KS 16
KS 16
காதல் சன்யாசி 16
நாட்கள் தன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன.
நிவேதாவின் மன போராட்டம் இப்போது அவள் சுய கட்டுபாட்டுக்குள் வந்திருந்தது.
நடந்தவை எதையும் மறக்கும் வலிமை அவள் மனதிற்கு இல்லாமல் போனது நிஜம். எனவே அவற்றை பற்றிய நினைவுகளை எழாமல் தடுக்க முயன்றாள்.
இரவும் பகலும் தன்னை கம்பெனி வேலைகளில் அழுத்திக் கொண்டாள். தனது தொழிற்சாலையிலும் ஓட்டல் நிர்வாகத்திலும் பிறகு செய்யலாம் என ஒத்தி வைத்திருந்த திட்டங்கள் அனைத்தையும் உடனே அமலாக்கினாள்.
அவளின் வேகம் மற்றவர்களை திகைக்க வைத்தது.
எப்போதும் போல சளைக்காத தன்னம்பிக்கையோடு தன் கம்பெனி வேலைகளில் மும்முரமானாள்.
ராகுலின் நினைவுகளை பின்னுக்கு தள்ளி விட்டு, இரவும் பகலும் வேலை பற்றிய சிந்தனைகளையே முன்னிருத்தி செயலாற்றலானாள். அவளை சூழ்ந்திருந்த பொறுப்புகளும் அவளை முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டன.
பார்வதி தமிழ்ச்செல்வியை மன நிறைவோடு ஏற்றுக் கொண்டார். அவளிடம் எப்போதும் போல பாசத்தையும் பரிவையும் அதிகாரமாகவே காட்டி கொண்டிருந்தார் அவர்.
தன் வாழ்வில் ஏற்பட்ட விபரீதங்களைப் பற்றி ராகுல் கவலை கொண்டவனாக காட்டி கொள்ளவே இல்லை. எப்போதும் போல மாறாத குறுஞ்சிரிப்பை தன் இதழில் படரவிட்டபடி சுற்றி வந்தான்.
வங்கி பணிகள், வீட்டு பொறுப்புகள், அம்மா, மனைவி என அவன் புது வாழ்க்கைக்குள் அழகாய் தன்னை பொருத்திக் கொண்டான்.
ஆனால், தமிழ்ச்செல்வியால் மட்டும் எதையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை! ஏற்று கொள்ளவும் முடியவில்லை!
நீங்காத பரிதவிப்புடனேயே ஒவ்வொரு நாட்களையும் கடத்திக் கொண்டு இருந்தாள்.
திருமணத்திற்கு பிறகு, அவள் தோற்றத்தில் பெருத்த மாற்றம் ஏற்பட்டிருந்தது. ஆனால், அவள் உள்ளம் அதே இறுக்கத்துடன் சிறைப்பட்டிருந்தது.
அந்த வீட்டில் முழுமையாக ஒன்றவும் முடியாமல் விலகவும் இயலாமல் பரிதவித்துக் கொண்டிருந்தாள்.
அவ்வப்போது, ‘எல்லா சரியாயிடும் தமிழ், நீ வீணா கவலை படாதே’ என்ற ராகுலின் சமாதானங்களை ஏற்று அனைத்தும் சீராகி விடும் என்ற நம்பிக்கையில் மனதை செலுத்த முயன்றாள்.
இதற்கிடையே தன் பாதையில் விழுந்த வேலி முட்களை அகற்ற வேண்டிய அவசியம் ராகுலுக்கு வந்திருந்தது.
# # #
காவல் நிலையத்திற்குள் வந்த ராகுல் கிருஷ்ணனின் பார்வை அந்த இடத்தை ஒருமுறை அலசி விட்டு, அங்கே சிறை கம்பிகளுக்கு பின்னால் நிலைத்தது.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையில் கூண்டில் அடைப்பட்ட புலிபோல உறுமிக் கொண்டிருந்தான் கோதண்டராமன். அவனும் ராகுலை பார்த்து விட அவன் கண்கள் இடுங்கின.
தன் வழக்கறிஞரின் ஆலோசனை படி, வங்கியில் தான் பெற்ற கடன் முழு தொகையையும், வட்டி மற்றும் கூட்டு வட்டி சேர்த்து ஒன்றுக்கு இரண்டு மடங்காக கட்டி, தன் தோல் தொழிற்சாலையை மீட்டுக் கொண்டான்.
அத்தனை வேகமாக செயல்பட்டு பத்து நாட்களில் தோல் தொழிற்சாலையை திறந்திருந்தான் அவன்.
அந்த நிம்மதியை கூட அனுபவிக்க முடியாமல் ராகுலின் பேரில் ஆத்திரம் கொந்தளித்து கொண்டிருந்தது உள்ளுக்குள்.
அவனை ஏதாவது செய்தே தீர வேண்டும் என்ற முடிவோடு அவன் திட்டம் வகுக்க, அவன் யோசனை முடிவடையும் முன்பே ராகுல் அவனுக்கு குழி பரித்திருந்தான்.
வங்கி மேலாளரின் கடமையை செய்ய விடாமல் தடுத்தது, அவரை மிரட்டியது, கொலை முயற்சி போன்ற பிரிவுகளின் கீழ் கோதண்டராமன் மீது வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டான்.
வங்கியில் ராகுலை மிட்டியபோது அங்கே சிசிடிவி கேமராவில் பதிவானது. மற்றும் அவன் பேசிய அலைப்பேசி உரையாடல்களின் பதிவு போன்றவற்றை சாட்சியங்களாக ராகுல் தரப்பில் அளிக்கப்பட்டு இருக்க,
கோதண்டராமனின் பண பலமும் செல்வாக்கும் பயன்படுத்தியும் அவனால் தப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது.
ராகுல் அவனிடம் ஏளன பார்வை வீசிவிட்டு காவல் ஆய்வாளரை சந்திக்க, அவர் இவனை யோசனையுடன் அமர சொன்னார்.
“கோதண்டராமன் கேஸ் சம்பந்தமா என்னை வர சொல்லி இருந்தீங்க இன்ஸ்பெக்டர்”
“எஸ் மிஸ்டர் ராகுல் கிருஷ்ணா, இந்த ஃபைல்ல சைன் பண்ணுங்க” அந்த கோப்பில் உள்ள தகவல்களை சரிபார்த்து அவன் கையெழுத்திட, அந்த காவல் அதிகாரியின் பார்வை இவன் முகத்திலேயே கலவரமாய் நிலைத்திருந்தது.
‘யார் இவன்? பார்க்க சாதாரணமா தெரியிறான். ஆனா, பெரிய பெரிய தலைங்க எல்லாம் இவனை குறிவச்சு இருக்காங்க! இவனுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை?
இதுல இந்த எச்ச பீஸு கோதண்டம் வேற இவன் கிட்ட வாலாட்டி வச்சிருக்கான்’
ராகுல் கையெழுத்து இட்டு கொடுக்க, “இந்த கோதண்டம் மேல முன்னயே நிறைய கேஸ் இருக்கு சார், என்ன? இத்தனை நாளா எங்க கையில சிக்காம இருந்தான். இப்ப நல்லாவே மாட்டிகிட்டான். அந்த கேஸ் எல்லாத்தையும் சேர்த்து தூசு தட்டி இருக்கேன். இனி இவனுக்கு ஜென்மத்துக்கும் ஜெயில் வாசம் தான்”
“உங்க நேர்மையும் தைரியத்தையும் பார்த்து பெருமையா இருக்கு சார்” என்று அவர் வெளிப்படையாக பாராட்ட புன்னகையை தந்து விடைப்பெற்றான்.
“என்ன தம்பீ, என்னை கண்டுக்காம போறீங்க?” கோதண்டம் குரல் கொடுக்க, ராகுல் இன்ஸ்பெக்டரை பார்த்தான். அவர் அனுமதியாக தலையசைக்க,
“உங்களை நல்லபடியா கண்டுகிட்டு, கவனிச்சிட்டு தான் ண்ணே கிளம்பறேன்” பதில் தந்தபடி எதிரில் வந்து நின்றான்.
“என்ன இருந்தாலும் படிச்சவங்க இல்ல அதான் உங்க புத்திய காட்டிட்டீங்க”
“என்னை சீண்டறவங்கள மன்னிச்சு விடுற பழக்கம் எனக்கு கிடையாது கொதண்டராமன். அதோட, சும்மாவே முன்ன என்னை முடிக்க லாரி எல்லாம் ரெடி பண்ணீங்க. இப்ப உங்களை கோர்ட் வரைக்கும் இழுத்து வட்டியும் முதலுமா வசூல் பண்ணி இருக்கேன்.
அடுத்த பிளான் உங்களது என்னன்னு எனக்கு தெரியாதா? அதான் நான் முந்திகிட்டேன்” என்றான் அலட்டல் இல்லாமல்.
கோதண்டம் முகம் விகாரமாக இறுகியது. “என்னை சீண்டனவங்களை சும்மா விட்டு எனக்கும் பழக்கம் இல்ல தம்பீ.”
“இனிமே பழக்கமாயிடும், நீங்க என்னை சந்திக்கிறது இதுவே கடைசி முறையா இருக்கும்” ராகுல் தெளிவாக சொல்ல, அவன் வாய்விட்டு சிரித்தான்.
“நூத்துல ஒரு வார்த்தை சரியா சொல்லிட்டிங்க தம்பி, நாம விளையாடுன ஆடுபுலி ஆட்டத்தில புலி நீங்க தான் ஒத்துக்கிறேன். ஆனா நீங்க இன்னும் ஜெயிக்கல, இப்ப சிங்கத்து பார்வையில நீங்க மாட்டி இருக்கீங்க, அதுல இருந்து உங்களால தப்பிக்க முடியாது. உங்கள நான் பார்க்கிறது இதுதான் கடைசி” என்று மீண்டும் சிரித்தான்.
“என்ன உளர்ற நீ?”
“இப்ப மார்கெட்ல உன் தலைக்கு செம்ம ரேட்டு பா, பெரிய பெரிய இடத்துல எல்லாம் கைவச்சிருக்க போல, கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ தம்பி” கோதண்டம் குரூரத்தோடு சொல்ல, ராகுல் சிந்தனையுடனே வீட்டிற்குள் வந்தான்.
அங்கே,
தமிழ்ச்செல்வி நேரம் மறந்து மடி கணினியில் தேடலில் மூழ்கி கிடக்க, அவள் பின்னால் வந்து கணினி திரையை நோட்டம் விட்டவன்,
சில நிமிடங்களில் முகம் மாறி போனான்.
“ஏன் டி? உனக்கு கொஞ்ச கூட அறிவே கிடையாதா?” திடீரென தன் பின்னால் குரல் கேட்க, அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
“இந்த ஊர்ல வேலையே இல்லாத மாதிரி, பெங்களூர், புதுச்சேரின்னு வெளியூரா பார்த்து வேலை தேடிட்டு இருக்க! யாரையும் தெரியாத ஊர்ல தனியா போய் எப்படி கஷ்டபடுவேனு கூட யோசிக்க மாட்டியா?” அவன் படபட பேச்சில் அவள் மேலிருந்த அக்கரையும் வெளிப்பட,
“உனக்கு நான் இன்னும் பாரமா இருக்க விரும்பல டா, அதான்!” என்றாள் தயக்கமாய்.
“நான் தான் உனக்கு வேலை ஏற்பாடு பண்றேன்னு சொல்லி இருக்கேன் இல்ல. மறுபடியும் முட்டாள் தனமா எதுவும் செஞ்சு வைக்காத” என்று அழுத்தி சொல்லி விட்டு நகர்ந்தான்.
அவர்களை கவனித்த பார்வதிக்கு ஏதோ உறுத்தலாக தோன்றியது.
கோதண்டம் சொன்னதை ராகுல் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தன்னை யார் குறிவைக்க போகிறார்கள் என்று அசட்டையாக விட்டு விட்டான்.
தனக்கு பழக்கமான காவல்துறை நண்பர் ஒருவரிடம் இந்த விசயத்தைப் பற்றி மேலோட்டமாக சொல்லி வைத்தான் அவ்வளவு தான்.
அவன் சற்று முயன்று தேடி இருந்தால், அவனை சூழ்ந்திருக்கும் ஆபத்துக்களை கண்டறிந்திருக்க முடியும். வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று அசட்டையாக விட்டிருந்தான்.
# # #
இன்று விடுமுறை நாள்.
தொலைக்காட்சி சேனலை மாற்றி மாற்றி பார்த்து சலித்தவனாய் அதை அணைத்து விட்டு, ராகுல் தமிழ்ச்செல்வியை தேடி வர,
சமையலறையில் அவள் சமைத்து கொண்டிருந்தாள்.
“நான் ஏதாவது ஹெல்ப் பண்ணவா, தமிழ்?” என்று கேட்டவனை திரும்பி பார்க்காமல் அடுப்பில் காய் பிரட்டியபடி,
“ஏன்? சார்க்கு இன்னைக்கு வேற வேலை எதுவும் இல்லையா?” கிண்டலாகவே கேட்டாள்.
“ப்ச் போரடிக்குது தமிழ். நான் வேணா இந்த காயை அரிஞ்சு தரவா?” என்று அங்கு கழுவி வைக்கப்பட்டிருந்த வெண்டைக்காயை எடுத்து அரியலானான்.
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. தன் சமையலில் கவனமாயிருந்தாள்.
ராகுலின் பார்வை அவள் முகத்தில் நிலைத்தது.
முன்னிற்கு இப்போதெல்லாம் புதிதாய் தோன்றினாள் அவன் மனைவி.
பாதி உடைந்த நிலா நெற்றி! சிறு மொட்டாய் நெத்தி பொட்டு! சற்றே நீலம் பூத்த கண்கள்! அளவான நாசி! மென்மையான கன்னங்கள்! சாயமேற்றாத செவ்விதழ்கள்! வெண் சங்காய் வழிந்த கழுத்து! …! அதற்கு கீழும் அவன் பார்வை இறங்க, சட்டென திரும்பி நின்று கொண்டான்.
‘ச்சே நான் என்ன இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிட்டேன்?’ என்று தன்னையே கடிந்து கொண்டான்.
கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேல் அவளுடன் பழகி வருகிறான். அப்போதெல்லாம் தோழி என்பதை தாண்டி வேறெந்த எண்ணமும் அவன் மனதில் உருவானதில்லை. ப்ரியா, வைசாலி போல தான் தமிழும் அவனுக்கு.
ஆனால், இப்போதெல்லாம் இவளிடம் தன் மனம் தடுமாறக் காரணம்?
‘நான் சூட்டிய மாங்கல்யமா? அதென்ன மஞ்சள் கயிறா? இல்லை, மந்திர கயிறா?’ அவனை அவனே கேட்டுக் கொண்டான்.
எஞ்சிய நினைவுகளாய், எங்கோ இருந்து நிவேதாவின் எண்ணங்கள் அவன் மனதை சூழ, சற்றே குழம்பி போனவன், காயோடு சேர்த்து விரலையும் வெட்டிக் கொள்ள,
“ஸ்ஸ்ப்ப் ஆஅ… ஷிட்” என்று வலியில் அவன் கையை உதறினான்.
அவன் விரலில் இரத்தத்தை பார்த்து பதறி போனவள் உடனே, காயம்பட்ட விரலை தன் வாயில் வைத்து கொண்டாள்! இரத்தம் நிற்பதற்கான முதல் உதவியாய்!
முன்பு அடிக்கடி சமைக்கிறேன் பேர்வழி என்று சுமதி இப்படி விரலை வெட்டி கொள்ள, அவளுக்கு எப்போதும் இவளின் முதல் உதவி இதுதான். உமிழ் நீரின் கிருமிநாசினி தன்மை எப்படியும் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.
அந்த பழக்கம் இப்போதும் வந்துவிட்டது அவளுக்கு.
ராகுலுக்கு சில்லென்றானது! அவன் வலியெல்லாம் மறந்து போக, அவன் விழிகளும் இதழ்களும் விரிந்தன.
அவன் முக மாற்றத்தை கவனித்தவள் சட்டென அவன் விரலை விடுவித்தாள்.
“என் காயத்துக்கு இப்படியொரு வைத்தியம் கிடைக்கும்னு, எனக்கு தெரியாம போச்சே” அவன் வார்த்தைகள் குறும்பாய் வெளிப்பட்டன.
அவள் அவன் பேச்சை கண்டு கொள்ளாமல், தண்ணீரில் காயம்பட்ட விரலை கழுவினாள்.
“முழுசா நாலு வெண்டக்காய் கூட அரியல. அதுக்குள்ள விரல வெட்டி கிட்ட. தெரியாத வேலை எல்லாம் உனக்கு எதுக்கு டா?” அவள் கடிதலில் அக்கறையும் கலந்திருக்க, அவன் இளித்து கொண்டே நின்றான்.
முதலுதவி பெட்டியை எடுத்து வந்து, காயத்தில் மருந்து வைத்து கட்டு போட்டு இவள் நிமிர, அவன் கண்கள் அவளையே வெறித்தனவாய், “என்னோட வலிக்கு நீ ஏன் துடிச்சு போற தமிழ்?” அவன் கேள்வி அவள் நெஞ்சில் தைப்பதாய்.
அவன் கையை வேகமாக தட்டிவிட்டு திரும்ப, அவள் குறுக்கே வந்தவன், “நீ தான் டி, என் ரத்தம் குடிக்கிற ராட்சசி” என்று அவளை கண்ணாடி முன் நிறுத்தினான்.
அவள் புரியாமல் பார்க்க, அவள் இதழில் ஒற்றை துளியாய் இரத்தகறை படிந்திருந்தது அவன் காயத்திலிருந்து.
அவன் கேலி சிரிப்போடு, ஒற்றை விரலால் அவள் இதழை அழுந்த துடைத்து விட, அந்த சிறு தீண்டல் அவள் உடலில் மின்சாரம் பாய்ச்சுவதாய்! உடல் நடுக்கம் கண்டு அடங்க, இமைகள் இறுக மூடி திறந்தன.
அவள் முகம் வெளுத்து ஓரடி பின்வாங்கினாள்.
காதல்காரன் அரை நொடியில் அவளின் சஞ்சலத்தை உணர்ந்து கொண்டான்.
அவன் கண்களில் குறும்புத்தனம் பளிச்சிட, வேண்டுமென்றே அவளை நோக்கி முன்னேறினான்.
முதன் முதலாய் அவனை பார்த்து அவளுக்குள் பயம் பரவியது. அவள் பூவுடல் மெலிதாய் நடுங்க, பின்னோக்கி நகர்ந்தவள், இரண்டடிகளில் சுவர் தடுக்க பதைபதைத்து சுவரோடு ஒட்டி தேங்கினாள்.
தன்னை நோக்கி நெருங்கியவனை பார்த்து அவளின் பங்கைய விழிகள் மிரண்டன.
“என்னாச்சு தமிழ்? ஏன், என்னை பார்த்து இவ்வளோ பயப்படற?” அவன் வேண்டுமென்றே ரகசியமாய் கேட்க,
அவன் வெதுவெதுப்பான மூச்சு காற்று அவள் கன்னம் உரசிட, நெருப்பு கனல்களை அவள் இதய குழிக்குள் கொட்டியதை போலிருந்தது.
அவனை உந்தி தள்ளிவிட்டு அவள் மிரண்டு ஓட, “எஏய் நான் ஒண்ணும் பூதமில்ல டீ!” அவள் கையை பிடித்து நிறுத்த முயன்றவன் கையில் அவள் சேலை முந்தானை தான் பிடிபட்டது.
கடிவாளமிட்ட குதிரையாய் திடுக்கிட்டு நின்றாள் அவள்.
விளையாட்டு வினையாவது அவனுக்கு புரிய சட்டென்று தன் பிடியை விலக்கிக் கொண்டான்.
தமிழ் தடதடத்த இதயத்தோடு சமையற் கட்டுக்குள் புகுந்து கொண்டாள்.
அவளின் தவிப்பை இன்னும் கொஞ்ச நேரம் ரசிக்க தோன்றியது அவனுக்கு.
மலர மறுக்கும்
நறு மொட்டாய் அவள்!
மோதி திறக்கும்
குளிர் தென்றலாய் அவன்!
படபடக்கும் அவள் இதயத்தின் பதைபதைப்பு குறையவே இல்லை.
‘ச்சே எனக்கு என்னாச்சு அவன் முன்னால போய்! ச்சீ ச்சீ இதுதான் என் மன உறுதியா?’
தன் நிலை எண்ணி மனங்கசந்து கலங்கினாள்.
ராகுல் மெதுவாய் சமையலறைக்குள் நுழைய, கலவரமாய் திரும்பினாள்.
அவனை என்னவென்று குற்றம் சாடுவாள் அவள்? புத்தி கெட்டு அவன் முன் தடுமாறி நின்றவள், இவளாய் இருக்கும் போது! அதை நினைக்க அவளுக்கே அருவெறுப்பாய் தோன்றியது.
தீராத கலக்கத்துடனே மீதமிருந்த சமையல் வேலையை முடிக்க முயன்றாள்.
ராகுல் நினைவு வந்தவனாக, மீதமிருந்த காயை கையில் எடுக்க, தமிழ் சட்டென அதை பறித்து கொண்டாள்.
“தமிழ் நான் உதவி செய்ய தான் நினைச்சேன்” என்று அவன் இயல்பாக சொல்ல, அவன் முன் கைகூப்பியவள், “நீ செஞ்ச உதவி எல்லாம் போதும். முதல்ல இங்கிருந்து போ” என்று விரட்டினாள்.
ராகுல் அங்கிருந்து நகர்வதாக இல்லை. அவள் தவிப்பை ரசித்தபடி சமையல் மேடையில் எகிறி உட்கார்ந்து கொண்டான்.
சமையலை முடித்து விட்டு இங்கிருந்து போனால் போதுமென்று இருந்தது தமிழுக்கு.
அவள் மீது உரிமையாய் பார்வையை ஓட விட்டவன், “ஏய் இப்பெல்லாம் நீ ரொம்ப அழகா தெரியற டீ!” எப்போதும் போல தன் மனதில் பட்டதை அவன் அப்படியே சொல்லி வைக்க, அவள் அதிர்ச்சியில் மூச்சை இழுத்து பிடித்து கொண்டாள்.
அவன் பார்வை, பேச்சு, நடத்தை எல்லாமே அவள் இதயத்தை அடைத்து கொள்வதாய் இருந்தது.
‘இத்தனையும் சகித்துக் கொண்டு என் இதயம் வெடித்து சிதறாமல் இருக்கிறதே!’ என்று தன்னையே நொந்து கொண்டாள்.
ராகுல் கிருஷ்ணாவையும் குற்றம் சொல்ல முடியாது. ‘தயக்கமென்ன எனக்கு? இவள் என்னவளாய் இருக்கும் போது’ என்ற உரிமையில் திடமாக இருந்தான்.
தன்னவள் மீது பதிந்த பார்வையை விலக்காதவனாய் மருகினான்.
அவன் பார்வையில் ஏதோ வேறாக பட, அவன் முகம் மாறியது. பொத்தென கீழே இறங்கியவன், “தமிழ், அது என்ன? உன் முதுகுல காயம் மாதிரி!” ராகுல் சந்தேகமாய் வினவ, விதிர்த்து திரும்பினாள் அவள்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல” அவசரமாய் அடுப்பை அணைத்து விட்டு, அவள் செல்ல முயல,
அவளை தடுத்து பிடித்து நிறுத்தி, அவள் காயத்தை கவனித்தான்.
அவள் பின் இடையில் தெரிந்தவை, கொடூரமான காயத்தின் மறையாத தழும்புகள்!
பார்த்த அவனுக்கு நன்றாகவே புரிந்தது, அந்த தழும்புகள் அவள் முதுகு முழுவதும் இருக்கும் என்று!
தமிழ் கோபமாக அவனை பிடித்து தள்ளினாள். “ஏன் டா இப்படி புத்தி கெட்டு நடந்துக்கிற?”
அவள் கோபத்தை அவன் கண்டு கொள்ளவில்லை.
“எப்படி உனக்கு இவ்வளவு அடிப்பட்டது?”
“…”
“தழும்பை பார்த்தா இவ்வளவு மோசமா… எப்ப அடிபட்டுச்சு?”
“…”
“ஏதாவது சொல்லி தொலை டீ, எங்க விழுந்து தொலைச்ச?” அவள் மீது கொண்ட அனுதாபத்தில் சற்று கடுமையாகவே கேட்டான்.
தமிழ்ச்செல்வி பதிலின்றி விக்கித்து நின்றாள்.
முரட்டு மாடி படிகளில் உருண்டு விழ, இறைந்து கிடந்த உடைந்த கண்ணாடி துண்டுகள் இரக்கமின்றி அவள் உடலை கீறி பதம் பார்க்க, அந்த வலிகள்… இப்போதும் அவள் நெஞ்சில் வேதனை தர, அவள் கண்கள் கலங்கின.
எப்போதும் தமிழ் இடை தெரியாமல் சேலையை வாகாய் உடுத்தி இருப்பாள். எனவே இந்த தழும்புகள் வெளியே தெரிய வாய்ப்பில்லை. சற்று முன் ராகுல் செய்த சின்ன அத்துமீறலால் அந்த தழும்புகள் வெளியே தன் கோர முகம் காட்டி விட்டன.
“என்ன டி நடந்தது? அழாம சொல்லேன்” ராகுல் மனந்தாங்காமல் கேட்க,
“மாடி படில தவ…றி விழுந்துட்டேன்!”
ராகுலின் நெற்றி சுருங்க, “மாடிப்படியில விழுந்ததுக்கு, முதுகெல்லாம் இவ்வளவு காயம் படுமா?” என்று சந்தேகமாக கேட்டான்.
“அங்க… கண்ணாடி துண்டு கிழிச்சு…!”
“மாடியில கண்ணாடி துண்டு எப்படி வந்தது?”
அவளிடம் பதிலில்லை. வேகமாக அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டாள்.
அவள் மனமும் உடலும் அதிகமாய் நடுங்க ஆரம்பித்திருந்தன.
முடிந்து போன பயங்கரம்… அவள் கை தவறி போன பொக்கிஷம்… அவளை இப்போதும் பயப்பட வைப்பதாய்!
அவளின் கருப்பு பக்கங்கள் என்னவென்று அறிய முடியாமல் ராகுல் குழம்பி நின்றான்.
வீட்டுக்குள் நுழையும் போதே பார்வதிக்கு ஏதோ வெறுமையாக தோன்றியது.
வீட்டில் எப்போதும் இருக்கும் வெறுமை தான் என்றாலும், தமிழ்ச்செல்வி வந்த பிறகு அந்த வீட்டில் ஓர் உயிரோட்டம் வந்திருந்தது.
அனைத்து வேலைகளையும் மருமகளே இழுத்து போட்டு செய்வதால், அக்கம் பக்கத்து தன் வயது தோழியருடன் பேசி காலம் கழிப்பது இப்போதெல்லாம் பார்வதிக்கு வழக்கமாகி போயிருந்தது.
ராகுல் தொலைக்காட்சி முன் அமர்ந்திருக்க, “சாப்பிட்டிங்களா?” விசாரித்தவாறே உள்ளே வந்தார்.
“இன்னும் இல்ல ம்மா” என்ற ராகுல் பதிலை கேட்டு கடிகாரத்தை பார்க்க, மணி இரண்டை தாண்டி காட்டியது.
“தமிழ் எங்க?” அவர் கேள்விக்கு அறை பக்கம் கை காட்டிவிட்டு திரையில் கவனம் பதித்தான் அவன்.
பார்வதி அறையை திறந்து உள்ளே வர, உறங்கி போயிருந்த தமிழ்ச்செல்வியை பார்த்து அவரது பொறுமை பறந்தது.
‘மூணு மணி ஆக போகுது புருசனுக்கு சாப்பாடு கூட போடாம, இந்த நேரத்தில என்ன தூக்கம் வேண்டி கிடக்கு’ என்று கோபமாக, “தமிழ் எழுந்திரு” அவள் கையை பிடித்து உலுக்கியவர் சட்டென தன் கையை எடுத்து கொண்டார்.
“கிருஷ்ணா… இங்க வாடா” பார்வதியின் பதற்றமான குரல் கேட்டு, அவன் சலிப்பாக எழுந்து வந்தான்.
“தமிழுக்கு உடம்பு நெருப்பா கொதிக்குது டா. காய்ச்சல் போல” என்றார்.
“இருக்காது ம்மா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நல்லா தான இருந்தா” என்று அவள் நெற்றியில் கைவைத்து பார்க்க, அவள் உடலின் உயர் வெப்பநிலை அவன் கையையும் சுட்டது.
# # #
காதல்காரன் வருவான்…