KOA 25

25

“நான் இந்த வீட்டிலும், உன் வாழ்க்கையிலும் இருக்க போறது கொஞ்சம் காலம் தான் , அதுக்கு எனக்கு நீ கொடுத்திருக்கிற இந்த வசதி போதும் பிரகாஷ்!”
ரதியின் பேச்சை கேட்டு பிரகாஷின் முகம் வாடிவிட்டது!
செய்வதை திருந்த செய் என்பதாய் அவனை நோகடிப்பதை நூறு சதவிதம் சரியாக செய்து கொண்டிருந்தாள் ரதி. அதற்கு மேல் அவள் பேச்சை கேட்க அவன் அங்கு நிற்கவில்லை. எது எப்படியோ, அன்றிலிருந்து அவன் விட்டில் ரதி வசிக்க ஆரம்பித்துவிட்டாள்.

வெண்பா மேகத்தில் தவழ்ந்து கொண்டிருந்தாள். விழியனின் அன்பில் தன்னை தொலைத்தாள். இத்தனை நாள் பிரிவை மறக்க இவளும் தன் பங்குக்கு அன்பையும் காதலையும் தன் கணவனுக்கு வாரி வழங்கி கொண்டிருந்தாள். இனியும் அவனை விட்டு பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்ற எண்ணம் வேறூன்றியது!
தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும். அது உண்மையானது விழியனின் விஷயத்தில்! வெண்பா முன்னர் அவனிடம் நடந்து கொண்டிருந்த முறைக்கு , தன் வாழ்வில் இனி வசந்தம் என்றே ஒன்று இருக்காதோ என பயந்து போயிருந்தவனுக்கு அவளின் இந்த மாற்றம் பேரானந்தம்.ஆனால் அது சொற்ப நாட்களுக்கு என்று தெரியவில்லை. பாவம்!
லண்டனில் எல்லா இடங்களையும் அவளுடன் சேர்ந்து சுற்றினான்.
அன்றும் வெளியே கிளம்ப அவன் தயாராகி கொண்டிருக்க, அவள் சின்ன குரலில் பாடிக் கொண்டிருந்தாள்…
உனதருகே
இருப்பதனால்
இரவுக்கு தெரியாத
பகலுக்கு புரியாத
பொழுதொன்று நீ காட்டினாய்…
அவளின் பின்னோடு சென்று கட்டிக் கொண்டவனிடம் செல்லம் கொஞ்சியபடி,
“எனக்கு உங்க கூடவே இருக்கணும் விழியன். அதுக்கு தானே வந்திருக்கிறேன்… எங்கையும் வெளியே போகாம நாம வீட்டிலேயே இருக்கலாமா?”
அவளை தள்ளிக் கொண்டு போய் அவர்கள் அறையில் விட்டவன்,
“எங்கெல்லாம் போனே , என்னவெல்லாம் பார்த்தேன்னு எல்லாரும் கேட்பாங்களே? என்ன சொல்வே அவங்ககிட்ட எல்லாம்?ஒழுங்கா இப்ப கிளம்புற வழியை பார்!”
அவன் ஆபிஸ் செல்லும் சமயங்களில் இவள் மதியின் வீட்டில் இருக்க ஆரம்பித்தாள்.அந்த ஊரில் பாஷை ஒரு பிரச்சனையே இல்லை. இந்திய தேசத்தை நீண்ட கொடிய வருடங்கள் அடிமை படுத்தி வைத்ததில் அந்த பாஷையை தந்துவிட்டு போயிருந்தனர். அவ்வூரில் நிறைய இந்தியர்களும் பணி நிமித்தம் குடியிருந்தனர் , அதுவும் அந்த பகுதியில் மிக அதிகமாய்.மதிவதனி முழுநேரமும் ஸ்கைப்பில் தன் வீட்டினருடன் பேச்சுவார்த்தையில் இருந்தாள்.தாய் தந்தையை விட்டுத் தொலைவில் இருக்கிறோம் என்ற எண்ணம் இரு பெண்களுக்குமே இல்லை. வெண்பாவும் உடன் இருந்ததால் அடிக்கடி அவளுடன் அந்த புது ஊரை ஆராய்ந்து பார்க்கும் வேலையும் நடந்தது!மூன்று வாரம் என்பதால் நாட்கள் வேகமாய் கரைந்தது.

வெண்பா இருக்க போகும் கடைசி வாரம் அது.மதன் அந்த வீட்டில் பல வருடங்களாய் குடியிருப்பதால், இரு பெண்களும் சேர்ந்து அந்த வீட்டை ஒழுங்குபடுத்துகிறேன் என்று தலைகீழாய் மாற்றிக் கொண்டிருந்தனர். அவன் ஸ்டைலில் அவன் வைத்திருந்த அவ்வீடு தற்போது கொஞ்சம் கொஞ்சமாய் மதிவதனியின் ஆளுமையின் கீழ் வர ஆரம்பித்தது. ஒதுக்கப்பட்டு வைத்திருந்த சாமான்களை எல்லாம் நோண்ட ஆரம்பித்தாள். அன்றும் வெண்பாவிடம் ,
“இங்க பாரு டீ , ஒரு லேப்டாப். பார்த்தா நல்லா தானே இருக்கு?எனக்கு யூஸ் ஆகும் எடுத்துக்குறேன்னு கேட்டேன், அதெல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டார் டீ”
அவள் சொன்னதில் இருந்து அதை ஆராய்ந்தபடி உம் கொட்டிக் கொண்டிருந்தாள் வெண்பாவும்.
“இங்க எல்லாம் ரிப்பேர் பண்ண முடியாதாம்”
அதை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்பா.எதுவும் பிடிபடவில்லை. இருக்கும் பாகங்களை எல்லாம் கழட்டி மாற்றி போட்டு விட்டு, சார்ஜிலும் போட்டு விட என்ன மாயமோ நடந்து அது உயிர்பெற்று விட்டது…
“ஹேய் சூப்பர் வெண்பா, கைவசம் நிறைய வித்தை வச்சியிருக்க போல” மதி குஷியாகிவிட்டாள்.

லாப்டாப் உயிர்பெற்றதும், அதில் உள்ள ஒவ்வொரு ஃபோல்டரையும் நோண்ட ஆரம்பித்தாள் மதிவதனி.வெண்பாவும் இதையெல்லாம் பார்த்தபடி அவள் அருகில் தானிருந்தாள்.
“அவர் சிஸ்டமை அவரை கேட்காம தொடாதே மதி, ஏதாவது சொல்லப்போறார்”
தோழி சொன்னதை காதில் வாங்காமல் இவள் பாட்டுக்கு போட்டொஸ் ஃபோல்டரை திறந்து அதில் உள்ள மதனின் பழைய புகைப்படங்களை பார்க்க ஆரம்பித்தாள்…மதன் பல போட்டோக்களில் சிரித்துக் கொண்டிருந்தான், வசீகரமாய்! ஒவ்வொரு போட்டோவையும் வெண்பாவிடம் காட்டி,
“மதன் இதில் செமையா இருக்கார் இல்ல?” என்று வழிந்து கொண்டிருந்தாள் மதிவதனி.
“ஐயோ போதும் டீ. ஓவரா போயிட்டு இருக்கே”

வெண்பா மதியை ஓட்டிக் கொண்டும், விழியனின் போட்டோ வருகையில் மதிவதனி வெண்பாவை சீண்டிக் கொண்டும் அந்த போட்டோக்களை பார்வையிட, ஒரு கூரூப் போட்டோ இடையில் வந்தது.முதலில் அதில் கவனமில்லாமல் இரண்டொரு போட்டோ தாண்டி போய்விட்ட மதிவதனியை உலுக்கி விட்டது வெண்பா தான்.
“கொஞ்சம் பின்னாடி போ”. அதன்படி அவளும் போக,
“கொஞ்சம் அந்த போட்டோவை பெரிசு பண்ணு…”
உற்று பார்த்தாள். அதில் ரதியும் இருப்பது தெரிந்தது…
மதன், விழியன் அவன் பக்கத்தில் …ரதி. ரதி முற்றிலும் வேறு விதமாய்.நீள பின்னலை முன்பக்கம் போட்டபடி , அழகாய் சுடிதாரில் அம்சமாய் இருந்தாள்.
இப்போது இருக்கும் ரதிக்கும் இதற்கும் சற்றும் சம்மந்தமில்லாததை போல்!

விழியன் எல்லா புகைப்படத்திலும் அவளை மிகவும் நெருங்கி அமர்ந்திருக்கிறான். இருவர் முகத்திலும் அத்தனை சிரிப்பு. அந்த புகைப்படத்தை வெண்பாவும் மதியும் நீண்ட நேரமாய் ஆராய்ந்து கொண்டிருந்தனர். தோழிகள் இருவர் மனதிலும் ஏகப்பட்ட கேள்விகள்.ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

மதிவதனிக்கு ரதியை பார்த்ததும் மாறிய ரேணுகாவின் சோர்ந்து போன முகம் மனக்கண்ணில் வந்து போனது.

அதன் பின் வந்த படங்களிலும் விழியன் ரதி பக்கமே நின்றிருந்தான்…வெண்பாவுக்கு அதனை காண தன் கண்களையே நம்ப முடியவில்லை!
வெண்பாவுக்கு அவர்களுக்கு இடையில் இருப்பது தோழமையா இல்லை வேறு எதுவுமா தெரியாது, ஆனால் விழியன் தன்னிடம் இதனை மறைத்தது அவளை மிகவும் காயப்படுத்தியது. அதுவும் ஏதேனும் ஓரிரு முறை என்றாலும் மனதை சமன் செய்திருப்பாள். என்னவோ பார்த்தே இறாத ஆள் போலல்லவா நடந்து கொண்டான்.இதுவரை ஒரு நாள் கூட ரதியை தனக்கு தெரிந்தவள் போல் அவன் காட்டிக் கொண்டதில்லை. எத்தனையோ முறை இவளாக அவளை பற்றி சொல்லும் போது கூட, ‘எந்த ரதி’ என்று கேட்டிருக்கிறானே!

என்றுமே இல்லாமல் அன்று மதிவதனி வீட்டிலிருந்து கிளம்புகையில் மனதில் பாரம் ஏறிக் கொண்டதை போல் இருந்தது…ஏன் தன்னிடம் இதையெல்லாம் மறைத்தான்? அப்படி என்ன உறவு இருந்திருக்கும் அவர்கள் இருவருக்குள்ளும்?
அன்று பார்த்து விழியன் வேலையிலிருந்து மிகவும் தாமதமாய் வந்தான். இவள் தூங்கும் வரையிலும் வீடு திரும்பவில்லை. சற்று நேரம் காத்திருந்து பார்த்தவள் எப்படி தூக்கத்தில் ஆழ்ந்தாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அடுத்த நாளும் இவள் எழுகையில் அவன் கிளம்பி போய்விட்டிருந்தான்…ஒரு காகிதத்தில் ‘கிரிட்டிக்கல் பிராஜெக்ட்’ என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே!

மதியிடம் பேசினாள்,
“ என்ன டீ கேட்டியா? என்ன தான் சொன்னார்?”
“ இல்லை மதி, எப்போ வீட்டுக்கு வந்தார்னே தெரியலை, இன்னிக்கு தான் கேட்கணும். தெரியலைன்னு சொன்னா என்ன டீ செய்றது?”
அவளுக்கும் அதே சிந்தனை தான். தெரியும் தெரியாது என்று எந்த பதிலை சொன்னாலும் விழியன் பிரச்சனையில் மாட்டப் போவது உறுதி.
“வெண்பா இதை பெரிசு பண்ணாதே, ரதி ஏதாவது ஏடாகூடம் செஞ்சியிருப்பா! அதான் தெரிஞ்சதை போல் காட்டிக்க வேணாம்னு நினைத்திருப்பார்”
“இருந்தாலும் இது ரொம்ப ஓவர் டீ! நான் எதையுமே மறைச்சது இல்லை தெரியுமா? அவன் மட்டும் எப்படி இப்படி செய்யலாம். ஐயம் ஹர்ட்”
மதிவதனிக்கு இருவரையும் நினைத்து கவலையானது. இவளை மலையிறக்குவது கடினமான காரியம் ஆயிற்றே!
“ நீ மதன் கிட்ட இதை பத்தி எதுவும் சொல்லாதே சரியா?”
வெண்பா சொல்ல,மனசில்லாமல் சரி என்றால்…
“ நாளைக்கு இங்க வா டீ, நாம ரெண்டு பேரும் புது டிஷ் ஏதாவது செய்யலாம்”
“ இல்லை டீ , வேலையிருக்கு. வைக்கட்டுமா?”

தன் வேலைகளை முடித்தவள் அவனுக்கு போன் செய்ய எத்தானில்லை. பொறுமையில்லாத ரேணுகாவிடமும் போன் செய்தாள்!
கட்டாயம் அம்மாவுக்கும் மகனுக்கும் எந்த ஒளிவு மறைவும் இருக்காது என்ற நம்பிக்கையில். அது பொய்யும் இல்லையே!
“அத்தை உங்களுக்கு ரதியை முன்னமே தெரியுமா?”
விழியன் சொல்லித் தான் கேட்கிறாள் என்பதாக,
“ஆமா தெரியுமே!”
“ஏன் என் கிட்ட அதை சொல்லலை?”
“அப்படி சொல்லிக்கிற அளவுக்கு அவ ஒண்ணும் பெரிய ஆள் இல்லடியம்மா!ஆமா,இப்ப என்னத்துக்கு அவளை பத்தி கேட்குறே?”
“சொல்றேன்…அப்போ நீங்க வேணுமின்னே தான் அவளுக்கு வீடு தர மாட்டேன்னு சொன்னீங்களா? ஏன் அத்தை?அப்படி அவ என்ன பண்ணா?”
“ஏன் டீ என்னை போட்டு இப்படி குடையிற, உன் புருஷன் கிட்ட கேட்டுக்கோ இதையெல்லாம்…அவன் கூட சந்தோஷமா இருந்திட்டு வாடின்னு அனுப்பி வைச்சா, அந்த வீணா போனவ பத்தியே பேசுற!”
அதற்குமேல் ரேணுகா அழைப்பை துண்டித்துவிட்டாள்.

எந்த கணவனுக்கும் தன் மனைவி தனக்கு மட்டும் உரிமையானவளாய் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத் தானே செய்யும்?பிரகாஷுக்கும் அப்படிதான்… ஆனால் இவள் ஒரு தலைக்காதல் என்று சொன்னதும், அதை எல்லாம் மறக்க வைத்து விடலாம். திருமணத்துக்கு முன் உள்ளதை பெரிது படுத்தவும் வேண்டாம் என்று எண்ணியிருந்தான்.
ஆனால் ரதியோ இல்லை எனக்கு நீ தேவையில்லை, விழியன் போதும் என்று சொன்னது அவனுக்கு மிகவும் ரணமாய் இருந்தது. இவளை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவோம் என்ற சிந்தனை எப்போதும் அவனை அரித்துக் கொண்டிருந்தது. தினமும் இருவரும் ஒரே வீட்டிலும் அலுவலகத்திலும் பார்த்துக் கொண்டாலும், பேச்சு என்று பெரிதும் இருப்பதில்லை.அவனாவது அவளை பார்ப்பான், அவள் இவனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை!

விழியனுக்கு முந்தினம் நடந்த விஷயம் எதுவும் தெரியாது. ரேணுகா அவனிடம் பேச முயற்சித்து இரண்டு முறை அழைத்திருக்க, மீட்டிங்கில் இருந்ததால் கட் செய்து விட்டான். அடுத்த நாள் நேரத்துக்கு வீட்டிற்கு திரும்பியவனுக்கு அன்று பார்த்து நிரம்பவும் தலைவலி! வெண்பாவுக்கு அவன் மேல் அத்தனை ஆத்திரம், இருந்தாலும் அவனுக்கு உணவெல்லாம் எடுத்து வைத்தவள்,எதேச்சையாக கேட்பது போல் ,
“ உங்களுக்கு ரதியை முன்னமே தெரியுமா விழியன்”
சாப்பிட்டு கொண்டிருந்தவனுக்கு புரையேறியது!
எதற்காக இந்த திடீர் கேள்வி?
“இல்லையே ஏன் கேட்குற?”
“சும்மா தான்”
இப்போதும் அவன் தன்னிடம் பொய் உறைக்கிறான் என்பதை வெண்பாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. நேற்றைய கோபத்துடன் இப்போது பொய் சொன்னான் என்பதும் சேர்ந்து கொண்டது.கட்டுப்படுத்தி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் வெளிவர துடித்தது!
‘ இவனை நம்பி என் வாழ்க்கையை கொடுத்திருக்கிறேன், என் கிட்டையே பொய்!இவனை நம்பியது என் தவறோ? ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்திருக்கிறான்.ஆனால் அவளை பற்றி என்னிடம் சொல்ல நினைக்கவில்லை. இவன் மாறவே இல்லையா?இவனுக்கு ஏதேனும் மறைவு வாழ்க்கை உள்ளதா?
அவள் சென்னை திரும்ப இன்னும் இரண்டு தினங்களே இருந்தன…அவள் கிளம்ப வேண்டிய முந்தினம் விழியன் வீட்டில் இருந்துகொண்டான். அவளுடன் நேரத்தை செலவழிக்க எண்ணி!அவளோ அவனிடமிருந்து ஒதுங்கி போனாள்.அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து கொண்டிருந்தாள்.தன்னை போல் அவளுக்கும் பிரிவின் சோகம் சூழ்ந்து கொண்டது என்று இவன் தப்பாய் எண்ணிக் கொண்டிருக்க, அவளுக்குள் நடந்து கொண்டிருந்த விஷயங்களே வேறு!

வெண்பா ஊருக்கு திரும்பும் வரையிலும் மதியால் அவளை சந்திக்க முடியவில்லை. போன் செய்தாலும் அவள் எடுக்கவில்லை.இருவருக்குள்ளும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

“ஏன் வெண்பா ஒரு மாதிரியா இருக்கே? என்ன ஆச்சு?”
தன்னை பார்க்காமல் திரும்பி கொண்டவளை வம்படியாக பிடித்து கேட்டான் விழியன், அதற்கும் ‘ஒண்ணுமில்லை’ என்ற சப்பை கட்டுடன் முடித்தாள்.
அன்று கிளம்பவேண்டும், காலையிலிருந்து பரபரப்பாய் தயாரானாள்.
விழியனுக்கு என்னவோ சரியில்லை என்று பட்டது, அவள் அன்று கேட்ட கேள்வியை அவன் தீவிரமாய் யோசித்து கொள்ளவுமில்லை.நம் சாதாரணமாய் நினைக்கும் பிரச்சனை தான் நம் வாழ்க்கையில் விஸ்வரூபமே எடுக்கும்!அதே தான் அவனுக்கும்!

ஏர்போர்டில் அவனிடமிருந்து விடைபெரும் நேரம்,
“என்னை இன்னும் நீ முழுசா மனைவியா ஏத்துக்கலை தானே விழியன்?” என்றாள் திடுதிப்பென்று!
“ஏன் டீ இப்படி பேசுறே? ஆபிஸில் கொஞ்சம் பிரச்சனை அதான் கொஞ்ச நாளா உன் கிட்ட ஒழுங்கா பேச முடியலை மா…அதுக்காக ஏன் இப்படியெல்லாம் சொல்றே?”
அவள் காதோரம் இருந்த முடியை ஒதுக்கிவிட்டவன் கூற, அவன் கையை விலக்கி விட்டாள்.
“ரதியை உங்களுக்கு முன்னமே தெரியும், ஒண்ணா வேலை பார்த்திருக்கீங்க”
அவன் இவளை அதிர்ச்சியாய் பார்க்க,
“மதன் வீட்டில் பழைய போட்டோஸ் பார்த்து தெரிஞ்சிகிட்டேன்!”
அவன் ஏதோ சொல்ல வர,கைகாட்டி தடுத்தவள்,
“நான் கிளம்புறேன் விழியன். எனக்கு பொய் சொல்றவங்களை சுத்தமா பிடிக்காது.நீ என் கிட்ட பெரிய பொய் சொல்லிட்ட.குட் பை” கண் கலங்க சொல்லிவிட்டு அவனை திரும்பியும் பாராமல் விடுவிடுவென்று விமானம் ஏற போய்விட்டாள். செய்வதறியாது அவளை பார்த்துக் கொண்டு நின்றான் விழியன்!


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!