km5
km5
5
“வாங்கோ சாப்பிட வாங்கோ” சாரங்கன் அழைத்துச் சென்றார்.
“மாப்பிள்ளை இலைக்கு கீழ கோலம் போடுங்கோ யாராவது” பரிமாறுபவர் குரல் கொடுக்க, அம்பு ஓடி வந்து கோலம் போட்டு இலை பரிமாறி அதில் நீர் தெளித்து வைத்தாள்.
யாரும் குறை சொல்ல முடியாத அளவு டிபன் இருந்தது. காசி அல்வா, நெய் பொங்கல், இட்லி சாம்பார், தேங்காய் சட்டினி, மெது வடை கூடவே சூடாக பில்டர் காபியும் வர,
அனைவரும் திருப்தியாக உண்டனர்.
அதற்குள் மேடையில் அனைத்தும் தயார் படுத்தியிருந்தனர். பங்கஜமும் தன பங்கு சீர்களை அடுக்கி வைத்து புடவையும் கூடவே வாங்கி வந்திருந்த மோதிரம், அதனோடு ஒரு நெக்லெஸ் டப்பாவும் இருக்க,
எதேர்ச்சையாக அந்தப் பக்கம் வந்த வைஷு இதை கவனித்தாள்.
‘அடடா இவா நம்ம அக்காக்கு நெக்லெஸ் போட்டா நாமளும் பதிலுக்கு மாப்பிள்ளைக்கு இப்போவே ஏதாவது போடணுமே. இல்லனா அசிங்கமா போய்டும்.’ மனதில் எண்ணிக்கொண்டே இந்த விஷயத்தை வச்சுவிடம் சொல்ல வச்சுவைத் தேடினாள்.
வச்சு தன் உறவினர்களிடம் சம்மந்தி வீட்டாரை அறிமுகம் செய்து கொண்டிருக்க, இப்போது போய் பேசுவது சரிப்பட்டு வராது என்று நினைத்தாள்.
‘இதுல யோசிக்க ஒண்ணுமே இல்ல வைஷு. எப்படியும் மாப்பிள்ளைக்கு நாம செயின் பிரேஸ்லெட் இதெல்லாம் கல்யாணத்துக்கு போடத் தான் போறோம். அதுல ஒண்ணாவது இப்போ போட்டா தப்பில்லை.’ சட்டென யோசித்தவள் கையில் இருந்த வாட்ச்சைப் பார்க்க,
இன்னும் நிச்சயம் ஆரம்பிக்க அரை மணி நேரமே இருந்தது. உடனே தன் கை பையை தேடி எடுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.
அவளுடைய சம்பளம் முழுதும் அப்படியே சேமிப்பில் தான் இருந்தது. அந்த தைரியத்தில் நகை வாங்க உடனே கிளம்பினாள்.
மண்டபம் இருந்த இடமும் மக்கள் அதிகமாக நடமாடும் இடம் என்பதால் அங்கேயே நகைக் கடை இருக்கவும் வாய்ப்புள்ளது என்பது ஊர்ஜிதம் தான்.
சற்று தூரம் நடந்து செல்ல, அங்கே கடைகள் நிறைய தென் படவும், எப்படியும் ஏரியாவுக்கு நாலு நகைக் கடை இருக்கும் காலம் என்பதால் அதற்குள் நுழைந்தாள்.
அவள் எதிர்ப்பார்த்த படி, பிரபலமான நகைக் கடையே கண்ணில் பட்டது.
உள்ளே புகுந்து உடனே ஒரு ப்ரேஸ்லெட்டை செலக்ட் செய்து பில் போடச் சொன்னாள்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் மண்டபத்தில் இருந்தாள்.
அவள் எங்கிருந்தோ வருவதைப் பார்த்த சாரங்கன் அவளை அழைத்து கேட்க,
விவரத்தை சொன்னாள்.
“என்ன வைஷு இது. இப்போ இல்லனா கல்யாணத்துக்கு போட போறோம். அதுக்காக இப்படி அவசர அவசரமா போவியா. என்ன பொண்ணு நீ. சரி வா அம்மாகிட்ட சொல்லு” அவளையும் அழைத்துச் செல்ல,
“அப்பா இப்போல்லாம் சொல்ல வேண்டாம். அம்மா டென்சன் ஆவா. ஆத்துக்கு போய் பேசிக்கலாம். மொதல்ல இதை மாப்பிளை மனைல உக்காந்ததும் போட்டு விடு.” அவரது கையில் அந்த நகையைக் கொடுத்து விட்டு எப்போதும் போல அனுவுடன் நின்று கொண்டாள்.
வாய்த்தியார் வந்து மாப்பிள்ளையையும் பொன்னையும் அழைத்து , சுற்றம் சூழ நிற்க, அவர்களை விழுந்து வணங்குமாறு சொல்ல,
அனுவும் ரகுவும் முதல் முறை அருகே நின்றனர். பின் பொதுவாக அனைவரையும் வணங்கி அமர்ந்தனர்.
முதலில் மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து பெண்ணுக்கு சந்தனம் மஞ்சள் பூசச் சொல்ல,
பங்கஜம் தன்னுடைய அரக்கு நிற மடிசாரை நன்றாக இன்னொரு முறை இழுத்துச் சொருகிக் கொண்டு , கையில் இருந்த நான்கு தங்க வளையல்களை எல்லோருக்கும் முன்பு ஒரு முறை சுழற்றி கையோடு இறுக்கிக் கொள்ள,
‘இது சரியான அல்டாப்பு சிங்காரியா இருக்கும் போல’ வைஷு தன்னுடைய பாஷையில் பல்கலைக் கடித்தாள்.
வெள்ளித் தட்டில் சிறிய வெள்ளிக்கு கிண்ணங்களில் சந்தனம் குங்குமம் நிரப்பி இருக்க, அதை கையில் எடுத்துக் கொண்டு, அனுவிற்கு வைத்துவிட்டாள்.
பின் அனுவிற்கு வாங்கி வைத்திருந்த நகை பெட்டியைத் திறந்து அழகான வெள்ளைக் கல் ஜொலிக்கும் அந்த தங்க அட்டிகையை அவளுக்கு அணிவித்தாள்.
இது அவளுடைய லிஸ்டில் இல்லாத ஒன்று. அன்று காலையில் தான் ரகு கடைக்குச் சென்று யாருக்கும் சொல்லாமல் வாங்கி வந்திருந்தான்.
இது போன்ற கடைகளுக்கு சென்றே அறியாதவன், இன்று முதல் முறை சென்றது பங்கஜத்திற்கு ஆச்சரியம் தான்.
“அவன் வருங்கால ஆம்படையாளுக்கு அவன் வாங்கறான்.” வேணு அவனுக்கு சப்போர்ட் செய்ய,
“அம்மா வாங்கணும் னு தோணித்து வாங்கிட்டேன். இது தப்பா” ரகு அவன் நினைத்தை சொல்ல,
இருவருக்கும் சேர்த்து வேணுவைத் தான் திட்டினாள்.
ரகு சென்ற பிறகு,
“பாருங்கோ இப்போவே பொண்டாட்டி பக்கம் போக ஆரபிச்சுட்டான். இன்னும் என்ன என்ன பண்ணுவானோ” வேணுவை பிடித்துக் கொண்டாள்.
“பங்கஜம், நகை தானே வாங்கினான். அதுல என்ன தப்பு.” நியாயவாதி போல் பேச,
“நீங்க ஒரு நாளாவது இப்படி செஞ்சிருப்பேளா?” தாடையை இடித்துக் கொள்ள,
“சம்பளக் கவர் மொத்தமா உன் கைல கொடுத்துடறேன். எனக்கே கை செலவுக்கு நீ தான் தரணும். உனக்கு வேண்டியதை நீ வாங்கிண்ட, இதுல நான் என்னத்த செய்ய” சந்தடி சாக்கில் அவளை வாரி விட்டு சென்றார்.
“பாப்போம் அவா ஆத்துல என்ன போடறான்னு. ஒரு மோதிரம் மட்டும் தான். மிச்சம் கல்யாணத்துலனு சொல்ல போறா பாருங்கோ” தன்னிடம் கேட்காமல் ரகு வாங்கியது அவளுக்கு பிடிக்கவில்லை.
ரகு கேட்டிருந்தால் அவளே கூட சென்று வாங்கியிருப்பாள் தான். ஆனால் இதில் அவள் பங்கு இல்லையென்பதால் வந்த காட்டம்.
அந்த நகையை இப்போது அவளே அனுவிற்கு அணிவிக்கும்படி ஆனது.
எல்லோர் முன்னிலையிலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், அவளே விருப்பப்பட்டு செய்வது போல நடந்துகொண்டாள்.
அத்துடன் புடவையைக் கொடுத்து மாற்றிக் கொண்டு வரச் சொல்ல,
அனுவிற்கு நகையைப் போட்டு விடுவதைப் பார்த்த வச்சு,
“கடவுளே நாம எதுவும் வாங்காத போய்ட்டோமே” என வைஷுவிடம் புலம்பினாள்.
வைஷு , “டோன்ட் ஒர்ரி மா” விஷயத்தை சொல்வதற்குள் அனுவை அழைத்துக் கொண்டு போகச் சொல்ல, அவளுடன் சென்றுவிட்டாள்.
அடுத்து மாப்பிள்ளைக்கு பெண் வீட்டில் சந்தனம் வைத்து அத்துடன் சாரங்கன் , வைஷு வாங்கி வந்த பிரெஸ்லெட்டை போட்டு விட, வச்சுவுக்குமே ஆச்சரியம் தான்.
‘ஏது இது? எப்படி வந்தது?’ என்ற கேள்விகள் குடைந்தாலும் சபையில் காட்டிக்கொள்ளாமல் இருந்தாள்.
ரகுவிற்கு புது பேண்ட் சட்டையைக் கொடுத்து,
“அனு தான் செலெக்க்ஷன்” என்று சொல்லி சிரித்தார் சாரங்கன்.
ரகுவும் சிரித்து விட்டு அதைப் பெற்றுக் கொண்டு போக,
வேணு பங்கஜத்தைப் பார்த்தார்.
“என்னமோ ஒன்னும் பண்ண மாட்டான்னு சொன்ன, இப்போ பாரு நம்ம புள்ளைக்கு நகை போட்டிருக்கா. ரகு மட்டும் காத்தால இந்த நகையை வாங்கலன்னா நம்ம மானம் தான் போயிருக்கும்” கதைக்க கடிக்க,
“ஆமா மாப்பிள்ளைக்கு போடணும் அதான் போட்ருக்கா. இதுல என்ன ஜம்பப் படுத்தறேள்.” முறைத்து பின் முகத்தை சரி செய்தாள்.
அவர்கள் பேசிக்கொண்டிருப்பதை எதேர்ச்சையாக வெளியே வந்த வைஷு கேட்டுவிட,
‘ ஓ! எங்காத்தா பத்தி தான் பேசறேளா! எங்காத்துல சொன்னா எல்லாரும் அட்ஜஸ்ட் பண்ணிண்டு போகணும்னு தான் சொல்லுவா. அதுனால சொல்ல மாட்டேன். பங்கஜம் உன்னை நானே டீல் பண்றேன். இரு!’ மூளையில் திட்டம் போட ஆரம்பித்தாள்.
“மாமி! உங்கள கூப்படறா பாருங்கோ!” வாத்தியார் அழைத்ததை சொல்ல,
ஒரு நொடி முகம் வியர்த்தது பங்கஜத்திற்கு.
மாப்பிள்ளை பெண் இருவரும் வந்தவுடன், மாமாக்கள் வந்து மாலை அணிவிக்க, பின் லக்கின பத்திரிக்கையை எழுதினார் வாத்தியார்.
ரகு அனுவைப் பார்க்க, அவள் நாணத்தில் அவனை ஏறிட்டும் பார்க்காமல் தரையைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“அனு” சற்று அவளை நெருங்கி அமர்ந்து யாருக்கும் கேட்காமல் அழைத்தான்.
நிமிராமலே “ம்ம்” என்றாள்.
“ரொம்ப அழகா இருக்க! இன்னிக்கே என்கூட கூட்டிண்டு போகப் போறேன்” யாரும் அறியாமல் அவள் விரலைத் தொட,
கையை எடுத்துக் கொண்டாள் அனு.
“போன் ல பேசற இங்க பேசமாட்டியா”
“எல்லாரும் பாக்கறா” உதடு அசையாமல் பேசினாள்.
“ம்ம். இந்த வெட்கம் தான் என்னை இழுக்குது” மேலும் அவளை வெட்கப் பட வைத்தான்.
“ஹே ஒரு நிமிஷம்.” ரகு தன கைபேசி எடுத்து அதில் அரவிந்துக்கு வீடியோ கால் செய்தான்.
எடுத்தவுடன் “ஹே ப்ரோ கங்க்ராட்ஸ். ஹாப்பி டு சி யு லைக் திஸ் டா”
“தேங்க்ஸ் டா. இரு அனு கிட்ட தரேன்.” அனுவிடம் போனைக் கொடுக்க,
“கங்க்ராட்ஸ் மன்னி.” அரவிந்த் சற்று மரியாதையாகப் பேச,
“தேங்க்ஸ். உங்கள பத்தி அடிக்கடி பேசுவார். கல்யாணத்துக்கு சீக்கிரம் வந்துடனும்” அனு அன்புக் கட்டளையிட ,
“கண்டிப்பா. நான் இல்லாமலா. மோதிரம் மாத்தியாச்சா ?” நினைவு வந்தவனாக கேட்க,
“இல்ல இனிமே தான்”
“ஐ வான்ட் டூ சி தட்.”
“உங்க அண்ணா கிட்ட கொடுக்கறேன்” அனு ரகுவிடம் போனைக் கொடுக்க,
அந்த நேரம் , அழகிய தட்டில் சிவப்பு ரோஜாக்களை நிரப்பி அதில் இரண்டு மோதிரங்களை வைத்து எடுத்து வந்தாள் வைஷ்ணவி.
“வைஷு , வீடியோ கால் போய்ட்டு இருக்கு. மோதிரம் மாத்தறத கொஞ்சம் காட்டு” யாரென்று சொல்லாமல் ரகு கொடுத்துவிட,
“சரி முதல்ல ரிங்க்ஸ் எடுத்துக்கோங்க” தட்டை நீட்டி அவர்களிடம் மோதிரத்தை கொடுத்துவிட்டு போனைப் பெற்றுக் கொண்டாள்.
“ஹாய். ஒரு நிமிஷம் ” யாரென சரியாகப் பார்க்காமல் , பின்னால் இருக்கும் கேமிரா வை மாற்றினாள்.
அவளும் கேமிராவைக் காட்டிக்கொண்டு தானும் அவர்களைக் காண,
அனைவர் முன்னிலையிலும் இப்போது தைரியமாக அவளின் கையைப் பிடித்து மோதிரம் அணிவித்தான் ரகுராம்.
அவளும் அவனது கரம் பற்றி மோதிரம் போட,
சுற்றி இருந்த அனைவரும் அட்சதை மற்றும் பூக்கள் தூவி அவர்களை வாழ்த்தினர்.
“குட்டீஸ் கமான்” வைஷு மேலே பார்த்து குரல் கொடுக்க, அந்த நேரம் கையில் இருந்த கேமிராவில் அவளது கை பட்டு , முன்னால் இருக்கும் அவள் தெரிந்து கொண்டிருந்தாள்.
மாடியில் இவர்களுக்கு நேராக நின்று கொண்டிருந்த சில வாண்டுகள் பூக்கூடையை இருவர் மேலும் கவிழ்த்து விட்டனர்.
மல்லிகை ரோஜா என பலவகை பூக்கள் அவர்களை நனைத்தது.
“ஹே! தேங்க்ஸ் குட்டீஸ்” என கூச்சல்லிட்டு போனை ரகுவிடம் கொடுத்தாள்.
ரகுவும் அதை அணைக்காமல் அப்படியே வைத்திருந்தான்.
வாழ்த்துக்கள் கூறினாள் வைஷு.
“அத்திம்பேர்னு இன்னிக்கு அபீஷியால டிக்ளர் பண்ணியாச்சு. இனி அனுவுக்கு நீங்க தான் பொறுப்பு.” ரகுவை வம்பிழுத்தாள்.
“சரிங்க” என அவனும் சிரிக்க,
“அவளுக்கு ஏதாவது ஒன்னு னா நான் அப்பறம் உங்க வீட்டுக்கு வந்து பாத்துக்க வேண்டியதா இருக்கும்”
“எப்படி?”
” உங்க ஆஸ்ட்ரேலியா தம்பிய கதற கதற தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிட வேண்டியது தான் . ஹா ஹா. சும்மா சொன்னேன் ” என்று விட்டு வச்சு அழைத்ததும் ஓடிவிட்டாள்.
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த அர்விந்த் அங்கே ஒற்றைக் கையைத் தூக்கி “ஹூ ஹூ” என கத்தினான். காரணம் வைஷு இத்தனை அழகாய் இருப்பாள் என அவன் எதிர்பார்க்க வில்லை.
போனை வைத்தவன் , “அழகும் இருக்கு திமிரும் இருக்கு. பரவால்ல நீ அழகா இருக்கறதால அந்த திமிரை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். நீ என்னை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்றியா. வரேன் டி” போனைப் பார்த்து சிரித்தான்.
அதற்குள் இரவாகிவிட,
மணமக்களை இப்போது சேர்ந்து அமர வைத்து உணவு பரிமாறினர்.
அனைவரும் உண்டு வர,
“எல்லாம் திருப்தியா இருந்ததா மாமி?!” சாரங்கனும் வச்சுவும் ராகுவின் பெற்றோரைக் கேட்க,
வைஷுவும் அங்கே ஆஜரானாள்.
“ஒன்னும் குறை இல்லை நன்னா இருந்தது” வேணு வாய் விட,
“சாப்பாட்டுக்கு யாரை சொன்னேள். கல்யாணத்துக்கு இவா வேண்டாம். அப்பளம் கொஞ்சம் எண்ணையா இருந்தது.
ஸ்வீட் கூட அத்தனை ருசி இல்ல”
குறை சொல்வது சம்மந்தி குணம் என்று எப்போதோ எங்கோ கேட்டிருக்கிறாள் வைஷு.
‘அதற்காக இப்படியா? ரெண்டு அப்பளம் ஸ்வீட் கூட ரெண்டு மூணு சாப்டுட்டு இப்போ இப்படி சொல்றா பாரு.விட மாட்டேன்’
“ஓ அதுனால தான் நீங்க ரெண்டு மூணு வாங்கி சாப்பிட்டு பாத்தேளா?!” நறுக்கென கேட்டுவிட்டாள்.
வச்சுவும் சாரங்கனும் அவளை பார்க்க,
பங்கஜம் என்ன சொல்வதென்று விழித்தாள்.
வச்சு அதற்குள் நிலைமையை சமாளித்தாள்.
“நாங்க வேற ஏற்பாடு பண்றோம் மாமி. வேற ஏதாவது இருந்தா சொல்லுங்கோ.” பணிந்து வச்சு கேட்க,
“கல்யாணத்த கான்டராக்ட் காரன் கிட்ட தான குடுப்பேள்?” மீண்டும் அதிகாரத் தொனியில் கேட்க,
வச்சு உடனே, “இல்ல மாமி. ஏங்காதது பக்கம் மனுஷா ஜாஸ்தி. அதுவும் எல்லாரும் ரொம்ப நன்னா எல்லா வேலையும் இழுத்துப் போட்டுண்டு செய்வா. நாங்களே எல்லாம் பண்ணிடுவோம். பட்சணம் லேந்து பந்தி பரிமாறறது வரை நாங்களே பண்ணிடுவோம்.
அது தான் கல்யாணம் மாதிரி இருக்கும். கான்டராக்ட் கரண் கிட்ட குடுத்தா நம்மாத்து கல்யாணுத்துல நாமளே மூனா மனுஷா மாதிரி தான் நிப்போம்.”
அவள் கூறியது ஏனோ சற்று பங்கஜத்தை அடித்தது போல இருந்தது. அதனால்,
“அப்டினா சேரி. எங்காத்தாவா எல்லாருக்கும் பட்சணம் கொடுக்கணும். எல்லாத்துலயும் எண்ணிக்கை அதிகமா பண்ணிக்கோங்கோ.
அப்புறம் இந்த ரிசெப்ஷன் எல்லாம் இப்போ பேஷன் ஆயிடுத்து. அதெல்லாம் வேண்டாம். கல்யாணம் ரொம்ப ட்ரெடிஷனலா இருக்கணும். ஜானவாசம் வெச்சிடுங்கோ. அது தான் அழகு.”
“நானே சொல்லணும் னு நெனச்சேன். நீங்க சொல்லிட்டேள்” வைஷு சிரித்தாள்.
பங்கஜம் அவளை பார்க்க,
“எல்லா கல்யாணனும் நம்ம முறையை மறந்துட்டு பண்றா. அது நன்னாவுமில்லை. அந்தக் காலத்து கல்யாணம் மாதிரி எல்லாரும் ஒண்ணா கூடி நின்னு பண்னனும். அப்போ தான் கல்யாண பீல் வரும்.” விவரிக்க,
“சரியா சொன்ன மா. கலாட்டாவும் கிண்டலுமா இருக்கும்.” வேணு அவளோடு சேர்ந்து கொண்டார்.
அனுவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த ரகு. அவளை பிரிய முடியாமல் கிளம்பினான்.
எல்லாம் பேசி முடிவு செய்து தாம்பூலப் பையை பெற்றுக் கொண்டு கிளம்பினர் சம்மந்தி வீட்டார்.
ருக்குவுக்கு அம்புவும் அனைவர்க்கும் பார்த்து பார்த்து எடுத்துக் கொடுத்தனர்.
அவர்கள் சென்ற பின், பெண் வீட்டார் அனைவரும் நிம்மதியாக அமர்ந்தனர்.
“அனு கல்யாணம் ஒரு களை கட்டும் போலிருக்கு. ஒன் வீக் லீவ் சொல்லிட போறேன் “அம்புவின் மகன் கண்ணன் சொல்ல,
“ஆமா. ஹேமா க்கா கல்யாணம் மாதிரி மொதல் நாள் நைட் மாப்பிள்ளை ஆத்து பசங்களயும் சேத்துண்டு அந்தாக்ஷரி அப்புறம் மத்த கேம்ஸ் எல்லாம் ஆடனும்” வச்சுவின் அண்ணன் மகன் கூற,
“டேய்! இவன் எதுக்கு ப்ளான் பண்றான் பாரு. டேய் உனக்கு அங்க ஒரு பிகரும் கிடைக்காது” அத்தை மகள் ஜானகி சொல்ல,
“உனக்கு ஏன் டி பொறாமை.” கண்ணன் சிரிக்க,
“ஆமா எனக்கு பொறாமை. எனக்கும் ஆள் இருக்கு”
“யாரு அந்த கோவில்ல நீ போறப்ப உனக்கு சடாரி வைப்பாரே அந்த மாமா தான” கேலி அதிகரிக்க,
“போங்கடா ப்ராடுங்களா. உங்களுக்கு ஒன்னும் செட் ஆக கூடாதுன்னு நான் பெருமாள வேண்டிக்கறேன்”
“சொல்லிட்டாடா பத்தினி. பலிச்சுட போகுது”
இப்படி இளமை பட்டாளங்கள் தனியாக மீட்டிங் போட்டு பேசிக்கொண்டிருக்க,
பெரிசுகள் யார் யார் எப்படி என்று மாப்பிள்ளை வீடு பற்றிய யூகத்தை சொல்ல,
வைஷு மண்டபத்தை காலி செய்ய வச்சுவிற்கு உதவ,
அனு கனவுகளில் மிளிர்ந்தாள்.