kodimalar 5

kodimalar 5

தங்கராசு வீடு

கிழவிகள் இருவரும் வெளியே அமர்ந்திருந்தனர்… தங்கராசு வயர் கட்டிலில், வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தான்…

“லே, சூதானமா நடந்துக்கோ… அம்மைக்கு தெரியாம வச்சிக்கோ… அந்தப் புள்ளைகளையும் பார்த்துக்கோ… செரியா…” என்றார் பேச்சிக்கிழவி.

“ம்ம்ம் செரி ஆச்சி…”

“ஏம்ட்டி முத்து, நீ என்னாத்த  பேப்பர்ல பார்த்துகிட்டு இருக்க…”

“இல்லே பேச்சி… இந்த அமெரிக்க நாட்டாம, யார்கூடயோ நிக்கிற மாதிரி போட்டோ போட்ருக்காக… அதேன் யாருன்னு பார்த்தேன்…” என்றார் முத்தாச்சி.

“ஒன்னு, கொரியாக்காரன இருப்பாக… இல்லே ஜப்பான் ஆளுகள இருப்பாக முத்தாச்சி…” என்றான் தங்கராசு.

“இல்லலே, நேத்தே பிபிசில படம் பார்த்தோம்ல… ஏதோ பிளைன்ன சுட்டுட்டானு… அதுவாலே… ” என்றார் பேச்சிக்கிழவி.

” அது ஈர்ரான் காரேன் ஆச்சி… “

காலை நடைப்பயிற்சியை முடித்துக் கொண்டு, அஞ்சுதம் வந்து கொண்டிருந்தார்… அவர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டவர், ‘காலெம்பறயே வெட்டிப் பேச்சு…’ என்று நினைத்துக் கொண்டே, அருகில் வந்து நின்றார்… அவரைப் பார்த்தும் தங்கராசு எழுந்து கொண்டான்…

ஆனால் அவர்கள் பேசிய விஷயத்தைப் பற்றி, அவருக்குத் தெரிய வாய்ப்பில்லை…

அவர் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்… அவருக்கு இருப்பது புத்தகஅறிவு என்றால், அவர்களுக்கு இருப்பது உலகறிவு… இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.

“தங்கராசு, கார எடுத்து வெளிய நிப்பாட்டிருக்க… எங்கனயும்  போறனா, கார சுத்தபத்தமா தொடச்சுட்டு எடுத்திட்டு போ… செரியா…”

“செரி அம்ம…”

அதைச் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடம் செல்லத் தயாராகத் தொடங்கினார், அஞ்சுதம். சிறிது நேரத்தில் கிழவிகளிடம் சொல்லிவிட்டு தங்கராசும் கிளம்பிவிட்டான்.

****

ஊருக்கு வெளியே இசக்கியும், மலரும் நின்றுகொண்டிருந்தனர்…

தங்கராசு வந்தவுடன் “ஏன் இவ்வளவு தாமசமா(late) வர்றீக… எவ்வளவு நேரம் காத்திக்கிட்டு கிடக்க… யாராவது பாத்துட்டா என்னா செய்ய சொல்லுங்க…” என்று பொறிந்தாள் மலர்.

“ஏன்ட்டி, அவுக செரியான  தேரத்லதான வந்திருக்காக…”

“ஒனக்கு தெரியாது இசக்கி… நீ பேசாம இருட்டி…”

“ஏங்க, ரெம்ப ஏசிக்கிட்டு இருந்தீகனா, எங்க ஆச்சிகிட்ட  சொல்லிருவேன்… ” என்று சவால் விட்டான், தங்கராசு.

“ஆச்சிகிட்ட சொல்வீகளா… சொல்லுங்க… ஒங்க ஆச்சிகளுக்குப் பயப்படுற ஆளு நான் இல்லே… ” என்று சதிராடினாள்.

அவள் பேசிக்கொண்டிருக்கும்போதே, கிழவிகளைக் கைபேசியில் அழைத்தான்.

“ஆச்சி, இந்த மலரு புள்ள ஏசிக்கிட்டே இருக்கு… என்னான்னு கேளுங்க… ” என்று கைபேசியை, மலரிடம் கொடுத்தான்.

தயங்கிக் கொண்டே வாங்கியவள்… ” ஹலோ, நான் மலர் பேசறேன்… ” என்றாள்.

“ஹலோஓஓஓ நாங்க, மலரு மாமியா வீட்டிலருந்து பேசுறோம்…” என்று, கோரஸாக பதில் வந்தது.

“ஏங்க, நான் நேத்தே தெளிவா சொல்லிட்டேன்ல… அப்புறம் எதுக்கு இப்படியே பேசிட்டு இருக்கீக…”

“சொன்ன… ஆனா ஒன் செய்கை வேற மாதிரில  இருக்கு… ” என்றார் பேச்சிக்கிழவி.

“என்னா வேற மாதிரி…”

“நேத்து, ராவைல தங்கராசு நல்லா உறங்கிட்டான்… நீ எப்படி?? “

மார்கழி மாதம், உள்ளங்கையில் இட்டுக் கொள்ளும் மருதாணி போல், கொடிமலர் முகம் மலர்ந்து, சிவந்து, சிரித்தது…

“ஏன்ட்டி மலரு, எதுத்தால தங்கராசு சிரிக்கிறானானு பாரு? “

கொடிமலர், மெதுவாக தலையை நிமிர்த்தினாள்… புழுதி பரந்திடும் கிராமத்துச் சாலையில், நின்று கொண்டு இரவில் இம்சித்தவனின் முகம் இன்முறுவல் காட்டியது… அதை இமைக்க மறந்து, இஷ்டத்துடன் பார்த்தாள்…

அதற்குள் கைபேசியின் மறுமுனை கூச்சலிட்டது…

“மலரு… மலரு… போஃன் பேசுங்க… கூப்பிடறாக பாருங்க… ” என்று, இரவின் கனவிற்கு காரணமானவனே, இக்கணத்தின் கனவைக் களைத்தான்.

“ஹலோ…”

“என்னா சிரிச்சானா?”

“ம்ம்ம்…”

“ஏன்னு தெரியுமா…”

“ம்கும்…”

“அப்படினா, நீ ராவைல உறங்காதத, அவன் கண்டுக்கிட்டானு அர்த்தம்… “

” – – – – “

” இப்பம், ஒங்க அக்காவா பாரு… “

மலர், திரும்பி இசக்கியைப் பார்த்தாள்.

“கோவமா இருக்காளா… “

” ஆமா… “

“பொறவு, அவளுக்கு ஒத்தாசை பண்றேன்னு வந்திட்டு, நீ ஒன் சோலிய பார்த்தா… கோவம் வரும்ல… ” என்று உச்ச தாளத்தில் சிரித்தனர்.

” – – – – “என்றிருந்தாள் மலர், அந்த தாளத்திற்கு, பாடல் வரிகள் எழுத முடியாமல்.

“ஆனா, நீ நேத்து கள்ளம் பேசறனு நினைச்சேன்… நெசம் பேசிருக்கட்டி…”

” புரியல… “

“உறங்கலனா கனவு வரும்னு சொன்னேல… அது நெசம்ட்டி… ஏன்னா, இப்பம் செத்த தேரத்துக்கு மின்னாடி, நீ அப்படிதான நின்றுப்ப … ” என்று, அத்தனை தூரத்திலிருந்தே, மலரின் தகிடுதத்தைக் கண்டறிந்தார்.

உடனே தங்கராசுவிடம் கைபேசியைக் கொடுத்துவிட்டு…”நாம பேசறத ஒங்க ஆச்சிங்ககிட்ட சொல்லுவீகளா…” என்றாள் கோபமாக.

” இல்லே மலரு… அது… “

“இனிமே சொன்னீங்க, அப்புறம் பேசவே மாட்டேன்… ” என்று விருவிருவென்று சென்றாள்.

“வாங்க வந்து கார எடுங்க…” என்று அதிகாரம் வேறு.

இசக்கியோ, என்ன நடக்கிறது என்று பாதி புரிந்தும், புரியாமலும் இருந்தாள்…

பின் தங்கராசுவும், இசக்கியும் ஏறியவுடன், கார் மார்த்தாண்டத்தை நோக்கி விரைந்தது…

****

மார்த்தாண்டம் ஊரின் வெளியே, கண்ணன் வாத்தியார் காத்துக் கொண்டிருந்தார்…

காரிலிருந்து இறங்கிய இசக்கி, ஓடோடிச் சென்று,  கண்ணனை ஆரத் தழுவிக் கொண்டாள்…

“எப்படி என்னய விட்டுப் போக முடிஞ்சது? ஒரு வார்த்தை சொல்லல… நான் எப்படி பயந்திட்டேன் தெரியுமா…” என்றார் கண்ணன்.

“இல்லே, அப்பாதான்… எதுவும் சொல்லாம இங்கன கூட்டிட்டு வந்துட்டாக… போஃன வேற வாங்கி வச்சுட்டாக… ஒன்னுமே பண்ண முடியல…” என்று, அவரிடமிருந்து விலகினாள்.

“இப்பம் எப்படி முடிஞ்சது… “

“இவுகதான் ஒத்தாசை செஞ்சாங்க, ஒங்களப் பார்க்கிறதுக்கு…”

“இவுக யாரு…”

“இவுக எங்க ஊருகாரக… பெயர் தங்கராசு… மலருக்கு தெரிஞ்சவக… என்னய பெண்ணு பார்க்க வந்தாக… “.

“பெண்ணு பார்க்கவா… அந்த, அளவுக்கு ஒங்க அப்பா போயிட்டாகளா… ரெம்ப மோசம்… அப்புறம் என்னாச்சு… ” என்றார் கண்ணன் கோபமாக.

“கோவப்படாதீக… இவுக என்னய விடக் கம்மியா படிச்சிருக்காகனு சொல்லி, பிடிக்கலன்னு சொல்லிட்டேன்… ” என்றாள் தேவையில்லாமல் இசக்கி.

“இப்பம் என்னா செய்யனும், அதமட்டும் பேசுங்க…” என்று, அதைத் திருத்தினாள் மலர்.

“அடுத்த வாரமே கல்யாணம் கட்டிக்கலாம்… நான் ஏற்பாடு பண்றேன்… நீ வந்தா போதும்… ” என்றார் கண்ணன்.

“ஏங்க, அவுக அப்பாகிட்ட, மறுக்கா வந்து பேசிப் பார்க்கிறீகளா…” என்றான் தங்கராசு.

“இல்லே… நான் ரெம்ப பேசிட்டேன்… திரும்பவும் பேசினா, இப்பம் சம்மதம் சொன்ன எங்க அப்பா அம்மா கஷ்டப்படுவாக… “

“மலரு, நீங்களாவது சொல்லுங்க… ஒங்க அப்பாகிட்ட பேசச் சொல்லி… “

“அவிய முடிவு செரிதான் தங்கராசு… கல்யாணம்னா, என்னா செய்யனும் சொல்லுங்க சார்…”

“இசக்கியோட சர்டிபிகேட் வேனும் மலரு… ரெஜிஸ்டர் ஆபிஸ்ல பதியறதுக்கு…”

“என்னிக்கி தரனும் சார்…”

“நாளே மறுநாளுக்குள்ள…”

“செரி சார், சர்டிபிகேட்ட இவுககிட்ட கொடுத்து விடறோம்… ” என்று தங்கராசுவைக் கைகாட்டினாள்.

“நாமளே வந்து கொடுப்போம், மலரு… இவுகள ஒரு வாரம் பார்க்காம இருக்க முடியாது… ” என்றாள் ஏக்கத்துடன் இசக்கி.

“ஏங்க, நடக்கிற காரியமா… ஊரில யாருக்கும் தெரிஞ்சா… இன்னிக்கி வந்ததே பெருசு… ” என்று பதறினான் தங்கராசு.

“இன்னும் ஒரு வாரம் ஒங்களப் பாக்காம  இருக்கவே முடியாது… ஏதாவது செய்ங்க… ” என்று கண்ணனிடம் மன்றாடினாள் இசக்கி.

“ஏதாவது வழி பண்ணுங்க தங்கராசு… அவதான் இவ்ளோ கேட்கிறாள…” என்றாள் மலர்.

கண்ணனும் இசக்கியும் கெஞ்சும் பார்வையுடன், அவனைப் பார்த்தனர்.

சிறிது நேரம் யோசித்தவன்… “செரிங்க, அப்படின்னா நாளே மறுநாள், ஊரில இருக்கிற எல்லா அக்கச்சிகளையும் (sisters) கூட்டிக்கிட்டுப் படத்துக்குப் போவோம்… அதுல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துக்கோங்க… மார்த்தாண்டம் தியேட்டர்க்குத்தான் வருவோம் கண்ணன் சார்… நீங்க அங்கன வச்சி, சந்திச்சுக்கோங்க… ” என்றான்.

“சினிமாவுக்கா… எதுக்கு… அதுவும் அத்தனை பேரக் கூட்டிட்டு… ” என்றாள் மலர்.

“மலரு, துளைச்சிக் கேள்வி கேட்காத… செரின்னு சொல்லுட்டி… ” என்றாள் இசக்கி.

” ம்ம்ம்.. செரி… ” என்றாள் மிகுந்த யோசனையுடன்.

“செரி இசக்கி, நீ சர்டிபிகேட் எடுத்திட்டு வா… மிச்சத்த நான் பார்த்துக்கிறேன்… ” என்றார் கண்ணன்.

“செரிங்க, செத்த தேரம் அங்கிட்டு போய் பேசிட்டு வாங்க… “என்று, அவர்களை அனுப்பினான் தங்கராசு.

அவர்கள் இருவரும் பேச சென்றுவிட..

மலர், தங்கராசுவைப் பார்த்து… “இது அவுக பேசவா… நாம பேசவா…” என்றாள்.

“நீங்க வேணா, இங்கன  ஒத்தேல நில்லுங்க… நான் காலாற நடந்திட்டு வரேன்…” என்று நடக்க ஆரம்பித்தான்.

சிறிது வினாடிகள், அவன் எட்டிச் செல்லும் தூரத்தைக் கண்டவள்… “ஏங்க, நில்லுங்க நானும் வாரேன்…” என்று, அவன் பின்னேயே ஓடினாள்.

சாலையின், ஒருபுறம் நிலவுத் தோழனைக் காணாமல், அன்னாந்து பார்த்து, வானத்தில் தேடும் சூரியகாந்தி பூந்தோட்டம்… மற்றொரு புறத்தில் நறுமணம் கமழும் பிச்சிப் பூந்தோட்டம்… நடுவில் ஓடிடும் சாலையில், நடந்திடும் நாயகன் நாயகி…

சற்று தூரம் நடந்தவன், சாலையின், ஒருபுறம் இருந்த மைல்கல்லில் மீது அமர்ந்து கொண்டான்…

“நீங்க வேனா காருக்குள்ள ஒட்காருங்க மலரு…”

“பரவால்ல…” என்றவள்.. “ஆமா, நேத்து ஒங்க அம்மா, எதுக்கு அவ்வளவு கோபப்பட்டாக…” என்று கேட்டாள்.

“எங்க அம்ம படிக்காதப் புள்ளையா எனக்குப் பார்க்கிறாக… நீங்க படிச்சிருக்கீகள… அதேன்…”

“எதுக்கு, படிக்காத புள்ளையா… “

“எங்க அய்யன் படிக்கலங்க, அது எங்க அம்மைக்கு சுத்தமா பிடிக்கல… அவியகளுக்குள்ள ஒரே சண்ட, சச்சரவு… எங்க அம்ம, அய்யன ஏசிக்கிட்டே இருப்பாகளாம்… அதேன், படிச்ச புள்ளைனா, எங்கூட சண்ட போடும்ல”

“அவிய சண்ட போட்டா, மத்தவுகளும் சண்ட போடனுமா…” என்றாள், கிழவிகள் இல்லாத தைரியத்தில்.

“மலரு, என்னா சொன்னீக… “

“மத்தவுக… நாமனு சொல்லல… புரியுதா… ” என்றாள் அழுத்தமாக.

” ம்ம், செரிதான்… “

“அப்புறம் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டாக… “

“கட்டி வச்சிட்டாக… அதெதுக்கு இப்பம்… “என்றான். அவனுக்கு அம்மாவைப் பற்றி, யார் எது பேசினாலும் பிடிக்காது என்பது போல்.

“செரி வுடுங்க… அவுக டீச்சரா இருந்துகிட்டே, ஒங்கள ஏன் படிக்க வைக்கல… “

“எனக்கு வரலங்க, அம்புட்டுதான்… ஆனா, படிப்பு விஷயத்தில ஒங்களுக்குத் தைரியம் அதியந்தான்… “

“ஏன் இப்படிச் சொல்றீக… “

“பொறவு, எத்தறை மட்டம் பெயிலானாலும், மாறி படிக்கிறீகள… அதேன்… ஆனா கஷ்டமா இல்லையா, தோத்துக்கிட்டே இருக்கிறது…”

“நீங்கதான், நான் தோத்திட்டதா சொல்றீக… ஆனா, நான் ஒத்துக்க மாட்டேன்… என்னிக்கி என்னோட முயற்சிய நிறுத்திறேனோ, அன்னிக்கிதான் நான் தோத்திட்டேனு அர்த்தம்… அதுவரைக்கும் ஜெயிக்கப் போராடிக்கிட்டு இருக்கேனுதான் சொல்வேன்…”

“புரியலங்க… ஆனா அந்தால என்னா படிக்கப் போறீக…”

“தெரியல தங்கராசு… முதல கொடிமலர் பிகாம், அப்படின்னு எங்க அப்பாகிட்ட பெருமையா சொல்லனும்… இப்பம் அவ்வளவுதான்…”

“அதென்ன அப்பாகிட்ட…”

“இத்தனை மட்டம் பெயிலான, எல்லார் வீட்லயும் எப்படி ஏசுவாக… ஆனா எங்க அப்பா எதுவும் சொல்ல மாட்டாக… ஏன், அன்னிக்கி இசக்கி நிச்சிதார்த்தம் நிறுத்தினப்பக் கூட, என்னய, எதையும் யோசிக்காம படின்னுதான் சொன்னாரு… “

” ஆனா, அதே அப்பாவுக்கு தெரியாம, இந்தக் காரியம் செய்றீக… “

” அது அப்பாக்கு செய்ற நியாயம்னா, இது இசக்கிக்கு செய்றது… “

“புரியலங்க… “

“எங்க அம்மா, நாங்க ரெம்ப சின்னதா இருகிறப்பவே தவறிட்டாங்க… அப்பத்லிருந்து இசக்கிதான் வீட்டப் பார்த்துப்பா… காலெம்பற சமைச்சிட்டு, ஸ்கூலுக்கு போய்ட்டு, திரும்பி வந்து ராவைக்கு சமைச்சி… எவ்வளவு கஷ்டம்… எதுவுமே வெளில சொல்லமாட்டா… இத்தனை நாள்ல அவ ஆசைப்பட்டு எதுவுமே கேட்டதில்ல… இதுதான் முததடவ… அதே… “

“அப்பம் அப்பாகிட்ட பேசலாம்ல… “

“இல்லே தங்கராசு, அப்பா சம்மதிக்க மாட்டாக… கல்யாணம் கட்டி வச்சிட்டு, அப்புறமா சொல்லிச் சமாளிச்சிருவேன்… ” என்று சொல்லிவிட்டு, மண் தரையில் அமர்ந்து கொண்டாள்…

“ஏங்க, இதுல ஒட்காருங்க… ” என்று, அவன் எழுந்து கொண்டு, மைல்கல்லைக் காட்டினான்.

“இருக்கட்டும்… “

“செரிங்க, ரோட்டு மேல ஒட்காரதீக… செத்த உள்ள தள்ளி ஒட்காருங்க… ” என்றான் அக்கறையாக.

அவன் கூறியபடி, அவள் அமர்ந்ததும்… அவனும், அவள் எதிரில்

அமர்ந்து, மைல்கல்லில் சாய்ந்து கொண்டான்…

காலைக் கதிரவன் கீற்றுகள் நன்றாகப் பரவியிருந்தன… வெகு அரிதாகவே சாலையைக் கடந்தன வாகனங்கள்…

அவள் பகிர்ந்து கொண்ட, அவளது ஆழ்மனதின் ஆதங்கங்கள்,  அவனது அபிப்பிராயங்களை ஆழமாக்கின…

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாவிடினும், இருவரது எண்ணங்களும் எதிரில் இருப்பவரைப் பற்றியே இருந்தன…

சாலையின் ஓரத்தில், இதுவரை நேர்ந்திராத நெருக்கத்தில், இருவரும்… சூழ்நிலை மறந்து, ஆழ்நிலை தியானமாய், இருவரது அபிப்பிராயங்கள்…

சற்று நேரத்திற்கு பின்…

” தங்கராசு… “

” ம்ம்ம், சொல்லுங்க மலரு… “

“பூ பறிச்சித் தாறீகளா?”

“ஏங்க, இந்தப் பூவ தலையில வைக்க மாட்டாக…”

“தெரியும் தங்கராசு… பறிச்சுத் தாங்களேன்…”

“யாரு தோட்டம்னே தெரியலங்க… முதல்லே சொல்லிருந்தா வீட்லருந்தே எடுத்திட்டு வந்திருப்பேன்…” என்று சொல்லிக் கொண்டே பறிக்கச் சென்றான்.

“எப்பம் பரிட்சை…” என்று கேட்டுக் கொண்டே, ஒவ்வொரு பூவாகப் பறித்தான்.

“இன்னும் பத்து பதினைஞ்சு நாள்ல, சொன்னேன்ல…” என்று அவளும் எழுந்து கொண்டாள்.

பறித்து வந்த சூரியகாந்தியை, ஒரு பூங்கொத்தாக மாற்றி, மலரிடம் நீட்டினான். அவள் வாங்கும் போது, தர மறுத்துவிட்டு…

“இப்பம் ஒரு மூனு வார்த்தை இங்கிலீஷ்ல சொல்லுவாங்களே…” என்றான்.

“மூனு வார்த்தையா…” என்று, கேட்டவளுக்குள் தடக் தடக் என இரயில் ஓடும் சப்தம்…

“ஆமாங்க, படத்தில கூட பார்த்திருக்கேன்…” என்றவனால், அவளின் தடக் தடக் எக்குத்தப்பாக எகிறியது.

அந்தத் தடக் சத்தம் அவனுக்கு கேட்டதோ… இல்லையோ… “ஆல் தி பெஸ்ட்ங்க… ” என்று சொல்லி, இரயிலைத் தடம்புரளச் செய்தான்.

“தேங்க்ஸ்ங்க…” என்று, அதையும் ரசித்தாள்.

“வெல்கம்ங்க…”

“இட்ஸ் ஓகேங்க…”

தமிழ் அபிப்பிராயங்களே தடுமாறித் தத்தளித்துக் கொண்டிருக்கும் போது, ஆங்கில அபிப்பிராயங்கள் தடம் புரண்டு ஓடின… ஆனாலும் அரங்கேற்றப்படாத அபிப்ராயங்கள், பார்ப்பதற்கே அழகாய்த்தான் இருந்தது…

(தொடரும்)

error: Content is protected !!