காதல் சன்யாசி 26
கேட்டு கொண்டிருந்த தமிழ்ச்செல்வி அதிர்ந்து விழித்தாள்.
“எனக்காக… எனக்காகவா… நிவேதா மேடமை வேண்டாம்னு சொன்ன, ஏன்?” அவள் குரலிலும் நடுக்கம் தெரிந்தது.
ராகுல் கிருஷ்ணாவின் முகத்தில் எந்தவித கலக்கமோ, மயக்கமோ இல்லை. இயல்பாகவே சொன்னான்.
“நிவி வந்து காதலை மறக்க முடியலன்னு சொன்ன உடனே, நான் அவ பின்னாடியே போயிடுவேன்னு நினச்சிட்ட இல்ல. என்னை அவ்வளவு கேவளமா எடை போட்டுட்ட இல்ல” என்ற அவன் சொற்களில் அவனது சுய கௌரவம் மிளிர்ந்தது.
“…!”
“நான் முடிவா சொல்றேன் தமிழ், நிவேதா என் வாழ்க்கைய விட்டு எப்பவோ போயாச்சு. இப்பவும் எப்பவும் என்கூட இருக்க போறது நீ மட்டும் தான்” ராகுல் உறுதியாக சொல்ல, தமிழ் நெகிழ்ந்து, துடித்து போனாள். அவள் விழிகளில் தேங்கிய கண்ணீர் கன்னங்களில் உருண்டோடியது.
அவன் விரல்கள் வாஞ்சையோடு அவள் கண்ணீரை விரட்ட, அவளுள் ஏதோ இனம்புரியாத பயம் பரவி, பூதாகரமானது.
அவளின் இதய பாரம் கூட, உறுதி பிழன்றவளாய், “முட்டாள் டா நீ, வெறும் கூழாங்கல்லுக்கு ஆசைப்பட்டு வைர கல்லை தூக்கி எறிஞ்சிட்டு வந்திருக்க” அவனை ஆதங்கமாக ஏசினாள்.
அவளை அவளே தாழ்த்தி சொன்னதை கவனித்தவன், “நீ என்னோட விலை மதிப்பில்லாத மாணிக்கக்கல் தமிழ். சாதாரண கூழாங்கல்லா நினச்சு உன்ன என்னால தூக்கி வீச முடியாது டீ!” அவள் விழியோடு விழி கோர்த்து திருத்தி சொல்ல, தனக்குள் ஏதோ தடுமாற்றத்தை உணர்ந்தாள் அவள்.
“ஐயோ, உனக்கு எப்படி புரிய வைக்கிறது?” என்று நெற்றியை பிடித்து கொண்டவள்,
“உனக்கு என்மேல இருக்கறது வெறும் அனுதாபம் மட்டும் தான் டா. வேற எதுவும் இல்ல” என்று அழுத்தி சொல்ல ராகுலின் முகம் மாறியது.
“எனக்கு உன்மேல வெறும் அனுதாபம் மட்டும் இருந்திருந்தா, உனக்கு ஏதாவது உதவி செய்யணும்னு நினைச்சு இருப்பேனே தவிர, என் எதிர் காலத்தை முழுசா உன்கிட்ட ஒப்படைச்சிருக்க மாட்டேன் தமிழ்”
எக்காரணம் சொல்லியும் அவன் அவளை விட்டு கொடுப்பதாக இல்லை. ராகுலின் அசைக்க முடியாத அன்பை எண்ணி அவள் துவண்டு தான் போனாள். இந்த பிடிவாதகாரனுக்கு என்ன சொல்லி விளங்க வைப்பது? புரியவில்லை அவளுக்கு. ஏன் தன் மனம் இத்தனை ஆற்றாமையில் இன்று பதைபதைக்கிறது? என்பதின் காரணமும் புரியவில்லை அந்த ஏந்திழைக்கு.
கடிகார முள் இரவு பன்னிரண்டை கடந்து கொண்டிருக்க, தவிப்பும் குழப்பமுமாய் தமிழ் தனக்குள் போராடிக் கொண்டிருந்தாள்.
அவள் சிந்தனைகள் எங்கெங்கோ முட்டி மோத, நிலை கொள்ளாமல் தவித்தபடி அமர்ந்திருந்தாள்.
ராகுல் அவள் தோள் பற்றி, “போதும் உன் யோசனை, நேரமாச்சு தூங்கலையா?” என்று கேட்க, அவள் தோய்வுடன் இல்லையென்று தலையாட்டினாள்.
அவன் இரு டம்ளர் தண்ணீரை எடுத்து வந்து ஒன்றை அவளிடம் கொடுத்து விட்டு, தானும் பருகலானான்.
“நான் வேணும்னா… உனக்கு டைவர்ஸ் தந்துறேன்” தமிழ் மெதுவாய் சொல்ல, தண்ணீர் குடித்து கொண்டிருந்த ராகுலுக்கு தலைக்கேறி விட்டது.
“என்ன சொன்ன?” அவன் அதிர்ந்து கேட்டான்.
இத்தனைக்கு பிறகும் அவள் தங்கள் பிரிவை நினைப்பாள் என்று அவன் எண்ணவே இல்லை.
அவள் தலை கவிழ்ந்து இருந்தது.
“இல்லாத உறவுக்கு விவாகரத்தா?” அவன் வார்த்தைகளில் வெறுப்பு மண்டி கிடக்க,
“அப்பவாவது நீ ஒத்துக்குவ இல்ல. நான் உன் பொண்டாட்டி இல்லன்னு! எனக்கு இதை தவிர வேறவழி தெரியல” தமிழ் தலை நிமிராமலே சொன்னாள்.
தான் அவள் மீது கொண்ட நேசத்தை அவள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருப்பது அவனுக்கு மிகவும் துன்பத்தை தருவதாய்.
அவளின் அருகாமைக்காக ஏங்கும் அவன் நெஞ்சம், அவள் பிரிவை வரமாய் வேண்ட கழிவிரக்கம் கொண்டு தவித்தது.
“உன் பிரச்சனை தான் என்ன டீ?” ராகுல் பற்களைக் கடித்தபடி கேட்க,
“நான் சொல்றதை புரிஞ்சிக்க டா… நான் பிறந்ததிலிருந்து இப்ப வரைக்கும்… எனக்குன்னு எதுவுமே மிச்சமில்ல… என் துரதிஷ்டத்தால உனக்கும்… உனக்கு ஏதாவது…” முழுதாக சொல்ல முடியாமல் அவள் தொண்டைக்குழி அடைத்தது.
அவள் சொல்வதை புரிந்து கொள்ள ராகுலுக்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டன.
அவளின் உள்ளுணர்வு ஓரளவு அவனுக்கு புரிய வர அவன் முகம் மாறியது.
கண்கள் சுருக்கியவன் சற்று தாமதித்து வாய்விட்டு சத்தமாகவே சிரித்து விட்டான்.
தமிழ் அவனை விளங்காமல் பார்த்து விழிக்க, “லூசு, படிச்சவ தான நீ? இப்ப போய் ராசி, அதிர்ஷ்டம் எல்லாம் நம்பிட்டிருக்க” என்று கிண்டலாக கேட்டவன், அடக்க முடியாமல் மேலும் சிரித்து கொண்டிருந்தான்.
“நான் ஒண்ணும் சும்மா சொல்லல, அன்னிக்கு கூட… சாருமதி ஆளுங்க உன்ன அடிக்க வந்தாங்க இல்ல.” அவள் பயத்துடன் சொல்ல,
“ஓ அதுக்கும் உன் ராசி தான் காரணம்னு நினக்கிறியா? முட்டாள், அப்ப நான் உயிர் பொழச்சதே உன்னால தான் டீ. நீதான சரியான நேரத்தில ஃபோன் செஞ்சு விசயத்தை சொன்ன” என்று அவன் விளக்கம் தந்தும் அவள் ஏற்பதாக இல்லை.
“இல்ல டா, உனக்கு ஏதாவது ஆச்சுன்னா… என்னால நிச்சயமா தாங்கிக்க முடியாது…” சொல்லும் போதே அவள் குரல் தழுதழுத்தது.
அவளின் துவண்ட முகத்தில் தெரிந்த பயத்தை கவனித்து அமைதியாகவே நின்றிருந்தான் அவன்.
‘கடந்த கால வாழ்க்கையில் அவளுக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும் வலிகளும் அதனால் ஏற்பட்ட விரக்தியும் அவளுக்குள் பெரும் குழப்பத்தை உண்டாக்கி இருக்க வேண்டும். மேலும், அவள் சித்தியும் மற்றவர்களும் அவளிடம் நடந்ததை சொல்லி வெறுப்பைக் காட்டி அவளைப் பலவீனப்படுத்தி இருக்க வேண்டும்’ என்று யோசித்த ராகுல் அவள் நிலை கண்டு வேதனைக் கொண்டான்.
தன்னவளின் மனக்காயம் ஆர, ஆதரவாய் அவளை தன் தோள் சேர்த்து ஆறுதல் கூற வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.
ஆனால் தமிழ்ச்செல்வி, “எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உனக்கு விவாகரத்து கொடுத்துறேன். இதில உன்னோட சம்மதம் கூட எனக்கு தேவையில்ல. என் விருப்பம் இல்லாம தான் இந்த கல்யாணம் நடந்ததுன்னு சொன்னாலே போதும். நம்ம கல்யாணம் ரத்தாயிடும்” என்று முடிவாக சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினாள்.
ராகுல் அவள் போவதை பார்த்து கொண்டு அமைதியாகவே நின்றிருந்தான். அவளிடம் என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று அவனுக்கு தெரியவில்லை.
நிழலை கண்டு பயந்து நடுங்கும் மழலையாய் அவள்!
பயம்!
மனிதனை ஆட்டி படைக்கும் பலமான ஆயுதம்!
அந்த பயம் தான் அவளை உள்ளுக்குள் அரித்து கொண்டிருந்தது.
சிறிய விடி விளக்கு அந்த கூடத்தின் இருளை முழுமையாக விரட்ட இயலாமல் மங்கிய ஒளியை உமிழ்ந்து கொண்டிருக்க, அவள் தளர்ந்து நடந்து வந்து சோஃபாவில் சோர்ந்து அமர்ந்து விட்டாள்.
ஏனோ வாழும் வாழ்க்கை பெரும் சுமையாக தோன்றியது.
ராகுலின் நிகழ்கால சந்தோசமும் எதிர்கால வாழ்க்கையும் தன் ஒருத்தி பொருட்டு கேள்வி குறியாக மாறிப்போனதை எண்ணி தவித்தாள்.
நள்ளிரவின் குளிரில் வெறுமையான நிசப்தம் மட்டுமே அங்கு சூழ்ந்திருக்க, அதை அவன் அலறல் சத்தம் கிழித்து கொண்டு வந்தது.
ராகுலின் அலறல் குரல் கேட்டு தமிழ் பதறியடித்து ஓடி வந்தாள்.
“ஆஆஆ அம்மா… எரியுதே…” என்று ராகுல் கண்களை கசக்கியபடி கத்திக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு டா? அர்த்த ராத்திரியில இப்படி கத்தி தொலைக்கற” தமிழ் மிரட்சியாய் கேட்க,
“கண்ணுல பூச்சி அடிச்சிடுச்சி, ரொம்ப எரியுது, கண்ண திறக்கவே முடியல டீ” என்று அவன் சிறுவன் போல கண்ணைக் கசக்கி துடிக்க,
இவள் மனமிரங்கியவளாய், அவன் இமைகளை மெதுவாய் திறந்து மென்மையாய் ஊதி விட்டாள்.
அவன் சட்டென கண்களை நன்றாக திறந்து ஒற்றை புருவத்தை உயர்த்தி காட்டி கண் சிமிட்ட, அவன் நடிப்பைக் கண்டு ஏமாந்தவளாய்,
“உன் புத்திய… பக்கி, உன்ன எல்லாம் திருத்தவே முடியாது டா” என்று ஆத்திரமாக அவனை இரு கைகளாலும் அடிக்க ஆரம்பித்தாள்.
“ஏய்… ஏய் வலிக்குது டீ” ராகுல் அவளின் இரு கைகளை தடுத்து பிடித்து கொள்ள, தமிழ் அவனை காட்டமாக முறைத்து நின்றாள்.
“நீ ஏமாந்தா அதுக்கு நான் பொறுப்பா? என் கண்ணுல தூசி விழுந்தா கூட இப்படி துடிச்சு போற? என்னை உனக்கு அவ்வளோ பிடிக்குமா?” அவன் சாவகாசமாக கேட்க, தமிழ் இல்லையென்று அவசரமாய் தலையசைத்தாள்.
“முன்ன ஏதோ சொன்னியே, எனக்கு ஏதாவது ஆச்சுன்னா உன்னால தாங்க முடியாதுன்னு, அப்ப உனக்கு என்னை ரொம்ப பிடிக்கும்னு தான அர்த்தம்! ம்ம்?” என்ற அவன் குறுக்கு கேள்வியில் அவள் விழிகளை விரித்தாள்.
“ஒரு மண்ணாங்கட்டி அர்த்தமும் இல்ல, கைய விட்றா முதல்ல” என்று அவள் இழுக்க,
“முடியாது டீ,” என்று அவன் மேலும் அழுத்தி பிடித்து கொள்ள, தன் கைகளை விலக்கி கொள்ள முயன்றவள் முடியாமல், “உன் விளையாட்டுக்கு நேரமில்லயா? கையை விடு ராகுல் வலிக்குது” என்றாள் கெஞ்சலாய்.
அவளின் குழந்தை தனம் மாறாத கெஞ்சல் அவனுக்கு ரசனையை உண்டாக்க, அவள் முகத்தில் பார்வையை பதித்தான்.
“ராகுல் இப்படி பார்க்காதன்னு சொல்லி இருக்கேன் இல்ல” தமிழ் அவனை சங்கடமாக எச்சரிக்க,
“ம்ம்…” வெற்று ‘ம்’ மட்டும் அவன் பதிலாய்.
விலகாத அவன் பார்வையும், கலையாத அவன் மௌனமும் அவளின் இதய கூட்டிற்குள் குளிர் பரவ செய்வதாய்.
“முதல்ல கைய விடு ராகுல், நீ சரியில்ல…”
“ம்ஹும்…”
விலகாத பயத்தில் மிரள மிரள விழித்த அவளின் மிரண்ட விழிகள் அவனை வேட்கையுற செய்வதாய்!
பற்றியிருந்த அவள் கைகளை தன் பக்கம் இழுத்து அவளிடையோடு சேர்த்து அணைத்து கொள்ள, அவள் வியர்த்து போனாள்.
“ராகுல் எ… என்ன செய்ற… விடு என்னை…” அவள் திக்கி திணற, அவன் மறுப்பாய் தலையசைத்து அவளை நெருங்கினான்.
இடைவெளி குறைய அவள் இதயம் பன்மடங்காய் தடதடத்தது.
“வேணா… டா, ராகுல்… ப்ளீஸ் விலகு” அவளின் மென்குரல் தேய்ந்து கசிந்தது.
அவளின் காதருகே குனிந்தவன், “எனக்கு நீ வேணும் தமிழ்!” அவன் குரல் காதலாய் யாசிக்க, அவள் விதிர்த்து நிமிர்ந்தாள்.
அவள் திகைப்பு விலகும் முன்னே, அவளிதழோடு இதழ் பொருத்தி இருந்தான் அவன்!
மிரண்டு விலக முயன்றும், தன்னவன் கெஞ்சல் பார்வையில் தடம்புரண்டு கொண்டிருந்தது அவள் பேதை மனது!
பிடிவாதகார பிள்ளையாக தன்னவளை உரிமை கொண்டாடினான் அவன்!
ஒரு நிலைக்கு மேல் அவள் பெண்மை அவன் வசமாய்!
அவன் தீக்கரம் பட்டு உருகும் பனி சிற்பமாய் அவள்!
அவள் தன்னை சுற்றி எல்லையிட்டு எழுப்பி இருந்த கருங்கல் சுவற்றை தகர்த்து முன்னேறி கொண்டிருந்தான் அவன்!
வா வா பெண்ணே!
வெறும் கோட்டோவியம் நீ!
வண்ணங்கள் தீட்டுவேன்
உன்னில்!
எட்ட நின்று பேசி
எனை ஏங்க செய்கிறாய்!
முட்டி திறக்கும் மனதை
ஏன் மூடி கொள்கிறாய்?
நிழலை கண்டு நீதான்
அடீ நடுங்கி போகிறாய்! நிஜத்தில்
எந்தன் ஆண்மை திமிரை
நீ கொன்று சாய்கிறாய்!
அடீ பொக்கிஷ பெண்ணே!
உன்னை களவாட வந்தவன் நானே!
உன் சினேக பார்வை
அது போதும் போதுமே!
‘காதல்’ என்ற வார்த்தை
நீ கற்க வேண்டுமே!
வார்த்தை நீளம் நீளம்
அது போதவில்லையே!
மௌனம் மட்டும் வேண்டும்
நாம் பேசி கொள்ளவே!
அடீ வந்திடு பெண்ணே!
நான் வாழ்ந்திட போகிறேன்
உன்னில்!
# # #
காதல்காரன் வருவான்…