KOA – 26

“ ஏன் மதி உனக்கு இந்த வேண்டாத வேலை? அந்த லேப்டாப் இல்லைன்ன,உனக்கு வேற புதுசு வாங்கித் தர மாட்டேனா நான்?”
முதல் முறையாய் மிகவும் கோவப்பட்டான் மதன்.
“என்ன ஆச்சு மதன்? எதுக்கு இத்தனை கோபம்?”
அவன் பேசிய விதத்தில் உள்ளுக்குள் அவளுக்குமே சினம் ஏறி இருந்தாலும், நிதானமாகவே கேட்டாள்.
“ எனக்கு ஒரு காபி கொடு.நிறைய விஷயம் சொல்லணும் உன் கிட்ட”
அவனுக்கு வேண்டியதை எடுத்து தர, மதன் தன் மனைவியிடம் ரதியை பற்றிய விஷயங்கள் அத்தனையும் சொல்லிவிட்டான்… அவன் சொல்லி முடிக்கையில் மதிக்கு தெரிந்து விட்டது வெண்பா விழியனுக்குள் இப்போது எத்தனை பெரிய சிக்கலாகி இருக்கும் என்று!
“விழியன் கிட்ட இதை பக்தி முழுசா கேட்டு தெரிஞ்சிக்காம கிளம்பி போயிட்டாங்க வெண்பா. அவன் என் கிட்ட வருத்தபடுறான்,அந்த போட்டோஸ் இன்னுமா வச்சியிருந்தேன்னு!நான் என்னன்னு சொல்லி புரியவைப்பேன் அவனுக்கு!”
ஏர்போர்ட்டில் வெண்பா அப்படி சொன்னதும் அதிர்ந்தவனுக்கு,முந்தினம் கூட தான் இந்த விஷயத்தை மாற்றி சொன்னது நினைவில் வந்தது. மதனின் போனுக்கு அழைத்தவன், நடந்த விஷயங்களை அவனுக்கும் சொல்லியிருந்தான்.
“விழியா, இப்ப என்ன டா செய்றது?”
“வினையே உன் மூலமா தான் ஆரம்பிச்சியிருக்கு! இப்ப என்னை கேளு என்ன செய்றதுன்னு!”
“நான் என்ன பண்ணேன்?அது ரொம்ப காலமா வேலை செய்யாம இருந்தது!”
“ சரி விடு மதன்.அவ சொன்ன விதத்தில் கொஞ்சம் டென்ஷன் ஆகிட்டேன்.நடந்து முடிஞ்சதை பத்தி நாம ரெண்டு பேர் பேசி பிரயோஜமுமில்லை.வைக்கிறேன் டா…”
நொந்து போயிருக்கிறான் என்பது அவன் குரலில் தெரிந்தது மதனுக்கு!“நம்மளால் அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வதனி!எனக்கு அது தான் கஷ்டமா இருக்கு”
மதிவதனிக்கும் அப்படி தான் இருந்தது. கணவன் இப்போது சொன்னதில் குற்ற உணர்வு இன்னும் அதிகமாகி விட்டது. வெண்பா இன்னும் ஊர் போய் சேர்ந்திருக்க மாட்டாள், போனை எடுத்து பார்த்த மதி யோசித்து கொண்டிருக்க,
“ அந்த ரதி விழியனை கல்யாணம் பண்ணன்னு தொந்திரவு செய்த விஷயம் எல்லாம் சொல்லிடாதே மதி. ஜஸ்ட் பிரண்டுன்னு நினைச்சதுக்கே இத்தனை அக்கப்போர்”
“ம்ம்…”
“பிரச்சனையை இன்னும் பெரிசு பண்ணிடாதே மதி”
அவன் பங்குக்கு எச்சரித்தான். மதிவதனி யோசிக்க ஆரம்பித்தாள்.

இதை பற்றி விழியனே நேரிடையாக விரைவில் வெண்பாவிடம் சொல்வது உத்தமம். சீக்கிரம் சொல்ல வேண்டுமே. இந்த ரதி ஏதாவது குழப்பம் செய்து விட்டால் என்னவாவது!மதிவதனிக்கு நிறைய சிந்தனைகள்… கூடவே தானும் இதற்கு ஒரு காரணியாகி விட்டோமே என்ற கவலை வேறு! தான் இதில் என்ன செய்யலாம் என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஊரில் வந்திறங்கிய வெண்பாவை அழைக்க இலக்கியன், ரேணுகா மற்றும் தமிழ் விமான நிலையம் வந்திருந்தனர்.அவள் முகத்தை பார்த்தவுடனே ரேணுகாவுக்கு தெரிந்தது எதுவோ சரியில்லை என்று…
வீட்டிற்கு திரும்பியதும் அவள் உடன்பிறப்புகள் அவளிடம் அந்த ஊரை பற்றி எல்லாம் விசாரித்து கொண்டிருக்க, ரேணுகா மகனுக்கு போன் செய்து அவர்கள் இருவருக்கும் ஏதும் பிரச்சனையா என்றாள்!
“ மதன் வீட்டில் ரதி என் கூட இருந்த போட்டோ பார்த்தாளாம்! ஏன் முன்னமே அவளை தெரியும்னு சொல்லலைன்னு என் மேல கோவம்”
“ அதை என் கிட்டையும் கேட்டா டா , நான் அந்த ரதியை தெரியும்னு தான் சொன்னேன்”
“ம்ம்”
“ஏன் டா இந்த பிரச்சனை உனக்கு ? அவளை தெரியும்னு சொல்லியிருக்க வேண்டியது தானே?”
“மா அவளை நிறைய தடவை நேரில் பார்த்து தெரியாத ஆள் போல நடந்திருக்கேன், எப்படி இப்ப இப்படி சொல்றது? என்ன சொன்னாலும் வெண்பா குற்றம் கண்டுபிடிக்க தான் போறா! சரி நீங்க அவளை கவனிங்க. அப்புறம் இதுக்கும் எதையாவது கற்பனை செய்ய போறா. வச்சிடுறேன் மா”

ரேணுகாவுக்கு மகனுடன் பேசிய பிறகு மனதில் ஏதோ இனம் புரியாத சஞ்சலம்! இது சின்ன பிரச்சனை தானா? இல்லை பூதாகரமாகுமா? பூஜை அறைக்குள் சென்றவள் மகள் மருமகளை பற்றி வேண்டுதலை வைத்து விட்டு வந்தாள்.

இலக்கியன் தன் கேள்விக்கணைகளுக்கு முடிவே இல்லாததை போல் தொணதொணத்தான், அதுவும் வெண்பாவின் மனக்கஷ்டம் புரியாமல்!
“டேய் கொஞ்சம் சும்மா இருக்கியா? இங்கே தானே இருக்க போறேன் , அப்புறம் சொல்றேன் போ”
அக்காவின் எரிச்சலை பார்த்தவன், “உன் கிட்ட போய் பேச வந்தேன் பாரு, நான் கிளம்புறேன் போ! தமிழ் கா வரியா , உன்னை வீட்டில் விட்டிடுறேன்” என்க,
“இல்லை இலக்கியா , நான் போக நேரமாகும்”
தமிழ் தங்கையின் மனநிலையை ஓரளவுக்கு யூகித்து பழகியிருந்ததாள் அவளை இப்போது தனியே விடும் எண்ணம் இல்லை. தம்பி அந்த அறையை விட்டு அகன்றதும்,
“ என்ன பிரச்சனை வெண்பா? மறுபடியும் என்ன ஆச்சு? நீ கொஞ்ச நாள் மட்டும் தான் ஒழுங்கா இருப்பேன்னு வரம் ஏதும் வாங்கியிருக்கியா?”
தமிழ் இவ்வாறு சொல்ல, இருந்த கோபம் ஆற்றாமை அனைத்தையும் தன் அக்காளின் மேல் பாய்ச்சினாள்,
“ ஆமா எப்பவும் என்னையே ஏதாவது சொல்லு”. முகத்தில் எள்ளுக் கொள்ளும் வெடிக்க தங்கை சொன்னதில் அந்த வாயில்லா பூச்சி, வாயை இறுக மூடிக்கொண்டது.வெண்பாவுக்கு இப்போது யாரிடமும் எதுவும் சொல்லத் தோன்றவில்லை. அவளுக்கே சில நேரம் இந்த விஷயத்தில் குழப்பம் இருக்க தான் செய்தது…

ரேணுகாவிடம் பேசிய பிறகு விழியன் பல முறை வெண்பாவின் மொபைலுக்கு அழைக்க அவ அதை ஆன் செய்யவில்லை போலும், வேறு வழி இல்லாமல் வீட்டு எண்ணிற்கு அழைத்தான் விழியன். அவள் வந்து போனில் பேசும் வரையில் என்னவெல்லாம் சொல்ல வேண்டும் என்று யோசித்து வைத்த அனைத்தும் அவளின் ஜீவன் இல்லாத குரல் கேட்டதும் மறந்து போனது!
“வெண்பா என்ன மா, என் மேல் என்னடீ கோபம்? என்ன விஷயம்னு முழுசா கேட்டுவிட்டு கோவப்படு!”
பதிலில்லை. அவன் அறிந்தது தானே அவளின் பிடிவாதம்!
“ஆமா வெண்பா , ரதியை முன்னமே தெரியும் , ஒரு ஃபிரண்டா. ஆனா ஒத்துவரலை.இப்ப சுத்தமா பேச்சுவார்த்தை சுத்தமா இல்லை. உன் கூட அவ வேலை பார்க்குறா என்பதே நம்ம கல்யாணத்தில் அவளை பார்த்த பிறகு தான் எனக்கு தெரிய வந்தது.”
“…”
“ஏற்கனவே நமக்குள் நிறைய மனக்கசப்புகள்.அதுக்கு பின்னாடி நடந்த கல்யாணம். அப்படியிருக்கையில் அவளை பத்தி வேற சொல்லி நமக்குள்ள இடைவெளியை அதிகமாக்க எனக்கு விருப்பமில்லை வெண்பா. அந்த ஒரு காரணத்துக்காக தான் சொல்லலை. வேற எந்த விஷயமும் இல்லை. என்னை நம்புடீ”
நீளமாய் பேசினான். எப்படியாவது தன்னின் நிலையை அவளுக்கு உணர்த்திவிட வேண்டும் என்று எண்ணினான்.
அப்போதும் அழுத்தமாய் வாயை மூடிக் கொண்டிருந்தாள் வெண்பா!
“என் வாழ்க்கையில் உன்னை தவிர யாரும் இதுவரை இருந்தது இல்லை, இனிமேலும் அப்படித்தான்”
“…”
“பேச மாட்டியா?”
“வச்சிடுறேன்” ஒற்றை வார்த்தையில் போனை வைத்துவிட்டாள். விழியனுக்கு இதற்கு மேலும் அவளை எப்படி அணுகுவது என்பது தெரியவில்லை.
அவனுக்கும் ஊர் திரும்பும் நாள் நெருங்கிவிட்டதால் ,கம்பெனி வேலைகள் தலைக்கு மேல் இருக்க, நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான். அவன் செய்த மிகப் பெரிய தவறு அது தான். விட்டு பிடிக்கலாம் என்று அவன் நினைத்தது பிடிக்க முடியாமலே போனது!

வெண்பா ஆபிஸ் வர ஆரம்பித்ததும் இல்லாத சந்தோஷத்தை முகத்திலும் செயலிலும் காட்டினாள் ரதி! வெண்பாவுக்கு தான் முன்பை போல் அவளிடம் சாதாரணமாய் இருக்க முடியவில்லை. அவளை போல் நடிக்கவும் வரவில்லை. அமைதி காத்தாள்.ரதிக்கு வெண்பாவின் ஒதுக்கம் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது! விழியன் தன்னை பற்றி என்னவும் சொல்லியிருப்பானோ என்ற சந்தேகம் உறுதியானது! ஆனால் அதை எப்படி இவளிடம் நேரிடையாக கேட்பது?

“காண்டீன் போலாம் , வரியா வெண்பா?”
அவளுக்கும் ரதியிடம் நிறைய கேட்க வேண்டி இருந்தது. கூட்டம் இல்லாத இடமாய் பார்த்து அமர்ந்தனர்.
ரதியிடம்,
“உனக்கு விழியனை முன்னமே தெரியுமா ரதி?”
அதிர்ச்சியாக பார்ப்பதை போல் பார்த்து வைத்தவள், தலைகுனிந்தபடி ஆமாம் என்றாள்.
“ஏன் என்கிட்ட சொல்லலை?”
“அது…நான் எப்படி சொல்வேன் வெண்பா…எனக்கு தெரியலை!”
எதேச்சையாக அங்கு வந்த பிரகாஷ் இருவரும் தீவிரமாய் பேசிக் கொண்டிருந்ததை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.விழியன் வெண்பா வாழ்க்கையில் ரதி ஏதேனும் ஆட்டம் போட ஆரம்பித்துவிட்டாளோ என்று தோன்றியது.

“உங்க இரண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை?”
சொல்ல தயங்குவதை போல் சிறிது நேரம் கடத்தியவள்,

 “என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டேன் விழியன் விருப்பப்படலை!”
என்ன!
“என்ன ரதி சொல்றே?நீங்க இரண்டு பேரும் காதலிச்சீங்களா?”
அவளால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
ரதி சொன்னதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை.கணவன் சொல்ல வந்ததை நின்று கேட்க அவளுக்கு விருப்பமில்லாமல் இப்போது ஒரு சாகசகாரி சொல்லை கேட்க முனைந்தாள்.அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் ரதி அழுதாள்! அத்தனையும் நடிப்பு! தாங்க முடியாததை போல் வெண்பாவின் கையில் முகம் புதைத்துக் கொண்டாள்!!
“ரதி நீ… நீ உண்மையாவா சொல்றே!”
அழுகிறேன் என்று பெயர் பண்ணிக் கொண்டு குனிந்திருந்தவள் தலையை மட்டும் அசைத்து ஆமாம் என்பதாக சொல்ல,வெண்பாவுக்கு பிரளயமே வெடித்தது. விழியனை நம்பியது தவறோ? அவன் மேல் அத்தனை காதல் வைத்திருக்கிறேன்! இவனானால் மன்மதனை போல் போகிற இடத்தில் எல்லாம் யார் யாரையோ மயக்கியிருக்கிறான். தனக்கு தெரிந்தே ரதி , அந்த மதியும் கூட தான் வீழ்ந்தாள்.சம்மந்தமே இல்லாமல் தோழியை வேறு கரித்துக் கொட்டினாள்.மதியின் தடுமாற்றத்திற்கு தானும் தானே காரணம் என்பதை சுலபமாய் மறந்தாயிற்று!யோசனையின் நடுவில் ரதியிடமிருந்து தன் கையை உருவிக்கொண்டவள், பெர்மிஷன் வாங்கி கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள். போகிறவளை பார்த்துக் கொண்டிருந்த ரதியின் முகத்தில் புன்னகை அரும்பியது. அவளுக்கு கிடைத்த முதல் வெற்றி இது!

வெண்பா பழைய குருடி கணக்காய், மாறிவிட்டாள்.விழியன் முகத்தில் இனி விழிக்கவே கூடாது என்று உருப்படாத முடிவெடுத்தாள்.

வெண்பா நினைத்துக் கூட பார்க்கவில்லை, ரதிக்கும் விழியனுக்கும் இப்படி ஒரு உறவு இருக்குமென்று.அவன் அவளை தெரியாது என்று மறைத்ததிலேயே புரிந்து விட்டது , இது தோழமைக்கும் மேறபட்ட ஏதோ விஷயம் என்று!!
தன்னை நன்றாக ஏமாற்றிவிட்டான்.அவன் மூலம் அனுபவித்த இனிமையெல்லாம் இப்போது ஏதோ அருவருப்பாய் இருந்தது!!
‘அவன் கிட்ட பேசி பார்த்திட்டு முடிவெடு வெண்பா, நீயா முடிவுக்கு வராதே’ மனசாட்சியின் வார்த்தைகளுக்கு பதில் தயாராய் வைத்திருந்தாள்.
‘அவன் கிட்ட கேட்டா இல்லைன்னு தான் சொல்வான், இத்தனை நாள் அவளை யாருன்னே தெரியாத மாதிரி நடிச்சவன் தானே அவன்!!
பல விதமான விவாதங்கள் அவளுக்குள்! இறுதியாய் அதற்கு தீர்வாய் அவள் எடுத்த முடிவு தான் பிரிவு!
அவனிடம் பேசுவதை தவிர்த்தாள், ரதி சொன்னதை முழுவதுமாய் நம்பிவிட்டாள். விழியனிடம் நம்பிக்கை அற்றுவிட்டது. ரதியிடம் விஷயத்தை கேள்விபட்ட பின் அவள் குணாதிசயங்களே மாறி விட்டது! அவன் வருகையின் முன் அந்த இடத்திலிருந்து கிளம்ப எத்தனிக்கிறாள். ரேணுகாவுக்கு மருமகளின் செயல்களில் மிகுந்த கோபம்!
“எவளோ சொன்னான்னு இப்படி கிறுக்குத்தனமா முடிவெடுக்காதே வெண்பா! என்னனாலும் அவன் கிட்ட நேரிடையா பேசிட்டு செய்”
“நீங்க சும்மா இருங்க அத்தை.அவர் கூட சேர்ந்து எல்லாத்தையும் மறைச்சது நீங்களும் தான்”
அவள் ஒரு நிலையில் இல்லை! தனக்கு நல்லதை நினைக்கும் எல்லாரிடமும் எரிச்சலை காட்டினாள்.
“என்ன டி நான் மறைச்சேன்? என் பையனுக்கு எந்த பொண்ணு மேல இஷ்டமோ அவளை கட்டிவைச்சிருக்கப் போறேன்! அது உனக்கும் தான் தெரியுமே.அப்படி இருக்கையில் ரதி சொல்வது ஏதாவது ஒத்துவருதா பார்!மூளையை கொஞ்சம் உபயோகி வெண்பா!”
“நீங்க சொன்னதெல்லாம் கேட்க , நான் உங்க அண்ணன் சபாபதி இல்லை. நீங்க விழியன் தப்பே செஞ்சியிருந்தாலும் அதை மறைக்க தான் பார்பீங்க. உங்க கிட்ட இதை பத்தி பேச நான் விரும்பலை! வரேன்!”
வேலை . வீடு , கணவன் , மாமியார் எதையும் பற்றிய கவலையில்லாது அவள் போய்விட்டாள் தன் பிறந்த வீட்டுக்கு!
ரேணுகாவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.விழியனுக்கு போன் செய்தால் லைன் கிடைக்காது, அவன் விமானத்தில் இருப்பான்.இருந்தாலும் முயன்று பார்த்தாள்.நினைத்த மாதிரியே அழைப்பு போகவில்லை.
தன் அண்ணன் சபாபதிக்கு போன் செய்ய சரஸ்வதி தான் எடுத்தாள்.
“பாருங்க அண்ணி , இந்த பெண்ணை!”
என்று ஆரம்பித்து அன்றுவரை நடந்த கூத்துக்கள் அத்தனையும் சொல்லி முடிக்க , சரஸ்வதிக்கு பேச்சே எழவில்லை.
“மருமகளை பத்தி குறை சொல்ற மாமியாரா நான் இருந்திட கூடாது. வெண்பாவும் எனக்கு விழியனை போலத் தான்னு நான் நினைச்சது தப்பாகிட்டு அண்ணி! என் பேச்சுக்கு ஒரு மரியாதை கொடுக்காம அவ பாட்டுக்கு கிளம்பி போயிட்டா!”
சரஸ்வதிக்கு கவலை பிடித்துக் கொண்டது.
“அவளுக்கு கொஞ்சம் குருட்டு தைரியம் ஜாஸ்தி.வரட்டும் வந்த வழியே திருப்பி அங்க அனுப்பிடுறோம்.நீ கவலைபடாதே ரேணுகா”
“நானும் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன்…அவ பத்திரமா அங்க வந்து சேர்ந்ததும் ஒரு போன் மட்டும் பண்ணிடுங்க அண்ணி! விழியன் வேற நாளைக்கு இங்க வந்து என்னவெல்லாம் கேள்வி கேட்பானோன்னு இருக்கு!”

அவள் நினைத்த மாதிரியே அடுத்த நாளில் விழியன் வந்தான்… தன் அன்னையிடம் வெண்பா எங்கே என்றான்!

Comments Here


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!