KS 18
KS 18
காதல் சன்யாசி 18
ராமச்சந்திரன் வீட்டு கூடத்தில் கோபமாக அமர்ந்திருக்க, தந்தையின் வெகுண்ட முகத்தை கவனித்து அருகில் வந்தாள் நிவேதா.
“என்னாச்சு டேட்?”
“எல்லாமே தப்பா நடந்து போச்சு நிவிம்மா!”
“புரியல டேட், எதை பத்தி சொல்றீங்க?”
“அன்னைக்கு கல்யாண மண்டபத்தில நாம பார்த்த எதுவுமே நிஜமில்ல. எல்லாமே திட்டமிட்ட சதி!” அவர் ஆத்திரமாக பேச,
“எனக்கு யாரு சதி செய்ய போறாங்க?” நிவேதா இயல்பாய் புன்னகைக்க,
“உன்னோட அம்மா!”
“மாம்? சும்மா விளையாடதிங்க டேட்” அவள் நம்பாமல் சொல்ல,
“உண்மை தான் சொல்றேன் நிவி” என்றவர், கைப்பேசியில் யாருடனோ பேச, அடுத்த ஐந்து நிமிடங்களில், இரண்டு பேர் ஒருவனை இழுத்து வந்து அவர்கள் முன் நிற்க வைத்தனர்.
“சாரி சர், இவன் வீட்டை காலி பண்ணிட்டு ஊர் ஊரா சுத்திட்டு இருந்தான். அதான் இவன பிடிக்க கொஞ்சம் லேட் ஆயிடுச்சு” என்றான் அதில் ஒருவன். அவர்களின் வியாபார உத்திகளில் உதவும் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்தவன்.
அவர்கள் இழுத்து வந்தவனை நிவேதா உற்று கவனித்தாள். அவன் திருமண போட்டோகிராபர்.
அவன் முகத்தில் தெரிந்த வீக்கமும், அவன் நின்ற நிலையும் அவனுக்கு கிடைத்த அடிகளை நன்றாகவே காட்டியது.
“டேய், அன்னைக்கு என்ன நடந்தது? ஒண்ணு விடாம சொல்லு!” என்ற அதட்டலில் மிரண்டவனாய் எல்லாவற்றையும் அப்படியே சொல்லி விட்டான்.
#
“நான் சொல்றதை எல்லாம் சரியா செஞ்சா, நீ எதிர்பார்க்கறத்துக்கு மேலேயே உனக்கு பணம் கிடைக்கும்” என்று சொன்ன சாருமதி கணிசமான தொகையை அவனிடம் நீட்டினாள்.
அதை கண்கள் விரிய வாங்கி கொண்ட ஃபோட்டோகிராபர், “என்ன மேடம் செய்யணும்?” என்று ஆவலாக கேட்டான்.
சாருமதி, “உடனே மேல் மாடிக்கு போ. இன்னும் கொஞ்ச நேரத்தில ராகுல் அங்க வந்துடுவான். சரியான இடமா பாத்து கேமரா ஃபிக்ஸ் பண்ணி வை. எங்க பிஏவும் அங்க வருவா. அங்க என்ன நடந்தாலும் அது அப்படியே வீடியோவா எனக்கு வேணும்.”
“சரி மேடம். செஞ்சுடலாம். ஒருவேளை இந்த ராத்திரியில அவங்க மேல வரலன்னா?” அவன் சந்தேகம் எழுப்ப,
“என் பொண்ணு ஃபோன்ல பேசினதை நான் கேட்ட வரைக்கும் அவன் நிச்சயமா மாடிக்கு வருவான். சீக்கிரம் போய் சொன்ன வேலைய பாரு. நீ போன உடனே மறக்காம அங்க இருக்க ஏதாவது வாட்டர் பைப்ப உடைச்சு விட்டுடு!” சாருமதி விளக்கமாக சொல்ல, அவன் சரியென்று தலையாட்டி விட்டு விரைந்தான்.
#
“சாருமதி மேடம் சொல்லி தான் எல்லாத்தையும் செஞ்சேன். அந்த வீடியோவ எடிட் பண்ணி, சரியா முகூர்த்த நேரத்தில போடணும்னு கூட அவங்க தான் சொன்னாங்க” என்று அந்த ஃபோட்டோகிராபர் திக்கி திணறி எல்லா உண்மைகளையும் சொல்ல,
கேட்டு நின்ற நிவேதா உள்ளுக்குள் சுக்கு நூறாய் சிதைந்து போனாள்.
‘தன் அம்மாவின் சதியா இது?’ நிவேதாவிற்கு நம்புவது கடினமாக இருந்தது.
‘நான் எந்த தப்பும் செய்யல நிவி… தயவு செஞ்சு என்னை நம்பு. இது எதுவுமே உண்மை இல்ல’ என்று ராகுல் மறுபடி மறுபடி அவளிடம் மன்றாடியது, அவள் மனதில் இப்போது ரண வலியை தர, கலங்கியவளாய் வாய் பொத்தி நின்றாள்.
அப்போதுதான் உள்ளே வந்த சாருமதி, அங்கு ஃபோட்டோகிராபரின் நிலையை பார்த்தவுடன் என்ன நடந்திருக்கும் என்பதை புரிந்து கொண்டாள்.
கணவனின் கோபத்தையும், மகளின் கலக்கத்தையும் கவனித்த படி அருகில் வந்தவள், அந்த ஃபோட்டோகிராபரின் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாள்.
“துப்பு கெட்டவனே, நாலடி வாங்கின உடனே நடந்ததெல்லாம் அப்படியே உளறிட்ட இல்ல. ச்சே போ வெளியே” என்று விரட்ட,
ராமசந்திரனின் தலை அசைப்பில் அவர்கள் மூவரும் அங்கிருந்து வெளியேறினர்.
“உனக்கு மனசாட்சியே கிடையாதா? பெத்த பொண்ணு கல்யாணத்தை நிறுத்தி இருக்கியே” ராமு ஆத்திரமாக கேட்க,
சாருமதி அடங்காத திமிராய், “ஆமா, எல்லாம் நான் தான் செஞ்சேன். வீல் சேர்ல உக்காந்துட்டு நாலு செவத்துக்குள்ள முடங்கி கிடக்கிற உங்களுக்கு என்ன தெரியும், நம்ம ஸ்டேட்டஸ், கௌவரம் என்னன்னு. எவனோ ஒருத்தனை இவ காதலிக்கிறேன்னு சொல்லுவா, நாலு கேள்விய கேட்டுட்டு நீங்களும் சரின்னு சொல்லுவிங்க. நாலு பேருக்கு நடுவுல, அவனை என் மாப்பிள்ளைனு சொல்றதுக்கு, எவ்வளவு அசிங்கப்பட்டேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும்” ஆவேசமாய் பேசினாள்.
ராமு, “அதுக்காக இப்படி தான் கேவளமா சதி திட்டம் போடுவியா?”
“அந்த ராகுலுக்கு அவன் பெரிய பிஸ்தான்னு நினப்பு. எவ்வளவு பணம் வேணுமோ வாங்கிட்டு, நிவிய விட்டு விலகி போயிடுன்னு, கிளி பிள்ளைக்கு சொல்ற மாதிரி சொன்னேன். என் பேச்சை கேக்காம பெருசா காதல், கத்தரிக்காய்னு பேசுனான். அவனோட அந்த காதலை குப்பையில போடணும்னு நினச்சேன். அதான் அப்படி செஞ்சேன்” என்று சாருமதி பற்களை கடித்துக் கொண்டாள்.
நிவேதா முள்ளில் சிக்கிக் கொண்ட மீனாய் துடிதுடித்து போனாள்.
“நீ செஞ்ச காரியத்தால, நிவிக்கும் நம்ம குடும்பத்துக்கும் ஏற்பட்ட அவமானத்த நீ மறந்துட்டு பேசற” அவள் பேச்சில் இவர் ஆத்திரம் மேலும் கூடியது.
“நான் அப்ப நினச்சதே வேற, அத்தனை பேர் முன்னால அவமானபட்டு, ராகுல் தப்பானவன்னு நிவி, அவனை அடிச்சு விரட்டணும்னு நினச்சிருந்தேன். ஆனா, அவன் அந்த பிஏ கழுத்துல தாலிய கட்டி அத்தனை திமிரா அங்கிருந்து போவான்னு நான் நினைக்கவே இல்ல” என்று சாருமதி கைகளை பிசைந்து கொண்டாள்.
சாருமதியின் கொடூரமான எண்ணத்தை நினைத்து நிவேதாவிற்கு அருவெறுப்பாக இருந்தது.
“நிஜம்மாவே நீங்க தான் என் அம்மாவான்னு எனக்கு இப்ப சந்தேகமா இருக்கு. உங்களுக்குள்ள இவ்வளவு குரூரம் இருக்கும்னு நான் நினைச்சு கூட பார்க்கல” நிவேதா கலக்கமும் ஆதங்கமுமாக பேச,
“ஹனி, உன் அம்மாவா நான் இதெல்லாம் உன் நல்லதுக்காக தான் செஞ்சேன். கொஞ்சம் யோசிச்சு பாரு. கண்ணாடி மாளிகைகையில தேவதை போல வளர்ந்த உன்னால, அவனோட குருவி கூடு வீட்டுக்குள்ள ஒருநாள் கூட சந்தோசமா இருந்திருக்க முடியாது” சாருமதி வாதாட,
“அம்மாவா, நீங்களா? அந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா உங்களுக்கு? இனிமே நான் உங்கள அம்மான்னு கூப்பிட்டா, அந்த தூய்மையான சொல் கூட களங்கப்பட்டு போயிடும்!” என்று ஆவேசமாக சொல்லிவிட்டு தன் அறைக்குள் வந்து கதவடைத்து கொண்டவள், விழிகளில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது.
நிவேதா பேசிய பேச்சில் சாருமதி சற்று அதிர்ந்து தான் போனாள். என்ன இருந்தாலும் அவளின் தாய் பாசம் அவள் நெஞ்சை அழுத்த தான் செய்தது.
அவளை வெறுப்போடு பார்த்த ராமு, “உன் இடத்தில வேற யார் இருந்து இருந்தாலும், அவன் தோலை நார்நாரா உரிச்சு தொங்க விட்டிருப்பேன். நீ என் மனைவின்ற ஒரே காரணத்தால உன்ன விடறேன். ஆனா, உனக்கு இந்த ஜென்மத்தில மன்னிப்பு கிடையாது.”
“ஓர் அப்பாவி பொண்ணு மேல இல்லாத பழிய சுமத்தி, தீராத பாவத்தை செஞ்சிருக்க, அதுக்கான கூலி உனக்கு கிடைக்காம போகாது சாரு” என்று ஆதங்கமாக சொல்லிவிட்டு தன் நாற்காலியோடு நகர்ந்தார் ராமச்சந்திரன்.
கணவன், மகள் பேச்சின் வேகம் சாருமதியை அதிகமாக ஒன்றும் பாதிக்கவில்லை. அலட்சியமாக தோளை குலிக்கி விட்டு தன் அறையை நோக்கி நடந்தாள்.
அனலில் இட்ட புழுவாய் நிவேதாவின் உள்ளம் துடித்து கொண்டிருந்தது!
‘நான் உனக்கு துரோகம் செஞ்சிருக்க மாட்டேன்னு, உன் மனசுல இம்மி அளவு கூட என்மேல நம்பிக்கை வரலையா நிவேதா?’
தன்னுடைய சந்தேக வார்த்தைகளால் உடைந்து போன ராகுல், கடைசியாய், எஞ்சிய நம்பிக்கையாய் அவளிடம் கேட்ட கேள்வி, இப்போது அவள் நெஞ்சை குத்தி கிழிப்பதாய்!
அன்றைய நிகழ்வுகள் மீண்டும் அவள் கண்முன் காட்சிகளாய் விரிய, வாய்விட்டு கதறி அழுது விட்டாள் பெண்ணவள் தன் முட்டாள்தனத்தை எண்ணி.
# # #
ஏதோ நிழல் உருவம் நெருங்க, தமிழ்ச்செல்வி திடுக்கிட்டு திரும்பினாள். ராகுல் கிருஷ்ணன் தான்.
ஏனோ இன்று வேறாக தெரிந்தான்!
அவன் தள்ளாடிய நடையும், கலைந்த முடியும், நிலையற்ற பார்வையும் அவளை அதிர செய்தது.
அவள் அருகில் வந்தவன் விகாரமாய் சிரிக்க, துர்நாற்றம் அவள் நாசிக்குள் புகுந்து அவளுக்கு குமட்டலானது.
“கு…கு…குடிச்சிருக்கியா?” தமிழ் வெறுப்பாக கேட்க,
“ம்ம்…” என்று மேலும் கீழுமாக தலையாட்டியபடி அவளை நெருங்கினான்.
அவள் விலகி போக, அவள் கையை வலிக்க பிடித்து கீழே தள்ளினான். அவள் செய்வதறியாது திமிறி, “விடு என்னை… வேணா… என்கிட்ட வராத…” என்று பதறி விலக போராடினாள்.
அவள் சொல்வதை காதில் வாங்கும் நிலையில் அவன் இல்லை. அவளை மிருகமாய் ஆக்கரமித்தான்.
அவன் கைப்பட்ட இடமெல்லாம் அவளுக்கு அருவெறுப்பில் எரிய, அலறி, கதறி, கத்தி படுக்கையில் இருந்து எழுந்து விட்டாள்.
அவளை சுற்றிலும் பெரும் நிசப்தம் சூழ்ந்திருந்தது.
“என்னாச்சு தமிழ்?” ராகுல் அவள் அலறல் கேட்டு உறக்கம் கலைந்து, கண்களைத் துடைத்தபடி கேட்டான்.
தமிழ் அவனை விலகாத பயத்துடன் நிமிர்ந்து பார்க்க,
அந்த நடுங்கும் குளிரிலும் முகமும் உடலும் வியர்த்து போய் பயந்து நடுங்கி இருந்தவளைக் கவனித்து, அவன் கட்டிலில் இருந்து எழுந்து, தரையில் இட்ட படுக்கையில் இருந்தவளிடம் வந்தான்.
அவள் மிரண்ட விழிகளை பார்த்து, “ஏன் தமிழ் இப்படி பயப்படுற? ஏதாவது கெட்ட கனவு கண்டியா?” என்று அவன் கேட்ட பின்பு தான் தமிழுக்கும் தான் கண்டது வெறும் கனவு என்று புரிந்தது. ஆனாலும் கூட அவள் உடலின் நடுக்கம் குறையவில்லை.
“முதல்ல இந்த தண்ணி குடி” என்று டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து அவளிடம் நீட்ட, அதை வாங்கிய அவள் கைகள் உதரின.
அவனே தன் கையால் அவளை தண்ணீரை பருக வைத்தான். இப்போது அவளுக்கு சற்று ஆசுவாசமாக தோன்றியது.
“ம்ஹூம் சாதாரண கனவுக்கா இப்படி பயந்து நடுங்கற, நீயும் உன் தைரியமும்” என்று சலித்து கொண்டு, கட்டிலில் சென்று படுத்துக் கொண்டான்.
தமிழுக்கு உறக்கம் வருவதாக இல்லை. சற்று முன் கண்ட கனவு அவளை கலவரபடுத்தி இருந்தது. அவள் எதை எதையோ நினைத்து பதறி போனாள்.
தனக்கு முதுகு காட்டி படுத்திருந்த ராகுலிடம் தயக்கமாய் பேச்சு கொடுக்க முயன்றாள்.
“ராகுல்”
“ம்ம்”
“தூங்கலையா?”
“இல்ல” என்றான் அவள் புறம் திரும்பாமல்.
“நான் ஒண்ணு கேட்டா, கோபிக்க மாட்டியே?”
“ம்ஹும்”
“நீ… நீ குடிப்பியா?” தமிழ் தயங்கி கேட்க,
சட்டென எழுந்தவன் அவளை கண்கள் சுருங்க அமர்த்தலாய் பார்த்தான்.
“நான் குடிப்பேனா? இல்லையா?ன்னு உனக்கு தெரியாதா?” அவன் பதில் கேள்வி வேகமாக வந்தது.
“இல்ல… அது… வந்து…”
“பேய், பிசாசு கூட தூங்கி போற நேரத்துல உனக்கு வந்திருக்க சந்தேகத்தை பாரு ச்சே” என்று காட்டமாக சொன்னவன் விளக்கை அணைத்து விட்டு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்து விட்டான்.
அவனின் கோபம் தமிழின் இதழில் மெல்லிய புன்னகையை தவழ விட்டது.
கண்ட கனவு அவள் நினைவில் பின்னுக்கு போக, அவள் நினைவேடுகளின் பக்கங்கள் அவளை கல்லூரி நாட்களுக்கு அழைத்து சென்றன.
கல்லுாரியில் ராகுல் வம்புகாரனாக சுற்றினாலும் எந்த விதமான தீய பழக்கங்களும் இல்லாதவன்.
அவன் மட்டுமல்ல, தன் நண்பர்களும் ஒழுக்கம் தவறாமல் இருக்க வேண்டும் என்பது அவன் விதித்த சட்டம்.
ஒரு நாள் பார்ட்டி என்று மகேஷ், தேவா, வெற்றி குடித்துவிட்டு வந்ததற்கு, ராகுல் அவர்களை விரட்டி விரட்டி துவைத்து எடுத்தது. தமிழுக்கு இப்போதும் நினைவில் ஓடியது.
ராகுலின் இத்தனை மன கட்டுபாட்டிற்கு காரணம் அவனுடைய அப்பா! குணத்தில் சாதுவாக இருந்த அவர், தனக்கு ஏற்பட்ட குடி பழக்கத்தை விட முடியாமல் தவித்தார்.
தந்தையின் தள்ளாட்டத்தையும், அம்மாவின் மன குமுறலையும் நேரில் பார்த்ததாலோ என்னவோ, மனிதத்தை வேறாக மாற்றும் அந்த தீய பழக்கங்களை ஒதுக்கிவிட்டு, ராகுல் நல்லொழுக்கத்தை கடைபிடிக்கலானான்.
ராகுலை பற்றியும் கல்லூரி கால இனிமையான நிகழ்வுகளையும் நினைக்கும் போதே தமிழின் மனம் லேசானது. அவள் இமைகளும் மெல்ல அயர்ந்தன.
காலையின் சில்லென்ற குளிரில் பதமான சுடுநீரில் இதமான குளியல் அவனுக்கு உற்சாகத்தை தருவதாய்.
இடுப்பில் சுற்றிய துண்டுடன் குளியலறையில் இருந்து வெளி பொந்தவன், கண்ணாடி முன் நின்று தன் ஈரம் தோய்ந்த கேசத்தை கலைத்து துவட்டலானான்.
ஆவி பறக்கும் தேநீருடன் அறைக்குள் வந்த தமிழ்செல்வி, அவனை அந்த கோலத்தில் கண்டு சட்டென திரும்பி நின்று கொண்டாள் சங்கடமாக.
ராகுல் அவளின் தர்ம சங்கடமான நிலையை உள்ளுக்குள் ரசித்தவனாய், மேலுக்கு, “என்ன?” என்று எரிச்சலை குரலில் காட்டினான்.
நேற்று இரவு தான் கேட்டதற்கு அவன் கடுப்பாகி உறங்கி போனது அவள் நினைவில் வர, அமைதியாக அவன் பக்கம் திரும்பாமலேயே தேநீர் கோப்பையை பின்னால் நீட்டினாள்.
இளநகையோடு தேநீரை எடுத்து கொண்டவன் அப்படியே வெளியேற யத்தனித்தவளை, “ஏய், கப்பை யாரு எடுத்துட்டு போவாங்க? கொஞ்ச நேரம் நிற்க முடியாதோ உன்னால” வேண்டுமென்றே அடிக்குரலில் சீறினான்.
தன்னை பற்றி நன்றாக தெரிந்திருந்தும் அவள், நேற்று தன்னிடம் அந்த கேள்வியை கேட்டதில் அவன் கடுப்பாகி தான் இருந்தான்.
தமிழ் கறுவியவளாய் அவனுக்கு முதுகை காட்டியபடி உர்ரென்ற முகத்துடன் நின்றிருந்தாள்.
தேநீரை மெதுமெதுவாக பருகியவனின் பார்வை தன்னவளின் பின் பக்கவாட்டு தோற்றத்தில் நிலைப்பதாய்.
அவளின் ஈரம் காயாத கூந்தல் கருப்பு அருவியென விரிந்து அவள் பின் முழங்காலை தொட்டு நின்றது.
கல்லூரி காலங்களில் பெரும்பாலும் தமிழை அவள் பின்னலின் நீளத்தை வைத்து தான் பலர் அடையாளம் சொல்வார்கள். அது இப்போது அவன் நினைவில் வந்து போனது.
பனியில் நனைந்த மலர் கூட்டமாய் அவள் கண்ணெதிரில் நிற்க, கிறங்கி தான் போனான் இவன்.
இவளின் பொறுமையோ கரைந்து கொண்டிருக்க, கப்பை வேண்டி கையை பின்னால் நீட்டினாள்.
அவள் கையில் காலி கப்பை வைத்தவுடன் வேகமாய் முன்னால் சென்றவள், உடல் சிலிர்த்து நடுங்க உறைந்து நின்று விட்டாள்.
அவன் வலக்கரம் அவளின் முன்னிடையை வளைத்து அணைக்க, அவளின் பின்புறம் அவன் மார்பில் பதிய, அவள் உடல் விரைத்து போனாள்.
அவள் தோளில் தவழ்ந்திருந்த மயிரிழைகளை மென்மையாய் விலக்கியவன், வழித்த பின் கழுத்தில் அழுத்தமாய் இதழ் தடம் பதித்தான். அவள் தேகமெங்கும் தீ பரவ, தகிக்க செய்தான். விலக முயன்றவரை அவன் கரம் மேலும் அழுத்தியது.
மண்ணை முட்டி திறக்கும்
விதை பொல!
என் காதலும்,
உன் மனக் கதவுகளை
முட்டி திறக்கும்!
தயங்கி தயங்கி விலகி நின்றிருந்த, அவன் ஆண்மைக்கு, இன்று மட்டும் எப்படி தைரியம் வந்ததென்று அவனுக்கே புரியவில்லை!
திருமணம் முடிந்த இந்த ஒன்றரை மாதங்களில், அவள் கைப்பற்றவும் அத்தனை முறை யோசித்து கொண்டு நிற்பான்.
எத்தனை சமயங்களில் அவன் மனசாட்சி அவனை சாடியிருக்கும்,
‘ஏதோ பெரிய வீரன் போல, அவளை மணந்து வந்து, முழுமையாக மனைவியாய் ஏற்றுக்கொள்ள இத்தனை தயங்குகிறாயே!’ என்று.
அவள் தான் விலகி போகிறாள் என்று எளிதாக பதில் கூறி, தன்னிடமே தப்பித்துக்கொள்ள அவனால் இயலவில்லை.
‘அவளுக்கு மனம் நிறைந்த வாழ்வை உன்னால் தர முடியாமல் போனால், ஒரு கணவனாக நீ தோற்று போவாய்!’
‘காதலனாய் ஒருத்தியிடம் தோற்று போனதை போல!’
அடிக்கடி அவனுள் எழுந்த இந்த கேள்விகள், அவனை உள்ளுக்குள் கலவரபடுத்திக் கொண்டு தான் இருந்தன.
ஆனால் இத்தருணம்!
தன்னவளின் மென்மையும் அவன் கை தீண்டலில் நடுக்கம் கொண்ட அவள் மலர் மேனியும் அவனை புத்துலகம் புக செய்வதாய்.
தன் வாழ்வின் பகுதியானவளின் அருகாமையில் அவன் முற்றிலும் வீழ்ந்து போவானென்று, அவனே இதுவரை எதிர்பார்க்கவில்லை.
இன்னும் வேண்டி அவனின் உணர்ச்சிகள் முரசறைய, அவளை சுழற்றி தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்.
ஈரம் போகாத அவன் மார்பில் அவள் முகம் பதிய, அவன் கைச் சிறையில் இருந்து விலக முடியாமல் திண்டாடித் தவித்தது அந்த பெண்மை.
அவனது முரட்டு கைகளின் செல்ல சேட்டைகள் அத்துமீற, அவளும் பரிதாபமாய் தன்வசம் இழந்து கொண்டிருந்தாள்.
இன்னும் அவள் கைகளில் இறுக பிடித்திருந்த தேநீர் கோப்பை பிடி தளர்ந்து நழுவி ‘டன்…’ என்று விழுந்து நொறுங்க,
அவர்கள் இருவரையும் சுயநிலைக்கு திரும்ப செய்வதாய்.
அவள் திமிறி, உதறி அவன் பிடியிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டாள்.
பொங்கி பெருகிய அவனின் உணர்வு பெருக்கு, அவளின் விலகலில் தானாய் வடிந்து போனது.
கீழே சிதறிக்கிடந்த சில்லுகள், அவள் உயிர் சிதறல்களின் எச்சங்களாய்.
அவற்றை வெறித்தபடியே, “நீ என்னை அனுதாபப்பட்டு உன் வீட்டுக்கு கூட்டிட்டு வரல… உன் ஆசைய தீர்த்துக்க தான் என்…னை கூட்டிட்டு வந்த இல்ல?” தமிழ்செல்வி தீராத அவமானத்திலும், அடங்காத ஆத்திரத்திலும் சிதறவிட்ட வார்த்தைகள், ராகுலின் ரோசத்தை சீண்டுவதாய்.
“என்ன சொன்ன? நிமிர்ந்து என் முகத்தை பார்த்து சொல்லு டீ!” அவன் அடிக்குரலில் கர்ஜிக்க,
அவள் கலங்கி, சிவந்த விழிகளோடு நிமிர, அவன் சீறும் காளையென முறைத்து நின்றான்.
“ஆமா டா, உன் அற்ப ஆசைக்காக தான் நீ என்னை…” தமிழ் ஆத்திரம் குறையாமல் பேச, ராகுல் அவளை அடிக்க கை ஓங்கி விட்டான்.
“ஓரறை விட்டா, பல்லெல்லாம் கொட்டி போகும். ஏன் டீ இப்படி கொச்சையா பேசுற? ச்சீ என் தமிழுக்கு இதுமாதிரி பேச தெரியாது டீ” என்றான் பற்களை கடித்தபடி.
“நீ என்கிட்ட வரம்புமீறி நடக்கும் போது, எனக்கும் அசிங்கமா தான் டா இருக்கு. என் ராகுல் இப்படி கீழ்தரமா நடந்துக்கிறான்னு நினைக்கும் போது!” என்று வெறுப்பாய் பேசியவள் அழுதும் விட்டாள்.
“ஏய் நான் உன் புருசன் டீ, எனக்கு உன்மேல இந்த உரிமைகூட கிடையாதா?”
“என்னால எப்பவுமே உன்ன அப்படி நினைச்சு பார்க்க கூட முடியாது!”
“நீ உன்னோட வீண் வீம்புக்காக ஏன் இன்னும் பிடிவாதமா இருக்கன்னு எனக்கு தெரியல? ஏதோ உன்ன தவிர, இந்த உலகத்தில வேற யாருமே மறுமணம் செஞ்சுக்காத மாதிரி, அவங்க எல்லாம் சந்தோசமா இல்லையா என்ன?”
“…”
“ஏன் டீ? உனக்கான வாழ்க்கைய நீயே வாழ மறுக்கற?”
“ஏன்னா, இது என்னோட வாழ்க்கை இல்ல, வேற ஒருத்திக்கு சொந்தமான வாழ்க்கை!”
தமிழ் வேகமாய் வீசிய வார்த்தைகளில் ராகுலின் முகம் வெளிரியது.
அவன் மனதில் சட்டென புயல் மேகங்கள் சூழ, தன்னை சமன்படுத்திக் கொள்ள, அவனுக்கு சில நொடிகள் தேவைப்பட்டன.
“நானே அவளை மறந்திட்டேன், நீ ஏன் இன்னும் அதை…”
“உண்மையில நிவேதா மேடம் நினப்பு உன் மனசுல இல்லன்னு சொல்ல முடியுமா, உன்னால?” தமிழ் குறுக்கே கேட்க,
ராகுல், பதிலின்றி தலைக்கேசத்தை அழுத்தமாக கோதிக் கொண்டான்.
‘இல்லை’யென்று பொய் சொல்ல அவனுக்கு நா எழவில்லை. எப்படி முடியும்? அத்தனை சுலபமாக அவளின் நினைவை தூக்கி எறிய முடிந்தால் இவனுக்கும் சற்று நிம்மதியாக தான் இருக்கும், விரும்பி நேசித்த உள்ளத்திற்கு அது சுலபமானதாக இருக்கவில்லையே!
‘அவளை மறக்கதான் முயற்சித்து கொண்டிருக்கிறேன் என்பதை சொன்னால், இவள் இன்னும் நத்தையாய் தன்னை குறுக்கி கொள்வாளே! இவளுக்கு எப்படி புரிய வைப்பேன் இவள் தான் இனி என் வாழ்வென்று!’
அந்த சூழ்நிலையை சமாளிப்பது அவனுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
தமிழின் அடுத்தடுத்த வார்த்தைகள், செயல்கள் அவனை மேலும் காயப்படுத்துவதாய் அமைந்தன.
# # #
காதல்காரன் வருவான்…