km13

km13

அர்விந்த் வைஷுவைக் கடந்து செல்ல, சட்டென அவன் பின்னே சென்றாள்.
மண்டப வாசலில் சென்று தனது வண்டியின் மேல் சாய்ந்து நிற்க, மெதுவாக அவனிடம் வந்தாள் வைஷு.

அவளைக் கண்டதும், “ஹே என்ன?” என எழுந்து வந்தான். மீண்டும் ஏதாவது பிரச்சனையோ என நினைத்தான்.

“நீ எதுக்கு தேங்க்ஸ் சொன்ன?” அவனை ஆழ்ந்த பார்வை பார்க்க,

“அதை கேட்க தான் வந்தியா? எங்க அம்மா பண்ண இருந்த தப்ப என்கிட்ட சொல்லி பண்ண விடாம செஞ்சதுக்கு” இயல்பாக சொல்லிவிட்டான்.

“யாரா இருந்தாலும் அவங்க அம்மாவை சொன்ன கோபம் வரும். ஆனா?” அவளும் மனதிலிருந்ததை சொல்ல,

“இங்க பாரு வைஷு. எனக்கு அம்மா அப்பான்னு பார்க்க தெரியாது. தப்பு யார் பண்ணாலும் தப்பு தான். பார்ஷியாலிட்டி பார்த்து நடந்துக்க எனக்கு பிடிக்காது. தட்ஸ் ஏ கே !” தோளைக் குலுக்கிக் கொண்டான்.

அவனது ஏ கே என்ற வார்த்தையை கிண்டல் செய்ய அப்போது அவளுக்கு தோணவே இல்லை.

ஏதோ நினைவில் திரும்பிச் சென்றாள். அவளுக்கு ஒரு அடி முன்னே சென்று அவளை நிறுத்தியவன்,

“ரொம்ப யோசிக்காத.. நான் நல்லவன் தான். ஆனா உன்கிட்ட மட்டும் ரொம்ப கெட்டவனா நடந்துக்க தோணுது. எப்படி இருக்கணும்னு நீயே சொல்லு.. ” அவளுக்கு விளங்கும் முன்னர் தன் வண்டியில் கிளம்பிவிட்டான்.

‘இப்போ என்ன சொன்னான்? ப்ரொபோஸ் பன்னானா!?’ அதிர்ச்சியில் இருந்தாள்.

அதற்குள் பப்பி பாட்டி அவளைத் தேடித் கொண்டு வர,
“வைஷு இந்த அர்விந்த் ரொம்ப நல்ல பையனா இருக்கான் டீ! எவ்ளோ அழகா பேசி அவன் அம்மாவை கூட்டிண்டு போனான் பாத்தியா?”

“அவனுக்கு பேச்சுல என்ன குறைச்சல்?” பாட்டிக்கு நேரே கடுகடுத்தாலும், மனதில் அவன் சொன்னது இனித்தது.

இருந்தாலும் அதை அவளே ஏற்றுக்கொண்டு விட முடியவில்லை. காரணம் அவள் வைஷு.

“ஏன் டீ இப்படி சொல்ற.. உனக்கு அவனை பிடிச்சுதுன்னா அவனுக்கே உன்னை கல்யாணம் பண்ணி வெச்சிடுவேன் பாத்துக்கோ” பப்பி அனாயாசமாக கூற,

வைஷு அதிர்வைக் கண்களில் காட்டினாள்.
“பப்பி உனக்கு சில விஷயம் சொன்னா புரியாது, வா சாப்பிட போலாம்” என இழுத்துச் சென்றாள்.

பந்தியில் சம்மந்தி வீட்டார் முதலில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தனர்,
ரகு ஏற்கனவே உண்டுவிட்டு காலையில் சீக்கிரம் எழ வேண்டும் படுக்கச் சென்று விட்டான். அரவிந்தும் இல்லாததால், பங்கஜம் பத்தியில் களை கட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் நாத்தனார் அருகில் இருந்து கொண்டு, “நன்னா இருக்கு மன்னி சாப்பாடு, ஆனா நீங்க கெத்த விடாதீங்கோ” என உசுப்பேற்ற,

அங்கே பரிமாறிக் கொண்டிருந்தவர்கள் அனுவின் உறவினர்கள் தான்.
” ஜானவாச சாப்பாடு, என்ன இவ்வ்ளோ சிம்பிளா பண்ணிட்டேள்.?” ஆரம்பித்தாள் பங்கஜம்.

அப்போதே அவள் இரண்டு முறை சாம்பார் , ரசம் , பாயசம் என வெளுத்துக்கொண்டு தான் இருந்தாள்.

“என்ன வேணும் மாமி சொல்லுங்கோ” பொறுமையாக ஒருவர் வந்து கேட்க,
” இஞ்சி ரசம் பண்ணிருக்கேளா?”
“இப்போ கப் ல கொடுத்தேனே மாமி! இன்னொரு கப் தரட்டுமா?” பொறுமையாக அவர் கேட்க,
‘இப்போ தான் குடிச்சேனா! ஐயோ மறந்துட்டேன்!’ மனம் பதற,
“ஆஹ்.. வேண்டாம். மாவடு கொண்டுவாங்கோ. தயிர் சாதத்துக்கு” அவரை அனுப்ப,

“இதோ வரேன்” என ஓடினார்.

“மன்னி, பாத்து பேசுங்கோ, யாரவது வேணும்னே பன்றோம்னு கண்டு பிடிச்சுட போறா” அலகு காது கடிக்க,

“உன்னால வந்தது. இன்னும் கொஞ்சம் கேட்டு சாப்டுட்டு போயிருப்பேனோல்யோ” தாடையை தோளில் இடித்துக் கொண்டு தயிர் சாதம் உண்டாள்.
பின்பு மீண்டும் மெதுவாக, அக்காரவடிசலும் ஜாங்கிரியும் ஒரு முறை வாங்கி உண்டு விட்டுத் தான் பந்தியிலிருந்து எழுந்தாள். இவை அனைத்தையும் பப்பியம் வைஷுவும் ஒரு ஓரத்தில் நின்று பார்த்து சிரித்துக் கொண்டு தான் இருந்தனர்.

” என்கிட்டே நீ வசமா மாட்டிக்கிட்ட பங்கு..” வைஷு பப்பியின் முன் சொல்ல,
இருவரும் சிரித்துக் கொண்டு அடுத்த பந்தியில் அமர்ந்தனர்.

அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
ரகுவிற்கு உச்சந்தலையில் என்னை வைத்து, காலுக்கு நலுங்கு வைத்து

அவனை விரதம் செய்ய தயார் படுத்தினர். பங்கஜமும் வேணுவும் மேடையில் அவனோடு இருக்க, அரவிந்தும் தயாராக வந்தான்.
பட்டு வேட்டியும் வெண்பட்டு சட்டையும் அணிந்து வந்தவனை ராசிக்காதவர் இல்லை.
அவனுடைய உடல் கட்டும் அதற்குப் பொருந்திய சட்டையும் அவனை வசீகரனாகக் காட்ட,
அங்கே அவனுக்கு சற்றும் குறைவில்லாமல் மாம்பழ நிறத்தில் பட்டுப் புடவை அணிந்து வந்தாள் வைஷு.

மாப்பிளை வீட்டாரிடம் கூரைப் புடவையின் பிளவுசை கொடுக்க வந்தவள், அறையின் வாசல் கதவை திறந்து கொண்டு உள்ளே எத்தனிக்க, அதே நேரம் அனைவரும் சென்றதும் கதவை சாத்திக் கொண்டு செல்ல உள்ளிருந்த அர்விந்த் கதவை வேகமாக திறக்க , ஒரே இழுப்பில் அவன் மேல் சரிந்தாள்.

அவனும் அவளை எதிர்ப்பாராததால் சற்று தடுமாற, அவள் விழுந்த வேகத்தில் அவளின் இடையை சுற்றி பிடித்துக் கொண்டான். இருவரும் கீழே விழுந்து புரண்டனர்.
அவளது புடவை அவன் பிடியில் நெகிழ்ந்துவிட , அவன் மேல் மொத்தமாக கிடந்தாள்.

அவனுக்கு ஆனந்த அதிர்ச்சி . அவளோ பதட்டமாக எழ முயன்று புடவை தடுக்க மேலும் அவன் மேலே விழ,

அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது. இருந்தாலும் அந்த இடத்தில் சிரித்தாள் அவள் இன்னும் கோபப் படுவாள் என்று அமைதியாக இருந்தான்.

வைஷு பின்பு அவன் மார்பில் கை ஊன்றித் தான் எழ வேண்டி இருந்தது. அவளது தோளை பிடித்து உதவியவன், அவள் எழுந்து நின்றதும், அவள் பதட்டத்தை உணர்ந்து, அந்த நொடியை இலகுவாக்க முயன்றான்.

“அடி படலயே.. ?” அக்கறையுடன் அவளைப் பார்க்க,

“இல்ல” அவன் முகத்தைப் பார்த்துக் சொன்னாள். ஒரு வேளை அவன் கிண்டல் செய்து கேட்கிறானோ என நினைத்து அவனைப் பார்க்க, அவன் முகத்தில் தெரிந்த உண்மையான அக்கறை அவனைப் பற்றிய அந்த சிந்தனையை மாற்றியது.

“எதுக்கு அவ்ளோ வேகமா வந்த?”

“ம்ம் வேண்டுதல்.. கூரப்புடவையோட இந்த ப்ளவுஸ் வைக்கணும். அது தான் குடுக்க வந்தேன். எங்க வெச்சிருக்கீங்க?” அவனை தள்ளிவிட்டுக் கொண்டு உள்ளே சென்று தேடினாள்.

அந்த சிறிய அறையில் பொருட்கள் வேறு ஆங்காங்கே சிதறிக் கிடக்க, தாவி தாவி அவள் தேடிச் சென்று, புடவையோடு வைத்துவிட்டு வந்தாள்.’

அவள் வரும் வரை அங்கேயே நின்று அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வாத்தியார் கேட்கும் போது கொண்டு வரணும்” உத்தரவிட,

அழகாக புன்னகைத்து சலாம் செய்தான்.

அந்த நொடி அவன் அத்தனை அழகாக அவள் கண்களில் விழுந்தான். அவன் மேல் இருந்த வஞ்சம் மறைந்து அவன் அழகும் குணமும் அவள் மனதை நிறைத்தது.

வேட்டி சட்டையில் வேறு அவளை ஏற்கனவே கவர்ந்து விட்டான்.

முகத்தை சரி செய்து கொண்டு,

“வழி விடுங்க” என்றாள்.

அவள் கையைப் பிடித்து , “ ஹே ரவுடி பேபி, எப்போ பதில் சொல்வ?”

“ம்ம்ம் நான் தான் ரவுடி யாச்சே .. ரவுடித் தனமா சீக்கிரம் பதில் சொல்றேன். மனசுல பெரிய மன்மதன்னு நெனப்பு.” கடுப்பாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.

அவள் பதிலில் அவனுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டான்.

மாப்பிள்ளையின் விரதம் முடிந்ததும் , விரத பட்சணங்களை பெண் வீட்டார் வரிசையில் வந்து வைத்தனர். வைத்தியார் அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்து கொண்டிருந்தார்.

“மாப்ளைக்கும் துணை மாப்பிள்ளைக்கும் இலை போடுங்கோ. பொண்ணோட அம்மா வாங்கோ! மாபிள்ளைக்கு மை வைங்கோ”

வச்சு சிறிய வெள்ளி டப்பாவில் மை கொண்டு வந்து ரகுவிற்கு கண்ணில் மை தீட்டி , பின்பு அவனுக்கு வழி இலையில் டிப்பன் பரிமாறினாள்.

துணை மாப்பிள்ளைக்கு அருகிலேயே நின்ற அரவிந்தை அமரச் சொல்ல,

வேறு வழியின்றி அவனும் அமர்ந்தான்.

இருவருக்கும் உணவிட்டு , பின்பு மாபிள்ளையை காசி யாத்திரைக்கு அனுப்பினார் வாத்தியார். தோளில் பையுடன் அதில் சுந்தர காண்டம் புத்தகமும், கைத்தடியும் கொடுத்து அனுப்பினர்.

துணை மாப்பிளையிடம் குடை பிடிக்கச் சொல்ல, அதை விரிக்கும் போதே அதிலிருந்த மலர்கள் ரகுவை நனைத்தது.

அனைவரும் கை தட்ட, காசி யாத்திரைக்குச் சென்ற பிள்ளையை, பெண்ணுடைய தகப்பனார் வந்து தன்னுடைய மகளை தாரை வார்த்துக் கொடுப்பதாக ஒப்புதல் தந்து அழைக்க, மாப்பிள்ளை மீண்டும் உள்ளே வந்தார்.

அப்போது மணமகளான அனுவை அழைத்து வர , இருவரின் கையிலும் மாலைகள் கொடுக்கப் பட்டு மாற்றிக் கொள்ளச் சொன்னார்.

ரகுவின் மாமா அவனைத் தோளில் தூக்க, அனுவை அவளுடைய மாமா தோளில் தூகிக் கொண்டார்.

கலாட்டாவாக மாலை மாற்றல் நடந்தது. அர்விந்த், “ஹே! விடாத ரகு… ஒரே ஷாட்ல மாலை போடணும்” என ரகுவை ஏற்றிவிட்டான்.

அவனை அசராமல் பார்த்துக் கொண்டிருந்த வைஷு,

“அனு எதுலயும் விட்டுக் கொடுக்காத.. “ பதிலுக்கு சொன்னாள். அவளின் வார்த்தை ஏனோ அரவிந்துக்கு தனக்கானதோ என யோசிக்க வைத்தது. அவளைக் கேள்வியாகப் பார்க்க,

“மாலை மாற்றினாள் கோதை மாலை சாற்றினாள்..

மாலடைந்து மதிலரங்கன் மாலையவர்தம் மார்பிலே…” அழகாகப் பாடினாள் வைஷு..கூடவே சேர்ந்து மற்ற உறவுகளும் பாட, அவள் குரல் மட்டும் தனியாக இனிமையாக ஒலித்தது அவனுக்கு.

பின்பு மணமக்களை ஊஞ்சலில் அமர வைத்து கலந்த சாதம் கொண்டு நாற்புறமும் சுற்றிப் போட்டு, பால் தெளித்து கால் அலம்பி சடங்கை முடித்துக் கொண்டு உள்ளே சென்றனர்.

ரகுவுக்கும் அனுவிற்கும் மட்டும் ரகசியப் பேச்சு வார்த்தை நடந்த வண்ணம் இருக்க,

அர்விந்த் விஷு இடையில் புரியாத மௌன மொழி ஓடிக்கொண்டு தான் இருந்தது. அவள் நினைப்பதை அவனால் கணிக்கவே முடியவில்லை.

‘கண்ணெதிர்ல இருந்தே சாவடிக்கறாளே’ செல்லமாக திட்டினான்.

உள்ளே சென்று திருமாங்கல்ய தாரணம் செய்ய சடங்கைத் துவங்கினர்.

அனைவரும் ரகு அனுவை சூழ்ந்து நிற்க, ஆஸ்ரிவாதம் பெற்ற பின் கூரைப் புடவையை அனுவிற்குக் கொடுத்து மாற்றிக் கொண்டு வரச் சொல்ல,

அவளுக்கு உதவி செய்தாள் வைஷு. முதல் முறை மடிசார் புடவை அணிந்துகொண்டு நாணம் குடிகொண்டு பொறுமையாக அறையிலிருந்து வெளியே வந்தாள் அனு.

அவளை தனதாக்கிக் கொள்ளும் அந்த நிமிடத்திற்காக காத்திருந்தான் ரகு.

அவனை நேராகப் பார்த்து வெட்கப் பட்டாள் அனு. தந்தையின் மடியில் அமர்ந்து எதிரே நிற்கும் ரகு வை நிமிர்ந்து பார்த்து, வாத்தியார் சொல்லும் மந்திரங்கள் எதுவும் பதியாமல் இருந்தாள் அனு.

நுகத்தடி தலையில் வைத்து அதன் மீது மாங்கல்யத்தை வைத்தார் வாத்தியார்.

“மாங்கல்யம் தந்துனா நேனா மம ஜீவன ஹேதுனா…” மந்திரம் ஒலிக்க,

மனதில் திக் திக் ஆரம்பமாக காத்திருந்தாள் அனு. அந்த திருமாங்கல்யத்தை கையில் எடுத்து, அவளது கழுத்தில் முதல் முடியைப் போட்டான் ரகு.

‘இனி நீ என்னவள், உன்னையும் என்னையும் பிரிக்க முடியாத பந்தத்தில் இறுக்கிப் பிடிக்க இந்த முடிச்சைப் போடுகிறேன்’ என மனம் முழுக்க அவளை மட்டுமே நினைத்து அணிவித்தான் ரகு.

இன்று தொடங்கும் இந்த வாழ்க்கை ஏழேழு ஜென்மமும் நிலைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டாள் அனு.

உற்றம் சுற்றம் அட்ச்சதை மலர் தூவி ஆசீர் வதிக்க, இருவரும் தம்பதிகள் ஆயினர்.

மேடையில் பூக்குவியல் சிதற ஆரம்பிக்க, அதில் வைஷுவும் அரவிந்தும் கூட நனைந்தனர். ஏனோ அந்த நொடி இருவரின் பார்வையும் சொல்லி வைத்தார்ப் போல சந்தித்தது.

‘ நீ என்னவளாவது எப்போது?’ என்ற கேள்வி அர்விந்த் பார்வையில்.

நழுவிக் கொண்டாள் வைஷு.

அனுவின் கரம் பிடித்து அக்னியை சுற்றி வந்தான் ரகு . பின்பு அவளது பூ பாதங்களைப் பிடித்து ஏழு அடிகள் வைத்து அதை அம்மி மீது வைத்தான்.

மாமிகள் இருவர் வந்து மெட்டி மாட்விட்டு சென்றனர்.

 

மற்ற சடங்குகள் முடிந்து வந்தவர்களை கவனிப்பது என்ற பெரிய பொறுப்புகள் முடிந்தவுடன், நிதானமாக அமர்ந்தனர்.

மணமக்களை அருகில் இருக்கும் கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

மாலை நலுங்குக்கு ஆயத்தமாகினர் அனைவரும்.

இப்போது பாட்டுப் பாடி பங்கஜத்தை பழிவாங்க காத்திருந்தாள் வைஷு.

விளையாடல் சடங்கிற்காக அரிசி பருப்பு அப்பளம் முதலியன வைக்கப்பட்டிருக்க,

அனுவையும் ரகுவையும் அழைத்து நலங்கு வைத்து ஆரம்பித்தனர்.

அனு கையில் அரிசியை வைத்துக் கொண்டு நிற்க, பருப்பை கையில் எடுத்தான் ரகு.

“நான் அரிசி தரேன் நீங்க பருப்பு தாங்கோ” மெல்லிய குரலில் கேட்டாள் அனு.

“உடனே தராத டா. எதாவது டீல் கேளு!” பக்கத்தில் சிரித்தான் அர்விந்த்.

“பாவம் டா அவ” ரகு , வெகுநேரமாக நிற்கும் அவளுக்காக இறக்கப் பட,

“இவன் தேற மாட்டான் டா. இப்போவே சரண்டர் ஆயிட்டான்.” இளசுகள் கிண்டல் தொடர்ந்தது.

பின்பு பருப்பை அவள் கையில் கொடுத்தான் ரகு. அடுத்து அனு அவனுக்கு தலை சீவி விட்டு , கண்ணாடி காட்டி , விரிசி வீச, அதே போல ரகுவும் செய்தான்.

பின்பு அப்பளம் உடைக்கும் சடங்கும் கலகலப்பாக முடிய,

“பொண்ண பாட சொல்லுங்கோ” கூட்டத்தில் ஒரு பாட்டி சொன்னார்.

சம்ப்ரதாயப் படி முதலில் பொண்ணு மாப்பிள்ளை பாடிய பிறகு அனைவரும் பாட வேண்டும்.

அனு , “யமுனையாற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு நான் ஆட …” என தொடங்க…

“ஓ ஓ ஒ ……………..” என பின்னால் அனைவரும் கோரசாக கிண்டல் செய்தனர்.

இரண்டு வரி பாடிவிட்டு ரகுவின் அருகில் அரம்ந்து கொண்டாள்.

“ஸ்வீடா பாடின..” காதில் கிசி கிசுத்தான் ரகு.

அவள் கண்ணம் சிவக்க..

“ரகு.. நெக்ஸ்ட் நீ ” ஒருவன் சொல்ல,

“பெண்ணே நீயும் பெண்ணா… பெண்ணாகிய ஓவியம்…” ஓரக்கண்ணால் அனுவை பார்க்க,

அப்போதும் கிண்டல் தொடர்ந்தது.

சேரி இப்போ மாமியார் பாட்டு நாத்தனார் பாட்டு எல்லாம் பாடலாம் என வயதானவர் ஒருவர் எடுத்துக் கொடுக்க,

“நான் பாடறேன்” வைஷு முந்திக் கொண்டாள்.

அவள் பங்கஜத்தைப் பார்க்க, பங்கஜம் வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

சமயம் பார்த்து ஆரம்பித்தாள் வைஷு.

“சம்மந்தி சாப்பிடவே மாட்டாள் …..

எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்….” வைஷு உச்சஸ்தானியில் ஆரம்பித்ததும் பங்கஜம் ‘இது என்ன டா பாட்டு’ என்பது போல திரும்பினாள்.

சிரித்துக் கொண்டே தொடர்ந்தாள் வைஷு..

வெகு சங்கோஜக்காரி எங்கள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வெகு சங்கோஜக்காரி எங்கள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,

மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

இட்டிலியில் இருநூறு, ஜாங்கிரியில் முந்நூறு,

மைசூர்பாகில் நானூறு, தயிர்வடையில் ஐந்நூறு

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்

     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

புளியோதரையும் வெண்பொங்கலும் காராசேவும் கைமுறுக்கும்

     திரட்டுப்பாலும் தேன்குழலும் விதம் விதமாகவே ஒரு கை பார்ப்பாள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்

     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்

     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்

தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

குலைகுலையாக வாழைப்பழமும் கூடைகூடையாக திராட்சைப் பழமும்

     டசன் டசனாக ஆப்பிள் பழமும் தட்டுத் தட்டாக ஆரஞ்சு பழமும்

     போதாக்குறைக்கு பலாப்பழங்களும்

தின்னுத்தின்னு தீர்ப்பாள் அலுக்கவே மாட்டாள்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி

     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை

குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை

குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்

தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத

சம்பந்தி சாப்பிடவே மாட்டாள்

அமெரிக்க பாதாம் அரேபியா பேரீச்சை இந்திய முந்திரி

     ஈராக்கி பிஸ்தா காஷ்மீர அக்ரூட் உலர்ந்ததிராட்சை

குங்குமப்பூப் போட்ட கற்கண்டுப் பாலை

குடம்குடமாக குடித்தேத் தீர்ப்பாள்

தின்னாலும் கொண்டாலும் திருப்தியில்லாத

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்

கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்

ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்

புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வறுவறு சீவலும் வாசனைப்பாக்கும்

கவுளி கவுளியாய் கும்பகோண வெற்றிலையும்

ஜாதிக்காய், ஏலக்காய், கத்தைக்காம்பும்

புட்டிபுட்டியாகவே கோலி சோடாவும்

சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

வெகு சங்கோஜக்காரி எங்கள் சம்மந்தி

எங்கள் சம்மந்தி

ஆமா சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்

            எங்கள் சம்மந்தி சாப்பிடவே மாட்டாள்” 

திருப்தியாக பாடி முடிக்க, அங்கிருந்த அனைவரும் பங்கஜத்தைத் தான் பார்த்தனர்.

“இந்த குட்டி கழுத என்னை பாட்டு பாடி அசிங்கப் படுத்திடுத்தே” அருகில் இருந்த அலமுவிடம் பொருமினாள்.

 

 

 

 

error: Content is protected !!