KN7
KN7
காதல் நீலாம்பரி 7
__________________________
அன்னிக்கு மனு ஏக கடுப்புல இருந்தா.. அம்மா கூட எல்லாத்துக்கும் ஏட்டிக்குப் போட்டியா பேசி கச்சை கட்டிட்டு இருந்தா.. வீட்டுக்கு முன் பக்கம் பத்துக்குப் பதினாறுல கொஞ்சம் எடத்தத் தடுத்து மறைச்சு அவ அப்பா டீக் கடை வச்சிருந்தார்.. அவங்கம்மா வீட்லயே மெஸ் பாதிரி வச்சிருந்தாங்க..
பெருந்துறைக்கு சிப்காட், பனியன் கம்பனி வந்த பின்னால வெளியூர்ல இருந்து வந்து தங்கி வேலை செய்யற பசங்களும் நிறைய இருந்தாங்க.. வாடகை கணிசமா ஏறினதோட வியாபாரங்களும் விருத்தி அடைஞ்சுது.. இத உத்துக் கவனிச்ச வினுவோட அம்மா கார்த்திகேயணி சேச்சி நாயரோட. டீக் கடைக்கு ரெகுலரா வர்ற பசங்க அஞ்சு பேருக்காக வீட்லயே மெஸ் ஆரம்பிச்சாங்க..
காலை மாலை டிபன்,மதியம் சாப்பாடுன்னு மூணு வேளைக்கும் அறுவது ரூவா வீதம் மாசம் 1800 அட்வான்ஸா குடுக்கறவங்களுக்கு சமைச்சுப் போட்டாங்க… அஞ்சு பேருக்காக ஆரம்பபிக்கப் பட்ட மெஸ் இன்னிக்கு அம்பது பேரோட பசிய ஆத்திக்கிட்டிருக்கு..
கார்த்தி சேச்சி நல்ல உழைப்பாளி… அஞ்சு மணிக்கு எந்திரிந்து அடுப்பப் பத்த வெச்சாங்கன்னா ராத்திரி பத்து வரைக்கும் அங்கியே தான் கெடப்பாங்க..அம்பது பேருக்கும் சேச்சி ஒருத்தரே சமைச்சு பரிமாறி, மதியத்துக்கு.பார்சலும் கட்டிக் குடுத்து விடுவாங்க..ஓய்வுங்கறது எப்பவும் கெடையாது.. வீட்டுக்கு விருந்தினர்களே வந்தாலும் அவங்க கிட்ட பேச்சுக் குடுத்துக்கிட்டே வேலையப் பார்ப்பாங்களே தவிர சேச்சி அஞ்சு நிமிசம் சும்மா நின்னு பேச்சுக் குடுத்ததா சரித்திரம் கிடையாது..
அது போக டீக் கடைக்குத் தேவையான வடை,போண்டா,பஜ்ஜி, பக்கடா,மிக்சர்னு எல்லாமே சேச்சியோட தயாரிப்புகள் தான்.. கொஞ்சமா செஞ்சாலும் டேஸ்டா செய்யறதால தட்டுல வச்ச உடனே அதனோட சூடு ஆறிப் போகறதுக்குள்ள வித்து தட்டு காலியாயிடும்.. அதனால, ஒரு நாள்ல பதினெட்டு மணி நேரம் வேலை.. வேலை.. வேலை தான்.. அவங்களுக்கு ஓய்வுங்கறதே ஒரு வேலை முடிஞ்சு அடுத்த வேலைக்கு தாவறது தான்!
மனுவோட அப்பா கேசவன் குட்டி நாயர்… பல மலை ஏறின குருசாமி..!
கார்த்திகை ஒண்ணாம் தேதியே மாலை போட்டுக்குவார்… தை முதல் வாரம் படி பூஜையன்னிக்கு சாமி தரிசனம் முடிஞ்சு வந்து தான் மாவையக் கழட்டுவார்.. வருசா வருசம் ஒரு பஸ் நிறைய மாலை போட்ட சாமிகள கூட்டிக்கிட்டு சபரி.மலைக்குப் போவார்..
மாலை போட்டிருக்கற நாட்கள்ல வாரா வாரம் புதன்,ஞாயிறுகள்ல கேசவன் நாயர் நைட்ல விசேஷ பூஜையும்,பஜனையும் நடத்தறதோட வந்திருக்கறவங்களுக்கு அன்ன தானமும் செய்வார்.. இதுக்கு வேண்டியத் செய்யற வேலையும் சேச்சி தலைல தான் விடியும்.. ஏறக்குறைய அம்பது பேருக்குத் தேவையானத அலட்டிக்காம செஞ்சு முடிப்பார்..
கேசரியோ,பொங்கலோ ஒரு இனிப்பு, வெண் பொங்கல்,இட்லி, தோசை,அதுக்குத் தேவையான சட்னி,சாம்பார் எல்லாமே பத்து மணிக்கு டான்னு தயாராயிடும்.. தயார் பண்ணிட்டா வேலை முடிஞ்சதுன்னு அர்த்தமா? வீடு சின்னதுங்கறதால ஒரே பந்தில எல்லாரையும் சாப்பிட வெச்சு கிளப்பிட முடியாது.. பத்துப் பத்து பேரா உக்கார வெச்சு அஞ்சு தடவ எல்லாத்தையும் பரிமாறணும்..
மனு அப்ப ஏழாவது படிச்சிக்கிட்டருந்தா.. சமையல் வேலைய அப்பத் தான் கத்துக்க ஆரம்பிச்சிருந்தா.. கூட மாட அம்மாவுக்கு உதவி செய்வா.. ஆனா,இன்னிக்கு ஏகப்பட்ட வருத்தம் கோவம் இருந்ததால எந்த வேலையும் செய்யாம அம்மா கூட வாக்கு வாதம் பண்ணிட்டிருந்தா..
மனுவோட கோவத்துக்கும் நியாயமான காரணமுண்டு.. கேசவன் நாயர் அவ ஆறு மாசக் குழந்தையா தவழும் போதே மாலை போட்டு இரு முடி கட்டி மலைக்கு தூக்கிட்டுப் போனார்.. அப்ப ஆரம்பிச்சு இன்னிய வரைக்கும் மண்டல பூஜை,சித்திரை கனின்னு இருபது தடவ மலையேறி வந்தவ..
மூணு வருசத்துக்கு முன்ன பதினாறாவது தடவையா சித்திரைக் கனிக்குப் போன போது தென்னங் கன்னு கொண்டு போயி நட்டு குருசாமியும் ஆனவ.. புதன்,ஞாயிறு பூஜையின் போது சரணஞ் சொல்லி பஜனையப்ப பாட்டுப் பாடி அமர்க்களப் படுத்திடுவா.. இருவது தடவ இரு முடி கட்டி மலையேறினதோட தென்னங் கன்னு நட்டு குருசாமியும் ஆயிட்ட மனுவத் தான் இந்த வருசம் மாலை போடக் கூடாதுன்னு தடுக்கறாங்க.. அதுக்காவத் தான் வாக்கு வாதமும்,கோவமும்!
“அடியே.. சொன்னாக் கேளு.. இனிமே மாலை போடக் கூடாதுன்னு உங்கப்பா உறுதியாச் சொல்லிட்டார்..”
“அதான் ஏன்னு கேக்கறேன்?”
“பதினொண்ணு முடிஞ்சு பன்னெண்டு நடக்கைல எப்படிடி மாலை போட முடியும்.. ?இப்பவே பாஞ்சு வயசுப் புள்ளையாட்டம் மதமதன்னு வளந்து நிக்கற..”
“இதுக்கும் நான் கோயிலுக்குப் போறதுக்கும் என்னம்மா சம்பந்தம்”
“எண்ட குருவாயூரப்பா.. மாலை போட்ட பின்னால தடக்குனு நீ பெரியவளானா உன்னோட சேந்து உங்கப்பனும் மாலை கழட்ட வேண்டி வரும்டி.. அவர நம்பி அம்பது சாமிங்க வேற மாலை போட்டிருக்காங்கறது தெரியுமில்ல?”
“இப்ப நான் ஏஜ்க்கு வந்துட்டா என்ன பண்ணுவீங்களாம்?”
“சத்தமில்லாம தலைக்குத் தண்ணிய ஊத்தி கூடவே வந்து பாலக் காட்டுல.பாட்டி வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன்.. அப்பா சபரி மலை போயிட்டு வந்து மாலையக் கழட்டின பின்னால தான் உன்னைய இங்க கூட்டிட்டு வருவேன்”
“அம்மா… ப்ளீஸ்மா.. இந்த ஒரு வருசம் மட்டும் போயிட்டு வந்துடறனே? அப்பா நீ சொன்னா கேப்பார்.. என் செல்ல அம்மால்ல?”
கட்டிப் புடிச்சு கெஞ்சற மனுவப் பாக்க சேச்சிக்கு பரிதாபமாத் தான் இருந்துச்சு.ஆனா,இந்த டைம்ல மால போட்டு எதாச்சும் ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆச்சுன்னா பெரிய தர்ம சங்கடமாயிடுமே? எத்தன பேருக்கு பதில் சொல்றது?
“புரிஞ்சுக்க மனு.. நீ ஒண்ணும் சின்னப் புள்ளையில்ல.. ஐயப்ப சாமி விசயத்துல விளையாடக் கூடாது.. எந்திரிச்சு வேலையக் கவனி.. இந்தா.. இந்த வடையக் கொண்டு போயி உங்கப்பா கிட்ட குடுத்துட்டு வா.. சூடு ஆறிடும்”
“போம்மா.. நீயே கொண்டு போயி குடுத்துட்டு வா.. ஏம்மா ஆண்டவனுக்கு இத்தன ஓர வஞ்சனை.. லேடீஸ்க்கு மட்டும் மென்சஸ்,டெலிவரின்னு குடுத்தவன் ஏன் ஜென்ஸ்க்கு இதுல ஒண்ணையும் குடுக்கலை? ஆண்டவனா இருந்தாலும் தான் ஆம்பளைங்கற ஈகோவக் காட்டிட்டானோ?”
“இத பாரு மனு.. துக்கிரித் தனமா பேசாத.. எல்லாத்தையும் காரணத்தோட தான் பெரியவங்க சொல்லி வச்சுட்டுப் போயிருக்காங்க”
மனுவுக்கு இருந்த கோவத்துல அலட்சியமா உதட்டச் சுளிச்சு சொன்னா…
“பெரியவங்க….!! இந்தப் பெரியவங்களும் ஆண் மார்கள் தானே? அவங்க மட்டும் நமக்குச் சாதகமா சொல்லிடுவாங்களா என்ன?”
“விதண்டா வாதம் பண்ணி என் வேலையக் கெடுக்காத.. உனக்குச் சொல்லிப் புரிய வெக்க அந்த ஐயப்பன் தான் மனுச ரூபம் எடுத்து நேர்ல வரணும்'”
சேச்சி அதச் சொல்லி முடிச்ச அதே நேரத்துல தான் போதையால சிவந்த கண்ணும் வாயில சிகரெட்டுமா சக்தி உள்ள நழைஞ்சான்..
மனு கல கலன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னா..
“இதோ உங்க ஐயப்பன் வந்துட்டார்..
மப்புல தன்னோட புலி வாகனத்த எங்கியோ கோட்டை விட்டுட்டு நடராஜா சர்வீஸ்ல கைல சிகரெட்டும் வாய்ல பொகையுமா வர்றாரு பாருங்க”
சக்திக்கு முழுசா விவரம் புரியலேன்னாலும் மனு தன்ன ஏதோ சொல்லி கிண்டல் பண்றது மட்டும் அவனுக்குப் புரிய எப்பவும் போல சுர்ருன்னு கோவம் உச்சி மண்டை வரைக்கும் ஏற அவள மொறச்சுப் பாத்தான்
ரெண்டு பேருக்குள்ள அறிமுகமோ, பேச்சு வார்த்தையோ இல்லேன்னாலும் ஒருத்தரை ஒருத்தர் தெரியும்.. நாயரோட டீக் கடைக்கு எதிர் பக்கம் தான் அவனோட நிதி நிறுவனம் இருந்ததால மனுவுக்கு அவன நல்லாவே தெரியும்..
மதியம் பன்னெண்டு மணிக்கு போண்டோவோ, பஜ்ஜியோ கொண்டு போகைல அப்பாவோட டீக் கடை உள் ரூம்ல உக்காந்து சரக்கடிச்சுக்கிட்டிருக்கறவன வெறுப்பா பாத்துட்டு வருவா.. பத்தும் பத்தாததுக்கு தட்ட மேல வச்சதும் அவ அப்பா சூடா ரெண்டு போண்டாவையோ, பஜ்ஜியவோ பேப்பர்ல வச்சு ‘உள்ள சக்தி தம்பி கிட்ட குடுத்துட்டு வா’ன்னு விரட்டி அவ கோவத்த இன்னும் அதிகமாக்குவார்..
அவ தயக்கமும் வெறுப்புமா உள்ள போகைல ஒரு கைல பொகையற சிகரெட்டும் இன்னொரு கைல பிராந்திக் கிளாசுமா உக்காந்திருக்கறவன பாக்க ஆத்திரமா வரும்..ஆனா, என்ன பண்ண? அப்பாவோட குளோஸ் பிரண்ட்.. அவசரத்துக்கு பண உதவியும் செய்யறவன்.. அவன என்ன சொன்னாலும் அப்பா தன் மேல தான் பாய்வார்னு தெரிஞ்சதால அமைதியா உணர்ச்சிகள வெளிக் காட்டிக்காம வெச்சுட்டு வந்துடுவா..
எத்தனையோ தடவ அவ அப்படி வச்சுட்டு வந்தும் சக்தி ஒரு தடவ கூட பார்மாலிட்டிக்குத் தேங்க்ஸ் சொன்னதில்லைங்கறதுல ஏற்கனவே கோவத்துல இருந்தவளுக்கு அப்ப’ஐயப்பனே மனுச ரூபமெடுத்துத வந்து தான் உனக்குப் புரிய வெக்கணும்’னு அம்மா சொன்ன அதே டைம்ல அவன் உள்ள வரவும் தன் கோபம், வெறுப்பையெல்லாம் அவம் மேல.காட்டினா..
அவள விட பத்து வயசு பெரியவனான சக்தி.. இளமைப் பருவத்துல அடியெடுத்து வச்சுட்ட சத்தி.. அதே சமயம் தன் பதின்ம பருவத்தையும் தன் மனசளவுல தாண்டாத சக்தி.. பனிரெண்டு வயசுப் பெண்ணான மனுவ தனக்கு சமமான எதிரியாப் பாவிச்சு தீவிரமா அவளோட சண்டைக்கு எறங்கினது தான் விதியின் விசித்திரம் !
பத்தாவது படிக்கைல பாதிலயே படிப்ப நிறுத்திட்டு வந்தவன் வீணா தொண்டு சுத்தாம அவன் தாத்தாவோட தீவிரமா விவசாயத்துல இறங்கினான்.. செரவெடுத்து பாத்தி கட்டறது, களை வெட்டறது,தண்ணி கட்டறதுன்னு எல்லா வேலைகளையும் வெறியா செஞ்சான்.. கடின உழைப்பு அவன் ஒடம்ப உரமேத்தி கட்டானதா ஆக்குச்சுன்னா அந்த உழைப்பால நல்லா பசிக்கவும் ரவுண்டு கட்டித் தின்னத ஜீரணிக்கவும் வச்சுது..
கூடவே நல்ல தூக்கம்… பெருசா கவலை இல்லாத வாழ்க்கையால முகம் தெளிவாச்சு.. தீவிர சிந்தனையும் எதையும் உத்துப் பாக்கற மனப் பான்மையால கண்ணு ரெண்டும் கத்தி மாதிரி கூர்மையாச்சு.. எந்தப் பொண்ணையும் கவனிக்க வைக்கற அழகு அவனுக்கு.இயல்பா அமைஞ்சுது..
அஞ்சு வருசம் தீவிரமா உழைச்சது மட்டுமில்ல.. தோட்டத்தையும் அவனுக்குப் பிடிச்ச விதமா மாத்தி பண்ணையத்த பழமைக்கே திருப்பினான்.. ரசாயன உரங்கள அறவே தவிர்த்துட்டு இயற்கை உரங்களப் பயன் படுத்தினான்..
கலப்பின விதைகள் அமோக விளைச்சல் தரும்னு தெரிஞ்சும் அத நிராகரிச்சுட்டு பாரம்பரிய நாட்டு விதைகள தேடிப் பிடிச்சு விதைச்சான்.. ரசயான உரங்களால மலடாகிக் கிடந்த பூமி இயற்கை உரங்கள ஏத்துக்ககிட்டு புத்துயிர் வந்து பலன் தர மூணு வருசமாச்சு..
அந்த மூணு வருசத்துலயும் அவனுக்கு விவசாயத்துல.பெருத்த நஷ்டம் தான்.. நாலாவது வருசத்துல இருந்து தான் அவன் உழைப்புக்கு கொஞ்சம் பலன் கிடைச்சது… பெரிசா எதுவுமில்ல.. அந்த வருசம் போட்ட காசு திரும்ப வந்தது.. அவ்வளவு தான்! அவனுக்கு எதப் பத்தியும் கவலை இல்லை.. தனது பாட்டன்,முப்பாட்டனோட பராம்பரியம் உள்ள இயற்கை மண்ண மீண்டும் மீட்டெடுத்ததுல அவனுக்கு ரொம்பவே திருப்தி..
நாலாவது வருசத்துல இருந்து நல்ல பலன் கிடைக்க ஆரம்பிச்சதும்.. வாழை, தென்னைக்கெல்லாம் சொட்டு நீர் பாசனத்தப் பயன் படுத்தினான்.. அவன் தாத்தா கூட தன் ஆட்சேபத்த முணு முணுப்பா தெரிவிச்சும்…
”இதெல்லம் எதுக்குடா சக்தி… நம்மளுக்கு தண்ணிக்கா பஞ்சம்?”
சக்தி அன்பா அவர் தோள் மேல கை போட்டுச் சொன்னான்…
“இல்லாதவன் திங்காம கெடந்தா அதுக்குப் பேரு பட்டினி.. அதே இருக்கறவன் திங்காம இருந்தா அதுக்குப் பேரு விரதம்.. சொத்து சுகத்தக் கூட அள்ளி எறைச்சுட்டு திரும்பச் சம்பாதிச்சுடலாம் தாத்தா.. நிலத்தடி நீர் அப்படியில்ல.. வான் மாதா குடுத்ததை வாங்கி தன் மடில மண் மாதா சேர்த்து வெச்ச பொக்கிஷம் தான் நிலத்தடி நீர்.. இல்லாதவன் தான் சிக்கனமா இருக்கணுமா? இருக்கறவனும் சிக்கனமா இருக்க வேண்டியது இந்த விசயத்துல ரொம்ப அவசியம்… ஒரு சொட்டுத் தண்ணியக் கூட வீணாக்கற.உரிமை இங்க யாருக்கும் இல்ல.. வெறும் பச்சத் தண்ணிக்காக இந்த உலகம் தங்களுக்குள்ளயே அடிச்சுக்கற காலம் ரொம்ப தூரத்துல இல்ல”
“நீ ஒருத்தன் சிக்கனமா இருந்தா மட்டும் உலகம் மாறிடுமா? உன் சிக்கனத்தையே அடுத்த தோட்டத்துக் காரன் வீணா வாரி இறைப்பான்”
“எல்லாரையும் மாறச் சொல்லிக் கூவி எனர்ஜிய வேஸ்ட் பண்றத விட மொதல்ல நாம குறைகளே இல்லாம மாறிட்டு அப்புறமா அடுத்தவங்களப் பாக்கலாம்’
தாத்தா கொஞ்ச நேரம் பிரமை புடிச்ச மாதிரி வாயடைச்சு நின்னுட்டு அப்புறம் சொன்னார்..
“உன்ன நெனச்சா பெருமையா இருக்குடா பேராண்டி..”
விவசாயத்த ஒரு நல்ல கட்டத்துக்கு கொண்டு வந்த பின்னாடி அதப் பாதிக்காம எக்ஸ்ட்ராவா ஒரு தொழில் பண்ண நெனைச்சான் சக்தி.. அந்த நெனைப்பால வந்த ஐடியா தான் “சக்தி பைனான்ஸ்’..மோட்டார் வாகனங்களுக்கு மாதத் தவணைல கடன் குடுக்கற நிதி நிறுவனம்..
தொழில் துவங்கலாம்னு முடிவுக்கு வந்த உடனே தகுந்த இடம் தேட ஆரம்பிச்சான்.. அவனுக்கே சொந்தமா முப்பது கடைங்க சென்டர் டவுன்ல வாடகைக்கு விட்டிருந்தாலும் 2006ல நிதி நிறுவனம் தொடங்குன போது ஒண்ணும் காலியா இல்லாததால கேசவன் குட்டி நாயர் டீக் கடைக்கு எதுக்க வாடகைக்கு இடம் புடிச்சு தொழிலை ஆரம்பிச்சான்..
அப்பத் தான் நாயர் அறிமுகமானார்.. பைனான்ஸ் திறப்பு விழா அன்னிக்கு வந்தவங்களுக்கெல்லாம் டீயும்,காபியும் அவர் கடைல இருந்து தான் வரவழைக்கப் பட்டது.. அறிமுகம் பழக்கமாகி பழக்கம் நட்பானது.. அப்பத் தான் புதுசா குடிச்சுப் பழகியிருந்த சக்தி பாருக்குப் போக சங்கடப் பட்டு நாயர் கடைல இருந்த உள் ரூம்ல உக்காந்து குடிக்க ஆரம்பிச்சான்..
அந்த வருசம் முந்தின நாளு நைட்டு நாயரும் அவனும் பேசிக்கிட்டிருந்த போது திடீர்னு நாயர் கேட்டார்
“இந்த வருசம் கோவிலுக்கு வர்றீங்களா சக்தி சாமி?”
நாயர் மாலை போட்டு பத்து நாளாச்சு.. கைல இருந்த டம்ளர்ல இருந்த சரக்க அடிச்சுட்டு சந்தேகத்தோட கேட்டான்..
“என்னையவா மாலை போடச் சோல்றீங்க?”
நாயர் கருப்பு வேட்டிய மடிச்சுக் கட்டிக்கிட்டே சொன்னார்..
“உங்களையே தான்.. வாங்களேன்.. மாறுதலா இருக்கும்”
”மாலை போடாம சபரி மலை போகக் கூடாதா சாமி?”
“மாலை போட்டு இரு முடி கட்டிட்டுப் போனாத் தான் பதினெட்டுப் படியேறி சுவாமி தரிசனம் பண்ணலாம்.. மாலையும்,இரு முடியுமில்லேன்னா பகவான மட்டும் கும்பிட்டுட்டு வரலாம்”
சக்திக்கும் ஒரே மாதிரியான இயந்திர வாழ்க்கை போரடிக்க ஆரம்பிச்சிருந்த கால கட்டமது.. அதனால மாலை போட்டுத் தான் பாப்பமேங்கற எண்ணத்துல அடுத்த நாளே மாலை போடறதுன்னு முடிவு பண்ணிட்டான்.. நாயர் கிட்ட சொல்லி விவரங்கள் கேட்டான்..
“காலைல சூரிய உதயத்துக்கு முன்ன நான் பூஜை பண்றப்ப வந்தா என் வீட்லயே மாலை போட்டுக்கலாம்.. பூஜை சாமான்கள நீங்க வாங்கித் தந்துடறீங்களா?.. இல்ல… ‘
கேசவன் நாயர் இழுக்க சக்தி சொன்னான்…
“எனக்கு என்ன வாங்கணும், எவ்வளவு வாங்கணும்ங்கறதே தெரியாது.. வேஷ்டில இருந்து கற்பூரம் வரைக்கும் நீங்களே வாங்கிக்கங்க.. அதுக்கு எவ்வளவு பணம்னு சொன்னீங்கன்னா இப்பவே குடுத்துட்டுப் போறேன்..”
”அதெல்லாம் உள்ள போயி என் வீட்ல விசாரிச்சு அங்க குடுத்துடுங்க.. எல்லாம் அவளே ரெடி பண்ணிடுவா..”
அது விசயமா பேசத் தான் அம்மாவுக்கும் மனுவுக்கும் இடையிலான துவந்த யுத்தத்துக்கு இடைல வந்து குதிச்சான்.
அவன் அப்படிக் குதிச்ச நேரம் மிக மோசமான நேரமா இருந்திருக்கணும்.. அதனால அவனுக்கும் மனுவுக்கும் இடைல மோதல் ஆரம்பிச்சு மிகப் பெரிய முட்டாள் தனங்களுக்கு அது வித்திட்டது..
(தொடரும்…