குறும்பு பார்வையில் – 4

ஆகாஷ் கைகளை உருவிக்கொள்ள, ஸ்ருதியின் கோபம் சர்ரென்று ஏறியது. கோபமாக அவன் அவளைப் பார்க்க, ஆகாஷின் கண்களில் குறும்பு கூத்தாடியது. அவன் சிறிதும் சலனமின்றி, ஸ்ருதியை புன்னகையோடு பார்த்தான்.

அந்த மந்தகாச புன்னகை, அவனின் புன்னகையில் ஸ்ருதியின் கோபம் சற்று குறைந்தது.

தன் கைகளை தனக்குள் மடக்கிக் கொண்டாள்.

ஆகாஷ் அவளைக் குறுநகையோடு பார்க்க, ஸ்ருதி அவனை  ஆழமாகப் பார்த்தாள். ‘பார்வைகள் மோதிக் கொண்டனவா? இல்லை மோதிக் கொள்ள முயற்சித்தனவா?’ என்று நான்கு விழிகளுக்கும் தெரியவில்லை.

ஸ்ருதி முதலில் தன்னை சுதாரித்துக் கொண்டாள்.

“தவற விட்ட வாய்ப்புகள் என்னைக்கும் திரும்ப கிடைக்காது.” என்று ஸ்ருதி அவன் பாணியிலே நக்கலாகக் கூறினாள்.

“எனக்கு அப்படி தோணலை… இதை விட பெருசா ஏதாவது கிடைக்குமோ?” என்று ஆகாஷ் பேச்சை வளர்க்க,  கார்த்திக் தன் கண்களைச் சுருக்கி ஆகாஷை பார்த்தான்.

ஸ்ருதி, ஆகாஷை முறைக்க, “நட்பை தாங்க சொன்னேன்.” என்று ஆகாஷ் புன்னகை மாறாமல் கூற, “நல்ல விஷயம்.” என்று கூறி ஸ்ருதி பேச்சை முடித்துக் கொண்டாள்.

ஸ்ருதி பேச்சை முடித்துக்கொண்டது ஆகாஷுக்கு பிடிக்கவில்லை என்பது போல், அவனை மீறி , அவன் அறியாமல் ஆகாஷின் முகம் சுருங்கியது.

“கார்த்திக் கிளம்புவோமா?” என்று ஸ்ருதி கேட்கச் சம்மதமாகத் தலை அசைத்துக் கிளம்பினான் கார்த்திக்.

கார்த்திக்  ஆகாஷிடமும் தலை அசைத்து விடை பெற்றான்.

“என்ன நடக்குது ஸ்ருதி?” என்று  வெளியே நடந்தபடியே கார்த்திக் கேட்க, “நாம்ம தான் நடக்குறோம்.” என்று கண்களில் சிறிதும் கேலி இல்லமால்  தீவிரமாகக் கூறினாள் ஸ்ருதி.

“ஹா… ஹா… செம ஜோக் சிரிச்சிட்டேன்… அடுத்த தடவை ஜோக் சொல்றேன்னு சொல்லிட்டு சொல்லு. உருண்டு உருண்டு சிரிக்கிறேன்.” என்று கார்த்திக் கடுப்பாக கூற, ஸ்ருதி புன்னகைத்தாள்.

“ஏன் கார்த்திக் டென்ஷன் ஆகுற? இது நம்ம கேரக்டர் இல்லையே?” என்று ஸ்ருதி கேட்க, “அதை தான் ஸ்ருதி நானும் கேட்குறேன்? அவருக்கு ஒரு ஹாண்ட் ஷேக் பண்ணிருந்தா, இந்த விஷயம் இதோட முடிஞ்சிருக்கும்.” என்று கார்த்திக் கூறினான்.

“ஏன் இப்ப முடியலையா?” என்று தன் நடையை நிறுத்திக் கொண்டு, அவன் முகம் பார்த்துக் கேட்டாள் ஸ்ருதி.

“முடிஞ்ச மாதிரி தெரியலை…” என்று கார்த்திக் கூற, ஸ்ருதி மேலும் ஏதோ பேசத் தொடங்கினாள்.

“இங்க நின்னு பேச வேண்டாம். உன் காரை எடுக்க டிரைவர் வர சொல்லிட்டேன். நாம  ஒண்ணா ஆபீஸ் போயிரலாம்.” என்று கார்த்திக் கூற, சம்மதமாக தலை அசைத்தாள் ஸ்ருதி.

ஸ்ருதி முன் பக்கம் ஏறிக்கொள்ள, காரை ஓட்டியபடி, “ஆகாஷ் ரொம்ப நல்லவர்.” என்று பொதுவாகக் கூறினான் கார்த்திக்.

“ம்…  நான் ஒன்னும் சொல்லலையே.” என்று ஸ்ருதி கூற, “அவர் பெண்கள் கிட்ட கண்ணியமா நடந்துப்பார். இதுவரை எந்த கெட்ட பெயரும் அவருக்கு கிடையாது.” என்று வண்டியைத் திருப்பியபடி கூறினான் ஆகாஷ்.

‘இதை ஏன் இப்பொழுது கார்த்திக் சொல்லுகிறான்.’ என்ற எண்ணத்தோடு   “ஓ….”  கொட்டினாள் ஸ்ருதி.

“இன்னைக்கு ஆகாஷின் பார்வையில் ஏதோ வித்தியாசம்.” என்று கார்த்திக் கூற, ‘இது தான் விஷயமா?’ என்று மௌனம் காத்தாள் ஸ்ருதி.

“நீ தான் மேல படிக்க வெளிநாட்டுக்கு போன… நான் ரெண்டு வருஷமா இங்க தான் பிசினெஸ் பாக்குறேன். பல மீட்டிங்கில் ஆகாஷை சந்திச்சிருக்கேன். அவர் பெண்கள் கிட்ட தனியா ஒரு ஹாய் சொல்லி கூட நான் பார்த்ததில்லை. ஏனா அவர் எது செய்தாலும் மீடியாக்கு நியூஸ்.” என்று கார்த்திக் சாலையைப் பார்த்தபடி கூறினான்.

“அவர் எந்த பெண்கள் கிட்டயும் பேசினதில்லையா? இல்லை இன்னைக்கு என் கிட்ட பேசினாருனு சொல்ல வரியா?” என்று ஸ்ருதி சந்தேகம் கேட்க, “இதுல எதை வேணும்ன்னாலும் சொல்லலாம்.” என்று தோள்களைக் குலுக்கினான் கார்த்திக்.

ஒரு நண்பனாக எதையோ எச்சரிக்க நினைத்து, அதை சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் சுற்றி வளைத்து  பேசி முடித்தான் கார்த்திக்.

“அது அழகான பொண்ணுகளை பார்த்தா சிலரின் பார்வை மாறும்.” என்று ஸ்ருதி உதட்டை மடித்து கூற, “எங்க? எங்க?” என்று அவசரமாகச் சாலையைத் தேடினான் கார்த்திக்.

“கார்த்திக்… ரொம்ப பழைய ஜோக். கொஞ்சம் புதுசா ட்ரை பண்ணு.” என்று ஸ்ருதி கூற, அவளை முறைத்தான் கார்த்திக்.

“கொஞ்சம் நேரம் நம்ம ஆஃபீசில் வேலையை பார்த்துட்டு நான் நம்ம டைடல் பார்க் ஆபீஸ்க்கு போறேன்.” என்று கார்த்திக் கூற, “வீட்டுக்கு வா கார்த்திக்… அப்பா, அம்மா உன்னை ஆளையே காணுமுன்னு தேடினாங்க.” என்று ஸ்ருதி கூற, வருவதாகக் கூறினான் கார்த்திக்.

அதன் பின் அவர்கள் பேச்சு அவர்கள் வேலையைப் பற்றியும், அவர்கள் ஆராய்ச்சி வேலையைப் பற்றியும் தொடர்ந்தது.

கார்த்திக்கும், ஸ்ருதியும் அவர்கள் அலுவலக பணியில் மும்முரமாக இறங்கினர். மடிக்கணினி முன் அவர்கள் பேச்சு அலுவலக விஷயத்தைத் தவிர வேறு எதையும் சிந்திக்கவில்லை.

கார்த்திக்கின் தந்தை நவநீதனும், ஸ்ருதியின் தந்தை ஈஸ்வரனும் நண்பர்கள். ஒன்றாகத் தொழிலில் இருப்பவர்களும் கூட, இப்பொழுது அடுத்த தலைமுறையினர் அவர்கள் தொழிலைத் தொடர்ந்து கொண்டும், இந்த காலத்திற்கு ஏற்ப நவீன முறையிலும் செயல் பட்டுக் கொண்டிருந்தனர்.

கார்த்திக் வேலையை முடித்து விட்டு, மற்றொரு கிளை அலுவலகத்திற்குச் செல்ல, ஸ்ருதி அந்த சூழல் நாற்காலியில் சாய்ந்தாள்.

ஸ்ருதியின் எண்ணங்கள் ஆகாஷை சுற்றி வந்தது.

‘கார்த்திக் ஏன் இப்படி பயப்படுறான்? ஆகாஷ் கிட்ட வம்பு வளர்த்துருவேன்னு பயப்படுதானா? நமக்கு இல்லாத செல்வாக்கா இந்த ஆகாஷுக்கு?’ என்ற கேள்வி ஸ்ருதிக்குள் எழுந்தது.

‘ஆகாஷை ஹாண்டில் பண்ண எனக்கு தெரியாதா? இல்லை முடியாதா? இந்த பசங்க பிரெண்ட்ஷிப் இருந்தாலே இது தான் பிரச்சனை. என்னவோ இவங்க தான் நம்மளை பாதுகாக்குற மாதிரி சீனை போட வேண்டியது .’ என்று வழக்கம் போல் கார்த்திக்கைத் திட்டிக் கொண்டாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் கண்கள் அவள் அருகே இருந்த பொம்மை கைப்பையின் மீது சென்றது. அதிலிருக்கும் பளபளக்கும் கண்களை ஆசையாகத் தொட்டுப் பார்த்தாள்.

‘இந்த கண்ணை செய்றதுக்கு, இவ்வுளவு உழைப்பை போடணுமா?’ என்று தந்தை முதல் கார்த்திக் வரை எல்லாரும் திட்டுவதும் அவள் காதில் விழுந்தது.

ஸ்ருதிக்கு பொம்மையின் கண்களைச் செய்வதில் அலாதி பிரியம். அந்த கண்கள் நம்மைப் பார்ப்பது போல் உண்மையாக இருக்கும்.

“சிப்பி வைத்து பண்ணறோமுன்னு யாரும் அத்தனை எளிதில் கண்டுபிடிச்சதில்லை. ஆனால், ஆகாஷ் கண்டுபிடிச்சிட்டானே?” என்று முணுமுணுக்க, ஸ்ருதியின் மனத்திரையில் ஆகாஷின் குறும்பு பார்வை தோன்றியது.

‘அட… கோப பார்வை, அழுகை, சிரிப்பு, ஆச்சரியம்… இப்படி எல்லா கண்களும் பண்ணிருக்கோமே… ஆனால், குறும்பு பார்வையில் கண்கள் பண்ணதில்லையே?’ என்ற எண்ணம் தோன்ற, “இந்த வாரம் சனிக்கிழமை பீச் போய், சிப்பி எடுத்து பண்றோம்.” என்று கூறிக்கொண்டு , தன் அலுவலக வேலையில் மூழ்கினாள் ஸ்ருதி.

ஆகாஷின் நேரமும் அந்த வாரமும்  வேலையோடு கழிந்தது.

வெள்ளிக்கிழமை இரவு தன் மெத்தையில் புரண்டு படுத்தான் ஆகாஷ்.

எழுந்து நடந்தான். அவன் அறையின் பால்கனிக்கு சென்றான். ‘நாளைக்குச் சனிக்கிழமை. அவள் சிப்பி எடுக்க வருவாளா?’ என்ற கேள்வி ஆகாஷுக்கு தோன்றியது.

‘ஆகாஷ், அவளை நீ ஏன் பார்க்க வேண்டும்?’ ஆகாஷின் மனசாட்சி முரண்டியது.

‘சும்மா ஒரு நட்பு தான்.’ என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டான்.

‘ஒரு பொண்ணை தொடர்ந்து போய், காதலிக்கறதுக்கு நான் என்ன விடலை பையனா?’ என்று தன் மனசாட்சியிடம் கோபித்துக் கொண்டான் ஆகாஷ்.

ஸ்ருதியின் மெல்லிய சிரிப்பு, அவள் கண்களில் இருந்த கம்பீரம், கைகளை உருவிக் கொண்டு, அவனைப் போலவே அவள் பேசிய விதம் எல்லாம் ஒரு சேர ஆகாஷின் கண்கள் முன் படமாக விரிய, தன் நெஞ்சை நீவிக்கொண்டு சிரித்தான் ஆகாஷ்.

‘ரெண்டு சந்திப்பும் சரியா அமையலை… அப்படியே பீச்க்கு ஜாகிங் போறேன்.’ என்று முடிவு எடுத்துக் கொண்டு, தன் தலையைக் கோதியபடி  மெத்தையில் அமர்ந்தான் ஆகாஷ்.

அவன் அருகே இருந்த போர்வைக்குள் இருந்து தலையை வெளியே நீட்டினாள் கீதா.

“அண்ணா லவ் பண்றியா?” என்று தன் பாதி முகத்தை வெளியே நீட்டிக்கொண்டு கேட்க, “நீ இன்னும் தூங்கலையா?” என்று ஆகாஷ் அவளை மேலும் கீழும் பார்த்தான்.

“அதுக்கு நீ தூங்க விடணுமே?” என்று கீதா குறைபட, ‘நான் என்ன செய்தேன்?’என்பது போல் ஆகாஷ் அவளைப் பார்த்தான்.

“அங்க போற… இங்க வர…. தனியா சிரிக்கிற… தனியா பேசுற… ஒரு மனுஷி எப்படி தூங்க முடியும்?” என்று கீதா கோபமாகக் கேட்க, “உனக்கு அவ்வுளவு தொந்திரவு இருந்தா, நீ உன் ரூம்க்கு போ.” என்று ஆகாஷ் அவளை விரட்டினான்.

“ஆங்… முடியாது. என் ரூமில் நீ பண்றதெல்லாம் அங்க பேய் பண்ற மாதிரியே இருக்கும். அதுக்கு உன் ரூமில் நீ தான் உலாத்துறன்னு நான் நிம்மதியா தூங்குவேன்.” என்று போர்வைக்குள் ஒளிந்து கொண்டாள் கீதா.

“என்னை பார்த்தா பேய் மாதிரி இருக்கா?” என்று தங்கையின் முழு போர்வையை விலக்கிக் கேட்டான் ஆகாஷ்.

“ஹா… ஹா…  பேய் மாதிரி இல்லை. காதலில் விழுந்த மாதிரி இருக்கு.” என்று கீதா சட்டமாக மெத்தையில் எழுந்து அமர்ந்து கூற, ஆகாஷ் அவளைக் குழப்பமாகப் பார்த்தான்.

“காதலில் மூணு ஸ்டேஜ்…  அதாவது முதலில் மெல்லினம், அடுத்து இடையினம், அடுத்து வல்லினம். ” என்று கீதா கூற, அவளை முறைத்தான் ஆகாஷ்.

“முதலில் மெல்லினம்…  ங ஞ ண ந ம ன அதாவது மென்மையான ஸ்டேஜ்… இப்படி தனியா நடக்குறது… மென்மையா சிரிக்கறது… அப்படி இப்படி தலை அசைக்குறது. லைட் ரொமான்ஸோட அவங்களை தள்ளி நின்னு மட்டும் பாக்குறது…” என்று கீதா கூற, “அடுத்து…” என்று ஆகாஷ்  தன் தங்கையை ஆழம் பார்த்தான்.

“ஹி… ஹி…” என்று சிரித்துக் கொண்டு, “நீ இன்னும் அந்த ஸ்டேஜ் வரலை தம்பி, அதனால் சொன்னால் உனக்கு புரியாது. நீ அந்த ஸ்டேஜ்க்கு வரும் பொழுது சொல்றேன்.” என்று கூறிக்கொண்டு போர்வைக்குள் நுழைந்து கொண்டாள் கீதா.

“கீதா… கீதா… கீதா…” என்று அதன் பின் ஆகாஷ் அவளை பல முறை அழைத்தும், “அண்ணா… நான் தூங்கிட்டேன். நான் தூங்கிட்டேன். ” என்று கூறிக்கொண்டே நித்திரையில் ஆழ்ந்து விட்டாள் கீதா.

மறுநாள் காலையில், மெல்லிய பிங்க் நிற சேலையில் கிளம்பினாள் ஸ்ருதி.

“என்ன ஸ்ருதி பீச்சுக்கு தானே போற? அப்புறம் எதுக்கு சேலை?” என்று ஸ்ருதியின் தாய் பார்வதி ஆச்சரியமாகவும், அது நேரம் கேள்வியாகவும் நிறுத்த, “அம்மா… வாக்கிங் போகலை… கோவிலுக்கு போயிட்டு, அப்படியே பீச் போறேன். நீங்களும் வரீங்களா?” என்று தன் தாயை அழைத்தாள் ஸ்ருதி.

“கோவிலுக்கு மட்டும் போனா, நான் வரேன்… சீக்கிரமா வந்திறலாம். ஆனால், பீச்சுக்கு போனா நீ ரொம்ப நேரம் எடுத்தப்ப… எனக்கு வேலை இருக்கு ஸ்ருதி. நான் வரலை.” என்று  பார்வதி கேட்க, “சரி அம்மா… அப்பா கிட்டயும் சொல்லிருங்க.” என்று கூறிக் கொண்டு, தன் ரோல்ஸ் ராய்ஸ் காரை கோவிலை நோக்கிச் செலுத்தினாள் ஸ்ருதி.

அஷ்டலக்ஷ்மி கோவில், அறுபடை வீடு என இறைவனைத் தரிசித்துவிட்டு, கடற்கரை பக்கம் சென்றாள் ஸ்ருதி.

ஸ்ருதி தன் சேலையை அழகாக இடுப்பில் சொருவிக் கொண்டு கிளிஞ்சில்களைத் தேட ஆரம்பித்தாள்.

“அடுத்த பொம்மைக்கு, குறும்பு கண்கள் தான்.” என்று தனக்கு தானே கூறிக்கொண்டு சிப்பியைத் தேட ஆரம்பித்தாள் ஸ்ருதி.

கடற்கரையில் அத்தனை கூட்டமில்லை. அவள் தன் வலது கையால் சிப்பியை எடுத்துக்கொண்டு, அதை மேலும் கீழும் பார்த்தாள்.

‘நான் எத்தனை வேலை பார்த்தாலும், அவன் கண்களில் தெரிந்த  பளபளப்பையும், குறுஞ்சிரிப்பையும் என்னால் இந்த சிப்பியில் கொண்டு வர முடியாது.’ என்றெண்ணியபடி, அதை தூர எறிந்தாள் ஸ்ருதி.

அப்பொழுது கடல் அலையில் ஒரு சிப்பி மூடியபடியே மிதந்து வர, தான் சேலை அணிந்திருப்பதையும் மறந்து அதன் பின்னே ஓடினாள் ஸ்ருதி.

அடுத்து ஒரு அலை வேகமாக வருவதற்குள் ஸ்ருதி அந்த சிப்பியைக் குனிந்து எடுத்துவிட, மிகப் பெரிய அலை அவளை முழுதாக நனைத்து அவளை உள்ளிக்கும் முன் அவளை ஓர் வலியக் கரங்கள் அவன் பக்கம் இழுத்துக் கொண்டது.

அவனது வலிமை அவளை இழுத்துக் கொண்டதே ஒழிய, கடல் அலை அவன் வலிமையையும் ஆட்கொண்டு அவர்களைக் கீழே சரித்தது.

மணலின் நறநறப்பு ஸ்ருதியின் தேகத்தைத் தீண்டிவிடாமல், ஆகாஷ் அதைத் தனதாக்கிக் கொண்டான்.

ஸ்ருதி அவனை பற்று கோலாக அவன் தோள்களைப் பற்றிக்கொண்டாள்.  அவள் விழிகளில் மெல்லிய அச்சம். ஆனால், அந்த அச்சம் அந்த குறும்பு கண்களைப் பார்த்த நொடி மாயமாகப் போனது.

அவள் அச்சம் மாயமாகிப் போன நொடி, அவள் மனம், “தட்… தட்…” என்று வேக ஒலியை எழுப்பியது.

அவள் இதய ஒலி, அவன் செவிகளிலும் கேட்க, அவனது இதயம் துடிக்க மறந்து நின்று துடித்தது.

அனைத்தும் வினாடிகளுக்குக் குறைவான நேரத்தில் தான். தான் இருக்கும் கோலம் புரிந்து சரேலென்று எழ முயன்றாள் ஸ்ருதி.

அவன் கைகள் அவள் கைகளை அழுத்தமாகப் பற்றி இருந்தது.  அந்த பற்றுதலில் ஏதோவொரு அழுத்தம், பாதுகாப்பு உணர்வை உணர்ந்தாள் ஸ்ருதி அவன் அவள் கைகளை விடுவிக்க ஸ்ருதி எழுந்து அமர்ந்தாள்.

அவன் அருகே எழுந்து அமர்ந்து கொண்டான் ஆகாஷ்.  ‘ஐயோ…’ என்று சற்று முன் இருந்த கோலத்தை எண்ணி முகத்தைச் சுழித்துக் கொண்டாள் ஸ்ருதி.

ஆகாஷ் அவனாக இல்லை. ‘பூவின் சுமையும், பூவின் நறுமணமும் இத்தனை அமுதமா?’ என்று கேள்வியோடு கடற்கரையைப் பார்த்தான்.

‘பெண்ணவள் பூ தான்.’ என்றெண்ணி ஆகாஷ் தன் கண்களை ஸ்ருதியின் பக்கம் திருப்பினான்.

மெல்லிய பிங்க் நிற சேலை நீரின் உபயத்தால் அதன் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தது.

‘ஆகாஷ்… அவளை அப்படிப் பார்க்காத… அவளை அப்படிப் பார்க்காத…’ அவன் மனம் உருப்போட்டு தோற்றுப் போனது.

‘இருபத்தி எட்டு வயதில் ஒரு பொறுப்பு வேண்டாமா? ஏதோ டீன் ஏஜ் பையன் மாதிரி என்ன பார்வை?’ என்று ஆகாஷ் அவனைக் கடிந்து கொண்டாலும், தன் பார்வை எல்லை மீறுவதை உணர்ந்து தடுமாறினான் ஆகாஷ்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியமால் ஸ்ருதி மௌமாக இருக்க, ஸ்ருதியின் எண்ணப்போக்கை புரிந்து கொண்டு அவளுக்குச் சற்று அவகாசம் கொடுத்தான் ஆகாஷ்.

அந்த இடைவெளியில், ஆகாஷ் அவனை மீட்டுக்கொள்ள, ஆகாஷ் அவன் கண்களில்  குறும்பு மாறாமல் அப்படியொரு கேள்வி கேட்க, ஸ்ருதி அனைத்தையும் மறந்து அவனைக் கோபமாகப் பார்த்தாள். இல்லை கோபப்படுவது போல் காட்டிக்கொண்டாளா?

அவர்கள் காதலின்  மெல்லின பயணத்தைத் தொடங்கி விட்டார்களோ? இல்லை அவர்கள் அறியாமல் அடுத்த  இடையின கட்டத்திற்கு நகர்ந்து விட்டார்களோ?

குறும்புகள் தொடரும்…

error: Content is protected !!