UUP–EPI 19 (INDRU)

இன்று

கேஷ் ரெஜிஸ்டரில் அமர்ந்தப்படியே ரெய்ன்போ பொக்கே செய்துக் கொண்டிருந்தாள் சண்மு. வண்ண வண்ண ரோஜாக்களைக் கொண்டு வானவில் போல வண்ணமயமாக செய்யப்படுவதால் அதற்கு ரெய்ன்போ பொக்கே என பெயர். கதிர் டெலிவரிக்கு சென்றிருந்தான்.

காலையில் நடந்த சம்பவத்தை நினைத்து புன்னகையுடன் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். பதினைந்து வயது பையன் ஒருவன் வந்து தன் ஒருதலை காதலிக்கு பெயர் எழுதாமல் பொக்கே அனுப்ப வேண்டும் என நின்றான். இந்த வயதில் உனக்கு காதலா என கதிர் அந்தப் பையனின் தலையில் தட்டி நக்கலடிக்க, கதிரை கிண்டலாக பார்த்தாள் சண்மு.

அவனோ அசடு வழிய,

“ஐம் யுவர் பெஸ்ட்டு ப்ரெண்டு! ப்ளீஸ் யா! சின்ன பையன் முன்னுக்கு மானத்த வாங்கிறாத!” என மெல்லிய குரலில் கெஞ்சினான்.

அவன் முகத்தைப் பார்க்க சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது சண்முவுக்கு.

“பொழச்சிப் போ!” என சொல்லியவள், அந்தப் பையன் கேட்ட மாதிரி மூன்று ரெட் ரோஸ் வைத்து போக்கே செய்து காட்டினாள். அது பிடித்துப் போய் அவன் பணத்தை நீட்ட,

“உனக்கு பொக்கே ப்ரீ! போ போ!” என விரட்டி விட்டான் கதிர்.

“ஏன்டா பணம் வேணா சொன்ன! இப்படி ப்ரீ சர்விஸ் குடுத்தா கடைய இழுத்து மூட வேண்டியதுதான்” என அந்தப் பையன் போனதும் லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாள் சண்மு.

“நான் நல்லாவே சம்பாரிக்கறேன்! தாத்தன் வீட்டு சொத்து வேற இருக்கு! நம்ப பேரன் பேத்தி கூட உட்கார்ந்து சாப்பிடலாம்! உன் கனவு இந்த கடம்பூவனம்னு தான் உன்னை முதுகொடிய வேலைப் பார்க்க விடறேன்! இதுல வர காசுக்காக இல்லை சம்மு! அதோட ஊர் காதல ஊட்டி வளர்த்தா என் காதல் செழிச்சு வளரும்னு ஒரு நம்பிக்கை!”

தூவென அவள் துப்புவது போல சைகை செய்ய, இவன் முகத்தைத் துடைத்துக் கொள்வது போல செய்து காட்டிவிட்டு அந்த ரெட் ரோசை டெலிவர் செய்ய சென்றான். அப்படியே கொஞ்சம் வெளி வேலைகளையும் முடித்துவிட்டு வருகிறேன் என சொல்லி சென்றிருந்தான். வரும் நேரம்தான்.

யாராவது கதவு திறந்தால் வாசலில் மாட்டி இருந்த ட்ரீம் கேட்சரில் இருந்து டிங் டிங் என சத்தம் வரும். மணி சத்தம் வரவும் கதிர்தான் என நிமிர்ந்துப் பார்த்தவளின் முகம் மலர்ந்தது.

“வாங்க கதிரப்பா” என கை வேலையை வைத்து விட்டு எழுந்து வந்து வரவேற்றாள் சண்மு.

“இன்னும் கதிழப்பா தானா? மாமான்னு வாய் நிறைய கூப்ட கூடாதா மம்மவளே!”

“அது..இன்னும் வரமாட்டுது! நான் என்ன செய்ய! சின்னப்பிள்ளையில இருந்து இப்படி கூப்டு பழகிட்டேனே” என புன்னகைத்தாள் சண்மு.

“ஒம்புருஷன் எங்கம்மா?”

“டெலிவரி பண்ண போயிருக்காரு. நீங்க வாங்க சாப்பிடலாம்” என அழைத்தவள், கதவில் ஓப்பன் என இருந்த பதாகையை க்லோஸ்ட் என மாற்றி வைத்து விட்டு வந்தாள்.

தன் மருமகளை வாஞ்சையாகப் பார்த்தவர்,

“பஜிதான் லாஜாத்தி! வீட்டுக்குப் போய் ஜாப்டுக்கலாம்னு நினைச்சேன்” என்றார்.

“இதுவும் உங்க வீடுதான் கதிரப்பா!” என சொல்லியவள் அவர் கைப்பிடித்து இவர்களின் சாப்பிடும் இடத்துக்கு அழைத்துப் போனாள். நர்சரியில் பெண்கள் இருவரும் பரமுவைப் பார்த்து புன்னகைக்க, அவர்களிடமும் நலம் விசாரித்துவிட்டு வந்து நாற்காலியில் அமர்ந்துக் கொண்டார் பரமு.

“இன்னிக்கு சிம்பிள் சமையல்தான் கதிரப்பா! வர வர உங்க மகனுக்கு சமையல் செய்யக் கூட சோம்பேறித்தனம். சாம்பார், அப்பளம், மோர் மிளகா, உருளைக்கிழங்கு பொரியல் இவ்ளோதான் சமைச்சிருக்கான். இருங்க ரெண்டு நிமிஷத்துல ஆம்லட் போட்டுத்தரேன்” என சொல்லியபடியே தட்டில் அவருக்கு உணவிட்டாள் சண்மு.

“ஒம்புருஷனுக்கு ஜமைக்கத் தெரியும்னே எனக்கு இன்னிக்குத்தான் தெரியும்! அவன் ஆத்தாக்காரி உக்காந்த எடத்துல ஜாப்பாட்ட கொண்டு வந்து குடுப்பா. தண்ணி எடுக்கக் கூட கிச்சனுக்குள்ள உட மாட்டா! அம்புட்டு பாஜம்! இங்க ஜமைக்கறான்னு தெரிஞ்சா ஆட்டு அட்டேக்கே வந்துடும் என் பாழுக்கு” என சொல்லி சிரித்தார் பரமு.

அதற்குள் ஆம்லேட் செய்து வந்து அவர் தட்டில் இட்டிருந்தாள் சண்மு.

“நான் முன்ன பார்த்ததுக்கு, இப்போ ரொம்ப இளைச்சுப் போய்ட்டீங்க கதிரப்பா! நல்லா சாப்புடுங்க” என சொல்லியபடியே இன்னும் சாதம் வைத்தாள் சண்மு.

கண் கலங்கி விட மருமகளைப் பார்த்தவர்,

“என் மவேன் தான் இப்படி பாத்து பாத்து ஜாப்பாடு போடுவான்! இப்போ நீ! மனஜு நெறைஞ்சுப் போச்சு லாஜாத்தி” என இடது கையால் மருமகளின் கன்னம் வருடியவர், வலது கையால் ஒரு வாய் அவளுக்கு ஊட்டி விட்டார்.

“கதிரப்பா! உங்க மகனுக்குத்தான் என் மேல தோழின்னு பாசம், அன்பு, காதல் எல்லாம்! நீங்களும் என் மேல உயிரா இருக்கீங்களே, அது எதனால?” இத்தனை நாளாய் கேட்க நினைத்ததை வாய் விட்டு கேட்டிருந்தாள் சண்மு.

“அதுவாம்மா! முழுஜா ஜொன்னாதான் உனக்கு புழியும்! காதல் தோல்வியுல என் பாழுவ ஒதுக்கி வச்சேன்! அப்புறம் நம்ம நம்பி வந்துட்டாளேன்னு மனச தட்டி கிட்டி ஜரி பண்ணி, இனிமே பாழுதான் எல்லாம்னு வாழ ஆரம்பிச்சேன்! நான் பண்ண ஒரே தப்பு நான் காதலிச்சத பாழுகிட்ட ஜொல்லாததுதான். விஜயம் தெரிஞ்சு பாழு என்னை தூன்னு தூக்கிப் போட்டுட்டா! அவ மேல தப்புல்ல! அவள நெனைச்சு இவ கூட வாழறேன்னு ஒரேடியா வெட்டிக்கிட்டா! ரோஜம் ரொம்ப என் பாழுக்கு! ஏற்கனவே குடிகாரன், பொண்டாட்டியும் ஒதுக்கி வைக்கவும் இன்னும் குடியில விழுந்துட்டேன்! தப்புத்தேன்! ஜோகத்த மறக்க குடிக்கறது தப்புத்தேன்! ஆனா இந்த எழவு ஒட்டிக்கிச்சே!” என சொல்லிக் கொண்டே சண்முவுக்கு இன்னொரு வாய் ஊட்டினார்.

“அதுக்குப் பொறவு எனக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்புன்னா அது என் கதிருதான்! அவன் ஜின்ன புள்ளையில என் மேல அவ்ளோ பாஜமா இருப்பான். போக போக என்னை வுட்டு ஒதுங்க ஆரம்பிச்சான். தண்ணி அடிக்கறேன்ல, வாடை வருதுல, அதனால போல! அதோட மத்த அப்பா மாதிரி நான் இல்லியே! எப்போ பாரு தண்ணியில மிதக்கேன்! அவன தப்பு சொல்லி என்னயிருக்கு! நானும்தான் குடிக்க வேணாம்னு ஜத்தியம்லாம் பண்ணறேன். ரெண்டு நாளு” என இரண்டு விரலைக் காட்டியவர்,

“மட்டும்தான் முடியுது. அப்போறம் ஒடம்பு வெடவெடன்னு நடுங்கிழுது. தலை ஜுத்துது! மயக்கம் வழுது! சரக்க போட்டாத்தான் ஜரியாவுது. நானும் என்னதான் ஜெய்ய” என பெருமூச்சு விட்டவர் தண்ணீரைப் பருகினார்.

“அவேன் தள்ளிப் போறப்போ மனஜு வலிக்கும்! என் புள்ள என்னை ஒதுக்கறானேன்னு கவலையா இர்க்கும். ஜெத்துடலாமான்னு கூட தோணும்! அதுக்கு அப்புறம் அவனாவே நெருங்கி வர ஆரம்பிச்சான். லேஜா விஜாரிச்சப்ப நீதான் ஜொன்னியாம் அப்பா எவ்ளோ முக்கியம்னு! எனக்கு எப்படி இர்ந்துச்சு தெரியுமா லாஜாத்தி! நமக்குன்னு பரிஞ்சு பேஜ எனக்கே எனக்கா ஒரு மக வந்துட்டான்னு தோணிச்சு! அப்படியே உன்னத் தூக்கி ஒரு ஜுத்து ஜுத்தி,

“அழகிய கண்ணே

உளவுகள் நீயே

நீ எங்கே இனி நான் அங்கே

என் ஜேயல்ல தாய் நீயேன்னு” பாடனும் மாதிரி இர்ந்துச்சு. ஆரம்பத்துல அவன் கண்ண பார்த்து எல்லாரும் என் மவன ஒதுக்க நீ மட்டும் ஜேர்ந்து விளேடறன்னு உன் மேல அன்பு இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அளவில்லாத பாஜம் வந்துருச்சும்மா லாஜாத்தி”

அவரின் பாசத்தில் தொண்டை அடைக்க,

“அப்பா” என் கூப்பிட்டாள் சண்மு.

அவருக்கு அவ்வளவு சந்தோஷம்.

“என்னான்னு கூப்ட? அப்பாவா? அப்டியே கூப்டு லாஜாத்தி” என மகிழ்ந்துப் போனார் பரமு.

“அப்பான்னு கூப்ட என் அப்பாவுக்கு தகுதி இல்ல! அதுக்கு முழு தகுதியும் உங்களுக்குத்தான் இருக்குப்பா. இனி எனக்கும் நீங்க அப்பாத்தான்” என நா தளுதளுக்க சொன்னாள் சண்மு.

“நல்லா கூப்டுக்கோ லாஜாத்தி! அப்டியே என்னை தாத்தான்னு கூப்ட பேரப்புள்ளைங்களியும் குடுத்துட்டேன்னு வையி, நிம்மதியா இந்தக் கட்டை வேகும்”

“ஆமாப்பா ஆமாப்பா! நல்லா சொல்லுங்கப்பா உங்க மருமக கிட்ட!” என்றபடியே வந்தான் கதிர்.

“வாடா நல்லவனே! கரெக்டான நேரத்துக்கு வந்துருவானே!” என முணுமுணுத்தவள் அவனுக்கும் தட்டு எடுத்து வைத்தாள்.

“நீயும் சாப்பிடு சம்மு! மணியாகுதுல!” என அவளுக்கும் ஒரு தட்டு எடுத்து வைத்து சாதத்தைப் பரிமாறினான் கதிர். இருவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பரிமாறிக் கொண்டு சாப்பிடும் அழகை ரசித்திருந்தார் பரமு.

‘போகிற போக்கப் பாத்தா என் மூஞ்சு மேல உச்சா பேய ஜீக்கிரம் பேரப்புள்ள வந்துடும் போலிருக்கே! அதுக்கப்புறம் இந்த பாழு வந்து என் பேரன், என் பேத்தின்னு தூக்கட்டும் என்னா ஜேதின்னு கேக்கறேன்’

அவர்களுடன் அளவளாவி விட்டு முகம் நிறைய சந்தோசத்துடன் மாலை நேர கடமைக்கு தாஸ்மாக் நோக்கி படையெடுத்தார் பரமு.

அன்றிரவு கேஷ் ரிஜிஸ்டரில் அமர்ந்து பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கதிரின் மடியில் போய் அமர்ந்துக் கொண்டாள் சண்மு.

“என்னடி திடீருன்னு மடியிலலாம் உட்காருற? இப்படிலாம் பண்ண மாட்டியே!” என அவள் கழுத்து அடியிலும் நெற்றியிலும் கை வைத்துப் பார்த்தான் கதிர்.

“காய்ச்சல்லாம் ஒன்னும் இல்ல மங்கி! ரொம்ப ஸ்ட்ரெஸ்சா இருக்கு!”

“ஏன் என்னாச்சு சம்மு?” வேலையை விட்டு விட்டு அவள் முகம் பார்த்துக் கேட்டான் கதிர்.

“என்னமோ ஸ்ட்ரெஸ்! எல்லாமே உன் கிட்ட சொல்லனுமா? பொண்டாட்டி ஸ்ட்ரெஸ்னு சொன்னா புருஷன்காரன் இந்நேரம் கிரீன் டீ போட்டு குடுத்துருக்கனும்! இல்ல இதமா தலையைப் பிடிச்சு விட்டுருக்கனும்! இல்ல தோள்பட்டையை அமுக்கிக் குடுத்துருக்கனும்! இல்ல சூடா வெந்நீர் வச்சு அதுல லெவெண்டர் ஆயில் கலந்துருக்கனும்! இல்ல வெளியூர் கூட்டிப் போய் சுத்திக் காட்டறேன்னு சொல்லிருக்கனும்! எங்க, நமக்கு வாச்சதுதான் எம்.எம்.எஸ் மாதிரி உட்கார்ந்திருக்கே!”

“எம். எம். எஸ்சா?”

“ஆமா! மக்கு மட சாம்பிராணி!!!”

“பார்டா! ரொம்ப நல்ல பட்டம், ஐ லைக் இட்! இதெல்லாத்தையும் விட சீக்கிரம் ஸ்ட்ரெஸ் போக இன்னொரு வழி இருக்கு சம்மு!”

“என்ன?”

“ஒரு டீப் கிஸ் குடுத்துக்கிட்டோம்னு வை, ஸ்ட்ரெஸ், டென்ஷன், லொட்டு லொசுக்கு எல்லாம் அடிச்சுப் புடிச்சு அண்டார்டிக்காவுக்கே ஓடிப் போயிரும். குடுக்கவா?”

இவள் முறைக்க,

“சரி, சரி அடக்கி வாசிக்கறேன்! அன்னிக்கு முத்தம் தந்ததுக்கே நீ குடுத்த அடி ஒன்னொன்னும் இடி மாதிரி இறங்குச்சு. கோபத்துல கழுத்துல கடிச்சு வேற வச்சுட்ட. என்னமோ பொண்டாட்டி லவ் பைட் குடுத்துட்ட மாதிரி டெலிவரி போற எடத்துலலாம் மக்கள் ஒரு மார்க்கமா பார்த்தாங்க! அதோட அஞ்சு நாளா மூஞ்சு குடுத்து பேசாம என்னை தவிக்க வச்சிட்ட!

‘முத்தமிட்டவன் மீது

யுத்தமிட்ட கள்ளியே

இனி வாழ் நாள் முழுக்க

முத்தமில்லை

எனை நொந்து குத்தமில்லை’

இனி நானா இந்த வாயால உனக்கு முத்தம் குடுக்க மாட்டேன்டி சம்மு. இது என் பாட்டி…” ஜெவப்பாயி மீது சத்தியம் என சொல்ல வந்தவன் உதட்டைத் தன் உதட்டால் மூடி இருந்தாள் சண்மு.

அதிர்ச்சியில் இவன் விழி விரிக்க, சாதா கிஸ்சை டீப் கிஸ் ஆக்கியிருந்தாள் அவன் சம்மு. வாங்கிய முத்தக் கடனை வட்டியும் முதலுமாய் இவன் திருப்பி செலுத்த முயல நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டாள் அவள். விரல் சூப்பும் குழந்தைக் கையில் வேப்பெண்ணையைத் தடவி விட்டது போல முகம் கோணலாகி பரிதாபமாய் விழித்தவனை,

“காப்பாத்த முடியாத சத்தியத்தை எல்லாம் செய்யவே செய்யக் கூடாது மிஸ்டர் போலீஸ்கார்!” என சொல்லி விட்டு தங்களது அறைக்குள் நுழைந்து கதவடைத்துக் கொண்டாள் சண்மு.

“போடி ராட்சசி! சொறி ராட்சசி!” என இவன் இங்கிருந்தே கத்த,

“போடா ஒன்ரை! கப்பு ஒன்ரை” என அவள் உள்ளிருந்து கத்தினாள். அவர்களின் செயல் பார்த்து இருவருக்குமே சிரிப்பு வந்துவிட்டது.

மறுநாள் சனிக்கிழமை நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளை அலேக்காக அள்ளி பாத்ரூமில் கொண்டு போய் விட்டான் கதிர்.

“என்னடா பண்ணற? அலாரம் கூட அடிக்கல, எதுக்கு எழுப்புன? அதுவும் இப்படி?” விடாமல் கத்தினாள் சண்மு.

“உஷ்! சத்தம் போடாதே! அமைதி அமைதி! குளிச்சிட்டு வா, எல்லாம்  சொல்லுறேன்” என சொன்னவன் ஏற்கனவே குளித்துக் கிளம்பி இருந்தான்.

முனகிக் கொண்டே அவள் குளித்து விட்டு வர, காலை உணவு ரெடியாக இருந்தது. சின்ராசுவும்  காலையிலேயே வந்திருந்தான்.

“என்னடா இந்தப் பக்கம்?”

“அண்ணாதான் வர சொன்னாங்கக்கா”

“அவர் அண்ணா நான் அக்காவா? ஒழுங்கா அண்ணின்னு கூப்புடு”

“சரிங்கண்ணி” என்றவனுக்கு சிரிப்புடன் காலை உணவு தந்தான் கதிர்.

“சரி, இப்பவாச்சும் என்ன விஷயம்னு சொல்லு கதிரு”

“நீ தானே சொன்ன ஸ்ட்ரெஸ்சா இருக்குன்னு! சோ இன்னிக்கு நாம டே ட்ரீப் போறோம்! கடைய நம்ம சின்ராசு அப்பா கூட சேர்ந்து பார்த்துப்பான்”

“ட்ரீப்பா? எங்க?”

“டொண்டொடொய்ங்! கங்கை கொண்ட சோழபுரத்துக்கு இந்த மகாராணியும் மகாராஜாவும் விஜயம் செய்யப் போறோம்”

“நெஜமாவாடா? அங்க நான் போனதே இல்ல தெரியுமா! நம்ம ஊரு பக்கத்துல இருக்குன்னு தான் பேரு, நான் இன்னும் போனது இல்லடா கதிரு” உற்சாகமாக சொன்னவள் குடுகுடுவென, வெளியே செல்லும் உடை மாற்றி வர  ரூமுக்கு ஓடினாள். துள்ளி ஓடிய தன் மனைவியின் செயலில் தோழி சம்முவைப் பார்த்து முகம் மலர்ந்தான் கதிர்.

கதிர் கார் ஓட்ட அவன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டே வந்தாள் சண்மு. ராஜேந்திர சோழன் நிறுவிய அந்த அழகிய கோயில் இவர்களை வா வாவென வரவேற்றது. வாசலில் இருந்த  பெரிய நந்தியை இவள் வாய் பிளந்துப் பார்க்க, அடிக்கடி வந்திருந்த கதிர் எல்லா இடத்தையும் இவளுக்கு சுற்றிக் காட்டினான். அந்தக் காலத்தில் மிக பிரமாண்டமாக இருந்திருக்கும் இந்தக் கோயில் தற்பொழுது கொஞ்சம் சிதிலமடைந்திருப்பதை சுட்டிக்காட்டி வருத்தப்பட்டவனின் கையைப் பற்றிக் கொண்டாள் சண்மு.

அதன் பின் அவன் கையைப் பிடித்தப்படியேதான் மூலவர், பிட்சாடனர், அர்த்த நாரீசுவரர், நடராசர் என எல்லா கடவுளையும் தரிசித்தாள் சண்மு. அவள் கைப்பிடித்திருக்க, இவன் தோளணைத்துக் கொண்டான். வேர்க்க விறுவிறுக்க அங்கே சுற்றி விட்டு பொன்னேரி லேக்கையும் பார்த்து விட்டு மாலைதான் வீடு வந்து சேர்ந்தார்கள் இருவரும்.

வந்தவுடன் ரூம் கட்டிலில் பொத்தென அமர்ந்துக் கொண்டாள் சண்மு.

“கதிரு! நீ என்னா செய்ற, எல்லாரும் கிளம்பனதும் கடையை அடைக்கற! அப்புறம் நாம வாங்கிட்டு வந்த டிபன சூடு பண்ணற! அப்புறம் சூடா எனக்கு இஞ்சி டீ போட்டு வைக்கற! ஹ்ம்ம், இன்னும்,,,”

“போதும் போதும்!!! இதுவே லெங்த்தா போகுது! நீ போய் குளிச்சிட்டு வா! எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்”

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்னு ஒருத்தர் சொல்றத கேக்கறப்போ எவ்ளோ சந்தோஷமா இருக்குத் தெரியுமா கதிரு! நமக்கும் துணைக்கு ஒரு ஆள் இருக்குன்னு மனசு பட்டாம்பூச்சியா பறக்குது” என சொல்லியபடியே சரிந்து படுத்துக் கொண்டாள்.

இவன் சிரிப்புடன் அவள் சொல்லியதை செய்யப் போனான். வேலைகளை முடித்துக் கொண்டு சண்முவை சாப்பிட அழைக்க வந்தவன் கண்டது குழந்தையென தூங்கும் தன் மனைவியைத்தான்.

“எப்போ சாப்பிட்டது! அதுக்குள்ள தூங்கிட்டாளே” என சொல்லியபடியே எழுப்பினான்.

“சம்மு! எழுந்துக்கோ சாப்பிடலாம்”

“ஹ்ம்ம்”

“சம்மு, சம்மு”

“ஏன்டா! தூங்க விடேன்”

“நடு ராத்திரில பசிக்கும்டி! வந்து சாப்பிடு”

தூக்கம் கலைந்திருக்க, அருகில் குனிந்து நின்றவனையே பார்த்தப்படி இருந்தாள் சண்மு.

“கதிரு! எனக்கும் வயிறு இருக்கு, எனக்கும் பசிக்கும்னு கூட யாரும் கவலைப்பட்டது இல்ல தெரியுமா? நீ மட்டும்தான் அப்போ இருந்து இப்போ வரைக்கும் என் வயிறு வாடாம பார்த்துக்கற!” என சொல்லியவள் குனிந்து நின்றவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். சடீரென அவள் இழுக்க அப்படியே சரிந்து சண்முவின் மேல் விழுந்தான் கதிர்.

“நீ கிடைக்க நான் என்னடா புண்ணியம் பண்ணேன்? ஏன் என்னை இப்படி பார்த்துக்கற? ஏன் என்னை இவ்வளவு காதலிக்கற? ஏன் என்னை இவ்வளவு நேசிக்கற?” ஒவ்வொரு கேள்வியின் முடிவிலும் அழுந்த, அழுந்த முத்தமிட்டாள் தன் கதிரை.

அவளின் திடீர் அணைப்பில், திடீர் முத்த மழையில் தன் வசம் இழந்திருந்தான் கதிர். அவள் கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே விடைதான் அவனிடம் இருந்தது.

“ஏன்னா நீ என் சம்மு, என்னோட சம்மு!”

அவன் பதிலில் இத்தனை நாள் இருந்த கலக்கம், தயக்கம், பயம் எல்லாம் தூர ஓடியிருக்க,

“ஐ லவ் யூடா கதிரு!” என் அவன் காதில் மென்மையாக முணுமுணுத்தாள் சண்மு.

“சம்மு!” ஆச்சரியமும் ஆர்வமும் போட்டி போட இவன் ஆசையாக அவள் முகத்தைப் பார்க்க, அவளோ அவன் நெஞ்சில் முகத்தை மறைத்துக் கொண்டாள்.

“நானும்தான் நானும்தான்! ஐ லவ் யூடி சம்மு! லவ்வோ லவ் யூ! என் லவ்வ எப்படி உனக்கு வார்த்தையால விளக்கறதுன்னு தெரியலடி! அப்பவும் சரி, இப்பவும் சரி உன் கண்ண பார்த்து என் காதல புரியவைக்கத் தெரியலடி எனக்கு! வார்த்தை சிக்குது, வாய் திக்குது!”

“ஏன் கதிரு, வாய் பேச தெரியாதவங்களாம் எப்படி பேசுவாங்க?” திடீரென சந்தேகம் கேட்டாள் சண்மு.

“கையால பேசுவாங்க”

“அப்போ நீயும் கையால பேசு! அதாவது கையால காதல சொல்லு! நான் புரிஞ்சுக்குவேன்”

“சம்மு!!! நெஜமாவாடி?”

வெட்கப் புன்னகையுடன் ஆமென தலையாட்டினாள் சண்முகப்ரியா.

அதன் பிறகு சொல்லவும் வேண்டுமோ! இத்தனை நாள் நெஞ்சுக்குள் பொத்தி வைத்திருந்த தன் காதலை, ஆசையை, அன்பை, நேசத்தை, பாசத்தை தன்னிரு கரங்களினாலும், மயக்கும் உதடுகளினாலும் தன் சம்முவுக்கு உணர்த்த ஆரம்பித்தான் கதிர்வேலன்.

காதல் அலை மேலேழுந்து சுனாமியாய் இவளை வளைக்க, சுகமாய் சிக்கித் தவித்தாள் சண்மு. கூச்சம் கொண்டு நெளிந்தவளை, தயக்கம் கொண்டு தடுமாறியவளை, வெட்கம் கொண்டு துவண்டவளை அன்பாய் அரவணைத்துக் காதலாய் தனக்குள் சுருட்டிக் கொண்டான் கதிர்.

‘இது காதல் ஆசைக்கும்

காமன் பூஜைக்கும் நேரமா

இந்த ஜோடி வண்டுகள்

கோடு தாண்டிடுமா!!!!’

கோடு தாண்டியவன் கேட்ட கேள்வி!

“ஏன்டி சொல்லல?????”

 

(உயிர் போகும்…)