Kadhal 5

மேக்னாவிடம் இறுதியாக சந்திக்கும் போது கூறியதை போல அடுத்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அன்று அவளைக் காண்பதற்காக சித்தார்த் வெகு ஆவலுடன் தயாராகி கொண்டு நின்றான்.

மறுபுறம் ஜெஸ்ஸி மேக்னாவிடம் சித்தார்த் கூறியது பொய் என்று அவளுக்கு தெரிந்து விட்டால் அவளை எப்படி சமாளிப்பது என்று பல்வேறு கோணங்களில் யோசித்து கொண்டு அமர்ந்திருந்தாள்.

“ஏய் ஜெஸ்ஸி! சித்தார்த் வந்து எவ்வளவு நேரமாக பைக் ஹார்ன் அடிக்குறான் அது கூட காதில் கேட்காத அளவுக்கு அப்படி என்ன யோசனை உனக்கு?” பலத்த சிந்தனையோடு அமர்ந்திருந்த ஜெஸ்ஸியை குழப்பமாக பார்த்து கொண்டே அவளது தோளில் தட்டி கேட்டவாறு அவள் முன்னால் வந்து நின்றார் அவளது அன்னை மேரி.

“என்…என்ன ம்மா?” கனவில் இருந்து விழிப்பதைப் போல திரு திருவென்று விழித்துக் கொண்டு அவள் மேரியைப் பார்க்க

புன்னகையோடு அவளது தலையில் செல்லமாக தட்டி விட்டு வாசலை நோக்கி தன் கையை காட்டியவர்
“சித்தார்த் கூட முக்கியமான வேலையாக வெளியே போகணும்னு காலையில் இருந்து சொல்லிட்டு இப்போ அவன் வந்து நிற்கிறது கூட தெரியாமல் அப்படி என்ன யோசனையோடு இருக்கேன்னு கேட்டேன்?” என்று கேட்கவும்

“அய்யோ!” என தன் தலையில் தட்டி கொண்டவள்

“ஸாரி ம்மா ஒரு கேஸ் விஷயமாக யோசித்துட்டு இருந்துட்டேன் சித்தார்த் வந்ததைக் கவனிக்கவே இல்லை இப்போ அவன் என்னை உண்டு, இல்லைன்னு ஆக்கப் போறான் சரி ம்மா நான் போயிட்டு வர்றேன் அப்புறம் அவன் சாமி ஆடிடுவான் பாய் ம்மா அப்பா கிட்ட சொல்லிடுங்க” என்றவாறே தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கேட்டை நோக்கி ஓடிச்சென்றாள்.

“பிசாசு! இவ்வளவு நேரமாக என்ன பண்ணிட்டு இருந்த? அவ்வளவு நேரம் ஹார்ன் அடிக்கிறேன் அது கூட உன் காதில் விழலயா?” சித்தார்த் கோபமாக அவளை முறைத்து பார்த்து கொண்டு கேட்க

தன் இரு கைகளையும் எடுத்து தன் காதில் தோப்பு கரணம் செய்வது போல வைத்து கொண்டவள்
“ஸாரி டா வேற ஏதோ யோசனையில் இருந்துட்டேன் வேணும்னே அப்படி பண்ணல ரியலி ஸாரி டா” என்று கூறவும்

புன்னகையோடு அவளை பார்த்தவன்
“நாங்க ட்ரெயினிங் டைம் பழக்கி தந்த பழக்கத்தில் இதை மட்டும் நல்லா ஞாபகம் வைத்து இருக்க இந்த பெருமை எல்லாம் எனக்கு தான்” என்றவாறே தன் பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

தன் கைப்பையால் அவனது தோளில் தட்டியவள்
“போதும் ஓவரா பெருமைபடாதே!” என்று கூறிக்கொண்டே அவன் பின்னால் ஏறி அமர்ந்து கொண்டு

“சித்தார்த்! எனக்கு என்னவோ பயமாக இருக்குடா முறையாக விசாரணை நடத்தி, தீர்ப்பு எல்லாம் கொடுத்த கேஸை திரும்பவும் நாம எந்த பர்மிட்டும் இல்லாமல் விசாரிக்குறது எனக்கு என்னவோ சரின்னு படல” என்று கூற வண்டியின் பக்க கண்ணாடி வழியாக அவளை பார்த்து சித்தார்த் புன்னகத்து கொண்டான்.

“இப்போ உனக்கு என்ன பயம்? மேலதிகாரி யாரு கிட்டயும் பர்மிஷன் எடுக்காமல் இந்த கேஸை நம்ம விசாரிக்கிறோம் அது தானே? நம்ம என்ன ஆஃபிஷியலாகவா விசாரிக்கிறோம் இல்லையே சீக்ரெட்டா தானே இதெல்லாம் பண்ணுறோம் அதோட இந்த விஷயம் உன்னையும், என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாதே! அப்புறம் எதற்கு வீணா பயந்து சாகுற?”

“இல்லை நம்ம இரண்டு பேரைத் தவிர்த்து இன்னொரு ஆளுக்கும் தெரியும்”

“வாட்?” ஜெஸ்ஸியின் கூற்றில் சித்தார்த்தின் கைகள் தன்னிச்சையாக பிரேக்கை அழுத்தியது.

சித்தார்த் திடீரென்று பிரேக்கை அழுத்தி இருக்க அதை எதிர்பார்க்காத ஜெஸ்ஸிய்யோ அவன் மேல் மோதி பின்னால் தடுமாறி விழப் போக சட்டென்று அவன் அவள் கைகளை இழுத்து பிடித்து இருந்தான்.

“எருமை! எருமை! இப்படியா சொல்லாமல் கொள்ளாமல் பிரேக்கை போடுவ கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தா இன்னைக்கு இரண்டு பேரும் பரலோகம் போய் இருப்போம் தாங்க் காட்” ஒரு கையால் சித்தார்த்தின் தோளில் அடித்தவள் மறு கையால் தன் கழுத்தில் இருந்த சிலுவையை இறுகப் பற்றி கொண்டாள்.

“பின்ன நீ கொடுத்த ஷாக்கிற்கு நான் எப்படி ரியாக்ட் பண்ணுறது? இந்த கேஸ் பற்றி நம்ம சீக்ரெட்டா விசாரிக்குறது நம்ம இரண்டு பேரைத் தவிர வேறு யாருக்கு தெரியும் சொல்லு?” என்று கேட்டுக் கொண்டே சித்தார்த் தன் பைக்கை வீதியின் ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு அதில் இருந்து இறங்கி நின்றான்.

“வேற யாரு மேக்னா தான்!” இயல்பாக கூறியவாறே தன் தோளை குலுக்கிக் கொண்டு ஜெஸ்ஸியும் அந்த பைக்கில் இருந்து இறங்கி நின்றாள்.

“அய்யோ! ராமா!” ஒரு கையால் தன் தலையில் அடித்துக் கொண்டே மறு கையால்

ஜெஸ்ஸியின் தலையில் கொட்டியவன்
“ஜெயிலுக்கு உள்ளே இருக்குற அவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகப்போகுது? வெளியில் இருக்குற ஆட்களுக்கு தெரிஞ்சா தான் பிரச்சினை கொஞ்ச நேரத்தில் என்னை அப்படியே ஜெர்க் ஆக வைச்சுட்டியே!” என்று கூறவும்

கோபத்துடன் அவனது கையை தட்டி விட்டவள்
“அவ வெளியே இருக்காளோ இல்லை உள்ளே இருக்காளோ எப்படியும் மூணாவதாக ஒரு ஆளுக்கு இந்த விஷயம் தெரியும் தானே!” என்று கூற அவனோ அவளை பார்த்து சிரித்துக் கொண்டு நின்றான்.

“ஜெஸ்ஸி நீ யோசித்து தான் பேசுறியா? அவளுக்கு இந்த விஷயம் தெரியுறதால என்ன ஆகிடப் போகுது இந்த கேஸ் இன்னமும் நடந்துட்டு இருக்குன்னு சொன்னாலும் அவ நம்பித்தான் ஆகணும் வெளியே என்ன நடக்குதுன்னு அவளுக்கு தெரியுமா சொல்லு? இல்லை அப்படியே தெரிஞ்சாலும் என்ன நடக்கும்? மேலதிகாரிகள் கிட்ட சொல்லவா முடியும்?” சித்தார்த் ஜெஸ்ஸியைப் பார்த்து பல்வேறு கேள்விகள் கேட்டு கொண்டு இருக்க அந்த வேளை அவளது போனும் அடித்தது.

“ப்ச்! யாரு இது இந்த நேரத்தில் போன் பண்ணுறது?”
சலித்து கொண்டே கைப்பையை திறந்து தன் போனை எடுத்தவள் அதன் திரையில் ஒளிர்ந்த பெயரை பார்த்து அதிர்ச்சியாக சித்தார்த்தை நோக்க அவனோ அவளது அதிர்ந்த தோற்றத்தை பார்த்து குழப்பத்தோடு அவளது போனை வாங்கி பார்த்தான்.

மறுபுறம் மேக்னா சிறையில் தன்னறைக்குள் கடுமையான பதட்டத்துடன் குறுக்கும், நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

அவளது இந்த பதட்டத்திற்கு காரணம் வேறு யாரும் அல்ல சித்தார்த் தான்.

அன்று நர்மதா பற்றி தனக்கு தெரியும் என்று அவன் கூறிச் சென்ற பின்னர் பதட்டம் கொண்டவள் அதன் உண்மை நிலவரத்தை அறிந்து கொண்ட பின்பும் தன் பதட்டத்தை முழுமையாக கை விடவில்லை.

ஒரு வேளை உண்மையாகவே அவனுக்கு தெரிந்து இருந்தால் என்ன செய்வது என்ற யோசனை இந்த ஒரு வார காலமாக அவளை நிம்மதியாக இருக்க விடாமல் இம்சை செய்து கொண்டிருந்தது.

பல வருடங்களுக்கு பின்னர் சற்று நிம்மதியாக உணர்ந்து இருந்தவள் இப்போது மீண்டும் பழைய படபடப்பான மனநிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறாள்.

ஆற்றாமை, கோபம், வெறுப்பு என ஒட்டுமொத்த எதிர்மறை உணர்வுகளும் ஒன்று சேர தன் எதிரில் இருந்த சுவற்றை வெறித்துப் பார்த்து கொண்டு நின்ற மேக்னாவின் மனம் அவள் சென்னை வந்து சேர்ந்த நாளை எண்ணிப் பார்த்தது.

அன்று ஊட்டியில் ஜமுனா பழனியை மிரட்டி மேக்னாவை அவளது வீட்டில் கொண்டு போய் விடுமாறு கூறி இருக்க அவரும் ஜமுனாவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மேக்னாவை நீலகிரியை நோக்கி அழைத்து சென்றார்.

அவள் சொன்ன அடையாளங்களை வைத்து பத்து, பன்னிரெண்டு மணி நேரத்திற்கு மேலாக நீலகிரி முழுவதும் சுற்றி அலைந்து ஒரு வழியாக இருவரும் அவளது வீட்டை வந்து சேர்ந்து இருந்தனர்.

வெண்ணிற இரட்டை மாளிகை போன்ற வீடும், அதன் முன்னால் இருந்த தோட்டமும் பல நாட்களாக பராமரிப்பு இல்லாமல் சீர் குலைந்து போய் இருந்தது.

“எங்க வீடு!” சந்தோஷமாக பழனியின் கையில் இருந்து தன் கையை விடுவித்து கொண்டு ஓடிய மேக்னா வீட்டு கேட்டைத் திறக்க பார்க்க அதுவோ பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது.

“ஏய்! பாப்பா நில்லு!” மேக்னா தன் கையை உதறிவிட்டு ஓடி செல்ல சற்று பதட்டத்துடன் அவளை நெருங்கி வந்து நின்றவர் அந்த கேட்டில் இருந்த பூட்டைப் பார்த்து விட்டு யோசனையோடு சுற்றிலும் தன் பார்வையை சுழல விட்டார்.

அந்த வீட்டில் இருந்து சற்று தள்ளி
ஒரு நடமாடும் இஸ்திரி போடும் வண்டி நிற்கவும் மேக்னாவின் கையை பிடித்து அழைத்து கொண்டு அந்த வண்டியின் அருகில் சென்றவர் அங்கு யாராவது இருக்கிறார்களா என்று தேடி பார்த்தார்.

அந்த வண்டியின் மறு புறம் இருந்த புற்தரையில் நாற்பது, நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தூங்கி கொண்டு இருக்க மெல்ல அவரருகில் வந்து நின்ற பழனி
“ஐயா! ஐயா!” என அவரை தட்டி எழுப்பினார்.

“ப்ச்! யாருய்யா இது?” சலித்து கொண்டே தூக்கத்தில் இருந்து எழுந்து அமர்ந்த அந்த நபர் பழனி அருகில் நின்று கொண்டிருந்த மேக்னாவை பார்த்ததும் அதிர்ச்சியாக
“மேகனா பாப்பா!” என்று அழைக்க அவளோ புன்னகையோடு

“முத்து தாத்தா!” என்றவாறே அவரை பார்த்து தன் கையை அசைத்தாள்.

“ஐயா உங்களுக்கு இந்த பொண்ணை தெரியுமா?” பழனி கேள்வியாக அவரை நோக்கவும்

அவரை பார்த்து ஆமோதிப்பாக தலை அசைத்தவர்
“இதோ இந்த வீட்டோட சின்ன ராணி தான் மேகனா பாப்பா” என்று கூற

பழனியோ
“மேகனாவா? இந்த பொண்ணு அவ பேரு மேக்னான்னு தானே சொன்னா?” என்றவாறு குழப்பத்தோடு அவரை பார்த்தார்.

“ஆமாங்க பாப்பா பேரு நீங்க சொன்னது தான் எனக்கு அந்த பேரு அவ்வளவாக கூப்பிட வராது அது தான் இப்படி கூப்பிட்டு பழகிட்டேன்”

“ஓஹ்! அது சரி ஏன் இவங்க வீடு பூட்டி இருக்கு? வீட்டில் வேறு ஆளுங்க யாரும் இல்லையா?” பழனியின் கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தவர்

“எல்லோரும் இருந்தாங்க தான் ஒரு மாசத்திற்கு முன்னாடி பாப்பா, அவங்க அம்மா, அப்பாவோட திடீர்னு காணாமல் போயிடுச்சு அவங்க கூட இருந்த ஆளுங்க எல்லாம் ஒரு இரண்டு, மூணு வாரம் அவங்களை தேடி பார்த்துட்டு அவங்க எல்லாம் ஊரை விட்டு ஓடிட்டாங்கன்னு சொல்லி இருந்த சொத்தை எல்லாம் பங்கு போட்டு எடுத்துட்டு போயிட்டாங்க இப்போ இரண்டு நாளைக்கு முதல் தான் பேங்கில் இருந்து ஆளுங்க வந்து வீட்டைப் பூட்டி என்னென்னவோ எல்லாம் பேசிட்டு போனாங்க” என்று கூறவும் அவரோ கவலையுடன் மேக்னாவின் முகத்தை திரும்பி பார்த்தார்.

“ஆமா இத்தனை நாள் எங்கே பாப்பா போன? அம்மா, அப்பா எல்லாம் எங்கே?” அந்த நபரின் கேள்விக்கு கண்களில் நீர் கோர்க்க மேக்னா பழனியை நிமிர்ந்து பார்க்க

பெருமூச்சு ஒன்றை விட்டு கொண்டே அந்த நபரை திரும்பிப் பார்த்தவர்
“அவங்க இரண்டு பேரும் ஒரு ஆக்சிடெண்டில் இறந்துட்டாங்க இந்த பொண்ணு மட்டும் பிழைச்சிடுச்சு” என்று கூற

அவரோ
“அட கடவுளே!” என்றவாறு தன் வாயை மூடிக்கொண்டார்.

‘இப்போ என்ன பண்ணுறது? இந்த பொண்ணை இப்படியே இங்கே விட்டுட்டு போகவும் முடியாதே! நான் பண்ண அதே தப்பை வேறு யாராவது செய்துட்டாங்கன்னா என்ன பண்ணுறது? ஜமுனாவிற்கு ஊரெல்லாம் ஆளுங்க இருக்காங்க யாராவது போய் சொல்லி கொடுத்துட்டாங்கன்னா அப்புறம் அந்த பொண்ணு என் கதையை முடிச்சுடுவா இப்போ என்ன பண்ணலாம்?’ பழனி சிந்தனை வயப்பட்டவராக நிற்க மேக்னாவோ அவரது கால்களை கட்டி கொண்டு நின்றாள்.

“இப்போ இந்த பொண்ணை என்ன தான் பண்ணுறது? அவங்க சொந்தக்காரங்க யாராவது இங்கே இருக்காங்களா?” பழனியின் கேள்விக்கு மறுப்பாக தலை அசைத்தவர்

“அது எனக்கு தெரியாதுங்க அவங்களுக்கு சொந்தம்னு பெரிசா யாரும் இல்லைன்னு தான் அந்த அம்மா சொல்லி கேட்டு இருக்கேன் வேற யாரும் சொந்தக்காரங்க இருக்காங்களான்னு எனக்கு தெரியாதுங்க” என்று கூறினார்.

“சரிங்க ரொம்ப நன்றி” அந்த நபரை பார்த்து புன்னகத்து கொண்ட பழனி மேக்னாவின் கை பிடித்து அழைத்து கொண்டு நடக்கத் தொடங்கினார்.

“ஐயா!” அவசரமாக பழனியின் முன்னால் ஓடி வந்து நின்றவர்

“எனக்கு ஏற்கனவே நான்கு பசங்க இருக்காங்க நான் இந்த இஸ்திரி தொழில் பார்த்து தான் அவங்களை எல்லாம் பார்த்துக்கிறேன் இல்லேன்னா நானே என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்” தலை குனிந்தவாறே கூறவும்

அவரது தோளில் தட்டி கொடுத்தவர்
“பரவாயில்லைங்க நீங்க மனதளவில் இந்தளவிற்கு நினைத்து சொன்னதே பெரிசு நான் இந்த பொண்ணை பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுட்டு தான் போவேன்” என்றவாறே அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

எங்கே சென்று பாதுகாப்பாக மேக்னாவை விடுவது என்று தெரியாமல் பழனி யோசனையோடு சுற்றிலும் பார்த்து கொண்டு நடந்து செல்ல ஏதேச்சையாக அவரது கண்களில் பட்டது ‘தெரேசா ஆதரவற்றோர் இல்லம்’.

சிறிது நேரம் அந்த இடத்தைப் பார்த்து யோசித்து கொண்டு நின்றவர் அவளை அந்த இல்லத்தை நோக்கி அழைத்து கொண்டு சென்றார்.

அங்கிருந்த நபர்களிடம் பேசி அவளது நிலையை புரிய வைத்த பழனி அவர்களது பொறுப்பில் அவளை விட்டு விட்டு இனி அவளது வாழ்க்கை சீராகி விடும் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டார்.

புதிய இடத்தை பார்த்து பயத்துடன் மேக்னா நடுங்கியபடி நிற்க
“மேக்னா!” என்றவாறே அவள் முன்னால் வந்து நின்றார் ஒரு பெண்.

வெண்ணிறத்தில் நீல நிற அகலமான பட்டி பிடிக்கப்பட்ட சேலை அணிந்து கழுத்தில் ஒற்றை சங்கிலியோடு, எவ்வித மேலதிக ஒப்பனையும், ஆபரணமும் இன்றி புன்னகை முகமாக நின்ற அந்த பெண்ணை மேலிருந்து கீழாக பார்த்து கொண்டு நின்றாள் மேக்னா.

“உன் பேரு மேக்னா தானே?” அவரது கேள்விக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தவள்

“உங்க பேரு என்ன?” கேள்வியாக அவரை நோக்கினாள்.

“என் பேரு ராணி இந்த இடத்திற்கு இன்சார்ஜ் நான் தான் சரி உனக்கு இந்த இடம் பிடிச்சு இருக்கா?” அவரின் கேள்வியில் அந்த இடத்தை சுற்றி ஒரு முறை நோட்டம் விட்டவள் தயக்கத்துடன் இல்லை என்று தலை அசைத்தாள்.

“அப்போ நாம வேற இடத்துக்கு போகலாமா?”

“வேற இடம்னா எங்கே?”

“சென்னை”

“சென்னையா? அது எங்கே இருக்கு?”

“அது இங்க இருந்து ரொம்ப தூரம் போகணும்”

“நாம இரண்டு பேர் மட்டும் போறோமா?”

“இல்லை கண்ணா! எல்லோரும் தான் போறோம் இந்த இடம் ரொம்ப சின்ன இடம் இல்லையா? அதனால நிறைய ஆட்களை இங்கே வைத்து பார்க்க முடியல அது தான் இன்னும் இரண்டு, மூணு நாளில் சென்னைக்கு போயிடுவோம் சரியா?”

“சரி” அவர் சொன்னதன் முழு அர்த்தமும் அவளுக்கு புரியவில்லை என்றாலும் இந்த இடத்தில் அவள் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை என்பது மாத்திரம் அவளுக்கு நன்றாக புரிந்தது.

இரண்டு, மூன்று நாட்கள் அந்த இடத்தையும், அங்கிருந்தவர்களின் பழக்க வழக்கங்களையும் பார்த்து மெல்ல மெல்ல அதை பின்பற்றத் தொடங்கி அந்த இடத்திற்கு ஏற்றாற் போல தனது பழக்க, வழக்கங்களை எல்லாம் மாற்றி இருந்த மேக்னாவை ராணிக்கு முதல் பார்வையிலேயே மனதளவில் மிகவும் பிடித்து போனது.

அதனால் என்னவோ தன் சொந்த குழந்தை போல ராணி மேக்னாவை பார்த்துக் கொள்ளத் தொடங்கி இருந்தார்.

அது போல மேக்னாவும் தன் தாய், தந்தையின் இழப்பை மறந்து அந்த சூழலோடு, அங்கிருந்த நபர்களோடு ஒன்றி வாழத் தொடங்கி இருந்தாள்.

இரண்டு, மூன்று நாட்களில் அவர்கள் எல்லோரும் அந்த இடத்தில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்ல மேக்னாவும் தனது புதிய இடத்திற்கான பயணத்தை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருந்தாள்.

பார்வையாளர்கள் நேரம் முடிவடைந்ததை அறிவிக்கும் முகமாக மணி ஒலிக்க அந்த சத்தம் கேட்டு தன் சுய நினைவுக்கு வந்தவள் சுற்றிலும் திரும்பி பார்க்க தங்கள் உறவினர்களை பார்த்து விட்டு அவளை போன்று அங்கு இருக்கும் சக பெண்கள் எல்லோரும் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

குழப்பமாக மீண்டும் தன் அறைக் கதவருகில் சென்று பார்த்தவள்
‘இன்னைக்கு தானே அந்த இன்ஸ்பெக்டர் வர்றதாக சொன்னாங்க ஏன் இன்னும் வரல? ஒரு வேளை என்னை பற்றி உண்மை தெரிந்து இருக்குமா? இல்லை இல்லை அதற்கு சான்ஸே இல்லை!’ அவசரமாக தன் மனம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து விட்டு மீண்டும் வாயிலை நோக்கி தன் பார்வையை செலுத்தினாள்.

சித்தார்த் மறுபடியும் தன்னை பார்க்க வந்தால் அவன் தன்னிடம் நர்மதா பற்றி கூறியது பொய் என்று அவன் முன்னால் கூற வேண்டும் என்று நினைத்து இருந்தவள் இப்போது அவன் வராமல் போகவே அந்த எண்ணத்தை முற்றிலும் கை விட்டு விட்டு அவனது வருகைக்காக காத்திருந்தாள்.

‘ஏன் அவங்க வரல? என்ன நடந்து இருக்கும்? ஏதாவது பிரச்சினையா? இல்லை என்னை பற்றி விசாரித்து இருப்பாங்களா? என்னை பற்றி யாருக்கும் தெரியாதே! ஒரு வேளை என்னைப் பற்றி உண்மை அவனுக்கு தெரிந்தால்! இல்லை இல்லை! என்னை பற்றி யாருக்கும் தெரியாது தெரியவும் கூடாது மீறி தெரிந்தால் அவங்க உயிர் இருக்காது!’ இடம் வலம் மறுப்பாக தலை அசைத்து கொண்ட மேக்னா வெளியே புன்னகத்து கொண்டு அங்கிருந்த சுவற்றில் சாய்ந்து அமர்ந்தாள்……