UKU 2

UKU 2

உயிர் காதலே உனக்காகவே…!

காதலின் நினைவலைகள்…

18.05.2009.

நீ…!
என் விழிகளுக்கு காட்சியாக
மட்டும் அல்ல நீ…!
என் உதடுகளுக்கு வார்த்தைகளாக‌
மட்டும் அல்ல நீ…!
என் இதயத்திற்கு துடிப்பாக‌
மட்டும் அல்ல நீ…!
என் வாழ்க்கையே நீயாக இருப்பதால்
காதலே கலைந்து விடாதே…!

ஜஸ்ட் மிஸ்…! கொஞ்சம் அசந்திருந்தாலும் என் மண்டையை பதம் பார்த்திருக்கும் அந்த வாளி.

நான் சுதாரித்து நகர்ந்து கொள்ளவும் கீழே விழுந்து உடைந்தது. அந்த சத்தத்தில் கீழே நின்றிருந்த வாலிபர்கள் நிமிர்ந்து,

ஏதோ நான்தான் அந்த வாளியை கீழே போட்டது போல விநோதமாக என்னைப் பார்த்தனர்.

என் கண்ணிலிருந்த உக்கிரத்தையும், ஹோலி கொண்டாடிய வடநாட்டான் போல நான் நின்றிருந்த கோலத்தையும் கண்டு உள்வாங்கி சிறிது அதிர்ந்து மேலேறி வந்தனர்.

“ஹைய்யோ என்ன ஆச்சு…?”

“பூரணி வேலையாதான் ண்ணா இருக்கும். நம்ம மேல ஊத்தறதுக்கு பதிலா சார் மேல ஊத்திட்டா போல… சாரி சார்.”

“சாரி சார் தெரியாம பண்ணிட்டாங்க. வாளி மேல பட்டுடுச்சா?”

“இந்தப் பூரணி என்ன பண்ணி வச்சிருக்கா பாரு? சாரிப்பா.”
ஆளாளுக்கு அவர்களது கைக்குட்டையால் என் முகத்தைத் துடைத்தபடி மன்னிப்பு கேட்க எனக்கே சற்று சங்கடமாய் போனது.

“இல்ல… பரவாயில்லை… தெரியாமதான… நான் வாஷ் பண்ணிக்கிறேன்.” என்றபடி நகர… அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

“ஹாய், நான் பிரகாஷ் கல்யாண மாப்பிள்ளை வினோத்க்கு அண்ணன். இவங்க இரண்டு பேரும் பிரசாந்த் பிரவீன். எங்க சித்தப்பா பசங்க. எங்களுக்கு தம்பிங்க. இவன் எங்க அத்தை பையன் அருண். உங்க மேல தண்ணியை ஊத்தின வாலு இவன் தங்கச்சி பூரணிதான்.” என்று சிரித்தவாறு அறிமுகப்படுத்தினார் அவர்களுள் சற்று பெரியவராக இருந்தவர்.

“ஹாய் நான் ஆனந்தன். கல்யாணப் பொண்ணு மாதவிக்குத் தாய் மாமா மகன்.” என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன்.

சில நிமிடங்களிலேயே அனைவரும் நன்கு பழகியவர்களைப் போல மனதுக்கு நெருக்கமானார்கள்.
அப்பொழுது அங்கு வந்த பெரியம்மா, “ஆனந்தா… என்னய்யா கோலம் இது? இப்படி நிக்கிற?” என்க…

பிரகாஷ் அவரிடம் நடந்ததைச் சொல்ல… சிரித்துக் கொண்டவர்,

“பூரணி பண்ண வேலையா? வாலுப் பொண்ணு. சரி நீ போய் மறுபடி குளிச்சிட்டு ட்ரெஸ்ஸ மாத்து. குளிர்ல ஈரத்தோட நிக்கற உடம்புக்கு ஏதும் வந்துடப் போகுது.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் மாடிப்படி மறைவில் ஒரு உருவம் மறைந்து இங்கு நோட்டம் விடுவதும் நான் பார்க்கும்போது மறைவதுமாக விளையாடியது சுவாரஸ்யமாக இருந்தது எனக்கு.

என்மேல் நீரூற்றிய பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஒற்றை விரலை வாயில் வைத்தபடி அதிர்ந்து நின்ற பெண்ணுருவத்தை மீண்டும் மனக்கண்ணில் கொண்டுவர முயன்றேன். நொடிக்கும் குறைவான நேரத்தில் பார்த்தமுகம் சட்டென்று நினைவுக்கு வர மறுத்தது.

தளிர் நெற்றியும் வில்லாக வளைந்த புருவங்களும் புருவங்களுக்கு மத்தியில் இருந்த ஒற்றைக்கல் பொட்டும் அதன் மீது லேசாக தீற்றியிருந்த சந்தனமும், அடர்ந்த முடிகளை உடைய இமைகளுக்கு கீழ் கருவண்டைப்போல படபடத்த கண்களையும் தவிர வேறொன்றும் பார்க்க முடியவில்லை. ஒளிந்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

பயந்துவிட்டாள் என்று நினைக்கிறேன். காந்த விழிகளில் லேசாக கலக்கமிருந்தது.

பார்வையை விலக்காமலே இருந்து அவள் எட்டிப் பார்க்கும்போது புன்னகைத்தேன், சில நொடிகள் படபடத்த விழிகள் சடடென்று மறைந்து போனது. படிகளில் இறங்கி ஓடிவிட்டாள் போலும்.

“சரிய்யா… சீக்கிரம் குளிச்சிட்டு வா. ஆச்சி எழுந்துட்டாக. உன்னைய பார்க்கனும்னு சொன்னாக.” என்றபடி பெரியம்மா கீழே இறங்கிச் சென்றார்.
பார்வையை விலக்கிக் கொண்டவன், சரியென்று தலையை ஆட்டிக்கொண்டேன்.

“ஓகே… ப்ரோ… கீழ வெயிட் பண்றோம் வாங்க.” என்று மற்றவர்களும் விடைபெற,

மறுபடியும் குளித்து இளமஞ்சள் நிற முழுக்கை டீசர்ட்டும் இளநீல நிற ஜீன்ஸும் அணிந்து கீழே இறங்கி வந்தேன்.

ஆச்சியும் தாத்தாவும் மாடியேற முடியாது என்பதால் அவர்களுக்கு கீழே அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. அறைக்குள் நுழைந்தபோது தாத்தாவுக்கு சாப்பிட தட்டுவைத்து பரிமாறிக் கொண்டிருந்தார் பாட்டி.

இணை பிரியாத தம்பதிகள். இந்த வருடம் சதாபிஷேகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

“தாத்தா… ஆச்சி…” அழைத்துக் கொண்டே உள்ளே நுழைய, முகம் மலரத் திரும்பினார் ஆச்சி.

“ஐயா… ஆனந்தா… வந்துட்டியா சாமி… எம்புட்டு நாளாச்சு புள்ளைய பார்த்து. என்னய்யா இப்படி இளைச்சிட்டீய.” உணர்ச்சி மிகுதியில் கண்கள் கலங்க என்னைத் கட்டித் தழுவி கன்னம் வருடிய விரல்களைப் பிடித்து உதட்டில் ஒற்றிக் கொண்டேன்.

“நல்லாயிருக்கேன் ஆச்சி. இளைக்கவெல்லாம் இல்லை. ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறீங்க இல்லையா அதான் உங்களுக்கு அப்படி தெரியுது. நீங்க எப்படி இருக்கீங்க”

என்னை நோக்கி நீண்ட தாத்தாவின் கைகளில் புகுந்து கொண்டேன்

“தாத்தா எப்படி இருக்கீங்க?”

“நாங்க எல்லாம் நல்லா இருக்ககோம் ராசா. சாப்பிடுய்யா.”

“நீங்க சாப்பிடுங்க தாத்தா. நான் அப்புறமா சாப்பிட்டுக்குவேன்.” இருவருடனும் அளவளாவிக் கொண்டிருக்கையில் அங்கே நுழைந்த என் அம்மா சிவகாமி,

“ஆனந்தா நீ சாப்பிடப்போப்பா. உனக்காக உன் அக்காங்க மாதவி எல்லாரும் வெயிட் பண்றாக.” என்றபடி சில நகைப்பெட்டிகளை பாட்டியிடம் காண்பித்து

“அம்மா இந்த வைர செட் முழுக்க மாதவிக்கு நாளைக்கு நைட் நிச்சயதார்த்ததுக்கு போட்டுகிடுவோம். இந்த காசுமாலையோட இருக்கற இந்த செட் முழுக்க அடுத்த நாள் கல்யாணத்துக்கு போட்டுக்கிடுவோம். சரியா இருக்கா பாருங்க.”

“நல்லாயிருக்கு சிவகாமி. பூரணி பிள்ள வந்து தேர்ந்தெடுக்கறேன்னு சொல்லுச்சே அதுகிட்ட ஒருவார்த்தை கேட்டுக்கோ.”

“இதெல்லாம் பூரணிதான் செலக்ட் பண்ணுச்சி. இன்னைக்கு நைட் போடறதுக்கு வேற செட் எடுத்து வச்சிருக்கு.”

“ஏம்மா… நம்ம மாதவிக்கு நாம வாங்குன நகையைக்கூட அவங்க வீட்டாளுங்க சொல்ற மாதிரிதான் போடனுமா? மாதவிக்கு எப்படி பிடிச்சிருக்கோ அப்படி போடச் சொல்லுங்க. இதுக்கெல்லாமா மாப்பிள்ளை வீட்டு அதிகாரத்தை காட்டுவாங்க?”

“அட அதெல்லாம் இல்லைப்பா. அந்தப்பிள்ள உரிமையா மாதவியக்காவுக்கு நான்தான் செலக்ட் பண்ணுவேன்னு ஆசையா வரும்போது வேண்டாம்னு எப்படி சொல்றது. அதுவுமில்லாம நம்ம மாதவிகிட்டயும் கேட்டு அவக ரெண்டு பேரும் சேர்ந்துதான் எடுத்து வச்சாக.”

“மாப்பிள்ளை வீட்டுக்காரவுக ரொம்ப நல்லவுகப்பா. என்ன நகை போடறீகன்னுகூட இதுவரை யாருமே கேட்டதில்லை. நாமளாதான் உன் அக்காங்களுக்கும் மதினிகளுக்கும் போட்ட மாதிரியே செய்து வச்சிருக்கோம்.”

“அந்தப்பிள்ள நல்ல பிள்ளப்பு… உரிமையா கலகலப்போட நல்லா பழகும்.”

“அடேங்கப்பா ஒரே நாள்ல இவ்வளவு பழகிட்டீங்களா? அந்தப் பொண்ணுக்கு மாமியாரும் மருமகளும் மாறி மாறி சப்போர்ட் பண்றீங்க?”

“ஒரே நாள்லயா? பொண்ணு பார்க்க, கைநனைக்க, பூ வைக்க, பட்டெடுக்க எல்லாத்துக்கும் அந்த பிள்ள வந்துச்சில்ல. நம்ம வீட்டாளுகளோட நல்லா பழகிடுச்சி. நம்ம தாத்தாவுல இருந்து இப்ப கடைசியா பிறந்த உன் அக்கா மக வரைக்கும் எல்லாரையும் மயக்கி வச்சிருக்கு. நீ இன்னைக்குதான வந்திருக்க. அதான் உனக்கு வித்தியாசமா தெரியுது.”

“அதுசரி…” அலுத்துக் கொண்டவன் சாப்பிடக் கிளம்பினேன். என் குடும்பம் மொத்தத்தையும் மயக்கி வைத்திருக்கும் மாய மோகினியை பார்க்க வேண்டும் மனம் எண்ணிக் கொண்டது.

— அலையடிக்கும்.

உயிரின் வேட்டை…

ஹரிணி பயந்த சுபாவம் உள்ள பெண்ணெல்லாம் கிடையாது. நல்ல தைரியமுள்ள பெண்தான். வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் பல வித சவால்களைச் சந்திப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜர்னலிசம் விரும்பிப் படிக்கிறாள்.
சுஜியும் அப்படியே… அதனாலேயே இருவருக்கும் பல்வேறு விஷயங்களில் ஒத்துப் போகும். எதையும் பரபரப்போடு பின்விளைவுகள் யோசிக்காமல் அனுகுபவள் ஹரிணி என்றால் சற்று நிதானமாக யோசித்து அனுகுபவள் சுஜி.

ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு மனிதனின் இறப்பை அதுவும் துள்ளத் துடிக்க ஒருவன் கொலை செய்வதை நேரில் பார்த்து அவளது மூளை ஸ்தம்பித்துப் போயிருந்தது. அங்கிருந்து எப்படி வந்தோம் என்பது புரியாமலே தலைதெறிக்க ஓடிவந்து அறையினுள் முடங்கியிருந்தாள்.

ஹரிணிக்கு அன்றைய இப்படி ஒரு அதிர்ச்சியைத் தரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. பொதுவாகவே பெங்களூருவைப் பொருத்தவரை அதிகாலையில் வாக்கிங் செல்பவர்கள் எண்ணிக்கை சற்று குறைவுதான்.

அங்குள்ள சீதோஷண நிலையும் காற்றில் விரவிக் கிடக்கும் பல்வேறு பூக்களின் மகரந்தத்துகள்களும் பலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக் கூடியவை. சுஜிக்கும் அலர்ஜி இருப்பதால் அவள் வாக்கிங் செல்வது கிடையாது.

அதிகாலையில் குளிருக்கு இதமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கவே அவள் விரும்புவது.
ஆனால் ஹரிணிக்கு யாருமற்ற தனிமையான அந்த விடியலில் பல்வேறு பூக்கள் மரங்களை ரசித்தபடி நடக்கப் பிடிக்கும். அதுவும் லால்பாக் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகள் பசுமையாக கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

அன்றும் அதுபோல விடியலுக்கு சற்று முன்பாக எழுந்து ட்ராக் சூட் ஒன்றை அணிந்தவள், காதிற்குள் பனி நுழையாதவாறு தலையில் கேப் ஒன்றை அணிந்து கொண்டாள். சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் ஆண்பிள்ளை போலத் தோற்றமளிக்கும்படியான உடைகளையே அணிவது அவளது வழக்கம். அது சற்று பாதுகாப்பானதும்கூட…

அவளுடைய விடுதிக்கும் லால்பாக் பூங்கா சாலைக்கும் இடையேயான தொலைவு அதிகமில்லை… யாருமற்ற சாலையில் தனியாக இயற்கையின் கொடையை ரசித்தவாறு மெதுவாக நடைமேடையின் மீது நடந்தாள்.

துடைத்து வைத்தது போன்ற சாலையும்… பெரிய பூங்காவின் காம்பௌண்டு சுவரை மீறி வளைந்து வளர்ந்திருந்த மரங்களில் தொங்கிய கொத்து கொத்தான மலர்களும் அவளை வெகுவாக ரசிக்க வைத்தது. சோபையாக ஒளிர்ந்த சாலை விளக்குகளும் மங்கலாக இருந்த சுற்றுப்புறமும் ஏகாந்தத்தைக் கொடுத்தது அவளுக்கு.

நடந்துகொண்டே சாலையின் முடிவில் வளைந்தவள் கண்டது தனக்கு முன்னே சற்று வேகமான நடையில் சென்று கொண்டிருந்த ஒருவனைத்தான். ட்ரேக் பேண்ட் டீஷர்ட் அணிந்து காதை மூடியவாறு ஒரு குல்லாயும் கழுத்தில் ஒரு மப்ளரும் அணிந்து சற்று வேகமாக சென்று கொண்டிருந்தான்.

எதிரே வெகுநிதானமான நடையோடு மற்றொருவன் வந்து கொண்டிருந்தான். அவளுக்கு அப்போது எதுவும் வித்தியாசமாகத் தெரியவில்லை.
வாக்கிங் செல்வதற்கு அந்த நீண்ட பாதையை பலரும் பயன்படுத்துவதுதான்.

அதிகாலையில்தான் கூட்டமிருக்காதே ஒழிய பகல் பொழுதுகளில் சற்று பிசியான சாலைதான் அது. விடிந்தபின் வேலைக்குச் செல்பவர்களும் பள்ளி கல்லூரிக்குச் செல்பவர்களும் என ஓரளவுக்குக் கூட்டமாகவே இருக்கும் சாலை அது.

நேரெதிராக வந்த இருவரும் அவளுக்குச் சற்றுத் தொலைவிலே ஒருவரை ஒருவர் இடிக்கும்படி நிற்கவும், முதலில் நண்பர்கள் ஏதோ பேசுகிறார்கள் என்றே நினைத்தாள், சற்று நேரத்தில் இவளுக்கு முன்பிருந்தவனது வாயைக் கைகளால் பொத்திக் கொண்டு எதிரில் வந்தவன் கத்தியால் குத்தவும் இவளுக்கு அதிர்ச்சியில் புலன்கள் வேலை நிறுத்தம் செய்தன.

அதிர்ச்சியில் அலறக்கூட முடியாமல் கண்கள் இரண்டும் வெளியே தெறித்து விழுந்துவிடும் அளவுக்கு விரிந்திருக்க இரு கைகளாலும் வாயைப் பொத்தியபடி அந்தக் காட்சியைப் பார்த்திருந்தாள்.

நிதானமாக வெகு நிதானமாகக் கத்தியை எதிராளியின் வயிற்றில் மீண்டும் மீண்டும் பாய்ச்சியவனின் பார்வை மொத்தமும் இவளையே வெறித்திருந்தது. அந்தப் பார்வையில் இருந்தது என்ன…?

இப்பொழுதுவரை அவளுக்குப் புரியவில்லை.

கோபமோ ஆங்காரமோ வெறியோ ஏதோ ஒன்று மின்னிய கண்களில், இவளைப் பார்த்த நொடி சிறிது மாறுதல் வந்ததோ…? ஆனால் அது அவள் கொலையைப் பார்த்துவிட்டாளே என்கிற பதட்டமோ பயமோ அதிர்ச்சியோ நிச்சயம் அல்ல… மாறாக லேசான ஆச்சர்யமும் பார்க்கிறாயா பார்த்துக்கொள் என்கிற அலட்சியமும்தான்.

உன்னால் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பதை உணர்த்தும் அலட்சியப் பார்வை அது. மேலும் அந்த விழிகள் ஏற்கனவே பரிட்சயமானவை போலத் தோன்றியதைத் தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
அவளும் காலையிலிருந்து மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறாள், நினைவுக்கு வருவேனா என்கிறது. ஆண்களின் சராசரி உயரத்தில் இருந்தான் அவன். வெகு லாவகமாகக் கத்தியை உருவித் தனது கோட்டின் மீது துடைத்து, அதனைக் கோட் பாக்கெட்டினுள் போட்டுக்கொண்டு நிதானமாகத் திரும்பி வந்தவழியே நடக்கத்துவங்கினான்.

அதிர்ச்சியில் வேரோடிப் போயிருந்த கால்களைச் சற்று நகர்த்தி கத்தியால் குத்துப்பட்டு கீழே விழுந்தவனின் பால் இரண்டு அடிகள் எடுத்து வைத்தவள்,

பயத்தில் முதலில் இந்த இடத்தை விட்டு ஓடு என்ற மூளையின் கட்டளைப்படி, அவளும் தான் வந்த பாதையிலேயே ஓடத் துவங்கினாள்.
காலையில் நடந்ததை சுஜியிடம் கூறிமுடித்த ஹரிணியின் முகமும் வெளுத்துப் போயிருந்தது.

சுஜியும் வெகுவாக அதிர்ந்து போயிருந்தாள். கொலையைப் பார்த்தேன் என்று சொல்லும் போதும் மறைவாக ஏதும் நின்றிருந்திருப்பாள் என்று எண்ணியிருக்க நேருக்கு நேர் நின்று பார்த்ததோடு மட்டுமல்லாமல், கொலை செய்தவனும் இவளை நன்றாகப் பார்த்திருக்கிறான் என்பது அவளை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“என்னடி சொல்ற…?”

கொலையைப் பார்த்தவளை அவன் எதுவும் செய்யாமல் சென்றது வேறு அவளுக்குள் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

“அவன் உன்னைப் பார்த்துட்டு சும்மா எப்படிப் போனான்?”
தோழியின் கேள்வி எரிச்சலைக் கிளப்பியது ஹரிணிக்கு.

“அதுக்கு… என்னையும் கத்தியால குத்தனும்னு சொல்றியா? நானே எப்படித் திரும்பி வந்தேன்னு தெரியாம ஓடி வந்திருக்கேன். அவன்தான் மூஞ்சி முழுக்க மூடியிருந்தானே… நான் பார்த்தாலும் நோ யூஸ்னு அவனுக்குத் தெரிஞ்சிருக்கும். அதான் என்னைக் கண்டுக்காமப் போயிட்டான்.

ஆனா… நாம போய் போலீஸ்ல சொல்லுவோம். நமக்குத் தெரிஞ்சத் தகவலைச் சொல்லலாம். அவங்களுக்கு ஏதாவது க்ளூ கிடைக்கும். ஒரு கொலைகாரனைத் தப்பிக்க விடக்கூடாது சுஜி.”
யோசனையோடுத் தலையை மறுப்பாக அசைத்த சுஜி, “இல்ல ஹரிணி… நீ பயந்துபோய் நின்னதாலயும், உன்னால அவனை எதுவும் செய்ய முடியாதுன்றதாலயும்தான் உன்னைச் சும்மா விட்டுட்டான். நீ போலீசுக்குப் போனா அவன் உன்னைச் சும்மா விடமாட்டான்.”

“என்னடி பயமுறுத்துற…? அவனுக்கு என்னை எப்படித் தெரியும்?” அழுகாத குறையாக பாவமாகக் கேட்ட ஹரிணியைப் பார்த்தவள்,

“பயத்துல லூசாயிட்டியா? அவ்வளவு பெரிய பதவில இருக்கற கலெக்ட்டர அசால்ட்டா ப்ளான் பண்ணிக் கொன்னுருக்கான். கண்டிப்பா அவன் பெரிய ரௌடியாதான் இருக்கனும். உன்னைப் பத்தின தகவல் சேகரிக்கறது அவனுக்குப் பெரிய விசயமா? இன்னேரம் உன்னைப்பத்தி ஏடூஇசட் தகவல் அவனுக்குப் போயிருக்கும்.”
பயத்தில் உதடுகள் உலர்ந்து போக… எச்சில் கூட்டி விழுங்கியவள்,

“அப்ப என்னை ஃபாலோ பண்ணிருப்பானோ அந்தக் கொலைகாரன்? இப்ப என்னடிப் பண்றது?”

“எனக்கும் ஒன்னும் புரியல… ஆனா ஒரு ரெண்டு மூனு நாளைக்காவது நீ இந்த ரூமை விட்டு வெளிய போகவேணாம். உன்னால அவனுக்கு எந்தப் பிரச்சினையும் வராதுன்னு தெரிஞ்சா அவன் உனக்குத் தொந்திரவு தரமாட்டான்னு தோனுது. இது என் யூகம்தான். ஒருவேளை அவனால நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைன்னா நாம தைரியமா போலீஸ்க்குப் போகலாம்.”

“ஆனா… ஒரு கொலையைப் பார்த்துட்டு உடனடியா போலீசுக்குச் சொல்லாம இருக்கறது தப்பில்லையா? நாளைக்கே இது வெளிய தெரிஞ்சா… நான்தான் முதல் குற்றவாளியா இருப்பேன் தெரியுமா?”

“அது எனக்கும் புரியுது ஹரிணி. ஆனா நாம கொலையை பார்த்த அதிர்ச்சியில இருந்ததால உடனடியா போலீசுக்குப் போக முடியலைன்னு சொல்லுவோம். பயத்துல இருந்தோம்னு புரிய வைப்போம். முதல்ல உன்னோட தடயம் எதுவும் அங்க விடலை இல்லையா… உன்னை இந்தக் கொலையோட சம்பந்தப்படுத்த முடியாது அவங்களால…. அதுமட்டுமில்லாம நமக்கு தெரிஞ்ச போலீஸ் அதிகாரியைப் போய் தனியா மீட் பண்ணி சொல்லலாம்.”

“அதை இப்பவே சொல்லலாமே சுஜி… அந்தக் கொலைகாரன் தப்பிக்கக்கூடாதுடி.”

“இல்ல, ஒரு கலெக்ட்டரக் கொன்னுட்டு அவனால அவ்வளவு ஈசியா தப்பிக்க முடியாது. ஆனா அவன் நம்மால போலீஸ்ல மாட்டிக்கிட்டான்னா…” யோசனையோடு சற்று நிறுத்தியவள்,

“அவனுக்குப் பின்னாடியாரெல்லாம் இருக்காங்கன்னு தெரியலை. அவனுக்குப் பின்னாடி பெரிய கேங்கே இருக்க வாய்ப்பிருக்கு. ஒருவேளை அப்படி யாராவது இருந்தா அவங்களால நமக்கு கண்டிப்பா ஆபத்து வரும்.

இப்ப உடனே நாம நேரடியா போய் போலீஸ்ல சொல்றதவிட, ஒரு இரண்டு மூனு நாள் கழிச்சு யதார்த்தமா பார்க்கற மாதிரி ஒரு போலீஸ் ஆபீசர மீட் பண்ணி இந்த விஷயத்தைச் சொல்லிடலாம்.
நம்ம ரேணுவோட அண்ணன் டீஎஸ்பிதான… அவரைப் பார்த்துப் பேச அப்பாயிண்மென்ட் கேக்கலாம். ஏதாவது பொது இடத்துல மீட் பண்ணலாம். அவர் நமக்கு கண்டிப்பா உதவி செய்வாரு.

ஆனா ரேணுகிட்டகூட இந்த விஷயம் சொல்ல வேண்டாம். நம்ம புராஜக்ட்டுக்காக பேட்டி எடுக்க அப்பாயிண்மென்ட் வாங்கித் தரச் சொல்லலாம்.”

ஹரிணிக்கும் சுஜி சொல்வது சரியாகப் பட்டது. அவளுக்கு வேறு வழியும் தெரியவில்லை. அவள் பார்த்த பல்வேறு திரைப்படக் கொலைக் காட்சிகள் வேறு கண்முன்னே வந்து சென்றது. எத்தனைப் படங்களில் கொலையாளி பழிவாங்குவது போல வருகிறது.

அதுபோல அவனும் என்னைக் கொல்ல வந்தால்… பயத்தில் அவளுக்கு ஜூரமே வந்தது போல உடல் நடுங்கத் துவங்கி, சற்று நேரத்தில் உண்மையாகவே ஜூரம் வந்தது. பெற்றவர்களுக்கு இந்த விஷயம் தெரிந்தால் படித்தவரை போதும் என்று வந்து அழைத்துச் சென்றுவிடுவர்.

ஏற்கனவே ஹரிணியின் அம்மாவுக்கு அவள் ஜர்னலிசம் படிப்பது பிடிக்கவில்லை. பெண்பிள்ளைகளுக்கு ஏற்ற படிப்பு இது இல்லை என்பது அவரது கருத்து. அவர் சற்று பிற்போக்கான எண்ணங்களை உடையவர்தான். அவளது ஆசைக்காகவும் அவளது தந்தையின் ஆதரவின் காரணமுமாகத்தான் அவள் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தது.

அதுவும் அவர்களுக்கு ட்ரான்ஸ்பர் வந்து தமிழகம் செல்ல வேண்டிய சூழ்நிலையில், இவளை ஹாஸ்டலில் சேர்க்க அவ்வளவாக விருப்பமில்லை அவர்களுக்கு. ஆனால் வேறு வழியில்லாமல் அவளுடைய பாதுகாப்பை பலமுறை உறுதி செய்துகொண்டு அவளை அங்கு சேர்த்திருந்தனர்.

இப்போது இப்படி ஒரு சூழ்நிலை இருப்பது தெரிந்தால் முதலில் அவளைத் தங்களுடன் அழைத்துக் கொண்டுவிட்டுதான் வேறு வேலை பார்ப்பர். அதனாலேயே எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையும் செய்ய பயமாக இருந்தது.

சுஜி சொல்வதும் ஒருவகையில் சரிதான். தோழியின் அண்ணன் எனும் பட்சத்தில் அவர் நமக்கு கண்டிப்பாக உதவி செய்வார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என்கிற ஆலோசனையும் கிடைக்கும் என்று தோன்றியது.

அன்றும் அடுத்து வந்த இரு நாட்களும் அறையை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் உள்ளேயே அடைந்து கிடந்தாள் ஹரிணி. கேள்வியாகப் பார்த்த சக விடுதிவாசிகளிடம் அவளுக்கு கடுமையான காய்ச்சல் என்று சொல்லப்பட்டது.

சுஜியும் ரேணுவிடம் பேசி புராஜக்ட்டுக்காக அவளது அண்ணனிடம் பேட்டி எடுக்க அப்பாயிண்மென்ட் வாங்கித் தரும்படி கேட்டிருந்தாள். அவர்கள் கல்லூரியில் ஏதாவது ஒரு பிரபலமானவர்கள் அல்லது சாதனையாளர்களிடம் பேட்டி எடுக்கும்படி புராஜக்ட் வொர்க் தந்திருந்ததால் ரேணுவுக்கும் வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை.
நான்கு நாட்கள் கழித்தே ரேணுவின் உதவியோடும் கூடவே, “அவர் ரொம்ப பிசிடி” என்ற அலட்டலோடும் அவளது அண்ணனின் அப்பாயிண்மென்ட் கிடைத்தது.

மத்திய பெங்களூரு… பிரதான சாலை ஒன்றில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று கம்பீரமாக நின்றிருந்தது. ஐந்தாவது மாடியில் ஒரு அறையில் லேசாக மிக லேசாக திறந்து வைத்திருந்த ஜன்னல் வழியே வந்த குளிர்ந்த காற்று வெகு தீவிரமாக அறையைக் குளிரச் செய்து கொண்டிருந்தது.

பார்ப்பதற்கு அது ஒரு அலுவலக அறை போலத் தோற்றமளித்தது. சுவர்களில் பதிக்கப் பட்டிருந்த கண்ணாடி அலமாறிகளில் கோப்புகள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேஜையில் இருந்த பொருட்களிலும் ஒரு ஒழுங்குமுறை தெரிந்தது.
அந்த மேஜையின் மீது மடிக்கணிணி ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதன் அருகே ஒரு பைல் இருந்தது.

காற்றின் காரணமாக அதன் பக்கங்கள் லேசாகப் பறந்தவண்ணம் இருக்க… காற்றில் பறந்து திறந்து திறந்து மூடியதால் அந்த ஃபைலில் உள்ளத் தாள்கள் பறந்து விடாமல் இருக்க மேலே வெயிட் வைக்கப்பட்டிருந்தது.

அந்த மேஜையின் மீது வலிய கரங்கள் இரண்டு வீற்றிருந்தது. ஒரு கை கணிணி மௌசைப் பற்றியிருக்க, மற்றொரு கையோ கண்ணாடியாலான உருண்டையான பேப்பர் வெயிட்டை உருட்டியவாறு இருந்தது.

சற்று அடர்வாக ரோமங்கள் சுருண்டிருக்க, விரல்களில் நகங்கள் சீராக வெட்டப்பட்டு படு சுத்தமாக இருந்தது அந்தக் கைகள்.

முண்ணனி பிராண்டட் ஹால்ப் வொயிட் ஷர்ட் ஒன்று முழங்கை வரை சுருட்டி விடப்பட்டு இருந்தது. கையில் இருந்த ரோலக்ஸ் மணி ஒன்பது முப்பது என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

மௌசிலிருந்து கையை எடுத்தவன் வெகு இயல்பாக ஒற்றை விரலால் அவனது அடர்த்தியான புருவங்களை நீவிக்கொண்டான். அநேகமாக அது அவனுடைய மேனரிசமாக இருக்கலாம்.

தீர்க்கமான தீட்சண்யமான கண்கள் மடிக்கணிணியை வெறித்திருந்தது.
எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத அந்தப் பார்வையைத் தொடர்ந்து மடிக்கணிணியை நாம் நோக்க…

அங்கே ஹரிணி வாயைப் பொத்தியவாறு அதிர்ந்து போய் லால்பாக் பூங்கா சாலையில் நின்றிருந்த சிசிடீவி காட்சி மீண்டும் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தது.

— வேட்டை தொடரும்.

error: Content is protected !!