KP-5

KP-5

குறும்பு பார்வையில் – 5

காலை நேரம், கடற்கரை காற்று சற்று வேகமாக வீச, கடல் நீரில் நனைத்திருந்த ஸ்ருதியின் சேலை மெல்ல காய்ந்து ஆகாஷின் தேகம் தீண்டிச் சென்றது.

சேலை பறக்க, ஈரம் சொட்ட சொட்ட இருந்த அவளின் உடல் காற்றின் தீண்டலில் சிலிர்த்தது. தன் சேலையை தன்னை சுற்றி இறுக்கிக் கொண்டாள். அவள் எண்ண ஓட்டம் சற்று நேரம் முன் நடந்த சம்பவத்தில் லயித்திருக்க, அவள் கன்ன கதுப்புகள் செம்மையுற்று அவள் எண்ணத்தைப் படமாக வெளி படுத்திக் கொண்டிருந்தது.

அவள், அவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆகாஷ் தன்னை இந்த நொடிகளின் அவகாசத்தில் சுதாரித்துக் கொண்டான்.

அவன் கண்கள் அவள் கன்ன சிவப்புகளை ரசித்துக்கொண்டிருக்கையில், அதன் குறும்பை மீட்டுக் கொண்டது.

அவன் உதடுகள் மெலிதாக வளைந்து, “நான் கையை மட்டும் தானே குடுக்க சொன்னேன்.” என்று கேலி தொனிக்கும் குரலில் கூற, ‘அன்றைய மீட்டிங்கின் சந்திப்பையும், கைக்குலுக்கலையும் கூறுகிறான்.’ என்ற எண்ணம் ஸ்ருதியின் மூளையில் மின்னலாகப் பாய்ந்தது.

சில நொடிகளுக்கு முன் நடந்த சம்பவத்தை மறந்து, சரேலென்று திரும்பி ஆகாஷை கோபமாகப் பார்த்தாள்.  வெட்கத்தில் சிவந்திருந்த அவள் முகமோ  இப்பொழுது கோபத்தில் சிவந்து அவனை முறைத்துப் பார்த்தது.

ஆகாஷோ, அவன் நினைத்தது நடந்து விட்ட சந்தோஷத்தில் அவளைப் புன்னகையோடு பார்த்தான்.

‘இவனுக்கு எல்லாமே கேலி, எல்லாமே விளையாட்டு தானா? எதில் கேலி பேசுவது என்று விவஸ்தை இல்லை.’ என்பது போல் அவன் கேலி புரிந்தாலும், தன் கோபத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாமல்  எழுந்து நடக்க ஆரம்பித்தாள் ஸ்ருதி.

ஸ்ருதியின் முன் வழி மறித்து நின்றான் ஆகாஷ். ‘ஆகாஷ்… என்ன பண்ற? யாராவது பார்த்தா என்ன ஆகும்?’ என்று அவன் அறிவு அதட்டினாலும், ஆகாஷ் அதை எல்லாம் கண்டு கொள்ளும் மனநிலையில் இல்லை.

“சிப்பி எடுக்கலை?” என்று ஆகாஷ் கேட்க, “நான் எங்க சிப்பி எடுக்க? ஒன்னு உங்க டாம் என் வேலையை கெடுக்குது. இல்லை நீங்க கெடுக்குறீங்க.” என்று ஸ்ருதி கூறி கொண்டே கோபமாக நடக்க, பேச்சு வாக்கில் அவள் கைகளைச் சட்டென்று பிடித்தான் ஆகாஷ்.

ஸ்ருதி அவனைக் கோபமாகப் பார்க்க, காரணம் புரியாமல் அவளை  வெகுளியாகப் பார்த்தான் ஆகாஷ்.

‘சற்று முன் நடந்த சம்பவம் கொடுத்த இடமோ?’ என்ற எண்ணத்தோடு, அவள் கரங்களைப் பற்றியிருந்த அவன் கரங்களைப் பார்த்துவிட்டு, அவன் கண்களை பார்த்தாள் ஸ்ருதி.

இப்பொழுது ஆகாஷின் கண்களில் குறும்பு இல்லை. மன்னிப்பு கேட்கும் யாசகத்தோடு,  “சாரி… சாரி…” என்று முணுமுணுத்துக் கொண்டும் தன் கைகளை இறக்கினான் ஆகாஷ்.

ஆகாஷ் இப்பொழுது மேலே பேசத்  தடுமாற, அவன் குறும்பு கொப்புளிக்கும் கண்கள்  அதன் பொலிவை இழந்து நிற்பதைப் பார்க்கச் சகிக்காமல்,  “தேங்க்ஸ்…” என்று இன்முகமாகக் கூறினாள் ஸ்ருதி.

‘எதற்கு?’ என்பது போல ஆகாஷ் பார்க்க, “சூடா ஒரு கப் பால் சாப்பிடலாமுன்னு இருக்கேன்.” என்று ஸ்ருதி கூற, “அதுக்கு எதுக்குங்க எனக்கு தேங்க்ஸ்?” என்று கேள்வியாக நிறுத்தினான் ஆகாஷ்.

“நீங்க என்னை காப்பாத்தலைனா, நான் இப்ப பால் குடிக்க முடியாது. எனக்கு பால் ஊத்திருப்பாங்க. ஏதோ என் வேலையைக் கெடுத்தாலும், என் உயிரை காப்பாத்திருக்கீங்க. அதுக்கு தான் இந்த தேங்க்ஸ்.” என்று விளையாட்டாகவே சொன்னாள் ஸ்ருதி.

ஆகாஷ் கலகலவென்று சிரிக்க, “என்ன சிரிக்கிறீங்க? காலைல முழிச்சா பால் குடிப்போம். முழிக்கலைனா பால் ஊத்துவாங்க. இவ்வளவு தான் வாழ்க்கை. தினமும் இப்படி எதாவது வாட்ஸப் தத்துவம் வருமே…” என்று ஸ்ருதி தலை சாய்த்து கேட்க, “நல்லா நக்கல் பேசுறீங்க.” என்று புன்னகையோடு கூறினான் ஆகாஷ்.

 

“ஏன்? கேலி, கிண்டல், நக்கல், நையாண்டி… இப்படி பலவும் உங்களுக்கு மட்டும் தான் வருமா?” என்று ஸ்ருதி புருவம் உயர்த்தி கேட்க, ஆகாஷ் தன் கைகளை உயர்த்தினான்.

“அம்பேல்… என்னால உங்க அளவுக்கு பேச முடியாது. தோல்வியைப் பகிரங்கமா ஒதுக்குறேன்.” என்று அவன் கூற, ஸ்ருதி தர்மசங்கடத்தோடு மறுப்பாகத் தலை அசைத்தாள்.

ஸ்ருதியின் முகபாவனையை ஒதுக்கி, “நான் வந்த விஷயத்தை மறந்துட்டேன்.”  என்று கூறிக்கொண்டே, “டாம்…” என்று அழைத்தான் ஆகாஷ்.

“டாம் கிவ் மீ…” என்று அவன் கைகளை நீட்ட, அது ஒரு அழகிய பையை நீட்டியது.

ஆகாஷ், அதை ஸ்ருதியிடம் நீட்ட, ‘என்ன?’ என்று கண்களை உயர்த்தி வினவினாள் ஸ்ருதி.

“உங்களுக்குத்தான்… வாங்கி, பிரித்து பாருங்க.” என்று அவன் கூற, “என்னை பார்க்கத்தான் வந்தீங்களா?” என்று ஸ்ருதி கண்களை சுருக்கி கேட்டாள்.

“உங்களை பார்த்தா குடுக்கலாமுன்னு வந்தேன். ஆனால், பல இனிமையான தரமான சம்பவங்கள் நடக்குமுன்னு நான் நினைக்கலை.” என்று தன் நாக்கை மடித்து நனைந்து போன சட்டையை பார்த்தபடி கூறினான் ஆகாஷ்.

ஸ்ருதி  கோபமாக நடக்க,  “என்ன உங்களுக்கு இப்படி பொசுக்கு பொசுக்குன்னு கோபம் வருது. இந்த அவசரம் எதுக்கு? வாங்கி பிரித்து பாருங்க.” என்று சமாதானம் பேசினான் ஆகாஷ்.

அவன் சமாதான பேச்சில் மீண்டும் நின்றாள்.

“இந்த அவசரம் நலத்துக்கு இல்லைங்க.” என்று சிரிப்போடு இலவச ஆலோசனை வழங்கினான் ஆகாஷ்.

“உங்க அதீதமான கேலி பேச்சும் அப்படி தான்.” என்று ஸ்ருதியும் புன்னகையோடு கூற, “மாத்திகிட்டா போச்சு…” என்று நக்கலாகவே கூறினான் ஆகாஷ்.

அவன் பேச்சிலிருந்தே அவன் அதை விளையாட்டாகவே கூறுகிறான் என்பதை புரிந்து தலை அசைத்துக் கொண்டாள் ஸ்ருதி.

ஆகாஷின் கைகள் பையோடு நீண்டு கொண்டே இருக்கே, மறுக்க முடியாமல் அதை வாங்கிக் கொண்டாள்.

‘பிரித்து பார்க்க வேண்டும்.’ என்பது போல் அவன் புருவங்கள் பையைக் காண்பித்தபடி படி நெளிய, அந்த அழகிய வேலைப் பாடு கொண்ட, பையைப் பிரித்தாள் ஸ்ருதி.

அவள் கண்களில், அத்தனை மலர்ச்சி. அவள் கண்கள், உதடு, இரண்டும் ஒரு சேர சிரிக்க, அவள் முகபாவனை சந்தோஷத்தை பிரதிபலித்தது.

‘எப்படி?’ என்பது போல் அவள் கண்கள் வார்த்தைகள் வராமல் கேள்வியாக நிறுத்தியது.

“அன்னைக்கு உங்க பக்கத்தில் வந்த டாம் நீங்க எடுத்த சிப்பிகளை ஸ்கேன் பண்ணிருக்கு. அது தான் மேட்ச் பண்ணி, கிட்ட தட்ட அந்த சிப்பிகளை எடுத்திருச்சு.” என்று ஆகாஷ் கூற, அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள்.

 

“சரியா இருக்கா?” என்று ஆகாஷ் ஆர்வமாகக் கேட்க, “ம்….” என்று தலை அசைத்தாள் ஸ்ருதி.

“இல்லை அன்னைக்கு அறிவு இருக்கானு கேட்டிட்டீங்களே? இப்ப ஒத்துப்பீங்க தானே அறிவு இருக்குன்னு?” என்று கேட்க, “மேல் மாடி ரொம்ப காலி இல்லை. ஏதோ கொஞ்சம் இருக்கு. என்ன இருக்குன்னு போகபோகத்தான் தெரியும்.” என்று உதட்டைச் சுழித்துக் கூறினாள் அவள்.

“உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி தான். என் கிட்ட யாரும் இப்படி பேசினதில்லை.” என்று ஆகாஷ் நேரடியாகக் கூற, ‘பேசியதில்லையா? இல்லை இவன் பேச இடம் கொடுத்ததில்லையா?’ என்ற கேள்வி அவளுள் எழும்ப, அத்தோடு மற்றோரு சந்தேகமும் எழும்பியது.

அவன் கூற்றை ஒதுக்கி விட்டு, “உங்க டாம் கிட்ட என் சிப்பி போட்டோ மட்டும் தான் இருக்கா? இல்லை என் போட்டோவும் இருக்கா?” என்று அவள் கேட்க, திடுக்கிட்டு அவளைப் பார்த்தான் அவன்.

‘இதை நாம யோசிக்கலையே? இவ இவ்வளவு புத்திசாலியா இருந்திருக்க வேண்டாம்.’ என்ற எண்ணத்தோடு, “நான் மனசுக்கு நெருக்கமானவங்க போட்டவை தவிர வேற யார் போட்டோவையும் என் கிட்ட வச்சிக்கறதில்லை.” என்று அவன் கூற, அவனைக் குழப்பமாகப் பார்த்தாள் ஸ்ருதி.

‘இப்ப என்ன சொல்றான்? இருக்குன்னு சொல்றானா? இல்லைன்னு சொல்றானா? இதை நான் மேலும் தொடர்ந்தால், பேச்சு எந்த திக்கில் போகும்?’ என்ற குழப்பத்தோடு மௌனிக்க, ‘இதற்கு மேல் இவள் பேசினால், ஆபத்து.’ என்று அவளை ஒரு நொடி பார்த்தான் ஆகாஷ்.

“நேரமாச்சு… நான் கிளம்புறேன்.” என்று ஆகாஷ் கூற, ஸ்ருதி தலை அசைத்துக் கொண்டாள்.

“சீக்கிரம். திரும்ப பாப்போம்.” என்று ஆகாஷ் கை நீட்ட, இம்முறை சிரித்த முகமாக கை நீட்டினாள் அவள்.

அந்த கதகதப்பான கைகளுக்குள் அவள் பூ போன்ற கைகள் மென்மை மாறாமல் பொதிந்து கொண்டன.

‘எத்தனையோ கை குலுக்கல்கள் மத்தியில், இந்த கைகுலுக்கலில் மனமும் லயித்துப் போகிறதோ?’ என்ற எண்ணம் ஸ்ருதிக்குள் மெல்ல எட்டிப் பார்த்தது.

‘அவள் கரங்களை என்றும் விடக்கூடாது…’ என்ற எண்ணம் தோன்ற, வேகமாக விலகிக் கொண்டான் அவன்.

அவன் தலை அசைத்து விடைபெற, அவளும் தலை அசைத்துக் கொண்டாள்.

ஆகாஷின் பென்ஸ் கார்  சாலையில் மெதுவாக சென்றது. அவன் எண்ணமோ ஸ்ருதியை சுற்றி வந்தது.

ஸ்ருதியின் தீண்டல், அவள் பேச்சு, அவள் கூர்மை என அசைபோட்டுக் கொண்டிருந்தது அவன் மனம்.

தலையை அங்குமிங்கும் சிலுப்பிக் கொண்டான். அவனையும் மீறி, அவன் உதடுகள் வளைந்தது.

அவன் எண்ணம், ஸ்ருதியிடமிருந்து கீதாவின் பேச்சுக்குச் சென்றது.

‘முதலில் மெல்லினம்…  ங ஞ ண ந ம ன அதாவது மென்மையான ஸ்டேஜ்… இப்படி தனியா நடக்குறது… மென்மையா சிரிக்கறது… அப்படி இப்படி தலை அசைக்குறது. லைட் ரொமான்ஸோட அவங்களை தள்ளி நின்னு மட்டும் பாக்குறது…’ என்று கீதா கூறியது நினைவு வர, ஆகாஷின் மனதில் பெரும் சந்தேகம் எழுந்தது.

‘நாம தள்ளி நின்னு எல்லாம் பார்க்கலியே? இது மெல்லினமா? இல்லை இடையினமா?’ எத்தனையோ தொழில் நுட்பமான கேள்விகளுக்குப்  பதில் கண்டுபிடித்தனவால், இந்த கேள்விக்கு பதில் கண்டுபிடிக்க முடியவில்லை.

‘இடையினமுன்னா என்னவா இருக்கும்? கீதா கிட்ட கேட்கணுமே! கேட்டா ரொம்ப பேசுவாளே…’ என்ற எண்ணம் ஓட, “ச்… ச்ச… இது என்ன சிறுபிள்ளைத்தனம்?” என்று சத்தமாகக் கூறிக்கொண்டான்.

‘எனக்கு என்ன காதலிக்கும் வயசா? ஆனால், எனக்கு ஸ்ருதியை பிடித்திருக்கிறது.’ என்று எண்ண ஆரம்பித்தான்.

‘இந்த காதல் எல்லாம் நமக்கு செட் ஆகாது. நேரா கல்யாணம் தான்.’ என்று சிந்தித்தான் ஆகாஷ்.

‘ஆனால், அவளுக்கு என்னை பிடித்திருக்குமா? பிடிக்குமா? இந்த விஷயத்தில் அவசரப் படக்கூடாது. அம்மா, அப்பா கிட்ட சொன்னா பிரச்சனை ஆகும். பாட்டிகிட்ட சொல்லணும்.’ என்று எண்ணிக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் ஆகாஷ்.

கீதா ஆகாஷின் அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

ஆகாஷ்,  கீதாவைக் கவனிக்கவில்லை. ‘நான் எண்ணுவது சரிதானா? இல்லை அவசரப்படுகிறேனா?’ என்ற குழப்பமான கேள்விகளுக்குப் பதில் தெரியாமல், குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்.

குளித்துவிட்டு வெளியே வர, அவனிடம் ஒரு புகைப்படத்தை நீட்டினாள் கீதா.

‘என்னது?’ என்று அவன் கண்களை உயர்த்த, தோள்களைக் குலுக்கினாள் கீதா.

ஆகாஷ் அந்த புகைப்படத்தைப் பார்க்க, அதில் ஒரு அழகிய பெண்ணின் படம், “பொண்ணு நமக்கு தூரத்து சொந்தம். அம்மா வழியும் கூட, சோ… பாட்டி, அம்மா கண்டிஷன் க்ளியர். அவங்க ஒன்னு விட்ட தாத்தா அரசியல்வாதி. சோ… தாத்தா கண்டிஷன்  க்ளியர். அவங்க அப்பா பிசினெஸ். அதனால, அப்பாவும் ஹப்பி. எல்லாரும் ஒகே பண்ணிட்டாங்க. நான் மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கேன். இன்னும் முடிவு பண்ணலை.” என்று யோசனையாகக் கூறினாள் கீதா.

“கல்யாணம் எனக்கா, இல்லை உங்க எல்லாருக்குமா?” என்று கடுப்பாகக் கேட்டான் ஆகாஷ்.

“அண்ணா… உனக்கு தான் கல்யாணம் அது தான் உன்கிட்ட போட்டோ காட்டுறோம். இல்லைனா காட்ட மாட்டோமே” என்று ராகம் பாடினாள் கீதா.

“என்ன அறிவு? என் தங்கச்சிக்கு என்ன அறிவு?” என்று சிலாகித்துவிட்டு, புகைப்படத்தைப் பார்த்து, “பிடிக்கலை…” என்று கூறினான் ஆகாஷ்.

“ஏன்?” என்று ஒற்றை வார்த்தையோடு நின்றாள் கீதா. “பிடிக்கலைனா… பிடிக்கலை…” என்று ஆகாஷ் தோள்களைக் குலுக்க, “அது தான் ஏன்?” என்று கீதா பிடிவாதமாக நின்றாள்.

‘எனக்கே சரியா தெரியாத விஷயத்தை இவளிடம் என்னவென்று சொல்வது? ஸ்ருதியின் எண்ணம் அறியாமல்,  நான் என்ன சொல்ல?’ என்ற யோசனையோடு கீதாவைப் பார்த்தான் ஆகாஷ்.

விடை அறியாமல் அசைவதில்லை என்று அவளும் தன் சகோதரன் முன் மல்லுக்கட்டிக்கொண்டு நின்றாள்.

குறும்புகள் தொடரும்…

error: Content is protected !!