SSKN— epi 7

அத்தியாயம் 7

 

மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர் ஆகும்.  இங்கே சாப்பிடவும், சுற்றவும், ஷோப்பிங் செய்யவும் நிறைய இடங்கள் இருக்கின்றன. அதோடு கோயில், பள்ளிவாசல், தேவாலயம் போன்ற வழிபாட்டுத்தளங்களும் நிறைந்திருக்கின்றன.

 

“இப்ப என்னடா பிரச்சனை? வை உங்க மம்மி முகம் செவென் இன்ச் நீட்டிட்டு இருக்கு?” என குசுகுசுவென தன் தம்பியின் காதைக் கடித்தாள் மிரு. ரதி ஹோலில் இருக்க, இவர்கள் இருவரும் ரூமில் இருந்தார்கள்.

ரதி இரவு எட்டுக்கு டீவி முன் அமர்ந்தால் பத்து வரை நாடகம் பார்ப்பார். இன்றும் அவருக்குப் பிடித்த நாடகத்தில் தான் ஆழ்ந்திருந்தார். எப்பொழுதும் அவர் வாயில் இருந்து வரும் ‘அடடா’, ’அடப்பாவி’, ’இவனுக்கெல்லாம் சாவு வராதா?’,’பரதேசி’, ‘என் கையில மட்டும் கிடைச்சான் நானே கழுத்த நெரிச்சிப் போட்டுருவேன்’ போன்ற வசனங்கள் ஏதும் இல்லாததால் ஆச்சரியமாகத் தம்பியைக் கேள்விக் கேட்டாள் மிரு.

அவள் அப்பொழுதுதான் வேலை முடிந்து, கொஞ்ச நேரம் கிரேப் ஓட்டி விட்டு வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது  வெப் டிசைனிங் பயிற்சி நேரம் காலை பத்தில் இருந்து இரண்டு மணி வரைதான். அதற்கு பிறகு ஆபிசுக்கு சென்று மற்ற வெப் டிசைனிங் செய்யும் ஆட்கள் அருகே அமர்ந்து அவர்கள் வேலையைக் கவனித்து குறிப்பு எடுத்துக் கொண்டிருப்பாள். சரியாக ஆறு மணிக்கு பேக்கைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்து விடுவாள். ரயில் ஏறி வீடு வந்து சேர்ந்து, குளித்து டீ அருந்தி விட்டு கிரெப் ஓட்டப் போவாள். இரவு பத்து அல்லது பதினொன்றுக்கு வீடு வந்து கட்டையை நீட்டி விடுவாள்.

இன்று ஒன்பது மணிக்கே வந்தளுக்கு அம்மாவின் முக வாட்டம் கவலையைக் கொடுத்தது.

“இன்னிக்கு மந்த்லி செக் ஆப்கு ஹாஸ்பிட்டல் போனோம்ல, அங்க இவங்க  அண்ணாவையும் அவர் குடும்பத்தையும் பார்த்தோம்”

“ஓ, அந்த பந்தா பரமசிவமா?”

“அவரேதான்! பாட்டியைக் கூட்டிட்டு வந்துருந்தாங்க செக் ஆப்கு. பாட்டி இவங்கள பாத்து கண்ணீர் விட, இவங்களும் பாட்டியப் பார்த்து கண்ணீர் விடன்னு ஒரே சோக சீனாப்போச்சு. இவங்க அம்மான்னு கிட்ட போக, அந்தாளு சீச்சின்னு முகத்த திருப்பிட்டு பாட்டிய இழுத்துட்டுப் போயிட்டாரு. விட்டாங்களா இவங்க, பின்னாலயே போய் அண்ணான்னு கூப்பிட, யாருடி உனக்கு அண்ணா? கண்ட கருப்பன் கூட ஓடிப்போனவலாம் என் புருஷனுக்குத் தங்கச்சி இல்லைன்னு அந்தாளு பொண்டாட்டி ஓவர் சவுண்டு! நான் திருப்பி பேச வாயத் தொறந்தா, என்னை மொறைச்சியே வாய மூட வச்சிட்டாங்க அம்மா. ஒரே அவமானமா போச்சுக்கா. எல்லோரும் எங்களயே பார்த்தாங்க!”

“இவங்க ஏண்டா அண்ணா, கொண்ணான்னு இப்படி போய் அவமானப்பட்டு வராங்க ! அந்தாளு நம்மளத்தான் புழு மாதிரி பார்க்கறான்ல!” அம்மாவிடம் காட்ட முடியாத கோபத்தைத் தம்பியிடம் காட்டினாள் மிரு.

“போக்கா! நாம எப்படித்தான் பாசமா பார்த்தாலும் அவங்க வீட்டாளுங்கள பார்த்தா ஒரேடியா அழ ஆரம்பிச்சிருறாங்க. அக்கா…”

“என்னடா?”

“நம்ம மாமா பெத்த மகனை இன்னிக்குப் பார்த்தோம்கா”

“யாருடா, ஆஸ்ட்ரேலியால வேலை பார்க்கறான்னு உங்கம்மா பீலா விடுவாங்களே அவனா? அவங்களாம் நம்மா அம்மாவ ஒதுக்கி வச்சாலும், இவங்க அங்க என்ன நடக்குதுன்னு எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்காங்க! கில்லாடிடா உங்கம்மா!”

“ஹ்க்கும், பீலாலாம் இல்ல! அங்கத்தான் வேலைப் பார்க்கறாரு. லீவுக்கு வந்துருப்பாரு போல. கேம்ரி கார் வச்சிருக்காருக்கா. இவங்கள எண்ட்ரென்ஸ்ல வந்து ஏத்தறப்போ பார்த்தேன்.  நான் வளர்த்தப் பையன், எப்படி இருக்கான் பாரேன்னு  அம்மாவுக்கு அதுக்கு வேற அழுகை. ஆசையா இவங்க அவன் மூஞ்சிய பார்க்கறாங்க, அவன் வேற பக்கம் திருப்பிக் கிட்டான். பெரிய இவன்னு நினைப்பு. நாம சம்பாரிச்சு பென்ஸ்சே வாங்குவோம்கா. அம்மாவ உட்கார வச்சி ஏத்திட்டுப் போவோம். வெறும் கேம்ரிக்கே இந்த பந்தா!”

“ஹ்ம்ம் விடுடா! அவங்க ரத்த உறவு அதான் மனசு அடிச்சிக்குது போல! அழுது ஆத்திக்குறாங்க! நாம என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க. அவங்க போக்குலயே விடுடா! இப்ப போய் படி”

பெருமூச்சுடன் எழுந்த மிரு, கிச்சனுக்குப் போய் சீனியில்லாத டீ போட்டாள். சோள ரொட்டியை வாட்டி எடுத்துக் கொண்டு அம்மா அருகே வந்து அமர்ந்தாள்.

“சாப்பிடும்மா”

“ம்ப்ச்! பசிக்கலடி மிரு”

“கதை விடாதம்மா! டைபெட்டிஸ் இருந்தாலே சும்மா சும்மா பசிக்கும். அதுவும் உனக்கு இப்ப பசி காதை அடைக்கிதுன்னு எனக்குத் தெரியும். சாப்பிடும்மா”

என்ன நடந்தது என ஒன்றும் கேட்கவில்லை இவள். பிறகு மீண்டும் அழ ஆரம்பிப்பார் என விட்டு விட்டாள்.

கண் கலங்க மகள் கொடுத்த ரொட்டியை சாப்பிட்டு, டீயைக் குடித்தார் ரதி.

“நீ நாடகம் பாரும்மா, கசகசன்னு இருக்கு. நான் குளிச்சுட்டு வரேன்” என குளியல் அறைக்குப் போனாள்.

குளித்து முடித்து வந்தவள், எப்பொழுதும் போல ரதியைப் படுக்க வைத்து காலுக்கு மருந்திட்டாள்.

“மிரு!”

“என்னம்மா?”

“நான் இல்லைன்னா நீங்க ரெண்டு பேரும் எப்படிமா தன்னந்தனியா இருப்பீங்க?”

“என்ன பேச்சு இது ரதிதேவி?” கோபமாகக் கேட்டாள் மிரு.

“மனசே சரியில்லைடி! நான் இருக்கறப்போவே என் சொந்தங்களோட உங்க ரெண்டுப் பேரையும் சேர்த்து வைச்சிரனும்னு எவ்வளவோ முயற்சி பண்ணுறேன்! ஆனா என்னை கிட்டவே சேர்க்க மாட்டறாங்களேடி! எனக்கு மனசே ஆறலடி மிரு. நான் தான் தப்பு பண்ணிட்டேன், ஆனா நீங்க ரெண்டு பேரும் என் வயித்துல பொறந்தத தவிர என்னடி தப்புப் பண்ணீங்க? இப்படி உங்களையும் வெறுத்து ஒதுக்கறாங்களே!” சொல்லி விட்டு சின்னப்பிள்ளைப் போலத் தேம்பினார் ரதி.

அம்மாவின் அழுகை சத்தம் கேட்டு கணேவும் ரூமுக்குள் வந்தான்.

“அம்மா, இன்னும் கண்ணுல தண்ணி ஸ்டாக் தீரலையா? எதுக்கு இப்படி ஒன்னும் இல்லாததுக்கு எல்லாம் அழறீங்க? இதுக்கு மேல அழுதீங்க, எனக்கு கோபம் வந்துரும் சொல்லிட்டேன்! ”

“பார் மிரு இவன! மொதப்பிடிச்சு என்னை ஏசிக்கிட்டே இருக்கான்! என் கண்ணு, நான் கண்ணீர் விடறேன்! இவனுக்கு என்ன வந்துச்சாம்?”

“உங்க கண்ணுதான், உங்க கண்ணீர்தான். ஆனா பார்க்கற எனக்குல கடுப்பா இருக்கு” சத்தம் போட்டான் கணே.

“பாரு, பாரு! மீசை கூட இன்னும் ஒழுங்கா முளைக்கல! இப்பவே என்னை இந்த திட்டுத் திட்டறான். இவன்லாம் எனக்கு எங்க கடைசிக் காலத்துல கஞ்சி ஊத்தப்போறான்?” குற்றப்பத்திரிக்கை வாசித்தார் ரதி.

“அய்யோ! ரெண்டு பேரும் சண்டைய கொஞ்சம் நிறுத்துறீங்களா? டேய் கணே, போடா போய் ஒழுங்கா படி. கொஞ்சம் கூட அம்மான்னு மரியாதை இல்ல. போ, போ” தம்பியை ஹோலுக்கு விரட்டி விட்டாள்.

“நீங்க அழுதா அவனுக்குத் தாங்காதுன்னு தெரியாதாமா? அதான் கோபப்படறான். இதுக்குப் போய் என்னம்மா பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு. அவனுக்கும் எனக்கும் உங்கள விட்டா வேற யாரு இருக்கா?”

“அதுதாண்டி நானும் சொல்லுறேன்! என்னைய விட்டா உங்களுக்கு யாரு இருக்கா! எங்கண்ணா என்னை வீட்டுக்குள்ள சேர்த்துக்கிட்டா, உன்னை அவங்க வீட்டு மருமகளா ஆக்கிரலாம்னு நான் கனவு கண்டுகிட்டு இருக்கேண்டி மிரு. என் மருமகன் அவ்வளவு அழகா இருக்கான் தெரியுமா? பெரிய கார் வச்சிருக்கான். கருப்பு கண்ணாடிலாம் போட்டுருக்கான். ராஜாவாட்டாம் இருக்கான். உனக்கு அவன் தாண்டி பொருத்தமா இருப்பான்” கண்களில் கனவு மின்ன பேசினார் ரதி.

“அவன் ராஜாவாட்டமே இருக்கட்டும்மா! ஆனா அவன் அம்மா என்னை கூஜா தூக்க வைக்குமே ,தேவையா இது? எங்கம்மாவ மதிக்காத யாரும் எனக்கு வேணா! அவன் எந்த நாட்டு ராஜாவா இருந்தாலும் சரி. வீணா கண்டதையும் கற்பனை பண்ணாம தூங்குங்க”

ரதிக்கு மெல்ல காலை வருடி தூங்க வைத்தாள் மிரு.

இரவெல்லாம் தூக்கம் வராமல் முண்டியபடியே இருந்தாள் மிரு. பயிற்சி இடத்தில் சொல்லிக் கொடுப்பது புரிந்தாலும், வேலை இடத்தில் மற்றவர்கள் அதையே கோடிங் அடிக்கும் போது தடுமாற்றமாக இருந்தது. பத்து பேர் கொண்ட அந்த டீமில் இவள் அங்கேயும் இங்கேயும் பந்தாடப்பட்டாள். யாருக்கும் இவளுக்கு விளக்கமளிக்க நேரமில்லை. எல்லோரும் தங்களது வேலையை முடிக்கவே அல்லாடினார்கள்.

குருவை இவள் ஆபிசில் பார்க்கவே இல்லை. வெளி நாடு போயிருப்பதாக மற்றவர்கள் பேசும் போது அறிந்துக் கொண்டாள். அவன் இல்லாதது மட்டும் தான் இவளுக்கு சந்தோசத்தைக் கொடுத்தது. அன்று துடுக்காக பேசி விட்டு வந்துவிட்டாலும், அடுத்துப் பார்க்கும் போது என்ன சொல்லுவானோ என லேசாக பயம் இருந்தது. அவன் இல்லை எனும் விஷயமே, டீமில் மற்றவர்கள் இவளை பாரமாக நினைத்ததைக் கூட தூசி போல ஒதுக்கித் தள்ளும் மனநிலையைக் கொடுத்தது.

காலையில் அசந்துவிட்டவள், அரக்கப்பறக்க கிளம்பி ஓடினாள். ரயில் பிடித்து பயிற்சி இடத்துக்கு சென்றாள். வேலை இடத்தில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களை எல்லாம் பயிற்சியாளரிடம் கேட்டு அவரை ஒரு வழி ஆக்கினாள். பயிற்சி முடிந்து, அவசரமாக சாப்பிட்டுவிட்டு ஆபிசுக்குப் போனாள்.

எல்லோரையும் பார்த்து புன்னகைத்தவாறே, தனது இருக்கைக்குப் போய் ட்ராவரில் பேக்கை வைத்துப் பூட்டினாள். பின் நோட்பேட், பேனா சகிதம் இன்று தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மலாய் பெண்ணை நோக்கி நாற்காலியை நகர்த்திக் கொண்டு போனாள்.

“ஹாய்!” என சொல்லி அவள் அருகில் அமர்ந்துக் கொண்டாள் மிரு. பதில் ஹாய் சொன்ன அந்தப் பெண், மற்றவர்களைவிட கொஞ்சம் கலகலப்பானவளாக இருந்தாள். ஒரு பள்ளி லைப்ரரிக்கு வேண்டிய சிஸ்டம் செய்வதாக சொன்னவள், இவளிடம் பேசிக்கொண்டே வேலையைப் பார்த்தாள்.

மிரு உண்ணிப்பாக கவனித்து நோட்ஸ் எடுத்துக் கொண்டாள். இவளுக்கு வந்த சந்தேகங்களையும் கேட்டுக் கொண்டாள். அவ்வப்பொழுது பெர்சனல் விஷயங்களையும் பேசினாள் அந்தப் பெண். மிரு பட்டும் படாமல் அதற்கு பதில் அளித்துக் கொண்டே, மீண்டும் வேலை சம்பந்தமாக பேச்சைத் திசைத் திருப்பி விடுவாள்.

இப்படியாக நேரம் போய் கொண்டிருக்க, அந்தப் பெண் திடீரென மெல்லிய குரலில் கேட்ட கேள்விக்கு இவள் பேயறைந்தது போல நின்றாள்.

“கம் அகேய்ன்!”

“அத பெரிசா ஆக்கறதுக்கு க்ரீம் ஏதாச்சும் யூஸ் பண்ணுறியான்னு கேட்டேன்!”

எதை கேட்கிறாள் என நன்றாக புரிந்தது மிருவுக்கு. சுருசுருவென கோபம் ஏறியது. ஆண்களின் பார்வையையாவது போய் தொலையட்டும் என சமாளிப்பவளுக்கு, இந்த மாதிரி பெண்களின் கேள்விகள் பெரும் கோபத்தைக் கொடுக்கும். என்னவோ இவளே இப்படியாக வேண்டும் என மருந்து மாத்திரை எடுப்பது போல கேட்கப்படும் கேள்விகளுக்கு நறுக்கென திருப்பிக் கொடுத்துவிடுவாள். வாய் வரை வந்த கோப வார்த்தைகளை பட்டென அடக்கினாள்.

“ஆபிஸ் என்வைரண்ட்மேண்ட் உனக்கு புதுசு. இங்க எடுத்தோம் கவிழ்த்தோம்னு இருக்கக் கூடாது! எதையும் யோசிச்சுப் பேசனும், யோசிச்சு செய்யனும். வார்த்தைகள கன்னாபின்னான்னு விடக்கூடாது! அண்டெர்ஸ்டேண்ட்?” மரியாதை மன்னாரு சொன்ன வார்த்தைகள் அசரீரியாக மண்டைக்குள் எதிரொலித்தன.

‘மரியாதை, மரியாதை, மரியாதைக்கெல்லாம் மரியாதை! மிரு அடக்கி வாசி’ தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அழகாய் சிரித்தாள் மிரு. இவள் சிரிக்கவும் அந்தப் பெண் இன்னும் ஆர்வமானாள்.

“சொல்லு, சொல்லு! என்ன க்ரீம்? நானும் வாங்கிக்கறேன்!”

“கேம்சாண் (கேமல்(ஒட்டகம்) சாணி) னு ஒரு க்ரீம் இருக்கு ஆன்லைன்ல. இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் நொம்ப நல்லது. வேணுமா? என்ன, ஒட்டகத்தோட சாணி போட்டு செய்யறாங்க இந்த க்ரீம். லைட்டா வாடை வரும்! அதெல்லாம் பார்த்தா முடியுமா?” என கேட்டு கண் அடித்தாள் மிரு.

முதலில் விழித்த அந்தப் பெண், பின் இவள் கிண்டல் அடிக்கிறாள் என புரிந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.

“சாரி, நான் அப்படி கேட்டது தப்புத்தான். ப்ரேண்ட்ஸ்?” என கேட்டு நிஜமாகவே நட்புடன் கைக்குலுக்கினாள் அந்தப் பெண் கைரீனா. இவளும் சிரிப்புடன் கைக் கொடுத்து அந்த ஆபிசில் ஒரு நண்பியைத் தேடிக் கொண்டாள்.

‘மன்னாரு சொன்ன மாதிரி மரியாதையா சிரிச்சுப் பேசவும், நமக்கு ஒரு ப்ரேண்ட் செட் ஆகிருச்சே! இதே தையதக்கான்னு குதிச்சிருந்தா நமக்குத்தானே ரூகீ(நட்டம் மலாயில்)!’

சிரிப்புடன் திரும்பியவள், தங்கள் எதிர்த்த மேசை அருகே இன்னொரு வெப் டிசைனருடன் பேசிக் கொண்டிருந்த குரு கண்ணில் பட்டான். அவனும் இவளைத் தான் பார்த்துக் கொண்டிந்தான். உதடு சிரிப்பில் துடிக்க, கண்கள் மின்னியது.

‘ஐயய்யோ! பேசனத கேட்டுட்டான் போலருக்கே! இவன் எப்ப வெளிநாட்டுல இருந்து வந்தான்னு தெரியலையே! இப்படி மானம் கப்பல் ஏறிப்போச்சே இவன் முன்னுக்கு’

அவமானத்தில் முகம் சிவக்க, அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்து வைத்தாள் மிரு. உன் சிரிப்பை ஏற்றுக் கொண்டேன் எனும் விதமாக தலையை லேசாக ஆட்டியவன், வேலை சம்பந்தமாக மற்றவனிடம் பேச ஆரம்பித்தான். இவளும் நோட் எடுப்பதாக பெயர் பண்ணிக்கொண்டு ரீனாவின் மோனிட்டர் உள்ளே தலையை விட்டுக் கொண்டாள்.

அங்கே வேலை செய்பவர்களுக்குப் பிறந்தநாளோ, இல்லை ஏதாவது விஷேச நாளாகவோ இருந்தால் மற்றவர்களுக்கு அவர்கள் சார்பாய் மாலை நேரத்தில் ஸ்நேக் வாங்கி காபி டைமில் விநியோகிப்பார்கள். எச் ஆர் டிபார்ட்மெண்டோ, அந்த மாதத்தில் பிறந்த நாள் உள்ளவர்களுக்கெல்லாம் சேர்த்து வைத்து ஒரு கேக் வாங்கி ஒன்றாக வெட்ட வைத்து சிறப்பு செய்வார்கள். குருவின் சார்பாக பிறந்தநாள் பரிசாக கிப்ட் வவுச்சர் கிடைக்கும்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்ட தினம் என அறிவித்தாள் ரீனா. ஒரு மணி நேரம் கேக் வெட்டி, சாப்பிட்டு , அரட்டை அடித்து என நேரம் நகரும் என சொன்னாள் அவள். வேலை முடித்தவர்கள் வீட்டுக்குப் போய் விடுவார்கள், முடிக்காதவர்கள் இருந்து முடித்து விட்டுப் போவார்கள். எப்படி இருந்தாலும் அந்த ஒரு மணி நேரம் ஜாலி நேரம் என சொல்லியவள் இவளையும் பேண்ட்ரிக்கு அழைத்தாள்.

புதிதாக வந்திருப்பதால் இவளுக்குத்தான் தயக்கமாக இருந்தது. ஆனாலும் ரீனாவின் வற்புறுத்தலில் அவளுடன் சென்றாள். இந்த மாதம் நான்கு பேருக்குப் பிறந்தநாளாக இருந்தது, அவர்கள் சார்பாக பலகாரங்கள், டோனாட், சிக்கன் நகேட், நூடுல்ஸ் என பேண்ட்ரியே கமகமத்தது.

குரு வந்ததும் எல்லோரும் பாட்டு பாடி, கேக் வெட்டும் செரமனியை இனிதே நடத்தினார்கள். எல்லோருக்கும் பேப்பர் தட்டில் கேக்கும் உணவும் வழங்கப்பட்டது. அதோடு சூடான பானங்களும், ஜூசும் கூட இருந்தது. ரீனா இவளுக்கும் ஒரு தட்டு எடுத்து வந்துக் கொடுத்தாள். தயக்கத்துடன் பெற்றுக் கொண்டாள் மிரு. எல்லோருக்கும் பேண்ட்ரியில் இடம் போதாது என்பதால், தட்டை அவரவர் இடத்துக்கே எடுத்துக் கொண்டு சென்றனர். சலசலத்தப்படி சாப்பிட்டுக் கொண்டே வேலையைப் பார்த்தார்கள். மிரு சாப்பிடும் முன் காபி எடுக்கலாம் என பேண்ட்ரிக்குப் போனாள். அங்கே அந்த பில்டிங்கை சுத்தம் செய்யும் பங்களாதேஷ்காரர் க்ளீன் செய்வதைப் பார்த்தவள், லேசாக புன்னகைத்தாள்.

“பய்யா, சுடா மாக்கான்?”(‘சாப்பிட்டு விட்டீர்களா?’ இங்கே பெரும்பாலும் பங்களதேஷ்காரர்களை பய்யா எனத்தான் அழைப்பார்கள். அவர்களும் நன்றாகவே மலாய் மொழியைப் பேசுவார்கள்).

இன்னும் இல்லை என சொன்னவரின் கண்ணில் பசியைப் பார்த்தாள் மிரு.

“வெய்ட் பய்யா” என சொன்னவள் தன் இடத்துக்குப் போய் தனது உணவுத் தட்டை எடுத்து வந்தாள்.

“சாப்பிடுங்க” என நீட்டினாள்.

அவர் தயங்கவும், கையைப் பிடித்துக் கொடுத்தாள். பேப்பர் கப்பில் காபியை எடுத்து அவருக்குக் கொடுத்தவள், சாப்பிட்டு விட்டு வேலையை செய்ய சொல்லிவிட்டுத் திரும்பினாள்.

பேண்ட்ரி கதவருகே அவளையேப் பார்த்தபடி நின்றிருந்தான் குரு.

“ஹலோ பாஸ்! பார்த்து நொம்ப நாள் ஆச்சு” அவளது அக்மார்க் அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தாள் மிரு.

“ஏன், என்னைப் பார்க்காம ஏங்கிப் போயிட்டியா மிரு?” சிரிப்புடன் கேட்டான் குரு.

‘கொழுப்பைப் பாரேன்! சும்மா ஒரு பேச்சுக்கு கேட்டா, ஓவரா சீன் போடறது’

“சேச்சே! அதெல்லாம் இல்ல பாஸ். ஏங்கிலாம் போல, நீங்க இருந்தா என் காது வீங்கில போயிருக்கும். சோ சந்தோஷமாத்தான் இருந்தேன்” மீண்டும் சிரித்து வைத்தாள்.

“மரியாதை மிரு மரியாதை!”

‘இப்போ மரியாதை இல்லாம என்னா சொல்லிட்டாங்க?’

“சாரி பாஸ். இனிமே கிண்டல் அடிக்க மாட்டேன்”

“சாரி நாட் அக்செப்டேட். உனக்கு பனிஸ்மேண்ட் இருக்கு”

‘ஐயோ! சம்பளத்தப் புடிச்சுக்குவானோ?’

“என்ன பனிஸ்மேண்ட் பாஸ்? ஆனாலும் இதெல்லாம் நியாயமே இல்ல”

கையில் இருந்த தட்டை நீட்டினான்.

“இந்த கேக்க சாப்பிட்டு முடி”

“இதான் பனீஸ்மேண்டா? குடுங்க!” அவனது ஸ்பூனைத் தூக்கிப் போட்டு விட்டு வேறு ஸ்பூனைத் தேடினாள் அவள். மற்றொரு கையில் இருந்த ஸ்பூனை அவனே நீட்டினான். கேக் இன்னும் தொடப்படாமல் தான் இருந்தது. ரசித்து, ருசித்து சாப்பிட்டவள்,

“பனிஸ்மேண்ட் முடிஞ்சது. ரொம்ப ஸ்வீட் பனிஸ்மேண்ட் பாஸ்” என கிண்டலடித்தப்படி அவனைத் தாண்டிப் போனாள்.

“மிரு”

“எஸ் பாஸ்!”

“நீ தூக்கிப் போட்ட ஸ்பூன்  நான் யூஸ் பண்ணாதது. இவ்வளவு நேரம் ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டயே, அந்த ஸ்பூன் தான் நான் யூஸ் பண்ணது. ஸ்வீட் பனிஸ்மேண்ட்ல?”

பேவென முழித்தாள் மிரு..

 

(தவிப்பான்)