KP-3

குறும்பு பார்வையில் – 3

‘ஆகாஷ், சராசரி ஆண்களை விட உயரம். கலையான முகம். மாநிறம்.  கடல் அலை போல் கருமையான வளைந்த சிகை. ஆண்களையும் பொறாமைப் படவைக்கும் தோற்றம். கதைகளில் வருணிப்பது போல் பெண்களும் விரும்பும் தோற்றம்.’ என்று அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள் ஸ்ருதி.

அனைவரின் கண்களும் அவனை பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. அனைவரின் பார்வையிலும் ஸ்ருதியின் உதடுகள் வளைந்தது.

‘அனைவரின் பிரமிப்பும் இவன் தோற்றத்திலா?’ என்ற கேள்வி ஸ்ருதியின் மனதில் எழுந்தது.

ஆகாஷ் தன் ரோபோ நாய்க் குட்டியை வைத்து, அதன் பலன்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

“முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ரோபோட் நாய்கள் விமான நிலைய பாதுகாப்புப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளது.” என்று ஆகாஷ் கூற, அனைவரும் தலை அசைத்துக் கேட்டுக்கொண்டனர்.

ஸ்ருதியும் ஆமோதிப்பாகத் தலை அசைத்துக் கொண்டாள்.

“அதிநவீன தொழில் நுட்பம்…” என்று கூறி, ஆகாஷ் அதன் தொழில் நுட்பத்தை விளக்க, அனைவரும் அவனை மெச்சும் விதமாகப் பார்த்தாலும், ஸ்ருதி எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

ஆகாஷின் அறிவை அவன் செயல் திறமையை மனதில் குறித்துக் கொண்டாள் ஸ்ருதி.

“இந்த ரோபோட் நாய் நிஜ நாய்களைப் போலவே, வெடிகுண்டு மற்றும் போதைப் பொருள் இருக்கும் இடங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடிக்கும். அதே போல் விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் பொருட்களை அதன் கண் வழியாக எக்ஸ்-ரே எடுத்து நொடியில் சோதனை செய்யும்.” என்று ஆகாஷ் கூற, அனைவரும் ஆரவாரமாகக் கைதட்டினர்.

அனைவரின் கைத்தட்டலிலும், ஆகாஷின் புன்னகை விரிந்தது. ‘எத்தனை உயரமான மனிதர்களாக இருந்தாலும் அவர்கள் ஏங்குவது பாராட்டுக்கு தானே?’ என்று ஆகாஷின் மனம் எண்ணிக்கொண்டது.

 

ஆகாஷையும் அறியாமல், அவன் கண்கள் ஸ்ருதியின் பக்கம் திரும்பியது.

‘ஸ்ருதியின் கைகளும் தன்னை பாராட்டுகின்றதா?’  என்று ஆகாஷின் மனம் விழைந்தது.

‘எதற்கு பாராட்ட வேண்டும்? அவள் யார்?’ என்றெல்லாம் ஆகாஷின் அறிவு கேட்க விழைந்தாலும், அவன் அறிவு இந்த விஷயத்தில் மந்தமாகி, அவன் மனமே ஏங்கியது.

ஸ்ருதி எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல், அவள் வெண்டை விரல்களை மென்மையாக அசைத்தபடி ஆமோதிப்பாக தலை அசைத்துக் கொண்டாள்.

‘அந்த ஆமோதிப்பில் மெச்சுதல் அடங்கியுள்ளதா?’ என்று விடையறிய முடியா கேள்வி ஆகாஷின் மனதில் எழுந்தது.

அங்கு கைதட்டுகள் அடங்கியதும்,  ஸ்ருதியின் கேள்வி அவனை நோக்கிப் பாய்ந்தது.

“நீங்க சொன்ன விஷயங்கள், ரொம்ப நல்லவிஷயம் தான். இதெல்லாம் அயல் நாட்டில் ஏற்கனவே இருக்கும் பொழுது, நாம அங்கிருந்து வாங்கி அதை உபயோகிக்கலாம். இல்லை, நம்மாலே அதே மாதிரி பண்ணிடலாம். நம்ம நாட்டுக்குன்னு தேவையான விஷயங்கள் ஏதாவது இதுல ஸ்பெஷலா இருக்கா?” என்று ஸ்ருதி அவள் கேள்வியை முன்வைத்தாள்.

‘ஆகாஷை எதிர்த்து கேள்வியா?’ என்று அங்கிருந்த பலரின் வயிற்றில் பயபந்து உருண்டது. சிலரின் மனதில் பிரமிப்பும்.

‘அனைவரும் அஞ்சும் அளவுக்கு ஆகாஷ், மோசமானவனும் இல்லை. இன்றைய பல கதைகளில் வரும் கதாநாயகர்கள் போல், வில்லத்தனமான கதாநாயகனும் இல்லை.’ என்ற எண்ணம் அந்த அறையின் ஓரத்தில் அமர்ந்திருத்த கார்த்திக்கிற்குத் தோன்றினாலும், ‘இந்த கேள்வி நாட்டுக்கு தேவையா? நாட்டுக்கு தேவைனாலும், இவளுக்குத் தேவையா?’ என்று ஸ்ருதியை கடுப்பாகப் பார்த்தான் கார்த்திக்.

கார்த்திக்கின் கடுப்பான பார்வையைப் பார்த்தும் பார்க்காதது போல் ஸ்ருதி தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஆகாஷ் முகத்தில், சின்ன வியப்புக்குறி! இதுவரை அவனை யாரும் அத்தனை எளிதில் எதிர்த்ததில்லை. எதிர்க் கேள்வி கேட்டதுமில்லை.

‘தனக்கென்று தனி அடையாளம் வேண்டும்…’ என்று தொழில் தொடங்கினாலும், ஆகாஷ் என்ற தனி முத்திரையைத் தேடி அவன் ஓடிக்கொண்டிருந்தாலும், சங்கரன் என்ற பிசினெஸ் அடையாளமும், ஷண்முக சுந்தரம் என்ற அரசியல் அடையாளமும் அவனை மறைத்துக் கொண்டு தான் நின்றது.

கதிரவன் என்று ஆகாஷ் அவனை நிலை நிறுத்த முயன்றாலும், அவனின் தாத்தா, அப்பா அவர்களுது புகழும், பணமும், அதிகாரமும் சூரியனை மறைக்கும் மேகமாகவே ஆகாஷிற்கு தோன்றியது.

அவனை எதிர்த்து வைக்கப்படாத கேள்வியும், வாதங்களும் ஆகாஷிற்கு இதுவரை வருத்தமே…

‘அறிவில்லையா?’ என்று ஸ்ருதி கேள்வி கேட்ட விதம் அன்று கோபத்தைக் கிளப்பினாலும், இன்று பலர் முன் ஸ்ருதி கேள்வி கேட்ட விதம், ஆகாஷுக்கு சரியான சவாலாக தெரிந்தது.

‘இது அன்றைய கோபத்தின் வெளிப்பாடோ?’ என்ற சந்தேகம் ஆகாஷின் மனதில் எழ, ஸ்ருதியை கணக்கிட்டும் விதமாகப் பார்த்தான்.

‘என்ன அழுத்தமான பார்வை. எதையும் கண்டுகொள்ள முடியலையே…’ என்ற அவனது அனைத்து யோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு, அவள் கேள்விகளுக்குப் பதில் கூற ஆரம்பித்தான் ஆகாஷ்.

அனைவரும் ஸ்ருதியை பார்ப்பது போல் இருந்தாலும், ‘இவங்கெல்லாம் பார்த்தா எனக்கென்ன?’ என்று தோள்களை குலுக்கி கொண்டாள் ஸ்ருதி.

‘இந்த கார்த்திக் தான் நைநைன்னு எதாவது சொல்லுவான். அவன் கிடக்கான்.’ என்று ஸ்ருதி எண்ணிக்கொண்டிருக்க,  அவள் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது ஆகாஷின் குரல். அவன் விளக்கம்.

“இதை டொமெஸ்டிக் பர்பஸ்க்கு கூட… அதாவது வீட்டுக்கு கூட உபயோகிக்கலாம். நடுத்தர வர்க்கத்தினருக்கும் உபயோகம் ஆகும்.” என்று ஆகாஷ் கூற, “அட… நாய்களை அன்பு செலுத்த கூட வச்சிக்கிட்டு வாழற வாழ்க்கை முறை இன்னும் இந்தியாவில் வரலைன்னு நான் நினைக்குறேன்.” என்று ஆகாஷின் பேச்சில் தன் கருத்தை இடக்காகச் சொருகினாள் ஸ்ருதி.

அனைவரும் மெளனமாக அவர்கள் தலையை ஸ்ருதியின் பக்கம் திருப்பினர். கார்த்திக் இம்முறை ஸ்ருதியை இன்னும் கடுப்பாகப் பார்த்தான்.

அனைவரின் பார்வைக்கும் பதில் போல் ஆகாஷ் அவன் புன்னகையைப் பெரிதாக்கினான். “இந்த மாதிரி கேள்வி கேட்கும் பொழுது தான் நம் விவாதமும், கண்டுபிடிப்பும் சுவாரசியமாகும்.” என்றான் ஆகாஷ் மெச்சுதலாக.

‘யாரும் இல்லைனா கோபப்படவேண்டியது. இங்க அப்படியே தன்மையா பேச வேண்டியது. இல்லை இது தான் இவன் உண்மை குணமோ? அன்னைக்கி நான் பேசிய முறையில் தான் கடுப்பாகிட்டானோ?’ என்ற சந்தேகமும் ஸ்ருதியின் மனதில் எழுந்தது.

” நான் சொன்னது அன்பு செலுத்தும் முறைக்காக இல்லை. காவல் காக்க. முன்னெல்லாம், ஒரு பாதுகாப்புக்கு வீட்டுக்கு ஒரு நாய் வளர்ப்போம். ஆனால், இப்ப இருக்கிற அப்பார்ட்மெண்ட் வாழ்க்கை முறையில் நம்ம வாசலில் கோலம் போடுறது கூட ஒரு பிரச்சனையா இருக்கும் பொழுது, நம்மளால ஒரு நாய் வளர்க்க முடியுமா?” என்று ஆகாஷ் கேள்வியாக நிறுத்த அனைவரும் ஆமோதிப்பாகத் தலை அசைத்தனர்.

‘எவ்வளவு பொறுமையா, நிதானமா பேசுறான்.’ என்ற எண்ணத்தோடு அவன் பேச்சை முழு கவனத்தோடு கேட்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.

“அது மட்டுமில்லை… நாய்க்கு சாப்பாடு போடவும் வேண்டாம். அதைச் சுத்தம் பண்ணவும் வேண்டாம். ஆண் நாயா? பெண் நாயா? குட்டி போட்டருமான்னு பயப்பட வேண்டாம்.” என்று அவன் கேலியாகக் கூற, அவன் குறும்பு பேச்சில் ஸ்ருதியின் அதரங்கள் இம்முறை  புன்னகையோடு மலர்ந்தது.

அந்த மலர்ச்சி மின்னல் போல் ஒரு நொடி தான். யாரும் கவனிக்குமுன் அதைச் சட்டென்று மறைத்துக் கொண்டாள் ஸ்ருதி.  ஆனால் அந்த நொடியில் ஆகாஷின் கண்கள் அதை படம் பிடித்துக் கொண்டது.

‘ப்பா… என்னவொரு சிரிப்பு…கூட கொஞ்சம் நேரம் சிரித்தால் முத்து உதிந்திருமா?’ என்ற கேள்வி அவன் மனதில் தோன்றினாலும், அவள் புன்னகையின் எதிரொலியாக அவன் புன்னகையும் விரிந்தது.

‘மந்தகாச புன்னகை தான்… இதில் பலர் வீழ்ந்துவிடுவார்கள் என்று இப்படி சிரிப்பானோ?’ என்று கேள்வியோடு, ஸ்ருதி மௌனமாகப் பார்த்தாள்.

கேலியை விடுத்து, “சரி விஷயத்துக்கு வருவோம். ரோபோட் நாயின் கண்கள் அனைவரையும் படம் பிடிக்கும். நம்ம அப்பார்ட்மெண்ட் மனிதர்களை, நம்ம நண்பர்களை, வழக்கமா வீட்டுக்கு வரவங்களை  நாம பிரெண்ட் லிஸ்ட்ல சேர்த்துட்டா ரோபோட் நாய் வாலை ஆட்டிக்கொண்டு வழிவிடும்.” என்று ஆகாஷ் தீவிரமாகக் கூறினான்.

“இதுல, வரப்போகும் பெண்களை தவறா படம்பிடிச்சிட்டா? இதை நல்ல விஷயத்துக்கும் மட்டும் தான் படம் பிடிப்பாங்கன்னு என்ன நிச்சயம்?” என்று ஸ்ருதி தன் கண்களை சுருக்கி கொண்டு தீவிரமாக கேட்டாள்.

ஆக்ஷ்ன் நெற்றியில்  புருவ முடிச்சுகள் விழுந்தன. அங்கு மயான அமைதி.  ‘பெண்கள் பாதுகாப்புன்னு சொன்னா, எப்படி இதை மேலே கொண்டு போக முடியும்.’ என்று அந்த கூட்டத்தின் தலைவர் கலங்கிவிட்டார்.

‘நிராகரித்து விட்டால்… பெரிய இடத்து பிள்ளை…’ என்ற எண்ணம் அவருள் கலக்கத்தை உண்டு பண்ணியது.

‘ஈஸ்வரன் இடம், மனிதர்கள் பார்த்துத் தழைந்து போவார். ஆனால், இந்த பொண்ணு போகாது போல. புத்திசாலியா வேற இருக்கு.’ என்று யோசனையோடு அவர் அமர்ந்திருந்தார்.

‘இதுவரை, ஆகாஷ் சொன்ன திட்டங்களுக்கு மறுப்பு தெரிவித்ததில்லை. ஆனால், இம்முறை…’ என்று கூட்டத்துத் தலைவர் தர்மசங்கடமாக நெளிய, கார்த்திக் இம்முறை கடுப்பின் உச்சத்துக்குச் சென்றுவிட்டான்.

சிலநிமிட யோசனைக்குப் பின், “எஸ்… ஸ்ருதி சொன்னது சரி தான். ஒரு பெண்ணின் பார்வையில் நான் யோசிக்கலை. ஐ வில் கன்ஸிடெர். பெண்கள் பாதுகாப்பபு ரொம்ப முக்கியம்.” என்று ஆகாஷ் சுய விளக்கம் கொடுக்க, அனைவரும் ஆகாஷை மெச்சுதலாகவே பார்த்தனர்.

இம்முறை யாரும் கைதட்டவில்லை. ஆனால், ஸ்ருதி தன் கைகளைத் தட்டி, “தட்’ஸ் கிரேட்…” என்று நிதானமாகக் கூறினாள் ஸ்ருதி.

‘இவ பாராட்டை யாரு கேட்டா?’ என்று கார்த்திக் அவளைக் கடுப்பாகப் பார்க்க, ஆகாஷ் யோசனையாக அவன் இடத்திற்கு வந்தமர்ந்தான்.

மேலும், சிலர் பேசிவிட்டு கூட்டம் முடிந்து அனைவரும் உணவருந்த சென்றனர். அங்குத் தட்டு சேவை முறை அமைந்திருக்க, சூப் சாப்பிட ஆரம்பித்தாள் ஸ்ருதி.

“ஸ்ருதி… நான் காலையில் உன்னை எனக்காக வெயிட் பண்ண சொன்னேன். நீ கிளம்பி வந்துட்ட?” என்று கார்த்திக் கேட்க, “நான் உன்னை எத்தனை மணிக்கு வர சொன்னேன். பிரெண்டா இருந்தாலும் டைம் முக்கியம். நீ மீட்டிங்க்கு லேட்டா வந்த.” என்று கூறிக்கொண்டு தன் சூப்பை முடித்துக் கொண்டு ஸ்டார்ட்டர் எடுக்கச் சென்றாள் ஸ்ருதி.

“சரி அதை விடு… ஆகாஷ் பெரிய மனிதர்… அவரை ஏன் பகைச்சுக்குற?” என்று கார்த்திக் தன்மையாகக் கேட்க, “பெரிய மனிதர் உருவத்திலா? இல்லை இந்த வயசிலா?” என்று ஸ்ருதி நக்கலாக கேட்க, கார்த்திக்  அவளை முறைத்தான்.

“டேய்… ஏண்டா டென்ஷன் ஆகுற? நான் ஒன்னும் தப்பா சொல்லலை. அன்னைக்கு என் சிப்பி எல்லாம் தட்டிவிட்டது இவர் தான்.” என்று ஸ்ருதி கூற, “இவரா?” என்று அதிர்ச்சியாகிக் கேட்டான் கார்த்திக்.

“இவர்னா… இவர் பண்ண நாய்க்குட்டி.” என்று விளக்கம் கொடுத்தாள் ஸ்ருதி.

“அதுக்கு தான் இத்தனை கேள்விகளா?” என்று கார்த்திக் விஷயத்திற்கு வர, “இல்லை கார்த்திக். எனக்கு எந்த உள்நோக்கமும் கிடையாது. எனக்கு இப்படி தான் கேள்வி கேட்க தோணுச்சு… நான் கேட்டேன்.” என்று ஸ்ருதி உறுதியாகக் கூறினாள்.

“ஆகாஷ் ரொம்ப நல்ல மாதிரி. நம்மளை மாதிரி புதுசு இல்லை. நமக்கு முன்னாடி இந்த இடத்திற்கு வந்தவர். நமக்கு இது மட்டும் தான் பிஸினெஸ். அவங்களுக்கு இது பல பிசினஸில் ஒன்னு.” என்று கார்த்திக் கூற, “சோ…” என்று கேள்வியாக நிறுத்தினாள் ஸ்ருதி.

கார்த்திக் மௌனம் காக்க, “நம்மளை  விட பெரிய இடம்ன்னு சொல்ற.” என்று ஸ்ருதி பேச்சை வளர்க்க, “ஆமா, நீ நாட்டாமை படத்தில் வர வினுச்சக்கரவாதி பொண்ணுனா, அவர் சரத்குமார் பேமிலி மாதிரி… உங்க அப்பா, எங்க அப்பா எல்லாரும் அவங்க கிட்ட தழைந்து தான் போவாங்க.” என்று கார்த்திக் நிலைமையை எடுத்துரைக்க முயற்சிதான்.

“புது படம் பார்க்கலையா?” என்று ஸ்ருதி கடுப்பை கிளப்ப, “ஸ்ருதி…” என்று தன்மையாகப் பார்த்தான் கார்த்திக்.

“சரி… சரி… டென்ஷன் ஆகாத… நான் உன்னை கிண்டல் பண்ணலை. ” என்று ஸ்ருதி மெயின் கோர்ஸ் எடுக்க செல்ல, ‘ஸ்ருதி நான் சொல்றதை  கேட்க மாட்டா போல. எந்த பிரச்சனையும் வந்திர கூடாதே.’என்ற எண்ணத்தோடு மௌனமாக உணவருந்தினான் கார்த்திக்.

ஸ்ருதி, கார்த்திக் இருவரும் உணவை முடித்துவிட்டு வர அவர்களுக்கு எதிராக வந்தான் ஆகாஷ்.

‘இயல்பாக வந்தானா? இல்லை இவர்களை நோக்கித் தான் வந்தானா?’ என்ற கேள்வி ஸ்ருதியின் மனதில் எழுந்தது. தன் நாக்கை வளைத்து அவனை யோசனையாகப் பார்த்தாள் ஸ்ருதி.

கார்த்திக்கு அப்படியாக்கப்பட்ட எண்ணங்கள் எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை.

 

“ஹலோ சார்…” என்று முன்னே நடந்து ஆகாஷிடம் கைகுலுக்கினான் கார்த்திக்.

ஆகாஷின் கைகள் கார்த்திக்கிடம் இருந்தாலும், அவன் கண்கள் ஸ்ருதியை அளவிட்டு கொண்டிருந்தது.

ஆர்ப்பாட்டமான உடை இல்லை. இலை பச்சையில் லெக்கிங்ஸ். மெல்லிய மனதை வருடும் பச்சை நிறத்தில், டாப்ஸ். விலை உயர்ந்த, கண்களை உறுத்தாத அவளுக்குப் பொருத்தமான உடை.

அதே நிறத்தில்,பொம்மை வடிவில் ஹாண்ட்பேக். அதில் அவனைப் பார்ப்பது போல் பளபளக்கும் கண்கள்.

‘ஓ… இதுக்கு தான் சிப்பி எடுத்திருப்பாளோ? நான் தான் சொதப்பிட்டேனோ?’ என்ற கேள்வியோடு, கார்த்திக்கிடம் முகமன் நடத்திக் கொண்டிருந்தான் ஆகாஷ்.

அவன் பார்வை ஓட்டத்தைக் கண்டுகொண்டாள் ஸ்ருதி.  ‘கம்பீரமான, அளவிடும் பார்வை. எந்தவித தவறான எண்ணமுமில்லை. கொஞ்சம் நல்லவன் தான்.’ என்று எண்ணிக்கொண்டாள் ஸ்ருதி.

கார்த்திக் பேச்சின் இடையில், ஸ்ருதியை கண்களால் அழைக்க, ‘இவன் வேற கூப்பிடுதானே?’ சற்று படபடப்பு அதிகமானது ஸ்ருதியின் மனதில்.

‘கேள்வியெல்லாம் சாதாரணமா கேட்டுட்டோம். நான் கேட்டதில் எந்த தப்புமில்லை. ஆனால், இவன் கிட்ட என்ன பேச்சு?’ என்று கார்த்திக்கின் அழைப்பைக் கண்டும் காணமால் திரும்பிக்கொண்டாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் செய்கையில், ஆகாஷின் புன்னகை விரிந்தது. முகத்தைத் திருப்பிக்கொண்டாலும், ஸ்ருதி அவனை அளவிட்டுக் கொண்டிருந்தாள்.

‘இவன் சிரிப்பே நக்கலா இருக்கே? நக்கல் பேசுவானோ?’ என்று எண்ணம் எழ, உதட்டைச் சுழித்துக் கொண்டாள்.

‘பேசட்டும் பார்த்துக்கலாம். நான் பக்கத்தில் போனால் தானே? இவன் கிட்ட நான் எதுக்கு பேசணும்?’ என்ற எண்ணம் தோன்ற, அசட்டையாக நின்றாள் ஸ்ருதி.

“ஸ்ருதி… இங்க வா…” என்று கார்த்திக் அழைக்க, ‘அடேய்… கார்த்திக்… நீயெல்லாம் ஒரு நண்பனா? உன் நட்பை காலேஜ் டேஸ்ல… இல்லலை  ஸ்கூல் டேஸ்லயே பிரேக்கப் பண்ணிருக்கணும். பண்றேன் டா இன்னைக்கு…’ என்று உறுதி எடுத்துக்கொண்டாள் ஸ்ருதி.  இது போல் உறுதிகள் பல முறை காற்றில் பறந்தது வேறு விஷயம்.

ஸ்ருதி கார்த்திக்கின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து அவன் அருகே சென்றாள்.

 

ஸ்ருதியின் கைகளில் இருந்த பொம்மை கைப்பையைப்  பார்த்தபடி, “இந்த பொம்மைக்கு தான் அன்னைக்கு சிப்பி எடுத்தீங்க போல? சாரி என் டாம் பண்ண வேலையில் எல்லாம் வீணாபோச்சு.” என்று ஆகாஷ் மன்னிப்பு தெரிவிக்க, கார்த்திக் பதறிவிட்டான்.

ஸ்ருதியும் இதை எதிர்பார்க்கவில்லை.  அவனைச் சங்கடத்தோடு பார்த்தாள்.

‘இப்பொழுது சமாதானம் பேசுவது என் முறையோ?’ என்ற கேள்வி தோன்ற, ஒரு நொடி தயக்கத்திற்குப் பின் பேசினாள் ஸ்ருதி.

“பரவால்லை… இன்னொரு முறை எடுத்துக்குறேன். டாம் ஒரு நல்ல முயற்சி தான். நான், என் மனசில் பட்டதைத் தான் மீட்டிங்கில் சொன்னேன். எந்த முன்விரோதமும் இல்லை.” என்று பளிச்சென்று கார்த்திக்கும் சேர்த்து பதில் சொன்னாள் ஸ்ருதி.

“ச்ச… ச… நான் அப்படி நினைக்கலை. நீங்க சொன்ன விஷயம் சரி தானே?” என்று ஆகாஷ் புன்னகையோடு  கூற, ஸ்ருதி தலை அசைத்துக் கொண்டாள்.

பேச்சை வளர்க்காமல், “மீண்டும் நல்ல ஒரு இடத்தில் சந்திப்போம்.” என்று ஆகாஷ் கார்த்திக்கு கைகுலுக்கி விட்டு  அவன்  கைகளை ஸ்ருதியிடம் நீட்டினான்.

ஸ்ருதி அவனை யோசனையாக ஒரு நொடிக்கும் குறைவாகப் பார்க்க, அவள் பார்வையின் பொருள் புரிந்துகொண்டவன் போல், “எந்த பிசினெஸ் டீலும் இல்லைங்க… நட்பு ரீதியா தான். பிஸினெஸ் வேற… பிரெண்ட்ஷிப் வேற…” என்று ஆகாஷ் தெளிவாகக் கூற, ஸ்ருதி  அவள் கைகளை நீட்டினாள்.

அந்த நொடியில் ஆகாஷின் குறும்பு எட்டிப் பார்த்தது.

ஸ்ருதி கண்களில் யோசனையோடு கைகளை நீட்ட, ஆகாஷ் சரேலென்று கைகளை உருவிக் கொண்டான்.

“கொஞ்சம் சிரித்த முகமா, நம்பிக்கையா கைகொடுத்தா தான்.” என்று ஆகாஷ் கண்களைச் சிமிட்டி கேலி பேசி, தன் கைகளை மடித்துக் கொள்ள, ஸ்ருதி என்ன செய்யப் போகிறாள் என்ற பதட்டம் கார்த்திக்கைச் சூழ்ந்தது.

‘ஸ்ருதிக்கு அசருபவன் நானா?’ என்ற தொனியில் அவளைப் பார்த்து குறுஞ்சிரிப்போடு நின்றான் ஆகாஷ்.

குறும்புகள் தொடரும்…