KP-1

அன்பான வாசகர்களே,

கதை நிகழ் காலத்தை ஒட்டி சென்றாலும், கதையில் வரும் சம்பவங்களும், மனிதர்களும் கற்பனை என்று அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர் காலத்தில் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்குமோ? என்ற கேள்வியோடு நம் கற்பனை குதிரையைப் பறக்க விடுவோம். நாமும் குறும்பு பார்வையோடு பயணிப்போம்.

 

குறும்பு பார்வையில் – 1

ஸ்ருதியின் பக்கங்களிலிருந்து…

நான்!  நான்! நான்!  இலக்கணமும் இலக்கியமும்  பொய்யாகிப் போனதே…

ஏனோ ? ஏனோ?

தொலைந்தேன் நான்! உன் குறும்புப் பார்வையில்…

வீழ்ந்தேன் நான்! உன் மந்தகாச புன்னகையில்…

விழுந்தேன் நான்! உன் அன்பேமெனும் மழையில்….

அர்த்தமற்று போனேன் நான்! உன்னாலே… உன்னாலே…

என்னவென்று சொல்ல?  இது காதல் செய்யும் மாயமோ? நான் செய்த நலமோ? நீ எந்தன் வரமோ?

 

ஆகாஷின் பக்கங்களிலிருந்து…

நான்!  நான்! நான்! இலக்கணமும் இலக்கியமும்  பொய்யாகிப் போனதே…

ஏனோ ? ஏனோ?

தொலைந்தேன் நான்!  வீழ்ந்தேன் நான்!   விழுந்தேன் நான்!   அர்த்தமற்று போனேன் நான்!

அனைத்தும்  உன்னாலே… உன்னாலே…

என்னவென்று சொல்ல?  இது காதல் செய்த மாயமோ? நான் செய்த பாவமோ? நீ எந்தன் சாபமோ?

மேல்தட்டு வர்க்கத்தினர்  வாழும் பகுதி.

எத்தனை அறைகள், வீட்டிற்குள் எத்தனை படிகள் என்று கணக்கிட்ட முடியாதபடி பிரமாண்டமான பங்களா.

 

 

பல அறைகளுக்குள் ஓர் அறையில், தன் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். இருமுறை தலையைச் சிலுப்பிக் கொண்டான்.

 

தன் தலையைக் கோதிக் கொண்டான். “உஸ்…” என்று சீட்டியடிக்க, “டேய் அண்ணா… காலையில் இதெல்லாம் ஓவர் டா…” என்று சிணுங்கினாள் கல்லூரி வயதில் இருக்கும் பெண் மெத்தையில் புரண்டபடி.

 

 

“கீதா… நீ ஏன் என் ரூமில் வந்து படுக்குற? உன் ரூமுக்கு போ.” என்று தன் தங்கையை மிரட்டினான் அவன்.

 

 

“ம்… ஆகாஷ்… தனியா படுக்க பயமா இருக்கு டா.” என்று சிணுங்கினாள் கீதா தன் கண்களை மூடியபடி.

 

 

“எனக்கு கல்யாணம் ஆகிருச்சுன்னா என்ன பண்ணுவ?” என்று புருவம் உயர்த்தினான் ஆகாஷ்.

 

 

தூக்கம் கலைந்து எழுந்து தன் வாயை மூடிக்கொண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் கீதா.

 

 

ஆகாஷ் அவளை மேலும் கீழும் பார்க்க, இப்பொழுது கீதா உருண்டு உருண்டு சிரித்தாள்.

 

 

“நான் சொன்னது ஒன்னும் அவ்வுளவு பெரிய ஜோக் இல்லை.” என்று ஆகாஷ் தன் தங்கையைக் கண்டிக்க,      “உனக்கு கல்யாணம்னாலே அது ஜோக் தான் தம்பி.” என்று ராகம் பாடினாள் கீதா.

 

 

“நான் உனக்கு தம்பியா?” என்று ஆகாஷ் கேட்க,”மத்த விஷயத்தில் எல்லாம் அண்ணன் தான். ஆனால், கல்யாண விஷயத்தில் நீ…” என்று சில நொடிகள்  யோசனைக்குப் பின், “தம்பி தான். உனக்கு பொண்ணு கிடைச்சி…” என்று கீதா இழுத்தாள்.

 

 

“நான் யாருன்னு…” என்று ஆகாஷ் ஆரம்பிக்க, “தெரியுமே… தெரியுமே…” என்று தலையசைத்தாள் கீதா.

 

“அண்ணா… நீ மீடியா டைகூனா இருக்கலாம். பெரிய தொழிலதிப்பாரா இருக்கலாம்.  நம்ம தாத்தா பெரிய அரசியல்வாதியா இருக்கலாம். அப்பா ஒரு பெரிய பிசினஸ் மேனா இருக்கலாம். நமக்கென்று மூவி ப்ரோடுக்ஷன்ஸ், டீ.வி சேனல்,  மேகசின், எஃப். எம் இருக்கலாம். ஆனால், பொண்ணு…” என்று கீதா நிறுத்த, ஆகாஷின் கண்கள் கூர்மையாகியது .

 

 

“பாட்டிக்கு சொந்தத்தில் பொண்ணு வேணும். அம்மாவுக்கு, அது அவங்க சொந்தமா இருக்கனும். நம்மளை விட வசதியில் கம்மியா இருக்கனும். அப்பாவுக்குப் போட்டி நிறுவனத்திலிருந்து பொண்ணு வேணும். அந்த பிஸ்னெஸ்ஸயும் வளைச்சி போடணும். தாத்தாவுக்கு அரசியல் குடும்ப பின்னணியில் பொண்ணு வேணும்.” என்று கீதாவின் பட்டியல் நீண்டு கொண்டே போக, அவளை இடைமறித்தான் ஆகாஷ்.

 

 

“விடிய காலையில் இந்த பேச்சு தேவையா? எனக்கு வேலை இருக்கு.” என்று பேச்சை மாற்றினான் ஆகாஷ்.

 

 

“சனிக்கிழமை காலையில் என்ன டா வேலை?” என்று கீதா கேட்க, “பீச்க்கு போறேன்.” என்று தன் தங்கையிடம் கூறிக்கொண்டே, “டாம்…” என்று ஆகாஷ் சத்தம் கொடுத்தான்

 

 

டாம் நான்கு கால் பாய்ச்சலில் அவன் முன் வாலை ஆட்டிக்கொண்டு நின்றது.

 

 

“அண்ணா… அது தான் ஐந்து மணிக்கு எந்திருச்சு ஒர்கவுட்ஸ் முடிச்சிட்டியே! அப்புறம் எதுக்கு பீச்சுக்கு?” என்று கீதா மீண்டும் மெத்தையில் உருண்டு கொண்டே கேட்டாள்.

 

 

“ம்… லவ் பண்ண.” என்று அவர்கள் கரேஜில் இருக்கும் படக்கருவி மூலம் அங்கிருந்த கார்களை அவன் அறையிலிருந்தே நோட்டமிட்டான் ஆகாஷ்.

 

 

“இந்த காலையில் ஒருத்தி கூட வரமாட்டா. லவ் பண்ண பொண்ணுகளை எப்ப பார்க்க போகணும்ன்னு கூட தெரியலை. கோவிலுக்கு போற நேரத்தில் பொண்ணுகளை பார்க்க போற. நீயெல்லாம்…” என்று தலையில் அடித்துக் கொண்டாள் கீதா.

 

 

“எல்லாரும் உன்னை மாதிரி தூங்க மாட்டாங்க. நீயும் வரியா?” என்று ஆகாஷ் ரோல்ஸ் ராய்ஸ் அருகே இருந்த பென்ஸ் காரை எடுத்து வரும்படி வேலையாளுக்கு  குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பினான்.

 

 

“ஐயய்யோ… நீ ஆபீஸ் வேலை பார்ப்ப… நான் வரலை.” என்று முழுதாக தன்னை போர்வைக்குள் மறைத்துக் கொண்டாள் கீதா.

 

 

“இல்லை கீதா… உண்மையா லவ் பண்ண தான் போறேன். வா…” என்று ஆகாஷ் வம்பிழுக்க, ‘எப்பப்பாரு உனக்கு கேலி பேச்சு தான். இது மட்டும் அப்பா, அம்மா காதில் விழுந்தது நீ காலி.”  என்று கீதா முணுமுணுத்தாள்.

 

 

“ஹா… ஹா… நான் சொல்லலை. கீதா தான் சொன்னா, அப்படின்னு கோர்த்து விட்டுருவோம்ல?” என்று ஆகாஷ் கூற, கீதா அவள் அருகே இருந்த தலையணை எடுத்து ஆகாஷ் மீது எரிய, அவன் லாவகமாக நகர்ந்து கொண்டான்.

 

 

கீதா எறிந்த தலையணை தேநீர் கொண்டு வந்த வேலையாள் மீது விழ, அவர் கையில் இருந்த பீங்கான் தட்டு, டம்ளர் தேநீர் என அனைத்தும் சரிந்து விழுந்து, “டுவைங்…” என்ற சத்தத்தை அந்த பங்களாவில் எழுப்பியது.

 

 

சத்தத்தை கேட்டு ஆகாஷின் தாய் வர, “கீதா… படுத்துகிட்டே தூக்கி போடுறியா? சிக்கிட்ட…” என்று அவளிடம் கண்சிமிட்டி, “டாம்…” என்று அழைத்துக் கொண்டு காரை நோக்கி சென்றான் ஆகாஷ்.

 

அதிகாலை நேரம்.  பெசன்ட் நகர் கடற்கரை.

 

ஸ்ருதி அவள் ரோல்ஸ் ராய்ஸ் காரை கடற்கரை ஓரமாக நிறுத்திவிட்டு, ப்ளூடூத்தை காதில் சரி செய்தபடி சாலையிலிருந்து இறங்கி மணலில் நடக்க ஆரம்பித்தாள்.

 

நிதானமான, நிமிர்வான நடை.

 

 

கருப்பு நிற ஸ்வெட் ஷர்ட், கருப்பு நிற பண்ட்ஸ் அணிந்திருந்தாள். அந்த பண்ட்ஸின் ஒரு பக்கத்தில் மெல்லிய பிங்க் நிற கோடுகள். அந்த உடையில் அவள் அங்க வடிவங்கள் அழகாக அதன் இருப்பை உறுதி செய்துகொண்டது.

 

அவள் நிறத்தில் அந்த கருப்பு நிற உடை பளிச்சென்று தெரிந்ததா? இல்லை அந்த உடையில் அவள் பளிச்சென்று தெரிந்தாலா? என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு அவள் தேகம் அந்த மெல்லிய சூரிய ஒளியில் மின்னியது.

 

இன்னும் விடியாத காரணத்தினால், செம்மஞ்சள் நிறத்தில் வானம். அதை எதிரொலிப்பது போல் அதே நிறத்தில் நீர்  அலை அலையாகத் ததும்பிக் கொண்டு நின்றது. அவ்வுளவாகக் கூட்டமில்லை.

 

பறவைகள் “கீச்… கீச்…” என்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டு பறக்க, வானத்தின் அழகையும், பறவைகளின் கானத்தையும் ரசித்துக் கொண்டு கடலை நோக்கி நடந்து கொண்டிருந்தாள் ஸ்ருதி.

 

‘இன்னைக்கு சனிக்கிழமை. எல்லாரும் ஜாகிங், வாக்கிங் வருவாங்க. அதுக்குள்ள நான் வந்த வேலையை முடிக்கணும்.’ என்ற எண்ணத்தோடு தன் நடையைச் சற்று துரிதப்படுத்தினாள்.

 

இயற்கையை ரசிக்க மனம் விழைந்தாலும்,’வேலை முக்கியம்…’ என்று அறிவு எச்சரிக்க, புன்னகைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

‘எப்பவும் வேலை தான்! ஆனால், வார நாட்களில் பார்க்கும் வேலைக்கும், இப்பொழுது செய்வதற்கும் எத்தனை வித்தியாசம்?’ என்ற எண்ணம் அவள் மனதில் எழ, ஸ்ருதியின் புன்னகை விரிந்தது.

 

வார நாட்களில் செய்யும் வேலை, அவளை நெருங்க… ‘இப்ப அதை யோசிக்கக் கூடாது. ஒன்லி டால்ஸ் ஆன் வீக் எண்டு.’ என்று தனக்கு தானே அறிவுறுத்திக்கொண்டு தன் கண்களை வேகமாகச் சுழலவிட்டாள்.

கடற்கரை ஓரமாக இருந்த கிளிஞ்சல்களைத்  தேடியது அவள் கண்கள்.

 

“கார்த்திக் வேற புலி பொம்மை கேட்டருக்கான். அவன் வயசுக்கு நிஜ புலியை வச்சுக்கணும். அவன் என்னனா பொம்மை புலி கேட்குறான். இதை நான் கேட்டா, உன் ரூமில் மட்டும் பொம்மை இருக்கு அப்படின்னு என்கிட்டயே பேச்சைத் திசை திருப்புவான். இவன் எல்லாம் எனக்கு பிரெண்டு.” என்று தனக்கு தானே சத்தமாகப் புலம்பிக்கொண்டு விதவிதமான உருவத்திலும், விதவிதமான நிறத்திலும்  சிப்பிகளை  தன் இடது  கைகளில் சேகரிக்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.

 

‘கூட்டம் இல்லாமல் இருப்பதால் நிதானமாகத் தேடி எடுக்க முடியுது.’ என்ற எண்ணத்தோடு, கிளிஞ்சலைக் கையில் எடுத்து அதை மேலும் கீழும் பார்த்து , “ஊப்…” என்று ஊதி, அதை மற்றொரு கையில் புதைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

 

தன் இடது கைகளில் உள்ள  கிளிஞ்சல்களைப் பார்த்தாள் ஸ்ருதி.  ‘இந்த வாரம் நா செய்யுற பொம்மைக்கு இன்னும் சிப்பி வேணும். அப்பா இதை பார்த்தா, இதெல்லாம் வேறு யாரையாவது வைத்து, கொண்டு வரச் சொல்ல கூடாதான்னு கேட்பாங்க. என்னை மாதிரி பொருத்தமா யார் எடுப்பா?’ என்ற எண்ணத்தோடு மீண்டும் மும்முரமாகச்  சிப்பியைத் தேட ஆரம்பித்தாள்  ஸ்ருதி.

 

பெசன்ட் நகர் கடற்கரையில் நின்று கொண்டிருந்த, ரோல்ஸ் ராய்ஸ் அருகே அவன் பென்ஸ் காரை நிறுத்திவிட்டு, இறங்கி நடக்க ஆரம்பித்தான் ஆகாஷ்.

 

 

“டாம்…” என்று அழைக்க, அவன் பின்னே துள்ளிக் குதித்து ஓடியது டாம்.

 

 

“டாம் ரன்…” என்று கூறவும் டாம் அதன் நான்கு கால் பாய்ச்சலில் குதித்தோடியது.

 

 

காலையில் அத்தனை கூட்டம் இல்லாத காரணத்தினால், டாமின் ஓட்டத்திற்கு எந்த தங்குதடையுமில்லை.

 

 

செல்லும் வழியில் டாம் ஒரு சிலரைப் பார்த்து “லொள்… லொள்…” என்று குரைக்க, அவர்கள் விலகி வழிவிட, டாம் அதன் வாலை ஆட்டிக்கொண்டு குடுகுடு வென்று ஓடியது.

 

 

டாமின் மீது கண்களை வைத்த படி ஒரு சிறிய இடைவெளி விட்டு அதன் பின்னே ஓடினான் ஆகாஷ்.

 

 

டாம் சில தூரம் ஓடிவிட்டு வழியில் ஏதோ தேடிக் கொண்டிருந்த பெண் அருகே நின்றுவிட்டது.

 

 

இத்தனை நேரம் குரைத்தது போல், இப்பொழுதும் குரைக்க, ஸ்ருதி நிதானமாக நிமிர்ந்து பார்த்தாள்.

 

 

புஸ்புசென்று வெள்ளை நிறத்தில் அந்த நாய்க் குட்டி இவளை முறைத்துப் பார்க்க, ஒரு கையில் கிளிஞ்சல்களை வைத்துக் கொண்டு மறு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, ‘நீ இருக்கிற சைசுக்கு என்னைப் பார்த்து முறைக்குற?’ என்று எண்ணிக்கொண்டு மீண்டும் தன் தேடல் பணியைத் தொடங்கினாள் ஸ்ருதி.

 

 

“லொள்… லொள்…” என்று இப்பொழுது டாம் குரைக்க, “ம்… ச்…” என்ற சலிப்போடு, ‘இதை பார்த்தா தெருநாய் மாதிரி தெரியலை. இதை கூட்டிட்டு வந்தது யாரு?’ என்ற எண்ணத்தோடு தன் கண்கள் சுழல விட்டாள் ஸ்ருதி.

 

 

ஆகாஷின் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.

 

 

‘எல்லாரும் பயந்து விலகிட்டாங்க. டாம் வந்திருச்சு. எதிர்த்து நின்னா டாம் என்ன பண்ணும்?’ என்ற கேள்வியோடு ஆகாஷ் டாமை கண்காணித்துக் கொண்டிருந்தான்.

 

 

“ச்சு… போ…” என்று கூறிக்கொண்டே பயந்து ஓடாமல், அப்பொழுது அவள் கண்களில் பட்ட இரு சிப்பியைக் குனிந்து எடுக்க எத்தனித்தாள் ஸ்ருதி.

 

 

தன்னை எதிர்த்த ஸ்ருதியின் மீது  டாமின் கோபம் அதிகரிக்க, வேகமாக அவள் மீது பாய எத்தனித்தது  டாம்.

 

 

பாய்ந்த மறுநிமிடம் சரிந்தும் விழுந்தது. ஆனால், டாம் எதிர்பாராமல் பாய்ந்தத்தில், “வீல்…” என்று கத்திக் கொண்டு கைகளை உதறினாள் ஸ்ருதி.

 

 

அவள் அத்தனை நேரமும் சேகரத்திருந்த, மொத்த கிளிஞ்சல்களும் மண்ணில் விழுந்திருந்தது.

 

படக்கிற்கு பின்னே இருந்து ஓடி வந்து டாமை கைகளில் தூக்கி கொண்டான் ஆகாஷ்.

 

“சாரி… சாரி…” என்று ஆகாஷ் கூறிக்கொண்டு விலக, “என்ன சாரி?” என்று கீழே விழுந்த கிளிஞ்சல்களை பார்த்தபடி, கோபமாக கேட்டாள் ஸ்ருதி.

 

“இப்ப எதுக்கு கோபப்படுறீங்க? என்ன நடந்திருச்சு? அது தான் ஒன்னும் ஆகலைல?” என்று ஆகாஷ் கேட்க, “நான் சேகரிச்ச சிப்பி…” என்று கூறிக்கொண்டே, ஸ்ருதி அதை மீண்டும் எடுக்குமுன் கடல் அலை மொத்தத்தையும் சுருட்டிக்கொண்டு போனது.

 

ஸ்ருதியின் மொத்த கோபமும், ஆகாஷின் மீது திரும்பியது.

 

“எவ்வளவு நேரமா நான் இதை பார்த்து பார்த்து எடுத்தேன் தெரியுமா?” என்று ஸ்ருதி கோபமாக கேட்டு,”எல்லாம் இப்ப கடலோடு போச்சு.” என்று கடுப்போடு முடித்தாள்.

 

“கடற்கரை முழுக்க இருக்கு. இதுக்கு இவ்வுளவு அலப்பறையா?” என்று சமாதானமாக கேட்டான் ஆகாஷ்.

 

ஸ்ருதி அவனை கோபமாக முறைக்க, “இப்படி எல்லாம் முறைக்காதீங்க. அது தான் என் டாம் உங்களை பக்கத்தில் பார்த்ததும் பயத்தில்  மயங்கி விழுந்திருச்சு.” என்று சோகமாக கூறினான் ஆகாஷ்.

 

“என்ன காலையில், தனியா இருக்கிற பொண்ணு கிட்ட வம்பு பண்றீங்களா?” என்று ஸ்ருதி காட்டமாக கேட்க,”என்னை பார்த்தா ரோடு சைட் ரோமியோ மாதிரியாங்க இருக்கு?” என்று பரிதாமாக கேட்டான்.

 

ஸ்ருதி அவனை அளவிட, “ஒகேவாங்க? ரோடு சைடு ரோமியோ இல்லை தானே?” என்று புன்னகைத்தான் ஆகாஷ்.

 

ஸ்ருதி, தன் நேரம் விரயமான கோபத்தில், அவனை முறைக்க, “என் டாம்க்கு நீங்க வழிவிட்டிருந்தா நான் உங்க வழிக்கே வந்திருக்க மாட்டேன்?” என்று மேலும் சமாதான கோடியை பறக்க விட்டான் ஆகாஷ்.

 

“நாயை பீச்சுக்கு கூட்டிட்டு வந்தா அதை பத்திரமா பார்க்க தெரியணும்.  இல்லைனா அதை கூட்டி வரக்கூடாது.” என்று தோரணையாக கூறினாள் ஸ்ருதி.

 

‘என்னை பார்த்தாலே பொண்ணுங்க ரியாக்ஷன் வேற மாதிரி இருக்கும். நான் யாருன்னு இங்க எப்பவும் வரவங்களுக்கு தெரியும். இந்த பெண் யார்?’ என்று அறிவுரை கூறுபவளை நோட்டமிட்டான் ஆகாஷ்.

 

அவன் முன் கைகளை சுடக்கிட்டாள் ஸ்ருதி.

 

“எப்படி வசதி? ஈவ் டீசிங் கேசில் உள்ள போற மாதிரியா?” என்று புருவம் உயர்த்தினாள் ஸ்ருதி.

 

ஆகாஷின் புருவம் வளைந்தது. ‘இவள் எத்தனை தூரம் போவாள்?’ என்று பார்க்க வேண்டும் என்ற அவா அவன் மனதில் எழுந்தது.

 

அவன் கண்களில் குறும்பு கூத்தாடியது.

 

“கடற்கரை முழுக்க சிப்பி. அதுவும் அது கவர்ன்மெண்ட் சொத்து. உங்களை எந்த கேசில் உள்ள தள்ளலலாமுன்னு நான் யோசிக்குறேன்?” என்று தீவிரமாக கூறினான் ஆகாஷ்.

 

“ம்… சொல்லுவீங்க… சொல்லுவீங்க… என் மேல் நாய் பாய்ந்ததுக்கு நீங்க நஷ்ட ஈடு கொடுக்கணும்.” என்று பற்களை நறநறதாள் ஸ்ருதி.

 

“நாட்டுக்கு புதுசோ?” என்று ஆகாஷ் நக்கலாக கேட்க, அவனை யோசனையாக பார்த்தாள் ஸ்ருதி.

 

“நாய் கடிச்சாலே, நம்ம நாட்டில் நஷ்ட ஈடு கொடுக்க மாட்டாங்க. இதில் பாய வந்ததுக்கு நஷ்ட ஈடு கேட்குறீங்க?” என்று ஆகாஷ் முறுவழித்தான்.

 

“என் நேரம்…” என்று ஸ்ருதி சிடுசிடுக்க, “அதுக்கெல்லாம் எந்த நாட்டிலும் நஷ்ட ஈடு கிடைக்காது.” என்று உதட்டை சுழித்து சிரித்தான் ஆகாஷ்.

 

அப்பொழுது தான் அவன் கைகளில் இருந்த நாய் குட்டியை பார்த்தாள் ஸ்ருதி. அது அசைவின்றி இருப்பதாய் பார்த்து, ‘தான் எதுவும் செய்துவிட்டோமோ?’ என்று பதட்டமாக பார்த்தாள் ஸ்ருதி.

 

அவள் பார்வையை புரிந்து கொண்டு, “அது தான் நான் சொன்னேனே, உங்களை பார்த்து அது பயந்து மயங்கிருச்சுன்னு… இல்லை செத்தே போச்சோ?” என்று அதிர்ச்சியாக கேட்டான் ஆகாஷ்.

 

ஆகாஷ் அந்த நாய் குட்டியை மொந்தென்று கீழ போட, டாம் மீண்டும் அசைவின்றி இருந்தது.

 

“என் நாயை கொன்னுட்டிங்களா? அது அவ்வுளவு காஸ்டலிங்க…” என்று பரிதமாக கூறினான் ஆகாஷ்.

 

“என்ன பணம் பறிக்கும் புதிய யுக்தியா?” என்று அவனை நேராக  பார்த்து ஸ்ருதி கேட்டாள்.

 

கம்பீரம் பேசிய அவள் கண்கள், ஆளுமையான அவள் தோற்றம், பொம்மை போல் அவள் முகம்,

‘இப்படி ஒரு பெண்ணை நமக்கு பார்த்தால், உடனே திருமணத்திற்கு ஒகே சொல்லிறலாம்.’ என்ற எண்ணம் தோன்ற திடுக்கிட்டு நின்றான் ஆகாஷ்.

 

‘என்ன பயந்துடீங்களா?’ என்பது போல் ஸ்ருதி அவனை பார்க்க, “உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுற மாதிரி எனக்கு தெரியலை. ஜஸ்ட் ரோபட் ஒரு குட்டி நாய் வடிவத்தில். அது உங்களை எதுவும் பண்ணிருக்காது. நீங்க விலகிருந்தா அதுவாட்டுக்கும் போயிருக்கும். எதிர்த்து நின்னா என்ன செய்யுமுன்னு தெரியலை… நான் அதுக்குள்ள ஆப் பண்ணிட்டேன்.” என்று சமாதானமாக பேசினான் ஆகாஷ்.

 

“அறிவில்லை… இப்படி தான் பொது இடத்தில் வந்து டெஸ்ட் பண்ணுவீங்களா?” என்று ஸ்ருதி ஏறினாள்.

 

தன்னை இதுவரை யாரும் எதிர்த்திராத பொழுது ஸ்ருதியின் எதிர்ப்பு  அவனுக்கு கோபத்தை உண்டு பண்ணியது.

 

“அது தான் நான் இருக்கேன்ல? என்னை மீறி ஒன்னும் நடக்காது.” என்று ஆகாஷ் அந்த நேரத்திலும் நிதானமாக பேசினான்.

 

“உங்களால ஒன்னும் நடக்காதுன்னு சொல்லுங்க. இந்த இடத்தில குழந்தையோ, வயசங்கவாளோ இருந்திருந்தா பயந்திருப்பாங்க.” என்று ஸ்ருதி அவனிடம் கடுப்பாக கூறினாள்.

 

“அது தான் இல்லையே!” என்று ஆகாஷ் விட்டெறியாக கூற, “இருந்திருந்தா?” என்று ஸ்ருதி குரலை உயர்த்தினாள்.

 

“இல்லாததை ஏன் கற்பனை பண்ணனும்?” என்று ஆகாஷ் குரலை உயர்த்த, “லைசென்ஸ் இல்லாமல் இப்படி ஒரு ரோபோட்டை நீங்க உபயோகப்படுத்துறது தப்பு.” என்று கண்டிப்போடு கூறினாள் ஸ்ருதி.

 

ஸ்ருதியின் கட்டளை குரல் அவன் கடுப்பை கிளப்ப, “அதை சொல்ல நீ யார்?” என்று ஆகாஷ் குரலை உயர்த்த, ஸ்ருதி பேசும்முன், ஆகாஷ் மேலும் பேசினான்.

 

“நான் யார் தெரியுமா?” என்று ஆகாஷ் கர்வமாக கேட்டான்.

 

“என்ன மிரட்டுறியா?” ஸ்ருதியின் பேச்சு ஒருமைக்கு மாறி இருந்தது.

 

“ஏழையாவோ, மிட்டிலே கிளாஸ்ஸவோ இருந்திருந்தா என்னை ஒண்ணுமில்லாமல் பண்ணிருப்ப தானே?” என்று ஏளனமாக கேட்டாள் ஸ்ருதி.

 

‘இவ என்ன என்னை வில்லன் மாதிரி பாக்குறா? நான் ஹீரோ இல்லையா?’ என்ற சந்தேகம் ஆகாஷுக்கு எழுந்தது.

 

ஆகாஷ் அவளை கூர்மையாக பார்க்க, “உன்னால என்னை ஒன்னும் பண்ண முடியாது. உன்னை பார்த்தாலே தெரியுது… பணத்திமிர், அதிகார திமிர் எல்லாம் சேர்ந்து இருக்குன்னு. அதே பணம்…அதே அதிகாரம்… என்கிட்டயும் இருக்கு. அதனால இந்த மிரட்டுற வேலை எல்லாம் என்கிட்டே  வேண்டாம்.” என்று ஸ்ருதி அசட்டையாக கூறினாள்.

 

‘என்ன பேச ஆரம்பித்து எப்படி வந்துவிட்டது?’ என்று நொந்து கொண்டு, “யார் முகத்தில் முழித்தேனோ என் டெஸ்டிங் ஒர்க் ஸ்வாஹா…” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் காரை நோக்கி கடுப்பாக சென்றான் ஆகாஷ்.

 

“யார் முகத்தில் முழித்தேனோ, நான் செய்த வேலையையும், நேரமும் சுவாஹா….” என்று முணுமுணுத்துக்  கொண்டு  அவள் காரை நோக்கி நடந்தாள் ஸ்ருதி.

 

அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரும், பென்ஸ் காரும் வேகமாக ரிவேர்ஸ் எடுத்துக் கொண்டு சர்ரென்று எதிர்திசையில் சென்றது.

 

குறும்புகள் தொடரும்…