காதல் சன்யாசி 10

மங்களகரமான மணமேடை அலங்காரம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு இப்போது தான் முடிந்து இருந்தது.

தமிழ்ச்செல்வியின் உடலும் விழிகளும் மிகவும் சோர்ந்திருந்தன. நான்கு நாட்களாக சரியான உறக்கமில்லாதது தான் காரணம் என்று நினைத்தவள் சிறிது நேரம் ஓய்வெடுத்தால் சரியாகிவிடும் என்று படுத்துக் கொண்டாள்.

‘ஒரு திருமணத்திற்கு எத்தனை ஏற்பாடுகள் செய்ய வேண்டி உள்ளது. மண்டபம், அலங்காரம், வரவேற்பு, கச்சேரி, விருந்து, உபசரிப்பு… இன்னும் பல. அலைச்சல் வேறு’ என்று யோசித்தவள்,

‘நிவேதா மேடம் அப்புறம் சாருமதி மேடம் இட்ட வேலையை அப்படியே செஞ்சேன் அவ்வளவு தான். நானும் பெரிசா ஒண்ணும் செய்யல. ஆனா, அலைச்சலும் வேலை பளுவும் தான் கொஞ்சம் அதிகம்’

‘திருமணத்திற்கான வேலைகளை ஒப்பிடும்போது கம்பெனி வேலைகள் எவ்வளவோ தேவலை’ என்று எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போதே அவள் விழிகள் அயர்ந்தன.

சிறிது நேரத்திற்கெல்லாம் அவள் அலைபேசி சிணுங்க, அலற்றி கண் விழித்தாள். மறுமுனையில் சாருமதியின் குரல் கேட்டது.

“ஹலோ எஸ் மேம்”

“பைப் லைன் உடைஞ்சு தண்ணீ வீணாகுதாம். நீ என்னன்னு போய் பார்த்து அதை சரி செய்யற வேலைய பாரு”

“ஓகே மேடம்” என்று சோர்வாக பதில் தந்தாள்.

“வித் இன் ஆஃப்ன் ஹவர் ல அது கிளியர் ஆகி இருக்கணும்” என்ற கட்டளையோடு இணைப்பை துண்டித்தாள் சாருமதி.

தமிழ்ச்செல்விக்கு அப்படியே ஆத்திரமாக வந்தது.

‘இங்க பைப் லைன் லீக் ஆனா கூட நான் தான் போகணுமா? இந்த அர்த்த ராத்திரி குளிர்ல என்னால மாடிக்கு எல்லாம் போக முடியாது சாமி!’ என்று புலம்பிய படி மறுபடி படுக்கையில் விழுந்தாள் அவள்.

அந்த இரவு பொழுதில் மாடியில் பனிப்பொழிவு சற்று அதிகமாக தான் தோன்றியது.

அணிந்திருந்த வெப்ப கன ஆடைக்கு உள்ளேயும் பனிகாற்று ஊடுறுவ, சற்று உடலை குறுக்கிக் கொண்டவனாய், தன்னவளின் வரவை எதிர்பார்த்து காத்து நின்றான் ராகுல் கிருஷ்ணன்.

சற்று நேரத்தில் அவள் காலடி ஓசை காதில் விழ, அவன் முகம் மலர்ந்தது. குளிர் அவனை விட்டு பறந்து ஓடியது.

காலடி சத்தம் அருகில் வர, திருட்டு தனமாய் சுவர் தடுப்பில் மறைந்து நின்று கொண்டவன், அந்த அரை இருளில் தன்னை கடந்து சென்றவளின் கை பிடித்து தன் பக்கமாய் இழுத்து, லாவகமாய் அவளை வளைத்து அணைக்க முயன்றவன்…! தீயை தொட்டவன் போல, பதறியடித்து விலகி நின்றான்.

அந்த அரை நொடியில் தமிழ்ச்செல்வி பதறி துடிதுடித்து போனாள். தடதடத்த இதய துடிப்புடன் உடல் நடுங்க, வியர்த்து நின்றாள்.

ராகுல் தர்ம சங்கடமாக, “சாரி சாரி தமிழ்! நான் நிவின்னு நினச்சு உன்ன…” அவளிடம் பதறி மன்னிப்பு கேட்டு நின்றான்.

தமிழ் ஆத்திரம் தாங்காமல் தன் கைப்பையால் அவனை சில அடிகள் விளாசி அடித்து ஓய்ந்தாள் அவள்.

“முட்டாள், நிவேதா மேடமுக்கும் எனக்கும் வித்தியாசம் கூட தெரியாதாடா பக்கி” என்று அவனை திட்டி தீர்த்தாள்.

ராகுல், செய்ய கூடாததை செய்துவிட்ட குற்றவுணர்வில் அவள் முன் தலை குனிந்து நின்றிருந்தான்.

அவள் மனதின் பதற்றம் சற்று குறையவே, தன் முன் தலை தாழ்ந்து நின்றிருந்தவனை கவனித்தாள்.

ஏனோ தன் நண்பனை சந்தேகிக்க, அவள் மனம் ஒப்பவில்லை.

ராகுல் இத்தனை கீழ்த்தரமான புத்தி கொண்டவன் இல்லை என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

ராகுல், “சாரி தமிழ்” மறுபடியும் அவளிடம் பாவமாய் மன்னிப்பு வேண்டினான்.

தமிழ்ச்செல்வி வெறுப்போடு அவனை முறைத்தவளாய், “உன்னோட அவசர புத்தியையும் விளையாட்டு தனத்தையும் எப்ப தான் விடபோறியோ தெரியல. நாளைக்கு உனக்கு கல்யாணம் டா. உன்ன நம்பி ஒருத்தி வர போறா. உன் குடும்ப பொறுப்பும் அதிகமாகும். ஆனா இன்னும் நீ எதை பத்தியும் கவலபடாம இப்படி சில்லியா பிஹேவ் பண்றது உனக்கே தப்பா தெரியல” என்று அவனை கோபமாய் கடிந்து விட்டு நகர்ந்தாள்.

மாடியில் சிறிது தூரத்திற்கு பிறகு ஒளியின்றி இருள் சூழ்ந்து இருந்தது. தமிழ் தன் மொபைல் டார்சை சுட்டி விட்டு உடைந்த பைப்பை தேடலானாள்.

இருளில் அவள் என்ன தேடுகிறாள் என்பது புரியாமல் அவளிடம் கேட்கவும் துணிவின்றி அங்கேயே அவளை பார்த்தபடி நின்றிருந்தான் அவன்.

அங்கே எங்கும் உடைப்பு இருப்பதாக தெரியவில்லை. சோர்வுடன் பின்புறம் செல்ல, அவள் பாதங்களில் தண்ணீர் சில்லிட்டது.

அங்கே இருந்த பல தண்ணீர் பைப்புகளில் ஒன்றில் மட்டும் சிறிதளவே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகமாக வீணாகி கொண்டிருந்தது.

எட்ட நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராகுலை அருகே அழைத்து, மொபைலில் வெளிச்சம் காட்டுமாறு பணித்தாள்.

அவன் மறுப்பேதும் சொல்லாமல் அவள் சொன்னதை செய்ய, தண்ணீர் வால்வை அடைத்து விட்டு, பைப்பின் உடைந்த பகுதியில் நன்றாக சுற்றி டேப்பை ஒட்டினாள்.

மறுபடி தண்ணீர் வால்வை திறந்து விட, இப்போது நீர் கசிவது நின்று விட்டதை கவனித்து, சற்று தோய்வுடன் முன்னே நடந்தாள்.

அவளின் பார்வை இருண்டு, தலை கிறுகிறுக்க, சுவற்றில் கை ஊன்றி தன்னை சமாளித்து நிற்க முயற்சித்தாள்.

ராகுல், “என்னாச்சு தமிழ்?” என்று கேட்டு அவளிடம் வர, அவள் நிற்க முடியாமல் கீழே அமர்ந்து விட்டாள்.

ராகுல், “நானும் தான் பார்த்துட்டு இருக்கேன், இந்த ஒரு வாரமா நிற்க கூட நேரமில்லாம வேலை வேலைன்னு அலைஞ்சிட்டு இருக்க. என் மாமியாரும் இருந்த இடத்தில இருந்தே ஆர்டர் போடுறாங்க. இப்படி ஓய்வில்லாம வேலை செஞ்சா உடம்பு கெட்டு தான் போகும்” வழக்கமான ராகுலாய் படபடவென சற்று ஆதங்கமாக பேசினான் அவன்.

“அது என்னோட வேலை டா. நாளைக்கு நீ ஆர்டர் போட்டா கூட நான் செஞ்சாகணும். நாளையிலிருந்து நீயும் என்னோட பாஸ் தானே” என்று தமிழ் பதில் சொல்லி புன்னகைக்க முயன்றாள். அவளின் கண்களும் உடலும் சற்று ஓய்வுக்காக வேண்டின.

“ஹோய், எப்பவுமே நான் உனக்கு ஃபிரண்ட் மட்டும் தான். இந்த பைப்ப சரி செய்ய கூட இந்த ராத்திரியில நீ தான் வரணுமா என்ன?”

“மண்டபத்து மேனேஜர்க்கு ஃபோன் பண்ணேன் டா, ‘இந்த ராத்திரியில யாரும் வர மாட்டாங்க. சின்ன லீக்கேஜ்ஜா இருந்தா, நீங்களே சரி செஞ்சுடுங்க’ன்னு சொல்லிட்டார். காலையில தண்ணி பிரச்சனை வர கூடாதுன்னு தான் நானே வர வேண்டியதா போச்சு” என்று அவள் விளக்கம் தந்தாள்.

அவள் நிலை அவனுக்கு சற்று பரிதாபமாக கூட தோன்றியது.

நிவேதா அறையை விட்டு வெளியே வர, சாருமதி எதிரே வந்து நின்றாள்.

“இன்னும் தூங்காம என்ன செய்யற நிவி?” என்று திகைப்போடு கேட்க,

“இல்ல மாம், தூக்கம் வரல, அதான் வெளிய…” எதையோ உளறி கொட்டினாள் அவள்.

மகளின் தோளை பற்றி அறைக்குள் அழைத்து வந்தவள், “கல்யாண பொண்ணு இப்படி வெளிய போக கூடாதுன்னு சொல்வாங்க. இன்னைக்கு நானும் உனக்கு துணையா படுத்துக்கிறேன் வா” என்றதும் நிவேதாவின் முகம் வெளிறியது. அவள் செய்வதறியாது விழித்தாள்.

சாருமதி கதவை தாழிட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்து கொள்ள, நிவேதாவிற்கு வேறு வழி தோன்றவில்லை.

‘என் கிருஷ்ஷ பார்க்கணும்’ என்று அம்மாவிடம் உண்மையை சொல்லவும் முடியாது. எனவே அவளும் அமைதியாக படுத்துக் கொண்டாள்.

அலைபேசி சிணுங்க, அதை எடுத்து பார்த்த ராகுலின் முகம் சுருங்கி போனது.

தமிழ்ச்செல்வி என்ன என்பது போல் பார்க்க, “அம்மா கூட இருக்காங்க. என்னால வர முடியாது’ன்னு நிவி மெசேஜ் அனுப்பி இருக்கா” என்று கவலையாக சொன்னான் அவன்.

தமிழின் நெற்றி சுருங்க, “விடிஞ்சா கல்யாணத்த வச்சுகிட்டு இப்ப மேம்ம பார்க்கணும்னு உனக்கென்ன டா அவசியம்? உன் கிறுக்கு தனத்துக்கு கால நேரம் கூட இல்லயா?” என்று காட்டமாகவே பேசினாள்.

“உனக்கெல்லாம் அது புரியாது தமிழ். அதெல்லாம் ஒரு ஃபீலிங். இதை தான் காதலென்று சொல்வார்கள்!” என்று செந்தமிழில் உருக்கமாக வசனம் பேசினான் அவன்.

“உன்னய எல்லாம்? ச்சே திருத்தவே முடியாது டா. முதல்ல போய் தூங்கற வழிய பாரு” என்று தலையில் அடித்து கொண்டு எழுந்து சென்றாள்.

இனியும் ராகுலுக்கு அங்கு எந்த வேலையும் இல்லை. எனவே அவனும் கீழறங்கி வந்து விட்டான்.

இரவின் நீளத்தை அளந்து கொண்டு, விடியலின் பொக்கிஷத்திற்காக காத்துக் கிடந்தது அவனின் காதல் மனது.

# # #

மத்தளம், நாதஸ்வரம் மங்கல இசை காதுகளை நிறைக்க,

உறவினர்கள், சொந்த பந்தங்கள், நண்பர்கள் என சலசலத்து கொண்டு இருந்தது அந்த திருமண மண்டபம்.

கண்விழிக்க சோம்பிய கதிரவன் பனிமேக வெண்திரையை போர்த்திக் கொண்டு, மலை முகடுகளுக்கிடையில் உறங்கி போயிருந்தான்.

உறக்கத்தோடு மனதையும் பறிகொடுத்து விட்ட நாயகன், பட்டு வேட்டி, சட்டையில் புது மாப்பிள்ளை களையோடு அக்னி குண்டம் முன்பு அமர்ந்திருந்தான்.

புரோகிதர் சொல்லும் புரியாத மந்திரங்களை அரைகுறையாக திருப்பி சொல்லி, தன் காதல் தேவதையை காணும் ஏக்கத்தோடு விழிகளை அலைய விட்டு கொண்டிருந்தான் ராகுல் கிருஷ்ணன்.

உச்சி முதல் பாதம் வரை தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தந்த சிலையென, பார்ப்பவர் கண்களெல்லாம் விரிய,

எட்டவே ராகுலின் விழிகளோடு பரிபாஷை பரிமாறியவளாய் மெல்லடி நோகாமல் எடுத்து வைத்து நடந்து வந்தாள் நிவேதா.

அவளின் கானல் பொழுதுகளில் சேமித்து வைத்த ஆயிரங்கோடி கனவுகள் நினைவாகும் பூரிப்போடு மணமகள் மணவரை நோக்கி வந்தாள்…

ஏனோ திடீரென அந்த இடமே நிசப்தமானது!

அங்கிருந்த அனைவரிடத்திலும் ஏதோ கலவரம் தோன்ற, நிவேதா என்னவென்று கவனிக்க, அடுத்த நொடி அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

அவள் கால்களுக்கு அடியில் பூமி நழுவி செல்ல, காலம் அவள் நினைவுகளை எங்கோ தூர வீசி எறிந்தது!

சட்டென அந்த இடமே நிலைமாறி போனதை கவனித்த ராகுல், ஏதோ விபரீதம் உணர்ந்தவனாய், மணவரையில் இருந்து எழுந்து கீழிறங்கி வந்தான்.

அனைவரின் பார்வையும் சென்ற பக்கம் அவனும் திரும்பி பார்க்க, அந்த நொடியில் அவனும் நடுநடுங்கி தான் போனான்.

தன் கழுத்திலிருந்த கல்யாண மாலையை கழற்றி, அவன் கையில் பற்றி நிற்க, அம்மாலை நழுவி கீழே விழுந்தது.

கூடாது! கூடாது! கூடவே கூடாது! இந்த கூத்து!

இப்படியொரு விதி செய்தவன் மட்டும் அவன் கையில் அப்போது கிடைத்திருந்தால், அவன் கழுத்தை நெறித்து, உயிரை பிரித்தெடுத்து இருப்பான்.

ஆனால், எதுவுமே செய்ய முடியாமல் ஸ்தம்பித்து நின்றான்.

இதுவரை எதையும் பெரிதாக சட்டை செய்யாதவன், அரை நொடியில் இடிந்து போய் நின்றான்.

அங்கே,

திருமண காட்சிகளை ஒளிபரப்ப பொருத்தப்பட்டிருந்த, பெரிய வண்ண திரையில், நேற்று இரவு நிவேதா என்றெண்ணி தமிழ்ச்செல்வியை ராகுல் அணைக்க முயன்ற காட்சி அத்தனை தெளிவாய் திரையில் காட்சியானது.

அவன் அவமானத்திற்கு சாட்சி ஆனது.

ராகுலுக்கு மேலும் எதையும் யோசிக்க முடியாமல் அவன் உணர்வுகள் அதிர்ச்சியோடு நின்றுவிடும் போலானது.

கலவரமாய் நிவேதாவை பார்க்க, கிட்டத்தட்ட அவளும் அவன் அளவு அதிர்ச்சியில் தான் காணப்பட்டாள். இல்லை அதைவிட அதிகமான முரண்பாடான உணர்வுகளின் பேரலை பெருக்கில் அலைப்புற்று கொண்டிருந்தாள் அவள்.

“இவ்வளவு கேவளமானவனா நீ? எங்கள நடுகூடத்தில வச்சு கழுத்தறுத்துட்டியே” தன் ஒரே செல்ல மகளின் ஆசைக்காக மனமின்றி இந்த திருமணத்தை ஏற்று கொண்டவள், இப்போது அத்தனை பேர் முன்னிலையில் ஏற்பட்ட அவமான உணர்வில் கொதித்தவளாய் சாருமதி ராகுலை தூற்ற, அவள் பின்னாலேயே பல குரல்கள் அவனை மோதி தாக்கின.

ராகுலின் மனம் முதற்கட்ட அதிர்விலிருந்து சட்டென விழித்துக் கொண்டது.

செய்யாத தப்பிற்கு அஞ்ச வேண்டிய அவசியமில்லை என்று அவனுக்குள் உறுதி எழுந்தது. உண்மையை சொன்னால் நிவேதா புரிந்து கொள்வாள் என்று நம்பினான் அவன்.

நிவேதா அவனை வேறாய் வெறித்தபடி, இறுகி நின்றிருந்தாள்.

“இது எதுவுமே உண்மை இல்ல நிவி, ப்ளீஸ் என்னை நம்பு. நான் எப்படி? கொஞ்சம் யோசிச்சு பாரு நிவி” ராகுல் அவளுக்கு புரியவைக்க முயன்றான்.

“நீயா இப்படி? என்னை ஏமாத்திட்ட இல்ல. உன்மேல நான் வச்ச காதலை யூஸ் பண்ணி என்னை அடி முட்டாளா ஆக்கிட்ட இல்ல” நிவேதா உதடுகள் நடுங்க அவன்மீது வார்த்தைகளை வீசினாள். தான் குருட்டுதனமாய் ஏமாந்து இருக்கிறோம் என்ற எண்ணமே அவளை கொதிப்படைய செய்தது.

தனக்கு மட்டுமே உரிமையென்று வரித்து கொண்டவனை இன்னொருத்தியுடன் பார்த்துவிட்ட அவள் பெண் மனம் பேதலித்து போயிருந்தது.

“ஐயோ நான் எந்த தப்பும் செய்யல நிவி. அது ஜஸ்ட் ஆக்ஸிடென்ட். புரிஞ்சிக்கோ” வேறுவழி தெரியாமல் குரலை உயர்த்தினான் அவன்.

# # #

“மேடம் மேடம்” உணவு கூடத்தில் கண்காணிப்பில் இருந்த தமிழ்ச்செல்வியிடம் ஒருவன் ஓடி வந்து, “பெரிய பிரச்சனை ஆயிடுச்சு. இனிமே இந்த கல்யாணம் நடக்காது. வேலையெல்லாம் அப்படியே நிறுத்துங்க” என்று சொல்ல அவள் பதற்றமானாள்.

முகூர்த்த நேரத்தில் அங்கு தான் இருப்பது சகுண தடையாகி விடும் என்ற எண்ணத்தில் தான், அவள் முகூர்த்த வேலைகளில் இருந்து விலகியே இருந்தாள்.

அவர்கள் திருமணத்தை பார்க்க வேண்டுமென்ற ஆசை இருந்தாலும், தனக்கு கொடுப்பனை இல்லையென்று அங்கு போகாமல், விருந்திற்கான வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.

ஆனால், இப்போது என்ன பிரச்சனை என்று தெரியாமல் மனம் பதைபதைக்க, வேக நடையோடு மணவரை நோக்கி சென்றாள்.

# # #

“நீ கத்தறதுனால பொய் உண்மை ஆகிடாது. உன்னோட அசிங்கமான அந்தரங்கம் தான் கண்ணுக்கு முன்னாடி வெளிச்சம் காட்டிட்டு இருக்கே” சாருமதி விடாமல் ஆதங்கமாக பேசினாள்.

அவளோடு சேர்ந்து அவனை ஏசிக் கொண்டிருந்த பல குரல்கள் அவன் பொறுமையை விலை பேசிக் கொண்டிருந்தன ஒருபுறம்.

ராகுல் எதற்கும் பதில் சொல்லவில்லை. அவனுக்கு நிவேதாவின் நம்பகமான ஒருசொல் போதுமென தோன்றியது.

“கேவலம் இந்த வீடியோவ பார்த்து என்னை சந்தேக படுறீயா நிவி? நான் அத்தனை கீழ்த்தரமானவன் இல்ல” தன் கண்ணியத்தை தானே உணர்த்தும் நிலைக்கு தள்ளப்பட்டான் அவன்.

“எப்படி நம்பறது? நீ என் பிஏ கூட… ச்சே” நிவேதா கசப்பாக பேச,

“தப்பா பேசற நிவேதா. நான் அவ்வளவு கேவலமானவனா என்ன? கொஞ்சம் யோசிச்சு பேசு” அவளின் குற்றச்சாட்டினை தாங்கிக்கொள்ள முடியாமல், ராகுல் எதிர்த்து வாதாடினான்.

மகேஷ் பதட்டமாக அவன் அருகில் வந்து, “ராகுல் தமிழ் டா!” என்று சொல்ல, ராகுல் அதிர்ச்சியுடன் திரும்பினான். அவன் நிலை மேலும் இக்கட்டானது.

தன்மீது மோதிய பார்வைகளுக்கும், முக சுளிப்பிற்கும் காரணம் விளங்காமல் தமிழ்ச்செல்வி, கூட்டத்தை விலக்கி கொண்டு முன்னே வர, வைசாலியும் ப்ரியாவும் ஓடிவந்து அவளை நிறுத்தினர்.

“தமிழ், நீ ஏன் இங்க வந்த? முதல்ல போலாம் வா” என்று இருவரும் அவளை இழுத்து செல்ல முயல,

“என்னாச்சு வைஷு? ஏதோ பிரச்சனைன்னு…!” என்று பதறி கேட்க, அவள் பார்வையிலும் அந்த வீடியோ காட்சி பட்டது.

அவள் அதிர்ச்சியில் இருகைகளாலும் தன் வாயை பொத்திக்கொண்டு உறைந்தாள். வானமே இடிந்து தன் தலைமேல் வீழ்ந்தது போலானது அவளுக்கு அந்த நொடியில்.

பெண்களை சக்தியின் அவதாரமாய் சொல்கிறோம்.

அத்தனை பெரிய அவமானத்திற்கு பிறகும் அவள் தைரியத்தோடு துணிந்து நின்றதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

உண்மையை கண்டு தான் அஞ்ச வேண்டுமே தவிர. பொய்யை கண்டு அஞ்ச தேவையில்லை. அதோடு அவள் தன் தன்மானத்தை நிரூபிக்க வேண்டிய சூழலில் இருந்தாள்.

தனக்கு ஏற்பட்ட கலங்கத்தோடு அங்கிருந்து ஓடி மறைய அவளின் சுயகௌரவம் இடம் தரவில்லை.

தமிழ்ச்செல்வி ப்ரியாவிடம் இருந்து விலகி நிவேதாவிடம் வந்தவள், “மேம், இது எதுவுமே உண்மை இல்ல, இங்க ஏதோ தப்பா இருக்கு மேம். யாரோ வேணும்னு ப்ளே பண்ற மாதிரி தோணுது. பிளீஸ் மேம் நம்புங்க” அவள் குரலில் கலக்கமும் உறுதியும் கலந்திருந்தன.

நிவேதாவின் பார்வையில் வெறுப்பு மட்டுமே மண்டி கிடந்தது.

“தமிழ், தமிழ்ன்னு அவன் உன்னபத்தி பேசும்போது அது ‘ஃப்ரண்ட்ஷிப்’னு நினைச்சேன். இப்பதான தெரியுது, அது என்ன மாதிரி உறவுன்னு…” என்ற நிவேதாவின் வார்த்தைகள் தீ அம்புகளாய் தமிழ்ச்செல்வியை தாக்கின.

“மேம்… ஆத்திரத்தில அவசரப்பட்டு பேசறிங்க. மத்தவங்கள விடுங்க மேம். எங்கள பத்தி நல்லா தெரிஞ்ச நீங்களே, எங்கள சந்தேகபடறது சரியில்ல மேம்” என்று சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து.

“நீ தான இவனைபத்தி அப்படி இப்படின்னு அளந்துவிட்ட? ரெண்டு பேரும் சேர்ந்து ப்ளான் பண்ணி என் ஃபீலிங்ஸோட விளையாடி இருக்கீங்க இல்ல”

நிவேதாவின் வியாபார மூளைக்குள் இதை மீறிய சிந்தனை தோன்றவில்லை. அவர்கள் இருவரும் தன் வசதி, வாய்ப்புக்காக தன்னை ஏய்க்க முயன்றிருக்கின்றனர் என்ற எண்ணமே அவள் மனதில் மேலோங்கி நின்றது.

அதற்கான காரணமும் அவளை சுற்றியே இருந்தது. இவர்கள் திருமணம் முடிவானது தொட்டு, இவள் எதிர்க்கொள்ளும் கேள்விகள் அனைத்தும் இரு குடும்பங்களின் பொருதார ஏற்றத்தாழ்வை பற்றியதாகவே இருந்தன.

திரும்ப திரும்ப பதில் சொல்லி அவள் சலித்து போயிருந்தாள் அவள்.

“அச்சோ, இல்ல மேம்” அதற்கு மேல் தமிழ்ச்செல்விக்கு பேச வரவில்லை. தொண்டை அடைக்க கேவி நின்றாள்.

“செய்யறதையும் செஞ்சிட்டு, கொஞ்ச கூட வெக்கமில்லாம. நீலி கண்ணீர் வடிக்கிற? புருசன இழந்து அனாதையா நிக்கிறியேன்னு பாவப்பட்டு வேலை கொடுத்தா, எங்களுக்கே துரோகம் செய்யறியா டீ நீ?”

சாருமதி ஆவேசமாக அவளை அடிக்க கையோங்க, ராகுல் அவள் குறுக்கே வந்து பார்வையால் எச்சரித்து நின்றான். சாருமதியின் ஓங்கிய கை தானாய் கீழிறங்கியது.

அவர்களின் நிலைமை மேலும் களேபரமானது.

பெண் வீட்டார் கண்டபடி பேச, மாப்பிள்ளை வீட்டார் இணையாக பதில் பேச என்று நிலை மேலும் மோசமானது.

அந்த கலவரத்தை பொறுத்து கொள்ள முடியாமல், அவர்கள் பேசும் கொச்சை வார்த்தைகளை சகித்துக் கொள்ள முடியாமல், ராகுல், “போதும் நிறுத்துங்க…” என்று உரக்க கத்தினான்.

அந்த அகன்ற கூடமே ஒருமுறை அதிர்ந்தது போலானது.

ஒன்றுமில்லாத சின்ன விசயம். முழுதாக இரு நொடிகள் கூட கடக்காத அசம்பாவிதம். இதற்கு இவர்களின் இத்தனை கற்பனை நீட்சியை அவனால் ஒத்து கொள்ளவே முடியவில்லை.

“நீ வீணா எங்கள சந்தேக படற நிவேதா. கேவலம் இந்த வீடியோவ மட்டும் வச்சு… எனக்கு ஒரேயொரு வாய்ப்பு கொடு” ராகுல் நம்பிக்கையோடு கேட்க,

நிவேதா அவன் சொன்னதை பற்றி யோசிக்க முயன்றாள்.

‘தங்கள் மீது தப்பில்லை என்று நிரூபிக்க, ஒரு சிறு துருப்பாவது கிடைக்காதா?’ என்று ராகுலின் மனம் பரிதவித்து கொண்டிருந்தது.

# # #

காதல்காரன் வருவான்…

error: Content is protected !!