காஃபி டேபிளில் காலை நீட்டிப் போட்டு சோஃபாவில் சாய்ந்திருந்தாள் மித்ரமதி. வலது கால்ப் பெருவிரல் விண் விண்ணென்று வலித்தது.

நேரம் காலை எட்டு முப்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மனம் லேசாகச் சோர்ந்து போயிருக்க பார்கவியின் ப்ரோக்ராம்ற்காகக் காத்திருந்தாள் இளையவள்.

நேற்றைய பொழுது ஏதேதோ நடந்து போனது. இப்போது நினைத்துப் பார்த்த போதும் ஆச்சரியமாக இருந்தது பெண்ணுக்கு. கார்த்திக்கிடம் இப்படியொரு அனுசரணையை அவள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

நீரின் ஸ்பரிசம் சதா அரிப்பதால் கொஞ்சம் கூராகிப் போயிருந்த கல் ஒன்று இவள் பெருவிரல் நகத்தைக் கிழித்திருந்தது. ரத்தம் கட்டுப்பட மறுக்கவே நேராக இவளை அவன் தங்கியிருந்த ஹோட்டலுக்கே அழைத்துச் சென்றிருந்தான் கார்த்திக்.
ஹோட்டலில் இருந்த டாக்டரை வரவழைத்து விரலுக்குப் பெரிதாக பான்டேஜ் போட்டு என்று இன்னும் ஒரு மணித்தியாலம் அதிலேயே கழிந்து போயிருந்தது.

‘மித்ரா! வீட்டுக்குத் தகவல் சொல்லுங்க. இல்லைன்னா அம்மா பயப்படப் போறாங்க.’ அவன் ஞாபகப் படுத்திய பின்பு தான் அந்த எண்ணமே தோன்றியது மித்ரமதிக்கு.

டாக்டர் கொடுத்த பெயின் கில்லரையும் தாண்டி வலி தெரிந்தது. அவள் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்த போது கார்த்திக்கிற்கு வலித்தது.

அவன் ரூமிலேயே சிறிது நேரம் ஓய்வெடுக்க வைத்தவன் அதன் பிறகு தான் அவளை வீட்டுக்கு அழைத்துச் சென்றான். இம்முறை ட்ரைவரை அனுப்பாமல் அவனே காரை ஓட்டிச் சென்றான். லண்டன் சாலைகள் ஓரளவு இப்போது அவனுக்குப் பரிட்சயம் ஆகி இருந்தது.

மித்ரமதியை எங்கேயும் நடப்பதற்கு அவன் அனுமதிக்கவே இல்லை. அவள் சங்கடத்தோடு மறுத்த போதும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளவும் இல்லை.

‘ரட்சகன்’ சினிமாவில் வரும் நாகர்ஜுனா வைப் போல மாறி இருந்தான்!

அந்த அகால வேளையில் வீட்டினுள்ளே வருவது அத்தனை உசிதமில்லை என்பதால் நன்றி சொன்ன அவள் அம்மாவிற்கு நாளை வருவதாக வாக்களித்து விட்டுப் போய் விட்டான்.

“உண்டு களைத்து ஓய்வாக இருக்கும் என் அன்பார்ந்த நேயர்களுக்கு பார்கவியின் மதிய நேர வணக்கங்கள்.” நிகழ்ச்சி ஆரம்பிக்கவும் கவனம் கலைந்தது மித்ரமதிக்கு.

“நிகழ்ச்சியின் ஆரம்பத்துலேயே ஒரு சூப்பரான பாடல் வருது. அதுக்கு முன்னாடி சின்னதா ஒரு சிந்தனை நேயர்களே. பார்க்கக் கண்களைக் கொடுத்த ஆண்டவன் தான் பார்க்காம இருக்க இமைகளையும் குடுத்திருக்கான். இரண்டையும் சரியான நேரத்துல புத்திசாலித்தனமாப் பயன்படுத்தக் கத்துக்கணும். நேயர்களே… இனி உங்களுக்காக ஒரு இனிமையான பாடல், இது நூற்றியிரண்டு புள்ளி ஐந்து, தென்றல் எஃப் எம்.”

பரபரப்பாகப் பெண் பேசி முடிக்க ‘வேதம் புதிது’ திரைப்படத்திலிருந்து ‘கண்ணுக்குள் நூறு நிலவா… இது ஒரு கனவா…’ பாடல் ஒலிபரப்பாகியது.

அந்தப் பேச்சும், அதிலிருக்கும் துள்ளலும், அவள் பொறுக்கி எடுத்துச் சொல்லும் சிந்தனைத் துளிகளும் மித்ரமதியின் முகத்தில் லேசான புன்முறுவலை வரவழைத்திருந்தன.

வலியையும் மறந்து புன்னகைக்கும் மகளைப் பார்த்த தேவகி லேசாகத் தலையை ஆட்டியபடி நகர்ந்து விட்டார். பார்கவியின் பேச்சை மகள் எவ்வளவு தூரம் ரசிப்பாள் என்பது அவருக்குத் தெரிந்த விடயம் தானே!

கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கவும் அம்மாவை அழைத்தாள் மகள். எழுந்து நடக்கும் அளவிற்கு அவள் கால் ஒத்துழைக்கவில்லை.

“அம்மா! யாருன்னு பாருங்க. இந்நேரத்துக்கு யாரு வர்றாங்க? ஏதாவது ரிப்பேருக்கு சொல்லி இருந்தீங்களா?”

“இல்லையே ம்மா.” சொன்னபடியே தேவகி கதவைத் திறக்க, எதிரே கார்த்திக் நின்றிருந்தான். கையில் ஒரு கத்தை மஞ்சள் ரோஜா மலர்கள்.

“அம்மா யாரும்மா?” உள்ளே ஹாலிலிருந்து மகள் குரல் கொடுக்கத் திரும்பிப் பார்த்த தேவகி,

“இதோ வர்றேன்… வாங்க கார்த்திக்.” மகளுக்கு பதில் சொல்லிவிட்டு எதிரே நின்றிருந்தவனை வரவேற்றார்.

“குட் மார்னிங் ஆன்ட்டி.”

“குட் மார்னிங் கார்த்திக். உள்ளே வாங்க.”

“மித்ரா க்கு இப்போ எப்படி இருக்கு ஆன்ட்டி? பெட்டரா ஃபீல் பண்ணுறாங்களா?”

“கொஞ்சம் பெயின் இருக்கு போல ப்பா. நான் தான் இன்னைக்கு ஆஃபீஸ் போகத் தேவையில்லை ன்னு சொன்னேன்.”

“யா… ஷ்யூர் ஆன்ட்டி. நோ ப்ராப்ளம். நல்லா ரெஸ்ட் எடுக்கச் சொல்லுங்க.” பேசிய படியே இருவரும் ஹாலுக்கு வர, கண்மூடிப் பாடலில் லயித்திருந்த மித்ரமதி கண்களைத் திறந்தாள்.

நிச்சயம் வருவான் என்று தெரியும். ஆனாலும் இத்தனை காலையில் எதிர்பார்த்திருக்கவில்லை.

தூக்கிக் கட்டிய கூந்தல், இள வயலட் நிற சாட்டின் நைட் ட்ரெஸ் எனக் கால் நீட்டிக் கண்மூடி அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்த போது கார்த்திக் சட்டென்று நின்றுவிட்டான். ஒரு ஃபோன் பண்ணாமல் வந்தது தவறோ என்று அப்போது தோன்றியது.

“வாங்க சார்!” அரக்கப் பரக்க எழுந்திருக்கப் போனவளைக் கை நீட்டித் தடுத்தான் கார்த்திக்.

“உட்காருங்க மித்ரமதி.”

“பரவாயில்லை சார், நீங்க உக்காருங்க.”

“இப்போ எப்படி இருக்கு?”

“லைட்டாப் பெயின் இருக்குத் தான்.”

“ஓ… அப்போ நல்ல டாக்டராப் பார்க்கலாமா?”

“இல்லையில்லை… அந்த அளவுக்கெல்லாம் ஒன்னும் இல்லை சார். ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா ஓகே ன்னு நினைக்கிறேன்.” மித்ரமதி சொல்லி முடிக்கவும் பாடல் முடிந்து பார்கவி ஆரம்பிக்கவும் சரியாக இருந்தது.

“வாழ்க்கையில சில நேரங்கள்ல நம்மை அறியாமலேயே சில தவிர்க்க முடியாத தவறுகளை செய்திடுறோம் நேயர்களே.”
பேச்சை நிறுத்திவிட்டு கார்த்திக்கும் ரேடியோவை நோக்கித் திரும்பினான்.

“அதென்னடா அது… தவிர்க்க முடியாத தவறுகள்னு யோசிக்கிறீங்களா? நானே சொல்லிடுறேன். காரணமே இல்லாம சில மனிதர்கள் மேல சில நேரம் அன்பு வெச்சிடுவோம். இது தான் நாம பண்ணுற மிகப்பெரிய தப்புங்க. அடுத்து எல்லார்க்கிட்டயும் உண்மையா இருக்கணும்னு நினைப்போம். இது அடுத்தது. கடைசியா ஒன்னு இருக்குதுங்க. அது என்னன்னு கேக்குறீங்களா? மத்தவங்களும் நம்மைப் போலத்தான் இருப்பாங்கன்னு நினைக்கிறது.”

பார்கவியின் பேச்சை மித்ரமதி ஆழ்ந்து கேட்டபடி இருக்க கார்த்திக்கின் முகத்தில் விசித்திரமான ஒரு புன்னகை வந்து போனது.

“இந்தத் தவறுகளை எல்லாம் பண்ணக்கூடாது ன்னு நமக்கு நல்லாவே தெரியும் நேயர்களே! இருந்தாலும் நம்மை அறியாமலேயே அதைத் திரும்பத் திரும்பச் செய்வோம். யாரை எந்த இடத்துல வெக்கணுமோ அந்த இடத்தில வெக்கணும் நேயர்களே. இல்லைன்னாக் கடைசியில நாம இருக்க வேண்டிய இடத்துல இருக்காமப் போயிடுவோம். இந்த நல்ல செய்தியோட அடுத்ததா ஒரு சூப்பர் பாடல் வருது. ‘உன்னால் முடியும் தம்பி’ லிருந்து ‘இதழில் கதை எழுதும் நேரமிது’ பாடலைக் கேட்டு ரசியுங்க. இது நூற்றியிரண்டு புள்ளி ஐந்து தென்றல் எஃப் எம்.”

பாடல் ஒலிபரப்பாக ஆரம்பிக்க மித்ரமதியின் முகத்தில் வலியையும் மறந்த மலர்ச்சி ஒன்று தெரிந்தது.

“பார்கவி!” என்றான் கார்த்திக் இயல்பாக.

“சார்! உங்களுக்கு பார்கவியைத் தெரியுமா?” அத்தனை ஆச்சரியம் பெண்ணின் குரலில்.

“ம்… இந்தப் ப்ரோக்ராம் கேட்டிருக்கேன் மித்ரா.”

“ஓ… ரொம்ப ஸ்மார்ட் இல்லை சார்? அடேங்கப்பா! எனக்கு இவங்க வாய்ஸ் கேட்டாலே கவலை எல்லாம் மறந்து போயிடும். அடுத்த வாட்டி இந்தியா போகும் போது இவங்களை கண்டிப்பா மீட் பண்ணணும் சார்.”

“இன்னும் ஒன் மன்த் ல என்னோட சித்தி பையன் கல்யாணம் வருது. நான் இந்தியா போறேன். நீங்களும் வாங்களேன். உங்க பார்கவியைப் பார்க்கலாம்.” ஒரு விஷமப் புன்னகையோடு சொன்னான் கார்த்திக்.

“இல்லை சார். அம்மா… அதுக்கெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க. அவங்க போகும் போது தான் நானும் போவேன்.” தயங்கிய படி அவள் சொல்ல அவன் முகத்தில் ஒரு புன்னகை மட்டுமே தோன்றியது. ஆனால் அந்தக் கண்கள் அவளை ஆழ்ந்து பார்த்தது.
‘இது இன்னும் எத்தனை நாளைக்கு?’ என்பது போல. மித்ரமதி கொஞ்சம் தடுமாறிப் போனாள்.
* * * * * * *

இரவு மௌனத்தைத் தத்தெடுத்திருந்தது. ஆங்காங்கே சென்ற ஒன்றிரண்டு வாகனங்களைத் தவிர லண்டன் வீதிகளில் ஒரு அசாத்திய அமைதி நிலவியது.

ஜன்னல் ஓரமாக அந்த நேரத்தின் அழகை ரசித்தபடி நின்றிருந்தான் கார்த்திக்.

மனதுக்குள் ஏதோ சொல்லமுடியாத சுமை ஒன்று உட்கார்ந்து இருந்தாற் போல ஓர் உணர்வு. அதன் காரணம் மித்ரமதி என்று நிச்சயமாக அவனுக்குத் தெரியும்.

தாடையைத் தடவிக் கொண்டான். அவளில்லாத ஆஃபீஸுக்கு இன்று அவனுக்கும் போகப் பிடிக்கவில்லை. இருந்தாலும் போயிருந்தான். அத்தனை பேரும் அங்கிருக்க ஏதோ ஒரு வெறுமை அவன் முகத்தில் வந்து மோதியது தான் மிச்சம்.
‘நான் இத்தனை நாளும் இப்படி இல்லையே! எத்தனை பெண்களைக் கடந்திருக்கிறேன். நான் பார்க்காத அழகிகளா? இந்தச் சின்னப் பெண் ஏன் என்னை இத்தனை தொல்லை பண்ணுகிறாள்?’

நெற்றிப் பொட்டைத் தடவிய படி திரும்பினான் கார்த்திக். அவள் நேற்றிரவு கால் நீட்டி அமர்ந்திருந்த அவன் கட்டில் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டிச் சிரித்தது.

டாக்டரை ரூமிற்குத் தான் வரவழைத்திருந்தான். பேன்டேஜ் போடும் போது அவள் விரலிலிருந்து வழிந்த ரத்தம் அந்தப் படுக்கையின் வெள்ளை விரிப்பைச் சிறிது நிறம் மாற்றி இருந்தது.

இன்று காலையில் ரூமைக் க்ளீன் செய்ய வந்த ஊழியரை அந்த விரிப்பில் கைவைக்க அவன் அனுமதிக்கவில்லை. ஏனோ அவள் வாசம் அவனுக்குத் துணை இருந்தாற் போல ஒரு பிரமை.

விசித்திரமாகப் பார்த்துவிட்டுப் போன ஊழியரை அவன் கணக்கிலேயே கொள்ளவில்லை.

நான் இங்கு வந்த நோக்கம் என்ன?‌ இப்போது செய்து கொண்டிருப்பது என்ன? மனசாட்சியை மறுத்து ஒதுக்கியவன் அவள் சாய்ந்திருந்த படுக்கையில் சரிந்தான்.

அவன் மனமே அவனோடு மல்லுக்கு நின்றது.
****

சென்னை விமான நிலையம்.

கார்த்திக் ஹரிகிருஷ்ணா அவசர அவசரமாகத் தனக்கு வாழ்த்துச் சொன்ன அந்த விமான மங்கைக்கு ஒரு புன்னகையைச் சிந்தி விட்டு வெளியே வந்தான்.

வெயில் கொளுத்தியது.‌ சித்தி வீட்டின் கார் வந்திருக்க ஏறிக் கொண்டான்.

மித்ரமதியைப் பார்த்து ஒரு மாதம் ஆகிவிட்டது. அன்றைக்கு அவளைப் பார்த்து விட்டு மறுநாள் அமெரிக்கா கிளம்பியவன் தான். அங்கே இங்கே நகர முடியாத படி அவனை வேலை இழுத்துக் கொண்டது.

நந்தகுமாரின் திருமணத்தையும் சித்தி மும்முரமாகத் திட்டமிட்டதால் இவனுக்கு அந்த வேலையும் சேர்ந்து கொண்டது.

அம்மாவை இரண்டு வாரங்களுக்கு முன்பாகவே இந்தியா அனுப்பி இருந்தார்கள் அப்பாவும் மகனும். சித்திக்குத் துணையாக இருக்கும் என்பதோடு இதுபோன்ற குடும்ப விஷயங்களில் கலந்து கொள்வது என்பது இதுநாள் வரை அம்மாவிற்கும் எட்டாக் கனியாகத்தான் இருந்திருக்கிறது.

அப்பாவிடம் அனைத்துப் பொறுப்பையும் ஒப்படைத்து விட்டு இதோ கிளம்பி வந்து விட்டான் கார்த்திக். மித்ரா க்கு மட்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தான். வழமை போல அவள் அனுப்பும் கணக்கு வழக்குகள் அவன் மெயிலுக்கு வந்து விடும் என்பதால் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை.

காரில் கண் மூடி அமர்ந்திருந்தான் கார்த்திக். பச்சை ஷிஃபானையும் தாண்டிப் பளபளத்த அவள் தேகம் இப்போதும் அவன் சிந்தையைக் கலைத்தது.

இந்த முறை வலுக்கட்டாயமாக அவனைச் சந்திக்க முயன்ற அராபியன் குதிரையை திட்டவட்டமாக மார்க் இடம் மறுத்திருந்தான் கார்த்திக்.

ஏனோ இப்போதெல்லாம் அப்படியொரு துணை அவனுக்குத் தேவைப்படவில்லை. மஞ்சள் ரோஜாப் பூங்கொத்தை அன்று அவன் நீட்டிய போது மருண்டு விழித்தபடி வாங்கிக் கொண்ட அந்த முகம் அவனைச் சதா இம்சித்தது.

தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான் கார்த்திக். எனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா?

கார் சித்தியின் வீட்டை நெருங்கி இருக்க தன்னை நிதானித்துக் கொண்டான். கல்யாணக் களை வீட்டை நெருங்கும் போதே தெரிந்தது.

அண்ணா வருகிறான் என்பதால் பார்கவி யையும் அப்போது வீட்டுக்கு வரவழைத்திருந்தான் நந்தகுமார். இதுவரை கார்த்திக் அந்தப் பெண்ணைப் பார்த்தது கிடையாது.

காரின் ஓசை கேட்கவும் சித்தி வாசலுக்கே வந்து வரவேற்றார்.

“நாளைக்குத் தம்பிக்குக் கல்யாணம். அண்ணா இன்னைக்கு வந்து நிக்கிறே. உன்னையெல்லாம்…”

“கோபப் படாத சித்தி. அதான் வந்துட்டேன் இல்லை. ஆமா… நந்து எங்க?”

“உனக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கான்.”

“பார்கவி வந்திருக்காங்களா?”

“ம்… நந்து கூட பேசிக்கிட்டு இருக்கா.”

“அது சரி! என்னைக் காரணம் காட்டி ரெண்டு பேரும் மீட்டிங் ஆ?” சிரித்தபடியே கார்த்திக் சொல்ல லதாவும் சேர்ந்து சிரித்தார்.

“அண்ணா!” கார்த்திக்கின் குரல் கேட்கவும் சோஃபாவில் இருந்த நந்தகுமார் சட்டென்று எழுந்தான்.

“ஹேய் நந்து…” தம்பியைத் தடுமாற வைக்காமல் வேகமாகப் போய் அவனை ஆரத் தழுவிக் கொண்டான் பெரியவன்.

“ஹாய் பார்கவி.” நந்தகுமாரின் பக்கத்தில் நிற்கும் இந்தப் பெண்ணிண் குரலை அங்கொருத்தி ரசித்துக் கேட்பது அத்தனை களைப்பிலும் ஞாபகம் வந்தது அவனுக்கு.

“ஹாய் ண்ணா.”

“பார்கவி… என்னோட கார்த்திக் அண்ணா. எனக்காக என்ன வேணும்னாலும் பண்ணுவான். என்னோட கைட், வெல்விஷர் எப்படி வேணும்னாலும் வெச்சுக்கலாம்.” நந்தகுமார் உணர்ச்சி வசப்பட்டு அறிமுகப்படுத்த பார்கவி அழகாகப் புன்னகைத்தாள்.
“டேய்! போதும் நிறுத்துடா.” தம்பியைத் தோளோடு இன்னும் சேர்த்து இறுக்கிக் கொண்டான் கார்த்திக்.

“நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வா ண்ணா. நிறைய வேலை இருக்கு உனக்கு. கோயில்ல வச்சு சிம்பிளா தாலி கட்டிக்கிட்டாப் போதும்னு எவ்வளவோ சொன்னேன். அப்பா ஒத்துக்கலை. ஈவ்னிங் பெரிய ஃபங்ஷன் ரெடி பண்ணி இருக்கார். உன்னை எல்லா இடத்துக்கும் கூட்டிட்டுப் போகச் சொன்னார்.”

“சரிடா. குளிச்சிட்டு வந்தர்றேன். அதுவரைக்கும் நீங்க பேசிக்கிட்டு இருங்க.”

“சரிண்ணா.”

மாடியிலிருந்த ரூம் ஒன்றை கார்த்திக்கிற்கு ரெடி பண்ணி இருந்தார் சித்தி. மேலே போனவன் ரூமிற்குள் போகாமல் படிக்கட்டில் நின்றபடி திரும்பிப் பார்த்தான்.

பார்கவி நந்தகுமாரின் கைகளைப் பிடித்தபடி ஏதோ கலகலவென்று பேச நந்தகுமார் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான்.
சூனியமாக இருந்த தம்பியின் கண்களைப் பார்த்த போது அவன் தாடை எலும்பு லேசாக இறுகியது. இருந்தாலும் அவன் மனது அத்தனையையும் மறந்து விட்டு அடுத்த நொடியே பச்சை ஷிஃபானை அவனோடு இணைத்துக் கற்பனை பண்ணியது.
விசித்திரமான அவன் எண்ணத்தின் போக்கு கடந்த ஒரு மாதமாக இந்தக் கூத்தைத் தான் பண்ணுகிறது என்று உணர்ந்தவன் தலையை உலுக்கிக் கொண்டு ரூமிற்குள் போய் விட்டான்.
***

திருமணம் இனிதாக நடைபெற்று முடிந்திருந்தது. சுப முகூர்த்தத்தில் நந்தகுமார் பார்கவியின் கழுத்தில் தாலியைக் கட்டி இருந்தான்.

தாலி கட்டும் போது லேசாகத் தடுமாறிய தம்பியைப் பார்த்த போது கார்த்திக்கிற்கு வலித்தது. சித்தி வெளிப்படையாகவே சத்தமின்றி அழுத போது இன்னும் உடைந்து போனான்.

யாரைக் குற்றம் சொல்ல முடியும்? வாழ்க்கையில் சில தோல்விகளைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இளையவர்கள் செய்யும் பல மடத்தனங்கள் எத்தனை குடும்பங்களை இவ்வாறு பாதிக்கின்றன?

அப்படி என்ன கட்டுக்குள் கொண்டு வர முடியாத சோகம்? இப்போது எல்லாம் சரியாகவில்லையா? எங்கேயோ எப்போதோ கஷ்டத்தைக் கொடுத்த ஆண்டவன், இப்போது சந்தோஷத்தைக் கொடுக்கவில்லையா?

பார்கவியை திரும்பிப் பார்த்தான் கார்த்திக். அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பெண்ணிற்கு சொந்தம் என்று சொல்லிக் கொள்ள அப்பா மட்டும் தான்.

கல்லூரிக் காலத்தில் இருந்தே மகளின் ஆசையை அறிந்தவர் நந்தகுமாரின் நிலையை அறிந்த பின்னும் மறுப்புச் சொல்லவில்லை.

எல்லோருக்குமே பாதியில் போன பார்வை மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கை இருந்ததால், எதையும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை.

ஜோடிப் பொருத்தம் அத்தனை அமோகமாக இருந்தது. பார்கவியே நந்தகுமாரின் அனைத்துத் தேவைகளையும் கவனித்துக் கொண்டாள். பார்க்காதது போல அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

மாலையில் வரவேற்பும் மிக அமோகமாக நடந்தேறியிருந்தது. சித்தப்பாவின் செல்வாக்கும், செல்வமும் தேவையில்லாத பேச்சுக்களை எல்லாம் தவிர்த்திருந்தது.

இரவின் தனிமையில் பால்கனியில் நின்றிருந்த கார்த்திக்கைத் தேடி வந்தான் நந்தகுமார்.

“அண்ணா!”

“வா நந்து.” வீடு பழக்கப்பட்ட இடம் என்பதால் நந்தகுமார் தடுமாறுவது என்பது மிகவும் அரிது.

“என்ன பண்ணுற?”

“சும்மா தான்டா. இன்னைய நாளை அசை போடுறேன்.”

“அண்ணா… உனக்கு எல்லாம் திருப்தியா இருந்துச்சா?”

“மனசு நிறைஞ்சு போச்சுடா.” கார்த்திக்கின் குரல் லேசாகக் கரகரத்தது. நந்தகுமார் தன் அண்ணனைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

“டேய்… டேய்! என்னடா பண்ணுற?”

“எனக்கு நீ முக்கியம் ண்ணா. எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்துப் பார்த்துச் செய்யுறவன் நீ. நீ திருப்தியா இருக்குன்னு சொன்னாத்தான் எனக்கு அது திருப்தி.

“நீ ரொம்ப லக்கிடா நந்து.”

“பார்கவியைச் சொல்லுறயா ண்ணா.”

“ம்… ஆமாடா.”

“நான் தான் நிறைய நாட்களைத் தேவையில்லாம வேஸ்ட் பண்ணிட்டேன் இல்லை ண்ணா?”

“கண்டிப்பா. ஆனா இனிமேலும் அதே தவறைப் பண்ணாத. நீயும் பார்கவியும் இனிச் சந்தோஷமா இருக்கணும் நந்து. உனக்காகவே காத்திருந்த பொண்ணுடா அவ.”

“கண்டிப்பா ண்ணா.”

“லேட் ஆச்சு. நீ போ நந்து. குட் லக் டா.” சொன்னவன் தம்பியை இழுத்து அணைத்துக் கொண்டான்.

லேசாக முகம் சிவந்த போதும் ஒரு புன்னகையோடு நகர்ந்தான் நந்தகுமார்.

ரூம் ஸ்ப்ரேயின் வாசம் இதமாக நாசியைத் தழுவ உள்ளே வந்தான் நந்தகுமார். பார்கவி அவனையே அமைதியாகப் பார்த்திருந்தாள்.

“பாகீ…”

“ம்…” அருகில் வரவில்லை. அவனே வரட்டும் என்று காத்திருந்தாள். கதவைத் தாள் போட்டவன் குரல் வந்த திசையை நோக்கி நடந்து வந்தான்.

அவன் ஒற்றைக் கை அவளை நோக்கி நீள அதைப் பற்றிக் கொண்டாள் பெண்.

“பாகீ…” பற்றிய கரத்தை இழுத்தவன் மனைவியைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டான்.

“நந்தா!”

“ம்…”

“நாளைக்கு முக்கியமான ஹாஸ்பிடல் அப்பாயின்ட்மென்ட் இருக்கு.”

“ஞாபகம் இருக்கு டா. இன்னொரு நாள் வச்சுக்கக் கூடாதா? இன்னைக்குத் தான் கல்யாணமே முடிஞ்சிருக்கு.”

“எந்தக் காரணமும் சொல்லக் கூடாது நந்தா. அப்பா ரொம்பக் கஷ்டப்பட்டு இந்த டாக்டர் கிட்ட எல்லாம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க. கண்டிப்பா போகணும்.”

“அப்பாவும் மகளும் என்னை ஒரு வழி பண்ணாம விட மாட்டீங்க போல.”

“ஆமா.” அவன் குரலில் தெரிந்த மகிழ்ச்சியில் அவளும் சிரித்தாள்.

“கண்ணு ஆறுதலாவே வரட்டும் பாகீ… அப்போ உன்னை ஆசைதீர பார்த்துக்கிறேன். இதுக்கு இப்போ கண்ணு தேவலைடா.” என்றவன் அவள் முகத்தின் வரிவடித்தை விரலால் அளந்து இதழில் நிறுத்தி இருந்தான்.

வானலையில் வாய் ஓயாது பேசும் அந்த இளமங்கை வார்த்தைகள் மறந்து நின்றிருந்தாள்.

அதேவேளை…

ரூமில்… வளர்பிறை அலங்கரித்திருந்த வானை வெறித்திருந்தான் கார்த்திக். மனம் லேசாக அலைபாய்ந்தது. கடந்த ஒரு மாத காலமாகத் தன் மனதுக்குள் நடந்து கொண்டிருக்கும் போராட்டத்திற்கு இன்றோடு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவன் ஃபோனை எடுத்தான்.

இது சரியான முடிவு தானா என்று மனம் ஒரு பக்கம் பெரிய போராட்டமே நடத்தியது.

“ஹலோ, மிஸ்டர் சக்திவேல்?”

“ஸ்பீக்கிங்.” எதிர்முனையில் சக்திவேல்.

“நான் கார்த்திக் பேசுறேன்.”

“ஓ… கார்த்திக். சொல்லுங்க.‌ டக்குன்னு என்னால குரலைக் கண்டுபிடிக்க முடியலை.”

“மிஸ்டர் சக்திவேல்! நான் மித்ரமதியைக் கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்.”

“வாட்!” அதிர்ந்து போனார் சக்திவேல். என்ன இவன்? இத்தனை சுலபமாக இவ்வளவு பெரிய விஷயத்தைச் சொல்கிறான்.

“எதுக்கு இவ்வளவு ஆச்சரியம்?”

“கார்த்திக்… என்ன திடீர்னு இப்படியொரு முடிவு?”

“திடீர்னு எல்லாம் இல்லை. கொஞ்ச நாளாவே தோணினது தான். இது சரியான முடிவு தானான்னு எனக்கே தெரியலை. அதுதான் கொஞ்சம் டைம் எடுத்துக்கிட்டேன்.”

“ஓ… இது மித்ரா க்குத் தெரியுமா?”

“இல்லை… இன்னும் சொல்லலை. அதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசினா சரியா இருக்கும்ன்னு தோணிச்சு. அதான் கூப்பிட்டேன்.”

“ஓ…”

“ஒன்னும் அவசரம் இல்லை. டைம் எடுத்துக்கோங்க. ஆனா பதில் பாஸிட்டிவ்வா இருக்கணும்.”

“கார்த்திக்! இது நான் மட்டும் தனியா முடிவெடுக்கிற விஷயம் கிடையாது.”

“அதனால தான் மிஸ்டர் தினகரையோ திவாகரையோ கூப்பிடாம உங்களைக் கூப்பிட்டிருக்கேன். மித்ரா க்கு உங்க மேல ஒரு தனி மரியாதையே இருக்கு. நீங்க சொன்னா அவ கண்டிப்பா சம்மதிப்பா.”

“மறுக்க வாய்ப்புகள் இருக்குன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அந்த ரிச்சர்ட் அவ்வளவு வழியுறான்.‌ அவ கண்டுக்கவே இல்லையே.”

“ஹா… ஹா… கரெக்ட்! கல்யாணத்துல அவ்வளவு நாட்டமில்லை. எத்தனையோ நல்ல நல்ல மாப்பிள்ளைங்க எல்லாம் வந்திச்சு. பிடி குடுக்கலை.”

“அது எனக்குத் தெரியாது மிஸ்டர் சக்திவேல். நீங்க சம்மதிக்க வைங்க.”

“எப்படி கார்த்திக்?”

“அதுதான் எனக்குத் தெரியாதுன்னு சொல்லுறேனே மிஸ்டர் சக்திவேல்.”

“ம்… ட்ர்ரை பண்ணுறேன்.”

“இந்தப் பேச்சே இங்க வேணாம். சம்மதம் வாங்குங்க. அடுத்த மாசமே கல்யாணத்தை வெச்சுக்கலாம். பை.”
பேசி முடித்தவன் அவர் பதிலைக் கூட எதிர் பார்க்காமல் தொடர்பைத் துண்டித்திருந்தான்.

அவனுக்கு ஒரு விஷயத்தை இப்படி டீல் பண்ணித்தான் பழக்கம். அவன் வேண்டும் என்று நினைத்தால் அது அவனுக்கு வேண்டும். அதில் மாற்றமில்லை.

ஆனால் மித்ரமதி விஷயத்தில் தான் முதல்முதலாகத் தோற்கப் போகிறோம் என்று கார்த்திக் ற்கு அப்போது புரியவில்லை. சக்திவேலிடம் பேசினால் எல்லாம் சரியாக இருக்கும், நடக்கும் என்று தோன்றியது, பேசிவிட்டான். அவ்வளவுதான்.
ஆனால்… தன்னைப் போலவே அவளும் நிறையப் பிடிவாதங்களுக்குச் சொந்தக்காரி என்று கார்த்திக் ற்குத் தெரியாது. குடும்பத்தையும் சரி கம்பெனியையும் சரி இதுநாள் வரை அவள் தனியாகக் கட்டி ஆண்டிருக்கிறாள் என்ற உண்மை கார்த்திக் ற்கு மறந்து போனது.

தன்னைப் போலவே அவளும் ஆளுமை நிறைந்த ஒரு கதாபாத்திரம் தான் என்பது நாயகன் நினைவிலிருந்து நழுவிவிட்டது.
தன் தரப்பில் அனைத்தையும் செவ்வனே செய்து முடித்து விட்டோம் என்ற திருப்தி தோன்ற கட்டிலில் சாய்ந்தான்.
மூடிய விழிகளுக்குள் அந்தப் பச்சை ஷிஃபான் தான் தெரிந்தது. அராபியன் குதிரையை இப்போதெல்லாம் அவன் மறந்தே போனான்.

தான் இத்தனை வருட காலமும் வாழ்ந்த வாழ்க்கை அவனுக்குள் கனவு போல கலைந்து போக, ஏதோ இன்று புதிதாகப் பிறந்தது போல உணர்ந்தான் கார்த்திக்.

தன் வாழ்க்கையில் எத்தனை முக்கியமானதொரு முடிவை எடுத்திருக்கிறோம் என்று நினைத்த போது லேசாக வியர்த்தது அந்த முரடனுக்கு.

தன் சல்லாப வாழ்க்கைக்கு இன்றோடு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும்.

கண்களை இறுக மூடிக் கொண்டான். காலையில் தட்டுத் தடுமாறித் தாலி கட்டிய நந்தகுமார் அவன் கண்களுக்குள் வந்து போனான்.

‘இல்லை… அந்த மித்ரமதி எனக்கு வேண்டும்!’ மனச்சாட்சியைப் புறந்தள்ள வைத்தது நந்தகுமாரின் பார்வையற்ற விழிகள்.
அந்த ராஜ பார்வையில் நொந்து போனவனுக்கு ஒரு ராஜ போதை அப்போது தேவைப்பட்டது.
மனதை வெகுவாகக் கட்டுப் படுத்தியவன் வெளியே வந்தான். இவன் தலையைக் காணவும் சித்தியின் வீட்டு ட்ரைவர் ஓடி வந்தார்.

“சார்…”

“சிட்டியிலேயே இருக்கிற நல்ல ‘பப்’ க்கு காரை விடுங்க அண்ணா.”

“சரி சார்.” ட்ரைவர் குழப்பத்தோடு காரை நகர்த்த பின் சீட்டை முழுதாக ஆக்கிரமித்து அமர்ந்திருந்தான் கார்த்திக்.

‘கார்த்திக் ஹரிகிருஷ்ணா!’

error: Content is protected !!