மீனாக்ஷியை சபித்துக் கொண்டிருந்தான் அந்த கந்தர்வன்.
நாம் எதைப் பற்றி நினைக்கிறோமோ அந்த எண்ண அலைகள் நம்மை சுற்றி இருக்கும் என்பது உண்மை தான். அதீந்த்ரியன் மீனாட்சியைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில் அவருடைய ஆன்மா அவனுக்கு அருகில் இன்று அவனை கவனித்துக் கொண்டு தான் இருந்தது.
அந்த தூய்மையான ஆன்மாவின் நறுமணத்தை உணர்ந்த கந்தர்வன், தன்னுடைய சக்தியைப் பயன்படுத்தி தன்னுடைய வலது கையினால் காற்றை இழுத்து ஊதிவிட , அது வெள்ளைப் புகையைப் பரப்பியது.
அந்தப் புகை காற்றில் கலந்திருந்த ஆன்மாவை வரிவடிவமாகக் காட்டியது. பெரிய குங்குமம் வைத்துக் கொண்டு மீனாக்ஷியின் முகம் தெரிய,
கோபத்தில் கத்தினான்.
“ உன்னால் விதியை மாற்ற முடியும் என்றால் என்னால் அதற்கும் மேல் செய்ய முடியும் என்று உனக்குத் தெரியாதா?” தோற்றுப் போன வெறி அவன் குரலில் கொப்பளித்தது.
மீனாக்ஷி எதுவும் சொல்லாமல் சிரித்த முகத்துடன் இருக்க, அவன் மேலும் வெறுப்படைந்தான்.
“ என்னால் அவளை எதுவும் செய்ய முடியும். ஏன் இன்றே அவளுடன் கூடியிருக்க முடியும். அவளாலும் அதை தடுக்க முடியாது. ஆனால் நான் அவளை நேசிக்கிறேன். அதனால் தான் பொறுமை காக்கின்றேன். எப்போதும் இதே நிலையில் இருப்பேன் என்று எண்ணாதே. என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.” அவன் பொறுமை அப்போதே கரைந்து கொண்டிருந்தது.
மீனாட்சியின் குரல் அவனது பேச்சைத் தடுத்தது. “ தேவர்களுக்கு அடிமையாக இருந்து சேவகம் செய்து உங்கள் வர்க்கம் ஆனந்தமாக இருக்கையில், மானுடப் பெண்களை உங்கள் இச்சைக்காக ருசித்து விட்டு பின்பு அவர்களை வாழ் நாள் முழுதும் அழ வைப்பது எந்த வகையில் நியாயம்?! அப்பெண்களின் நிலையை , அவர்களால் அந்த குடும்பம் அனுபவிக்கும் வேதனையை என்றேனும் ஒரு தரம் சிந்திப்பீர்களா?!
பெண்கள் தெய்வங்களாகப் போற்றப் பட வேண்டியவர்கள். தேவலோகத்தில் வாழும் உன்னைப் போன்றவர்களுக்கு நிச்சயம் அது தெரியும். அப்படியிருக்க , மன்மதனிடம் பாடம் பயின்று , அந்த சுகத்தை பூலோகப் பெண்களிடம் அனுபவித்து அவர்களை நாசமாக்கும் உங்கள் பிறவியை என்னவென்று சொல்வது.
இன்னும் இதே போன்று எத்தனைப் பெண்கள் உங்களிடம் சிக்கிக் கொண்டிருக்கின்றனரோ! அனைவரும் உங்கள் அழகில் மயங்கி பைத்தியமாகி, சித்தம் கலங்கிய நிலையை அவர்கள் அடைகிறார்கள்.
பாவம் செய்து , நிறைய துன்பங்களை அனுபவிக்கவே மானுடப் பிறவி எடுத்திருக்கோம். அதிலும் கொடுமையாக உங்களைப் போன்றோர் மீள முடியாத அளவு துன்பத்தை கொடுப்பது சிறிதும் நியாயமில்லை.” பொறுமையாக ஆனால் தெளிவாகக் கேட்டார் மீனாக்ஷி.
“ இது எங்களின் இயல்பு. இது இயற்கை. இதில் மாற்றுக் கருத்தோ அல்லது திருத்தும் முயற்சியோ அவசியம் இல்லாதது.
காதலிப்பதும் காதல் வயப் பட வைப்பதும் தான் எங்களின் வேலை. எத்தனை மந்திரவாதிகள் எங்களை வசப் படுத்தி வைத்துக் கொண்டு மற்றவர்களின் ஆனந்த வாழ்விற்காக பயன்படுத்துகிறார்கள் என்பது உனக்குத் தெரியுமா!
அப்போது நாங்கள் எங்களின் சக்தியை வைத்து அடுத்தவருக்கு உதவுகிறோம். அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறோம்.
ஒரு பெண் மீது எங்களுக்கு ஏற்படும் உணர்சிகளை நாங்கள் அவளிடமே காட்டுகிறோம்.
இது தான் நாங்கள்.
உனக்கு விளக்கம் தரக் கூட எனக்குப் பிடிக்கவில்லை. சென்று விடு !” மீண்டும் காற்றைக் கையில் பிடித்து ஊதிவிட,
மீனாட்சியின் உருவம் காணாமல் போனது.
****
விஷ்வா குளிரில் நடுங்கிக் கொண்டே அதிகாலை நான்கு மணிக்கு அந்த ஓடை நீரில் மூழ்கிக் கொண்டிருந்தான்.
உடல் விரைத்து விட்டது. குருஜி அவனுக்காக மீண்டும் அந்த விழுதை அரைத்துக் கொண்டுவந்தார்.
“ விஷ்வா! இது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் ஒரு மூலிகை வேரின் சாறு. இது கசப்பான ஒன்று தான். ஆனால் உடலில் உள்ள அனைத்து சக்கரங்களை இணைத்து உனக்குள் இருக்கும் சக்தியை வெளிக்கொணர இது மிகவும் அத்தியாவசியமான ஒன்று.
இதை இந்த ஏழு நாட்களும் நீ குடித்தே தீரவேண்டும்! இந்தா குடி!” அவனிடம் மண் குடுவையை நீட்டினார்.
இம்முறை எந்த ஒரு முகச் சலிப்பும் இல்லாமல் அதை வாங்கி மடக்கென முழுவதையும் குடித்து முடித்தான்.
ஈரத்துணியை மாற்றிக் கொண்டு வந்தவன் , நெற்றியில் திருநீறு அணிந்து குருஜியுடன் நடந்தான்.
சிறு குன்றின் மேல் ஏறினர் இருவரும். அவனை கிழக்கு முகமாக அமரச் சொன்னார்.
“விஷ்வா இப்போது நீ தியான நிலைக்கு மட்டும் போகணும். ஆழ் நிலைக்கு போகக் கூடாது. நான் சொல்றதை உன் மூளை உணரனும்.” அவனிடம் சொல்ல,
“ சரி குருஜி” கண்களை மூடி தியான நிலையில் மனதை செலுத்தினான்.
அந்த அதிகாலை வேளை, அமைதியான சூழல் , எங்கோ ஒலிக்கும் குயிலின் சிறு கூவல் , அனைத்தும் இதமூடியது.
எந்தவித சலனமும் இல்லாமல் மனம் லேசாக மிதப்பது போல உணர்ந்தான்.
எளிதில் தியான நிலைக்குச் சென்றுவிட்டான்.
குருஜியின் குரல் அவன் மனதில் எட்டியது.
“ ஒரு மனிதன் தன் சக்திகளை எப்போது ஒன்றாக இணைக்கிறானோ அப்போது அவன் கடவுளின் நிலையை அடைகிறான்.
மனித உடலின் பலவிதமான சக்திகள் கொட்டிக் கிடக்கின்றன. அவை அனைத்தும் ஆங்காங்கே தேங்கி விடுகிறது.
அவற்றை பொய், பொறமை, கோபம், அன்பை வெளிப்படுத்த தயங்குவது, கெட்ட எண்ணங்கள் போன்றவை மறைத்து விடுகிறது. அதனை தூர்வாரி வெளியே கொண்டுவந்து , எப்போதும் உண்மை, நேர்மை, தூய அன்பு போன்றவற்றால் பாதுகாத்தால் நிரந்தரமாக அவை தூய்மையாக இருந்து அவனுக்கு சக்தியை கொடுக்கும். “ அவர் சொல்வது அவனது மனதில் மெல்ல மெல்ல பதிந்தது.
தான் எத்தனை தூரம் இந்தப் பயிற்சியில் கடந்து வரவேண்டும் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது.
சிறு வயதிலிருந்து எத்தனை முறை லோகாவை திட்டியிருப்போம், அன்பைக் காட்ட தயங்கியிருக்கிறோம் என்று அவன் மனம் சற்று வருத்தப்பட்டது.
அத்தனையும் மீறி என்னைப் புரிந்து கொண்டு என்னிடம் காதல் கொண்ட அவளை என்னவென்று சொல்வது.
அவளிடம் இன்னும் அன்பு பெருகியது.
“விஷ்வா! முதல் சக்கரம் பூமி சக்கரம். இன்று முழுவதும் இந்தச் சக்கரத்தைத் தான் நீ தூய்மைப் படுத்த வேண்டும்.” கண்களை மூடிக் கொண்டு அவர் அவனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
“ நமது தண்டு வடத்தின் கடைசியில் இருப்பது தானே அது!” விஷ்வாவும் வினவ,
“ஆமா! இந்தச் சக்கரம் உனது பயத்துடன் தொடர்புடையது. இந்த சக்கரத்தை நீ தூய்மை படுத்த உனது மனதில் இருக்கும் பயத்தை போக்கிக் கொள்ள வேண்டும்.
உனக்கு எதைக் கண்டு பயம் என்று உன் மனதில் நினைத்து அதை நோக்கி பயணப் படு. பிறகு அதை எதிர்த்துப் போராடு. அது உன்னைக் கண்டு பயந்தோடும். முயற்சி செய் விஷ்வா!”
விஷ்வாவிற்கு பயம் என்றதும் முதலில் நினைவுக்கு வந்தது அந்த கந்தர்வனின் முகம் தான்.
அவனைக் கண்டதிலிருந்து ஒரு இனம் புரியாத பயம் அவன் மனதில் உதித்தது நிஜமே. அவனது தோற்றமோ, அல்லது தனது லோகாவை அவன் பறித்துக் கொள்வான் என்ற என்னமோ! ஏதோ ஒன்று அவனை வாட்டிக் கொண்டு தான் இருந்தது.
எப்போதும் லோகாவிடம் காதலை சொல்ல ஒரு ஈகோ வுடன் இருந்தவன், அவனைப் பற்றித் தெரிந்ததும் தான் முதல் வேலையாக தனது மனதைப் திறந்தான்.
இப்போது அவனது மொத்த பயமும் அந்த அதீந்த்ரியன் தான்.
அவனை இப்போது மனக்கண்ணில் கொண்டுவந்தான்.
ஆஜானுபாகுவாய் அம்சமாய் மயக்கும் விழிகளுடன் கம்பீரமாய் வந்து நின்றான் அவன் மனதில்.
அவனுக்கு முன்னே நின்று தன்னுடைய பலத்தைக் காட்டினான். அது அவன் லோகாவின் மீது வைத்திருந்த காதல், பதிலுக்கு அவனுக்கு அவள் கொடுத்த எல்லையற்ற அன்பு.
கந்தர்வனை தன்னுடைய கற்பனையில் மல்யுத்தம் செய்தான். அவனும் விடாமல் விஷ்வாவிற்கு ஈடு கொடுத்துப் போராடினான்.
இருவரும் நீண்ட நேரம் போராடிய பிறகு, விஷ்வா சோர்ந்தான். லோகாவை அருகில் வைத்துக் கொண்டு அவளைக் காக்கும் முயற்சியில் அவளைப் பார்த்துக் கொண்டே கந்தர்வனை அடிக்க, அவன் மீது இருந்த பயம் முற்றிலுமாக போய்விட்டது.
அவனது உடலில் புது சக்தி பாய்ந்தது.
அவன் முகம் தெளிவடைவதை உணர்ந்தார் குருஜி. அவனுடைய பூமி சக்கரம் திறக்கப் பட்டுவிட்டதை கண்டுகொண்டார்.
இந்தப் போராட்டம் முடிவடைய நான்கு மணி நேரம் அவனுக்குத் தேவைப்பட்டது.
இறுதியில் அவனுக்கு வெற்றியே! அந்த கந்தர்வனே நேரில் வந்தாலும் இனி அவனை ஒரு சாதாரண மனிதனைப் போலத்தான் எதிர்கொள்வான். அந்த அளவு தெளிவடைந்து விட்டான்.
அவனது முயற்சிக்கு அருகில் நின்று ஆசீர்வதித்தார் மீனாக்ஷி.
மீனாட்சியின் தியாகம் பற்றி அறிந்ததிலிருந்து குருஜிக்கு அவரை நினைத்து மிகவும் பெருமையாக இருந்தது. அப்போதிலிருந்து மீனாட்சியின் அருகாமையை லோகா விஷ்வாவிடம் இருப்பதை உணர்ந்தே இருந்தார்.
அவரின் மறைமுகமான கோரிக்கையாலும் தான் லோகாவிற்காக தன்னுடைய நண்பனுடன் சேர்ந்து அத்தனை போராடினார்.
எல்லாம் அவரின் உந்துதல் தான் என்பதை அவர் உணர்ந்தார்.
விஷ்வா சற்று தெளிவடைந்து தியானத்திலிருந்து எழுந்ததும் அவனுடன் சென்று காய் கனிகளைப் பறித்து அவனை உண்ண வைத்தார்.
அன்றைய அவனுடைய கடமை முடிந்தது. இன்னும் ஆறு நாட்கள் இதே போல தொடர வேண்டும்.
லோகா அன்று வெகுநேரம் உறங்காமல் இருந்து அழுதது அவளுக்குத் தலைவலியை உண்டுபண்ணியது.
அவளைக் காண அவளது அறைக்கே வந்தார் பாட்டி. அவள் சுருண்டு படுத்திருப்பதைக் காண அவருக்கு மனம் வலித்தது. இவை அனைத்திற்கும் காரணம் அந்த கந்தர்வன் என்பதை அவரும் அறிந்தார்.
‘இன்னும் சில நாட்கள் நீங்கள் இருவரும் கஷ்டப்பட்டுத் தான் ஆகணும் லோகா. அதன் பிறகு எப்போதும் உன் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சி தான். அதற்காகத் தான் நானும் பாடுபட்டேன்.’ அவரின் மனம் கனக்க உறங்கிக் கொண்டிருந்த அவளது தலையை வருடிக் கொடுத்தார்.
அவளது முகத்தில் கண்ணீர் கோடுகளைக் கண்டவர் அவளின் வேதனை உணர்ந்தார். கூடவே அவளது அருகில் இருந்த விஷ்வாவின் படம்.
இருதலைக் கொள்ளி எறும்பாக தன் பேத்தி படும் பாடு, அவரை, ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ண வைத்தது.
குருஜியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. என்ன செய்வது என்று யோசித்தவர், அன்று முழுதும் தூங்காமல் இருந்து அந்த கந்தர்வனை தன் சொந்த முயற்சியால் தடுக்க நினைத்தார்.
அவரின் எண்ணம் நல்லதாக இருந்தாலும், ஏற்கனவே கொதி நிலையில் இருந்த கந்தர்வனை அது வெறி ஏற்றும் என்று சற்றும் யோசிக்காமல் விட்டார்.
அவரின் இந்த யோசனையால் ஆபத்தின் முதல் படியில் நிற்பதை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.
இவரின் இந்த எண்ணம் அதீந்த்ரியனை அதிர வைத்தது.
“ மீனாக்ஷி ஒரு புறம் நீ ஒரு புறமா! உன் ஆன்மாவும் நிம்மதியின்றி அலையப் போவது உறுதி. இதை நான் உன்னை முதல் முறை பார்த்த போதே எச்சரித்தேன்.
விதி உன்னை தொடர ஆரம்பித்து விட்டது.” அந்த இடமே அதிரும் படி சிரித்திக் கொண்டிருந்தான்.
Leave a Reply