UUP–EPI 22

அத்தியாயம் 22

எஸ்ட்ரியோல் (estriol) எனும் ஹார்மோன் பிறக்கப்போகும் குழந்தையின் நலத்துக்கு முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோனாகும். யூடெரெசின் வளர்ச்சிக்கு உதவும் இந்த ஹார்மோன், குழந்தையைப்  பிறக்க வைக்கப் போகும் பெண்ணின் உடலை தயார் செய்கிறது.

 

அன்று

ப்ரதாப்பின் லெட்டரைப் பார்த்து மலைத்துக் போய் நின்றாள் சண்மு. ஐயோ என நெஞ்சை அடைத்துக் கொண்டு வந்தது.

‘ரெண்டு வாரம் எப்படிடா தனியா இருப்பேன்! கண்ணன் இருந்த வரைக்கும் வீட்டுக்குத் தூங்க மட்டும்தானே வந்தோம்! ஒன்னுமே கத்துக்கலியே! வீட்டுக் கதவ திறக்கக் கூட தெரியாதே எனக்கு! எப்படிடா சமாளிக்கப் போறேன் கதிரு!’

பயப்பந்து தொண்டையில் உருள கண் மூடி அப்படியே அமர்ந்துவிட்டாள் சண்மு. கண்களில் நீர் தானாகவே வடிந்தது.

‘கட்டன பொண்டாட்டி மேல கொஞ்சமாச்சும் அக்கறை இருந்தா இப்படி விட்டுட்டுப் போயிருப்பாரா!’ என மனம் சோர்ந்துப் போனது. என்ன செய்வது என புரியாமல் மீண்டும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள் சண்மு. மனதின் சோர்வு உடலையும் பாதித்ததோ! மறுபடி அவள் எழுந்தப் போது பிற்பகல் ஆகியிருந்தது. வயிறு பசியில் கூப்பாடு போட்டது.

மெல்ல எழுந்து பாத்ரூம் போனவள், அங்கிருந்த ஷவரை வைத்தக் கண் வாங்காமல் பார்த்தாள். ப்ரதாப் இருந்த வரை இவள் குளிக்கப் போகும் முன்னே, ஷவரை மிதமான சூடு வரும்படி அட்ஜஸ்ட் செய்து விட்டுப் போவான். கலகலவென பேசாவிட்டாலும் பார்த்து பார்த்து எல்லாம் செய்கிறானே என பூரித்துப் போவாள் சண்மு. இப்பொழுது பூரிப்புப் போய் நெஞ்சைக் கரித்துக் கொண்டு வந்தது.

‘என்ன இது வந்த ரெண்டாவது வாரத்துலயே சும்மா சும்மா கண்ணீரு!’ என தன்னையே கடிந்துக் கொண்டவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள். ஷவரின் அடியில் இருந்த திருகும் குழாயைத் திருக, உடலைப் பொத்துப் போடும் அளவுக்கு சூடான நீர் கொட்டியது.

“அம்மா!” என கத்தியப்படியே நகர்ந்து நின்றுக் கொண்டாள் சண்மு. உடல் எல்லாம் எரிய கைகளால் பரபரவென தேய்த்து விட்டுக் கொண்டாள் அவள். சுடுநீர் பட்டு சருமம் சிவந்துப் போய் விட்டது. அங்கிருந்த வாளியை எடுத்து ஷவரில் இருந்து வந்த சுடுநீரை நிரப்பியவள், பின் ஷவரை மூடி விட்டாள். வாளியில் இருந்த தண்ணீர் சூடு ஆறும் வரை காத்திருந்து பின் குளித்து விட்டு வந்தாள். உடலில் இன்னும் எரிச்சல் அடங்காமல் இருக்க, வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த தேங்காய் எண்ணேயை உடல் முழுக்கப் பூசிக் கொண்டாள். எரிச்சல் மட்டுப் பட, கிச்சனுக்குள் நுழைந்தாள்.

இன்டக்‌ஷன் அடுப்பின் முன் வந்து நின்றவளுக்கு பயமாய் இருந்தது. அதை எப்படி பயன்படுத்துவது என புரியாமல், அதை தொட்டுத் தடவிப் பார்த்தாள். எதையாவது தட்டப் போய் நெருப்புப் பிடித்து விடுமோ என கலக்கமாய் இருந்தது அவளுக்கு. பெருமூச்சுடன் ப்ரிட்ஜை திறந்துப் பார்த்தாள். கொஞ்சமாக பழங்கள், பச்சை காய்கறிகள், பால், முட்டை, ப்ரோஷன் செய்திருந்த கோழி என இருந்தது. கிச்சன் காபினேட் ஒவ்வொன்றையும் திறந்துப் பார்த்தாள். ப்ரதாப் சாப்பிடுவது போல சிப்ஸ், சீரியல், இப்படி தான் இருந்தது. உணவு பொருட்களை மட்டும் வெளியே எடுத்து டேபிளில் அடுக்கினாள் சண்மு. பின் இரண்டு வாரத்துக்கு காலை உணவுக்கு இது, பகலுக்கு இது, இரவுக்கு இது என பிரித்து வைத்தாள்.

‘எப்படிலாம் சாப்பாடு குடுப்ப நீ எனக்கு! இப்ப என் நிலைமையப் பார்த்தியா கதிரு! அளந்து வச்சு சாப்பிடறேன்!’ என நண்பனிடம் முறையிட்டவள் பாலையும் முட்டையையும் வெளியே எடுத்தாள்.

காபி மேக்கர் உபயோகிக்கத் தெரியாததால், கொஞ்சமாக பாலை அளந்து கப்பில் ஊற்றிக் குடித்தாள். இரண்டு குழாயையும் திறந்துப் பார்க்க, ஒன்று நார்மலாகவும், இன்னொன்று லேசான சூடாகவும் தண்ணீர் வந்தது.

‘இந்த சூடு பத்தாதே’ என நினைத்தவள் கப்புடன் பாத்ரூமுக்கு ஓடினாள். ஷவரைத் திறந்து அந்த சூடான நீரை பிடித்துக் கொண்டு வந்தவள், ஒரே ஒரு முட்டையை அந்த சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் வைத்திருந்து பின் உடைத்து சாப்பிட்டாள். மேசையில் இருந்த எக்ஸ்பையர்ட் ஆகி இருந்த ரொட்டியில் ஒன்றை எடுத்துக் கடித்து சாப்பிட்டு காலை உணவை முடித்துக் கொண்டாள் சண்மு. வயிறு ஓசையை இன்னும் நிறுத்தாததால் நிறைய தண்ணீர் குடித்து அதன் ஓசையை அடக்கினாள்.

நேரத்தை எப்படிப் போக்குவது என தெரியாமல் வீட்டை கூட்டித், துடைத்து சுத்தம் செய்தாள். பாத்ரூம் எல்லாம் கழுவி விட்டாள். அதன் பிறகே தான் செய்த தப்பு உறைத்தது.

‘ஐயையோ! இப்படி வேலை செஞ்சா ரொம்ப பசிக்குமே!’ என அயர்ந்துப் போனாள்.

மத்தியான உணவுக்கு மறுபடியும் அதே போல் பாத்ரூமில் சுடுதண்ணீர் எடுத்து வந்து, கோழியை அதில் போட்டு உப்பைத் தூவி மூடி வைத்தாள் சண்மு. வெந்தும் வேகாமல் இருந்த கோழியைப் பார்த்ததும் மனது ஓய்ந்து போனது. கண்களில் நீர் வழிய மெல்ல மென்று சாப்பிட்டாள். மேலே மட்டும் சுடுநீரில் வெந்து உள்ளே வேகாமல் ரத்தம் தெரியவும் தூக்கிப் போட்டு விட்டு, சிங்கில் ஓடிப்போய் உமட்டி குமட்டி வாந்தி எடுத்தாள்.

பின் அப்படியே தள்ளாடிப் போய் சோபாவில் படுத்துக் கொண்டாள் சண்மு. கண்களை மூடிக் கொண்டவளுக்கு, போண்டா வாங்கிக் கொடுத்த கதிர் நினைவில் வந்தான். உப்புமா எடுத்து வந்துக் கொடுத்து, தனக்கும் வேண்டும் என கை நீட்டிய கதிர் நினைவில் வந்தான். எந்நேரமும் சாப்பிட்டியா சம்மு என கேட்கும் கதிர் நினைவில் வந்து நின்றான். கண்ணைத் திறந்து அவன் நினைவுகளை துரத்தி விட்டாள் சண்மு.

‘கல்யாணம் ஆகிக் கூட இன்னொரு ஆம்பளைய நெனைக்கறனே, நான் நல்லவளா கெட்டவளா?’ என மனசாட்சி கேள்விக் கேட்க துடித்துப் போனாள் சண்மு.

“நான் நல்லவதான். ஒழுக்கமானவதான்! எங்கப்பன் மாதிரி கட்டனவளுக்குத் துரோகம் பண்ணறவ இல்ல! கதிரு என் நண்பன் மட்டும்தான். என் மனசு பலவீனமான இந்த நேரத்துல தோள் சாஞ்சுக்க நண்பனின் துணைய தேடுது! அவ்வளவுதான்! வேற எந்த கெட்ட எண்ணமும் எனக்கு இல்ல! கதிரு என் நண்பன் மட்டும் தான். நான் ஒழுக்கமானவதான்” என வாய்விட்டு சொல்லி பொங்கி பொங்கி அழுதாள் சண்மு.

பகல் பொழுதுகள் இப்படியாக கரைய இரவு இன்னும் பயத்தைக் கொடுத்தது சண்முவுக்கு. ஹாஸ்டலில் இருந்த போது கூட பல பேர் ஒரு ரூமை ஷேர் செய்ததால் தனிமை அவளை அண்டியது இல்லை. இங்கே தொலைக்காட்சியைக் கூட திறக்க தெரியாமல், மொட்டு மொட்டென அமர்ந்திருந்தாள் சண்மு. வெளியே வீசிய காற்று கூட ஊவென நாராசமாக கேட்டது. ப்ரிட்ஜில் இருந்து வரும் சத்தம், தடக் முடக்கென வீட்டில் எங்காவது கேட்கும் சின்ன சத்தம் என ஒவ்வொரு ஒலிக்கும் நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டது. எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும், தெரியாத ஊர், புரியாத பாஷை, பசித்த வயிறு, தனிமை எல்லாம் சேர்ந்து ஒருத்தரை முடக்கிப் போட்டு விடும். இதற்கு சண்முவும் விதிவிலக்கல்ல.

முண்டாசு கட்டிய கதிரை நினைவில் கொண்டு வந்தவள்,

“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே” என பாராயணம் செய்ய ஆரம்பித்தாள். உறக்கம் வரும் வரை அதை நிறுத்தவில்லை சண்மு.

அடுத்தடுத்து நாட்களில் சாப்பிட்டது ஒத்துக் கொள்ளாமல் வாந்தி பேதி, காய்ச்சல் என வந்து விட நடமாட்டத்தைக் குறுக்கிப் படுத்தே கிடந்தாள் சண்மு. உதடுகள் மட்டும் எந்நேரமும் அச்சமில்லையை முணுமுணுத்துக் கொண்டே இருந்தன.

இரண்டு வாரத்தில் திரும்பி வந்த ப்ரதாப் கண்டது பாதி உயிராகிப் போன சண்முவைதான். ஒரு வித மயக்கத்தில் இருந்தவளை கண்டு பீதியாகிப் போனான் அவன்.

“ஓ ஷீட்! ஓ மை காட்! ப்ரியா! ஆர் யூ ஓக்கே? ப்ரியா!” என துடிதுடித்துப் போனான் ப்ரதாப். அவசரமாக அவளை அள்ளிப் போட்டுக் கொண்டு ஹாஸ்பிட்டல் ஓடினான். அங்கே அவளுக்கு ட்ரிப்ஸ் ஏற்றி, இவனையும் கேள்வியாய் குடைந்து ஒரு வழி ஆக்கிவிட்டார்கள். இவன் வெளியூர் போகவும், பிரிவு துயரில் சாப்பிடாமல் இருந்து இப்படி ஆகிவிட்டாள் என அண்டப் புழுகு ஆகாசப் புழுகெல்லாம் புழுகி ஒரு வழியாக வீட்டுக்கு அழைத்து வந்தான்.

படுத்திருந்தவளுக்கு கஞ்சி வைத்து எடுத்து வந்தவன்,

“ப்ரியா” என மெல்ல அழைத்தான்.

“ஹ்ம்ம்” மெலிதாக முனகினாள் சண்மு.

“கஞ்சி கொண்டு வந்திருக்கேன்! சாப்பிடும்மா”

இப்படி ஒன்றும் முடியாமல் படுத்திருப்பது சண்முவுக்கு அறவே பிடிக்கவில்லை. எழுந்து நடமாட வேண்டும், தன்னை இப்படி விட்டு சென்றவனை நாக்கைப் பிடிங்கிக் கொள்வது போல நான்கு வார்த்தை கேட்க வேண்டும் என ஒவ்வொரு செல்லும் துடிக்க கையை நீட்டினாள் கஞ்சி பாத்திரத்துக்காக. நடுங்கிய அவள் கையைப் பார்த்தவன்,

“நானே குடுக்கறேன்மா!” என அவளை அமர்த்தி வைத்து கரண்டியை வாயருகே கொண்டு சென்றான். அவனையே விழி எடுக்காமல் பார்த்திருந்தவள், பின் மெல்ல வாயைத் திறந்தாள். அவன் ஊட்ட ஊட்ட, காலி வயிற்றில் விழுந்த உணவு எதிர்த்துக் கொண்டு வாய் வழியே வெளியே வர பார்த்தும் பிடிவாதமாக முழு கஞ்சியையும் குடித்து முடித்தாள். மருந்து எடுத்துக் கொடுத்தவன், தண்ணீரையும் புகட்டினான். அவள் தூங்குவதற்கு ஆவன செய்தவன்,

“தூங்குடா! அப்புறம் பேசலாம்” என ரூமில் இருந்து வெளியே போய்விட்டான்.

அடித்துப் போட்டது போல தூங்கி எழுந்தவள், கொஞ்சம் பெட்டராக உணர்ந்தாள். அவள் அசைவை உணர்ந்து ரூமுக்கு ஓடி வந்தான் ப்ரதாப். தடுமாறியவளை கைப்பிடித்து பாத்ரூம் அழைத்துப் போனான்.

“நான் பார்த்துக்கறேன்” என இவள் சொல்லவும் தான் வெளியே வந்தான். சண்மு மெல்ல நடந்து வெளியே வர, சுட சுட காபியும் ப்ரேட் டோஸ்டும் செய்து வைத்து அவளுக்காக காத்திருந்தான் அவன்.

இவள் பேச வாயெடுக்க,

“இரு இரு! முதல்ல சாப்பிடு! அப்புறம் தெம்பா கேள்வி கேளு ப்ரியா, ப்ளிஸ்” என கெஞ்சினான்.

மறுக்காமல் அவன் கொடுத்ததை சாப்பிட்டாள் சண்மு. முடித்ததும் அவள் பேசிய முதல் வாக்கியம்,

“எனக்கு அடுப்பு பத்த வைக்க சொல்லிக் கொடுங்க” என்பதுதான்.

கத்த போகிறாள், கதற போகிறாள் என இவன் அதற்கு தயாராக இருக்க அவள் கேட்ட விஷயத்தில் வாய் பிளந்து நின்றான் ப்ரதாப். மெல்ல கைப்பிடித்து அவளை எழுப்பியவன் கிச்சனில் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என சொல்லிக் கொடுத்தான். டேபிளில் இருந்த பேனாவையும், நோட் பேடையும் எடுத்து தமிழில் எழுதி வைத்துக் கொண்டாள் சண்மு.

“வெளிய போகிறதுனா எப்படி? கதவு திறக்க சொல்லிக் கொடுங்க.” என அடுத்த வாக்கியத்தைப் பேசினாள். அதையும் பொறுமையாக சொல்லிக் கொடுத்தான் ப்ரதாப். கதவைத் திறந்து வெளியே போய் நின்றவள் நிறுத்தி நிதானமாய் வெளிக்காற்றை சுவாசித்தாள். அவர்கள் வீட்டுக்காக இவன் வாங்கிப் போட்டிருந்த சிட் அவுட்டில் போய் அமர்ந்துக் கொண்டாள் சண்மு. அவளுடன் இவனும் வந்து அமர்ந்தான்.

எங்கே போனாய், ஏன் போனாய், என் நிலையைப் பார்த்தாயா என எதையும் கேட்டவில்லை அவள். அமைதியாக சுற்றுப் புறத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். இவன் பேச வாயெடுக்க,

“இங்கிருந்து கடைக்கு எப்படி போகனும்? பஸ் எடுக்கனுமா?” என அடுத்தக் கேள்வியை கேட்டாள்.

இந்த முறை அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் ஒன்றும் பேசவில்லை. பெருமூச்சுடன்,

“தப்புத்தான் ப்ரியா! இப்படி அவசரமா போனது தப்புத்தான். ஐம் சோ சாரி! திடீர் எமெர்ஜென்சி! நான் ட்ரைன் பண்ண ஓன் பேட்ச் எல்லாரும் தப்பான கோடிங் செஞ்சதனால சிஸ்டம் கோலேப்ஸ் ஆச்சுன்னு பெரிய ஈஸ்யூ ஆச்சு. என்னை வேலைய விட்டு தூக்கற நிலை. அவசரமா அடிச்சுப் புடிச்சு போனேன். அந்த டைம்ல என்னால வேற எதையும் நினைக்க முடியலை. அங்கப் போய் என் மேல தப்பில்லன்னு ப்ரூவ் பண்ணவே பல நாள் எடுத்துச்சு. கோடிங்ல பிரச்சனை இல்ல, போட்டி கம்பெனியோட ஹேக்கிங்ல தான் இப்படி நடந்துச்சுன்னு கண்டுப்பிடிச்சு என் பேர க்ளியர் பண்ணி, டீமோட சேர்ந்து நானும் மறுபடி புது சிஸ்டம் தயாரிச்சு ரன் பண்ணறதுக்குள்ள செத்துப் பொழச்சிட்டேன் ப்ரியா! இந்த வேலைதான் என்னோட உயிர். இது இல்லாம மறுபடி இந்தியா போய் எங்கப்பா கூடவும், செருப்பு சம்பிரதாயம்னு மல்லுக்கட்டற சமுதாயத்துக்கிட்டயும் என்னால குப்பைக் கொட்ட முடியாது ப்ரியா! ப்ளீஸ் அண்டெர்ஸ்டேண்ட்! என்னை மன்னிச்சிரு. இனிமே இப்படி சத்தியமா நடக்காது” என கண் கலங்க கையைப் பிடித்துக் கெஞ்சினான் ப்ரதாப்.

அந்த நேரம் அவனுக்குப் போன் வந்தது. எடுத்துப் பார்த்தவன்,

“உன் தம்பிதான்” என சொல்லி விட்டு போனை ஆன் செய்தான்.

“சொல்லு கண்ணா!”

“சாரிடா! ரெண்டு வாரம் ஆன்சைட் போயிருந்தேன். சோ கால் அட்டேண்ட் பண்ணமுடியல”

“ஓகே, ஓகே! அக்கா பத்திரமா தான் இருக்கா! நீ கத்தாதடா! இரு தரேன்” என போனை மியூட்டில் போட்டவன்,

“இந்த விஷயம் அங்க ஊருக்குத் தெரிய வேணாமே ப்ரியா! இனி சத்தியமா இப்படி நடக்காது. உன்னை நல்லாப் பாத்துப்பேன் இனிமே! ப்ளிஸ் ப்ரியா! ஒன்னும் சொல்லிடாத” என அவள் கன்னத்தில் முத்தமிட்டவன்

“ப்ளிஸ்டி” என மன்றாடினான்.

இவள் ஒன்றும் சொல்லவில்லை. போனை தருமாறு கையை நீட்டினாள். மியூட்டை நீக்கி விட்டுப் போனைக் கொடுத்தான் ப்ரதாப்.

“கண்ணா!” கலங்கும் போல் இருந்த குரலை முயன்று சரிப்படுத்தினாள்

“அக்கா! அக்கா! எப்படிக்கா இருக்க? உன்னைத் தனியா விட்டுட்டு மாமா ரெண்டு வாரம் வெளியூர் போயிருந்தாராமே! எப்படிக்கா சமாளிச்ச?” குரல் கலங்கி வந்தது அவனுக்கு.

“நான் ஓகேடா! நீ கலங்காத” என இவள் சொல்ல, இவள் கரத்தைப் பிடித்து அழுத்திக் கொடுத்தான் ப்ரதாப்.

“எனக்கு வர கோபத்துக்கு!!! அவர நம்பிதானே உன்னைக் கட்டி வச்சேன்! கொஞ்சம் கூட பொருப்பில்லாம இப்படி செஞ்சிட்டாரே! நான் அங்க வந்துட்டா உன்னை பத்திரமா பாத்துப்பேன்கா! கொஞ்ச நாள் சமாளிச்சுக்கக்கா!”

“நான் சமாளிச்சுப்பேன்டா கண்ணா! நீ உடம்ப பாத்துக்கோ! அம்மாவையும் பாத்துக்கோ! நைட் இவர் போன்ல அம்மாவுக்குப் பேசறேன்” இன்னும் பேசினால் அழுது விடுவோமோ என பயந்து பேச்சை முடிக்கப் பார்த்தாள் சண்மு.

“போனை அந்தப் பெரிய மனுஷன் கிட்ட குடுக்கா! நல்லா நாலு வார்த்தைக் கேட்கறேன்”

இவள் போனை நீட்ட, எடுத்து காதில் வைத்தான் ப்ரதாப்.

இவன் பேச முயற்சிக்க இவனால் முடியவேயில்லை.

“ஹ்ம்ம். நான். இல்ல. சொல்லறத கேளு. இருடா பே…வந்து கண்ணா! சரி, சரி! திட்டாதே! ஓகே! ஹ்ம்ம்ம்.நல்லா பார்த்துக்கறேன். சரிடா! பாய்டா” எனும் வார்த்தைகள் மட்டும்தான் ப்ரதாப்பின் வாயில் இருந்து வந்தது. பேசி முடித்தவன், மெல்லிய புன்னகையுடன் இவளைப் பார்த்தான்.

“காது தீயிற அளவுக்குத் திட்டிட்டான். யப்பா! என்னமா கோபம் வருது அவனுக்கு.” என முகம் மலர சிரித்தான் ப்ரதாப்.

சிரித்தவன் முன்னே கையை நீட்டினாள் சண்மு.

“எ..என்ன ப்ரியா?”

“எனக்கு ஆஸ்திரேலியா காசு வேணும்!”

“இனிமே இப்படி நடக்காதுன்னு சொல்றேன்ல ப்ரியா”

“என் வாழ்க்கையில இது வரைக்கும் சின்ன புள்ளயில தான் நான் எங்கம்மாவ நம்பி இருந்துருக்கேன். ஒரு வயசு வந்ததும், என்னை நம்பித்தான் என் அம்மாவும் என் தம்பியும் இருக்க ஆரம்பிச்சாங்க. கல்யாணம் ஆகிருச்சுன்னு நான் உங்களை நம்பி வந்தேன்! ஆனா கடவுள் அழகா பாடம் எடுத்துட்டான் எனக்கு! சாகற வரைக்கும் யாரையும் நம்பி இருக்காதே சண்முன்னு! தன் கையே தனக்குதவின்னு பொட்டுல அடிச்சுப் புரிய வச்சிட்டான். உங்க கிட்ட காசு கேட்க கூட பிடிக்கலதான்! ஆனா நீங்கதானே என் புருஷன்! என்னை வச்சிக் காப்பாத்துவேன்னு தானே தாலி கட்டுனீங்க! அதனால காசு குடுங்க! என் தேவைய இனி நானே பார்த்துக்கறேன்” என சாதாரண மரத்துப் போன குரலில் சொன்னாள் சண்மு.

வாயடைத்துப் போய் அவளைப் பார்த்திருந்தான் ப்ரதாப்.

“ப்ரியா!” என ஏதோ பேச வந்தவனை கை நீட்டி வேண்டாம் என தடுத்தவள் இன்னொரு கையை காசு தா என்பது போல நீட்டிக் காட்டினாள். வாலட்டை எடுத்து அதிர்ல் இருந்த பணம் அத்தனையையும் அவள் கையில் வைத்தான் ப்ரதாப். மறுக்காமல் எடுத்துக் கொண்டவள், மெல்ல நடந்து வீட்டின் உள்ளே போனாள்.

சண்முவுகு மனது மரத்துப் போய் இருந்தது. வேலைதான் உயிர் என சொன்ன ப்ரதாப் தன்னை உயிர் போகும் நிலையில் நிறுத்தி வைத்துப் போயிருந்தது மனதை அறுத்தது. அவனிடம் பேசவே பிடிக்கவில்லை. நாடு விட்டு நாடு வந்து அவனை கோபித்துக் கொண்டு எங்கு போவாள்? என்ன செய்வாள். மனம் ஒரு நிலை அடைந்து அவனை மன்னிக்கும் வரை அமைதியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்தாள்.

பின் வந்த நாட்களில் அவனோடேயே கார் வேண்டாம் என சொல்லி பஸ்சிலும், ட்ரேயினிலும் திரும்ப திரும்ப போய் பழக்கப்படுத்திக் கொண்டாள். எந்நேரமும் கையில் பேனா நோட்பேட் வைத்திருந்தாள் சண்மு. இடம் பெயர் எழுதிக் கொண்டவள், அங்கிருக்கும் லேண்ட்மார்க்கையும் தனக்கு தெரிந்த அளவில் வரைந்துக் வைத்துக் கொண்டாள். புருஷனே ஆனாலும் அவனை நம்பி தன் வாழ்க்கையை ஒப்படைக்கக் கூடாது எவனும் பாடத்தைக் கற்றுக் கொண்டவள், தட்டுத் தடுமாறி ஆஸ்திரேலியா வாழ்க்கையைப் பழக ஆரம்பித்தாள்.

இவள் மயங்கி கிடந்த நாளில் இருந்து, ஒரு மாதம் கழித்து மீண்டும் சிட்னிக்குப் பறக்கும் வேலை வந்து விட்டது ப்ரதாப்புக்கு. இந்த தடவை அவளுக்குத் தேவைப்பட்ட எல்லாவற்றையும் வாங்கி போட்டு விட்டே கிளம்பி இருந்தான். அதோடு சிம் போட்டு அவளுக்கு ஒரு போனையும் கொடுத்திருந்தான்.

அவன் போனதில் இருந்து காலையில் எழுந்து சமைத்து சாப்பிடுவாள். மதியத்துக்கும் அப்பொழுதே சமைத்து வைத்து விடுவாள் சண்மு. அதன் பிறகு வீட்டைப் பூட்டி விட்டு தாங்கள் இருக்கும் வளாகத்தில் நடைபயில்வாள். மெயின் ரோட்டில் ஒரு நர்சரி இருந்தது. இவள் வீட்டில் இருந்து முப்பது நிமிட நடை. தினமும் அங்கே போவாள் சண்மு. ஆரம்பத்தில் ஆசியன் என இவளை ஒரு மாதிரி பார்ப்பார்கள் அங்கே வேலை செய்பவர்கள். இவள் கண்டு கொள்ள மாட்டாள். பரந்து விரிந்திருக்கும் அந்த நர்சரியில் போய் ஒவ்வொரு செடிகளிடமும் நலம் விசாரித்து விட்டு வருவாள். எதாவது வாங்கப் போகிறாளா என கேட்டவர்களிடம், பாஷை புரியாமல்,

“மீ…ப்ளாவர். லைக் டூ சீ! நோ டச்சிங்.” என சொல்லி சமாளித்தாள். அங்கே வேலை செய்பவர்களில் ஒரு ஆள் அவள் பின்னாலேயே நடந்து வருவார்கள். அவள் எதையும் தொடாமல் பார்த்து விட்டு மட்டும் போக, இது ஒரு பைத்தியம் என்பது போல கண்டும் காணாமல் விட்டு விட்டார்கள்.

இப்படி நாட்கள் போய் கொண்டிருக்க, அந்த நர்சரியில் வேலை இருப்பதாக சைன் போர்ட் வைத்திருந்தார்கள். தைரியத்தைக் கூட்டிக் கொண்டு அன்றுதான் ஆபிஸ் போல இருந்த அறைக்குள் நுழைந்தாள் சண்மு. அங்கெ வயதான, கொஞ்சம் சொட்டை வைத்த ஆண் ஒருவர் அமர்ந்திருந்தார். இவளைப் பார்க்கவும் புருவம் சுருக்கி,

“மே ஐ ஹெல்ப் யூ யங் லேடி?” என கேட்டார்.

அவரது ஆங்கிலத்தில் நிலைத் தடுமாறி நின்றாள் சண்மு.

“ஹேல்ப்! ஐ வோர்க், ப்ளாவர், ப்ளாண்ட். ஐ லைக், ஐ வோர்க்” என தட்டு தடுமாறி சொல்லி முடிக்க், அவளையே பார்த்திருந்தார் அவர். தினமும் தான் அவளைப் பார்க்கிறாரே! செடிகளை தூரமே இருந்து அவள் கொஞ்சவதையும் பேசுவதையும் கவனித்துக் கொண்டு தானே இருக்கிறார். மெல்லிய புன்னகை  முகத்தில் படர,

“சிட்” என உட்காரும் இடத்தைக் சைகையில் காட்டினார். படக்கென அமர்ந்துக் கொண்டார்.

நிறுத்தி நிதானித்து மெதுவாக, அங்கே ஆசியன் வேலை செய்ய வேண்டும் என்றால் அதற்குறிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என தெளிவுப்படுத்தினார். இவள் மலங்க மலங்க விழிக்க, கையில் ஒரு பேப்பரை கொடுத்தவர்,

“கீவ் யுவர் பார்ட்னர்” என சொன்னார். அது மட்டும் புரிந்தது அவளுக்கு. சரியென தலையாட்டியவள், சோகமாக கிளம்ப,

“வேய்ட்!” என அவளை மீண்டும் அமர சொன்னார்.

“டூமோரோ கம் வோர்க். பட் திஸ் திங் மஸ் பீ டன்” என கையில் இருந்த காகிதத்தையும் காட்டினார்.

கம் வோர்க் என்றதுமே இவளுக்கு வானில் பறப்பது போல இருந்தது. முகம் மகிழ்ச்சியில் மின்ன,

“தேங்க்ஸ் ஃபாதர்” என சொல்லியவளைப் சிரிப்புடன் பார்த்தார் அவர்.

“கால் மீ ஜேசன்”

“தேங்க்ஸ் ஜேசன். டூமோரே நோ! டுடே வோர்க்” என சொல்லியவளை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது.

அன்று இரவே தம்பிக்கு போன் செய்தவள் இந்த விஷயத்தை சொல்ல, அந்தப் பக்கம் நீண்ட அமைதி.

“கண்ணா”

“ஏன்க்கா நீ வேலைக்குப் போகனும்? நீ ராணி மாதிரி இருக்கனும்கா! எதுக்கு இன்னும் கஸ்டப்படனும்.? மாமா உனக்கு எல்லாம் வாங்கிக் குடுக்கறாராம். பணம் குடுக்கறாராம்! இன்னும் என்னக்கா? எதுக்கு வேலைக்கு?” படபடவென பொரிந்து தள்ளிவிட்டான்.

வீட்டில் இருந்தால் மனம் கண்டதையும் நினைத்து தவிக்கிறது எனவா சொல்ல முடியும்?

“இல்லடா கண்ணா! உங்க மாமா எல்லாமே பார்த்து பார்த்து செய்யறார்டா! ஆனா எனக்குத்தான் வீட்டுல இருக்க முடியல. பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்குடா. ப்ளிஸ்டா! என் கண்ணால!” என அவனை சமாதானப்படுத்தினாள்.

“சரி, கெஞ்சாதே! இப்ப நான் என்ன செய்யனும்?”

“உங்க மாமாட்ட சொல்லி என்னமோ பீல் பண்ணனுமாம், பண்ணி குடுக்க சொல்லுடா! உன் கிட்ட அவருக்கு கொஞ்சம் பயம்!”

“யாரு? அவருக்கு என் கிட்ட பயமா? போக்கா!” என சிரித்தவன்,

“சரி, அவர் கிட்ட சொல்லறேன்! நீ ஹேப்பியா இருந்தா போதும் எனக்கு” என சொல்லி போனை வைத்தான்.

அடுத்த பத்து நிமிடங்களில் இவளுக்குப் போன் வந்தது ப்ரதாப்பிடம் இருந்து.

“ஹலோ” என இவள் சொல்ல அந்த பக்கம் அமைதியாக இருந்தது.

மீண்டும் ஹலோ என்க,

“என் கிட்ட சொன்னா நான் ஒத்துக்க மாட்டேனா ப்ரியா? சப்போர்ட்டுக்கு உன் தம்பிய கூப்பிடனுமா?” என ஆற்றாமையுடன் கேட்டான் ப்ரதாப்.

இவள் உடம்பு சரியில்லாமல் இருந்த நாட்களில் எல்லாம் நன்றாக பார்த்துக் கொண்டவன், இவ தேறியதும் தனியறைக்குப் போய் விட்டான். அதன் பிறகு வேலை விஷயமாக கிளம்பி விட்டான். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அழைத்து, சௌக்கியமா, சாப்பிட்டாயா என சம்பிரதாயமாக கேட்டு விட்டு போனை வைப்பவனிடம் என்ன உரிமையில் கேட்பாள் சண்மு! அவள் அமைதியாக இருக்க,

“ஹ்ம்ம்!” எனும் பெரு மூச்சை விட்டவன்,

“ரெண்டு நாளுல வருவேன். உனக்கு நான் எடுத்திருக்கற பாஸ்க்கு நீயும் வேலை செய்யலாம். வந்து எல்லாம் செட்டில் பண்ணி தரேன்”

இவளுக்கு முகம் மலர்ந்துப் போனது.

“நன்றி! ரொம்ப நன்றி ப்ரதாப்” என மகிழ்ச்சியைக் காட்டினாள்.

திரும்பி வந்தவன், ப்ராசிடர்களை முடித்து முறையாக இவளை வேலைக்கு சேர்த்து விட்டான். அதன் பிறகு நர்சரியே இவள் உலகம் என ஆனது. அவளது ஆவலைப் பார்த்து, போக்கே செய்யும் கோர்சில் சேர்த்து விட்டார் ஜேசன். அங்குள்ளவர்களோடு பழகி கொஞ்சம் கொஞ்சமாக ஆங்கிலம் நன்றாக பேச ஆரம்பித்தாள் சண்மு.

ஆனால் இவர்களின் பர்சனல் உறவு அதே நிலையில் தான் இருந்தது. இப்படியே பல மாதங்கள் ஓடி இருந்தது. மீனாட்சியின் குழந்தை எங்கே எனும் தொணதொணப்பில் மருகி நின்றாள் சண்மு. அவளுக்கு மட்டும் காதலோடு வாழ வேண்டும் பிள்ளைக் குட்டிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆசையில்லையா!

இப்பொழுதெல்லாம் வலிக்க பேசுவது இல்லையென்றாலும் தன்னை அறவே ஒதுக்கி வைப்பவனிடம் போய், எனக்கு காதல் வேண்டும், காதலில் கனிந்த குழந்தை வேண்டும் என எப்படி வாய் விட்டுக் கேட்பாள் சண்மு! உள்ளுக்குள்ளேயே ஒடுங்கினாள் அவள்.

யோசித்து யோசித்து இனி அவன் பேசாவிட்டால் தான் பேசுவது என முடிவெடுத்தாள் சண்மு. அவன் ஆரம்பிக்காவிட்டால் தாமே ஆரம்பிப்போம் என முயற்சியில் இறங்கினாள். கணவன் மனைவிக்குள் யாராவது விட்டுக் கொடுத்தால் தான் குடும்பம் செழிக்கும் என எண்ணமிட்டவள், அன்றிரவு கவனமாக தன்னை அலங்கரித்துக் கொண்டாள். மனம் திக் திக்கென அடித்துக் கொண்டது. ஆனாலும் தன் மேல் நேசம் கொண்டவன் தானே! தான் நெருங்கினால் கண்டிப்பாய் அவனிடம் ரியாக்‌ஷன் இருக்கும் என அருமையாக சமைத்தும் வைத்தாள்.

வீடு வந்த ப்ரதாப் கண்டது அப்சரசாக ஜொலிக்கும் தன் மனைவியைத் தான். தன் உதட்டை எச்சில் படுத்தி எச்சிலைக் கூட்டி விழுங்கியவன்,

“குட் ஈவ்னிங் ப்ரியா!” என மெல்ல முணுமுணுத்தான். பின் தன் ரூமுக்கு விரைந்தவன் குளித்து விட்டு வந்தான்.

சிரித்த முகத்துடனும், மெல்லிய குரலில் பேச்சுக் கொடுத்தப்படியும் உணவு பரிமாறினாள் சண்மு. உணவை அளைந்தனுக்கு மெல்லிய தடுமாற்றம். அடிக்கடி அவளைப் பார்ப்பதும் ,பின் உணவைப் பார்ப்பதுமாக இருந்தான். சீக்கிரம் சாப்பிட்டு முடித்தவன், எப்பொழுதும் போல அவளுக்கு கிச்சனை சுத்தம் செய்ய உதவினான்.

“டேம்ன் டயர்ட் ப்ரியா! நான் தூங்கப் போறேன்” என நகர்ந்தவனை,

“ப்ரதாப்” என அழைத்து நிறுத்தினாள் சண்மு.

திரும்பிப் பார்க்காமல் அப்படியே நின்றான் அவன். மெல்ல அவனை நெருங்கியவள், அவன் கைகளைப் பற்றி தன் கன்னத்தில் வைத்துக் கொண்டாள்.

“எ..என்ன ப்ரியா?”

“இன்னும் எத்தனை நாளைக்கு நான் செய்யாத தப்புக்கு என்னைத் தண்டிக்கப் போறீங்க! நானும் எவ்வளவு நாள் தான் நம்ம வாழ்க்கை இப்போ சரியாகிடும், அப்புறம் சரியாகிடும்னு வேய்ட் செய்ய? சொல்லுங்க ப்ரதாப்! என்னை விரும்பித்தானே கல்யாணம் செஞ்சீங்க! இப்போ அந்த விருப்பம் எல்லாம் எங்க போச்சு?” திக்கித் திணறி தடுமாறி கேட்டாள் சண்மு. அவளுக்கு இப்படியெல்லாம் பேசி தானே முதலடி எடுத்து வைப்பது என்பது சுலபமாக இல்லை. வெட்கம் ஒரு புறம் அணைக்கட்டியது என்றால், காலங்காலமாக பெண்களுக்கு இந்த மாதிரி விஷயங்களில் இருக்கும் தயக்கம் இன்னொரு புறம் அணைக்கட்டியது.

கையை அவன் விலக்க முயல, இவள் இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.

“இப்ப என்னடி வேணும் உனக்கு?” மெல்ல அவன் குரலில் கோபம் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது.

அவன் கோபம் இவளுக்கு நடுக்கம் கொடுத்தாலும், பயந்தாள் தன் வாழ்க்கை அவ்வளவுதான். இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என முடிவெடுத்துக் கொண்டவள், அவன் கண்களையே ஆழ்ந்துப் பார்த்தாள்.

அந்தப் பார்வையில் தடுமாறியவன்,

“என் கூட கட்டில ஷேர் செஞ்சிக்கனுமா?” என கடுமையாக கேட்டான்.

பட்டென அவன் கையை விட்டவள். கண்களில் கண்ணீர் தளும்ப அவனைப் பார்த்தாள்.

“ஏன் அப்படி பார்க்கற? ஏன்டி அப்படி பார்க்கற? அவன் கொடுத்தது, நீ அவன் கிட்ட எடுத்தது எல்லாம் ஞாபகம் வந்துருச்சா! அவன் இங்க இல்லன்னு, இந்த கேணையன் இருக்கானே இவன யூஸ் பண்ணிப்போம்னு நினைக்கறியா? அந்தளவுக்கா தேடுது?” என நாராசமாக கேட்க துடிதுடித்துப் போனாள் சண்மு.

“அப்படிலாம் பேசாதீங்க ப்ரதாப். ப்ளீஸ்!”

“அப்படிதான்டி பேசுவேன்! அப்படித்தான் பேசுவேன். காதல், கல்யாணம்னு எவ்வளவு ஆசையா இருந்தேன். எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சது நீ! இப்போ வாடா வாடான்னா வந்துட முடியுமா? சொல்லு, முடியுமா? வேணும்னா ட்ரை பண்ணிப் பார்க்கவா?” என அவள் கன்னத்தைப் பற்றி முத்தமிட நெருங்கியவனை பளாரென அறைந்தாள் சண்மு.

“விடுடா, விடு! ச்சீச்சீ விடு!” என கண்ணீர் வழிய கத்தியவள், வேகமாக ஓடிப்போய் தன் ரூமுக்குள் நுழைந்து கதவடைத்தாள். கதவை அடைக்க முடிந்தவளுக்கு கண்ணீர் ஊற்றுக்கு அணைக்கட்ட முடியவில்லை. தானே வலியப் போய் அவமானப் பட்டு வந்தவளுக்கு நெஞ்சமெல்லாம் காந்தியது.

“எனக்கு காதலும் வேணா, கர்மமும் வேணா! போதும்டா சாமி இந்த அவமானம்!” கதறியவளை சமாதானப்படுத்த யாருமில்லை. அப்படியே அழுது தூங்கிப் போனாள். அந்த நாளில் இருந்து சாதாரணப் பேச்சு வார்த்தைக் கூட நின்று போனது இருவரிடமும். அடுத்த நாளே ஆறு மாத வேலைக்கு அடெலேய்ட் போய்விட்டான் ப்ரதாப். மீண்டும் தனிமை, செடிகொடி, மனதோடு கதிரிடம் பேச்சு என அவள் வாழ்க்கை அப்படியே சென்றது.

அதற்கு இடையே கண்ணன் வருவது வேறு தள்ளிப் போனது. மீனாட்சிக்கு டெங்கு காய்ச்சல் வர, உடம்பு தேறவே பல மாதம் ஆனது. அம்மாவைப் பார்த்துக் கொள்ள கண்ணனும் அங்கேயே இருக்க வேண்டி வந்தது. இவள் அம்மாவைப் பார்க்க போக விருப்பப்பட, ப்ரதாப் வேண்டாம் என சொல்லிவிட்டான். அவன் பார்த்தப் பார்வை வேறு இவளுக்கு கிலியைக் கொடுத்தது. தான் கதிரிடம் ஓடி விடுவேன் என பயப்படுகிறானா என நொந்துப் போனவள், தினமும் பேஸ்டைம் செய்து அம்மாவைப் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.

இப்படியே இரண்டரை வருடம் ஓடி இருந்தது. தனி தனி தீவாக இருவரும் ஒரு வீட்டில் இருந்தனர். சொல்லப்போனால் இவள் தான் வீட்டில் இருந்தாள். அவன் தான் ஊர் ஊராக சுற்றினானே!

அன்று வேலை இடத்தில் கவனக்குறைவாக இருக்க, ஜாடி ஒன்று அவள் காலில் விழுந்து விட்டது. காலில் ரத்தம் வர, ஜேசன் தான் முதலுதவி செய்து, வீட்டுக்குப் போ என அனுப்பி வைத்தார். வீட்டுக்கு வந்தவள் கராஜில் ப்ரதாப்பின் காரைப் பார்த்து ஆச்சரியப்பட்டாள்.

‘ஊர் சுத்தற வேலை முடிஞ்சது போல! வந்துட்டாரு’ என நினைத்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள். ஹாலை நெருங்கும் போதே, ஒரு விதமான சத்தம் ரூமில் இருந்து வந்தது. என்ன சத்த, இது என நினைத்தவள் மெல்ல ப்ரதாப்பின் ரூமை நெருங்கினாள்.

இச்சு, இச்சு என முத்த சத்தம் கேட்க, நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் இவள். படபடவென வர அவன் ரூமை சமீபித்தாள்.

“ஐ மிஸ் யூ பேட்லி பேபி!” என ப்ரதாப் குரலும் இன்னும் பல இச்சுக்களும் இவள் காதை வந்து அடைந்தது. கண்கள் கலங்கிப் போனது இவளுக்கு. முக்கல் முனகல் சத்தம் கேட்ட சர்வமும் ஆடிப் போனது சண்முவுக்கு.

“இனிமே என்னை விட்டு எங்கயும் உன்ன அனுப்ப மாட்டேன் பேபி! ஐ காண்ட் டேக் திஸ் எனிமோர். ஐ லவ் யூ க்ரேஷிலி பேபி, யெஸ் ஐ டூ” என அவன் முடிக்க இன்னும் பல இச்சுக்கள்.

கை நடுங்க லேசாக திறந்திருந்த கதவை இன்னும் விரிய திறந்தவள், அங்கே அரங்கேறிக் கொண்டிருந்த காட்சியைப் பார்த்து நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் மடிந்தமர்ந்தாள்.

சத்தம் கேட்டு திரும்பிய இருவர் முகமும் வெளிறி போனது.

“க..க..கண்ணாஆஆஆஆ” சண்முவின் அலறல் ப்ரிஸ்பேனையே தூக்கியது.

 

(உயிர் போகும்…)

 

(ப்ளிஸ் அதுக்குள்ள கதைய ஜட்ஜ் பண்ணிறாதீங்க. எபிலாக் முன்னுக்கு இன்னும் ஒரு எபி இருக்கு. முக்கியமான எபி. அது வரைக்கும் என் மேல வெப்பன்ஸ் யூஸ் பண்ணாதீங்க. பொங்கல் வேற வருது. நான் பயந்துக்குவேன். பார்த்து பதமா காமேண்ட் போடுங்க டியர்ஸ் ? இன்னைக்கும் ஸ்பெல்லிங் பார்க்க டைம் இல்ல. மக கிளாசுக்குப் போக வெயிட்டிங். பாய் டியர்ஸ்)