KP-2

KP-2

குறும்பு பார்வையில் – 2

ஆகாஷின் கார் சர்ரென்று அவன் பங்களாவுக்குள் நுழைந்தது.  அவன் கார் சாவியைக் கொடுக்க, அதைப் பெற்றுக்கொண்ட வேலைக்காரர் ஆகாஷை கூர்மையாக பார்த்தார்.

அந்தஸ்து பேதமின்றி அனைவரிடமும் இன்முகத்தைக் காட்டும் ஆகாஷ் இன்று அவருக்கு வேறாகத் தெரிந்தான்.

டாம் ஆகாஷின் பின் நான்கு கால் பாய்ச்சலில் சென்றது.

ஆகாஷ் தன் அறைக்குள் சென்று மொந்தென்று அமர்ந்தான்.

அவன் அறையில் அமர்ந்திருந்த கீதா எழுதிக்கொண்டிருந்தாள்.

“அண்ணா டாம் வேலைக்கு ஆகலையா?” என்று கீதா கேட்க, “ம்… ச்…” என்று சலிப்பாகக் கூறினான் ஆகாஷ்.

“ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தாள் கீதா.

“என்னை அம்மா கிட்ட திட்டு வாங்க வச்சிட்டு நீ போனா, அந்த வேலை விளங்குமா?” என்று மீண்டும் சிரித்தாள் கீதா.

ஆகாஷ் எதுவும் பேசவில்லை.

“என் பிளெஸ்ஸிங்ஸ் உனக்கு இன்னைக்கு இல்லை.” என்று கீதா உதட்டைச் சுழித்தாள்.

ஆகாஷ் மௌனமாக இருக்க, “இருந்தாலும், இந்த அழுமூஞ்சி  உனக்கு செட் ஆகலை அண்ணா. சோ நாளைக்கி என் கிட்ட கால்ல விழுந்து  ஆசிர்வாதம் வாங்கிட்டு…” என்று வாக்கியத்தை முடிக்க முடியாமல் “ஆ…” என்று அலறினாள் கீதா.

“எதோ கொஞ்சம் மூட் அப்செட்…. உடனே… அப்படியே உன் அறிவுரையை அள்ளி வீசுற… இது தான் சாக்குன்னு.” என்று கீதாவின் காதை திருகிக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

ஆகாஷிடமிருந்து விலகி கொண்டு, தன் காதை தடவிக்கொண்டு, “பேய்க்கே பேய் பிடித்ததே! அடடே ஆச்சரியக்குறி!” என்று கீதா கூற, ‘இதுக்கு என்ன அர்த்தம்?’ என்பது போல் அவளை பார்த்தான் ஆகாஷ்.

தன் சகோதரனின் பார்வையைப் புரிந்து கொண்டது போல், “உன்னால நாலு பேருக்கு மூட் அவுட் ஆகும். ஆனால், உனக்கே மூட் அவுட் ஆகுதுன்னா?” என்று கீதா தீவிரமாக யோசித்தாள்.

“ஒரு பொண்ணை பார்த்தேன் கீதா.” என்று ஆகாஷ் கூற, “டேய்… உண்மையிலே காலைல லவ் பண்ண போனியா?” என்று அவன் முன் கண்களைப் பெரிதாக விரித்து பதட்டமாகக் கேட்டாள் கீதா.

தன் தங்கையின் பதட்டத்தில் ஆகாஷின் கோபம் மறைந்து குறும்பு மேலோங்கியது.

“எஸ் லவ் பண்ண தான் போனேன். பட் இன்னைக்கு சண்டை. அது தான் மூட் அவுட்.” என்று தீவிரமாகக் கூறினான் ஆகாஷ்.

“சண்டையா?” என்று ஆர்வமானாள் கீதா.

“ஹ்ம்ம்… பிரேக் அப் பண்ணிடலாமுன்னு இருக்கேன்.” என்று தீவிரமாகக் கூறினான் ஆகாஷ்.

‘அவளை பற்றி இப்படி பேசுவது தெரிந்தால்…’ என்ற எண்ணம் மேலோங்க ஆகாஷின் உதடுகள் நமட்டு சிரிப்பில் மடிந்தது.

தன் சகோதரனின் முகபாவத்தை மனதில் குறித்துக்கொண்டாள் கீதா.

“ம்… என்னை பார்த்து அறிவு இருக்கான்னு கேட்டுடா?” என்று ஆகாஷ் சோகமாக கூற, “உண்மையை தான் கேட்ருக்காங்க.” என்று கீதா சட்டென்று கூறிவிட்டு, நாக்கை கடித்துக் கொண்டாள்.

ஆகாஷ் கீதாவை மேலும் கீழும் பார்க்க, “உண்மை தெரியாம கேட்டுட்டாங்கன்னு சொல்ல வந்தேன்.” என்று கூறி, “ஈ…” என்று கீதா சிரிக்க, தன் தங்கையின் கேலி புரிந்து ஆகாஷ் சிரித்துக் கொண்டான்.

“இப்படி லவ்வர்ன்னு கதைவிட்டுட்டு அலையாதா… யாரவது நம்பிகிரகிம்பிற போறாங்க. அப்புறம் போனா போதுன்னு பொண்ணு கொடுக்க வரவங்களும் பொண்ணு கொடுக்காம போயிருவாங்க.” என்று தன் சகோதரனின் புன்னகையோடு சேர்ந்து கொண்டாள் கீதா.

கீதாவின் நக்கலில் ஆகாஷின்  மனம் செல்லவில்லை. அவன் மனமோ கடற்கரையைச் சுற்றி வந்தது.

“லவ் பண்ணிட்டாலும்… அதுவும் இன்னைக்கு பார்த்த பொண்ணு… ஹப்பா…. திமிரு.” என்று முணுமுணுத்தான் ஆகாஷ்.

“அண்னா…” என்று கண்டிப்பான குரலில் அழைத்தாள் கீதா.

“யாரோ ஒரு பெண்ணை இப்படி திமிருன்னு சொல்றது அழகில்லை. அதுவும் என் அண்ணன் அப்படி சொல்ல கூடாது.” என்று கீதா உறுதியாகக் கூறினாள்.

“என் தங்கை டென்ஷன் ஆகலாமா?” என்று அவளைத்  தோளோடு சேர்த்துக் கொண்டான் ஆகாஷ்.

“அந்த பொண்ணு யார்?” என்று நட்போடு கேட்டாள் கீதா.

தோளைக் குலுக்கிக் கொண்டு, “தெரியல…” என்று பதிலோடு உதட்டைச் சுழித்து, கடற்கரையில் நடந்ததைக் கூறினான் ஆகாஷ்.

சிரித்துக் கொண்டாள் கீதா.

“அவங்க பேச்சில் நியாயம் இருக்கிற மாதிரி இருக்கே அண்ணா.” என்று கீதா கூற, “எதுல, எனக்கு அறிவு இருக்கான்னு கேட்டதிலா?” என்று நக்கலாகக் கேட்டான் ஆகாஷ்.

“அவங்க பேசின மத்த விஷயத்தை மறந்துட்டியே அண்ணா. அவங்க சொல்ற மாதிரி அங்க வயசானவங்களோ, குழந்தைகளோ இருந்திருந்தா?” என்று கீதா கேள்வியாக நிறுத்தினாள்.

“பொண்ணுங்க சரியா பேசினாளோ, கோபமா பேசினாளோ ஆண்களுக்கு தப்பா தான் தெரியுது.” என்று கீதா தோளைக் குலுக்க, “கீதா…” என்று அன்போடு அழைத்தான் ஆகாஷ்.

“அதுவும் அவங்க உறுதியா பேசிட்டாளோ? இல்லை தன்னம்பிக்கையோடு பேசிட்டாளோ? இல்லை உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிச்சிட்டாளோ?” என்று கீதா கூறிக்கொண்டே போக, “கீதா…” என்று கண்டிப்போடு அழைத்தான் ஆகாஷ்.

“உன் அண்ணன் நான் அப்படியா?” என்று ஏமாற்றமாக ஏக்கமாகக் கேட்டான் ஆகாஷ்.

“அது எனக்குன்னு ஒரு அண்ணி வந்த பிறகு தான் தெரியும்.” என்று கண்சிமிட்டிச் சிரித்தாள் கீதா.

கீதாவோடு வாதிடாமல்,அவள் சிரிப்போடு இணைந்து கொண்டான் ஆகாஷ்.

கீதா அவள் வேலையில் மூழ்க, ஆகாஷ் சுய  அலசலில்  இறங்கினான்.

‘நான் தான் தேவை இல்லாமல் பேசிட்டேனோ? டேய் கோப பட மாட்டியே, இன்னைக்கு ஏன் டா கோபப்பட்ட? அதுவும் வில்லன் ரேஞ்சுக்கு உனக்கு டைலாக் எல்லாம் தேவையா?’ என்று தனக்கு தானே நொந்துக் கொண்டான் ஆகாஷ்.

அப்பொழுது அவன் அருகே  டாம் அமர்ந்துக்கொள்ள, அதை தடவிக்கொடுத்தான் ஆகாஷ்.

டாம் அதை வாலை ஆட்டியது.  அப்பொழுது ஆகாஷுக்கு அந்த எண்ணம் எழுந்தது.

ஆகாஷ், டாமிடம் கோபப்பட, டாம் அவன் மீது பாய… சரேலென்று விலகி அதை அணைத்துவிட்டான் ஆகாஷ்.

“பிரில்லியண்ட் கேர்ள்…” என்று முணுமுணுத்து அவன் புன்னகை விரிந்தது.

அந்த முணுமுணுப்பில் கீதா ஆகாஷ் பக்கம் திரும்பி, “யாரை சொல்ற? அந்த பெண்ணையா?” என்று கீதா புருவம் உயர்த்த, மறுப்பாக தலை அசைத்தான் ஆகாஷ்.

“உன்னை தான்…” என்று அவன் கூற, “டேய்… டேய்… டேய்…” என்று கீதா தலை அசைக்க, “அந்த பொண்ணோட கோபத்தில் இருந்த நியாயத்தை எடுத்துச் சொன்னது நீ தானே?” என்று ஆகாஷ் புருவம் உயர்த்தினான்.

“நீ சொல்ற… நான் நம்புறேன்…” என்று கீதா கூற, அவர்களை உணவுக்கு அழைப்பதற்கும் சரியா இருந்தது.

அவர்கள் மேஜையில் அமர, ஆவுடையமை பாட்டி தீவிரமாக அலைபேசி பார்த்துக் கொண்டிருந்தார்.

கீதா அவர் அலைபேசியை எட்டி பார்த்து, “ஐயோ…பாட்டி என்ன பாக்குறீங்க?” என்று கண்களை மூடிக் கொண்டாள் கீதா.

ஆகாஷும் அலைபேசியை எட்டி பார்த்து, “ஐயோ பாட்டி…” என்று அலறினான்.

“அப்படி என்ன பாக்குற ஆவுடை? பாரு குழந்தைங்க பயப்படுறாங்க.” என்று  ஷண்முக சுந்தரம் தாத்தா கேட்க, “தாத்தா… யார்யாரோ நெருக்கமா நிக்குற மாதிரி போட்டோ தாத்தா.”  என்று கண்களை உருட்டினாள் கீதா.

“அப்படியா?” என்று தாத்தா ஆர்வமாக கேட்க, “என்ன நோப்படியா?” என்று கழுத்தை நொடித்தார் பாட்டி.

“நம்ம கல்யாண போட்டோவா?” என்று  தாத்தா கேட்க, “ம்… க்கும்… நம்ம கல்யாணத்தில் இப்படி எல்லாம் போட்டோ எடுத்துட்டாலும்…” என்று சோகமாகக் கூறினார் பாட்டி.

“அப்படி என்ன போட்டோ?” என்று தாத்தா கேட்க, “ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்.” என்று பாட்டி அந்த புகைப்படத்தை பார்த்தபடி கூறினார்.

“அப்படின்னா?” என்று தாத்தா கேட்க, “கல்யாணத்துக்கு முன்னாடியே போட்டோ எடுத்து, கல்யாணத்தன்னைக்கு அங்கங்க டீவில போடுவாங்க.” என்று பாட்டி கூறினார்.

“நம்ம கல்யாணத்துல இதெல்லாம் பண்ண முடியலையே?” என்று தாத்தா வருத்தப்பட, “அதெல்லாம் அவ்வுளவு சுலபம் இல்லை. கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு, மாப்பிளையும் அவங்க வசதிக்கு தக்கன வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ கூட்டிட்டு போய் போட்டோ எடுப்பாங்க.” என்று பாட்டி கூறினார்.

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்.” என்று தாத்தா கேட்க, “என் தோழி ஒருத்தி அவ பேத்தி ப்ரீ வெடிங் போட்டோஸ் எனக்கு வாட்ஸாப்பில் அனுப்பிருந்தா.” என்று பாட்டி கூற, கீதாவும், ஆகாஷும் “க்ளுக்…” என்று சிரித்தனர்.

“என்ன சிரிப்பு? நாங்களும் வாட்ஸப், பெஸ்புக் எல்லாம் யூஸ் பண்ணுவோம்.” என்று ஆவுடை பாட்டி கூற, “அதானே…” என்று  தன் மனைவியோடு சேர்ந்து கொண்டார் தாத்தா.

பாட்டியின் கையிலிருந்த புகைப்படத்தை பார்த்த தாத்தா,   “இருந்தாலும், இப்படி நெருக்கமா நின்னா எடுப்பாங்க?” என்று தாத்தா இழுக்க, “நாமலும் எடுக்க போறோம்.” என்று பாட்டி தீவிரமாகக் கூறினார்.

” நமக்கா… நல்ல விஷயம். நம்ம எண்பதாவது கல்யாணத்துக்கு பிரிவெட்டிங் ஷூட் பண்றோம்.” என்று தாத்தா கூற, “செம்ம தாத்தா…” என்று ஹை பைவ் செய்தான் ஆகாஷ்.

“டேய்…. கொஞ்சமாவது அறிவு இருக்கா உனக்கு?” என்று பாட்டி ஆகாஷிடம் கேட்க,’இது என்ன இன்னைக்குன்னு பார்த்து எல்லாரும் இதே கேள்வி கேட்குறாங்க?’ என்று பரிதாபமாகப் பார்த்தான் ஆகாஷ்.

“நான் அப்படி என்ன தாப்பா சொல்லிட்டேன் பாட்டி?” என்று ஆகாஷ் கேட்க, “பிரிவெட்டிங் ஷூட் உனக்கு தான்.” என்று பாட்டி கூற, “ஓ!” என்று தலை அசைத்தாள் கீதா.

“என்ன ஓ?” என்று பாட்டி கேட்க, ஆகாஷின் தாயும், தந்தையும் வந்து அமர்ந்தனர்.

“என்ன பேச்சு போகுது?” என்று ஆகாஷின் தந்தை சங்கரன் கேட்க, “என் பேரன் ப்ரீவெட்டிங் ஷூட் பத்தி தா….” என்று பாட்டி கூற, “கல்யாணத்துக்கு எல்லாம் ரெடியா பாட்டி?” என்று தீவிரமாகச் சந்தேகம் கேட்டாள் கீதா.

“மண்டபம் தயாரா இருக்கு. நம்ம வீட்டில பணத்துக்கு என்ன பஞ்சமா? போட்டோக்ராபர் கூட ரெடி… பிரிவெட்டிங் ஷூட்க்கு தான் இடம் பார்த்துட்டு இருக்கேன்.” என்று பாட்டி கூற, “பாட்டி… அந்த பொண்ணு… பொண்ணு…” என்று இழுத்தாள் கீதா.

“என் பேரனுக்கு என்ன குறைச்சல்? என் பேரன் பெயரை சொன்னா போதும்… அழகா, கம்பீரமா, படிச்ச, வசதியான பொண்ணு… ம்… அப்படினா வருவா.” என்று பாட்டி கூற, ஆகாஷின் மனதில் மின்னல் போல், இன்று காலை பார்த்த பெண் தோன்றினாள்.

‘ம்… என்றால் அவளைப் போன்ற பெண் வருவாளா?’ என்ற எண்ணம் ஆகாஷுக்கு தோன்ற, ‘அவள் ஏன் வரவேண்டும்?’ என்று தனக்கு தானே கேட்டுக்கொண்டான் ஆகாஷ்.

“ஆகாஷ்… இந்த பாட்டி சொல்றேன். உன் கல்யாணத்துக்கு நான் பாக்குற பொண்ணு தான். அந்த பெண்ணோட ப்ரீ வெட்டிங் ஷூட்க்கு சும்மா நச்சுன்னு ஒரு இடத்துக்கு போறீங்க?” என்று பாட்டி உறுதியாக கூற, “ப்ரீ வெட்டிங் ஷூட் ஒகே. ஆனால், பொண்ணு நான் பாக்குற பொண்ணு தான்.” என்று ஆளாளுக்கு விவாதிக்க ஆரம்பித்தனர்.

“எதுக்கு சண்டை? ராஜ காலம் மாதிரி எல்லா பெண்ணையையும் கட்டிப்போம்.” என்று ஆகாஷ் கண்சிமிட்ட, “அடப்பாவி…” என்று ஒரு அவர்கள் வாக்குவாதத்தை நிறுத்திக் கொண்டனர்.

“ம்… இப்படி வாங்க வழிக்கு. முதலில் என் ப்ராஜெக்ட். பத்து நாள் கழித்து, ஒரு மீட்டிங் இருக்கு. அதுல பல விஷயங்கள் முடிவாகனும். அப்புறம் தான் கல்யாண் பேச்சு. அது வெட்டிங் ஷூட்னாலும் சரி… ப்ரீவெட்டிங் ஷூட் நாளும் சரி.” என்று ஆணித்தரமாகக் கூறினான் ஆகாஷ்.

“மீட்டிங் முன்னாடி டாம் சம்பந்தமா எனக்கு நிறைய வேலை இருக்கு.” என்று கூறிக்கொண்டு தன் பணியைக் கவனிக்கச் சென்றான் ஆகாஷ்.

பத்து நாட்கள் கழித்து, அடையாரில் உள்ள லீலா பலஸிற்கு  ஆகாஷ் தன் பென்ஸ் காரை செலுத்திக் கொண்டிருந்தான்.

மீட்டிங் ஹாலில் பலரும் அமர்ந்திருக்க, முன் வரிசையில் தன் முன் இருந்த மடிக்கணினியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

மணி ஒன்பது ஐம்பத்தி ஒன்பது.

“ஹாய்…” என்று சிரித்த முகமாக அனைவருக்கும் தலை அசைத்து உள்ளே நுழைந்தான் ஆகாஷ்.

மணியை பார்த்துவிட்டு, ஸ்ருதி அவனையும் பார்த்தாள். அவள் உதடுகள் என்னவென்று கணிக்க முடியாதபடி வளைந்தது.

‘அது ஏளனமா? இல்லை மெச்சுதலா?’ என்ற கேள்வி ஆகாஷுக்குள் எழுந்தது.

அதுவொரு இன்னோவேஷன் டீம் மீட்டிங்.  அதாவது புது கண்டுபிடிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் பற்றிய மீட்டிங்.

அனைவருக்கும் ஆகாஷிடம் தனி மதிப்பிருந்தது வெளிப்படையாகத் தெரிந்தது.

 

கூட்டத்தின் தலைவர், இதுவரை ஈஸ்வரன் மேற்பார்வையிலிருந்த  தொழிலை  இப்பொழுது மேற்படிப்பை வெளிநாட்டில் படித்துவிட்டுத் திரும்பியிருக்கும் அவர் மகள் ஸ்ருதி  நேரடியாக மேற்கொள்வதாகக் கூறி அவளை அறிமுகப்படுத்தினார்.

ஸ்ருதி அளவான புன்னகையோடு தலை அசைத்துக்கொண்டாள். ஸ்ருதியின்  புன்னகை, ஸ்நேகத்தைத் தேக்கி இருந்தது. ஆனால், அவள் கண்கள் கம்பீரத்தையும், அனைவரையும் ஒரு அடி தள்ளி நிற்கும் எச்சரிக்கையும் பிரதிபலித்தது.

ஆகாஷின் கண்கள் அவளை அளவிட்டுக்கொண்டது.

ஒவ்வொருவரும் அவர்களது புது கண்டுபிடிப்புகளை விவரிக்க, பலரும் பல விதமாகக் கேள்விகேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆகாஷ் அவன் ரோபோட் நாய் குட்டி, “டாம்…” பற்றி கூற, அவன் கண்டுபிடிப்பின் பிரமிப்பிலும், அவன் பின்னணியின் பிரமிப்பிலும், ஆகாஷின் சாமர்த்திமான பேச்சிலும் அனைவரும் மௌனமாக தலை அசைத்தனர்.

ஸ்ருதி அவனை இத்தனை நிமிடங்களில் கணித்திருந்தாலும், ‘இதற்கெல்லாம் அசைவேனா?’ என்பது போல் அவள் கேள்வியை முன்வைத்தாள்.

‘ஸ்ருதியின் கேள்விக்கு ஆகாஷிடம் பதில் இருக்கிறதா?’ என்று அனைவரும் ஆகாஷை பார்க்க, ஆகாஷ் தன் கண்களைச் சுருக்கி ஸ்ருதியை கணக்கிடும் விதமாக யோசனையாகப் பார்த்தான்.

குறும்புகள் தொடரும்…

error: Content is protected !!