UUP–EPI 23 (part 1)

அத்தியாயம் 23

கிரேலின் (ghrelin) எனும் ஹார்மோன் நமது பசியைத் தூண்டி விடும் வேலையை செய்கிறது. அதோடு இன்சுலின் சுரப்பதையும் கண்ட்ரோல் செய்கிறது.

 

கீழே அமர்ந்து கண்ணா என கதறியவளைப் பார்த்து முதலில் தவித்துக் கலங்கிப் போனது சாட்சாத் அவள் தம்பி கண்ணனே தான். தன்னைப் பற்றி இருந்த ப்ரதாப்பின் கையை உதறி தள்ளியவன், கட்டில் ஓரமாக கிடந்த டீசர்டை அவசரமாக அணிந்துக் கொண்டான். பின் ஒரே பாய்ச்சலில் கட்டிலில் இருந்து குதித்து தன் அக்காவின் முன் ஓடி வந்து மண்டியிட்டவனுக்கு வார்த்தைத் தொண்டைக்குழியிலே சிக்கியது.

“அ..அக்கா!” கண்ணில் வேறு கண்ணீர் வழிந்தது கண்ணனுக்கு.

“கூப்புடாதே! அக்கான்னு கூப்புடாதே! சீச்சீ” கதறலுடன் வந்தது சண்முவின் குரல்.

“அப்படிலாம் சொல்லாதேக்கா!” மெல்ல நெருங்கி அவள் கையைப் பற்றினான் கண்ணன்.

“தொடாதே! தொடாதே! ஐயோ தொடதடா என்னை! காண கூடாதத எல்லாம் இந்தக் கண்ணால என்னைப் பார்க்க வச்சிட்டியேடா பாவி! ஐயோ ஐயோ! நீயாடா இப்படி? நான் வளத்த என் கண்ணனா இப்படி? கடவுளே, கடவுளே! இதெல்லாம் பார்த்த என் கண்ண புடுங்கிருப்பா, புடுங்கிரு!” கண்ணீருடன் ஓங்கி கத்தி கதறியவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு ஆவேசம் வந்ததோ அருகில் இருந்தவனை பளார் பளாரேன அறைய ஆரம்பித்தாள்.

சண்மு வீடு வர இன்னும் நேரம் இருக்கிறது என அசால்ட்டாக இருந்துவிட்ட தன் முட்டாள்தனத்தைத் திட்டியபடியே அவர்களைப் பார்த்திருந்த ப்ரதாப் எனும் சிலைக்கு அறையும் சத்தத்தில் தான் உயிரே வந்தது.

“ஏய்! அடிக்காதடி! அவன அடிக்காதே!” என கட்டிலில் இருந்து குதித்து வந்தவன் கீழே அமர்ந்திருந்த கண்ணனை அவள் அடியில் இருந்து காத்து தன்னுடன் அணைத்துக் கொண்டான்.

“இன்னும் ஒரு அடி என் பேபி மேல விழுந்தது, கொன்னுப் புதைச்சிருவேன் உன்ன!” கோபத்தில் சண்முவைப் பார்த்து உறுமினான் ப்ரதாப்.

நின்றபடியே குனிந்து தன்னை அணைத்திருந்தவனை தள்ளி விட்ட கண்ணன்,

“என் அக்காவ மிரட்டாதே ப்ரது!” என கோபமாக இரைந்தான்.

“இல்ல பேபி! உன்னை அடிக்கறா, என்னால எப்படி பார்த்துட்டு இருக்க முடியும்! ஐ காண்ட் பேபி” என சொல்லியபடியே அவனும் மடிந்து அவன் அருகே தரையில் அமர்ந்தான்.

“அவ ஏசுவா, அடிப்பா, கொல்லுவா! அவளுக்கு எல்லா உரிமையும் இருக்கு. அவ என் அக்கா மட்டும் இல்ல என்னோட அம்மா” என சொல்லியவனின் கண்களில் விடாமல் கண்ணீர் வழிந்தது.

“நோ பேபி! டோண்ட் க்ரை! ப்ளிஸ் பேபி. நீ அழுதா என்னால தாங்க முடியாதுன்னு தெரியும்ல! அழாதடா” என கண்ணனின் கண்ணீரைத் துடைத்து விட்டு அவனை இழுத்து நெஞ்சோடு கட்டிக் கொண்டான் ப்ரதாப்.

ப்ரதாப்பின் அணைப்பில் இருந்து திமிறினான் கண்ணன்.

“ஷ்ஷ்ஷ்! பேபி டோண்ட் ஃபைட் மீ பேபி! லெட் மீ ஹோல்ட் யூ!” என மெல்லிய குரலில் குழந்தையைக் கொஞ்சுவது போல பேசிய ப்ரதாப் கண்ணனின் முதுகை மெல்ல தடவிக் கொடுத்தான்.

“என்னை விடு ப்ரது! இப்படிதான் நான் உண்டு என் படிப்பு உண்டுன்னு இருந்தவன் பின்னாலேயே வந்து காதல் அது இதுன்னு சொல்லி என் மனச கலைச்ச. அம்மா அக்கான்னு மட்டுமே இருந்த என் உலகத்துல நான் அறியாத தகப்பன் பாசத்தக் காட்டுன. அக்கறையா எல்லாம் செஞ்ச! நீ இல்லாம நான் இல்லன்ற அளவுக்கு என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட! ஏன்டா இப்படிலாம் செஞ்ச? ஏன்? ஏன் எம் மேல இப்படி பைத்தியமாகி என்னையும் பைத்தியமாக்குன?” என கதறினான் கண்ணன்.

“பிகாஸ் ஐ லவ் யூ பேபி! ஐம் மேட்லி இன் லவ் வித் யூ” என சொல்லி கண்ணனின் கன்னம் வருடி, முதுகை வருடி ஆறுதல் படுத்தினான் ப்ரதாப். தேம்பியபடியே மெல்ல மெல்ல அப்படியே ப்ரதாப்பின் அணைப்பில் அடங்கிப் போனான் கண்ணன்.

தன் முன்னே அமர்ந்தவாக்கிலேயே கட்டிக் கொண்டிருந்த இரு ஆண் மகன்களையும் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தாள் சண்மு. கண்ணீர் தானாகவே நின்றிருந்தது. அவள் வளர்ந்த சூழலில், வாழ்ந்த இடத்தில் கண்டதெல்லாம் ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் எனும் தாத்பரியத்தைத் தான். இவர்களின் உறவு இவளுக்கு அதிர்ச்சியாகவும் அதே வேளை அருவருப்பாகவும் இருந்தது.

இந்திய அரசே ஹோமோசெக்‌ஷுவல் (ஓரினசேர்க்கை) உறவுகளை அங்கீகரித்திருந்தாலும், படித்து நல்ல நிலையில் இருக்கும் அல்ட்ரா மாடர்ன் மக்களாலேயே இதை ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் இவள் என்ன செய்வாள்! வாரியங்காவலில் இருந்து வந்தவளுக்கு இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்செல்லாம் திகு திகுவென பற்றி எரிந்தது.

“விடுடா என் தம்பிய! விடு! என்னன்னவோ சொல்லி அவனைக் கெடுத்து வச்சிருக்க நீ! விடுடா அவன! சீச்சி, நீயெல்லாம் ஒரு ஆம்பளையா? ஆணுக்குப் பொண்ணு, பொண்ணுக்கு ஆணுன்னு தான் அந்தக் கடவுள் படைச்சான். ஆம்பளையோட ஆம்பள போனாலோ, பொம்பளையோட பொம்பளை போனாலோ இந்த உலகம் எப்படிடா உருப்படும்? புள்ள குட்டி எப்படிடா வரும்?” என கோபமாக ப்ரதாப்பைப் பார்த்து இரைந்தவள் தன் தம்பியை அவனிடம் இருந்து பிரிக்கப் போராடினாள்.

“விடுடி அவன, விடு!” என்றவன் தங்களிஅப் பிரிக்க முயன்ற சண்முவைத் தள்ளிவிட்டான்.

ப்ரதாப்பின் ஒரே தள்ளலில் குப்புற விழுந்து கிடந்தாள் சண்மு.

“டேய், என்னடா பண்ணற!” என கத்திய கண்ணன் ஓங்கி ப்ரதாப்பை ஓர் அறை அறைந்திருந்தான். அறை வாங்கியும் கண்ணனை எதிர்த்து ஒரு விரலைக் கூட அசைக்கவில்லை ப்ரதாப்.

“அடி பேபி! இன்னும் அடி! நீ அடிச்சாலும், உதைச்சாலும் ஏன் கொன்னேப் போட்டாலும் கூட தாங்கிக்குவான் இந்தப் ப்ரதாப். ஆனா நீ எனக்கு இல்லன்னு மட்டும் தெரிஞ்சா உசுரோட இருக்க மாட்டான்!”

அதற்குள் தன் அக்காவை எழுப்பி நெஞ்சோடு அணைத்திருந்தான் கண்ணன். பின் நிமிர்ந்து ப்ரதாப்பைப் பார்த்தவன்,

“இப்படி இமோஷனலா ப்ளேக்மெய்ல் பண்ணாதேடான்னு சொன்னா கேக்கறியா! பாவி பாவி! தூக்க மாத்திரைய அள்ளிப் போட்டுக்கிட்டு ஹாஸ்பிட்டல்ல படுத்து கிடந்துதானேடா உன் காதல சாதிச்சுக்கிட்ட! நாம என்னைக்கும் பிரியாம இருக்கனும்னா அக்காவ மேரேஜ் பண்ணிக்கனும், ஒத்துக்கலைனா சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டி தானேடா இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்ச! உசுரா என்னைப் பார்த்துகிட்ட அக்காவா இல்ல உசுர விடப் பார்த்த நீயான்னு குழம்பி, கலங்கி, தவிச்சு, கடைசியில காதல்தான் பெருசுன்னு எங்கக்காவ நம்ம காதலுக்கு பகடைக்காயா யூஸ் பண்ணிட்டேனே நானு! அதுக்குப் பிறகு தெனம் குற்ற உணர்ச்சியில வெந்துகிட்டு இருக்கேன் ப்ரது! என்னால முடியலடா! போதும்டா போதும்! இவ அருவறுத்துப் பார்த்த ஒத்தைப் பார்வையிலே நான் செத்துடேன்டா ப்ரது! நம்ம சுயநலத்துக்கு என் அக்காவ பலி குடுத்தது போதும்டா! அக்காவ கூட்டிட்டு நான் போயிடறேன்! இந்தியாவுக்கே போயிடறேன்! நீ வேணா, காதல் வேணா, ஒரு மண்ணும் வேணா எனக்கு. பெத்த தாயா பார்த்துக்கிட்ட அக்காவுக்கு பண்ண துரோகத்துக்கு, நீயில்லாத தனிமைதான் எனக்கு நானே குடுத்துக்குற தண்டனை!” ப்ரதாப்பை பார்க்காமல் சுவற்றைப் பார்த்து பேசினான் கண்ணன்.

“போடா போ! உன்னை யாரும் இங்கப் பிடிச்சு வைக்கல! அக்காவாம் ஆட்டுக்குட்டியாம்! போடா, என்னை விட்டுப் போ! போற முன்னுக்கு என் பொணத்துக்குக் கொள்ளி வச்சிட்டுப் போ” என ஓங்கி கத்தினான் ப்ரதாப்.

“ப்ரது!!!!!!”

அக்காவை அப்படியே அம்போவென விட்டுவிட்டு மின்னல் வேகத்தில் எழுந்துப் போய் ப்ரதாப்பைக் கட்டிக் கொண்டான் கண்ணன்.

“அப்படிலாம் சொல்லாத ப்ரது! ப்ளிஸ் சொல்லாத! என்னால தாங்க முடியலடா” தன்னைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சொரிந்தவனை,

“ஓ மை பேபி!” என இறுக அணைத்துக் கொண்டான் ப்ரதாப்.

சண்முவுக்கு இவர்களின் அணைப்பையும் பிணைப்பையும் கண்  கொண்டு பார்க்க முடியவில்லை. அப்படியே நகர்ந்து சுவற்றில் சாய்ந்தவாறு அமர்ந்துக் கொண்டவள், கால்கள் இரண்டையும் நிமிர்த்தி நெஞ்சோடு கைக்கொண்டுக் கட்டிக் கொண்டாள். இருவரும் அழுது, சமாதானமாகி ஓயும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள். அவர்களின் அழுகை அடங்கியதும் நிமிர்ந்துப் பார்த்து,

“நான் என்னடா பாவம் பண்ணேன் உனக்கு? தம்பி தம்பின்னு உன் மேல பாசத்த கொட்டனேனே அது தப்பாடா? அடிக்கடி சீக்குல படுத்துடுவியே, ராவெல்லாம் தூங்காம உன்னைக் கவனிச்சுக்கிட்டேனே, அது தப்பாடா? யாரு உன்னை வம்பிழுத்தாலும் பாஞ்சு போய் சண்டைப் போட்டேனே அது தப்பாடா? தம்பி படிக்கனும், நல்ல நிலமைக்கு அவன் வரனும்னு நான் படிக்காம வேலைக்குப் போனேனே, அது தப்பாடா கண்ணா? சொல்லுடா எது தப்பு? நான் என்ன தப்பு பண்ணேன்? என்னை ஏன்டா இதுல பிடிச்சு இழுத்து விட்டீங்க?” என முயன்று வரவழைத்த சாதாரணமான குரலில் கேட்க ஆரம்பித்தவளின் குரல் முடிக்கும் போது கமறி விட்டது.

“உன் மேல எந்த தப்பும் இல்லக்கா! இந்த மாதிரி ஹார்மோனல் இம்பேலண்ஸா என்னையும் இவனையும் படைச்ச அந்த ஆண்டவன் மேலத்தான் தப்பு. உடம்புல ஒவ்வொரு பாகமும் கரேக்டா இயங்க ஒவ்வொரு ஹார்மோன வாச்சானே(இதுதான் நம்ம ஒவ்வொரு எபிக்கு மேலயும் இன்பர்மேஷனா வருது) அவன், எங்களுக்கு மட்டும் ஏன்கா இப்படி ஹார்மோன வேற மாதிரி விளையாட வச்சான்? ஓரினசேர்க்கைன்றது அவங்க அவங்க விருப்பத்தின் பேருல தான் நடக்குது பயலோஜிக்கல் இஸ்யூனால இல்லன்னு எங்களை சாடறாங்களே, வேணும்னே திமிரெடுத்து நாங்க இப்படி அலையறோம்னு சொல்லறாங்களே, இதெல்லாம் கருவுல இருக்கறப்போவே நிர்ணயிக்கப்படுதுன்னு யாருக்கா அவங்களுக்கு சொல்லறது? பெண்ணைப் பார்த்து ஆசை வர வேண்டிய எங்களுக்கு மட்டும் ஏன்கா எங்க இனத்தையே பார்த்து ஆசை வர வச்சான் உன் கடவுள்? எனக்கு மட்டும் ஆம்பளய லவ் பண்ணனும் அவன் கூட படுக்கனும்னு ஆசையாக்கா? ஐயோ இதென்ன ஆம்பள மேல பீலிங் வருதுன்னு எப்படிலாம் பயந்துருப்பேன்! இத வெளிய யாருகிட்டயும் சொல்ல முடியாம எப்படிலாம் தவிச்சுருப்பேன்! ஸ்ட்ரேய்ட்டா உள்ளவங்களுக்கு எங்க நிலைமை புரியாதுக்கா” குரலில் அழுகையுடன் சொன்னான் கண்ணன்.

நிமிர்ந்து தன் தம்பியை ஆழப் பார்த்தாள் சண்மு. நோஞ்சானாய், மென்மையாய் இருந்தவன் கதிரின் வழிகாட்டுதலால் உடம்பை தேற்றி இருந்தான். அடிக்கடி ஜிம்முக்குப் போய் உடம்பு இறுகி இருந்தது. மீசை தாடியுடன் ரோட்டில் நாம் சந்திக்கும் சாதாரண ஆண்மகன் போலத்தான் இருந்தான். ஆனால் அதீத அழகாய் இருந்தான். ஆராய்ச்சிக் கண்ணோடு ப்ரதாப்பையும் பார்த்தாள் சண்மு. ஜீம் பாடி சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் ஆண்மை ததும்ப நின்றிருந்தான் அவன். எந்த கோயிலில் அடித்து சத்தியம் செய்தாலும் இவர்கள் ஓரினசேர்க்கை வைத்திருப்பவர்கள் என யாரும் நம்ப மாட்டார்கள். யார் சொன்னது மெல்லிய நடையுடையுடன் இருக்கும் ஆண்கள் தான் கேய் என? யார் சொன்னது ஆண்கள் போல் நடையுடையுடன் இருக்கும் பெண்கள் தான் லெஸ்பியன் என? உருவத்தைப் பார்த்து செக்‌ஷுவலிட்டியை நிர்ணயிப்பது என்பது இப்பொழுதெல்லாம் முடியாத காரியமாகி விட்டது.

கண்ணன் அழுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சண்முவின் முன் மண்டியிட்டு அமர்ந்தான் ப்ரதாப்.

“ப்ரியா!”

“கூப்புடாதடா அப்படி, படவா ராஸ்கோல்! ப்ரியாவாம் ப்ரியா! சண்முன்னே கூப்புடு! இன்னொரு தடவை ப்ரியான்னே பிரிச்சி மேஞ்சிருவேன் பாத்துக்கோ!”

“ஓகே ஒகே, ஈசி ஈசி” என இரு கைகளையும் தூக்கி சமாதான தூது விட்டான் ப்ரதாப்.

“பேபி! நீயும் வா! உங்கக்காவுக்குப் புரிய வைக்கலாம்” என கண்ணனையும் அவன் அருகில் அமர்த்திக் கொண்டான். மன்னித்து விடு எனும் யாசிப்புடன் கண்ணன் சண்முவைப் பார்க்க, இவள் நீயாடா கண்ணா இப்படி என்பது போல பார்த்திருந்தாள்.

“உனக்கு முதல்ல இருந்து சொன்னாதான் எங்க நிலைமை புரியும் சண்மு! எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச டைம்ல இருந்தே பெண்கள் மேல நாட்டம் இருந்தது இல்ல. அவங்கள சகோதரியா தோழியா பார்க்க முடிஞ்சதே தவிர வேற கண்ணோட்டத்துல பார்க்க முடியல. நானும் எவ்வளவோ ட்ரை பண்ணேன்! ஆனாலும் என் மனசும் உடம்பும் ஆண்கள தான் தேடுச்சு. எப்படி நார்மலா ஒரு ஆணுக்கு ஒரு பெண் மேல காதல் வருதோ அதே போலத்தான் எங்களுக்கும். எல்லா ஆம்பள மேலயும் பாஞ்சிட மாட்டோம். எங்களுக்கும் ஆசை வரனும், காதல் வரனும். இத என் சொந்த அப்பாவே புரிஞ்சுக்கல சண்மு”

சற்று நேரம் அமைதியாக இருந்தான் ப்ரதாப். பழைய விஷயங்களை மீண்டும் வாழ்ந்துப் பார்த்தானோ என்னவோ! கண்ணன் கையை அழுத்தவும் தான் தன்னிலைக்கு வந்தான்.

“எங்கப்பாவுக்கு நான் ஹோமோன்னு தெரிஞ்சு போச்சு! அவர் கூட எடுபுடியா இருந்த பையன் மேல எனக்கு பதினாறு வயசுலேயே க்ரஷ்! ஒரு தடவை..ஹ்ம்ம்ம்…” என தடுமாறியவன்,

“பேபி இதெல்லாம் நீ என் வாழ்க்கையில வரதுக்கு முன்ன நடந்தது! நான் சொல்லறத கேட்டு கோபப்படக்கூடாது ஓகேவா?” என கண்ணனைப் பார்த்து கேட்டான்.

அவன் சரியென தலையாட்ட மீண்டும் கதையை தொடர்ந்தான்.

“அந்தப் பையன கிஸ் பண்ணிட்டேன். அத அவன் போய் எங்கப்பா கிட்ட சொல்ல, அவரு என்னை பெல்ட்டால விளாசி விட்டுட்டாரு! அசிங்கம் புடிச்ச நாயே! ஒரு பொண்ண மேட்டர் பண்ணியிருந்தா கூட உன்னை மன்னிச்சு விட்டுருப்பேன்! ஆனா போயும் போயும் ஒரு ஆம்பளைய விரும்பறீயேன்னு சொல்லி சொல்லி அடிச்சு என் உடம்ப மட்டும் புண்ணாக்கல, என் மனசையும் சேர்த்து புண்ணாக்கிட்டாரு. இந்தக் கர்மத்த நான் மாத்திக் காட்டறேன்னு சொன்னவரு, எங்க கெஸ்ட் ஹவுஸ்ல என்னை அடைச்சு வச்சு, நெறைய பொண்ணுங்கள அனுப்பிவிட்டாரு. அந்த நாள்…”

சொல்லும் போதே கண்ணீர் வழிந்தது அவனுக்கு! கண்ணன் அவனைக் கட்டிக் கொண்டான்.

“அந்த நாள் என் வாழ்க்கையின் கருப்புப் பக்கம் சண்மு. பெண்கள கண்டாலே வெறுப்பு வர வச்ச நாள். அன்றைக்கு நான் அனுபவிச்ச மனவேதனையை என்னால வார்த்தையால சொல்ல முடியல. அத்தனை பெண்கள் முயன்றும் கூட என்னை, ஹ்ம்ம்ம் கவர, ஐ மீன் மாத்த முடியலையேன்னு என் அப்பா வெறுத்துப் போயிட்டாரு! எங்க இந்தியாவுலயே இருந்தா என் தம்பிய ஏடாகூடமா எதாவது பண்ணிருவேனோனு பயந்தாரு. சொந்த தம்பி மேலயே கை வைப்பேனா நானு? எங்களுக்கும் குடும்ப பற்று, பாசம், ஒழுக்கம் எல்லாம் இருக்கு! அதோட என் விஷயம் வெளிய தெரிஞ்சா அரசியல் வாழ்க்கைக்கு ஒரு கரும்புள்ளியா ஆகிடும்னு ஆஸ்திரேலியாக்கு படிக்க அனுப்பிட்டாரு. கொன்னு கூட புதைச்சிருப்பாரு, ஆனா அவரு உசுர வச்சிருக்கற என் அம்மாவுக்கு என் மேல உசுராச்சே! அதான் யாருக்கும் என் விஷயம் தெரிய விடாம நாடு கடத்திட்டாரு. ரொம்ப நாளா இங்க வரவிடல. அம்மா தான் அங்க வருவாங்க என்னைப் பார்க்க!”

சண்முவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவன் அப்பாவுக்கு விஷயம் தெரியும் என்றால், தெரிந்தே தான் தன்னைக் கட்டி வைத்தாரா என உறைந்துப் போனாள். அவன் அம்மா கல்யாணத்துக்கு ஆட்சேபித்த போது, ஒரே வாக்கியத்தில் அந்தப் பெண்மணியை அவர் அடக்கியது ஞாபகம் வந்தது.

‘படுபாவிகளா!’ நெஞ்சம் காந்தியது பெண்ணுக்கு.

“ஒரு தடவை அம்மாவுக்கு உடம்பு முடியலன்னு இந்தியா வந்தேன்! அப்போத்தான் எங்க வீட்டுக்கு தம்பிக்குப் பாடம் சொல்லி குடுக்க வந்த என் பேபிய பார்த்தேன்” கண்ணனைப் பார்த்து ஆசையாக புன்னகைத்தான் ப்ரதாப்.

“பார்த்ததும் அப்படியே லவ்வுல விழுந்துட்டேன்! ஆனாலும் ஒரு தயக்கம். இவன் ஸ்ட்ரேய்ட்டா(பெண்களை மட்டும் காதலிக்கும், துணையாக கொள்ளும் ஆண்கள்) இருப்பானோன்னு. கேர்ப்ள்ரேண்ட் யாராச்சும் இருக்கான்னு தம்பிட்ட விசாரிச்சேன். அவன் ரொம்ப ஷை டைப்ணான்னு அவன் சொல்லவும் தான் உசுரே வந்துச்சு. இவன் பின்னாலேயே அலைஞ்சேன். எல்லாம் செஞ்சேன். பயந்து பயந்து தான் ப்ரோபோஸ் பண்ணேன். பட்டுன்னு முடியாதுன்னு சொல்லிட்டான் என் ஸ்வீட் ராஸ்கல்! ஆனா கண்ணுல மட்டும் லவ் தெரிஞ்சது. அப்புறம் எப்படி அப்படியே விட! எவ்வளவு கெஞ்சியும் ஒத்துக்கல! இந்த சொசைட்டிய பார்த்து ரொம்ப பயந்தான். என்னடா கர்மம் புடிச்ச வாழ்க்கை இது! நமக்கு புடிச்சத செய்ய இத்தனைப் பேருக்குப் பயப்படனுமான்னு நான் வெக்ஸ் ஆகிட்டேன். மறுபடியும் ஆஸ்திரேலிய திரும்பி போகவும் பிடிக்கல. செத்துடலாம்னு தோணிருச்சு, அதான் மாத்திரை போட்டேன். அந்த சூசைட் அட்டெம்ப்ட்ல இவனும் எங்கப்பனும் ஆடிப் போயிட்டாங்க! இவன் பதறிட்டு ஹாஸ்பிட்டல் வந்தான். என்னை சுத்தி ஆளுங்க இருக்க கண்ணாலேயே காதல சொல்லிட்டான். இவன அடைஞ்சிட்டதா சந்தோச பட்டப்போ எங்கப்பன் பறுபடியும் புகுந்து குட்டைய குழப்பனான்.”  என தன் காதல் கதையை பகிர்ந்துக் கொண்டான் ப்ரதாப்.

என்ன என்பது போல பார்த்திருந்தாள் சண்மு.

“அது வந்து, அவர் கௌரவத்த காப்பாத்த பொய்யா ஒரு கல்யாணம் பண்ணிக்க சொன்னாரு. அவரே தான் உன்னைய கைக்காட்டுனாரு! அக்காவ கட்டிக்கோ தம்பிய வச்சிக்கோன்னு நாராசமா பேசனாரு. என் சொந்தபந்தத்துக்கு முன்ன உனக்கு ஒரு கல்யாணத்த பண்ணிடறேன். அதுக்கு அப்புறம் ஆஸ்திரேலியா போய் என்ன கர்மத்த வேணும்னாலும் பண்ணிக்கோன்னு! நான் ரொம்ப தயங்கனேன். கல்யாணம் பண்ணாலும் எத்தனை நாளுக்கு உன்னை ஏமாத்த முடியும்னு பயந்தேன். அவருக்கு வேண்டியது ஊரறிய ஒரு கல்யாணம். அதுக்கு அப்புறம் நாம பிரிஞ்சா கூட உன் கேரக்டர தப்பா பேசி, என் மகன் அவன் பொண்டாட்டியால வாழ்க்கையையே வெறுத்து தனிமரமாகிட்டான்னு கதை பரப்பி அவர் கௌரவம் அழியாம காப்பாத்திப்பாரு சண்மு! இத அவரே என் கிட்ட சொன்னாரு”

“அப்படியும் நான் ஒத்துக்கல! அதனால..அதனால…” ரொம்பவே தயங்கினான் ப்ரதாப். கண்ணனையும் தயக்கமாக ஒரு பார்வைப் பார்த்தான்.

“என்ன ப்ரது? என் கிட்ட என்ன சொல்லாம மறைச்ச? ஏன் இப்படி முழிக்கற?”

“அது வந்து பேபி…”

(உயிர் போகும்…)

 

(இந்த எபி இன்னும் முடியல! டைப் பண்ண முடியாம பொங்கல் களைப்பு கண்ண கட்டுது! முழுசா நாளைக்குப் போடலாம்னு நெனைச்சேன். ஆனா நீங்களாம் காத்திருக்கறதுனால மனசு வரல. நாளைக்கு மீதிய டைப் பண்ணி தரேன். இதுக்கு மேல போர்ஸ் பண்ணி டைப் பண்ணா கதை சரியா வராது டியர்ஸ். ஓரளவு கதை ஓட்டத்தைத் தெளிவு படுத்திட்டேன். இன்னும் லூஸ் எண்ட்லாம் டை அப் பண்ணனும். அவ்வளவுதான்! போன எபில ஜட்ஜ் பண்ணாதிங்கன்னு ஏன் சொன்னென்னா, இன்னிக்கு எபிய நீங்க படிக்கனும்னு தான். இந்த எபி படிச்சதும் உங்க மனநிலை எப்படி இருக்கு? இன்னும் கண்ணன் அண்ட் ப்ரதாப் மேல கோபம் இருக்கா? ஷேர் பண்ணிக்குங்க உங்க ஓபினியன! ப்ளேஷ்பேக் முடியற வரைக்கும் அன்று மட்டும்தான் வரும். அதுக்குப் பிறகுதான் இன்று வரும். அப்போத்தான் ப்ளோ சரியா வரும் டியர்ஸ். குட் நைட் அண்ட் ஹேப்பி மாட்டு பொங்கல் டியரிஸ்)