oviyam09

அருணின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் உமாசங்கர். அருண் அதிர்ந்து போய் நிற்க, அமுதவல்லி வாய்விட்டுக் கத்தினார்.

“என்னங்க! என்ன பண்ணுறீங்க நீங்க?”

“நீ வாயை மூடு அமுதா… எல்லாம் இவனால வந்த வினைதான்.”

“என்னங்க பேசுறீங்க நீங்க?”

“மனுஷன்னா ஒரு நிதானம் வேணும். எங்கிருந்துடா உனக்கு இவ்வளவு கோபம் வருது? யாருக்கிட்ட இருந்து இந்தக் கெட்டப் பழக்கத்தைக் கத்துக்கிட்ட?” அப்பா கர்ஜிக்கவும் அருண் மௌனமாக நின்றிருந்தான்.

அருணின் அளவுக்கு மீறிய கோபம் அமுதவல்லிக்கும் பிடிக்காது என்பதால் கணவர் கண்டிக்கும் போது இப்போது அவரும் அமைதியாகிவிட்டார்.

“உங்கக்காக்கு வந்த ஒரு நல்ல வாழ்க்கை உன்னோட கோபத்தால தான் நாசமாகிப் போச்சுன்னு உனக்குத் தெரியுமா?”

உமாசங்கரின் பேச்சில் இப்போது அம்மாவும் மகனும் திகைத்துப் போனார்கள்.

“என்னங்க பேசுறீங்க நீங்க? அந்த வீட்டுப் பொண்ணு நம்மப் பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசி இருக்கா…”

“சம்பந்தமே இல்லாம‌ சும்மா ஒரு பொண்ணு இன்னொரு பொண்ணைப் பத்தித் தப்பாப் பேசுவாளா அமுதா?‌ இவன் ஏதோ சேட்டை பண்ணி இருக்கான்.”

“அதுக்காக… இப்படியா பேசுவாங்க?”

“புரியாமப் பேசாத… ஆளாளுக்கு ஏதோ பண்ணப்போக கடைசியில எங்க வந்து நிக்குது பார்த்தியா?” இப்போது சட்டென்று அருண் தன் அறைக்குள் போய்விட உமாசங்கர் தொய்ந்து போய் சோஃபாவில் அமர்ந்தார்.

சற்று முன்புதான் இளஞ்செழியன் அருணைத் தொடர்பு கொண்டிருந்தான். இன்னும் கொஞ்ச நேரத்தில் அக்காவை ஃபங்ஷனிலிருந்து அழைத்து வர மீண்டும் ஹாஸ்பிடல் போகவேண்டும் என்று அருண் நினைத்துக் கொண்டிருக்கும் போதுதான் செழியனின் அழைப்பு வந்தது.

நடந்திருந்த நிகழ்வை நம்பமுடியாமல் பெற்றவர்கள் திகைத்திருக்க அப்போதும் அருண் கோபப்பட்டுக் கத்தவே செழியன் தொடர்பைத் துண்டித்திருந்தான். அதன்பிறகு உமாசங்கர் நிதானத்திற்கு வந்து விட்டார்.

இப்போது அங்கே அந்த டாக்டரிடம் மாட்டிக் கொண்டிருப்பது தனது பெண். அவளை எந்தச் சேதாரமும் இல்லாமல் மீட்க வேண்டும் என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது.

வாயை மூடிய படி குலுங்கி அழுத மனைவியை ஒரு கையாலாகாத் தனத்துடன் நிமிர்ந்து பார்த்தார் உமாசங்கர்.

“அமுதா… இன்னைக்கு பாங்க்ல நம்ம குணா மாதவியோட கல்யாணப் பேச்சை எடுத்தான்.”

“…………..” குணசீலன் இவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட மனிதர். பரஸ்பரம் நல்ல நட்பு இரு குடும்பங்களுக்கிடையேயும் உண்டு. நல்ல நாள், பண்டிகை என்றால் ஒன்று கூடி விடுவார்கள்.

“இளஞ்செழியனைப் பத்தி லேசாச் சொன்னேன். வாயைப் பொளந்துட்டான்.”

“…………..”

“என்னடா சங்கர் இப்படிச் சாவகாசமாச் சொல்லுற? கண்ணை மூடிக்கிட்டுச் சட்டுன்னு சம்மதம் சொல்லுங்கிறான்.” கண்கள் கலங்கக் கணவர் சொன்னபோது அமுதவல்லி மீண்டும் அழுதார்.

“பெரிய இடம், பையனும் நல்ல மாதிரி… அவங்களாக் கேட்டு வர்றாங்க, இதை விட உனக்கு என்ன வேணும்னு கேட்டான். இந்த சம்பந்தம் மட்டும் அமைஞ்சா மாதவியை அந்த வீட்டுல தாங்குவாங்கன்னு சொல்றான்.”

“……………”

“வசதி வாய்ப்புகளை விடு அமுதா. நம்மப் பொண்ணுக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத குணமான ஒரு பையன் அமைஞ்சிடணும்னு நான் தினமும் அந்த ஆண்டவனை வேண்டிக்கிட்டு இருக்கேன். ஆனா… நமக்குக் கைக்கெட்டினது வாய்க்கு எட்டலை பார்த்தியா?”

இவர்கள் இப்படிக் கலங்கிக் கொண்டிருக்கும் போது மேசை மேல் கிடந்த அருணின் ஃபோன் மீண்டும் அலறியது. சட்டென்று எழுந்த உமாசங்கர் நம்பரைப் பார்த்தார், புதிய எண். சூழ்நிலையைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார்.

“ஹலோ…”

“நான் இளஞ்செழியன் பேசுறேன்.”

“தம்பி… நான் மாதவியோட அப்பா பேசுறேன். தம்பி… உங்களைக் கெஞ்சிக் கேக்கிறேன். எம் பொண்ணை வீட்டுக்குக் கொண்டுவந்து விட்டுருங்க. அவ வாழவேண்டிய பொண்ணு தம்பி. இப்படியெல்லாம் நடந்தா நாளைக்கு அவ வாழ்க்கை என்ன ஆகுறது? நாளைக்கே உங்களுக்கு ஒரு பொண்ணு பொறந்து இப்படி ஆனா நீங்க தாங்கிக்குவீங்களா? என்னோட நிலைமையில இருந்து கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க தம்பி.” அந்தத் தகப்பனின் குரல் கெஞ்சியது.

“அது எதுக்கும் தான் வழியில்லாமப் பண்ணிட்டீங்களே. உங்கப் பொண்ணு இல்லாம எங்கிருந்து எனக்கொரு வாழ்க்கை வர்றது? அவ பெத்துக் குடுக்காம எங்கிருந்து எனக்கொரு பொண்ணு வர்றது? அதெப்படிங்க எல்லாருமே இவ்வளவு சுயநலமா யோசிக்குறீங்க? என்னைப் பத்தி யாருமே கவலைப்பட மாட்டீங்களா?”

“இப்போ உங்கப் பிரச்சனை என்ன தம்பி? உங்களுக்கு மாதவி வேணும்… அவ்வளவுதானே. சரி…‌ அதுக்கு நான் சம்மதிக்கிறேன். மாதவியை உங்களுக்கே கல்யாணம் பண்ணிக் குடுக்கிறேன். எம் பொண்ணை வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்திடுங்க.”

“தேவையில்லங்க… நீங்க இல்லைன்னு சொன்னது இல்லைன்னே இருக்கட்டும். நீங்க எம்மேல பரிதாபப்பட்டு எதுவும் பண்ண வேண்டாம்.”

“ஐயையோ! அப்படி இல்லை தம்பி.”

“உங்கப் பொண்ணு மேல என் சுண்டுவிரல் நகம் கூடப்படாது.”

“அது எனக்கும் தெரியும் தம்பி.”

“அப்போ எதுக்குப் பயப்படுறீங்க?”

“தம்பி… நீங்கப் புரிஞ்சு தான் பேசுறீங்களா?”

“எனக்கு முப்பது வயசாகுது. இந்த உலகத்தோடு போக்கு எனக்கும் கொஞ்சம் புரியும் அங்கிள்.” செழியன் அதற்கு மேல் பேசவில்லை. அத்தோடு லைனைக் கட் பண்ணி விட்டான்.

நிலைமை இங்கே இப்படி என்றால்… அங்கே செழியன் வீடு அமைதியாக இருந்தது. நடந்தது எதையும் நம்ப முடியாமல் கருணாகரன் தலைகுனிந்து உட்கார்ந்திருந்தார்.

“நான் இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கலை கருணா. என்னை மன்னிச்சிடு. ரொம்ப நல்லப் பொண்ணு. ரொம்பப் பொறுமை. செழியனோட முன்கோபத்துக்கு இந்த மாதிரிப் பொண்ணுதான் அனுசரிச்சுப் போவான்னு நினைச்சேன்.” இது சந்திரமோகன்.

“உனக்கு எப்போ ஃபோன் பண்ணினான்?”

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான். அதுதான் அடிச்சுப் பிடிச்சு ஓடி வந்தேன்.”

“ம்…” உறுமலாக வந்தது கருணாகரனின் குரல். கற்பகமும் அமைதியாகக் தான் அமர்ந்திருந்தார். அர்ச்சனாவை அந்த இடத்திற்கு வரவே அவர் அனுமதித்திருக்கவில்லை. காலேஜில் நடந்த பிரச்சனை இதுவரை கணவனுக்குத் தெரியாது என்பதால் சூழ்நிலையை மிகவும் கவனமாகக் கையாள வேண்டி இருந்தது.

“ஃபோனை வெச்சு எங்க இருக்கான்னு கண்டுபிடிக்க முடியலை. பப்ளிக் பூத்ல இருந்து தான் எங்கக்கூடவும் பேசினான்.”

“ஓ…” சந்திரமோகனுக்கு அதற்கு மேல் என்ன பேசுவதென்று தெரியவில்லை.

“அந்தப் பொண்ணு வீட்டுல இருந்து யாராவது வந்து சண்டைப் போட்டா என்னப் பண்ணுறது மோகன்?”

“இல்லை கருணா… அவங்க அப்படிப்பட்ட ஆளுங்க கிடையாது. அப்படியே வந்தாலும் நாகரிகமா நடந்துக்குவாங்களே தவிர சண்டையெல்லாம் போட மாட்டாங்க. அதைப் பத்தி நீ கவலைப் படாதே.”

“இல்லை மோகன்… செழியன் பண்ணி இருக்கிறது ரொம்பத் தப்பான காரியம். இதுக்கு நான் பதில் சொல்லியே ஆகணும். அவன் பொறுப்பில்லாம நடந்திருக்கான். அப்படியே நானும் நடக்கிறது என் வயசுக்கு மரியாதை இல்லை.”

“அதுவும் சரிதான்.”
***

அந்த ப்ளாக் ஆடி கோயிலின் முன்பாகப் போய் நின்றது. செழியன் காரை விட்டு இறங்க மாதவியும் இறங்கினாள். அந்தக் காலைப்பொழுது மிகவும் இதமாக இருந்ததால் வெளியே எங்கேயாவது போகலாமா என்று செழியன் கேட்கப் பெண்ணும் சம்மதித்திருந்தாள்.

சின்ன ஊர்தான். இருந்தாலும் அழகாகவும், பசுமையாகவும் இருந்தது. அத்தனை பெரிதாக அங்கு நாகரிகம் குடி கொண்டிருக்கவில்லை என்று பார்த்தாலே தெரிந்தது. பட்டண வாசிகளுக்கு அந்த எளிமையான வாழ்க்கை நிறையவே உற்சாகத்தைக் கொடுத்தது.

முதன்முதலாக இருவரும் வெளியே போவதால் கோயிலுக்கு வந்திருந்தான் இளஞ்செழியன். சின்னதாக இருந்தாலும் கோயில் கோபுரம் அத்தனை அழகாக இருந்தது. ஃபோனை எடுத்த செழியன் இரண்டு மூன்று ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டான்.

“தம்பீ…” ஃபோனில் கவனமாக இருந்த இளஞ்செழியன் அந்தக் குரலில் திரும்பிப் பார்த்தான். கோயில் வாசலில் பூ விற்றுக் கொண்டிருந்த பெண்மணி தான் அழைத்திருந்தார்.

“என்னம்மா?”

புருஷனும் பொண்டாட்டியுமாக் கோயிலுக்குப் போறீங்க. அந்தப் பொண்ணுக்குக் கொஞ்சம் பூ வாங்கிக் குடுக்கலாம் இல்லை?” சாதாரணமான பேச்சுத்தான். இருந்தபோதிலும் அது எத்தனை தூரம் செழியனைப் பரவசப்படுத்தியது என்று அந்தப் பூக்காரப் பெண்மணி உணர்ந்திருக்கவில்லை.

ஆனால், மாதவி புரிந்து கொண்டாள். பூரித்த முகமாகத் தன்னை ஆவலோடு பார்த்த கண்களை ஏமாற்ற விருப்பமில்லாமல் சற்று அதிகமாகவே அன்று பூ வாங்கினாள்.

அவள் அப்போதே குண்டு மல்லியைக் கூந்தலில் வைத்துக் கொள்ளவும் செழியன் இறக்கை இல்லாமலே வானில் பறந்து கொண்டிருந்தான். ஐநூறு ரூபாய் நோட்டை செழியன் நீட்டவும் பூக்கார அம்மாள் நெளிந்தாள்.

“தம்பி… சில்லறையாக் குடுப்பா. ஐநூறை நீட்டினா நான் என்னப் பண்ணுறது?”

“பரவாயில்லைம்மா. இதை வெச்சுக்கோங்க.” அன்று பூக்காரப் பெண்மணிக்கு யோகம் அடித்தது.

“ஐயையோ!‌ வாங்கின பூவுக்கு மட்டும் காசைக் குடுப்பா. அதுக்கு மேல வாங்கினா உடம்புல ஒட்டாது.” ஏழ்மையிலும் செம்மையைப் பார்த்த போது மாதவி புன்னகைத்தாள். ஆனால் செழியன் மீதிப்பணத்தை வாங்க மறுத்தான்.

“இந்தாம்மா… உம் புருஷன் சொன்னாக் கேக்க மாட்டேங்கிறார். இந்தப் பணத்தை நீ புடி.” தன்னிடம் அந்தப் பெண் பணத்தை நீட்டவும் மாதவி செழியனைப் புன்னகையோடு பார்த்தாள்.

“பரவாயில்லை… அதான் அவங்க குடுக்குறாங்க இல்லை. வாங்கிக்கோங்கம்மா. வீட்டுல குழந்தைங்க இருந்தா ஏதாவது வாங்கிக் குடுங்க.”

“நல்லாச் சேர்ந்திருக்குங்க ஆண்டவா ரெண்டும். இங்கப் பாரும்மா பொண்ணே…‌ ஆம்பிளைங்க கண்டபடி செலவு பண்ணினா பொண்டாட்டிங்க கொஞ்சம் இறுக்கிப் பிடிக்கணும். ரெண்டு பேரும் இப்படிச் செலவு பண்ணினா நாளைக்குப் புள்ளை குட்டின்னு வரும்போது என்ன பண்ணுறதாம்?” கிடைத்த வரை லாபம் என்று நினைக்காமல் அங்கு இலவச அறிவுரை கிடைத்தது.

“சரிம்மா… இனிக் கவனமா இருக்கேன்.” அதற்கு மேலும் தாமதிக்காமல் மாதவி நடையைக்கட்ட செழியனும் இணைந்து கொண்டான். அவன் நடையில் இப்போது புதுத் துள்ளல் தெரிந்தது.

அன்று கோயிலில் ஏதோ விசேஷம் போலும். வாசலிலேயே பெரிய கோலம் போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த போது வாழைமரம் கட்டி மாவிலைத் தோரணங்கள் அலங்கரித்திருந்தன.

இவர்கள் உள்ளே நுழைந்த போது நாதஸ்வரமும், மேளமும் ஒலிக்க ஆரம்பித்தன. செழியன் மாதவியைத் திரும்பிப் பார்த்தான்.

“ஏதோ விசேஷம் போல இருக்கு.” சொல்லியபடியே மாதவியும் பக்கத்திலிருந்த மண்டபத்தை நோக்கி நடந்தாள். அன்றைக்கு முகூர்த்த நாள் போலும். கல்யாணம் ஒன்று நடைபெறுவதற்கான ஆயத்தங்கள் ஜரூராக நடந்தேறிக் கொண்டிருந்தன. இவர்கள் இருவரும் ஒரு புன்னகையோடு அந்த மண்டபத்திற்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டார்கள்.
பட்டும் பவுனுமாகப் பெண்கள் வலம் வர அதைக் கண்டு களிக்கவே ஆண்கள் கூட்டம் சுற்றிவர என, அந்த இடமே அமோகமாக இருந்தது.

பன்னீரும் சந்தனமும் நாலா பக்கமும் வாசனை பரப்பி நாசியை நிரப்பியது.‌ பச்சை மாவிலைத் தோரணங்களுக்கு நடுவே ஆங்காங்கு தொங்கிய மலர்த்தோரணங்கள் கொள்ளை அழகாக இருந்தது.

மாப்பிள்ளைக் கோலத்தில் அமர்ந்திருந்த பையன் எதையோ சாதித்து விட்ட இறுமாப்பில் உட்கார்ந்திருந்தான். செழியனுக்கு அவனைப் பார்க்கவே ஆனந்தமாக இருந்தது. பக்கத்தில் நின்றிருந்த மனிதரிடம் சிரித்தபடி பேச்சுக் கொடுத்தான்.

“மாப்பிள்ளை ரொம்பக் கெத்தா உக்காந்திருக்கார்!”

“இல்லையா பின்ன? பொண்ணு தரமாட்டோம்னு சொன்னவங்களைக் காத்திருந்து ஒரு வழியாச் சம்மதிக்க வெச்சில்லை கல்யாணம் பண்ணுறாரு.”

“ஓ…!‌” செழியனுக்குச் சிரிப்பாக வந்தது. இதுவும் நம்ம கேஸ் போல இருக்கு என்று நினைத்துக் கொண்டான். சற்று நேரத்திலெல்லாம் மணப்பெண்ணை அழைத்து வந்தார்கள். மாப்பிள்ளையின் தோழர்கள் நண்பனைக் கேலி பண்ணிச் சிரிக்க அந்த இடமே கலகலப்பாக இருந்தது.

செழியன் எல்லாவற்றையும் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருந்தான். சம்பிரதாயங்கள் எல்லாம் நடைபெற்றுக் கொண்டிருக்க இவர்கள் கைகளிலும் அட்சதையைக் கொடுத்தார்கள்.

கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க செழியன் மாதவியை இன்னும் நெருங்கி நின்று கொண்டான். ஆனால் அதை அவன் உணராத போதும் மாதவிக்கு மூச்சடைத்தது.

செழியனின் கவனம் முழுவதும் மணமக்களையே சுற்றி நின்றது. அவர்களின் மகிழ்ச்சியை ஏதோ தனக்கு வந்த இன்பம் போல உணர்ந்த அவன் முகம் மலர்ந்து போனது.

“கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” அந்தக் குரலில் நிஜத்திற்கு வந்தவன் அட்சதையைத் தூவினான். யாரோ தூவிய அட்சதை மாதவியின் தலையிலும் விழ அதை லேசாகத் தட்டிவிட்டான் இளஞ்செழியன்.

மாதவி எதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் கண்கள் மணப்பெண்ணின் முகத்தையே மொய்த்திருந்தன. புதுத்தாலி கழுத்தில் மின்ன, ஆசைப்பட்டவனையே கைப்பிடித்த புளகாங்கிதம் அந்தப் பெண்ணின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஆனால் அதன்பிறகு நடந்த ஒவ்வொரு விஷயமும் மாதவியை நெகிழ்த்தியது என்றாலும் செழியனின் மனதை முற்றாகப் புரட்டிப் போட்டது.

சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் முழுவதுமாக முடிவு பெற்றிருக்க மணமக்களை மாப்பிள்ளை வீட்டார் அழைத்துக்கொண்டு போக ஆயத்தமானார்கள். மணமகளைச் சார்ந்த அத்தனை பேரும் கண்கலங்கிய போதும் பெண்ணின் தந்தை அழுத அழுகை செழியனை என்னவோ பண்ணியது.

மாதவியும் கண்களில் கண்ணீரோடு அந்தக் காட்சியைப் பார்த்து நிற்க செழியனுக்கு நேற்று இரவு தன்னிடம் கெஞ்சிய மாதவியின் அப்பா தான் ஞாபகத்திற்கு வந்தார்.

என் மகளைத் தயவு செய்து வீட்டிற்குக் கூட்டிக்கொண்டு வந்து விடுங்கள் என்று கெஞ்சிய அந்தக் குரல்… நேற்று இரவு தன்னைப் பாதிக்காத அந்தக் குரல் இப்போது அவனை லேசாக அசைத்தது.

“மாதவி… போலாமா?”

“ம்…” சட்டென்று அவன் கேட்க மலர்ந்த முகமாகவே மாதவியும் கிளம்பினாள். ஆனால் இளஞ்செழியனின் முகத்தில் சிந்தனை தெரிந்தது. காரை ஸ்டார்ட் பண்ணியவன் வீட்டை நோக்கிக் கிளம்பினான். இயல்பாக அவன் கை ரேடியோவை ஆன் பண்ணியது.

“இங்கு நீயொரு பாதி நானொரு பாதி…‌ இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி…” சுசீலாவின் இனிமையான குரல் காருக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

கோயிலில் பார்த்த சம்பவங்களின் நினைவுகளோடு இருந்த மாதவி செழியனின் முகத்தைக் கவனிக்கவில்லை. வழியில் இருந்த ஒரு ஹோட்டலில் மதிய உணவை வாங்கிக் கொண்டவர்கள் வீடு வந்து சேர்ந்திருந்தார்கள்.

உணவை உண்ணும் போதும் சரி, அதன் பிறகும் சரி செழியன் எதுவும் மாதவியிடம் பேசவில்லை. ஏதோ சிந்தித்தபடியே அமர்ந்திருந்தான். நேரம் மூன்றைக் கடந்திருந்த போது மாதவியைத் தேடிக்கொண்டு வந்தான் இளஞ்செழியன்.

“மாதவி…”

“ம்…” டாக்டர் என்று அழைப்பதைப் பெருமட்டிற்குத் தவிர்த்துக் கொண்டாள் பெண்.

“கிளம்பலாம்.”

“என்ன?!”

“இங்க இருந்து கிளம்பலாம் மாதவி.” மாதவி திகைத்துப் போனாள். அவளால் செழியனின் வார்த்தைகளை நம்ப முடியவில்லை.

“என்ன ஆச்சு?”

“புரியலை…”

“ஒரு வாரம் இருக்கலாம்னு சொன்னீங்க… என்ன இப்போத் திடீர்னு?”

“இல்லையில்லை… இப்போவே கிளம்பலாம். இப்போக் கிளம்பினா நைட்டுக்கு வீட்டுக்குப் போயிடலாம்.”

“ஓ…”

அதன்பிறகு செழியன் சற்றும் தாமதிக்கவில்லை. என்ன நினைத்தானோ என்னவோ. மாதவியிடமும் அதிக பேச்சுக் கொடுக்கவில்லை. ஏதோ சிந்தனை வயப்பட்டவனாகவே இருந்தான்.

மாதவியும் எதுவும் பேச நினைக்கவில்லை. இரண்டொரு முறை செழியனைத் திரும்பிப் பார்த்ததோடு சரி. காரில் ஒலித்துக் கொண்டிருந்த பழைய பாடல்களைத் தவிர அவர்களை மௌனம் சூழ்ந்திருந்தது.
***

இரவு ஒரு ஏழு மணியைப் போல கருணாகரன் மாதவியின் வீட்டிற்கு வந்திருந்தார். கூடவே சந்திரமோகனும், இளங்கோவும் வந்திருந்தார்கள்.‌ சந்திரமோகன் ஏற்கனவே சேதி சொல்லி இருந்ததால் நிலைமை கொஞ்சம் சுமூகமாகவே இருந்தது.

அருணும் அங்கே தான் நின்றிருந்தான். இவர்கள் வருவது முன்னமே தெரிந்ததால் உமாசங்கர் மகனை மிகவும் எச்சரித்திருந்தார். பல்லைக் கடித்தபடி தான் நின்றிருந்தான் அருண்.

காரை விட்டிறங்கிய ஆண்கள் மூவரும் உள்ளே வந்தார்கள். வரவேற்பதா, இல்லையா… எதுவும் புரியாமல் உமாசங்கர் நின்றிருக்க, அமுதவல்லி,
“வாங்க.” என்றார் பொதுப்படையாக. கண்கள் கலங்கி இருந்தது. கருணாகரன் என்ன நினைத்தாரோ… சட்டென்று இரு கைகளையும் கூப்பி,
“என்னை மன்னிக்கணும் நீங்க. நடந்தது எதுவும் எங்களுக்கும் தெரியாதுன்னாலும், தப்புப் பண்ணி இருக்கிறது எம் பையன். அதுக்காக நீங்க என்னை மன்னிக்கணும்.” என்றார்.

“கருணா!” இது சந்திரமோகன்.

“இல்லை மோகன். செழியன் பண்ணி இருக்கிறது எவ்வளவு பெரிய தவறு. இந்தக் காலப் பசங்க என்ன தான் நினைச்சுக்கிட்டு இப்படியெல்லாம் பண்ணுறாங்க? ஒன்னுமே புரியலை. என் வீட்டுலயும் ஒரு பொண்ணு இருக்கு.‌ இதெல்லாம் பார்க்கும் போது பயமா இருக்குப்பா.” இதை கருணாகரன் சொல்லிய போது அருணின் முகம் கடுகடுத்தது.
‘எல்லாம் அந்தப் பாதகியால் வந்தது தானே!’ என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான். உமாசங்கர் எதுவும் பேசவில்லை. அமைதியாக நின்றிருந்தார். கடந்த ஒரு இரவுக்குள்ளாக அவருக்கு உலகமே வெறுத்திருந்தது.

“உக்காருங்க.” சலிப்பாக வந்த உமாசங்கரின் குரலில் வந்திருந்த மூவரும் விருப்பமில்லாமலேயே அமர்ந்தார்கள்.

“அங்கிள்… செழியன் தப்பானவன் கிடையாது. என்ன பண்ணுறோம்னு புரியாம ஏதோ பண்ணிட்டான். அவனோட அன்பைக் காட்டத் தெரியாமக் காட்டிட்டான். அதுக்காக அவன் பண்ணினதைச் சரின்னு நான் சொல்ல வரலை. உங்கப் பொண்ணு போன மாதிரித்தான் திரும்பி வருவா. அவங்களுக்கொரு நல்ல வாழ்க்கையை அமைச்சுக் குடுக்கிறது எங்க பொறுப்பு.” இளங்கோ தயவாகப் பேச, உமாசங்கர் கசப்பாகப் புன்னகைத்தார்.

“மனசுல எதையும் போட்டுக் குழப்பிக்காதீங்க உமாசங்கர். இளங்கோ சொன்னது நிஜம்தான். மாதவியை அப்படியெல்லாம் நாங்க அம்போன்னு விட்டுற மாட்டோம். நீங்க கவலைப் படாதீங்க.”

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்க, வாசலில் அந்த ப்ளாக் ஆடி சர்ரென்று வந்து நின்றது. அத்தனை பேரும் கவனம் திரும்பி அங்கே பார்க்க… மாதவி காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தாள்.

“மாதவி!” அமுதவல்லி கூவிக்கொண்டு வெளியே போகப் போக உமாசங்கர் மனைவியின் கையைப் பிடித்துத் தடுத்தார்.

“அமுதா!‌ அக்கம்பக்கத்துல இருக்கிறவங்க வாய்க்கு நீயே அவல் குடுக்கப் போறியா?” கணவரின் கண்டிப்பான குரலில் அமுதவல்லி அப்படியே நின்றுவிட்டார்.

பாய்ந்து வெளியே செல்லப்போன அருணை இளங்கோ இழுத்துப் பிடித்துக் கொண்டான். அவன் எண்ணம் என்னவென்பது இளங்கோவிற்கு நன்றாகப் புரிந்திருந்தது.

மாதவி இறங்கி உள்ளே வர, சற்றுத் தாமதித்து செழியனும் இறங்கி வந்தான். ஆனால் உள்ளே வந்த இருவருமே அங்கு நின்றிருந்த மூவரையும் அப்போது எதிர்பார்க்கவில்லை.

மாதவி திகைத்துப்போய் நின்றிருக்க, செழியனின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் கருணாகரன்.

“கருணா!”

“நீ எதுவும் பேசாத மோகன். இவன் பண்ணி இருக்கிற காரியத்துக்கு இவனை என்ன வேணும்னாலும் பண்ணலாம்.” கொதித்துக் கொண்டிருந்தார் கருணாகரன். என்னதான் தவறு செய்திருந்த போதும் அத்தனை பேர் முன்னிலையிலும் மகனை கருணாகரன் கைநீட்டி அடிப்பார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கன்னத்தைத் தடவியபடி தலைகுனிந்து நின்றிருந்த செழியனைப் பார்த்த போது அருணின் முகம் கோபத்தால் சிவந்தது என்றால், மாதவிக்கு லேசாக வலித்தது. இந்த வேதனை தன்னால் தானே இந்த மனிதனுக்கு வந்தது என்று அவளால் வருந்தாமல் இருக்கமுடியவில்லை.

உமாசங்கருக்கும், அமுதவல்லிக்கும் அப்போது தாங்கள் எப்படி உணர்கிறோம் என்றே வகை பிரித்து அறிய முடியவில்லை. தங்கள் மகளுக்கு இப்படியொரு சங்கடத்தை உருவாக்கிய டாக்டர் மேல் கோபப்படுவதா? இல்லை… ஒரு வாரம் என்று காலக்கெடு விதித்துவிட்டு மறுநாளே அழைத்து வந்ததை முன்னிட்டு நன்றி பாராட்டுவதா?

ஆனால் செழியன் பெரிதாக எதையும் அலட்டிக் கொள்ளவில்லை. நேராக நடந்து உமாசங்கரிடம் போனவன் கைகூப்பி,
“சாரி அங்கிள்.” என்றான். இளங்கோவிற்குப் பக்கத்தில் நின்றிருந்த அருணிடப் போனவன் அவன் தோளில் கையை வைக்க, அதைச் சட்டென்று தட்டிவிட்டான் இளையவன்.

இளங்கோவின் கண்கள் ஒரு முறை மூடித்திறந்து செழியனை அமைதிப்படுத்தியது. ஒரு பெருமூச்சோடு செழியன் காரை நோக்கிப் போய் விட்டான். மறந்தும் அவன் மாதவியைத் திரும்பிப் பார்க்கவில்லை.

error: Content is protected !!