க ஜாடை காட்டிட்டு போனா அவ உடனே பண்ணிடுவாளா. நல்ல ஆள பாத்தீங்க. எல்லாத்துக்கும் நானே ஹெல்ப் பண்றேன். வேற வழி. இந்தாங்கோ, அவ கிட்ட கொடுக்கறேன்”

 

“வாலா இருக்க. உன்னை எல்லாம் ஐப்பசி சமாளிக்கறது.”

 

“அதை பத்தி நீங்க கவலை படாதீங்க. எனக்குன்னு ஒருத்தன் வருவான்”

போனை அனுவிடம் கொடுத்து விட்டு சென்றாள்.

 

“அனு”

“ம்ம்…”

 

அன்று ஆரம்பமானது “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா …இன்னும் இருக்கா…. “

நிச்சயத்திற்கு நெருங்கிய சொந்தங்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளோர்களை மட்டும் அழைத்திருந்தனர்.

மண்டபத்திற்கு மதியமே சென்று விட, அவர்கள் ஏற்ப்பாடு செய்திருந்த கேட்ரிங்காரர் அவர்களுக்கு முன்னே அங்கே வந்து , காபியுடன் அவர்களை வரவேற்றார்.

பெண்ணை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர் ருக்குவும் அம்புவும்.

அத்தை அவளின் கணவர், பெரியம்மா பெரியப்பா அவர்களின் பிள்ளைகள், பேரன் பேத்தி, அத்தையின் மகள் , மகன் எல்லோரும் வந்துவிட கல்யாணக் களை கட்டியது.

வைஷு மேடையில் பூ பழங்கள் மாலைகள் என அழகாக வைத்தாள். சிறுவர்கள் இருவரை அழைத்து வாசலில் வருபவர்களுக்கு பன்னீர் தெளிக்க நிறுத்தி வைத்தாள்.

கல்கண்டு தட்டில் ஜெம்ஸ் வாங்கி அதில் அனு கெட்டிங் என்கேஜ்ட் வித்  ரகு  என எழுதி வைத்தாள்.

அனு வை தயார் செய்ய பியூட்டி பார்லரில் இருந்து ஆட்கள் வர, அவர்களை அழைத்துக் கொண்டு அனுவிடம் சென்றாள்.

அரை மணி நேரத்தில் அனு அழகான மணமகள் ஆனாள்.

வாசலிலேயே நின்று மாப்பிள்ளை வீட்டாரின் வருகைக்காக காத்திருந்தனர் வச்சுவும் அம்புவும்.

ரகுவிற்கு மனம் முழுக்க அனு நிறைந்திருந்தாள். அவளை சர்வ அலங்காரத்துடன் காண ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டிருந்தான்.

ஒருவாரம் முழுதும் இரவு தவறாமல் பேசி இருந்தனர். சில நேரங்களில் பொதுவாக சில நேரங்கள் காதலாக!

அவளின் அமைதியான சொல்லாத காதல் அவனை கட்டிப் போட்டு வைத்திருந்தது.

மண்டபத்து வாசலில் வண்டி வந்து நிற்க, பின்னாலேயே ஒரு பெரிய வேன் வைத்து தன் சொந்தங்களை அழைத்து வந்திருந்தார் பங்கஜம்.

“மாப்பிள்ளை வந்தாச்சு” ஒரு வாண்டு ஓடிச் சென்று அனுவின் அறையில் தகவலை சொன்னது.

வருங்கால மாமியார் வத்சலாவும் ருக்குவும் ஆரத்தி எடுத்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்றனர்.

கம்பீரமாக, மாப்பிளை மிடுக்குடன் லட்சணமாக இருந்தான் ரகு.

“மொதல்ல எல்லாரும் டிபன் சாப்ட வாங்கோ” சாரங்கன் மாப்பிள்ளை சுற்றத்தினை அழைத்துச் சென்றார்.

 

error: Content is protected !!